top of page
Writer's pictureKrishnapriya Narayan

Aalangatti Mazhai - 6

Updated: Apr 14, 2024

௬ - ஆழி மழை


(ஆழி என்றால் கடல். ஆழி மழை என்பது கடலில் பொழியும் மழையைக் குறிக்கும். இதனால் மண்ணுக்குப் பயனில்லை. ஆனால் இயற்கை சமன்பாட்டின் ஒரு பகுதி இம்மழை.)


க்ளெஃப்ட் லிப் அண்ட் க்ளெஃப்ட் பேலட் , தமிழில்... உதடு மற்றும் அண்ணப் பிளவை என்கிற பிறவிக் குறைபாடு ஸ்ரீதருக்கு இருப்பது, அவனைப் பார்த்த மாத்திரத்திலேயே வர்ஷிணிக்குப் புரிந்துபோனது. அவன் பேசும்போதும் 'ஙகர' ஒலியின் ஆதிக்கம் இருக்கும்.


உண்மையில், துடுக்குத் தனமும் மனதில் பட்டதைப் பட்டெனப் பேசிவிடும் சுபாவமும் கொண்டவளாக இருந்தாலும், அவளுடைய அக்காவை அருகிலிருந்து பார்த்துப் பார்த்தே இதுபோல உள்ளவர்கள் சமூகத்தில் சந்திக்கும் சவால்களையும் மன உளைச்சல்களையும் அறிந்தவளாதலால் பட்டென தன் மனதை வெளிக் காண்பிக்காமல் முகத்தை இயல்பாக வைத்துக்கொண்டாள்.


ஸ்ரீதரின் அம்மா, அப்பா, அண்ணன், அண்ணி, அவர்களுடைய மூன்று வயது ஆண் குழந்தை எனப் பெண் பார்க்க வந்தவர்கள் அந்த கூடம் முழுவதையும் நிறைத்திருக்க, வீட்டில் உள்ள ஒவ்வொருவருமே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கவே யாரையும் தனியே அழைத்துக் கேட்கும் வாய்ப்பும் அமையாமல் போனதால் உடனடியாக எதையும் கேட்டு அவளால் தெளிவு பெற இயலாமல் போனது.


"என்ன சீது, உனக்குப் பெண்ணை பிடிச்சிருக்கா" என ஸ்ரீதரின் அப்பா சபை நடுவிலேயே உடைத்துக் கேட்க, முகம் முழுவதும் விகசிக்க, "சம்மதம்" என்று அவன் சொல்லிவிட, அதற்கென்றே காத்திருந்தார் போன்று, "உங்க பெண்ணையும் கூப்பிட்டு அவ சம்மதத்தையும் இங்கயே வெச்சு கேட்டுடுங்க" என்றாள் அவனது அண்ணி, அதாவது ஸ்ரீதரின் அம்மாவுக்கு அருகில் அமர்ந்திருந்த பெண். அவள் குரலில் தொனித்த அளவு கடந்த அக்கறை, ஒரு வித சந்தேகத்தைக் கொடுத்தது வர்ஷிணிக்கு.


அந்த நொடி அந்த அம்மாளின் முகம் கடுத்தது. சட்டென அவர் தன்னை சுதாரித்துக்கொண்டதையும் கவனிக்கத் தவறவில்லை அவள்.


சித்ரா கண் காண்பிக்கவும், அவளுடைய அக்கா ரஞ்சனியை அழைத்துவர அறை நோக்கிச் சென்றாள்.


சட்டென தானும் கூடவே போக எத்தனித்தவளின் கையைப் பிடித்துத் தடுத்து, ஸ்ரீதரின் அண்ணியைச் சுட்டிக் காண்பித்த சித்ரா, "பாப்பாவுக்கு பால் கேட்டாங்க, கிச்சன் மேடை மேல ஆற வெச்சிருக்கேன், ஒரு டம்பளர்ல ஊத்தி எடுத்துட்டுவந்து அந்த அக்கா கிட்ட கொடு" என்று அழுத்தமாகச் சொல்ல, பற்றிக்கொண்டு வந்தாலும் மறுக்க இயலாமல் உள்ளே சென்றாள்.


அவசர அவசரமாக, பாலை குவளையில் ஊற்றி அதை அவள் வெளியில் எடுத்துவந்து அந்தப் பெண்ணின் கையில் திணிக்கவும், அதற்குள் ரஞ்சனி அங்கே வந்து நின்றிருந்தாள்.


