top of page

Aalangattimazhai - 9

Updated: Apr 16


௯ - சோனாவாரி cont…


(விடாமல் பெய்யும் மழையை தமிழில் சோனை / சோனாமாரி / சோனாவாரி என வழங்குவர்)


முகம் முழுவதும் பணிவை தேக்கி, இதழில் மெல்லிய புன்னகையைப் படரவிட்டு, சுப்ரியாவை பவ்வியமாகப் பார்த்தபடி, “நீங்க போட்டுட்டு இருக்கற டிரஸ், என்ன காஸ்ட் இருக்கும்” எனக்கேட்டாள் அமிர்தவர்ஷிணி, அவள் பேசியதை சகஜமாக எடுத்துகொண்ட பாவத்தில்.


தங்கையை நன்றாக புரிந்து வைத்திருக்கும் ரஞ்சனியில் வயிற்றில்தான் பட்டாம்பூச்சிகள் பறந்தன.


சித்ராவோ அவளை பார்வையாலேயே அடக்க, “பைவ் தௌசண்ட் அரௌன்ட்” என தற்பெருமையை பறைசாற்றி முடித்திருந்தாள் சுப்ரியா.


“நீங்க போட்டுட்டு இருக்கற அக்ஸசரீஸ், வாட்ச், ஃபுட் வேர் எல்லாமே பிராண்டடாத்தான் இருக்கு, எல்லாமே காஸ்ட்லியா தெரியுதே!”


“ம்ம்… ம்ம்… யூ.கேல வாங்கினது”


“ப்ச்… அப்ப நிச்சயமா காஸ்ட்லிதான், தென் ரெகுலரா ஜிம் போவீங்களோ, அப்பறம் சலூன் அன்ட் ஸ்பா” 


“ம்ம்”


இவள் கேட்கக் கேட்க, சுப்ரியாவும் பதில் சொல்லிக்கொண்டே வர, கிருஷ்ணாவுக்கு எரிச்சல் மண்டியது.


“எப்படியும் மாசத்துக்கு உங்க பர்சனல் எக்ஸ்பென்சஸ் டுவென்டி டு டுவென்டிஃபைவ் வந்துடும்னு சொல்லுங்க”


“அது இங்க இருந்தா, யூ.கேன்னா இது மாதிரி பல மடங்கு செலவாகும்”


வர்ஷிணியின் உள்நோக்கம் புரியாமல், பெருமையாக நினைத்து அவள் பாட்டுக்கு பதில் சொல்லிக்கொண்டே போனாள்.


“பரவால்லாக்கா, உங்கப்பா உங்களுக்காக காச தண்ணியா செலவழிக்கறாங்க”


“யா… யா… ஹி இஸ் அன் ஆஃபீசர் இன் சென்ட்ரல் கவர்மென்ட், யூ நோ”


“யாஆஆ… தட் ஐ நோ. அப்பறம் இப்ப எம்.எஸ் பண்றீங்க இல்ல, அது உங்க மெரிட்ல கிடைச்சுதா, இல்ல பெய்ட் சீட்டா”


வர்ஷிணி இப்படிக் கேட்க்கவும்தான், சுள்ளென உரைத்தது சுப்ரியாவுக்கு. அவளது முகம் மட்டுமல்ல, அவளது அக்கா உட்பட மற்ற எல்லோரின் முகமும் கூட மாறிப்போனது.


“ஹேய் ரியா, இவதான் சின்னபொண்ணு, விவரம் இல்லாம கேள்வி கேக்கறான்னா, நீ ஏன் பதில் சொல்லிட்டு இருக்க?” என இடை புகுந்தான் கிருஷ்ணா.


அதை காதில் வாங்கதவள் போல, “ஸோ, அதவும் அப்பா காசுலதான் இல்லையா?” என ஏகத்தாளமாக அவளை கேள்வி கேட்டவள், “ஆனா பாருங்கக்கா, நான் என்னோட பர்சனல் எக்ஸ்பென்சஸ் எதுக்கும் அப்பா கிட்ட பணம் கேட்க மாட்டேன்! உடனே எங்கப்பாவோட இன்கம்ம கணக்கு போடாதீங்க! இது என் சுயமரியாதை சம்பந்தப்பட்ட விஷயம். ஸோ, என்னோட பாக்கட் மணிக்காக, என்னோட ஃப்ரீ டைம்ல, டீசன்ட்டா ஒரு வேலை செஞ்சு சம்பாதிக்கறேன். அத புரிஞ்சு பாராட்ட உங்களுக்கு தெரியலன்னா கூட, இப்படி சர்காசம் பண்ணக்கூடாதுன்னு கூட தெரியல பாருங்க” என குரலை உயர்த்தாமலேயே சொல்லி முடித்தாள்.


