top of page

Aalangattimazhai - 15

Updated: Aug 23

௧௫. ஆலித் தண்மழை


ஆலித் தண்மழை என்பது வசந்த காலத்தில் பெய்யும் மழையைக் குறிக்கிறது. வசந்த கால மழையானது பெரும்பாலும் இதமானதாகவும், புத்துணர்ச்சியையும், இனிமையையும் அளிக்கும் ஒரு மழை ஆகும்.

******


ஒரு மாதிரியான விரக்தி நிலையில் இருந்தான் கிருஷ்ணா. கடந்த மூன்று நான்கு வருடங்களாகவே அவன் வாழ்க்கையில் அவன் திட்டமிட்டது போல எதுவுமே கைகூடி வரவில்லை.


சுப்ரியாவுடனான உறவு அர்த்தமற்றதாகிப் போய், தொடங்குவதற்கு முன்பே  முடிந்து போயிருந்தது. அதேபோல அவனது ஸ்டார்ட்டப் கம்பெனி கனவும் கைசேராமல் போய்விடுமோ என்கிற அச்சமும் அவனுக்குள் குடையத் தொடங்கி இருக்கிறது.


இவ்வளவு நாளாக அவன் வேலை பார்த்தது அமெரிக்காவிலிருந்து இயங்கிவரும் ஓர் இந்திய நிறுவனத்துக்காக. கணிசமான தொகை கையில் சேர்ந்துவிட்ட துணிவில், சொந்தத் தொழில் தொடங்கும் கனவில், வேலையை விட்டுவிட்டு ஊர் திரும்பிவிட்டான். 


இப்போதைக்கு அது நடவாத காரியம் என்றாகிவிட்டது. காரணம், எந்தப்பக்கம் திரும்பினாலும் செலவு, செலவு, செலவு மட்டுமே. பெரிய வீடாகக் கட்டியே ஆகவேண்டும் என அவனுடைய அம்மா பிடிவாதமாக இழுத்துவிட்டு, இதுவரை அவன் சம்பாதித்த பணம் மொத்தத்தையும் அதுவே விழுங்கிவிட்டதுதான் முதன்மையான காரணம். ஆனை அசைந்து அசைந்து தின்னும், வீடு அசையாமல் தின்னும் என்று சும்மாவா சொல்லி வைத்தார்கள்!. கையிருப்பு குறையக் குறைய மனம் அதீதமாகச் சோர்ந்துபோகிறது.


ஏதேனும் ஓர் அமெரிக்க நிறுவனத்தில் நேரடியாக வேலை தேடிக்கொண்டு மீண்டும் சில வருடங்களுக்கு அங்கேயே செறாகவேண்டியதுதான் கிருஷ்ணாவின் தற்போதைய நிலை. 


வீடு முடியும் நிலையில் இருக்க, புதுமனை புகு விழாவுக்கு வேறு நாள் குறித்து, பத்திரிகையும் அடித்து வந்தாகிவிட்டது. இப்படி இருக்க, நாலும் கிடக்க நடுவில் அனைத்தையும் போட்டது போட்டபடி  அம்மா, அப்பா இருவரும் ஆன்மிகச் சுற்றுலா வேறு சென்றுவிட்டார்கள். திரும்பிவர இன்னும் ஒரு மாதமாவது ஆகிவிடும். அதன் பின்புதான் பத்திரிக்கை கொடுப்பது தொடங்கி மற்ற வேலைகள் எல்லாமே. 


'இந்த நேரத்தில் இதெல்லாம் தேவையா' என்று கேட்டால், 'ஆறு மாசத்துக்கு முன்னாலேயே பணம் கட்டிட்டோம். இப்ப கேன்சல் பண்ணா ரீஃபண்ட் கொடுக்கமாட்டான். மொத்தமும் நஷ்டமா போகும்' என்று பதைத்துத்தான் போனார்கள். தொகை சற்று அதிகம்தான். எனவே, ஓரளவுக்கு மேல் ஒன்று சொல்ல முடியாமல் போனது.


