௨ – தூறல்
(காற்றில்லாமல் மெல்லியதாகத் தூவி, புல் பூண்டின் இலைகளையும் நம் உடைகளையும் கொஞ்சமாக நனைத்து சீக்கிரமே காய்ந்து போகும் மழையைத் தூறல் என்கிறோம்)
‘ஹேய் லூசு! கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இவனைப் பத்தி மனசுல நினைச்சதுக்கே காண்டான! இப்ப என்னடான்னா இப்படி ஜெர்க் ஆகி நிக்கற? கோபியர்கள் எல்லாரையும் வசியம் செஞ்ச அந்த மாய கிருஷ்ணன் ரேஞ்சுக்கு ஓவரா சீன் போடறான். ஆமாம்... இவன் உண்மையாவே அந்த ஓட்டடை குச்சி கிருஷ்ணாதானா இல்ல இந்த குட்டி பிசாசுங்க ஆர்வ கோளாறுல வேற யாரையாவது பார்த்து குழம்பிப் போயிட்டாங்களா?’ என அவளது யோசனை எங்கெங்கோ சென்றது.
அதற்குள் ஒரு கையில் குடையும் மறு கையின் அணைப்பில் சக்தியுமாக அவர்களை நோக்கி வந்த ஸ்ரீதர், “ஹேய், எதுக்குடா இவ்வளவு அவசரம். வண்டிய பார்க் பண்ணிட்டு வரதுக்குள்ள மழைல நனைஞ்சிட்டு இப்படி ஓடி வந்திருக்க” எனத் தம்பியைக் கடிந்துகொண்டதில் அவன் கிருஷ்ணாவேதான் என்பது அவளுக்கு ஊர்ஜிதம் ஆயிற்று.
“வேற எதுக்கு, எல்லாம் என்னோட செல்ல புஜ்ஜி குட்டீஸை பார்க்கத்தான். மோர் தேன் த்ரீ இயர்ஸ் நியூ யார்க்ல அண்ட் தென் டூ டு த்ரீ டேஸ் ட்ரேவலிங்லன்னு நானே தவிச்சு ஏங்கிப் போய் வந்திருக்கேன். இங்க வந்தும் இப்படி காக்க வெச்சா... பெண்டாட்டி புள்ளகுட்டியோட ஹப்பியா இருக்க இல்ல? இந்த எமோஷன்ஸ் எல்லாம் உனக்கு புரியாதுடா அண்ணா” என்றபடி ஸ்ரீயின் கன்னத்தில் அவன் அழுந்த இதழ் பதிக்க அவனுடைய பார்வை வர்ஷிணியின் முகத்தில் பதிந்தது.
அதற்குள் ஸ்ரீதரின் கையிலிருந்து வழுக்கி இறங்கிய சக்தி, “வ்வ்வ்வ்வரூ... நீ என்னைத் தூக்கு” என்று கட்டளையாகச் சொல்ல வர்ஷிணி அவளைத் தூக்கிய நொடி தாவி கிருஷ்ணாவின் கழுத்தைக் கட்டிக்கொண்டு அவனது கன்னத்தில் முத்தமிட்டாள்.
சற்று தடுமாறி தன்னை நிலைப்படுத்திக் கொண்டவனின் கண்கள் கலங்கியேவிட்டன. அதற்குள் ஸ்ரீயை அவனிடமிருந்து வாங்கிக்கொண்டான் ஸ்ரீதர்.
பிள்ளையின் இந்த திடீர் செயலில் ஒரு நொடி அவனது செவியுடன் அவளது இதழ்கள் பட்டும் படாமலும் உரசி மீண்டிருக்க வர்ஷிணியால்தான் சட்டென இயல்புக்குத் திரும்ப இயலவில்லை. உடல் நடுங்கி கால்கள் இரண்டும் துவண்டு போனது.