உடனே உடைத்துத் தெரிந்துகொள்ளும் ஒருவித ஆவலில், "நீ சொல்லும்மா, உனக்கு எங்க ஸ்ரீதரை பிடிச்சிருக்கா" என கேட்டாள் அவனுடைய அண்ணி தேன் சொட்டும் குரலில்.


மூத்த மருமகளின் அந்த அன்பிலும் அக்கறையிலும் அப்படியே புளகாங்கிதம் அடைந்தவராக அவளுடைய கையை பற்றிக்கொண்டார் அவனுடைய அம்மா.


அக்காவிடம், 'வேண்டாம்' என ஜாடை செய்யலாம் என வர்ஷிணி தவித்திருக்க, ரஞ்சனியின் பார்வை அவள் பக்கம் திரும்பவே இல்லை, என்ன சொல்வது என்பது புரியாமல் வரதனின் முகத்தைத்தான் பார்த்திருந்தாள். 'சம்மதம் என்று சொல்' என்கிற கட்டளையைச் சுமந்திருந்தது அவரது கடினப் பார்வை.


அடுத்த நொடி ரஞ்சனி பொம்மை போல சம்மதம் எனத் தலையை ஆட்டி வைக்க, "சரி, உள்ள போ" என்றார் அவர், அடுத்து யாரும் அவளை எந்த ஒரு கேள்வியும் கேட்க இடங்கொடுக்காமல். அவளும் பட்டென்று உள்ளே சென்றுவிட, "நீ வேணா பொண்ணுகிட்ட தனியா பேசறியா சீது" என அவனுடைய அண்ணி மீண்டும் தன் அக்கறையைக் காண்பிக்க. அவன் பார்வையோ சட்டென அவனது அன்னையிடம் சென்றது. அங்கே சம்மதம் கிடைக்காததாலோ என்னவோ ஒரு சிறு ஏமாற்றத்துடன், "இப்ப வேண்டாம்" என்று சொல்லிவிட்டான்.


வரதனும் சரி சித்ராவும் சரி, அதுவரை இழுத்துப் பிடித்து வைத்திருந்த மூச்சையே அப்பொழுதுதான் விட்டனர். அவர்களும் கூட ரஞ்சனி ஸ்ரீதருடன் தனிமையில் பேசுவதை விரும்பவில்லை என்பது புரிந்தது.


அதன் பின் ரஞ்சனியை நெருங்கவிடாமல் தடுத்து, வர்ஷிணியை ஒரு நொடி கூட நிற்க விடாமல் எதாவது ஒரு வேலை சொல்லி விரட்டிக்கொண்டே இருந்தார் சித்ரா.


அதன் பிறகு கொஞ்சம் கூட வேறெதற்கும் நேரம் எடுத்துக்கொள்ளாமல், நிச்சயதார்த்தத்துக்கும் திருமணத்துக்கும் நாள் குறித்துவிட்டு தடபுடலாகத் தயாராகியிருந்த விருந்தை சாப்பிட்டுவிட்டே அவர்கள் கிளம்பிச் சென்றார்கள்.


அதுவரை செய்வதறியாமல் அனைத்தையும் வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்த வர்ஷிணி அதன் பின் பொங்கிவிட்டாள்.


அப்பா அம்மாவின் வற்புறுத்தலின் பெயரில்தான் ரஞ்சனி இந்த ஏற்பாட்டுக்குச் சம்மதித்திருக்கிறாள் என்பது புரியாத அளவுக்கு வர்ஷிணி ஒன்றும் மக்குப் பெண் இல்லை.


"அப்பா, என்னப்பா... அக்காவுக்கு இப்படி ஒரு மாப்பிளையை பார்த்திருக்கீங்க" என வரதனைக் குற்றம்சாட்டி அவள் நேரடியாகக் கேள்வி கேட்க, "இதோ பாரு வர்ஷிணி, நீ சின்னப்பொண்ணு. உனக்கு இதெல்லாம் சொன்னா புரியாது. இப்படி பெரிய மனுஷத் தனமா பேசாம, போய் ஏதாவது வேலை இருந்தா பாரு" என்றார் அவர் பொறுமையை இழுத்துப்பிடித்து.


***


ஐந்து தினங்கள் கடந்திருந்தன.