“ஏம்மா, இதெல்லாம் செஞ்சிட்டு இருந்தா, எப்பதான் படிப்ப? ப்ளஸ் டூ ல பாஸ் பண்ற ஐடியா இருக்கா இல்லையா” என கடுப்புடன் கேட்டாள் சசிகலா.


“வர்ஷிணி, அவங்க ஏதோ விளையாட்டுக்கு சொன்னா, அதையே புடிச்சிட்டு பதிலுக்கு பதில் பேசாத” என மகளை அதட்டிவிட்டு, “இல்லம்மா, அவ நல்லாவே படிப்பா! எப்படியும் டிஸ்டிங்க்ஷன்ல பாஸ் பண்ணிடுவா” என அவளுக்கு பதில் கொடுத்தார் சித்ரா சமாளிப்பாக.


கட்டுப்படுத்த முடியாமல் கிருஷ்ணா பக்கென சிரித்துவிட, “இல்ல கிருஷ்ணா, நிஜமாவே நல்லா படிப்பா, ஸ்பேஸ் சயின்டிஸ்ட் ஆகணும்ங்கறதுதான் அவ லட்சியம்” என்றாள், ரஞ்சனி சங்கடத்துடன். 


“ஐயோ, ஓகே அண்ணி! இதுக்கு நீங்க ஏன் ஃபீல் பண்றீங்க? சும்மா உங்க தங்க பேசறத பார்த்து சிரிச்சுட்டேன், அவ்வளவுதான்” என அவளுக்கு அவன் பதில் கொடுத்தாலும், வர்ஷிணியைப் பற்றிய அவனது மதிப்பீடு மட்டும் மாறவே இல்லை.


கிருஷ்ணா இப்படி தன்மையாக அவளிடம் பேசியதற்கு, சசிகலா ‘இதை கொஞ்சம் கவனி’ என்பதாகத் தங்கையிடம் ஜாடை செய்ய, அது கூட வர்ஷிணியின் பார்வையிலிருந்து தப்பவே இல்லை.


எங்கே விட்டால் இவள் மேலே மேலே பேசித் தொலைப்பாளோ என்கிற பயத்தில், இவர்கள் அத்தை அவளை இழுத்துக் கொண்டுபோய் ஓரமாக போடப்ப்படிருந்த இருக்கையில் தள்ளி அமரவைத்து, அருகிலேயே அமர்ந்தபடி அவளை பிடித்துவைத்துக் கொண்டாள்.


ஒருவழியாக புடவையை தேர்ந்தெடுத்து, அதை உடுத்திப்பார்த்து எல்லாம் முடிய வெகுநேரம் ஆனது.


போனில் அவ்வளவு சகஜமாக பேசும் ஸ்ரீதர், அவனது அம்மாவை விட்டு அங்கே இங்கே நகராமல் இருக்க, மறந்தும் அவன் இவர்களிடம் இலகுவாக பேசாமல் வேறு இருக்க, அது ஒருவித பயத்தைக் கொடுத்தது வர்ஷிணிக்கு. 


‘ஏற்கனவே சசிகலாவின் கை ஓங்கி இருக்கிறது. இப்பொழுதே இவர்கள் பேசுவதும் நடந்துகொள்வதும் சரியாக இல்லை. சுப்ரியாவும் இவர்கள் வீட்டு மருமகள் என்று வந்துவிட்டால் , நாளையே குடும்பத்துக்குள் எதுவும் பிரச்சினை என்றால், அக்காவின் பக்கம் இவன் நிற்பானா?’ என்கிற கேள்வி அவளது மண்டையைக் குடைந்தது. 


எல்லாம் முடிந்து வீட்டிற்குள் நுழைந்தவுடன், முதல் வேலையாக தன் சந்தேகத்தை இவள் ரஞ்சனியிடம் கேட்டுவைக்க, “குடும்பம்னா அப்படி இப்படித்தான் இருக்கும். நீ இப்பவே இவள பயமுறுத்தாத” என்ற அதட்டல் வந்தது சித்ராவிடமிருந்து.