அதற்குள் மழை தன் வேகத்தைக் குறைத்திருக்க, “ரொம்ப பசிக்குது வீட்டுக்கு போகலாம் வரூ!” என சிணுங்கினாள் ஷிவா.
அதில் உணர்வுக்கு வந்தவள், “ஆங்... போகலாம்” என்று குழந்தையிடம் சொல்லிவிட்டு, “வாங்க அத்தான் கிளம்பலாம்” என்றாள் ஸ்ரீதரிடம்.
மீண்டுமொருமுறை கிருஷ்ணாவின் முகத்தை ஏறிட்டுப் பார்க்கக்கூட அவ்வளவு தயக்கமாக இருந்தது அவளுக்கு.
அனைவருமாக வெளியில் வர வர்ஷிணியின் கையிலிருந்த கார் சாவியை பிடிங்கி, ‘டைன் டைன்’ என ஒலி எழுப்பியவாறு அதை இயக்கி காரை திறந்தாள் சக்தி.
“கிருஷ்ணா நீ இவங்க கூட வீட்டுக்கு போ, நான் ஏடீஎம் போய் பணத்தை எடுத்துட்டு வீட்டுக்கு வரேன்” என்ற ஸ்ரீதர் அவனது வாகனத்தை நோக்கிப் போனான்.
“அத்தான், என் காரை வேற யாரையும் டிரைவ் பண்ண விட மாட்டேன், உங்களுக்கு தெரியும் இல்ல” என அவள் பட்டெனச் சொல்லிவிட, “அதெல்லாம் இவன் உன் டிரைவிங் உட்கார்ந்து வருவாம்மா. என் தம்பிக்கு எந்த சேதாரமும் ஆகம நீ பத்திரமா கூட்டிட்டு போ” எனக் கிண்டலாகவே சொல்லிவிட்டு ஸ்ரீதர் தன் வாகனத்தைக் கிளப்பிக் கொண்டு போக, அடக்கப்பட்ட சிரிப்புடன் போய் பிள்ளைகளை பின் இருக்கையில் அமர்த்தி சீட் பெல்ட்டை மாட்டிவிட்ட கிருஷ்ணா வெகு சுவாதீனமாக வந்து அவளுக்கு அருகில் அமர்ந்தான்.
அவன் பக்கம் கூட திரும்பாமல் வாகனத்தைக் கிளப்பினாள் வர்ஷிணி. முதலில் ஓரக் கண்ணால் அவளைப் பார்த்தவன், அவள் தன்னை கவனிக்கவில்லை என்பதை உணர்ந்து பார்வையைச் சுதந்திரமாக அவள் பக்கம் திருப்பி நன்றாக அவளை அளவெடுத்தான்.
கழுத்துவரை வெட்டி ‘பாப்’ கட் செய்யப்பட்டிருந்த கருத்த அடர் கூந்தலை மொத்தமாக ஒரு பேன்டில் அடக்கி குதிரைவால் போல இருக்கக் கட்டியிருக்க அதில் தானே கட்டுண்டு போனான்.
அவளது வில்லென வளைந்த புருவமும் கூர் அம்பென்ற விழிகளும் அவனை வீழ்த்தும் ஆயுதங்களாகின. நல்ல வேளையாக அவை அவனைக் குறி பார்க்கவில்லை, அதனால் தப்பித்தான்!
கூரான நாசியோ ‘இவள் ஒரு கோபக்காரி’ என அவள்மீது குற்றம் சாட்டியது.
சாயமேதும் பூசாமலேயே செக்கச் சிவந்திருந்த அவளது இதழ்களின் வரிகளில் தன் முகவரியே மறந்தான்.
சிவந்து செம்மை படர்ந்து மல்கோவா மாம்பழம் போன்றிருந்தத அவளது கன்னக் கதுப்பு அப்படியே அவனைக் கடித்துத் தின்னச் சொன்னது.