வீட்டில் யாருமற்ற தனிமை ஏதோ செய்ய, தொலைக்காட்சியை ஒரு கார்ட்டூன் சேனலில் பொருத்தி அதிக சத்தம் வைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் வர்ஷிணி. செவிப்பறை கிழியும் அளவுக்கான அந்த இரைச்சல் கூட அவன் அவளது ஆத்திரத்தின் டெசிபலைவிட சற்று குறைவாகத்தான் இருந்திருக்கும்.


என்ன செய்தும் இவளால் எதையும் நிறுத்த இயலவில்லை. அவர்களுடைய வீட்டிலிருந்து சற்று தள்ளி இருக்கும் ஒரு மினி ஹாலில், இன்னும் சற்று நேரத்தில் ரஞ்சனியின் நிச்சயதார்த்த வைபவம் தொடங்கிவிடும்.


மகிழ்ச்சி பொங்க நடந்தேறவேண்டிய ஒரு நிகழ்வு, சண்டை சச்சரவுடன்தான் தொடங்கியது.


ஸ்ரீதர் வந்து அவளைப் பெண் பார்த்துப் போன தினத்திலிருந்தே வீடே போர்க்களமாகத்தான் மாறியிருந்தது.


பிள்ளை வீட்டினரெல்லாம் கிளம்பிய கையுடன், இவளுடைய அத்தை - மாமா உட்பட வந்திருந்தவர் ஒவ்வொருவராகக் கிளம்ப, இவளைப் பேசவே விடவில்லை சித்ரா.


அதன்பின் கூட, இவள் பேச முனையும் எதையும் கருத்தில் கொள்ளாமல், அவர் வீட்டைச் சுத்தம் செய்வதில் மும்முரமாகிவிட, ரஞ்சனி அவருக்கு உதவிக் கொண்டிருந்தாள். அடுத்த நாள் சீக்கிரமே வேலைக்குச் செல்லவேண்டியிருக்க, வரதனும் சாப்பிட்டுப் படுத்துவிட, இவளுடைய கருத்தைக் கேட்க யாருமே தயாராக இல்லை என்பது புரிந்தது.


கோபத்தில், சாப்பிடாமல் கூட அப்படியே போய் படுத்துவிட்டாள் வர்ஷிணி. ஓரிரு முறை இவளை அழைத்துப் பார்த்துவிட்டு, இவள் இறுமாப்புடன் பதில் சொல்லாமல் படுத்திருக்கவும், “இப்படி இருந்தா, போற இடத்துல உருப்பட்ட மாதிரிதான்... எப்படியோ போய்த்தொல” என விட்டுவிட்டாரே ஒழிய, இவளிடம் கெஞ்சிக்கொண்டு நிற்கவில்லை சித்ரா, அது அவருடைய வழக்கத்திலும் இல்லை. பெண் பிள்ளைகளைச் செல்லம் கொடுத்துக் கெடுக்கக் கூடாது என்கிற கோட்பாடுதான் கரணம். இது ரஞ்சனியிடம் செல்லும், வர்ஷிணியிடம் செல்லாது!


அடுத்த நாள் வரதன் அலுவலகத்திற்கும் ரஞ்சனி பள்ளிக்கும் சென்றுவிட, சித்ராவின் கோபம் குறையாமல் மகளிடம் முகங்கொடுத்தே பேசவில்லை.


நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவளுடைய தோழி வைசாலியின் அம்மா நடத்தும் அழகு நிலையத்திற்கு போய் அங்கே வரும் பெண்களுக்கு மெஹந்தி போடுவது வர்ஷிணியின் வழக்கம். அவளுடைய கைச்செலவுகளுக்கு அப்பாவிடம் போய் நிற்பது அவளுக்குப் பிடிக்காமல் போக, இதில் வரும் வருமானத்தில் அவசிய செலவுகளை பார்த்துக்கொள்வாள்.


அன்று மாலையும் யாரோ ஒரு மணப்பெண்ணுக்கு மெஹெந்தி போட அவளுக்கு அழைப்பு வரக் கிளம்பிச் சென்றுவிட்டாள். திரும்ப வர மணி பத்தை நெருங்கிவிடவே, சாப்பிட்டுப் படுக்க மட்டுமே நேரம் இருந்தது .


