top of page

Aalangatti Mazhai - 1

Writer's picture: Krishnapriya NarayanKrishnapriya Narayan

ஆலங்கட்டி மழை


௧ – ஆலி


(உடலோ உடையோ நனையாமல் ஆங்கங்கே விழும் ஒற்றை மழைத்துளிக்கு ஆலி என்று பெயர்)


ஆசை முகம் மறந்து போச்சே -இதை

ஆரிடம் சொல்வேனடி தோழி?

நேச மறக்கவில்லை நெஞ்சம் – எனில்

நினைவு முகமறக்க லாமோ?


தேனை மறந்திருக்கும் வண்டும் -ஒளிச்

சிறப்பை மறந்துவிட்ட பூவும்

வானை மறந்திருக்கும் பயிரும் -இந்த

வைய முழுதுமில்லை தோழி!

கண்ணன் முகமறந்து போனால் -இந்தக்

கண்க ளிருந்துபய னுண்டோ?

வண்ணப் படமுமில்லை கண்டாய் -இனி

வாழும் வழியென்னடி தோழி?


பாரதியின் பாடல் கர்நாடிக் ஃப்யூஷனாக கசிந்துகொண்டிருந்தது. வேலைக்குச் சேர்ந்து இரண்டு வருடங்கள் பொறுத்திருந்து, ஒரு வழியாக அப்பாவின் சம்மதம் கிடைக்கப் பெற்று பேங்க் லோன் ஈ.எம்.ஐ என்று போய் ஒரு வழியாக அவள் வாங்கியிருக்கும் அவளது கனவு காரை செலுத்திக் கொண்டிருந்தாள் அமிர்தவர்ஷிணி.


பார்வை அனிச்சையாகப் பக்கத்துக்கு இருக்கைக்குச் சென்றது. அங்கே இங்கே அசைய முடியாமல் ஒன்றை ஒன்று நெட்டித் தள்ளியபடி துள்ளிக் கொண்டிருந்தன சீட் பெல்ட் மூலம் பிணைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு ரோஜாப் பந்துகள்.


அவர்களைப் பார்த்ததும் அவளது இதழ்களில் புன்னகை அரும்பியது.


“பாஸ்ட்டா போ வரூ” என்றாள் ஒருத்தி அதிகாரமாக. “எஸ் வரூ, பாஸ்டா போ! அப்பதான் ஸ்விங்ல வேற கிட்ஸ் இருக்க மாட்டாங்க” என ஒத்து ஊதினாள் மற்றவள்.


“நிறைய ட்ராபிக்கா இருக்கில்ல. இந்த ரோட்ல இதை விட பாஸ்டா போக முடியாது குஜிலீஸ். என்ன என்ன செய்ய சொல்றீங்க” எனச் சலிப்பாக அவர்களுக்குப் பதில் கொடுத்தவள் சாலையில் கவனத்தைப் பதித்தாள்.


“ரொம்ப லேட் ஆகிடாத வர்ஷி! இவங்க அப்பா மட்டும்னா பரவாயில்ல. இன்னைக்கு கிருஷ்ணாவும் வரப்போறாரு. கூடுமான வரைக்கும் அஞ்சரை மணிக்குள்ள திரும்பவரப் பாரு” என அரை மனதாகத்தான் பிள்ளைகளை அவளுடன் அனுப்பிவைத்தாள் அவளுடைய அக்கா சிவரஞ்சனி.


“ஏன்க்கா, பிள்ளைங்க மேல அப்படியே பாசம் பொங்கி வழியுதாமா உன் புகுந்த வீட்டு மனுஷங்களுக்கு. அமெரிக்கால இருந்து வரவன் உன் பிள்ளைகளை பார்க்க நேரா இங்கதான் வரப்போறானா? பகல் கனவு காணாதக்கா! அப்படியே வந்தாலும் அவங்க கொஞ்ச நேரம் வெயிட் பண்ணட்டும், பரவாயில்ல? குட்டிங்க கூட ஸ்பென்ட் பண்ண எனக்கே எப்பவாதுதான் நேரம் கிடைக்குது. அதையும் பங்கு போட்டுட்டு” எனக் கடுப்படிக்க, ரஞ்சனியின் முகம் சற்று கருத்துதான் போனது.


