top of page

Aalangattimazhai - 8

Updated: Mar 29

௮. உழவு மழை


(உழவு செய்து, விதை விதைக்கப் போதுமானதாக பெய்யும் மழையே உழவு மழை. அதாவது மழை பெய்து முடித்த பிறகு, நிலத்தை உழும்போது ஏர்க்கால் இறங்கும் அளவு பூமி நனைந்திருந்தால் அதுதான் உழவு மழை.)


*******


வேலையிலிருந்து திரும்பிய பிறகு செல்போனை எடுத்துக் கொண்டுபோய் மொட்டை மாடியில்  தனியாக உட்கார்ந்தபடி ஸ்ரீதரிடம் அதிகநேரம் பேசுவது ரஞ்சனியின் சமீபத்திய வழக்கமாகிப் போயிருக்கிறது .


ஒவ்வொரு நாள் அந்த நேரமாகப் பார்த்துதான் காய்ந்த துணிகளை எடுத்துவர இவளைப் பணிப்பார் சித்ரா.  இவளைப் பார்த்தால் போனைக் கொடுத்து ஸ்ரீதரிடம் பேசச்சொல்லி மாட்டிவிடுவாள் ரஞ்சனி.


நாகரிகம் கருதி, இந்தத் திருமணம் குறித்த தனது சொந்தக் கருத்துகளை மறைத்துக்கொண்டு இவளும் இயல்பாகப் பேச முயலுவாள். நாட்கள் செல்லச்செல்ல அவனுடன் சகஜமாகப் பேசும் அளவுக்கு அதனால் முன்னேற்றம் உண்டாகியிருந்தது.


எது எப்படியோ, நிச்சயதார்த்தத்திற்கு பின்னான நாட்களில் ரஞ்சனி மிகவும் மகிழ்ச்சியாக இருப்பது வெளிப்படையாகவே தெரிந்தது.


கண் பார்வை பறிபோன விபத்துக்கு பிறகு அவள் இவ்வளவு மகிழ்ச்சியாக இருந்து இவள் பார்த்ததே இல்லை. அதுவும் திருமணம் என்ற பேச்சை எடுத்ததற்கு பிறகு, அவளது குறை அதிகம் விவாதத்திற்கு உள்ளாகவும் மிகவும் இறுகிப் போயிருந்தாள்.


அவளிடம் இந்த அளவுக்கு ஒரு மாற்றம் ஏற்பட ஸ்ரீதர்தான் காரணம் என்பது புரிந்ததால் அவனிடம் கொஞ்சம் மரியாதை உண்டாகியிருந்தது.


இரண்டாவதும் பெண்ணாகிப் போனதே என்கிற பெற்றவர்களின் மனக்குறையுடன்தான் அமிர்தவர்ஷிணியின் ஜனனமே உதித்தது.


கொஞ்சநஞ்சம் சுமுகமாகப் போய்கொண்டிருந்த அவளது இளம்பிராயமும் இவளால் ரஞ்சனிக்கு நேர்ந்த விபத்தால் கோணல்மானலாகிப் போனது.


அப்பொழுது உண்டான உளவியல் சிக்கல் இப்பொழுது வரை அவளுக்கு சீரானபாடில்லை.


'மனமே தொட்டால் சிணுங்கிதானே, அதுவே தன்னால் மலரும் மானே’ என்கிற கவிஞர் வாலியின் வரிகள் போல, மனத்தால் சுருங்கிப் போவதும், தன்னைத்தனே மீட்டெடுத்து மலருவதும் அவளுக்கு வழக்கமாகிப் போனது.


அதேபோலத்தான், இப்பொழுதும் ரஞ்சனியில் கல்யாண விஷயத்தில் கொஞ்சம் இறங்கிவந்திருந்தாள்.


முகுர்த்த நாள் நெருங்க நெருங்க, திருமண வேலைகளில் வீடே பரபரப்பாகிக் கொண்டிருந்தது.


வர்ஷியின் பனிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வுகளும் முடிந்திருக்க, ‘அப்பாடா’ என அவளால் கொஞ்சம் மூச்சுவிட முடிந்தது.