அடுத்த நாள் மாலை, நேரடியாக அக்காவிடம் பேசிவிடலாம் என அவள் காத்திருக்க, ரஞ்சனி பள்ளியிலிருந்து திரும்பும்பொழுதே பரபரப்பாகக் காணப்பட்டாள். ஒரு பதட்டத்துடன் குளித்து உடை மாற்றிச் சிறு ஒப்பனையுடன் அவள் தயாராகி வர, அதிசயமாக வரதனும் அன்று சீக்கிரம் வீடு திரும்பவும் வியப்பாக இருந்தது வர்ஷிணிக்கு. அன்று நிச்சய தாம்பூலப் புடவை மற்றும் மோதிரம் வாங்க, ஸ்ரீதரின் அம்மா அவர்களை அழைத்திருப்பது பிறகுதான் தெரிந்தது.


அப்படியே ஸ்ரீதரனுக்கும் உடைகள் வாங்க அவர்கள் முடிவெடுத்திருக்க, வர்ஷிணியை உடன் அழைத்துப் போனால் கட்டாயம் பிரச்சனையை இழுத்துவிடுவாள் என்பது திண்ணமாக விளங்கவே, அவளை வீட்டிலேயே விட்டுவிட்டுத்தான் கிளம்பிப் போனார்கள்.


அதுவும் அவர்கள் வெளியிலேயே சாப்பிட்டுவிட்டு வருவதாகவும், வீடு திரும்பத் தாமதமாகும் என்பதால் அவளுக்குத் தேவையானதைச் சமைத்துச் சாப்பிடும்படியும் சொல்லிவிட்டுப் போக, உண்மையில் கொலை காண்டாகிப்போனது வர்ஷிணிக்கு.


வந்த உறக்கத்தையும் கெடுத்துக்கொண்டு அவர்களுக்காகக் காத்திருக்க வேண்டிய கட்டாயம் உண்டாக, சிறிது நேரம் ஜெ.ஈ.ஈ நுழைவுத் தேர்வுக்கான பாடங்களைப் படித்தவள், ப்ரிட்ஜில் இருந்த மாவைக்கொண்டு தோசை வார்த்து காலை செய்த சாம்பாரைச் சூடு செய்து சாப்பிட்டு முடித்து, ரிச்சர்ட்ஸ் டாக்கின்ஸின் செல்பிஷ் ஜீன் புத்தகத்தைப் பிரித்துப் படிக்கத் தொடங்கியவள் அப்படியே உறக்க நிலைக்குப் போனாள்.


போய் முகம் கழுவி வந்து, எப்படியோ இழுத்துப்பிடித்து அவள் விழித்திருக்க, அவர்கள் மூவரும் வீடு திரும்ப இரவு பதினொன்றானது.


வாயிலில் ஆட்டோ வந்து நிற்கும் சத்தம் கேட்க, கதவைத் திறந்துகொண்டு வெளியில் வரவும், ஆளுக்கு இரண்டு கட்டைப் பைகளை கைகளில் பிடித்தபடி கேட்டை தள்ளிக்கொண்டு மூவரும் உள்ளே வந்தார்கள்.


கிளம்பும்பொழுது இருந்த குழப்பம் கலவரம் எல்லாம் மறைந்து ரஞ்சனியின் முகத்தில் ஒரு தெளிவு வந்திருக்க, வர்ஷிணியின் புருவம் மேலே உயர்ந்தது.


வீட்டிற்குள் நுழைந்ததும், கையில் வைத்திருந்த பைகளை அங்கே இருந்த நாற்காலியில் வைத்துவிட்டு ஆயாசமாகப் போய் நீளவிருக்கையில் அமர்ந்தார் வரதன்.


“இதெல்லாம் இங்கேயே இருக்கட்டும், நான் பாத்ரூம் போயிட்டு வந்து எடுத்து வெச்சுக்கறேன். நாளைக்கு வனஜா வரேன்னு சொல்லியிருக்கா, அவ கிட்ட காமிக்கணும்” எனச் சொல்லியபடி சித்ரா வேகமாகச் சென்றுவிட, அப்படியே கால் நீட்டி சுவரில் சாய்ந்தபடி தரையில் அமர்ந்த ரஞ்சனி ஒரு கட்டைப் பையை எடுத்து எதையோ துழாவினாள்.


அவளது செயலை கவனித்தபடியே, “என்னக்கா பர்ச்சேஸ்லாம் பலமா” என்றாள் வர்ஷணி வஞ்சப் புகழ்ச்சி அணியில்.