‘தேவதை வம்சம் நீயோ?’ என்று கத்தி பாடவேண்டும் போல் ஒரு உந்துதல் உண்டானது கிருஷ்ணாவுக்கு. மிக முயன்று தன்னை கட்டுப்படுத்திக்கொண்டான்.
உண்டியலைக் குலுக்கியது போல பின்னாலிருந்து பிள்ளைகள் மூவரும் சலசலத்துக் கொண்டே வந்தது கூட இருவரின் கவனத்திலும் பதியவில்லை.
திடீரென, “சித்தூ” என அலறினாள் ஷிவா. அதிர்ந்து இருவரும் பின்பக்கமாகத் திரும்பிப் பார்க்க, “வரூ, ஸ்டாப் த கார்” என்று சொல்லிவிட்டு, “சித்தூ, அங்க பலூன் விக்கறான் பாரு! எனக்கு வாங்கிக் குடு" எனச் சலுகையாகக் கேட்டவள், “பார்க் போகும்போதே வரூ கிட்ட கேட்டேன். வங்கியே குடுக்கல” என அவளைக் குற்றமும் சாட்டினாள்.
அவர்களுடைய சித்தப்பன் முன்பாக இவளைக் குறைத்துப் பேசவும் பொசுக்கென்று கோபம் வந்துவிட்டது அவளுக்கு.
“ஏதோ நியாபகத்துல கவனிக்கல, இதையே சொல்லிட்டு இருபியா?” என அவள் மகளிடம் பாய, “என்ன நியாபகத்துல இருந்த வரூ’ என அப்பாவித்தனத்துடன் கேட்டாள் சக்தி. ‘இதோ என் பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறானே இவனைப் பற்றித்தான் நினைத்தேன்!’ என்றா சொல்லமுடியும்.
அவளது ரத்தக் கொதிப்பு தாறுமாறாக எகிறிப்போய் குப்பென்று வியர்த்தது.
தன்னை சமன் செய்துகொள்ள அவளுக்கு நேரம் தேவைப்படவும், வாகனத்தை ஓரமாக நிறுத்த, பலூன் வாங்கத்தான் நிருத்தியிருக்கிறாள் என்று எண்ணிக்கொண்டு காரிலிருந்து இறங்கியவன் சாலையைக் கடந்துபோய் மூன்று பலூன்களை வாங்கிவந்து ஒவ்வொன்றாகப் பிள்ளைகளின் கையில் கொடுத்துவிட்டு மீண்டும் அவளுக்கு அருகில் வந்து உட்கார்ந்தான்.
அதற்குள் ஓரளவுக்குச் சமநிலைப் பட்டிருந்தாள் வர்ஷிணி.
மூச்சை இழுத்துவிட்டபடி அவள் வாகனத்தைக் கிளப்ப, மீண்டும் அவளை அளவெடுக்கும் முயற்சியில் அவன் ஈடுபடவும் இந்த முறை அவளுடைய உள்ளுணர்வு விழிப்புடன் இருக்கவே சட்டென அவள் அவனைத் திரும்பிப் பார்த்துவிட நொடிக்குள் தன பார்வையைத் திருப்பி வெளிப்புறம் வேடிக்கை பார்ப்பதுபோல் பாவனை செய்தான்.
இருவரின் பார்வைகளும் கவ்விக்கொண்ட தருணம் முதல் இந்தக் கனம் வரை ஒருவருடன் ஒருவர் ஒரு வார்த்தை கூட பேசிக் கொள்ளவில்லையே தவிர வர்ஷிணியின் நினைவு முழுவதையும் கிருஷ்ணாவும், அவனது நினைவு முழுவதையும் வர்ஷிணியும் மட்டுமே ஆக்கிரமித்திருந்தனர்.
அந்த வெகு சில நிமிடப் பயணமே என்னவோ பலமணிநேர பிரயாணமாக நீண்டுகொண்டே போனது போல் தோன்றியது வர்ஷிணிக்கு. வீட்டை அடையவும்தான் உயிரே வந்தது அவளுக்கு.