இந்த அழகில் ரஞ்சனிக்கு  ஃபெர்டிலிட்டி டிரீட்மென்ட்ஸ் வேறு போய்க்கொண்டிருக்கிறது.  இவர்களுடன் போட்டிப்போட்டுக்கொண்டு அவளுடைய அம்மா அப்பாவும் கூட அதே சுற்றுலாவுக்குக் கிளம்பிவிட்டனர் என்பதுதான் காலக்கொடுமை. 


ஸ்ரீதர் படிப்பை முடித்து, ஓரளவுக்குத் தனக்கும் தன மனைவியின் தேவையைப் பூர்த்திசெய்து கொள்ளும் அளவுக்கேனும் சம்பாதிக்கத் தொடங்கி இருப்பது மட்டுமே தற்போதைய ஒரே ஆறுதல்.


அனைத்தையும் மனதில் போட்டு உழன்றபடி ஹாலில் போடப்பட்டிருந்த சோபாவில் படுத்திருந்தான் கிருஷ்ணா


அழைப்பு மணியின் ஓசை தொந்தரவு செய்தது. எழுந்து போய் கதவைத் திறக்கக் கூட சோம்பலாக இருக்க, ‘இந்த அண்ணி எங்க போனாங்க’ என கடுப்புடன் எண்ணியபடி ஸ்ரீதரின்  அறைக் கதவைப் பார்த்தான்.


கதவு திறப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லாமல் போக, தானே எழுந்து போய் வாயிற் கதவைத் திறந்தான்.


உருட்டி வந்திருந்த பயணப்பெட்டியை கையில் பிடித்தபடி நெற்றியில் ஓட்டப்பட்டிருந்த பிளாஸ்டருடன் நின்றவளைப் பார்த்ததும், ‘எவ இவ?’ என்று எழுந்த கேள்வியில் அவனது நெற்றி சுருங்கியது.


“யாருங்க வேணும்?” என்று கேட்டான் கடுப்புடன்.


எடுத்த எடுப்பில் 'யார் இவன்?' என்கிற பார்வை, பிறகு கிருஷ்ணா என்று உணர்ந்து கொண்டதும் முகத்தில் உண்டான வியந்த பாவம்! 'இவன் என்ன இப்படி இருக்கான்?' எனக் கண்களில் தொக்கி நின்ற கேள்வி, இவன் தன்னை அடையாளம் காணவில்லை என்று அறிந்ததும் உண்டான எரிச்சல் எனச் சில நொடிகளுக்குள் மாறி மாறி அவள் முகத்தில் வந்து போன பாவத்தில் அவனுடைய மனதின் மூலையில் ஏதோ ஒன்று தடம் புரண்டது.


முன்பு அவன் சொன்னது போலவே, ‘நீ தான் வேணும்! என நக்கலாகப் பதில் சொல்வோமா’ என்று எண்ணி, வேண்டாம் என்று முடிவு செய்வதற்குள் எழுந்த சிரிப்பை அடக்கி, “ஆங்… என் பேரு வர்ஷினி, உங்க வீட்ல ரஞ்சனின்னு ஒருத்தங்க இருக்காங்க இல்ல, அவங்களோட தங்க” என்றாள் வெகு பவ்யமாக.



ree

‘போச்சுடா,  இருக்கிற கொஞ்ச நஞ்ச பிரைவசியும் இவளாலப் போகப்போகுது, சுத்தம்’ என மனதுக்குள் சலித்தபடி அப்படியே தேங்கி நின்றான்.


“எக்ஸ்கியூஸ் மீ, கொஞ்சம் வழி விட்டீங்கன்னா நான் உள்ள வந்துடுவேன்” எனப் பொறுமை இழந்து அவள் சொல்லவும் தன்னுணர்வு பெற்று வழிவிட்டு நகர்ந்தான்.