“அவன் இவன்னு மரியாத இல்லாம என்ன பேச்சு இது வர்ஷி” என அவளுடைய அம்மா சித்ரா ஒரு பதட்டத்துடன் மகளிடம் எகிற, “சாரி, சீக்கிரம் வர ட்ரை பண்றேன்” என இறங்கிவந்தவள், இந்த வாண்டுகள் இரண்டையும் காருக்குள் திணித்து வாகனத்தைக் கிளப்பினாள்.


மூன்றாவதாக ஒருத்தியும் இங்கே இருக்கிறாள். ஆழ்ந்த நித்திரையில் இருக்க, நல்ல வேளையாக அவள் வரவில்லை. மூன்று போரையும் ஒரே நேரத்தில் இவள் ஒருத்தியால் சமாளிக்க இயலாது. கூட வரச்சொல்லி அம்மாவைக் கெஞ்ச வேண்டும். கை வலி கால் வலி என் சாக்கு சொல்லித் தவிர்க்கவே பார்ப்பார் சித்ரா. ரெஸ்ட் எடுத்து ரெஸ்ட் எடுத்து களைத்துப்போயிருக்கும் ரஞ்சனியும் கூட வரமாட்டாள்.


போதாத குறைக்கு வீட்டு மாப்பிள்ளையும் அவருடைய தம்பியும் வேறு வரப் போகிறார்கள். இவளுடைய அம்மாவுக்கும் அக்காவுக்கும் அவர்கள் இருவரையும் உபசரிக்கவே நேரம் சரியாக இருக்கும். அப்பாவைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். அமேசான் காட்டிலிருந்து திரும்ப வந்திருக்கும் அறிய வகை உயிரினத்தைப் பார்த்த பின் அவருக்குத் தலையும் புரியாது காலும் புரியாது.


ஒரு உஷ்ண மூச்சு எழுந்தது அவளுக்கு.


அந்த கிருஷ்ணாவை அவளுடைய அக்காவின் திருமணத்தின் போது பார்த்ததுதான். அதன் பின் அமெரிக்கா சென்றுவிட்டான். இடையில் ஓரிரு முறை இங்கே வந்து சென்றிருக்கக் கூடும், இவள் வெளி மாநிலத்தில் தங்கிப் படித்துக் கொண்டிருந்ததால் அவனைச் சந்திக்கவேயில்லை.


நல்லவேளை அவனைச் சந்திக்கவில்லை என்றுதான் அவளுக்குத் தோன்றும். காரணம் ரஞ்சனியின் திருமண சமயத்தில் அவளை அவ்வளவு எரிச்சல் படுத்தியிருந்தான். இன்று வரையிலும் கூட அதுதான் அவள் மனதில் ஆழமாக பதிந்திருக்கிறது.


இப்பொழுதோ அவனுடைய முகம் கூட அவள் நினைவில் இல்லை. அவன் வருவதாகச் சொல்லி வீட்டில் அவன் பெயர் அடிக்கடி அடி படவும், அவன் முகத்தை நினைவு படுத்தப் பார்த்தாள். தலை வலி வந்ததுதான் மிச்சம், சுத்தமாக ஞாபகத்தில் இல்லை.


பழைய புகைப்படங்களிலோ சமூக வலைத்தளங்களிலோ அவனைத் தேடிப் பார்க்கும் அளவுக்கு அவளுக்கு ஆர்வமும் இல்லை.


அவளுடைய அக்காவும் கூட ‘பார் என் மைத்துனனை’ என்று அவனுடைய படம் எதையும் இவளிடம் காண்பிக்கவும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் அவனைப் பற்றி இவளிடம் ரஞ்சனி ஏதும் பேசியது கூட கிடையாது. அது அனாவசியம் என்றும் கூட தோன்றியிருக்கலாம்.


“ச்சை, இப்ப எதுக்கு தேவையில்லாம அவனைப் பத்தி நினைச்சிட்டு இருக்கோம்” என்று எண்ணியவள், தலையைக் குலுக்கி அந்த எண்ணத்தை விரட்டினாள்.