இவள் பதில்பேச வாய் திறக்கவும், “நீ பேசிட்டே இருக்காத வர்ஷிணி! எது வந்தாலும் பார்த்துக்கலாம், இப்பவே அதை பத்தி கவலைப் படவேண்டாம்” என அந்தப் பேச்சுக்கு முற்றுபுள்ளி வைத்து முடித்துவிட்டாள் ரஞ்சனி.


“போக்கா, ஸ்ரீதர் மாமா மேல இருக்கற மயக்கம்தான் உன்ன இப்படி பேச வைக்குது” என அவளது காதோரத்தில் கிசுகிசுப்பாக சொல்லிவிட்டு அறைக்குள் போய் புகுந்துகொண்டாள் வர்ஷிணி.


இவள் கிண்டல் செய்கிறாளா இல்லை கோபமாக சொல்கிறாளா எனப் புரியாமல் குழம்பி நின்றாள் ரஞ்சனி!


**** 


வெகு விமர்சையாக நடந்து முடிந்தது ரஞ்சனி ஸ்ரீதரன் திருமணம்.


அவர்கள் வீட்டுப் பிள்ளையிடம் ஒரு குறை இருந்தாலும் கூட, அவன் இதுவரை படிப்பை முடித்து நல்லபடியாக செட்டில் ஆகவே இல்லை என்றாலும் கூட, ரஞ்சனியின் குறையை முன்னிறுத்தி, என்னவோ தியாகம் செய்து திருமணம் செய்து கொண்டது போல ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி இருந்தனர் ஸ்ரீதரனின் குடும்பத்தினர்.


எங்க ரமேஷுக்கு சசி வீட்டுல இதை செஞ்சாங்க அதை செஞ்சாங்க என்று சொல்லிச் சொல்லியே செலவை நன்றாக இழுத்து விட்டிருந்தார்கள்.


இருபத்தைந்து சவரன் நகை, ஒரு லட்ச ரூபாய் ரொக்கம், முக்கிய நகரத்தின் முக்கிய பகுதியில் முழுவதும் ஏசி செய்யப்பட்ட திருமண மண்டபம், இது இல்லாமல் தடபுடலான கல்யாண செலவு என தன் சக்திக்கு மீறி செலவு செய்திருந்தார் வரதன்.


போதும் போதாத குறைக்கு திருமண இரவின் ஏற்பாடுகள் ஒரு நட்சத்திர விடுதியின் ஹனிமூன் சூட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


மாப்பிள்ளை வீட்டார் கொடுக்கும் மருவிருந்தை, திருமணத்திற்கு மறு தினம் ஏற்பாடு செய்திருந்தனர்.


ரிசப்ஷன் முடிந்ததும், ரஞ்சனியையும் ஸ்ரீதரையும் நட்சத்திர விடுதியில் விட்டு வர இவர்கள் வீட்டில் இருந்து இவளுடைய அத்தையும் மாமாவும் ஸ்ரீதரின் குடும்பத்தின் சார்பாக அவனுடைய அண்ணன் ரமேஷ் சசிகலாவும் கிளம்பி சென்று விட்டனர்.


வெகு சில முக்கிய உறவினர்கள் மட்டும் அங்கே தங்கி இருக்க, சித்ராவும் வரதனும் ஏதோ கணக்கு வழக்குகளை சரி பார்த்துக் கொண்டிருந்தார்கள்.


காலையிலிருந்து உண்டான அலைச்சலில் உடல் மொத்தம் சோர்ந்து போயிருக்க, அங்கே இருந்த சந்தடியால் உறக்கமே வரவில்லை வர்ஷிணிக்கு.


சுவற்றில் மாட்டப்பட்டிருந்த திருமணம் மாலைகளில் இருந்து வந்த மணம் அறைக்குள்ளேயே சுழன்று கொண்டிருக்க அவளுக்கு மூச்சு முட்டுவது போல் இருந்தது. 