அவள் உள்ளே நுழைந்ததும் மீண்டும் கதவை அடைத்து விட்டு அவன் அவள் பின்னாலே வரவும், “அக்கா எங்க இருக்கா?” என்று கேட்டாள். அவர்கள் அறையைச் சுட்டிக் காண்பித்து கை நீட்டினான். 


"தேங்க்ஸ்" என்று நன்றி நவின்றுவிட்டு கதவைத் திறந்து கொண்டு அவர்கள் அறைக்குள் சென்றாள். 


“ஹேய் வர்ஷினி, வாடி வா” என்று அவளை வரவேற்றாள் ரஞ்சனி


‘ஒருத்தங்க ரூமுக்குள்ள போகறதுக்கு முன்னாடி கதவ தட்டிட்டு உள்ள  போகணுங்கற மேனர்ஸ் கூட தெரியல பாரேன் இந்த பொண்ணுக்கு’ என்று அவன் மனதிற்குள் அவளுக்கு நன்னடத்தை சான்றிதழ் வழங்கிக் கொண்டிருக்க, “என்னக்கா இது, வீட்டுக்கு வந்தவங்கள உள்ள வாங்கன்னு சொல்ற பேசிக் மேனர்ஸ் கூட உன் மச்சினனுக்கு தெரியல, ஒரு செகண்ட் அப்படியே திரும்பி போயிடலாமான்னு தோணுச்சு. உனக்காகத்தான் வந்தேன்" என்று அவன் மீது அவள் குற்றப்பத்திரிகை வாசிப்பது தெளிவாகக் கேட்டது.


வர்ஷிணியின் மீது கொலை காண்டாகிப் போனான்.


“அவர் அந்த மாதிரி எல்லாம் செய்ய மாட்டாரே” என அண்ணி தனக்கு வக்காலத்து வாங்கவும், தன் தவறை உணர்ந்து சற்றே தணிந்தான். 


“அப்படின்னா நானா பொய் சொல்றேன்” என விடாப்பிடியாக நின்றாள் வர்ஷிணி. 


“ஐயோ அதை விடு, நீ என்ன இப்படி விழுந்துவாறி இவ்வளவு அடிப்பட்டுட்டு வந்திருக்க. அம்மா சொன்னப்ப கூட, காயம் இவ்வளவு ஜாஸ்தி இருக்கும்ன்னு நினைக்கல, வண்டிய கவனமா ஒட்ட மாட்ட?” என ஆதங்கப்பட்டாள் ரஞ்சனி.


“அதெல்லாம் ஒன்னும் இல்ல, ப்ரீயா விடுக்கா, ரெண்டு மூணு நாள்ல சரியா போயிடும். எனக்கு இப்போ உடனே ஒரு காபி வேணும், நீ போட்டு தரியா இல்ல நானே போட்டுக்கட்டுமா” என்றாள் வர்ஷிணி.


"எது எங்க இருக்குன்னு உனக்கு எப்படி தெரியும்? இப்ப நான் உனக்குக் காபி கலந்து தரேன். என் கூடவே வா, நான் எல்லாத்தையும் காமிக்கிறேன். நெக்ஸ்ட் டைம் ல இருந்து நீ போடலாம்” என்றபடி அறையை விட்டு வெளியில் வந்தாள் ரஞ்சனி. அங்கே சோபாவில் அமர்ந்து கைப்பேசியை குடைந்து கொண்டிருந்த கிருஷ்ணாவை முறைத்துக் கொண்டே அக்காவைப் பின்தொடர்ந்து போனாள் வர்ஷிணி.


'அன் பிலீவபில். இதென்ன இந்த பப்ளிமாசு, ஆனாலும் அநியாயத்துக்கு இப்படி டிரான்ச்பர்மேஷன் ஆகிக் கெடக்கு! அராத்து, ஓட்டத் தெரியாம வண்டி ஓட்டி, எங்கயோ விழுந்து மூஞ்சி முகரைய பேத்துட்டு வந்திருக்கும் போலிருக்கு. அப்படி இருந்தும் இவ்வளவு அழகா இருந்து தொலைக்குது! ' என வியந்து அவளைப் பார்துவைத்தான் கிருஷ்ணா!