அவசரமாக வாகனத்தை நிறுத்திவிட்டு வந்தவள் வெளியில் நின்றபடியே, “ட்ரெஸ்ஸெல்லாம் நனைஞ்சு போச்சு ரஞ்சு, சேஞ் பண்ணிட்டு வரேன், நீ போய் உன்னோட குட்டி பிசாசுகளை மேய்ச்சு கூட்டிட்டு வா” என வரவேற்பறையிலேயே உட்கார்ந்திருந்த அவளுடைய அக்காவிடம் சொல்லிவிட்டு வீட்டின் பக்கவாட்டில் அமைந்திருந்த மாடிப்படிகளில் வேகமாகத் தாவி ஏறி தன் அறைக்குள் ஓடி ஒளிந்துகொண்டாள்.
‘உன்னை கரக்ட் பண்ணனும்ங்கற ஒரே காரணத்துக்காக மட்டும்தான்டீ இங்க வந்திருக்கேன், இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி ஓடி ஒளியரன்னு பர்கறேன். நீயா என்னை தேடி வந்து உன்னை பிடிச்சிருக்குன்னு சொல்றவரைக்கும் நான் ஓயவே மாட்டேன் போ!’ என மனதிற்குள்ளேயே சூளுரைத்துக் கொண்டான் பிள்ளைகள் மூவரையும் இறக்கி வீட்டிற்குள் அழைத்துவந்த கிருஷ்ணா.
***
இரண்டு படுக்கை அறைகளைக் கொண்ட தனி வீடு அவர்களுடையது. சமயத்தில் பிள்ளைகளுடன் சேர்த்து ரஞ்சனியுடன் ஸ்ரீதரும் வந்து தங்கும் சமயங்களில் சற்று இடப்பற்றாக்குறை ஏற்பட, இப்பொழுது சமீபமாகத்தான் மாடியில் அவளுக்காக ஒரு தனி அறையை கட்டிக்கொண்டாள் வர்ஷிணி.
அறையின் கதவை தாழிட்டுவிட்டு நேராகக் குளியல் அறை நோக்கிப் போனவள் குளித்து வேறு உடை மாற்றிக்கொண்டு கட்டிலில் வந்தமர்ந்தாள்.
அனிச்சையாக தன் மடிக்கணினியை எடுத்து அதில் முந்தைய இரவு பார்த்துவிட்டு பாதியில் விட்ட படத்தைத் தொடர எத்தனிக்க, அவளுடைய அறையின் கதவு தடதடவென அதிர்ந்தது.
நிச்சயம் இது சக்தியின் வேலைதான். மூவரில் அவள்தான் இப்படி ஒரு அதிரடி சரவெடி. இவளுடன் ஒப்பிட்டால் மற்ற இருவரும் சற்று நிதானம் என்றே சொல்லலாம்.
“இதோ வரேன் இரு... கதவை உடைக்காதடி குட்டி பிசாசே” எனக் கத்தியபடியே வந்து அவள் கதவைத் திறக்க, “வரூ பாட்டி உன்னை உடனே கீழ வரச்சொன்னாங்க... உடனே... உடனே...” என அவள் கட்டளையிட, இவள் வராமல் அவள் இங்கிருந்து நகர மாட்டாள் என்பதை உணர்ந்து, உள்ளே போய் லேப்டாப்பை ஸ்லீப்பில் போட்டுவிட்டு சக்தியைத் தூக்கி இடுப்பில் உட்காரவைத்தபடி அவளது கன்னத்தில் அழுந்த ஒரு முத்தத்தைப் பதித்து பதிலுக்குச் சிலதை பெற்றபடி கீழே இறங்கினாள்.
களங்கமில்ல சிரிப்புடன் திகழ்ந்த அந்த பிஞ்சின் நிலவு முகத்திலிருந்த களங்கம் வழக்கம் போல அவள் மனதைக் கொந்தளிக்க வைத்தது. இதேபோன்ற குறைபாடு ஸ்ரீதருக்கும் உண்டு.
