top of page

Aalangatti Mazhai - 5

Updated: Aug 23, 2022

௫- கனமழை


(துளிகள் பெரியதாக எடை அதிகம் கொண்டதாகப் பொழியும் மழையை, கனமழை என்கிறோம்.)


வர்ஷிணியை மீண்டும் சந்திக்க வருவதாகச் சொல்லியிருந்த அந்த வார இறுதியில் அவனது நண்பன் வர்கீஸ் மேத்யூவுடன் மாஸ்கோவின் சாலைகளில் சுற்றிக்கொண்டிருந்தான் கிருஷ்ணா.


தொழில் நிமித்தம் அவனை நேரில் சந்திக்கச் சென்றவன்தான், மீளமுடியாவண்ணம் அவனிடம் வகையாகச் சிக்கிக்கொண்டான்.


வர்கீஸ் அவனது உயிர் நண்பன். கடவுளின் தேசம் எனப் போற்றப்படும் கேரளத்தின் மலைகளில் சில காபி மற்றும் தேநீர் பண்ணைத் தோட்டங்களுக்குச் சொந்தக்காரன்.


அவனுடைய பாட்டனார் காலம் தொட்டே தேயிலை காஃபி முதலியவற்றைப் பயிரிட்டுப் பதப்படுத்தி ஏற்றுமதி செய்து வருகிறார்கள். இதில் வர்கீஸ் சற்று வித்தியாசமாகச் சிந்திக்க, ‘கிக் வித் கஃபே’ என்கிற பெயரில் காஃபி ஷாப்களை தொடங்கினான். காபி, டீ மற்றும் கொக்கோ ட்ரிங்க்ஸ் போன்றவைதான் அவர்களது முக்கிய வணிகம்.


ஐந்து வருடங்களுக்கு முன் அவன் இந்த நிறுவனத்தைத் தொடங்கியபொழுது முழுக்க முழுக்க அவனுக்குத் தோள் கொடுத்தது கிருஷ்ணாதான்.


வர்கீசின் பெயரில் இருந்த சில சொத்துக்களின்பேரில் வங்கிக் கடன் பெற்றுக் குறுகிய முதலீட்டுடன் வெறும் ஐந்து கிளைகளுடன் திருவனந்தபுரத்தில் தொடங்கியது, இப்பொழுது இந்தியாவின் முக்கிய நகரங்கள் அனைத்திலும் குறிப்பாக மால்கள், விமான நிலையங்கள் என நூற்றுக்கணக்கான அவுட்லெட்களுடன் பரந்துவிரிந்து கோலோச்சிக் கொண்டிருக்கிறது.


இந்த வெற்றிக்கு வர்கீஸ் செய்த முதலீடு மட்டுமே கரணம் என்று சொன்னால் அதை அவனே ஒப்புக்கொள்ள மாட்டான். காரணம் அதன் பின்னே இருப்பது கிருஷ்ணாவின் வியாபார மூளை. அவன் குடும்பத்தினரே அவனை நம்பி முதல் போடத் தயங்கியபோது, “நீ துணிஞ்சு இறங்குடா மச்சான், பார்த்துக்கலாம்’ என அவனுடன் நின்றது கிருஷ்ணா மட்டுமே.


அதனாலேயே இந்தத் தொழிலில் அவனையும் ஒரு பங்குதாரராக அவன் சேர்த்துக்கொள்ள முனைய, அந்தத் தொழிலில் ஈடுபட அவனுக்கு ஆர்வமில்லை. அன்றைய காலகட்டத்தில் அவனது மனநிலை வேறு முற்றிலும் வேறொரு மாதிரி இருக்க கிருஷ்ணா அதற்கு உடன்படவேயில்லை.


ஆனால் இடையிடையே தொழிலில் ஏற்படும் சிக்கல்களையெல்லாம் எதிர்கொள்ள அவனுடைய ஆலோசனை வர்கீசுக்கு அடிக்கடி தேவைப்பட்டது. அவனது ஆலோசனைகளுக்கு சம்பளமாக ஒரு பெரிய தொகையை அவனது வாங்கி கணக்கில் செலுத்திவிடுவான் வர்கீஸ், கிருஷ்ணாவின் மறுப்பையெல்லாம் காதிலேயே வாங்காமல்.


அவன் கிருஷ்ணாவை நச்சரித்துக்கொண்டே இருந்ததற்கு ஏற்ப, நான்கு வருடம் கடந்து அவன் தானாகவே வந்து தென் இந்தியக் கிளைகளின் ப்ரான்சைசி உரிமத்தை முறையாகப் பெற விரும்பவதகக் கேட்க, சந்தோஷமாகக் தூக்கிக் கொடுத்துவிட்டான். அதுவும் இப்பொழுது தங்கள் நிறுவனத்தை உலகச் சந்தை முழுவதிலும் கொண்டுசெல்லும் முனைப்பிலும் இறங்கியிருக்கிறான். எனவே கிருஷ்ணாவின் துணை வர்கீசுக்கு மிக மிக அத்தியாவசியமாக இருந்தது.


அதன் தொடர்ச்சிதான் இந்த மாஸ்கோ பயணம்.


ப்ரான்சைசி உரிமம் பெறுவது தொடர்பான ஆவணங்களைத் தயார் செய்து கையெழுத்திட்டு அதை முறையாகப் பதிவு செய்வதற்காகக் கிருஷ்ணாவை நேரில் வரச் சொல்லியிருந்தான் வர்கீஸ்.


இப்பொழுது அவன் கேரளா வந்ததே அதற்காகத்தான் என்றாலும் வர்ஷிணியை அருகிலிருந்து தரிசிக்க இதை ஒரு சாக்காகப் பயன்படுத்திக்கொண்டான், அவ்வளவுதான்.


அவனது மனம் முழுவதும் அமிர்தவர்ஷிணி என்பவள் மட்டுமே வியாபித்திருக்க, அவனுடைய அட்டவணைப் படி ஞாயிறு காலையே திருவனந்தபுரத்தில் இருந்திருக்கவேண்டும்.


மாஸ்கோ வரமாட்டேன் என மறுத்த கிருஷ்ணாவை, இந்த வர்கீஸ்தான் விவரம் புரியாமல் விடாப்பிடியாகக் கட்டி இழுத்து வந்திருக்கிறான்.