top of page

Isaithene - 8

8. கரைசேருமோ கனவு?


தேன்மொழி பாலாவை சந்தித்துவிட்டுப் போய் நான்கு நாட்கள் கடந்திருந்தன. அவள் தினமும் அகடமிக்கு வந்துபோகிறாள் என்கிற தகவல் சரியாக வந்துவிடுகிறது.


ஆனால் அவனால்தான் இயல்பாக இருக்கவே இயலவில்லை. அவளைத் தவிர வேறதையும் சிந்திக்கவிடாமல் அவன் மனம் செய்த சண்டித்தனத்தால், ஒரே ஒரு பாடலை இசையமைக்க அவனுக்கு நான்கு நாட்கள் பிடித்தது.


இது எங்கே போய் முடியுமோ என்கிற அச்சம் மேலிட, அன்று சீக்கிரமே வீட்டுக்குக் கிளம்பிவிட்டான்.


தேவாவின் பிறந்தவீட்டு சொந்தங்கள் மொத்தமும் அங்கே அந்த நேரம் முகாமிட்டிருப்பது மட்டும் அவனுக்குத் தெரிந்திருந்தால் அங்கே சென்றிருக்கவேமாட்டான்.


அவன் உள்ளே நுழையும்போது, தேவாவின் அப்பா, அம்மா, தம்பி, தம்பி மனைவி, மைத்ரீ, அவளுடைய தம்பி என அவர்கள் வீட்டு வரவேற்பறை நிரம்பிவழிந்தது.


தேவாவும் அதீத உற்சாகத்துடன் அவர்களுக்கிடையில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க, வீட்டில் வேலை செய்பவர்கள் ஓடி… ஓடி அவர்கள் எல்லோரையும் உபசரித்துக் கொண்டிருந்தனர்.


அவனுடைய அப்பா மட்டும் அங்கே இல்லை என்பது கவனத்தில் பதிந்ததுமே அவனது முகம் கன்றியது.


வந்தவர்களை ஒரு பார்வை பார்த்தபடி, அவர்களை வரவேற்று விசாரிக்கக்கூட மனமில்லாமல் நேராக தனாவின் அறை நோக்கிப் போனான்.


இவன் உள்ளே நுழைந்ததும் “வணக்கம் சார்” என்கிற முகமனுடன் அங்கிருந்து வெளியேறினார் அவரை கவனித்துக்கொள்ளும் நபர்.


“என்னப்பா, உங்க தாத்தா வீட்டுல எல்லாரும் வரப்போறாங்கன்னு உனக்கு முன்னாலயே தெரியுமா, இன்னைக்கு சீக்கிரமே வந்துட்ட?” என தனா கேட்டதில் உள்ளுக்குள்ளே சுருக்கென்று குத்த, அவனது பதில் காரமாக வந்து தெரித்தது.


“இல்லப்பா, பெருசா வேல எதுவும் இல்ல, அதான் சீக்கிரம் வந்துட்டேன்! அவங்க வந்திருக்காங்கன்னு மட்டும் தெரிஞ்சிருந்தா வீட்டுக்கே வந்திருக்க மாட்டேன்”


“ஐயோ தம்பி, அப்பா எதுவும் தப்பா கேட்டுட்டனா?”


“சாரிப்பா, நான்தான் அவங்க மேல இருக்கற கோவத்த உங்க மேல காமிக்கற மாதிரி நிதானம் இல்லாம பேசிட்டேன்! ரியலி சாரி”


“சீச்சீ, என்னப்பா நீ அப்பா கிட்ட சாரில்லாம் கேட்டுட்டு” என அவர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே தடாலென கதவைத் திறந்துகொண்டு, “என்ன செல்வா, இது? வரவர உனக்கு கொஞ்ச கூட மேனர்ஸ் இல்லாம போயிட்டு இருக்கு! வந்தவங்கள வாங்கன்னு ஒரு வார்த்தை கூட சொல்லாம, இப்படி நேரா இங்க வந்துட்ட” எனப் படபடத்த படி உள்ளே நுழைந்தார் தேவா.


“எனக்கு மேனர்ஸ் இருக்கா இல்லையான்றது இருக்கட்டும், வந்தவங்கள ரிசீவ் பண்ண, அப்பாவ ஏம்மா நீ ஹாலுக்கு கூட்டிட்டு போல? இல்ல வந்தவங்கள்ள ஒருத்தராவது, மேனர்ஸோட அப்பாவ இங்க வந்து பார்த்தாங்களா?”


அந்த கூட்டத்தில் ஒருவருக்கு கூட தனாவை பிடிக்காது. அதை நன்கு அறிந்து வைத்திருப்பதால்தான், கண்டும் காணாததுபோல தேவா அவரை அங்கே அழைத்துச் செல்லவில்லை. மகன் இப்படிக் கேட்கவும், “அது… அது வந்து…” என சட்டென பதில் சொல்லத் தோன்றாமல் தடுமாறிப் போனார்.


