top of page

Aalangatti Mazhai - 4

Updated: Aug 23, 2022

௪ - அடை மழை


(இடைவெளியின்றி அதிக அடர்த்தியுடன் பார்வையை மறைக்கும் படி பெய்யும் மழை அடை மழையாகும். அடை மழையில் நீர் பெரும் ஓடைகளாக ஓடி குளம் ஏரிகளை நிரப்பும் வகையில் மண்ணுக்குக் கிடைக்கும்.)


விரல்களால் நெற்றியை அழுத்தி விட்டபடி, “ஹவ் ஸ்டுபிட் இஸ் திஸ்? நான் எதுக்கு உங்கள நினைக்கணும் சொல்லுங்க? அக்காவுக்கு கல்யாணமான இவ்வளவு வருசத்துல நீங்களும் நானும் நேருக்கு நேர் பார்துட்டது கூட இல்ல! அதுவும் அக்கா கல்யாணத்துல நீங்க என்னை வெச்சு செஞ்சதுக்கு உங்க கூட பேசினதே அதிகம்! தென் ஒய் திஸ் ஓவர் சீன்” எனப் பாய்ந்தாள் வர்ஷினி.


கிருஷ்ணாவின் முகம் ஒரு மாதிரியாக மாறிப்போனது. சட்டெனத் தன்னை சமாளித்தும் கொண்டான்.


அவள் பேசியதைக் காதிலியே வாங்காத ஒரு பாவத்தில், “தலை வலிக்குதா வர்ஷினி?” எனக்கேட்டான் அக்கறை தொனிக்க.


“அதெல்லாம் ஒண்ணும் இல்ல” என்றவள், “மொதல்ல இதுக்கு பதில் சொல்லுங்க. லெட்டரும் சாக்கலட்டும் நீங்கதான் வெச்சீங்களா” எனக்கேட்டாள் வார்த்தைகளின் வேகம் குறையாமல்.


“ப்ச்... உனக்கு என்னதான் பிரச்சன? இங்க வந்ததுல இருந்து லெட்டர்... சாக்கலட்... லெட்டர்... சாக்கலட்ன்னு... இதையே மாத்தி மாத்தி சொல்லிட்டு இருக்க? என்ன லெட்டர்? என்ன சாக்கலட்?” என்றான் ஒரு புரியாத பாவத்தை முகத்தில் காட்டி.


“அப்படின்னா அது நீங்க இல்லையா?” எனக் கேட்டாள் உள்ளே போன குரலில்.


“ப்ச்... வரூ” என அவன் அலுத்துக்கொள்ள, “ஐயோ! நீங்க என்ன என்னை இப்படி வரூன்னு கூப்பிடறீங்க” என்றாள் அவன் ஏதோ செய்யக்கூடாத தவறை செய்துவிட்டதைப் போல.


“ஏன்... அப்படி கூப்பிட்டா ஏதாவது தெய்வ குத்தமா?” என விவகாரமாகக் கேள்வி கேட்டவன் அவள் உருத்து விழிக்கவும், “நம்ம புஜ்ஜி குட்டிங்க உன்னை அப்படித்தான கூப்பிடறாங்க அதான் என விளக்கமளித்தான்.


இரண்டாவதும் பெண்ணாய் போக அவளுடைய அப்பா அம்மாவிடமிருந்து செல்லமோ அல்லது அதிகப்படியான சலுகைகளோ எதுவுமே கிட்டியதில்லை இவளுக்கு. அதுவும் ரஞ்சனிக்கு ஏற்பட்ட விபத்துக்குப் பிறகு அவர்களுடைய கவனம் மொத்தமும் அவள் பக்கமே திரும்பிவிட வர்ஷிணியின் மனதில் ஒரு மாதிரியான வெற்றிடம் உருவாகிப்போனது.


ஆசையாக, செல்லமாகக் கொஞ்சிக் கொஞ்சி அவர்கள் இவளை விளித்ததாக நினைவே இல்லை. அதனால்தானோ என்னவோ இந்த உலகத்திலேயே அவளை அதிகம் நேசிக்கும் நபர் அவளாகவே மாறிப்போனாள்! அதன் அடையாளமாக மனதிற்குள்ளேயே ‘வரூ’ எனத் தன்னைத் தானே செல்லமாக அழைத்துப் பழகிக்கொண்டாள்.


அவளுடைய அக்கா பெற்றெடுத்த முத்துக்கள் மூன்றும் அவளை இயல்பாகவே ‘வரூ’ என அழைக்கத் தொடங்க, இப்படி ஒரு அதிசயம் எப்படி நிகழ்ந்ததென்றே தெரியவில்லை! அக்காவின் பிள்ளைகள் மேல் அவள் வைத்திருக்கும் பிரியம், என்னவோ தானே அவர்களை பெற்றெடுத்ததுபோல பொங்கிப் பிரவாகிக்கத் தொடங்கிவிட்டது.


விவரம் புரியாமல் இவன் போய் இப்படி விளிக்கவும், அது ஒரு மாதிரி சங்கடமாகப் பட்டது.


“இல்லல்ல... அப்படி கூப்பிடாதீங்க” என்றாள் பட்டென்று.