ரஞ்சனி இருந்த உற்சாக மனநிலையில், அவள் குதர்க்கமாகக் கேட்டதைப் புறந்தள்ளி, “அப்படிதான்னு வெச்சுக்கோயேன். எனக்கு இருபதஞ்சாயிரத்துல புடவை எடுத்திருக்காங்க, வர்ஷிணி. அப்பறம் நெக்லஸ், நிச்சயதார்த்த மோதிரம் எல்லாம் கூட வங்கியிருகாங்க. அதை விட எல்லாத்தையும் எனக்கு பிடிச்சதா என்னையே செலெக்ட் பண்ண சொல்லிட்டாங்க தெரியுமா?” என்றாள் முகம் நிறைந்த பூரிப்புடன்.


வர்ஷிணியின் முகம்தான் கன்றிப்போனது.


அதற்குள் அவள் தேடியது கிடைக்க, அதை வெளியே இழுத்தவள், "இதோ பாருடீ... பங்க்ஷனுக்கு போட்டுக்க உனக்காக நான் எடுத்த டிரஸ்... உனக்கு பிடிச்ச காலரா தேடி செலெக்ட் பண்ணேன்" என்று சொல்லிக்கொண்டு ஆசையாக அதை அவளிடம் நீட்டினாள்.


“இந்த டிரஸ்தான் இப்ப ரொம்ப முக்கியம்” என அதைப் பிடுங்கி அங்கே வைத்திருந்த பைகளின் மீதே எறிந்தவள், "உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா ரஞ்சி? நான் இந்த கல்யாணமே தப்புன்னு சொல்லிட்டு இருக்கேன், நீ இப்படி லூசு மாதிரி பிஹேவ் பண்ணிட்டு இருக்க! நம்ம அம்மாவுக்குத்தான் தனிப்பட்ட எந்த கருத்தும் கிடையாது. சுயமா சிந்திக்கக் கூட மாட்டாங்க. அப்பா சொன்னா அதுதான் வேதவாக்குன்னு பூம்பூம் மாடு மாதிரி தலையை ஆட்டுவாங்க! நீயுமா அப்படி? அப்பா சொன்னாங்க, அத்தை சொல்லிச்சுன்னு நீ இப்படி தலையைத் தலையை ஆட்டிட்டு இருக்க. கல்யாணமெல்லாம் நம்ம முழு விருப்பத்துக்கு நடக்கணும் ரஞ்சி. மத்தவங்க சொன்னாங்க, இதுக்கு மேல ஆசை பட நமக்கு தகுதி இல்லன்னு ஒரு முடிவுக்கு வந்துட்டு, கிடைச்சத, அரை மனசோட அக்சப்ட் பண்ணிட்டு, புடவை, நகைன்னு தற்காலிகமா திருப்தி பட்டுக்கக்கூடாது" என அவள் உச்ச ஸ்தாயியில் கத்த, "என்னடி இப்படியல்லாம் பேசற?' என ரஞ்சனி அவளை அதிர்ந்து பார்க்க, படாரென்று நிமிர்ந்து அமர்ந்த வரதன், "ரஞ்சனி, நீ உள்ள போ... இந்த அரை வேக்காடுகிட்டப் கிட்ட பேசி மனசை கெடுத்துக்காத" என்றார் கோபத்தை அடக்கி.


"யாருப்பா அர வேக்காடு? நானா இல்ல நீங்களா? அக்காவுக்கு ஜஸ்ட் டுவென்டி போர் இயர்ஸ்தான ஆகுது, வேலைக்கு வேற போயிட்டு இருக்கா. மேற்கொண்டு படிச்சா எதாவது காலேஜ்ல லெக்ச்சரரா போகலாம். அவ தகுதியை வளர்த்துட்டான்னா இந்த சின்ன குறை பின்னுக்கு போயிடும். இன்னும் நல்ல மாப்பிள்ளையா பார்க்கலாம்" என அவள் தன் கருத்திலேயே அழுத்தமாக நிற்க, "அதுக்குள்ள நாங்க போய் சேர்ந்துடுவோம். ரெண்டு பேரும் அனாதையா நிற்ப்பீங்க" என்றார் வரதன் ஆத்திரம் தாளாமல்.


"சும்மா இப்படி சென்டிமென்டலா பேசி என்னை கில்டி ஆக்காதீங்க. உங்களுக்கு ஒண்ணும் வயசாகிடல" என அதற்கும் பதில் கொடுத்தவள், "ஆனா அக்காவுக்கு வாழ வேண்டிய வாழ்க்கை இருக்கு. உடல் குறைபாடு தப்பில்ல, ஆனா இப்ப நீங்க பார்த்திருக்கற மாப்பிள்ளைக்கு இருக்கற குறை ஜெனிட்டிகல் கண்டிஷனா இருந்தா, அது இவளுக்கு பிறக்கப்போற குழந்தையை பாதிக்கும்.