“அவங்க யார் எனக்கு? இத்தன வருஷமா எங்கப் போனாங்க அவங்கல்லாம்? நாம கஷ்டப்பட்டுட்டு இருந்தப்பல்லாம் அவங்க நம்ம வாழ்கைல எந்த இடத்துல இருந்தாங்க? உனக்கு அவங்க முக்கியமானவங்களா இருந்தா நீயே கொஞ்சிக் குலாவிக்கோ, என்ன அவங்க பக்கம் இழுக்க ட்ரை பண்ணாத, சரியா” என தேவாவிடம் சீறிப் பாய்ந்த மகனை, ‘பேசாதே!’ எனப் பார்வையாலேயே அடக்கினார் தனா!


அவரது அந்த ஒரே பார்வைக்கு கட்டுப்பட்டு அவனும் தணிந்தான். வெளியில் எல்லோரும் குழுமி இருக்க, அவனிடம் வாக்குவாதம் செய்ய அஞ்சி, மேற்கொண்டு ஒரு வார்த்தைக் கூட பேசாமல் அங்கிருந்து வெளியேறினார் தேவா.


மனது கேட்காமல், “உண்மையாவே அந்த பொண்ண கட்டிக்க உனக்கு விருப்பமா ராசா?” என வினவினர் தானா.


“சொன்ன வார்த்த சொன்னதுதான்…ப்பா! இதுல என் விருப்பத்துக்கு இடமே இல்ல!” என அவன் சொன்ன பதிலில் அவரது மனம் வலித்தது.


“வார்த்த முக்கியமில்ல தம்பி, வாழ்க்கதான் முக்கியம்! எதுவா இருந்தாலும் நல்லா யோசிச்சு ஒரு நல்ல முடிவுக்கு வா, அந்த பொண்ணு உனக்கு நிம்மதிய குடுக்க மாட்டா” என்றவருக்கு ஒரு கசந்த புன்னகையை மட்டுமே பதிலாகக் கொடுத்தவன், “புதுசா ஒரு சாங் கம்போஸ் பண்ணியிருக்கேன் கேக்கறீங்களா…ப்பா” என்றான்.


“பேச்ச மாத்தறியா தம்பி” என சிரித்தவர், இந்த இசை மட்டுமே ஒரே ஆறுதல் என்பதால், “சரி, போட்டுக் காமி” என்றார்.


‘விண்மீன் கூட்டமே…விண்மீன் கூட்டமே…


என் தேனிசை நிலவைப் பார்த்தாயா?


வெண்பஞ்சு மேகமே… வெண்பஞ்சு மேகமே…


தகிக்கின்ற என் நிலவைப் பார்த்தாயா?



என்மேல் கோபங்கொண்டு… நானே வேண்டாமென்று…


கடலுக்குள் ஒளிந்துகொண்ட பெண்நிலவு, அவளை


நீயும் நேரில் சென்று பார்த்தாயா?



பொன்நிலவு அவளில்லா வானமாய்…


என்நிலவு அவள்மீதே ஏக்கமாய்…


இங்கே இவன் ஒருவன் தவியாய் தவிப்பதை சொல்வாயா?



விண்மீன் கூட்டமே… விண்மீன் கூட்டமே…


நீ போய் அவளிடம் சொல்வாயா?


வெண்பஞ்சு மேகமே… வெண்பஞ்சு மேகமே…


நீ போய் அவளிடம் சொல்வாயா?’



பாடல் முடியும் வரை அப்படியே இலயித்துக் கேட்டிருந்தவர், முடிந்த பின்னும் கூட அதன் தாக்கம் கலையாமல் அப்படியே அசைவற்று அமர்ந்திருந்தார்.


“அப்பா” என அவரை உலுக்கினான் பாலா.


“ஆங்… ரொம்ப பிரமாதமா பாடியிருக்க பாலா! மியூசிக், டியூன் எல்லாமே ஜஸ்ட் அமேசிங்! லிரிக் யாரு?”


“நான்தான் …ப்பா”


“சோலோ சாங்தான் போலிருக்கே!”


“ஹும், சும்மா டிராக்தான்ப்பா பாடியிருக்கேன். வேற யாராவது சிங்கரதான் பாடவெக்கலாம்ன்னு… நம்ம ஈஸ்வர்க்கு பிரதீப் வாய்ஸ் சூட் ஆகும் இல்ல? இல்ல அவரையே பாட சொல்லி கேக்கலாமா?”