விடுமுறை என்பதால், தோழியருடன் மால், சினிமா என்று ஊர் சுற்ற திட்டமிட்டிருந்தாள். அதில்லாமல் ரஞ்சனிக்கு தனிப்பட்ட முறையில் ஒரு சிறிய பரிசு கொடுக்கவேண்டும் என்கிற ஆசையும் துளிர்த்திருந்தது.


அந்த செலவுக்கெல்லாம் பணம் வேண்டுமே. சாதரணமாகவே அப்பாவிடம் கேட்கப் பிடிக்காது. இப்பொழுது திருமணச் செலவுகளும் இருக்க, அவரிடம் பணம் கேட்கவே மனமில்லை.


அத்துடன் இல்லாமல், வீட்டிலிருந்தால் அவளால் வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது. போதும் போதாத குறைக்கு திருமண வேலைகளின் காரணமாக அவளது அத்தையின் வருகை வேறு தொடர்ச்சியாக அடிகடி இருந்தது. 


அதையெல்லாம் மனதில் கொண்டு, அவளுடைய தோழி வைசாலியின் அம்மா சௌமியா நடத்தும் அழகு நிலையத்துக்கு தினமுமே செல்லத் தொடங்கினாள்.


மாசி மாதத்தின் கடைசி முகுர்த்த நாள் அடுத்த வாரத்தில்  இருக்க, நான்கைந்து திருமண பிரைடல் மேக் ஓவர் முழுமைக்கும் ஒப்புக்கொண்டிருந்தார்  சௌம்யா. 


மெஹந்தி, சங்கீத், ரிசப்ஷன், முஹுர்த்தம், கூடவே ப்ரீ வெட்டிங் போட்டோ ஷூட் எல்லாமே இதில் அடக்கம்.


மணமகள்களுக்கு மட்டும் இல்லாமல், அவர்களது அம்மா உட்பட வீட்டில் உள்ள உறவுக்கார பெண்களுக்கும் ஒப்பனை செய்ய வேண்டியதாக இருக்கும்.


எல்லாவற்றிகும் அவர்கள் அழகு நிலையத்தில் நிறையப் பெண்களை வேலைக்கு அமர்தியிருகிறார். தேவைபட்டால் வெளியிலிருந்தும் தேர்ச்சிபெற்ற பெண்களை வரவழைத்துக் கொள்வார்.


வர்ஷினிக்கு நன்றாக மெஹந்தி வரையத் தெரியும், சுமாராக சிகை அலங்காரம் செய்வாள். சமீபகமாக பிரபலமாகிக் கொண்டிருக்கும் டிரென்டிங்குக்கேற்ப புடவைகளை பிரீ பிளீடிங் செய்யவும் கற்றிருந்தாள். மற்றபடி வேறந்த வேலையும் செய்து அவளுக்கு பழக்கமில்லை. எனவே அதற்கு மட்டும் அவளை பயன்படுத்திக்கொள்வார் சௌமியா.


காலை வந்தது முதலே, அங்கே வேலை செய்பவர்களுடனும் ஃபேஷியல் செய்ய வரும் பெண்களுடனும் வாயடி வம்பளத்தபடி, ஐந்தாறு புடைவைகளுக்கு பிரீ பிளீடிங் செய்து முடித்தாள். அதற்கே மாலை நான்காகிவிட்டது. 


அதற்கு மேல் அவளுக்குத் தோதாக வேறு வேலை இல்லமல் போக வீட்டிற்கு கிளம்ப எத்தனித்தாள்.


அப்போழுதென்று பார்த்து, “ஈவினிங் ஒரு பார்டி இருக்கு, கொஞ்சமா மேக்கப் போட்டு, சிம்பிள் ஹேர் ஸ்டையில் எதாவது செஞ்சுவிடுங்க” என வந்து நின்றார் வழக்கமாக அங்கே வரும் பெண்மணி ஒருவர்.


அன்று வேலைக்கு வந்திருந்த மற்ற நான்கு பெண்களும் ஆளுக்கு ஒரு வேலையில் பிசியாக இருக்க, சௌமியாவோ, ஒரு மணமகளுக்கு ஃபேஷியல் செய்துகொண்டிருந்தார்.


