top of page

Aalangatti Mazhai - 7

௭ - அரண்ட பருவம்


(தேவைக்குக் காணாத மிகச் சொற்பமான மழையை அரண்ட பருவம் என்பார்கள்.)


கதவைக் கொஞ்சமாகத் திறந்து, அவன் உள்ளே நுழைய இயலாத வண்ணம் வழியை மறித்தபடி, தூக்கிப்போட்ட கொண்டையுடன், தொளதொளவென ட்ராக்ஸ் பேண்டும் டீஷர்ட்டும் அணிந்து, ஒல்லி என்றும் இல்லாமல், குண்டு என்றும் சொல்லமுடியாமல் சற்று பூசினார்போன்ற உடல்வாகுடன் “ஹலோ, என்ன திமிரா” எனக் கேட்டவளின் முகத்தைப் பார்த்ததும் பக்கென்று சிரிப்பு வந்துவிட்டது கிருஷ்ணாவுக்கு.


வரதன் அறைந்த அறையில் கன்னம் பழுதிருக்க, விரல்களின் தடத்தைச் சீக்கிரம் மறைய வைக்கிறேன் பேர்வழியே என இரண்டு நாட்களாக மஞ்சளை அரைத்து அப்பி வைத்திருந்தார் சித்ரா.


மூத்தவளின் நிச்சயத்துக்கு வருவோர் போவோருக்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்க வேண்டுமே என்கிற ஆதங்கம்தான் அவருக்கு.


அது எப்படியோ முகம் முழுவதும் பரவிக் காய்ந்து கழுவிய பின்பு கூட நிறம் மங்காமல், மஞ்சள் காப்பில் பரிமளிக்கும் அம்மனைப் போன்று மங்களகரமாகக் காட்சி அளித்தாள் அவள்.


சிரிப்பை அடக்கமுடியாமல் திணறியபடி, “நீதான வர்ஷிணி, அப்ப நீதான் வேணும்" என்றான் இடக்காக.


ஓர் அலட்சிய பார்வையுடன் பின்னால் ஓர் எட்டு வைத்தவள் பட்டெனக் கதவை மூட, "ஹேய்... ஸ்ரீதருக்கு வாங்கின ரிங்கையும் பிரேஸ்லட்டையும் மறந்து வெச்சிட்டு வந்துட்டாங்களாம். இப்ப பங்க்ஷன்ல அதை அவனுக்கு போடணும். அது உங்க அம்மா ரூம்ல இருக்கற பீரோல இருக்காம். அதை எடுத்துக் கொடுக்க நீ வேணும். அதைத்தான் சொன்னேன்" எனக் கதவைத் தள்ளிப் பிடித்தவாறு அவன் சொல்ல, ஒரு வன்ம புன்னகை முகத்தில் படர அவள் பிடியைத் தளர்த்தவும், கதவு படக்கென்று திறந்துகொள்ள, சற்று தடுமாறி தன்னை சமாளித்துக் கொண்டான் கிருஷ்ணா. பற்களைக் கடித்தபடி, "அராத்து" என அவன் இகழ்ந்தது உண்மையில் ஒரு வெற்றி பெருமிதத்தைத்தான் கொடுத்தது அவளுக்கு.


சுவற்றில் மாட்டப் பட்டிருந்த தொலைக்காட்சி அலறியபடி இருக்க, அனிச்சையாக அவனது பார்வை அங்கே வரவேற்பறையின் பக்கம் சென்றது. விரித்துவைக்கப் பட்டிருந்த நோட்டுப் புத்தகத்தின் தாள்கள் படபடத்துக் கொண்டிருக்க, அதைச்சுற்றி பருமன் பருமனான புத்தகங்கள் சில இரைந்து கிடக்க அவனது நெற்றி சுருங்கியது.


வீட்டில் தனிமையில் இருக்கும்போது, யாரோ ஒரு முகம் தெரியாதவன் வந்து நகையைக் கொடு என்று கேட்டால் என்னவென்று நினைப்பாள். அவன் பார்வையைப் பொருட்படுத்தாமல் அப்படியே கதவை மெல்லப் பட்டும் படாமல் மூடி விட்டுப் போய் பீரோவைத் திறந்து பார்க்க, ஸ்ரீதருக்குப் போடுவதற்காக அவர்கள் வாங்கியிருந்த நகைகள் உண்மையில் அங்கேதான் இருந்தன.