பேசும்பொழுதும் கூட உச்சரிப்பு தெளிவாக இருக்காது. அதாவது மூக்கால் பேசுவதுபோலவே இருக்கும்.
ரஞ்சனியைப் பெண் பார்க்க வந்த சமயம் அவனை முதன்முறை பார்த்தபோதே இந்தக் குறை மலை அளவுக்கு அவள் மனதைக் கனக்கச் செய்ய, அவனுக்கு அக்காவைக் கொடுக்கவே கூடாது எனப் போர்க்கொடி தூக்கினாள். அவளுடைய உணர்வுக்கு யார்தான் மரியாதை கொடுத்தார்கள்?
ரஞ்சனியின் இந்த பிள்ளை இப்படி ஒரு குறையுடன் பிறந்திருப்பதற்கும் சேர்த்து அனைத்திற்கும் தான்தான் காரணம் என தன்னைத்தானே நிந்தித்தபடி கீழே இறங்கினாள்.
ஒன்பது பத்து வருடம் கடந்தும் இந்த வருத்தம் குறையவேயில்லை அவளுக்கு.
இயல்பிலேயே ஸ்ரீதர் மென்மையான மனம் கொண்டவனாக ரஞ்சனியிடம் அதீத அன்பும் காதலும் வைத்திருப்பவனாக இருக்கப் போக அனைத்தும் பின்னுக்குப் போய்விட்டது. திருமணமானபோது இருந்ததுபோல் இல்லாமல் இப்பொழுது அவன் நிலை பல மடங்கு உயர்ந்துவிட்டது. அதைப் பார்க்கும்போது இதெல்லாம் ஒரு குறையா என்றுதானே எல்லோருக்கும் நினைக்கத் தோன்றுகிறது.
ஒரு நீண்ட பெருமூச்சுடன் அவள் வீட்டிற்குள் நுழையும்போது மிளகாய் பஜ்ஜியின் மணம் மூக்கை துளைத்தது.
ஸ்ரீதருடைய ட்ராக்ஸ் மற்றும் டீஷர்ட்டை அணிந்து வரவேற்பறை சோபாவில் அமர்ந்திருந்தான் கிருஷ்ணா. அருகில் அவளுடைய அப்பாவும் எதிர் பக்கம் இருந்த இருக்கையில் ஸ்ரீதரும் அமர்ந்திருக்க அங்கும் இங்கும் ஓடி விளையாடிக் கொண்டிருந்தனர் ஸ்ரீயும் ஷிவாவும்.
அவளிடமிருந்து வழுக்கி கீழே இறங்கிய சக்தி, “வா வாரூ... பாட்டி மில்க் ஸ்வீட் பண்ணியிருகாங்க. ஹாட்டா இருக்கு அப்பறம் தரேன் சொன்னாங்க. வா... ஊ... ஊதி ஊட்டிவிடு” என்று சத்தமாகச் சொல்லவும் பட்டெனக் கிருஷ்ணாவின் பார்வை வர்ஷிணியிடம் செல்ல, ஸ்ரீதர் தம்பியை மட்டுமே பார்த்திருந்தான் ஒரு சன்னச் சிரிப்புடன்.
அதிலெல்லாம் கவனமில்லாமல், “சித்ரா... ரெடியா” எனக் குரல்கொடுத்தார் வரதன்.
“ஆங்... ஆச்சுங்க” எனச் சமையலறையிலிருந்து எட்டிப்பார்த்த சித்ரா வர்ஷிணியை பார்த்துவிட்டு, ‘சீக்கிரம் வாடி” என்றபடி மீண்டும் உள்ளே நுழைந்துகொண்டார்.