“என்ன வர்ஷிணிம்மா, உன்னால அவங்கள அட்டன்ட் செய்ய முடியுமா?” என அவளிடம்  கோறிக்கை வைத்தார் அவர். 


அந்த பெண்மணி, ஏற்கனவே புடவை உடுத்தி தயாராகவே வந்திருக்க, சரியென ஒப்புக்கொண்டு, அவரை இருக்கையில் அமரவைத்தாள்.


“பிரெஞ்சு பிளாட் போட்டு, நீங்க கட்டிட்ருக்கற சாரிக்கு மேட்சா பேபீஸ் பிரீத் பூ வெச்சு டெக்கரேட் பண்ணா போதுமா?” என்று கேட்டபடி கையுறைகளை மாட்டிகொண்டு, அவரது கூந்தலை அவிழ்க்கத் தொடங்கினாள்.


“ஒகே” என அவர் ஒப்புக்கொள்ளவும், “ஆன்ட்டி, வேணிம்மா பூ எடுத்துட்டு வந்துருவாங்க இல்ல. பர்ப்பிள் கலர் பேபிஸ் பிரீத் வேணும்” எனக் கேட்டபடி வேகமாகத் தன் வேலையைத் தொடங்கினாள்.


“வந்துடுவா வர்ஷிணி, நாளைக்கு ஒரு மெஹந்தி பங்க்ஷன் இருக்கு. அதனால நிறைய பூ ஆர்டர் பண்ணியிருக்கேன்” என பதில் கொடுத்தார் சௌமியா.


கை பாட்டிற்கு பரபரவென பிரெஞ்ச் பிளாட் போட, மனம் அக்காவின் திருமணத்தை நோக்கிச் சென்றது.


வந்தது வந்துவிட்டது, இனி முறுக்கிக்கொண்டுப் பயனில்லை என்பதை உணர்ந்தவள், ரஞ்சனியின் திருமணத்திற்கு எப்படி எப்படி தன்னை அலங்கரித்துக் கொள்ளலாம் என்கிற கற்பனையில் இறங்கிவிட்டாள்.


“சௌமியாம்மா, பூவு” என்ற குரல் அவளை கலைக்க, நிமிர்த்து பார்த்தாள்.


மேல்மூச்சு கீழ் மூச்சு வாங்க, இரண்டு கைகளிளும் சுமந்துவந்த பைகளை ஓரமாக வைத்துவிட்டு, உள்ளே நிறைந்திருந்த ஏ.சியின் குளுமையை சுகமாக அனுபவித்தபடி ஓரமாக போடப்பட்டிருந்த கவுச்சில் அமர்ந்தார் நாற்பது வயது மதிக்கத்தக்க வேணி எனும் பூ வியாபாரம் செய்யும் பெண்மணி.


இயல்பான புன்னகையுடன், “எப்படி இருக்கீங்க வேணிம்மா” என  நலம் விசாரித்தாள்.


“நல்லா இருக்கேன் கண்ணு, பரீட்சை எல்லாம் நல்லா எழுதினியா?”


“நல்லா எழுதியிருக்கேன் வேணிம்மா, ரங்கா அண்ணன், சுபா, விஜி எல்லாரும் நல்லா இருக்காங்களா” 


கேட்கும்போதே அவளது மனதை பிசைந்தது. கூடவே அக்காவின் நினைவும் வந்து தொலைத்து நெஞ்சை அடைத்தது.


“புதுசா சொல்ல என்ன இருக்கு. எப்பவும் போல இருகுதுகுங்க” என அலுப்புடன் பதில் சொன்னார் வேணி.


அவரது மூன்று பிள்ளைகளுக்குமே, ஒரே போன்ற பார்வைத் திறன் குறைப்பாடு இருந்தது.


இந்தப் பிள்ளைதான் இப்படி ஒரு குறையுடன் பிறந்துவிட்டது, அடுத்த பிள்ளையாவது நல்லபடியாக பிறகும் என்ற நம்பிக்கையில் அடுத்தடுத்த பிள்ளைகளை பெற்றுகொண்டார். 


