top of page

Aalangatti Mazhai - 14

௧௪. பருவக்காற்று மழை


(பருவக்காற்று மழை, ஒரு புவியியல் அமைப்பு சார்ந்த மழையாகும். காற்றுச் சுழற்சி ஓராண்டின் வெவ்வேறு காலகட்டத்தில் மாறுவதால் இவ்வகையான மழை ஏற்படுகிறது. இவ்வகை மழை ஒரு நிலப்பகுதியில் ஏற்பட அது ஒரு பெரிய கடற்பகுதிக்கு அருகாமையில் இருக்கவேண்டும்.)


அலுவலகத்தில் அதிக பணி நெருக்கடி இருந்தபோதும் ஒர்க் ஃப்ரம் ஹோம் போல அனுமதி வாங்கி, இடையிடையே விடுப்பு எடுத்துக்கொண்டு, ஸ்ரீதருடைய திருமணத்திற்காக அமெரிக்காவிலிருந்து வந்திருந்தான் கிருஷ்ணா.


திருமணம் முடிந்ததும் முடியாததுமாக, அறக்கப்பறக்க அமெரிக்கா திரும்ப வேண்டிய கட்டாயம் அவனுக்கு.


ஸ்ரீதர் கல்யாணம் முடித்து அடுத்த முகூர்த்தத்திலேயே தனக்கும் சுப்ரியாவுக்குமான திருமணத்தையும் வைத்துக் கொள்ளலாம் எனப் பெரியவர்களிடம் சொல்லிவிட்டான்.


ரமேஷுக்கு கல்யாணம் முடித்தவுடன், பெரியவர்கள் முடிவு செய்து இவர்கள் இருவரின் சம்மதமும் கேட்டு, திருமணம் செய்யப் பேசிவைத்துவிட்டனர். ஸ்ரீதர் திருமணம் முடியக் காத்திருந்தனர் அவ்வளவுதான். அதனால் இதில் எல்லோருக்குமே விருப்பம்தான்.


சுப்ரியாவுமே அவளுடைய படிப்பு முடிந்துதான் இங்கே திரும்ப வந்திருந்தாள். எனவே எதுவும் தடங்கல் இருக்காது என்றே நம்பினான்.


திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்த ஏதுவாக ஒரு வீடு பார்த்து, எல்லாப் பொருட்களையும் வாங்கி போட்டு தயாராகவே இருக்கவும், எந்தக் காரணம் கொண்டும் இந்த ஏற்பாட்டைத் தள்ளிப் போட வேண்டிய அவசியமும் அவனுக்கு இல்லை.


ஆனால் சுப்ரியா அதற்குச் சம்மதிக்கவில்லை. அவளுடைய படிப்புக்கு லண்டனிலேயே வேலை கிடைத்திருக்க, குறைந்தது ஒரு வருடமாவது வேலைக்குச் செல்ல வேண்டும் என்று தீர்மானமாக இருந்தாள்.


அவனுடன் அமெரிக்கா சென்றாலும், டிபன்டன்ட் விசாவில்தான் போக முடியும் என்கிற நிலை. அங்கே போய், உடனடியாக எந்த வேலையும் அவளால் பார்க்க இயலாது. இதே, அவனுக்கு கிரீன் கார்ட் கிடைத்து விட்டால் பிரச்சனை இல்லை.


இதை அவள் சொன்ன பொழுது, அவனால் மறுத்துக் கூற முடியவில்லை. அதே நேரம் அவனுடைய வயதிற்கே உண்டான ஆசாபாசங்களும் அவனை விட்டு வைத்த பாடில்லை.


அதுவும் ஸ்ரீதருடைய திருமணம் கலகலப்பாக நடந்து முடிந்திருக்க, அன்று மாலை நடந்த நலங்கில், சுற்றத்தாரின் கேலி கிண்டல்களுக்கு நடுவில் வெட்கப்பட்டுக் கொண்டு மகிழ்ச்சியை அனுபவித்தபடி இருந்த அண்ணனையும் அண்ணியையும் பார்த்த பின்பு, கூடவே, தான் மணக்கவிருக்கும் பெண்ணை அருகிலேயே வைத்துக் கொண்டு, அவனுக்குள்ளே உண்டான உணர்வுகளைக் கட்டுப்படுத்தவே முடியாமல் தவித்தான்.


திருமண கலகலப்புகள் எல்லாம் அடங்கிய பிறகு, யாருக்கும் தெரியாமல் மொட்டை மாடிக்கு வருமாறு சுப்ரியாவை அழைத்தான்.