உள்ளே ரஞ்சனி எல்லோருக்கும் ஃகாபி தயாரித்துக் கொண்டிருக்க, “இதெயெல்லாம் ப்ளேட்ல வெச்சு, அவங்க மூணுபேருக்கும் கொடுத்துட்டு, பிள்ளைங்கள பக்கத்துல இருந்து திட்டமா சாப்பிட வை” என்று பணித்தார் அங்கே வந்த வர்ஷிணியை.
“ஐயோ... இது வேறையா” என மனதிற்குள் தள்ளாடினாலும் மறுக்க இயலாமல் மூன்று தட்டுகளை எடுத்து வைத்தவள் மிளகாய் பஜ்ஜியையும் மில்க் கேக்கையும் அதில் எடுத்து வைத்தபடியே, “குஜிலீஸ் கொஞ்சம் இங்க வாங்க” எனக் குரல் கொடுத்தாள்.
“என்ன வரூ” என்றபடி ஒருவர் பின் ஒருவராகச் சமையலறைக்குள் ஓடி வர, “ஆளுக்கு ஒரு பிளேட்டை எடுத்துட்டு போய் தாத்தாக்கு அப்பாக்கு உங்க சித்துக்கு எல்லாம் கொடுப்பீங்களாம் நான் உங்களுக்கு எடுத்துட்டு வருவேனாம்” என்று சொல்லவும் நீ நான் எனப் போட்டிப் போட்டபடி பிள்ளைகள் ஆளுக்கு ஒரு தட்டை கையில் எடுத்துக்கொள்ள அதற்குள் ரஞ்சனி பிள்ளைகளுக்கான தட்டை நீட்டவும் அதை வாங்கிக்கொண்டு தானும் அவர்களுடன் வெளியில் வந்தாள்.
தட்டை கையில் ஏந்தியபடி அலுங்காமல் நடந்து வந்தவர்கள் ஆளுக்கு ஒன்றாய் வரதனிடமும் ஸ்ரீதரனிடமும் கிருஷ்ணாவிடமும் கொடுக்க, கொஞ்சலாக ‘தேங்க் யூ’ என்றவாறு அதனை வாங்கிக்கொண்டனர்.
அங்கே ஓரமாகப் போடப்பட்டிருந்த உணவு மேசை மேல் தான் கொண்டுவந்த தட்டை வைத்துவிட்டு பிள்ளைகளை அழைக்க, ஓடிவந்து மேசை மீது ஏறி அமர்ந்துகொண்டார்கள்.
கொஞ்சிப் பேசியபடியே அவள் அவர்களுக்கு ஊட்டத் தொடங்க, பிள்ளைகள் மூவரும் அவளுக்கு ஊட்டிவிடவென உண்டான சலசலப்பில் பின் புறமாகத் திரும்பி கவித்துவமான அந்தக் காட்சியைப் பார்க்க இயலாமல் தவியாய் தவித்தவன் தன் செல்போனை பார்ப்பதுபோல் பாவனை செய்து அதை செல்பி மோடில் வைத்து அந்த காட்சியை தன் கண்முன்னே கொண்டுவந்தான்.
விருந்து உபசாரங்கள் முடிந்து அன்றிரவே ரஞ்சனியுடன் பிள்ளைகள் மூவரையும் அழைத்துக்கொண்டு தங்கள் வீட்டிற்குக் கிளம்பிப் போனார்கள் ஸ்ரீதரும் கிருஷ்ணாவும்.
சில நிமிடங்களுக்குள்ளாகவே அந்த வீடே வெறுமையாகிப் போனதுபோல் தோன்றியது வர்ஷிணிக்கு. மூன்று தின விடுப்பில் வந்திருந்தவள் அடுத்த நாள் விடியலிலேயே ஃப்ளைட் பிடித்து கேரளா கிளம்பிவிட்டாள்.
அவர்கள் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் ஒருநாள் முன்னதாகவே அவள் சென்றதில் அப்படி ஒரு ஆதங்கம் அவளுடைய அம்மாவுக்கும் அப்பாவுக்கும்.