மூன்றாவதும் குறையுடனேயே பிறக்க, அவரைக் கைப்பிடித்த நல்லவன், பிள்ளைகளை அவர் தலையில் கட்டிவிட்டு ஊரை விட்டே ஓடிப் போனான்.


எப்படியோ பூ கட்டி விற்று பிழைப்பை ஓட்டுகிறார். 


அடிக்கடி அவர் புலம்பிப் புலம்பி வர்ஷிணியின் மனதில் பதிந்துபோன இதெல்லாம் மேலே எழும்பி, அவளுடைய நல்ல மனநிலையைக் கெடுத்தது.


அதற்குள், வேணி கொண்டுவந்திருந்த பூக்களை சரிபார்த்து அவருக்கு பணம் கொடுத்து அனுப்பினார் சௌமியா.


தலையை உலுக்கித் தன்னை மீட்டவள், தன் வேலையை முடித்துக்கொண்டு, “செல்விக்கா, இவங்களுக்கு மேக் அப் செஞ்சு விட்டுட்டு பில் குடுத்துடுங்க” என்று, கூட வேலை செய்துகொண்டிருந்தவளிடம் சொல்லிவிட்டு, “கிளம்பறேன் ஆன்ட்டி” என்றாள் சௌமியாவிடம்.


“ஹேய், நாளைக்கு மெஹெந்தி ஃபங்க்ஷனுக்கு வரியா? விசாலியையும் வரச்சொல்லலாம்ன்னு இருக்கேன்” 


“ஓகே ஆன்ட்டி, டைம் அன்ட் அட்ரஸ் மெசேஜ் பண்ணுங்க, வந்துடறேன்” 


“வேணாம், சரியா மத்தியானம் ரெண்டு மணிக்கு ரெடியா இரு, நானே வந்து கார்ல பிக்கப் பண்ணிக்கறேன்”  


“ஓகே ஆன்ட்டி” என்றபடி தன் கைப்பேசியை எடுத்துக்கொண்டு கிளம்பினாள்.


வீட்டிற்கு வந்து பார்த்தால், கல்யாணப் பத்திரிக்கைகள் அச்சிடப்பட்டு வந்திருக்க, ஆசையாக அவளிடம் கொண்டுவந்து நீட்டினாள் ரஞ்சனி.


அவள் முகம் காண்பித்த மகிழ்ச்சியில், “ரொம்ப நல்லா இருக்குக்கா” என்று சொல்லிவிட்டு, உடை மாற்றச் சென்றாள்.


“எதையாவது ஏடாகூடமா சொல்லித் தொலைக்கப் போகுதேன்னு பயந்தேன், ரஞ்சி. பரவால்லடி, நல்ல புத்தி வதுடுச்சு போலிருக்கு” என வியந்தார் சித்ரா.


“ம்மா, அவளுக்கு என் மேல அக்கறை ஜாஸ்தி. அதனாலதான் அப்படி நடந்துட்டா, இப்ப அவளுக்கே ரியாலிட்டி புரிஞ்சுடுச்சு போலிருக்கு” என்றாள் ரஞ்சனி.


சற்று நேரத்தில் அப்பாவும் வந்துவிட, கல்யாண ஏற்பாடுகளைப் பற்றியப் பேச்சுடன் இரவு உணவு முடிந்தது.


பரிட்சை முடிந்ததற்குப் பிறகு படிக்க வேண்டும் என வாங்கி வைத்திருந்த ஜெஃப்ரி ஆர்ச்சரின் சிறுகதை தொகுப்பு புத்தகத்தை விரித்தபடி படுக்கையில் விழுந்தாள் வர்ஷிணி.


நினைப்பு மொத்தமும் அக்காவை பற்றியே சுற்றிச்சூழல, கூடவே வேணியின் மூன்று பிள்ளைகளின் முகமும் கண்களில் தோன்றி மறைய புத்தகத்தில் நாட்டம் செல்லாமல்‌, மூளை சண்டித்தனம் செய்தது.


ஏதேதோ குழப்பங்களுடன் அப்படியே உறங்கிப் போனாள்.