“இரு மொதல்ல காஃபி ஃபில்டர் எங்க இருக்குன்னு காமிக்கறேன்” என்றபடி வந்து பாத்திரம் வைக்கும் அலமாரியைத் திறந்தாள் ரஞ்சனி.


“ஐயோ! என்னக்கா இது? சைஸ் வாரியா இத்தனை பில்டர் இருக்கு? இத பாத்தா, காபி போட வாங்கி வச்சிருக்கிற மாதிரி தெரியல. சீன் போட வாங்கி வச்சிருக்க மாதிரிதான் இருக்கு ஹா… ஹா…”


“நீ சொன்ன ரெண்டுமே கரெக்டுதான். காபி போடறதுக்குன்னு சொன்னாலும், சீன் போடறதுதான் முக்கியமான காரணம். இந்த மாதிரி பாத்திரமா வாங்கிக் குவிக்கறதுல என் மாமியாருக்கு ஒரு அப்சஷன். விட்டா அவங்க வாங்குற பென்ஷன் மொத்தத்துக்கும் பாத்திரம்தான் வாங்குவாங்க”


“சரியான ஆளுதான்கா நீ. அவங்க வீட்ல இல்லங்கற தைரியத்துலதான இப்படி ஓப்பனா கலாய்க்கிற”


“போடி நீ வேற… நான் இப்படி பேசறது மட்டும் உங்க அத்தான் காதுலயோ இல்ல கிருஷ்ணா காதுலயோ விழுந்துது, ‘எங்க அம்மா எங்க எவ்வளவு கஷ்டப்பட்டு பெத்து வளர்த்தாங்க தெரியுமா?’ன்னு ஆரம்பிச்சு என் காதுல ரத்தம் வர அளவுக்கு அவங்க அம்மா பெருமைய பாடுவாங்க. அதோட விட்டா கூட பரவாயில்லை. மூட்ட மூட்டையா அட்வைஸ் பண்ணி என் மூளைய கழுவி கவுப்பாங்க”


அக்காவின் புலம்பலை கேட்டு, "அப்ப, நம்ம அம்மா நம்மள தவிட்டுக்கு வாங்கி, தண்ணி தெளிச்சு விட்டுட்டாங்களா என்ன?" என்று கேட்டு கலகலவென சிரித்தாள் வர்ஷிணி. அந்தச் சிரிப்பு சத்தம் ஹாலில் உட்கார்ந்திருந்த கிருஷ்ணாவின் காதில் நன்றாக விழுந்தது.


ஒரு பெண்ணின் அதிர்ந்த இப்படியொரு சிரிப்பு இந்த வீட்டுக்குப் புதிது.


‘எப்படி பிசாசு மாதிரி சிரிக்குது பாரு, அராத்து’ என்று அவன் மனதுக்குள் முட்டி மோதினாலும், உண்மையில் அந்தச் சிரிப்பு, சோர்ந்து போய் இருந்த அவனது மனதில் ஒரு புத்துணர்ச்சியைக் கொண்டு வந்து நிரப்பியது என்பதே உண்மை.


“ஏ லூசு, நம்ம வீட்டு நினைப்புல அதே மாதிரி இங்க வந்து உன்னோட சேட்டையெல்லாம் செய்யாத. தப்பா போகும்” எனப் பதறினாள் ரஞ்சனி.


“அக்கா, இதுக்கெல்லாம் கூடவா இங்க கேட் போடுவாங்க. நம்ம அப்பாவே பரவாயில்ல போலிருக்கே”


“ஏய் சத்தமா பேசி தொலையாதடி. கிருஷ்ணா ஹால்ல தான் உட்கார்ந்துட்டு இருக்காரு”


“அவர் கூட உங்க வீட்ல யூத் கிடையாதா? குடும்பம் மொத்தமுமா இப்படி பூமரா இருக்கும்?”