“எதுக்கு… இதுவே ரொம்ப நல்லா இருக்கு. அவருக்கு உன் வாய்ஸ் ரொம்ப பொருந்தும்! அதோட இல்ல செல்வா, இந்த லிரிக்ல இருக்கற ஃபீல, உன்ன தவிர வேற யாராலையும் இப்படி வாய்ஸ்ல எக்ஸ்பிரஸ் பண்ண முடியும்ணு எனக்கு தோணல” என்றபடி அவர் அவனைப் பார்த்த பார்வை, அவர் தன் சிந்தைக்குள் ஊடுருவ முயல்கிறார் என்பதை அவனுக்கு சொல்லாமல் சொன்னதில், நன்றாகவே சுதாரித்துவிட்டான்.


“நீங்க சொன்னா சரி! வசிஷ்டர் வாயால பிரும்மரிஷி பட்டம் கிடைச்ச மாதிரி” என கிண்டலாகவே பதில் கொடுத்துவிட்டு, “படம் நம்ம புரொடக்ஷன்! மியூசிகல் லவ் சப்ஜக்ட், அதான் லிரிக் நானே எழுதினேன்!” என முடித்துக் கொண்டான்.


கதவைத் தட்டிவிட்டு உள்ளே வந்த தனாவின் கேர்டேக்கர், “சார், எல்லாரும் கிளம்பறாங்களாம்! உங்ககிட்ட சொல்லிட்டு போக வெயிட் பண்றாங்க. அம்மா உங்கள வரச் சொன்னாங்க” என்றார்.


உள்ளே சினம் ஏறி அவன் முகம் கடுக்கவும், “பரவால்ல தம்பி, போயி என்னனு பாரு, இல்லன்னா உங்கம்மாவ சமாளிக்க முடியாது” என்று தனபாலன் சொல்ல, மறுக்கத் தோன்றாமல் வெளியில் வந்தான்.


“வா தம்பி, எல்லாரும் உங்கிட்ட சொல்லிட்டு போகணும்னுதான் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க” என்றார் தேவா.


உடனே அவரது தம்பி ஸ்ரீரஞ்சன், “நீயா வந்து பேசுவன்னு நினைச்சேன் பாலன்” என வாழைப்பழத்தில் ஊசி ஏற்றினார்.


“சாரி, நீங்க இங்க வரத பத்தி எனக்கு யாரும் இன்ஃபார்ம் பண்ணலியே! பொதுவா நான் அப்பாயின்மென்ட் இல்லாம யாரையும் மீட் பண்றதில்ல! இப்ப இங்க வந்தது கூட அப்பா கூட கம்போசிங் பத்தி டிஸ்கஸ் பண்ணத்தான், இல்லன்னா இந்த நேரத்துல வீட்டுக்கே வந்திருக்க மாட்டேன்” என்றான்.


கோபத்தில் அவரது முகம் சுண்டிப் போனது. அதை கவனித்த தேவாவின் அப்பா விஸ்வநாதன் அவரை பார்வையால் எரிக்க, அந்த எரிச்சலை அப்படியே மகன் பக்கம் திருப்பி அவனை முறைத்தார் தேவா.


அதை கண்டுகொள்ளாமல், அவன் அசட்டையாக தன் கைபேசித் திரையில் பார்வையை ஓடவிட, “நெக்ஸ்ட் மந்த் நம்ம கல்யாணத்த வெச்சுக்கலாம்ன்னு நம்ம தாத்தா சொல்றார், பாலன். அதப் பத்தி பேசி டிசைட் பண்ணத்தான் வந்தோம்?” என்றபடி அவனுக்கு அருகில் வந்து நின்றாள் மைத்ரி.


“வாவ், என்ன டிசைட் பண்ணீங்க” என்றான் குதர்க்கமாக.


“டுவென்ட்டி நயன், எப்படி? உங்களுக்கு அன்னைக்கு டேட் ஃப்ரீயா இருக்கா?” என பதில் கேள்வி கேட்டாள் அவள் அதைவிட குதர்க்கமாக.


“சாரி, என்னோட புது படத்துக்கு அன்னைக்குதான் பூஜை போடப்போறோம்! அம்மா சொல்லியிருப்பாங்களே! அதுக்கு அப்பறம், அந்த படம் ஷூட்டிங் முடிச்சு அதை ரிலீஸ் பண்ண, ஒரு மூணு நாலு மாசம் ஆகும். அதுவரைக்கும் என் டேட்ஸ் இல்ல” என்று சொல்லிவிட்டான்!


அதற்கு மேல் அங்கே ஒரு நொடி கூட இருக்கப் பிடிக்காமல், “சரி… நாம கிளம்பலாம் ஸ்ரீ” என்ற தாத்தா, “வரோம் தேவா” என்று சொல்லிவிட்டு வெளியேறிவிட, மற்றவரும் அவரிடம் சொல்லிக்கொண்டு சென்றனர்.