ஆனாலும் ஒரு புதியவனிடம் அவற்றைக் கொடுத்தனுப்பவா முடியும்? வீட்டு லேண்ட்லைன் போனிலிருந்து அவளுடைய அம்மா, அப்பா, ரஞ்சனி ஏன் அவளுடைய அத்தை என ஒவ்வொருவருக்கும் அழைக்க, எந்த அழைப்பும் ஏற்கப்படவில்லை.


அதற்குள் பொறுமை இழந்து அவன் படபடவென கதவைத் தட்ட, வேறு வழி இல்லாமல் வெளியில் வந்தவள், "நீங்க யாருங்க, உங்களை நம்பி எப்படி நகையைக் கொடுக்க முடியும்" என்று கேட்க, "நோ இஷ்யூஸ், நீயே எடுத்துட்டு வா. எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல" என்றான் இலகுவாக.


"வாட், அதெல்லாம் என்னால வர முடியாது" என அவள் பதற, "அப்படினா நம்பி நகையை என் கிட்ட கொடு" என்றான் விடாக்கண்டனாக.


'நமக்குன்னு வந்து சேருது பாரு! இந்த பங்க்ஷன்ல கலந்துக்க வேண்டாம்னு பார்த்தால், இப்படியெல்லாமா நடக்கும்... ச்சை. இப்படியா நகையை மறந்து தொலைச்சிட்டு போவாங்க! இதை வாங்கிட்டு போக நம்ம வீட்டு ஆளுங்க ஒருத்தர் கூடவா இல்ல? போன கூட எடுத்துத் தொலைக்க மாட்டேங்கறாங்க' எனப் பலவாறாகப் புலம்பியபடி, உள்ளே சென்றவள் அவற்றை எடுத்துக்கொண்டு வர, "ஐய, இப்படியேவா வரபோற" என்றான் ஒரு மாதிரியான குரலில்.


"ஏன்... என்ன இப்ப? ஜஸ்ட் இதை கொடுத்துட்டு திரும்ப வந்துடப் போறேன்" எனப் பதில்கொடுக்க, அவன் முகம் அஷ்ட கோணலாக மாறியது.


"ஹலோ, இதெல்லாம் ரொம்ப ஓவர் சொல்றேன். அங்க வரது வராதது உன் இஷ்டம். ஆனா வந்தா அந்த இடத்துக்கு தகுந்த மாதிரி வரணும். இல்லனா நகையை என் கிட்டக் கொடு, நானே எடுத்துட்டு போறேன்" என அவன் பிடிவாதமாகச் சொல்ல, தலையில் அடித்துக் கொண்டவள், அப்படினா இங்கயே வெயிட் பண்ணுங்க, நான் ரெடி ஆகி வரேன் என்று உள்ளே சென்றாள்.


"உனக்கு ஜஸ்ட் டென் மினிட்ஸ்தான் டைம். இல்லனா நானே எடுத்து போறேன்" என்று அவன் குரல் கொடுக்க, அனைவரையும், குறிப்பாக வாயிலில் அவளுக்காகக் காத்திருப்பவனை மனதிற்குள் அர்ச்சித்தபடியே நன்றாக முகம் கழுவி, அன்று ரஞ்சனி வாங்கிவந்த உடையை அணிந்து, கூந்தலை முடிந்து, லேசான ஒப்பனையுடன் தயாராகி அந்த நகைகள் அடங்கிய சிறு பையை எடுத்துக்கொண்டு வெளியில் வந்தாள் வர்ஷிணி.


குறைந்தபட்ச நாகரிகம் கருதிக் கூட அவனை வீட்டிற்குள் அழைக்கவில்லை அவள். அதே போன்று, 'யாருங்க நீங்க?' என் அவள் இரண்டு முறை கேட்டிருந்தும் அவன் ஒரு முறை கூட பதில்சொல்லவில்லை என்பதையும் அவள் கருத்தில் கொள்ளவேயில்லை.


அவர்கள் வீட்டிலிருந்து நடந்தே செல்லும் தூரம்தான் அந்த மினி ஹால். ஆட்டோ கூட அதிகப்படி. அதே நினைப்பில் அவள் வீட்டைப் பூட்டிக் கொண்டு காம்பவுண்ட் கேட்டை மூடிவிட்டு வெளியில் வந்தாள்.


கொஞ்சம் தள்ளி வீதியில் நிறுத்திவைத்திருந்த காரை நோக்கி அவன் போக, அவள் சற்று தயங்கி நிற்கவும், அவன் திரும