கையால் வாயை மூடிக்கொண்டு சத்தம் இல்லாமல் குலுங்கிச் சிரித்தாள் ரஞ்சனி.


இருப்பதிலேயே சிறியதாக இருந்த ஒரு ஃபில்டரை எடுத்து காபி பொடி போட்டு டிகாக்ஷனுக்கு தயார் செய்தாள்.


“கிருஷ்ணாவ கம்பேர் பண்ணும் போது உங்க அத்தான் அவ்வளவு மோசம் இல்லதான். ஆனாலும் அம்மாவுக்கு பயப்படுவாரு”


“ அப்படின்னா கிருஷ்ணா அவங்க அம்மாவுக்கு பயப்பட மாட்டாரா௟”


“ம்ஹூம்… இல்ல, அவங்க அம்மாவுக்கு தான் கிருஷ்ணாவ பார்த்தா கொஞ்சம் பயம். சமயத்துல அவங்கள நல்லா வச்சு செய்வாரு. ஆனாலும் அம்மாவோட கருத்துக்கு எதிரா நடந்துக்கவே மாட்டார்”


“ஓ”


“ஆமாம், வர்ஷிணி. எங்க நிச்சயதார்த்தத்துக்கு முன்னால பர்ச்சேஸ் போயிருந்தோம் இல்ல, அப்ப கிருஷ்ணாதான் அவங்க அம்மாவ கன்வின்ஸ் பண்ணி, ஸ்ரீதர் என் கூட தனியா பேச பர்மிஷன் வாங்கி கொடுத்தாரு. அதே மாதிரி எல்லாமே எனக்கு புடிச்சதா, என்ன கூட்டிட்டு போய்தான் வாங்கணும்னு சொல்லி வீட்டில பிரஷர் போட்டதும் அவர்தான்”


“இதையெல்லாம் அத்தானே செஞ்சிருந்தா நல்லா இருந்திருக்கும் இல்ல. ப்ச், இதுக்கெல்லாம் எதுக்கு தம்பியோட ரெக்கமண்டேஷன்”


“என்ன பண்றது வர்ஷிணி, அவரோட சிச்சுவேஷன் அந்த மாதிரி. எப்பவுமே குடும்பத்துல அதிகமா சம்பாதிக்கிற பிள்ளையோட கைதான ஓங்கி இருக்கும். உங்க அத்தான் இன்னும் கூட இன்டிபென்டன்ட்டா செட்டில் ஆகலியே!”


வருத்தம் தோய்ந்த குரலில் ரஞ்சனி சொல்லவும் அவளுடைய திருமணத்தில் அப்பாவின் அவசரக் குடுக்கை தனத்தை நினைத்து வர்ஷிணிக்குக் கோபம் கனன்றது. ஆனாலும் முடிந்ததைப் பேசி பயனில்லை என்று மனதை அடக்கிக் கொண்டாள்.


வர்ஷிணியின் மௌனம் ரஞ்சனிக்கு புரிய, “ஆனா உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? இந்த குடும்பத்தை பொறுத்த வரைக்கும் கிருஷ்ணா எனக்கு ஒரு பெஸ்ட் ஃப்ரெண்ட். எனக்கும் சரி, ஸ்ரீதருக்கும் சரி ரொம்ப சப்போர்ட் பண்ணுவாரு. அவருக்கு சின்ன அண்ணன்னா உசுரு” என்றாள் மனதார.


“பரவால்ல, என் கதையில தான் அவர் வில்லன். உன் கதைலயாவது அவர் ஒரு கேரக்டர் ரோல் செஞ்சுட்டு போகட்டும்” என வர்ஷிணி பட்டென சொல்லவும் ரஞ்சனியின் முகம் பேய் அறைந்தார் போல ஆனது.


“என்னடீ வில்லன் அது இதுங்கற” எனப் பதறினாள்.