ஓரளவுக்கு மேல் உரிமையுடன் கடிந்து மகளை எதுவும் சொல்ல இயலாத நிலையில் தவித்தனர் இருவரும். அந்த அளவுக்கு வெகு தூரமாக அவர்களிடமிருந்து விலகிச் சென்றுவிட்டாளே அவள்!
***
பெரும்பாலும் ரயில் பயணத்தையே ரசித்து தேர்ந்தெடுப்பவள் சில சமயங்களில் விமானத்தில் பயணிப்பாள்.
ஏனோ அந்த கிருஷ்ணாவை சந்தித்ததிலிருந்தே அவளது மனம் ஒரு நிலையில் இல்லாமல் கலங்கித் தவித்தது. இவனுக்கு நிகரான, ஏன் சொல்லப்போனால் இவனை விட அதிக தகுதிகளுடனான ஆண்களை தினந்தினம் சந்தித்தித்து கொண்டுதான் இருக்கிறாள்.
இன்னும் சொல்லப்போனால் இவள் வேலைக்கான முதற்கட்ட பயிற்சியில் இருக்கும்போது இவள் துறையிலேயே உயர் பதவியிலிருக்கும் செந்தமிழ்செல்வன் இவளைக் காதலிப்பதாகவும் இவளுக்கு விருப்பமென்றால் உடனே பெண் கேட்டு வருவதாகவும் இவளிடம் நேரடியாகக் கேட்க, “என்னோட எய்ம்ஸ் ரொம்ப பெருசு. அதை அச்சீவ் பண்ற வரைக்கும் என்னால கல்யாணத்தை நினைச்சு கூட பார்க்க முடியாது. அந்த லிமிட்டை நான் அடைய குறைஞ்சது இன்னும் அஞ்சு வருஷமாவது ஆகும். அது வரைக்கும் உங்களால வைட் பண்ண முடியுமா?” என்று இவள் நேரடியாகக் கேட்டதும் ஓடியவன்தான், வீட்டில் பார்த்த பெண்ணை திருமணம் செய்துகொண்டு இதே குடியிருப்பில்தான் குடும்பம் நடத்துகிறான்.
உண்மையில் தன்னுடைய வேலை, அதில் தன் வளர்ச்சி, தன் லட்சியம் தொடர்பான எதிர்கால திட்டங்கள் என அதை நினைத்தே வாழ்பவளுக்குத் திருமணம் ஒரு மிகப் பெரிய தடையாகத் தோன்றுகிறது.
ரஞ்சனியைப் போல ஒரு திருமணத்தைச் செய்துகொண்டு தினமும் சமைத்துத் துவைத்து பிள்ளைகளைப் பெற்றுக்கொண்டு பொறுப்புடன் குடும்பம் நடத்துவதெல்லாம் இவளுக்கு ஒத்துவரும் என்றே தோன்றவில்லை.
யாரோ ஒருவனைத் திருமணம் செய்துகொண்டு அவன் போக்குக்குப் போவதிலோ அல்லது அவனை தன் சூழ்நிலைக்கு இழுப்பதிலோ சற்றும் உடன்பாடில்லை அவளுக்கு. வேறு எந்த வேலை வெட்டியும் இல்லாமல் பேட்டி படுக்கையை கட்டிக்கொண்டு இவள் எங்கெல்லாம் போகிறாளோ அங்கெல்லாம் இவளுடன் பயணிப்பவன் யாராவது சிக்கினால்தான் உண்டு. இதெல்லாம் நிதரிசனத்துக்குச் சற்றும் பொருந்தாத எதிர்பார்ப்புகள் அல்லவா? அதனால் இப்படியே இருந்துவிடலாம் என்கிற மனநிலைதான்.
ஆனால் இவனோ ஒரே பார்வையில் மனத்தைக் குழப்பிவிட்டான்.