“ஆனாலும், உன்பிள்ளைக்கு இவ்வளவு திமிர் ஆகாது தேவா, இது நல்லதுக்கில்ல” என அவனது காதுபடவே சொல்லிவிட்டு பேத்தியின் கையைப் பிடித்துகொண்டு அங்கிருந்து வெளியேறினார் தேவாவின் அம்மா.


அவன் பக்கம் நின்று, தேவா அவரிடம் மறுப்பாக ஒரு சிறு குறிப்பைக் கூட முகத்தில் காண்பிக்காமல் போக, சீச்சீ என அவன் மனம் துவண்டுபோனது. அவரிடம் ஒரு வார்த்தைக் கூட பேசப் பிடிக்காமல் தன் அறையில் வந்து புகுந்துகொண்டான்.


முகம் கழுவி உடை மாற்றி வந்தவன், ஆடியோ சிஸ்டத்தை உயிர்பித்துவிட்டுக் கட்டிலில் போய் சரிந்தான்.


‘சகாயனே சகாயனே நெஞ்சுக்குள் நீ முளைத்தாய்


சகாயனே சகாயனே என்னை நீ ஏன் பறித்தாய்’ என சாட்டை படத்தின் பாடல் தொடங்கியது. ஆனால் குரல் ஸ்ரேயா கோஷலுடையது அல்ல, தேன்மொழியுடையது!


*******


நான்கைந்து நாட்களாக மைத்ரி அங்கே வருவதே இல்லை என்பதால், எந்த ஒரு அழுத்தமோ, நெருக்கடியோ இல்லாமல் நிம்மதியாக இசைப்பள்ளிக்கு சென்றுவருகிறாள் தேன்மொழி.


அங்கே இசை பயிலும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் நேரடியாக தேவாவிடமே கேட்டுக்கொண்டதால், வேறு வழியில்லாமல் இவளையே வகுப்புகளையும் எடுக்கச் சொல்லிவிட்டார் அவர். எனவே இசையும் பயிற்றுவிக்கிறாள்.


ஓரளவுக்கு மன அழுத்தம் குறைந்திருக்கவே, காலை நிம்மதியாக கண் விழித்தவள் வழக்கமான வீட்டு வேலைகளை முடித்துக் கொண்டு அகாடமிக்கு கிளம்பி வந்தாள்.


ஆனால் அவளுடைய இந்தச் சிறு நிம்மதியையும் குலைக்கவென அவளுக்கு முன்னதாகவே அங்கே வந்து உட்கார்ந்திருந்தாள் மைத்ரி.


வருகை பதிவேட்டில் கையழுத்து போட அலுவலக அறைக்குள் நுழைந்தவளிடம், மைத்ரி அழைப்பதாக சரோஜா வந்து சொல்லவும், ‘ஐயோ, மறுபடியும் மொதல்ல இருந்தா?’ என அவளுக்கு சலிப்பாகிப் போனது.


எரிச்சலுடன் தேவாவின் பிரத்தியேக அறை நோக்கிப் போனாள்.


கதவைத் தட்டிவிட்டு உள்ளே நுழைந்து, இருவருக்கும் பொதுவாக ‘குட்மார்னிங்’ என அவள் சொன்ன நொடி, “என்ன அத்த, நான்தான் இவங்கள கிளாசஸ் எடுக்கவேண்டாம்னு சொன்னனே, நீங்க எதுக்கு மறுபடியும் அலவ் பண்ணீங்க?” என வேண்டுமென்றே பிரச்சினையை ஆரம்பித்தாள்!


“என்னடாம்மா, பண்றது. இங்க ஸ்டூடண்ட்ஸ், பேரன்ட்ஸ் எல்லாருமே திரும்ப திரும்ப ரிக்வஸ்ட் பண்ணாங்க! இவங்களும் இன்னும் கொஞ்ச நாள்தான இங்க வேல செய்யப் போறாங்கன்னு விட்டுட்டேன், விடுடாம்மா” என அவரும் இவளுக்கு விளக்கம் கொடுக்க, பற்றிக்கொண்டு வந்தது தேனுவுக்கு. ஆனாலும் தன் கோபத்தை வெளிக்காண்பிக்க இயலாமல் உள்ளுக்குள்ளேயே அடக்கிக்கொண்டாள்.


அத்துடன் நிறுத்திக்கொள்ளவில்லை மைத்ரி. இவளை உருப்படியான வேலை எதையும் பார்க்க விடாமல், தேவையற்ற கேள்விகளை கேட்க ஆரம்பித்தாள்.