எண்ணப் போக்கில், வழியில் விற்றுக் கொண்டிருந்த பலூனை பார்த்துவிட்டு அதை வாங்கிக் கொடுக்கும்படி குட்டிகள் இருவரும் அவளிடம் சொன்னதை கூட அவள் கவனிக்காமல் போக அவளை முறைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தனர் இருவரும்.


காரணம் புரியாமல் விழித்தவள், அவர்கள் வழக்கமாகச் செல்லும் பூங்கா வந்திருக்கக் காரை நிறுத்தி இறங்கி, சுற்றிவந்து குட்டிகளையும் இறக்கிவிட்டாள்.


பிய்த்துக்கொண்டு ஓடுவதற்குத் தயாராக இருந்தவர்களின் கரங்களை இறுகிப் பிடித்தவாறு பூங்காவினுள் நுழைந்தவள் பாதுகாப்பான இடத்தை அடைந்ததும் இருவரையும் விடுவித்தாள்.


அந்த ஊரிலிருந்த ஒரு குளத்தைச் சுத்தம் செய்து அதைச் சுற்றி நடைபாதை அமைத்து இரு மருங்கிலும் பலவித மரங்களை வளர்த்து அருமையாக அந்த பூங்காவை ஏற்படுத்தியிருந்தனர்.


நேர்த்தியாக வளர்க்கப்பட்டு வண்ணமயமாகப் பூத்துக் குலுங்கும் ரோஜாச் செடிகளுடன் ஊஞ்சல் சறுக்குமரம் ராட்டினம் முதலியவற்றை உள்ளடக்கிய குழந்தைகள் விளையாட்டுப் பகுதியும் பூங்காவின் ஒரு மூலையில் அமைக்கப்பட்டிருந்தது.


நேராக அங்கேதான் ஓடினர் பிள்ளைகள் இருவரும். இருந்த இரண்டு ஊஞ்சல்களில் ஒன்றில் ஒரு சிறுவன் உட்கார்ந்து அவர்களைப் பார்த்து சிநேகமாகச் சிரிக்க, பதிலுக்கு ஒரு சிரிப்புடன் கை அசைத்துவிட்டு, “வரூ, நான்தான் பர்ஸ்ட்” என்றபடி மற்றொரு ஊஞ்சலைப் பிடித்தபடி நின்றாள் ஸ்ரீ.


முகம் சுண்டிப் போனது ஷிவாவுக்கு.


“அவளுக்கு பைவ் ஸ்விங், உனக்கு பைவ் ஸ்விங்” என அவள் கன்னத்தைத் தடவி அவளை சமாதானம் செய்தபடி ஸ்ரீயை தூக்கி ஊஞ்சலில் அமர்த்தினாள் வர்ஷினி.


திடீரென்று வானம் இருட்டத் தொடங்கியது. ‘இந்த வானத்துக்கு இதே வேல... சும்மா பூச்சாண்டி காட்டிட்டு அப்பறம் கலைஞ்சி போயிடும்’ என்று எண்ணிக்கொண்டவள், ‘ஒன்... டூ...’ என்று எண்ணியபடி அந்த ஊஞ்சலைத் தள்ளத் தொடங்கினாள்.


அதன் பின் ஷிவாவின் முறைக்கு ஐந்து ஆட்டம் எனத் தொடர்ந்தது.


அடுத்து சறுக்கு மரம், அடுத்து ராட்டினம் என அவளைச் சுறுசுறுப்பாக வைத்திருந்தனர் பிள்ளைகள் இருவரும்.


சிரிப்பு மாறாமல் அவள் பிள்ளைகளுடன் லயித்திருக்க, பொட்டென தலையில் ஒரு தூரல் விழ அனிச்சையாக நிமிர்த்து வானத்தைப் பார்த்தவளின் முகத்திலும் ஒன்று விழுந்து சிதறியது.