அதில் தலைவலி வேறு மண்டையை பிளக்க, சற்று காற்றாட வெளியில் சென்று நிற்கலாம் என்று தோன்றியது. நேரம் வேறு நள்ளிரவை தொட்டுக் கொண்டிருக்க, பேசாமல் மொட்டை மாடிக்கு செல்லலாம் என முடிவு செய்தவள், சந்தடி செய்யாமல் அறையை விட்டு வெளியில் வந்தாள்.


மின்தூக்கி மொட்டை மாடி வரை செல்லாது என்பதால், ஒரு தளம் முன்னதாகவே இறங்கி, மேலே செல்லும் படியில் ஏறினாள்.


மொட்டைமாடியை எட்டும்போது அதிர்ந்த சிரிப்பொலி கேட்க, தயங்கி நின்றுவிட்டாள். அங்கே ஓரமாக கிருஷ்ணா கால் நீட்டி அமர்ந்திருக்க, அவன் மீது சாய்ந்திருந்தாள் சுப்ரியா. அவனது கையில் இருந்த குவளையில் பொன்நிற திரவம் நிரம்பியிருக்க, மற்றொரு கரம் அவளது முகத்தில் கோலம் போட்டுக்கொண்டிருந்தது.


நிதானம் என்றால் என்னவென்றே தெரியாத ஆளாயிற்றே நம் நாயகி! தடதடவென அவள் அங்கே நுழைந்ததுமே, இருவரின் பார்வையும் அவள்மீது பாய்ந்திருக்க, அடுத்த நொடி பதறி அவனை விட்டு விலகினாள் சுப்ரியா!


அவள் பதற்றத்துடன் கிருஷ்ணாவை பார்க்க, ‘நீ போ’ என ஜாடை செய்யவும், அங்கிருந்து ஓட்டமும் நடையுமாக வர்ஷிணியைக் கடந்து அவள் சென்றுவிட, தானும் அங்கிருந்து அகல எத்தனித்தவளின் கையை ஒரே எட்டில் பிடித்தவன், அவளை சுவருடன் பதித்து, “இங்க பார்த்தத, கீழ போய் யார் கிட்டயாவது சொன்ன, இன்னையோட நீ உங்க அக்கவ மறந்துட வேண்டியதுதான்” என்றான் அதிகாரமாக.


அவன் பேசாமல் அமைதியாக சென்றிருந்தால் கூட அவள் இதை கண்டும் காணாமலும் சென்றிருப்பாள்! அவன் இப்படி திமிராக பேசவும், அவளது வழக்கமான துடுக்குத்தனம் தலை தூக்கியது.


“சொல்றது என்ன, நான் உங்க ரெண்டுபேரையும் வீடியோவே எடுத்து வெச்சிருக்கேன்! அத பேஸ் புக்ல போட்டுட்டு அப்பறம்தான் அடுத்த வேல” என்று தன் கைபேசியை எடுத்து இப்படியும் அப்படியும் அசைத்தாள், விபரீதம் புரியாமல்.


அவள் சொன்ன விதத்தில், அவள் உண்மையாகவே செய்துவிட்டாள் என்றே அவனுக்குத் தோன்றியது. அதில், ஆண்களுக்கே உரித்தான அகங்காரம் தலை தூக்க, கூடவே உள்ளே போன மதுவும் அவனது அகங்காரத்துக்கு தீனி போட்டது.


அவளது கைப்பேசியை பலமாகத் தட்டிவிட, ஆது கீழே விழுந்துச் சிதறியது.


அவனும், சுப்ரியாவும் இருநத நிலையில், இவளால் அவனது மாயவலை அறுபட்ட எரிச்சலில் இருந்தவனுக்கு, இத்துடன் நிறுத்த முடியவில்லை.






"பேசிக் மேனர்ஸ் கூட தெரியலல்ல உனக்கு? அடுத்வங்க பிரைவசில நுழஞ்சிட்டு... அரகன்ட்" என அவளை நொடி கூட சிந்திக்காமல், வேகமாக அவளை இழுத்து தோளோடு வளைத்தவன், தன் கைபேசியில் அப்படியே செல்ஃபி எடுத்துவிட்டான்.


அவனது பிடியிலிருந்து அவள் பதறி விலக, அப்படியே விட்டவன், “போ… போய் ஃபேஸ் புக் என்ன வேற எதுல வேணா போடு, நானும் இந்த போட்டோவ உங்க வீட்டுல எல்லாருக்கும் ஷேர் பண்றேன்” என்றான் தெனாவெட்டாக.