அக்காவுக்கும் ஒரு பிரச்சனை இருக்கு. அவருக்கும் ஒரு பிரச்சனை இருக்கு, பிறக்கப் போற குழந்தைக்கும் இது போல பாதிப்பு வந்தா, அதை ஹாண்டில் பண்றது கஷ்டம்" என அவள் உண்மையான வருத்தம் தொனிக்கச் சொல்ல, அதை உணரவும் சற்று தணிந்தார் வரதன்.


"இல்லம்மா... மாப்பிளையை உண்டா இருக்கும் போது சூரிய கிரகணம் வந்துதாம். அப்ப கவனமில்லாம அவங்க வெளியில வந்துட்டாங்களாம். அதனாலதான் இப்படி" என அங்கே வந்த சித்ரா பொறுமையாக விளக்கம் கொடுக்க, உயிரியல் பாடத்தை தேர்ந்தெடுத்துப் படித்தவள், மேற்கொண்டு நிறையப் புத்தகங்கள் படிக்கும் பழக்கமிருப்பவள் என்பதால், "அம்மா, என்ன இப்படி இல்லிட்ரேட் மாதிரி பேசற. சயின்டிஃபிகலி அப்படி நடக்க வாய்ப்பே இல்ல. குழந்தை வயித்துல இருக்கும்போது அம்மா எடுக்கற ஹெவி டோஸ் மெடிசின் இல்லனா ஹெரிடிட்டரிதான் காரணமா இருக்கும்" என தனக்குத் தெரிந்த வரை விளக்கியவள், தமக்கையிடம் திரும்பி, "இந்த இடம் வேண்டாம்னு சொல்லிடு ரஞ்சி" என அவள் இறைஞ்சுதலாகச் சொல்ல, பயத்தில் ரஞ்சனியின் முகம் வெளிறியது.


"அக்கா இப்படி அப்பாவுக்கு பயந்துட்டு நீ இந்த கல்யாணத்த பண்ணிட்டே ஆகணும்னு முடிவு பண்ணா, குழந்தை பெத்துக்காத. அதுதான் பெஸ்ட் சொல்யூஷன்" என்றாள் சலிப்புடன்.


‘ஒரு வார்த்தை வெல்லும், ஒரு வார்த்தை கொல்லும்’ என ஒரு சொலவடை உண்டு. உணர்ச்சிவசப்பட்டு அவள் சொன்ன இந்த வார்த்தை ஆயுள் முழுமைக்கும் அவளைத் துரத்திக்கொண்டே வரப்போகிறது என்பதை உணராமல் அவள் பேசிய அடுத்த நொடி வரதனின் கரம் இடியென அவளுடைய கன்னத்தில் இறங்கியது.


செவிக்குள் ‘ஙொய்’ என்று எதிரொலிக்க, ஒரு நொடி மூளையே கலங்கிப் போனதுபோலத்தான் ஆனது அவளுக்கு. கையால் காதைப் பொத்திக் கொண்டவளின் கண்களில் கண்ணீர் அதன்பாட்டில் வழிய, "அக்கா உன்னோட கண்ணு இப்படி ஆனதுக்கு நான் காரணமாகிட்டேன். அதே மாதிரி நீயும் ஒரு விக்டிம் ஆகிடாத" என தழுதழுத்தவள் நேராக அவர்களது அறைக்குள் போய் முடங்கினாள்.


"அப்பா, அவதான் லூசுத்தனமா இப்படி பேசறானு சொன்னா, நீங்களும் ஏன் உணர்ச்சிவசப்படறீங்க. பாவம்பா அவ. என் மேல இருக்கற அக்கரைலதான இப்படி பேசறா" என ரஞ்சனி தழுதழுக்க, "நீ சும்மா இருடீ, தான் பிடிச்ச முயலுக்கு மூணே காலுன்னு பேசிட்டு இருக்கா. இவளுக்கு இது தேவைதான். இல்லன்னா இவ வாய் அடங்கவே அடங்காது" என்றார் சித்ரா.