‘ஐயையோ, நிஜமாவே மழை வரும் போலிருக்கே’ எனக் கொஞ்சமாகப் பதறியவள் “குஜிலீஸ், மழை வரும் போலிருக்கு. போதும் வாங்க” என்று அவள் கிளம்ப எத்தனிக்க, “நோ... நோ... வரூ... இன்னும் ஜஸ்ட் பைவ் மினிட்ஸ் விளையாடிட்டு குளத்துல பிஷ் பார்த்துட்டு போகலாம்” என ஸ்ரீ சொல்ல, ஷிவா அவளை வழி மொழிந்தாள்.


ஐந்து மணிக்கே நன்றாக இருட்டிவிட்டிருக்க பயம் பிடித்துக் கொண்டது வர்ஷினியை.


“என்னாது குளத்துல பிஷ் பார்க்கணுமா... அடிங்க, மழை வந்தா குளத்துக் கிட்ட போகக் கூடக் கூடாது” என்றபடி அவர்களைப் பிடித்து தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயல அவளிடமிருந்து நழுவி இங்கும் அங்கும் ஓடி அவளை ஆட்டம் காண வைத்தன அந்த வாண்டுகள்.


அதற்குள் மழை வலுக்கத் தொடங்கவும் தானே வந்து அவளை அணைத்துக் கொண்டனர்.


இருவரையும் இழுத்துவந்து அங்கே உயரமாக கட்டப்பட்டிருந்த தண்ணீர் தொட்டிக்குக் கீழே பதுங்கினாள் வர்ஷினி.


மழை வந்தால் ஒதுங்க என வசதியாக அங்கே இருக்கும் ஒரே இடம் அதுதான். எனவே, அங்கே நடை பயிற்சிக்கு வந்தவர்கள், பிள்ளைகளை விளையாட அழைத்து வந்தவர்கள் என இன்னும் சிலரும் அங்கே வந்து தஞ்சம் புக, ஓ... என்ற இரைச்சலுடன் அடித்துப் பொழியத் தொடங்கியது கோடையின் முதல் மழை.


சில நிமிடங்களிலேயே நடை பாதை முழுவதிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடத் துவங்கியது.


வீட்டிலிருந்து கிளம்பும் போது கூட இப்படி ஒரு மழை பொழியும் என நினைத்தும் பார்க்கவில்லை அமிர்தவர்ஷிணி. தெரிந்திருந்தால் குட்டி மலர்ச் செண்டுகள் இரண்டையும் அள்ளிக்கொண்டு இங்கே வந்திருக்கவே மாட்டாள்.


ஏதாவது பிரச்சனை என்றால் சொல்லுக்கு இடமாகிப் போகும். அக்கா குடும்பத்து மனிதர்கள் அப்படி. அவர்களை முந்திக்கொண்டு இவளுடைய அப்பாவே சுருக்கென்று எதையாவது சொல்லி வைப்பார்.


மகளைக் கட்டிலும் பேத்திகள் மூவரிடமும் அப்படி ஒரு அக்கறை.


அவளுடைய அக்கா சிவரஞ்சனிக்கு மூன்று மழலைச் செல்வங்கள், செயற்கை முறை கருத்தரிப்பு மூலம் ஒரே பிரசவத்தில் பிறந்த முப்பெரும் தேவிகள். ட்ரிப்லெட்ஸ்... சக்தி... ஸ்ரீ... ஷிவா...


திருமணம் முடிந்து ஐந்து வருடங்கள் ஆகியும் பிள்ளை செல்வம் இல்லாமல் போக, சென்னையிலேயே பிரபல கருத்தரிப்பு மையத்தை அணுகி லட்சம் லட்சமாகச் செலவு செய்து பெற்றெடுத்த மாணிக்கங்கள்.


மூவருக்கும் நான்கு வயது நிரம்பிவிட்டது. தங்கள் அதீத துருதுருப்பால் வீட்டில் எல்லோரையும் நன்றாக வைத்துச் செய்கிறார்கள்.


இன்றைய காலகட்டத்தில் ஒன்றை வைத்துச் சமாளிப்பதே சவாலாக இருக்கும் போது மூவறேன்றால்! பாவம் தனியாக ரஞ்சனியால் இவர்களைக் கவனிக்கவே முடியாது. அவள் கணவன் ஸ்ரீதரனுக்கோ வேலை வேலை என்று இருபத்துநான்கு மணி நேரம் கூட போதாது.