“ஆங்… தேன்மொழி, இந்த பில்டிங்க ரெனவேஷன் பண்ணி பெயின்ட் அடிக்கவே, பிஃப்டீன் லேக்ஸ்க்கு மேல செலவாகியிருக்கே, இந்த பில்டிங் கட்ட எவ்வளவு ஸ்பென்ட் பண்ணியிருப்பாங்க?”


“அது, டூ தவ்சன்ட் த்ரீல கட்டி முடிச்சாங்கன்னு நினைக்கறேன்! அதனால எனக்கு அதப் பத்தி சரியா தெரியல”


“அந்த இயர் ஃபைல்ஸ் எல்லாம் சிஸ்டம்ல இருக்குமே! கொஞ்சம் பார்த்து சொல்ல முடியுமா?”


“அவ்வளவு பழைய டேட்டாஸ் எல்லாம் சிஸ்டம்ல இல்லையே”


“பேக் அப் எடுத்து வெச்சிருப்பாங்க இல்ல! கொஞ்சம் பார்த்து சொல்லுங்க”


கண்ணை கட்டியது தேன்மொழிக்கு. எக்ஸ்டெர்னல் ஹார்ட் டிஸ்க் என்பதே இவள் சொல்லித்தான் சீதாவுகுத் அறிமுகம். அதற்கு முன்னதான தரவுகள் எல்லாம் ஃபிளாப்பியில் இருக்கிறதோ, இல்லை சீடீயாக இருக்கிறதோ!அதை எங்கே என்று தேடுவாள்? இல்லையென்றால், சீதா மேடமுக்கு அழைத்துக் கேட்க வேண்டும்! இதை கேட்டால், அவர் பாலா வரை கொண்டுபோய் பிரச்சனையை பெரிதாக்கி விடுவார்!


பழைய கோப்புகளை எல்லாம் கட்டி ஒரு சிறிய அறையில் போட்டு வைத்திருக்கிறார்கள். அங்கேதான் இருந்தால் இருக்கும்! தேடி எடுக்க எப்படியும் மதியத்துக்கு மேல் ஆகிவிடும்! வகுப்புகள் எடுத்தாற்போன்றுதான்!


வேண்டுமென்றே செய்பவர்களிடம் இதையெல்லாம் விளக்கிச் சொல்ல இயலாது! இவள் சொல்வதை அப்படியே செய்வதைத் தவிர வேறு வழியே இல்லை. இங்கே வேலை செய்யும் வரை இதையெல்லாம் சகித்துக்கொண்டே தீரவேண்டும்! அமைதியாகப் போய் அலுவலக அறையில், சாவிகளை வைக்கும் இடத்தில் அந்த ரெகார்ட் ரூமின் சாவியைத் தேடினாள் தேனு. அதுவோ, கைக்கு அகப்படாமல் அவளது எரிச்சலை அதிகப் படுத்தியது.


சரியாக அப்பொழுது, “ஆமா, கிளாஸ் எடுக்க போகாம, இந்த நேரத்துல நீங்க இங்க என்ன செஞ்சுட்டு இருக்கீங்க, தேன்மொழி” என்றபடி அங்கே வந்து நின்றான் பாலா!


அவனது குரலைக் கேட்டதும் தூக்கிவாரிப் போட்டது அவளுக்கு.


‘திடீரென இவன் எங்கிருந்து வந்தான்?’ என்ற கேள்வி எழ, “இல்ல, மைத்ரி மேம்தான் சில டீட்டைல்ஸ் கேட்டாங்க” என்றாள் தன்னை சமன் செய்துகொண்டு.


“அந்த மேம் சொன்னா, முடியாதுன்னு சொல்ல வேண்டியதுதான?”


“உங்க அம்மாவும் கூட இருந்தாங்களே, சார். நான் இவங்களுக்கு நோ சொன்னா, அவங்கள இன்சல்ட் பண்ற மாதிரி ஆயிடுமே”



ree

“தென் பைன், நீங்க அதெல்லாம் செய்யத் தேவையில்ல! போய் உங்க வேல என்னவோ அத பாருங்க” என்று சொல்லி அங்கிருந்து சென்றுவிட்டான்.


‘அப்பாடா’ என்கிற ஒரு பெருமூச்சு எழுந்தது தேனுவிடமிருந்து. நேராக வகுப்பறை நோக்கிச் சென்றாள்.


அவனுடைய அம்மாவின் கேபினுக்குள் பாலா நுழையும் பொழுது, மைத்ரியும் அங்கேதான் இருந்தாள். இவனைப் பார்த்ததும் முதலில் அவள் துணுகுற்றாலும் சட்டென அலட்சிய பாவத்துக்கு மாறினாள்.