இதிலிருந்து தெளிந்து இயல்புக்குத் திரும்ப இவளுக்குத் தனிமை மிக அவசியம். எதிலிருந்தோ தப்பித்து ஓடி வருபவள் போல இங்கே வந்து பதுங்கிவிட்டாள். இங்கே என்றால் இவளுடைய அனுமதியின்றி யாராலும் இவளை நெருங்க முடியாது.
காலை உணவை முடித்துக்கொண்டு அவளது அலுவலக குடியிருப்பு வீட்டுக்கு வந்தவள் தன் மடிக்கணினியைத் தஞ்சம் அடைந்தாள். நடுவில் ஒரு ப்ரேக் எடுத்து, சில நிமிடங்கள் செலவழித்து மதிய உணவைத் தயார் செய்து சாப்பிட்டவள் ஓடீடீயில் வெளிவந்திருந்த ஒரு புதிய திரைப்படத்தைப் பார்க்கத் தொடங்க சில நிமிடங்களில் அப்படியே உறங்கிப் போனாள்.
அவள் கண் விழித்துப் பார்க்கும் போது சார்ஜ் தீர்ந்துபோய் லேப்டாப் அணைந்துபோயிருந்தது. இது மாலையா அல்லது அதிகாலையா என்கிற குழப்பத்துடன் ஜன்னல் வழியாக வெளியில் எட்டிப் பார்க்க மாலை மங்கி இருள் கவிழத் தொடங்கியிருந்தது. இது வழக்கமாக நடப்பதுதான். சமயத்தில் இரவு பகல் பார்க்காமல் வேலை செய்பவள் இதுபோல இரவு பகல் தெரியாமல் உறங்கவும் செய்வாள்.
மடிக்கணினியை மூடி ஓரங்கட்டி வைத்துவிட்டுப் போய் முகம் கழுவி வந்தவள் வரவேற்பறை மின் விளக்குகளை ஒளிரவிட்டு சமையற்கட்டை நோக்கிப் போனாள்.
இந்த நேரத்தில் வழக்கமாக அவர்கள் குடியிருப்பில் உள்ள பிள்ளைகளெல்லாம் வீதியில் விளையாடிக் கொண்டிருப்பார்கள். வெளியில் சென்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால் நேரம் இனிமையாக நகரும் என்பதால் சூடாக ஒரு காபியைக் கலந்துகொண்டு கதவைத் திறந்து வெளியில் வந்தவள் ஒரு நொடி அதிர்ந்து வியந்தாள்.
காரணம், ஒரு அழகான கடித உறையும் அதன் மேல் ஒற்றை சிவப்பு ரோஜாவால் ஆன ஒரு போக்கேவும் நேராக அவளது பார்வையில் படும்படியாக தரையில் வைக்கப்பட்டிருந்தது.
வேகமாகப் போய் ஒரு உந்துதலில் அதைக் கையில் எடுத்தவள் ஓரமாகப் போய் உட்கார்ந்து அதைப் பிரித்தாள். காஃபியை ஒவ்வொரு மிடறாக பருகியபடி அந்தக் கடிதத்தை படிக்கத் தொடங்கினாள்.
உன் விழி வீச்சில் என் உள்ளம் தொலைத்தேன்...
உன் கன்னச் சுழலில் சிக்கி என் உயிரின் ஆழம் வரை இழுத்துச் செல்லப்பட்டேன்...
உன் மூச்சுக் காற்றின் தீண்டலில் என் தேகமே தீப்பிடித்துப் போனதடி பெண்ணே...
பட்டும்படாத உன்னிதழ்த் தீண்டலில் படாதபாடு பட்டுப் போனேன்...
உன் உள்ளமெனும் சாம்ராஜ்ஜியத்தின் சக்ரவர்த்தியாக முடிசூடும் நாளுக்காகக் காத்திருக்கும்...
உன்னுடைய நான்...
எனக் கவிதை படித்தது இதய வடிவிலிருந்த அந்தக் காகிதம்.
Episode Song
Wow excellent