முதலில் பிள்ளை இல்லையே என்ற பிடுங்கல். முத்து முத்தாய் இப்படி மூன்று பிறந்த பிறகோ மூன்றும் பெண்ணாய் பிறந்ததால் மாபெரும் பிடுங்கல் அவளது மாமியாரிடமிருந்து. அவர்களாவது பிள்ளைகளைக் கவனித்துக்கொள்ள உதவியாவது செய்வதாவது?


மூத்த மகன் மூலம் வந்த இரண்டு பேரன்களின் பெருமை பேசவே பொழுது சரியாக இருக்கும் அந்த பெண்மணிக்கு. மூத்தவன் தனிக்குடித்தனம் என்பதால் பிள்ளைகளையும் கவனித்துக் கொண்டு அவர்களுக்கும் இவள்தான் பணிவிடை செய்தாகவேண்டும்.


சமயத்தில் அங்கே தாக்குப் பிடிக்க முடியாமல் மூவரையும் அள்ளிக்கொண்டு பிறந்த வீட்டுக்கு வந்துவிடுவாள்.


இங்கே வந்தால் அவளுக்கு ராஜ உபசாரம்தான். அப்பா வரதராஜனேபிள்ளைகளைப் பார்த்துக்கொண்டு விடுவார். அம்மா சித்ரா வகை வகையாகச் சமைத்துப் போடுவார். உட்கார்ந்த இடத்தை விட்டு அசையாமல் ஓய்வெடுப்பாள் ரஞ்சனி.


மறுபடி திரும்பப் போக நிச்சயம் ஒரு மாதத்திற்கு மேலாகும். அவளது கணவன் ஸ்ரீதர் இங்கே வந்து அவளது கையை காலை பிடித்துக் கெஞ்சாத குறையாக அவளை அழைத்துச் செல்ல வேண்டும். அதுவரை இங்கிருந்து அசைய மாட்டாள். மீண்டும் ஆறு முதல் எட்டு மாதங்கள் வரை அங்கே தாக்குப் பிடிப்பாள்.


இங்கிருந்து ஏற்றிக்கொண்ட சார்ஜ் தீர்ந்த பிறகு மீண்டும் பிறந்த வீட்டு விஜயம்.


இப்படியாக அவள் ஒரு தொடர் கதை.


அக்காவைப் பற்றி நினைக்கும்போதே ஆயாசமாக இருந்தது வர்ஷினிக்கு. உண்மையில் பாவம்தான். அதனால் அவளுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வாள் வர்ஷினி.


பொதுவாக எல்லோரும் இருக்கும் உடன் பிறந்த பாசம் மட்டும் காரணமில்லை. அவளுக்கிருப்பது அதையும் தாண்டிய ஒரு கடமை... ஒரு பொறுப்புணர்ச்சி... ஒரு பிராயச்சித்தம் எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம்.


சிறு வயதில் விளையாட்டாகச் செய்த ஒரு காரியம் காலத்துக்கும் நெரிஞ்சி முள் போல அவளது மனதில் குத்தி குறுகுறுத்துக்கொண்டே இருக்கிறது.


ஒருத்தி அர்ஜுனனாகவும் மற்றொருத்தி கர்ணனாகவும் தங்களைப் பாவித்து தென்னம் குச்சியால் செய்த வில் அம்புகளைக் கொண்டு விளையாடப் போக ரஞ்சனியின் வலது கண்ணில் அந்த குச்சி குத்தி அவளுக்குப் பார்வை குறைபாடு ஏற்பட்டுப் போனது. மூத்தவள் பரிதாபத்துக்கு உரியவளாகவும் சின்னவள் குற்றவாளியாகவும் மற்றவர் பார்வையில் பதிந்துபோனார்கள்.