“ம்மா, இவங்க இங்க வரக்கூடாது, நம்ம ஸ்டாப்ஸ் யாரையும் இவங்க இஷ்டத்துக்கு வேல வாங்கக்கூடாதுன்னு நான் உங்ககிட்ட அன்னைக்கே சொன்னேன் இல்ல, நீங்க இவங்ககிட்ட அத சொல்லலியா?” என நேரடியாக தேவாவைக் கேள்வி கேட்டான் பாலா.


“நேத்து நாங்க அங்க வந்தப்ப, அத்த உங்ககிட்ட சொன்னதுக்கு அப்பறம் கூட நீங்க வந்து தாத்தா, அப்பா யாருக்குமே ரெஸ்பெக்ட் குடுத்து ஒரு வார்த்த விசாரிக்கல இல்ல! நீங்களே உங்கம்மா பேச்ச கேக்கலன்னா, நான் மட்டும் கேக்கணுமா என்ன?” என தேவாவை முந்திக்கொண்டு அவனுக்கு பதில்கொடுத்தாள் மைத்ரி.


இடையில் பேச முடியாமல் தவித்த தேவா, அவனை கெஞ்சலான பார்வை பார்த்துவைக்க, சலிப்புடன் அங்கிருந்து அகன்றான் பாலா.


“என்ன அத்த, உங்க புள்ள இப்படி பேசிட்டு போறாரு, நீங்க பாட்டுக்கு எதுவும் பேசாம இப்படி சைலண்டா இருக்கீங்க?”


“இல்ல, நான் எதாவது மறுத்து பேசினா, கோவிச்சுட்டு பாலா என்கூட பேசவேமாட்டான் மைத்து! அவங்கூட பேசாம என்னால ஒரு நாள் கூட இருக்க முடியாது”


“உங்களோட இந்த வீக்னஸ்ஸ நல்லா யூஸ் பண்ணிக்கறாங்க, அத்த. அப்பாவியா இப்படி ஏமாறாதீங்க!” என்றதுடன், “ஆமாம், உங்க பிள்ள இங்க இப்ப எதேச்சையா வந்தாரா, இல்ல நான் இங்க வந்திருக்கறத யாராவது அவர்கிட்ட போட்டு கொடுதிருப்பாங்களா? எதுக்கும் நீங்க இந்த தேனு கிட்ட கொஞ்சம் கேர்ஃபுல்லா இருங்க” என விட்டகுறை தொட்டக் குறைக்கு அவர் மனதில் விஷத்தை விதைத்துவிட்டுத்தான் அங்கிருந்து கிளம்பினாள் மைத்ரி.


அவள் பேசிவிட்டு போனதையே நினைத்தபடி பிரமை பிடித்ததுபோல அப்படியே நீண்ட நேரம் அமர்ந்திருந்தார் தேவா.


எவ்வளவு நேரம் அப்படியே அமர்ந்திருந்தாரோ, அவர்களது ஓட்டுனர் சக்கர நாற்காலியைத் தள்ளிக்கொண்டு வர, தனபாலன் அங்கே வரவும்தான் தன்னுணர்வுக்கே வந்தார் அவர்.


தனாவை அங்கே விட்டுவிட்டு ஓட்டுநர் சென்றுவிட, “என்ன தேவா, ஒரு மாதிரியா இருக்க?” என பரிவுடன் கேட்டார்.


“ஒண்ணும் இல்ல, பாலா இங்க வந்திருந்தான். எங்கிட்ட கோவமா பேசிட்டு போயிட்டான்” என்றார் வருத்தம் மேலிட.


“எனக்கு போன் பண்ணி சொன்னான்ம்மா, அவனுக்கு அந்த பொண்ணு இங்க வரது பிடிக்கலன்னா, அதை நீ என்கரேஜ் பண்ணக்கூடாதுடாம்மா” என்றார் சிறு பிள்ளைக்கு சொல்வது போல.


 “ஆனா அவள எதாவது சொன்னா அப்பா கோவிச்சுப்பாங்க இல்லங்க? நான் என்ன செய்ய, இவ்வளவு வருஷம் கழிச்சு அவங்களே இப்பதான் நம்மள ஏத்துட்டு இருக்காங்க!” என பதில் கொடுத்தார் தேவா.


இதற்குமேல் அவரிடம் ஏதும் சொல்லி பயனில்லை என்பதை உணர்ந்தவராக, “பாலா, தேன்மொழிக்கு பதில் புதுசா ரெண்டுபேர வேலைக்கு சேர்த்துட்டான்! அத சொல்லத்தான் வந்தேன்!” என்றவர் ஓட்டுநரை அழைத்து தேன்மொழியை கூப்பிடச் சொன்னார்.


சில நிமிடங்களில் அங்கே வந்தவள், அவரைப் பார்த்ததும் மலர்ந்த புன்னகையுடன், “வணக்கம் சார்” என்றாள்.