என்ன சொல்வது என ஒரு நொடி திகைத்து, “ப்ச்… அதில்லக்கா, உன் நிச்சயதார்த்தத்துக்கு, என்ன கார்னர் பண்ணி கூட்டிட்டு வந்தார் இல்ல, அதச் சொன்னேன்” எனச் சிரித்தாள் வர்ஷிணி.


“ஷ்… பா… ஆனா ஒரு உண்மைய சொல்லட்டுமா”


“என்னக்கா பில்ட்-அப் கொடுக்கற?”


“உண்மையல அதுக்கு ஸ்கெட்ச் போட்டதே கிருஷ்ணாதான்”


“எதே…”


“ஆமாம்டீ… நீ நிச்சயதார்த்த பங்க்ஷனுக்கு வரமாட்டன்னு நான் ஸ்ரீதர் கிட்ட சொல்லி ஃபீல் பண்ணானா? அதுல ஃபீல் ஆகி அவர் கிருஷ்ணா கிட்ட சொன்னாரா! அவர் க்ளீனா ஐடியா பண்ணி உன்ன சரியான டைம்க்கு அங்க அள்ளிட்டு வந்து போட்டாரு” எனச் சொல்லிச் சிரித்தாள் ரஞ்சனி, தன்னை மறந்து சத்தமாக.


ஆனாலும் கோபம் வரவில்லை, கிருஷ்ணாவின் அந்தச் செயல் அவளை ரசிக்கவே வைத்தது. “அடக் கூட்டுக் களவாணிகளா” என வாயைப் பொத்திக் கொண்டாள் வர்ஷிணி.


அவர்களிருவரும் பேசிக்கொள்வது வார்த்தைகளாக இல்லாமல் வெறும் ஒலி வடிவமாக மட்டுமே வெளியில் அமர்ந்திருந்த கிருஷ்ணாவை அடைந்தது. ‘அட… ரஞ்சனி கூட இப்படிச் சிரிப்பாளா? பரவால்ல, வந்த கொஞ்ச நேரத்துல அக்காவ இப்படிச் சிரிக்க வெச்சிடுச்சு இந்த அராத்து" என எண்ணினான். அதே நேரம், அவனுடைய அம்மா மட்டும் இந்த நேரம் இங்கே இருந்தால், பாவம் ரஞ்சனி என்றும் அவனுக்குத் தோன்றாமல் இல்லை.


மகன்கள் சத்தமாகச் சிரித்தாலே, ‘டேய், இப்படியெல்லாம் சிரிக்காதீங்கடா, உடனே துக்கப் படும்படியா ஏதாவது நடந்து தொலையும்’ என அடக்குவார்.


ஆனாலும் கூட இப்படி ஓர் இறுக்கமான சூழலில் வாழ்வது எவ்வளவு கொடுமை என அவன் உணரவே இல்லை.


இந்தளவுக்காவது யோசிக்கிறான் என்றால் அது சுப்ரியா அவனுக்குச் சொல்லிக்கொடுத்துவிட்டுப் போன பாடம்தான் காரணம்.



ree

அவனுடைய முகத்துக்கு நேராக வர்ஷிணி கை அசைக்க, உறைநிலையிலிருந்து கலைந்து அவள் நீட்டிய காபிக் குவளையை, “தேங்க்ஸ்” என்றபடி வாங்கிக் கொண்டான்.


மறுபடியும் சமையல் அறைக்குள் வந்து தனக்கான காபியை எடுத்துக் கொண்டவள், இருக்கையில் அமர்ந்திருந்த ரஞ்சனிக்கு அருகில் நின்று, “ஏன் கா, உன் மச்சினன் எதையோ பறிகொடுத்த மாதிரி இருக்காரு?” என்று கேட்டாள்.


“பாவம்டீ… அந்த சுப்ரியா கூட இவருக்கு ப்ரேக்-அப் ஆயிடுச்சு. அதுல இருந்து இப்படித்தான் இருகாரு” என அவள் பதில் கொடுத்துக் கொண்டிருந்த நேரம், கார் ஹாரன் ஒலி கேட்டது.