*** 


காலை நிதானமாக விழித்திருந்து பொறுமையாக காப்பியை அருந்தி முடித்து, தலைக்கு எண்ணெய் வைத்தாள். அம்மாவை திருப்தி படுத்த வீடு பெருக்கி, நாற்காலியில் குவிந்து கிடந்த துணிகளை மடித்து வைத்துவிட்டு அடுத்ததாக புத்தக அலமாரியின் பக்கம் திரும்பினாள்.


"இத அப்புறம் பார்த்துக்கலாம்.ரொம்ப நேரம் தலையில் எண்ணய வெச்சிட்டு ஊறாத. நேரத்தோட குளிச்சிட்டு சாப்பிட வா" என்ற அதட்டல் கிளம்பியது சித்ராவிடம்.


ரஞ்சனியும் அவளை நச்சரிக்க, போய் நன்றாக சீயக்காய் தேய்த்து குளித்துவிட்டு, ஒரு நைட்டியை அணிந்து, மெல்லிய காட்டன் துப்பட்டா ஒன்று தலையில் கட்டியபடி சாப்பிட வந்து அமர்ந்தாள்.


அதற்குள் ரஞ்சனியும் வேலைக்கு செல்ல தயாராகி வந்துவிட, இருவரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டு முடித்தனர்.


அப்படி இப்படி பொழுதை போக்கிவிட்டு, சரியாக இரண்டு மணிக்கு தயாராகிக் காத்திருந்தாள்.


சொன்னது போல சௌமியாவின் வாகனம் வாயிலில் வந்து நிற்க, அம்மாவிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினாள்.


அவளது தோழி வைசாலி உள்ளே இருக்கவும், அவளுக்கு குதூகலமாகி போனது.


வளவளவென்று பேசியபடியே அவர்களுடன் பயணப்பட்டாள்.


ஒரு ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த பார்ட்டி ஹாலில் அந்த மெஹந்தி கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்றிருக்க, மணமகள்,  அவளுடைய அம்மா, பெண்ணின் தோழியர், சொந்தக்கார பெண்கள், அக்கம் பக்கம் குடி இருப்பவர்கள் என இருநூற்றிற்கும் மேற்பட்ட பெண்கள் அங்கே குழுமி இருந்தனர்.


வர்ஷினி, வைசாலி மட்டுமில்லாமல் இன்னும் பத்து பெண்களை ஏற்பாடு செய்திருந்தார் சௌமியா.


மணப்பெண்ணுக்கு மெஹந்தி போடும் பொறுப்பு வர்ஷினிடம் ஒப்படைக்கப்பட, வரிசையாக அமர்ந்து மற்ற பெண்களும் வந்திருந்தவர்களுக்கு மெஹந்தி போடத் தொடங்கினர்.


கல்யாண பெண்ணிற்கு என்பதினால் கூடுதல் கவனம் எடுத்து, பார்த்துப் பார்த்து வரைந்து கொண்டிருந்தாள் வர்ஷிணி.


அவளுக்கு அருகில் அமர்ந்து ஒவ்வொருவராக வர வர, மெஹந்தி வரைந்து கொண்டிருந்தாள் வைஷாலி.


அடுத்ததாக அவளிடம் மெஹந்தி போட வந்து அமர்ந்தாள் ஒரு பெண், "ஹாய்… லுக்கிங் கார்ஜியஸ்" என மணப்பெண்னை புகழ்ந்தபடி.


"ஹேய் சுப்ரியா… வா… வா… நீ மட்டும் என்ன, செம்ம ஹாட்டா இருக்க போ" என அவளை வரவேற்றாள் மணப்பெண்.


"ஏய் சூப்பர் அரேஞ்ச்மென்ட்ஸ்… யா. என்ன இருந்தாலும் நீ எனக்கு சீனியர் ஆகிட்ட. உன் கல்யாணம் முடிஞ்சதும், உன்கிட்ட தான் என்னோட மேரேஜ் பிளான் பத்தி ஐடியா கேட்க போறேன்" என்றாள் அந்த சுப்ரியா.