"தெரியாம ஆக்சிடென்டலா நடந்த ஒரு விபரீதத்தால எனக்கு கண் பார்வைல குறை, அவளுக்கு மனசுல குறை, ரெண்டுமே நிரந்தரமா நின்னு போச்சு" என ரஞ்சனி வருந்த,


"விடு ரஞ்சி... அவ சொல்றதையெல்லாம் மூளைல ஏத்திக்காத. நான் பார்த்திருக்கற இந்த மாப்பிளைக்கு இப்படி ஒரு சின்ன குறை இருக்கவேதான் அவங்க நம்ம கூட சம்பந்தம் செய்யறாங்க. இல்லன்னா இவங்கள மாதிரி இருக்கறவங்க எல்லாம் நம்ம பக்கம் திரும்புவாங்கன்னு நினைக்கற?


ஸ்ரீதர் மேல அவங்க அம்மா அப்பாவுக்கே நம்பிக்கை இல்லனு தோணுது. இன்னும் சீ.ஏ முடிக்காம இருக்கறதால அவங்க வர தக்ஷிணை அது இதுன்னு பேரம் பேசல.


மிஞ்சிப் போனா இன்னும் ஒண்ணு ரெண்டு வருஷத்துல அவர் ஆடிட்டர் ஆயிடுவார். அப்பறம் எல்லா குறையும் பின்னுக்கு போயிடும். உன்னோட ஒரு சிறப்பான எதிர்காலத்த மனசுல வெச்சுதான் இந்த முடிவையே எடுத்தேன்.


நீயே யோசிச்சு பாரேன், இதே மாதிரி எல்லா தகுதியோடவும், குறையில்லாத ஒருத்தனை என்னால உனக்கு கொண்டு வந்து நிறுத்த முடியுமா சொல்லு? உனக்கும் ஒரு குறை இருக்குதான?" என அவர் செல்ல பதிலே பேசவில்லை ரஞ்சனி.


"உனக்குப் பிறகு பிறந்தது ஒரு பையனா மட்டும் இருந்துதுன்னு வெய்யேன் ம..ரே போச்சுன்னு துண்டை உதறி தோள்ல போட்டுட்டு போயிட்டே இருப்பேன். அதுவும் இல்ல பொட்டபிள்ளையா போச்சு. நான் அதை வேற கரை சேர்க்கணுமே! இதையெல்லாம் நினைச்சா எனக்கு நிம்மதியா தூக்கம் கூட வர மாட்டேங்குது" என அவர் வழக்கமாகப் பாடும் பல்லவியைப் பாட, உடனே உருகிப் போய்விட்டார் சித்ரா.


"உங்களை நல்லபடியா படிக்க வெச்சு ஆளாக்கி கட்டிக் கொடுக்க அப்பா எப்படி ஓடா தேயறாங்கன்னு உனக்குத் தெரியாதா ரஞ்சி? அவள மாதிரி நீயும் ஏடாகூடமா எதையாவது யோசிக்காம, நிம்மதியா போய் தூங்கு. அப்பா உனக்கு நல்லதுதான் செய்வாங்க" என அவர் ஒத்து ஊத, அமைதியாக அறைக்குள் வந்தாள் ரஞ்சனி.


கதவு திறந்தே இருக்க, அனைத்தையும் கேட்டுக்கொண்டுதான் இருந்தாள் வர்ஷிணி.


கண்களில் கண்ணீர் வழிந்தபடி வெறும் தரையில் அவள் சுருண்டு படுத்திருப்பதைக் கண்ட ரஞ்சனி, பாயை விரித்து, தலையணையை எடுத்துப் போட்டு, “வர்ஷிணி, இதுல வந்து படு... வா” எனக் கரிசனையுடன் சொல்லி அவளுடைய தோளைப் பற்றித் திருப்ப, அவளது உடல் இறுகியது.


அவளுடைய கன்னத்தில் விரல்களின் தடங்கள் அழுந்தப் பதிந்து கன்றிச் சிவந்திருப்பதைக் கண்டு பதறியவள், “நான் சொல்றத கொஞ்சம் புரிஞ்சுக்க ட்ரை பண்ணுடீ, முதல்ல எனக்கும் இஷ்டம் இல்லதான். அப்பா அம்மாவுகாகத்தான் இதுக்கு சம்மதிச்சேன். விருப்பமே இல்லாமதான் இன்னைக்கு புடவை எடுக்கக் கிளம்பிப் போனேன்.