அவளது உடல் தடதடவென ஆட்டம் கண்டது. மேற்கொண்டு பேச்சே வராமல் தொண்டை அடைத்துப் போக, ஸ்தம்பித்து நின்றாள்.


அலட்சியமாக அவளைத் தள்ளிக்கொண்டு, கீழே இறங்கிச் சென்றான் கிருஷ்ணா!


உடல் கூசிப்போனது வர்ஷிணிக்கு.


என்ன காரணமோ புரியவில்லை, கிருஷ்ணாவை அந்த சுப்ரியாவுடன் இவ்வளவு நெருக்கமாக பார்த்ததும், அது அவளுக்கு அவ்வளவு உவப்பாக இல்லை.


மனதுக்குள் சினம் முணுமுணுவென குமிழிட்டது. அன்று ஜவுளிக் கடையில் சுப்ரியா இவளை மட்டம் தட்டி பேசிய பொழுது, அதற்கு அமைதியாக இருந்துவிட்டு, இவள் பதில் பேசவும் அவளுக்கு வக்காலத்து வங்கிக் கொண்டு வந்தபோதே இவனுக்கு பதில் கொடுக்காமல் விட்ட எரிச்சலின் மீதம் வேறு தணியாமலேயே இருந்தது.


அவனை வெறுப்பேற்றிப் பார்க்க எண்ணி இவள் இப்படிப் பேசியது,  பெரும் பிசகாக ஆகிப்போனது. அதை போனிலிருந்து டெலீட் செய்துவிடு என கெஞ்சுவான் என்று இவள் நினைத்தது உண்மையில் அறைவேக்கட்டுத்தனம் என்பது புரிந்தது.


அதற்கு பதில், கிருஷ்ணா இவ்வளவு மோசமாக கீழிரங்குவான் என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.


சில நிமிடங்கள் அப்படியே ஸ்தம்பித்து நின்றவள், உணர்வுக்கு வந்து கீழே சிதறிக் கிடந்த கைப்பேசியின் பாகங்களை ஒன்று சேர்த்து பொருத்தி ஆன் செய்தாள். 


போனின் டிஸ்ப்ளே மொத்தமும் நொறுங்கிப் போயிருக்க, அது வேலையே செய்யவில்லை.


அவளுக்கென்று தனியாக கைபேசிக் கிடையாது. இது சித்ராவினுடையது. அதுவும், வாங்கி ஓரிரு மாதங்கள்தான் ஆகிறது. யூடியூபில் ஏதாவது வீடியோ பார்க்கலாம் என எடுதிவந்திருந்தாள். இப்பொழுது இதை வேறு சமாளித்தாக வேண்டும்.


அப்பா, அம்மா இரண்டுபேருமே இவளை ஒருவழி செய்துவிடுவார்கள். காப்பாற்ற இனி ரஞ்சனி வேறு கூட இல்லை. அதை நினைக்கும் போதே கண்களில் மொளுக்கென்று கண்ணீர் நிறைந்தது.


மனம் ஒரு நிலையில் இல்லாமல் தவிப்புற, அமைதியக அவர்களுக்கென ஒதுக்கப்ட்டிருகும் அறைக்குள் வந்தாள்.


இவள் வந்து ஓரமாகப் படுக்கவும், அதில் உறக்கம் களைந்து, “என்னடி நீ இன்னும் தூங்கலியா” எனக்கேட்டார் சித்ராவுக்கு அருகில் படுத்திருந்த அவளது பெரியம்மா.


‘இல்ல பெரிம்மா, ரெஸ்ட் ரூம் போயிட்டு வந்தேன்” என இன்ஸ்டண்டாக அவரிடம் ஒரு பொய்யை சொல்லிவிட்டு கண்மூடி படுத்துவிட்டாள், ஆனால் உறக்கம் மட்டும் வர மறுத்தது.


கிருஷ்ணா செய்த செயலே திரும்பத் திரும்ப மனதிற்குள் ரிபீட் மோடில் ஓடிக்கொண்டிருக்க, தலை முன்பை விட அதிகமாக வலித்தது.