“ஹேய், அத்தான் வந்துட்டாரு, வா” என்றபடி காபியைக் கூட முழுதும் குடித்து முடிக்காமல் வெளியில் ஓடினாள்.


வர்ஷிணியும் கூடவே போக, காரை நிறுத்திவிட்டு வந்தான் ஸ்ரீதர். பரஸ்பர நல விசாரிப்புகளுக்குப் பிறகு, ரஞ்சனி உதவி செய்ய, இரவு உணவைத் தயார் செய்தாள் வர்ஷிணி.


கிருஷ்ணா பிறகு சாப்பிடுவதாகச் சொல்லிவிட, அவனுக்கான உணவை ஹாட் பேக்கில் போட்டு எடுத்துவைத்துவிட்டு, மற்ற மூவரும் அமர்ந்து உண்டு முடித்தனர்.


மூன்று படுக்கை அறைகளைக் கொண்ட டியூப்லக்ஸ் வில்லா அது. அதில் ஒன்று கிருஷ்ணாவின் அறை.


தங்கள் அறையிலேயே அவளைப் படுத்துக்கொள்ளும்படி ரஞ்சனி சொல்ல, “பரவால்லக்கா, ஹால்லையே படுத்துக்கறேன்” என திட்டவட்டமாக மறுத்தாள்.


ஸ்ரீதர் சொல்லிப்பார்த்தும் அவள் மறுக்கவே, அவர்களுடைய அம்மாவின் அறையில் தங்கும்படி சொன்னான்.


“பரவால்லங்க, அத்த ஏதாவது சொல்லப் போறாங்க” என ரஞ்சனி கிசுகிசுக்க, “பரவால்ல ரஞ்சனி, உங்க சிஸ்டர் உங்களுக்கு ஹெல்ப் பண்ண வந்திருக்காங்க. அவங்கள சங்கடப் படுத்தக் கூடாது. அம்மாட்ட நான் பேசிக்கறேன்” என்று சொல்லிவிட்டான் கிருஷ்ணா.


ரஞ்சனியை ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டு, அவளுடைய அறையில் இருந்த தன் பெட்டியைக் கொண்டுபோய் அங்கே வைத்துவிட்டு வந்தாள்.


அதன் பிறகு, சமையல் அறையைச் சுத்தம் செய்துவிட்டு வந்தவளுக்கு கண்ணைக் கட்டியது.


‘ஒரு நாள் டின்னர் செஞ்சு முடிச்சி, கிச்சன் கிளீன் செய்யவே இவ்வளவு கடுப்பா வருதே, தினமும் இந்த ரஞ்சனி எப்படி சமாளிக்கறா? பாவம் அவளுக்கு பெர்டிலிட்டி ட்ரீட்மென்ட் வேற போயிட்டு இருக்கு. அவளோட மாமனார், மாமியார் இல்லாதப்பவே இப்படி! இந்த அழகுல போனா, அவளுக்கு எப்படிக் குழந்தை நிக்கும்?’ என்றுதான் அவனின் மண்டையைக் குடைந்தது.


போய் படுத்தால், நெற்றியிலிருந்த காயம் கொடுத்த வலியில் அவளுக்கு உறக்கமே வரவில்லை. அத்தோடில்லாமல் புதிய சூழ்நிலை வேறு.


கைப்பேசியை எடுத்துக்கொண்டு மொட்டை மாடி நோக்கிப் போனாள். அங்கே, வானத்தை வெறித்தபடி தனிமையில் அமர்ந்திருந்தான் கிருஷ்ணா. கையில் இருந்த குவளையில் தகதகத்தது உயர்ரக மதுபானம்.


அவள் வந்த அரவம் கேட்டு, அவன் பார்வை அவள்மீது பாய, பழைய சம்பவங்களின் நினைவில் உள்ளுக்குள்ளே பக்கென்று ஆனது வர்ஷிணிக்கு.


Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
© KPN NOVELS COPY PROTECT

Developed By:  Krishnapriya Narayan 

© 2019 - 2024 by KPN Publications

bottom of page