"ஏய் அப்படி போடு, கங்கிராஜுலேஷன்ஸ். டேட் ஃபிக்ஸ் ஆயிடுச்சா"


"இன்னும் இல்லடா… அவங்க அண்ணாவோட மேரேஜ் முடிஞ்ச உடனே, டேட் ஃபிக்ஸ் பண்றதா இருக்காங்க"


" அதுவரைக்கும் மேடம் எப்படி பொறுத்துட்டு இருக்க போறீங்களோ" 


இப்படியாக அந்த இருவரின் பேச்சு தொடர சுப்ரியாவின் கைப்பேசி ஒலித்தது.


"ஹாய் பேபி… உன்ன பத்திதான் பேசிட்டு இருந்தோம்" என அந்த அழைப்பை ஏற்றாள்.


அக்கம் பக்கம் இவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்ற தயக்கம் எல்லாம் இல்லாமல் ஸ்வீட் நத்திங்ஸ் என்கிறபடிக்கு அவர்களது பேச்சு தொடர்ந்தது.


இடையிடையே கல்யாண பெண்னும் சுப்ரியாவும் ஒருவரை ஒருவர் பகடி பேசவும் தவறவில்லை.


"உன் பேரையா? இப்பவேவா?" என்றாள் சுப்ரியா எதிர் முனையில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலாக.


என்ன என்பதாக கல்யாணப் பெண் ஜாடை செய்ய, "கையில அவன் பெயரை வரைய சொல்றான்?" என்றாள்.


"ஒய் நாட், டாட்டூவா வரைய சொல்றாங்க! பேசாம போட்டுக்கோ. அதை அப்படியே உன் ஆளுக்கு போட்டோ எடுத்து அனுப்பு, அப்படியே மயங்கிப் போகட்டும்" என்று இவள் சொல்லவும், அவனிடம் அவசரமாக 'பை' சொல்லிவிட்டு அந்த அழைப்பை துண்டித்து, "ஒரு ஃப்ளூட்  அன்ட் பீகாக் ஃபெதர் போட்டு அதுக்கு நடுவுல, கே.கே ன்னு போடும்மா" என்றாள் சுப்ரியா வைஷாலியிடம்.


சட்டென ஒரு நொடி திகைத்த வைஷாலி, "ஹேய் வர்ஷ்… எனக்கு பீகாக் ஃபெதர் பர்ஃபெக்ட்டா வராது. அந்த டிசைன் மட்டும் நீ கொஞ்சம் போட்டு விடறியா?" என்று அவளிடம் கேட்டாள்.


மறுக்காமல் சுப்ரியாவின் அருகில் வந்த அமர்ந்து அவள் கேட்ட அந்த டிசயனை ஐந்து நிமிடத்தில் போட்டு முடித்து, மறுபடியும் மணமகளின் கையில் டிசைன் வரையச் சென்று விட்டாள் வர்ஷினி.


வைசலியை விட்டே அதை செல் போனில் போடோ எடுத்து, உடனே வாட்ஸ் ஆப்பில் அதை அனுப்பவும் செய்தாள். 


அன்றைய பின்மாலை வரையிலும் இப்படியே வேலை இழுக்க, சௌமியாவின் அம்மா கொடுத்த ஒரு கணிசமான தொகையை பெற்றுக் கொண்டு வீடு திரும்பினாள்.


***


பாண்டிபஜாரில் இருக்கும் ஒரு பாரம்பரியமிக்க மிகப் பிரபலமான பட்டு ஜவுளி கடைக்கு வந்திருந்தனர் வர்ஷணியின் குடும்பத்தினர் அனைவரும், அவளுடைய சரோஜா அத்தை உட்பட. 


ஸ்ரீதர் திரும்பத் திரும்ப அவளை அழைத்திருந்ததால் தட்டிக் கழிக்க இயலாமல் வர்ஷிணியும் வந்திருந்தாள்.


சற்று நேரத்திற்கெல்லாம் ஸ்ரீதரின் அம்மா, அப்பா, அண்ணன், அண்ணி எல்லோரும் வந்துசேர்ந்தனர்.