நீண்ட நேரம் விழித்திருந்து எப்பொழுதுதான் உறங்கினாளோ! தன்னையும் அறியாமல் அவள் உறங்கிப்போயிருக்க, சில நிமிடங்களுக்கெல்லாமே, அந்த அறையில் உறங்கிக் கொண்டிருந்த அவளது அத்தை, பெரியம்மா உள்ளிட்ட உறவுக்கார பெண்களெல்லாம் ஒவ்வொருவராக விழித்தெழ தொடங்கினார்கள்.


கேட்டரிங் பணியாளர்கள் காஃபியை கொண்டு வந்து அறைக்குள்ளே வைத்து விட்டுச் சென்றனர்.


அங்கிருந்த குளியலறையை பயன்படுத்த ஆளாளுக்கு போட்டி போட, எழுந்து அப்படியே உட்கார்ந்திருந்தாள் வர்ஷிணி.


"ரஞ்சுவுக்கு மெசேஜ் போடலாம்னு பார்த்தா இந்த போன எங்க வச்சேன்னு தெரியலக்கா!" என வர்ஷணியின் வயிற்றில் புளியை கரைத்தார் சித்ரா.


"சரி இந்தா, என் போன்ல இருந்து போடு" என அவளது பெரியம்மா தனது கைபேசியை நீட்ட, அவளுக்கு 'ஷ்…அப்பா' என்றிருந்தது. ஆனாலும் எந்த நேரமும் குட்டு உடையும் என்ற பீதியிலேயே இருந்தாள்.‌


இப்படியாக ஏகப்பட்ட களேபரத்தில் இருந்ததால் அன்று அவளுடைய பரீட்சை முடிவு வருகிறது என்பதை எல்லோருமே மறந்திருந்தனர்.


ஒரு வழியாக அடித்து பிடித்து எல்லோரும் தயாராகி அங்கிருந்து அகன்று விட, நிதானமாக எழுந்து சென்று தானும் குளித்து உடை மாற்றி வெளியில் வந்தாள் வர்ஷிணி.


காலைச் சிற்றுண்டி தயாராக இருக்க சாப்பாட்டுக் கூடம் நோக்கிப் போனாள்.


அங்கேதான் அவர்கள் குடும்பத்தினர் சகிதம், அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தான் கிருஷ்ணா. இவளைப் பார்த்ததும் அவனது முகம் கடுகடுப்பாக மாறிப்போனது. இவளது முகமோ பேய் அறைந்தார் போலாக, சாப்பிட கூட எண்ணமில்லாமல் போனது.


கிருஷ்ணா வேறு இவளையே பார்த்திருக்கவும், அதற்கு மேல் அங்கே இருக்கக் கூட பிடிக்காமல் வெளியில் வந்து, விழா கூடத்தில் ஒரு ஓரமாக போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.


ரஞ்சனி எப்பொழுது வருவாள் என அவளது பார்வை வாயிற்புறமே இருக்க, அவளுக்கு அருகில் வந்து உட்கார்ந்தான் கிருஷ்ணா.


மிக முக்கிய நெருங்கிய உறவினர்கள் தவிர அங்கே வேறு யாரும் அன்று அங்கே தங்கியிருக்கவில்லை. அவர்களும் சாப்பாட்டுப் பந்தியில் மும்மரமாக இருக்க, இங்கே குறிப்பிடும் படியாக யாரும் இல்லாமல் போனது அவனுக்கு வசதியாய் அமைந்தது.


மீண்டும் தன் கைபேசியில் முந்தைய தினம் எடுத்த அந்த புகைப்படத்தை அவளிடம் காண்பித்தவாறு, "ஏய், உன் போன்ல எடுத்த வீடியோவ மொத்தமா டெலிட் பண்ணு. அது கூகுள் போட்டோஸ்ல ஆட்டோமேட்டிக்கா ஸ்டோர் ஆகி இருக்கும்தான? அதையும் டெலிட் பண்ணு" என்றான் அதிகாரமாக.


"இதோ பாருங்க நேத்து  வீடியோ எடுத்ததா நான் சொன்னது உண்மை இல்ல. சும்மா உங்கள டென்ஷன் பண்ணதான் அப்படி சொன்னேன்" என்றாள் தன் பொறுமையை இழுத்து பிடித்து.


"நீ உண்மைய சொல்ற! இப்ப நான் அத நம்பனும், அப்படித்தான?"


