top of page

Aalangatti Mazhai - 3

Updated: Aug 23, 2022

௩- சாரல்


(பலமாக வீசும் காற்றால் சாய்வாக அடித்துவரப்படும் அடர்ந்த தூரல்கள் சாரல் எனப்படும். மழை பொழியுமிடம் ஓரிடமாக இருக்கும். காற்று அந்த மழைத்துளிகளைக் கொண்டு சென்று வேறிடத்தில் வீசி பரவலாக்கும். பின்பு அந்த நீர் சிறு ஓடையாக ஓடி மண்ணில் தேங்கி ஊறி இறங்கும்.)


அந்தக் காகிதத்தை அப்படியே கசக்கி குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டுப் போயிருக்கலாம் ஆனால் ஏனோ அதைச் செய்ய அவளுக்கு மனம் வரவில்லை. ஏதோ ஒன்று வர்ஷினியை தடுத்தது.


ஒரு இனிய நறுமணத்துடன் பட்டுப் போன்று மிருதுவாக இருக்கும் அந்த காகிதமாக இருக்கலாம், அச்சு போல அதில் வார்க்கப்பட்டிருக்கும் அழகிய கையெழுத்தாக இருக்கலாம். அல்லது கவிதை போன்ற இனிய வரிகளாக இருக்கலாம். அனைத்தையும் மீறி அதை யார் எழுதியது என அறிந்துகொள்ளும் ஒரு ஆவல் உள்ளே தொன்றிவிட்டதே! அதுவாகக் கூட இருக்கலாம்..


வர்ஷிணி குடியிருப்பது அரசாங்கத்தால் மிகவும் பாதுகாப்புக்கு உட்படுத்தப்பட்டிருக்கும் ஒரு பகுதி. முறையான அனுமதி இல்லாமல், நினைத்த நேரத்தில் யார் வேண்டுமானாலும் அதன் உள்ளே நுழைந்துவிட முடியாது.


‘ஆக இங்கே அருகில் குடியிருக்கும் யாரோ ஒருவன்தான் இந்த கடிதத்தை அங்கே வைத்திருக்கக் கூடும்! யாராக இருக்கும்? உடன் வேலை செய்பவனா? மேலதிகாரியா அல்லது இங்கே பணியிலிருக்கும் சீனியர் யாருடைய மகனோவா?’ என யோசனை வண்டு மூளையை குடையப் பார்வையைச் சுழலவிட்டாள். கண்களில் தென்பட்ட வரையிலும் பழகிய முகங்கள்தாம். ஒரு சிநேகப் புன்னகையோடே அவளைக் கடந்து சென்றனர்.


‘ஒரு வேளை புதியவர்கள் யாரவது இங்கே யார் வீட்டிற்கும் விருந்தினராக வந்திருக்கக் கூடுமோ?!’ என்ற எண்ணம் பொறி போலத் தோன்ற, அதற்கான விடையைக் கண்டுபிடிக்கும் பேராவல் மட்டுமே அவளுக்கு உண்டானது.


அந்த நேரம் பார்த்து, “ஹை அக்கா! குட் ஈவினிங்” என ராகம் போட்டபடி அவளுக்கு அருகில் வந்து உட்கார்ந்தாள் ஐஸ்வர்யா, அவள் குடியிருக்கும் ப்ளாக்கில் முதல் தளத்தில் வசிக்கும் வசந்தி மேடமின் மகள்.


அவர்களும் தமிழர் என்பதால் இங்கே இவளுக்கு இருக்கும் நெருங்கிய தோழியாகிவிட்டாள். பதினொன்றாம் வகுப்பில் படிக்கிறாள். பாடத்தில் எதாவது சந்தேகம் என்றால் இவளிடம்தான் வருவாள்.


“குட் ஈவினிங் ஐஷு” என பதிலுக்கு வாழ்த்தியவள், “ஆமாம், நம்ம ஏரியால புதுசா யாராவது வந்திருக்காங்களா, ஐ மீன் யார் வீட்டுகாவது கெஸ்ட்” என தனது சந்தேகத்தை அவளிடம் கேட்டாள்.