“என்ன அண்ணி கிருஷ்ணா தம்பி வரலியா” என சரோஜா கேட்க, “கொஞ்சம் வேலையா போயிருக்கான். கொஞ்ச நேரத்துல வந்துடுவான்” என்றார் ஸ்ரீதரின் அம்மா தனலட்சுமி.


முதலில் முகுர்த்த புடவை தேர்வு செய்யச் சென்றனர்.


‘இந்த கலர் ரஞ்சனிக்கு நல்லா இருக்கும், இதுல சரிகை ரொம்ப அதிகம், இதுல ரொம்ப கம்மி’ என முன்னே வந்து நின்றுகொண்டு சசிகலா ஆதிக்கம் செலுத்த, தனமும் அதற்குத் தாளம் போட்டுக் கொண்டிருந்தார்.


ரஞ்சனியை கலக்காமல் இப்படி செய்கிறார்களே என, சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் சித்ராவும் சரோஜாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள, உள்ளுக்குள்ளே குபுகுபுவென உஷ்ணம் ஏறியது வர்ஷிணிக்கு.


தங்கையின் குணம் அறிந்து, கையைப் பிடித்து அவளது கோபத்தை தணிக்க முயன்றாள் ரஞ்சனி. 


சரியாக அதே நேரம் அங்கே வந்து சசிகலாவின் அருகில் நின்ற பெண்ணை எங்கோ பார்த்தது போல் தோன்ற, அவளது கவனம் திசை திரும்பியது.


‘ச்ச… மத்ததெல்லாம் நல்லா விவரமா பேசுவடீ வரூ… ஆனா பார்த்த முகம் கூட உனக்கு மறந்து போயிடும்’ என தன்னைத் தானே திட்டிக்கொண்டாள்.


யாராக இருக்கும் என்ற யோசனையுடன் அவளையே பார்த்திருக்க, “இவதான், சுப்ரியா! சசியோட தங்க. யூ.கேல எம்.எஸ் படிச்சிட்டு இருக்கா. போன வாரம்தான் இங்க வந்தா. அதான் நம்ம ஸ்ரீதர் - ரஞ்சனி நிச்சயதார்த்தத்துக்கு வரல” என்றார் தனம்.


அப்பொழுதுதான் அவளை எங்கே பார்த்தாள் என மூளைக்குள் பல்பே எரிந்தது வர்ஷிணிக்கு.


“அதுமட்டுமில்ல, இவளத்தான் நம்ம கிருஷ்ணாவுக்கு பேசி வெச்சிருக்கோம்” என அவர் தொடரவும், அவளுக்கு எல்லாமே உரைத்தது.


அடுத்து சசிகலா வர்ஷிணியின் குடும்பத்தினர் எல்லோரையும் அவளுக்கு அறிமுகப் படுத்தினாள்.


“இவதான் வர்ஷிணி, ரஞ்சனியோட தங்கை” என கடைசியாக அவளை அறிமுகப்படுத்த, “பரவாயில்ல, உங்க மேரேஜுக்கு தனியா பணம் செலவு செஞ்சு பியூடிஷியன் அப்பாயின்ட் பண்ண வேண்டாம்! பிரைடல் மேக் அப் எல்லாம் இவளே செஞ்சுவான்னு சொல்லுங்க” என்றாள் சுப்ரியா ஒரு மிகையான புன்னகை முகத்தில் படர.


அதில் அவளை பெருமையாக புகழும் நோக்கம் எதுவும் இல்லை. வெறும் மட்டம் தட்டும் தொனியில் வந்து தெரித்தது அவளது பேச்சு.


அடுத்த நொடி, வரதனின் பார்வை தீக் கங்குகளை சுமந்து அவளை எரிக்க, அவள் கங்காவிலிருந்து சந்திரமுகியாக கொஞ்சம் கொஞ்சமாக மாறிக்கொண்டிருக்க, சுப்ரியாவின் பின்னால் வந்து நின்றான் கிருஷ்ணா அனைவரையும் ஒரு பார்வை பார்த்தபடி.


Episode Rain Song



0 comments
© KPN NOVELS COPY PROTECT
bottom of page