“வணக்கம்மா, எப்படி இருக்கீங்க”


“நல்லா இருக்கேன் சார்”


“ரொம்ப நல்லதுடாம்மா, ஒரு முக்கியமான விஷயம் சொல்லத்தான் வந்தேன்”


கூர்மையாக அவள் அவரை ஏறிடவும், “உங்க போஸ்ட்டுக்கு, ஒருத்தருக்கு ரெண்டு பேரா அப்பாயின்ட் பண்ணிட்டோம்மா! அதனால உங்கள உடனே ரிலீவ் பண்ண சொல்லிட்டாரு பாலா” என அவர் தெளிவாகச் சொல்லவும், பெருத்த நிம்மதி உண்டானது தேன்மொழிக்கு.


என்ன சொல்வது என புரியாமல், “தேங்க் யூ சார்” என்றாள்.


“யூ ஆர் வெல்கம்மா, அதோட கூட, இங்க பழகற வரைக்கும் அவங்க ரெண்டுபேருக்குமா கொஞ்சம் கைடன்ஸ் கொடுக்க முடியுமா?” என ஒரு கோரிக்கையாக அவர் கேட்க, “கண்டிப்பா” என்றாள், வேறு சொல்லத் தோன்றாமல்.


“ரொம்ப நல்லதுடாம்மா” என அவர் பேச்சை முடித்துக்கொள்ள, ஒரு புன்னகையுடன் அங்கிருந்து வெளியேறினாள்.


ஆனால் அடுத்த நாள் அஙகே வேலைக்கு சேர்ந்த இருவரையும் பார்த்தபிறகு, ‘இந்த காலம் நம்மள வெச்சு காமடி கீமடி பண்ணலையே?’ என்ற எண்ணம் தோன்ற சிரிப்பே வந்துவிட்டது அவளுக்கு.


வாழ்க்கையில் இனி யாரையெல்லாம் ஒருமுறை கூட பார்க்கவே கூடாது என்று எண்ணியிருந்தாளோ, வரிசையாக எல்லோரையும் பார்க்க நேரும்போது அவளால் வேறெப்படி நினைக்க முடியும்.


சரியாக, அவர்கள் இருவரும் தேவாவின் அலுவலக அறைக்குள் நுழையும் பொழுது, தூர இருந்தே அவர்களைப் பார்த்துவிட்டதால், நன்றாகவே சுதாரித்துவிட்டாள் தேனு.


எனவே திடமான மனநிலையுடன் உள்ளே நுழைந்து அங்கிருந்த தனாவுக்கும் தேவாவுக்கும் முகமன் சொன்னாள்.


“இவர்தாம்மா ஆனந்த், வீ.பியா அப்பாயின்ட் பண்ணியிருகோம், இவங்க நிரஞ்சனா, இனிமேல் இவங்கதான் மியூசிக் ஃபாகுல்டி ஹெட், அன்ட் இவங்க ரெண்டுபேரும் ஹஸ்பன்ட் அன்ட் வைப்” என அவர்கள் இருவரையும் இவளுக்கு அறிமுகப் படுத்தினார் தனா.


ஆனத்தின் முகம் உணர்வற்று இருக்க, நிரஞ்சனாவிடமோ இவளைப் பார்த்தால் உண்டான மகிழ்ச்சி அப்பட்டமாகத் தெரிந்தது.


இவள் இங்கேதான் வேலை செய்கிறாள் என்பது இவர்கள் இருவருக்குமே முன்னமே தெரிந்திருக்கக் கூடும் என அவர்கள் இருவரின் பாவனைகளிலிருந்தே புரிந்தது தேன்மொழிக்கு.


ஆனால் இவர்களைத் முன்னமே தெரிந்ததாக காண்பித்துக்கொள்ளாமல் முதன்முறைப் பார்ப்பது போல, “ஹாய், ஹலோ” என்று தள்ளி நிறுத்த, நிரஞ்சனாவின் முகம் காற்றுபோன பலூனாக சுருங்கிப் போனது.


தனபாலன் சொன்னதால் அவர்களை அழைத்துப்போய் அகடமியை சுற்றிக்காண்பித்துவிட்டு அங்கே வேலை செய்யும் ஆசிரியர்கள், மற்ற ஊழியர்கள் அனைவருக்கும் அறிமுகம் செய்துவைத்தாள்.


அகடமியின் வாட்ஸ் ஆப் குழுவில் இருவரையும் இணைத்துவிட்டு, ஒவ்வொரு வகுப்பு நிலை பாடத்திட்டங்களையும் நிரஞ்சனாவின் கைப்பேசிக்கு அனுப்பினாள். அதை பின்பற்றி அடுத்து எடுக்கவேண்டிய வகுப்புகளைப் பற்றி அவளுக்கு விளக்கிச் சொல்லிவிட்டு, “வேற ஏதாவது ஹெல்ப் வேணும்னா சொல்லுங்க, கண்டிப்பா செய்யறேன்” என முடித்துக் கொண்டாள்.