"வேற வழி இல்ல நீங்க நம்பித்தான் ஆகணும். அதோட இப்ப அந்த போனும் யூஸ் பண்ற நிலைமைல இல்ல. நீங்க தூக்கி அடிச்சதுல அதோட டிஸ்ப்ளே மொத்தமா நொறுங்கிப் போச்சு"


"யார் காதுல பூவ சுத்துற? நீ அந்த போனை காமி! நானே டெலீட் பண்ணிகறேன்”


“ப்ச்… சொன்னா நம்புங்க கிருஷ்ணா! இன்னும் சொல்லப்போனா அது என் போன கூட இல்ல, எங்க அம்மாவோடது! அவங்களுக்கு பயந்துட்டு, அதுல நான் செல்ஃபி கூட எடுக்கமாட்டேன்!”


அவள் இப்படி சொன்ன நொடி, அவன் இவளைக் கொலைவெறியுடன் பார்க்க, “நிஜமாத்தான் சொல்றேன்” என்றாள் உள்ளே போன குரலில்.


“மொதல்ல அந்த போன கொண்டுவந்து என் கைல குடு, இல்லன்னா என் போன்ல இருக்கற போட்டோவ இப்பவே உங்க அப்பாவுக்கு ஃபார்வேட் பண்ணிடுவேன்” என்றான், நிச்சயம் செய்தே தீருவேன் என்கிற தொனியில்.


வேறு வழி இல்லாமல், அமைதியாகப் போய் அந்தக் கைப்பேசியை கொண்டுவந்து அவனிடம் கொடுத்தாள்.


அதை வாங்கி ஆராய்ந்தவன், “நான் சும்மா லைட்டாதான தட்டிவிட்டேன், எப்படி இவ்வளவு டேமேஜ் ஆச்சு? நிஜமா சொல்லு, இது அந்த போன்தானா” 


அவன் இவ்வளவு சந்தேகமாகக் கேட்கவும், “தோ பாருங்க,  பொய் சொல்ற வழக்கம் எப்பவுமே எனக்கு இல்ல! அதுவும் உங்க கிட்ட பொய் சொல்லவேண்டிய அவசியமும் எனக்கு இல்ல! இதுக்கு மேல என்ன நீங்க நம்பலன்னா கூட எனக்கு கவல இல்ல. ஏதோ ரஞ்சனிக்காக கொஞ்சம் யோசிச்சேன், அவ்வளவுதான். போட்டோவ யாருக்கு வேணாலும் ஃபார்வர்ட் பண்ணிக்கங்க. அதுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்! நீங்கதான் என் கிட்ட மிஸ் பீகேவ் பண்ணதா சொல்லிடுவேன்! அதான உண்மையும் கூட?” என்றாள் நிமிர்வாக.


இவளது இந்த துணிச்சலான பேச்சே, இவள் பொய்சொல்லவில்லை என்பதை அவனுக்கு உணர்த்த, உண்மையில் அசந்துதான் போனான் கிருஷ்ணா! 


இவனிடம் வர்ஷிணி தீவிரமாக பேசிக் கொண்டிருபதைப் பார்த்துவிட்டு அவர்களை நெருங்கி வந்த வரதன், “ஏய் வர்ஷிணி, நீ இங்க இப்ப என்ன செஞ்சிட்டு இருக்க?” என்றார் அதட்டலாக.


அவள் பேச்சற்று தடுமாற, “இல்ல மாமா, போன் உடைஞ்சுபோச்சு, இதை சரி செய்ய முடியுமான்னு கேட்டுட்டு இருந்தா” என அவன் சமாளிக்க, அவனுக்கு எதிரில் மகளை எதுவும் சொல்ல முடியாமல், தன் கோபத்தை அடக்கியபடி, “இதெல்லாம் அப்பறம் பார்த்துக்கலாம், இப்ப போய் ஆக வேண்டிய வேலைய பாரு” என அவளை அதட்டி அங்கிருத்து அனுப்பினார்.


அவள் வேகமாக அறை நோக்கிப் போக, சில நிமிடங்களில் அங்கே வந்தவர், “அம்மா போனா அது?” எனக்கேட்டார் அவளைக் கடித்துக் குதறும் ஆத்திரத்துடன்.


“அமாம்ப்பா, சாரி. கை தவறி கீழ விழுந்துடுச்சு” என்றாள் குரல் தந்தி அடிக்க.


“கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா உனக்கு? அதுவும், உடைஞ்சிருச்சுன்னு  நீ… எங்கிட்டயோ இல்ல அம்மா கிட்டயோதான சொல்லியிருக்கணும்! மாப்பிள்ளையோட தம்பி கிட்ட போய் சொல்ல வேண்டிய அவசியம் என்ன? பார்த்துட்டு, யாரவது எதையாவது பேசவா? இதால அக்கவுக்குதான பிரச்சனையாகும்.  விவரமான பொண்ணுதான நீ? அறிவில்ல?” எனத் தொடங்கி இவளை உண்டு இல்லை என்று செய்துவிட்டார் வரதன்.


சித்ரா வேறு வந்துவிட, தனது புதிய போன் உடைந்த கோபத்தில், தன் பங்கிற்கு அவர் ஒரு பாட்டம் இவளை வைத்து செய்துவிட, ஓய்ந்தே போனாள் வர்ஷிணி.


அந்த நேரம் பார்த்து ரஞ்சனியும் ஸ்ரீதரும் அங்கே வந்துவிட, இவளை விட்டுவிட்டு அவளை கவனிக்கச் சென்றனர் இருவரும்.


அதற்கு மேல் அங்கே இருக்கவே பிடிக்காமல், அவளது உடைகள் வைத்திருந்த பையை எடுத்து தோளில் மாட்டிக்கொண்டு, சந்தடி இல்லாமல் அந்த மண்டபத்திலிருந்து வெளியேறினாள் வர்ஷிணி.


அவள் அங்கிருந்து செல்வதை பார்த்துக்கொண்டேதான் இருந்தான் கிருஷ்ணா. அவளும் அவனைப் பார்த்தபடிதான் அங்கிருத்து வெளியில் வந்தாள்.


‘இனி இவனை பார்க்கும் சூழல் உருவாகவே கூடாது’ என்றுதான் அவளுக்குத் தோன்றியது.


அன்றே அவளது பரீட்சை முடிவுகள் வந்தன. அவள் மாநிலத்திலேயே முதலாவதாக வந்திருப்பதை, அவள் படிக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியரே வரதனுக்கு போன் செய்து சொல்லிவிட, பெருமை தாளவில்லை அவருக்கு.


ஒரு நொடிக்குள் நிலைமையே தலை கீழாக மாறிப்போக, அதில் உண்டான மகிழ்ச்சியில், நடந்த சச்சரவுகள் அனைத்தும் பின்னுக்குப் போனது. ஆனாலும் அவை அவளது மனதை விட்டு மறையவே இல்லை!


அதன்பின் ஜே.ஈ.ஈ தேர்வில் தேர்ச்சி பெற்று, திருவனத்தபுறத்தில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்திற்கு உட்பட்ட கலூரியிலேயே அவளுக்கு இடமும் கிடைத்தது.


தனது கனவை நோக்கி முதல் அடியை எடுத்துவைத்தாள் வர்ஷிணி.


அதன் பின் கிருஷ்ணா என்பவனை சந்திக்க வேண்டிய அவசியமே அவளுக்கு ஏற்படவில்லை.


அந்த சுப்ரியா என்ன ஆனாள்? இவன் என் அவளை திருமணம் செய்யவில்லை? இவ்வளவு வருடங்கள் கடந்து, திடீரென இங்கே வந்து ஏன் தன் நிம்மதியைக் குலைக்கிறான்? என ஆயிரம் கேள்விகள் அவளது மண்டையைக் குடைந்தது.


எதையெதையோ சிந்திக்கச் சிந்திக்க, ஏதேதோ மாய உருவங்கள் அவள் முன்னே தோன்றி அவளை அதிகம் குழப்பியது.



கண்களில் போதைத் ததும்ப, அவளைத் தன் தோளோடு வளைத்து, அவளது கன்னத்தில் இதழ் பதித்து, அப்படியே அதைத் தன் கைப்பேசியில் செல்ஃபியாக கிருஷ்ணா பதிவு செய்வது போன்ற ஒரு காட்சி நிஜம் போல அவள் முன் பெரிதாக விரிய, நடுங்கிப் போனாள் அமிர்தவர்ஷிணி. 


1 comment
© KPN NOVELS COPY PROTECT
bottom of page