ஆனா, அங்க போனப் பிறகுதான் ஸ்ரீதர் கூட பேச சான்ஸ் கிடைச்சுது. பேசின பிறகு அவரை ரொம்ப பிடிச்சுப் போச்சு. சச் எ நைஸ் பர்சன் வர்ஷிணி. நம்ம அப்பா மாதிரி ஒரு முரட்டு முன்கோபி கிடையாது. என்னை மாதிரியே தன்னோட குறையை வெச்சு ரொம்ப காயம் பட்டவர்டீ. என் பீலிங்க்ஸ அவராலதான் புரிஞ்சிக்க முடியும். நான் இந்த கல்யாணத்துக்கு மெண்டலி ப்ரிபேர் ஆகிட்டேன்.


அவர் படிப்பை முடிக்கற வரைக்கும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்க வேண்டி இருக்கும். அதுக்கு பிறகு ரொம்ப நிம்மதியா இருக்கலாம்னு தோணுது. ப்ளீஸ்டீ, இது மாதிரி பேசி நீயும் கஷ்டப்பட்டுட்டு மத்தவங்களையும் கஷ்ட படுத்தாத” என்றாள் இறைஞ்சுதலாக,


அதற்கு மேல் தான் பேச எதுவுமே இல்லை என்பது வர்ஷிணிக்குப் புரிந்துபோனது. காதுக்குள் குடைச்சலாக வலிக்க, கன்னம் எரிய, மொத்த கோபமும் அப்பாவின் மேலும், இப்படி ஒரு சம்பந்தத்தைக் கொண்டு வந்த அத்தையின் மீதும் மையம் கொண்டது.


அப்படியே திரும்பிப் படுத்துக்கொண்டாள்.


அடுத்த நாள் வனஜா அவர்கள் வீட்டுக்கு வர, அவளிடமும் எகிறி அன்றைய கோட்டாவுக்கு இழுத்துவிட்டாள். என்ன செய்தும், நடக்கும் எதையும் அவளால் தடுக்க இயலவில்லை.


இதோ இன்று நிச்சயதார்த்தத்துக்குக் கூட வரமாட்டேன் எனப் பிடிவாதம் பிடித்து வீட்டிலேயே இருந்துவிட்டாள். அம்மா, அத்தை, பெரியம்மா மட்டுமில்லை ரஞ்சனியால் கூட அவளைக் கரைக்க இயலவில்லை. மாறி மாறி ஆனவரை கெஞ்சிப் பார்த்துவிட்டு, வேறு வழி இல்லாமல் அவளை அப்படியே விட்டுவிட்டுப் போய்விட்டார்கள். தோல்வியுற்ற மனம், புழுங்கித் தவித்தது.


டிங்... டிங்... எனப் பொறுமையே இல்லாமல் அழைப்பு மணியை யாரோ அடித்துக் கொண்டே இருக்க, கொஞ்சம் தாமதமாகவே அது மூளைக்குள் உரைத்தது. உச்சபட்ச கடுப்புடன் வந்து கதவைத் திறந்தாள் வர்ஷிணி.


களையான முகமும், சற்று ஒல்லியான தேகமும், நெடுநெடுவென்ற உயரமுமாக, சிவப்பு டிஷர்டும், அடர் நீல ஜீன்சும், பிராண்டட் ஷூவும் அணிந்து, அவன் உடலில் தெளித்திருந்த வாசனைத் திரவியத்தின் மணம் அந்த இடம் முழுவதும் பரவியிருக்க, ஆராய்ச்சியான பார்வையுடன் அங்கே நின்றிருந்தான் கிருஷ்ணா.


“யார் நீங்க, உங்களுக்கு என்ன வேணும்” என அவள் அதிகாரம் தொனிக்கக் கேட்கவும், அவளது எரிச்சல் மண்டிக்கிடந்த முகத்தைப் பார்த்தவன், “நீதான் வேணும்!” என்றான் குதர்க்கமாக, வேண்டுமென்றே அவளைச் சீண்டிப் பார்க்கும் எண்ணத்துடன்.


விழியே வெளியில் தெரிதுவிடும்போல அவனைப் முறைத்தபடி அவனை எதிர்கொண்டாள் வர்ஷிணி, சற்றும் அலட்டிக்கொள்ளாமல்.

4 comments

4 Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
Vijaya Mahendar
Oct 18, 2022

Superji

Like

Srividya Narayanan
Srividya Narayanan
Aug 28, 2022

Wow nice update

Like

Sumathi Siva
Sumathi Siva
Aug 26, 2022

Wow awesome

Like
Replying to

thank you

Like
© KPN NOVELS COPY PROTECT
bottom of page