இடையே, நிரஞ்சனா அவளிடம் தனிப்பட்ட முறையில் பேச எவ்வளவு முயன்றும், ஒரு துளி இடம் கூட கொடுக்காமல், தேனு பிடிவாதமாக அவளை ஒதுக்கித் தள்ள, கூடவே யாராவது ஒருவர் இருந்துகொண்டேவேறு இருக்கவும், ஒன்றுமே செய்ய முடியாமல் தவித்தாள்.


ஓரளவுக்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாமல் தனிமை கிட்டிய நொடி, “சாரிடி தேனு, அன்னைக்கு நல்லது கெட்டது புரியாம, நான் கூட உன்ன தப்பா நினைச்சுட்டேன்டீ! நான் செஞ்சது எவ்வளவு பெரிய அனர்த்தம்ன்னு இப்ப நல்லாவே உணர்ந்துட்டேன், தேனு! பிளீஸ், என்ன மன்னிச்சிடுடீ” என அவளுடைய கையைப் பிடித்துக் கொண்டு கண்ணீர் வடிக்க, அதை சொல்லக் கூட தகுதியில்லாதவனாக தலை குனிந்து நின்றிருந்தான் ஆனந்த்.


“ப்ச்… மன்னிக்கற அளவுக்கு எனக்கு யார்மேலயும் எந்தக் கோவமும் இல்ல. ஆனா தப்பித் தவறிக் கூட யாரையும் முழுசா நம்பக் கூடாதுன்னு பெரிய விலை குடுத்து கத்துட்ருக்கேன். இதுக்கு மேலயும் என் வாழ்க்கைக்குள்ள நட்புன்னோ, சொந்தபந்தம்னோ நான் யாருக்கும் இடம் கொடுக்கறதா இல்ல! முடிஞ்சது முடிஞ்சதாவே இருக்கட்டும்! தயவு செஞ்சு என் வழியில குருக்கிடாம உங்க வழிய பார்த்துட்டு போயிட்டே இருங்க மேடம், பை” என்று சொல்லிவிட்டு தன் கடமை முடிந்த நிம்மதியில் அங்கிருந்து கிளம்பினாள்.


அலுவலகப் பகுதிக்குச் சென்று எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு, தனாவிடமிருந்து ரிலீவிங் ஆர்டரை பெற்றுக்கொண்டு, அவருக்கும் தேவாவுக்கும் நாகரிகம் கருதி ஒரு நன்றியை உதிர்த்துவிட்டு வெளியில் வந்தாள்.


வெவ்வேறு வகுப்பறைகளிலிருந்து பாடிக்கொண்டிருக்கும் மாணவர்களின் குரல்களும், கீபோர்ட், வயலின், வீணை, மிருதங்கம் போன்ற இசைகருவிகளின் கலவையான நாதமும், நட்டுவாங்க ஜதியும், பரதமாடும் பிள்ளைகளின் சலங்கை ஒலியும், செவியை நிறைத்தன.


அங்கிருக்கும் பெரிய மைதானத்தில் நின்றபடி அந்த வளாகம் முழுவதையும் ஒருமுறை முழுமையாகப் பார்த்து முடித்தாள்.


இந்த இசைப்பள்ளியின் வகுப்பறைகளையும், வழிபாட்டுக் கூடத்தையும், அங்கே இருக்கும் சிலைகளையும், இசைக் கருவிகளையும், தன்னிடம் பயிலும் மாணவர்களையும் பிரிந்து செல்வது உயிர் வலியைக் கொடுத்தாலும், ‘இங்கே நிரந்தரம் என்பது எதுவுமில்லை! இதற்கெல்லாம் கலங்கிப் போகக் கூடாது! முயன்று தேடிக்கொண்டே இருப்போம், வாழ்கையில் முன்னேறி கரைசேர நமக்கொரு பிடிமானம் கிடைக்காமலா போய்விடும்?!’ எனத் தன்னைத் தானே தேற்றிக்கொண்டு, தன் இருசக்கர வாகனத்தைக் கிளப்பி, அங்கிருந்து முழுவதுமாக வெளியேறினாள்.


“அடுத்து என்ன, என்ற கேள்வி மட்டுமே தேன்மொழியின் மனம் முழுவதும் வியாபித்திருந்தது!


*********************************

ஆலங்கட்டிமழை Mini Episode Link



Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
© KPN NOVELS COPY PROTECT

Developed By:  Krishnapriya Narayan 

© 2019 - 2024 by KPN Publications

bottom of page