வர்ஷிணியின் கையிலிருந்த காகிதத்தில் பார்வையைப் பதித்தவாறே, “லாங் வீக் எண்ட்ங்கறதால இங்க இருந்து ஊருக்கு போனவங்கதான் அதிகம். எனக்கு தெரிஞ்சு புதுசா யாரும் வந்த மாதிரி தெரியலியே? திடீர்ன்னு ஏன்க்கா கேட்கறீங்க? எனக் கேட்டாள் ஆராய்ச்சி தொனிக்க.


‘ஓ மை காட்... இந்த பொண்ணு சரியான டேஞ்சரஸ் பார்ட்டி... விட்டா இந்த லெட்டர்ல என்ன எழுதி இருக்குன்னு கூட கண்டுபிடிச்சு சொன்னாலும் சொல்லுவா! வரூ பீ அலர்ட்டு’ என சுதாரித்தவள், “இல்லல்ல சும்மாதான் கேட்டேன்” என அவசரமாகச் சொல்லிவிட்டு அவளுடைய பாடத்திலிருந்து சில பல கேள்விகளைக் கேட்டு பேச்சைத் திசை திருப்ப அது நன்றாக வேலை செய்தது.


“ஐயோக்கா, இப்பதான் அம்மா கிட்ட இருந்து தப்பிச்சு எஸ் ஆகி விளையாட வந்தேன். ப்ரீயா விடுங்க” என்று கடுப்பாகி அவளது தோழியை நோக்கி ஓடிப் போனாள் ஐஷு.


“ஐஷு... உன்னோட இந்த பயம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு” என கத்தி சொல்லி அவளது செல்லமான முறைப்பைப் பெற்றுக்கொண்டு, ‘ஷ்ப்பா...’ என்ற ஆசுவாச பெருமூச்சுடன் காலி காபி கோப்பையைக் கையில் ஏந்தியபடி அந்த கடிதத்துடன் மறுபடி அவளது வீட்டுக்குள் போனாள்.


கூந்தலை ஒரு கேட்ச் க்ளிப்பில் அடக்கி முகம் கழுவி வந்து அணிந்திருந்த பேன்ட் சட்டை பாணி இரவு உடையிலிருந்து ஜீன்ஸ் குர்திக்கு மாறியவள் கண்ணாடியில் தன் முகத்தைப் பார்க்க காலையில் வைத்த சிறிய ஸ்டிக்கர் பொட்டு அப்படியே இருந்தது.


கைப்பேசியை எடுத்து பேன்ட் பாக்கட்டுக்குள் சொருகியவள், அங்கே இங்கே என்று தேடி ஸ்கூட்டி சாவியை கண்டெடுத்தாள். பின்பு சணலால் ஆன பை ஒன்றையும் பர்சையும் எடுத்துக்கொண்டு வெளியில் வந்து ஸ்கூட்டியின் சீட்டை திறந்து பையை உள்ளே வைத்துப் பூட்டி பின் அதை கிளப்பிச் சென்றாள்.


அந்த குடியிருப்பு வளாகத்தை விட்டு சற்று தள்ளி இருக்கும் ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்கு வந்தவள் அடுத்த வாரத்துக்குத் தேவையான காய்கறிகள் பழங்கள் இன்னும் சில பொருட்களையும் தேர்ந்தெடுத்து அள்ளி கூடையில் போட்டு எடுத்து வந்து நீண்ட வரிசையில் நின்று பில் போட்டு அதற்கான தொகையைச் செலுத்தி அனைத்தையும் வாங்கி, தான் கொண்டு வந்த பையில் போட்டு எடுத்துக்கொண்டு வெளியில் வர, டார்க் சாக்கலட் வாங்காமல் மறந்து வந்துவிட்டது அப்பொழுதுதான் அவளது நினைவில் வந்தது.


சர்க்கரை கலக்காத டார்க் சக்கலட்டில் உள்ள கொக்கோ மாதவிடாய் கால வயிற்று வலியை மட்டுப்படுத்தும். கூடவே மூட் ஸ்விங்க்ஸ் எனப்படும் மனநிலை மாறுபாடுகள் கட்டுக்குள் வரும். அதனால் அதை வாங்கி தயாராக வைத்துக் கொள்வாள்.