எங்கெங்கோ சென்ற நினைவுகள் அந்த சம்பவத்தைத் தேடிப் பிடித்துக்கொள்ள அடுத்த நொடி குற்ற உணர்ச்சியில் அவளுடைய மனம் சுணங்கிப்போனது. கண்கள் கலங்க, விழிகளைக் கொட்டி அவள் பார்வையை அங்கும் இங்கும் சுழலவிட, முகம் விகசிக்க இதழ்களுடன் சேர்ந்து விழிகளும் புன்னகை பூத்திருக்க அவளை நோக்கி வந்து கொண்டிருந்தான் ஒருவன்.


களையான முகம்... நெடுநெடுவென நல்...ல உயரம்... கவர்ச்சியான மாநிறத்துடன் வசீகரத் தோற்றத்திலிருந்தான்.


உடற்பயிற்சி தேகத்தைக் கவ்வியிருக்கும் விதமாக அவன் அணிந்திருந்த ஸ்லிம் ஃபிட் டீ ஷர்ட் அவனை இன்னும் அதிகம் ரசிக்கவைத்தது.


இளஞ்சிவப்பு ரோஜாக்களாலான ஒரு பூங்கொத்தைக் கையில் ஏந்தி மழையில் நனைந்தபடி புன்னகையுடன் அவளை நெருங்கி வந்தவனைப் பார்த்ததும் அப்படியே மூச்சு முட்டுவதுபோல இருந்தது அவளுக்கு.


அவளுக்கு அருகில் வந்து நின்று அனிச்சை செயலாக அவன் தலையைச் சிலுப்பவும் அவன் சுமந்துவந்த மழைத்துளிகள் வர்ஷினியின் முகத்தில் தெறித்து அவளது உடல் சிலிர்த்தது.


“கிஷ்னா சித்து” என மகிழ்ச்சி ததும்பக் கூவியபடி ஸ்ரீயும் ஷிவாவும் அவளுடைய கையை உதறிவிட்டுப் போய் அவனுடைய கால்களைக் கட்டிக்கொள்ள, “எக்ஸ்க்யூஸ் மீ, இதைக் கொஞ்சம் பிடிங்க” எனக் கையில் வைத்திருந்த பொக்கேவை அவளுடைய கையில் திணித்துவிட்டு ஒரே நேரத்தில் இருவரையும் தூக்கிப் பரந்த அவனது தோள்களில் இருத்திக்கொண்டான்.


தன்னை மறந்து அதை கைகளில் வாங்கியவளுக்கோ இந்த உலகமே மறந்துதான் போனது!


இருக்காதா பின்னே! அவளுடைய நாயகனின் முதல் அறிமுகம் எப்படி இருக்கவேண்டும் என அவள் கற்பனையில் வடித்துவைத்திருந்த காட்சி அப்படியே அப்பட்டமாக அவளது கண்ணெதிரே விரிந்துகொண்டல்லவா இருக்கிறது!


வியப்பும் அதிர்ச்சியும் கலந்து, “கிருஷ்ணாவா?” என முணுமுணுத்தாள் அமிர்தவர்ஷிணி.


பிள்ளைகளின் முத்தத்தில் திளைத்திருந்த கிருஷ்ணா சட்டெனத் திரும்பி அவளைப் பார்த்து, "கிருஷ்ணாவேதான்!" என புன்னகைக்க, அவனது அந்தப் பார்வையில் சூடாகிச் சிவந்துபோனது வர்ஷினியின் முகம்.


[Hi Friends, நீங்கள் எல்லோரும் ரசிப்பீர்கள் என்கிற

நம்பிக்கையில், ஒவ்வொரு எபிசோடுக்கும் ஒரு மழைப் பாடல் லிங்க் கொடுக்கலாம் என்று இருக்கிறேன்]

முதல் பாடல் இதோ...

2 comments

2 commenti

Valutazione 0 stelle su 5.
Non ci sono ancora valutazioni

Aggiungi una valutazione
Ospite
18 mag 2024
Valutazione 5 stelle su 5.

cute

Mi piace

Sumathi Siva
Sumathi Siva
18 feb 2024
Valutazione 5 stelle su 5.

Wow awesome

Mi piace
© KPN NOVELS COPY PROTECT

Developed By:  Krishnapriya Narayan 

© 2019 - 2024 by KPN Publications

bottom of page