தன்னுடைய கைப்பேசியில் ஏதோ வீடியோவை எடிட் செய்து கொண்டிருந்தவள் முதலில் மறுத்து விட்டாள். அவள் வரவில்லை என்கிற கோபத்தில் நேரடியாக அவளை முறைத்துக்கொண்டு, மதுவைத் துணைக்குச் சேர்த்தபடி மொட்டை மாடியில் வந்து அமர்ந்தான்.


அவனுடைய கோபத்துக்குப் பணிந்தார்போல, சில நிமிடங்களுக்கெல்லாம் தானே அவனைத் தேடி அங்கே வந்தாள் சுப்ரியா.


"இப்ப எதுக்கு இங்க வந்த, ஏதோ முக்கியமான வேலைல இருந்த இல்ல, அதையே பார்க்க வேண்டியதுதான?" என முறுக்கிக்கொண்டு முகம் திருப்பியவனின் அருகில் வந்து அமர்ந்தவள், "அப்படி இல்ல கிருஷ்... சாரி" எனக் கெஞ்சிக் கொஞ்சி அவனைச் சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கினாள்.


உண்மையில் அந்த நேரத்தில் அவளது அந்தச் செய்கை அப்படி ஒரு, கர்வத்தையும், போதையையும் அவனுக்குக் கொடுத்தது.


கொஞ்சம் குளிர்ந்து, "ஓவரா கெத்து காமிக்காம, நீ கல்யாணத்துக்கு ஓகே சொல்லி இருக்கலாம்" என்று ஓர் உஷ்ணப் பெருமூச்சை வெளியேற்றினான்.


"கல்யாணம் பண்ணிட்டு அதுக்கப்பறம்" என்று அவள் கேலி போலவே கேட்டாலும் அவளுடைய குரலில் சிறு எரிச்சல் வெளிப்பட்டது.


ஆனாலும் அதைப் புறந்தள்ளி அவளுடன் நெருங்கி அமர்ந்தவன், "அத்துக்கப்பறம் எல்லாரும் என்ன செய்வாங்களோ அதுதான்" என்றான் கிருஷ்ணா விஷமமாக.


"ஹவ் கிரிஞ்… அதையே ஃபுல் டைமா செஞ்சிட்டு இருப்பாங்களா? வீட்டு வேலையெல்லாம், நீங்களா பாப்பீங்க? உங்க ஃபேமிலி பத்திதான் எனக்குத் தெரியுமே” எனக் குத்தினாள், ஒரு நொடி இடைவெளி கூட விடாமல்.


பொறுக்காமல், “ரியா” எனக் குரலை உயர்த்தினான்.


“ஹலோ, எங்கக்காதான் அங்க ஏற்கனவே குப்பை கொட்டிட்டு இருக்காளே, உங்க அண்ணனுக்கு ஒரு சுடுதண்ணி வெக்கத் தெரியுமா சொல்லுங்க? தப்பித்தவறி எதாவது வேலை செய்ய நினைச்சாலும், உங்க அம்மா அதுக்கு விடுவாங்களா? எனக்கு உங்க மேக்கிங் பத்தி நல்லாவே தெரியும் கிருஷ்ணா” என மேலும் அவனைச் சீண்டினாள்.


“பின்ன உங்க அண்ணன மாதிரி இருக்கணுமா, பொட்டச்சி மாதிரி வீட்டு வேல செஞ்சிட்டு” எனப் பாய்ந்தான். அவளது முகம் கடுத்தது.


“அவன் அவன் குடும்பத்துக்கு வேலை செய்யறான் இதுல என்ன இருக்கு” என அவள் விடாமல் பேச, “அப்படினா, நம்ம கல்யாணத்துக்கு அப்பறம், நீ நம்ம வீட்டுல வேலை செஞ்சா, அதுவும் நம்ம குடும்பத்துக்காகத்தான? இதுக்கு ஏன் இவ்வளவு ஸ்ட்ரெஸ் ஆகர” எனக் அவளை மடக்கினான்.


“சொன்னாலும் சொல்லாட்டியும் ஸ்ட்ரெஸ்தான், ஆனா நான் அந்த ஸ்ட்ரெஸ்ஸ எடுக்க மாட்டேன்னு சொல்லல, கொஞ்சம் தள்ளிப் போடப் பாக்கறேன் அவ்வளவுதான்” என்றபடி அவனுக்கு அருகில் இருந்த சிகரெட் பாக்கெட்டிலிருந்து ஒன்றை உருவி வாயில் வைத்துப் பற்றவைத்தாள்.


உண்மையில், அவன் பேசியதில் அவள் பதற்றமாகிவிட்டாள் என்பது புரிந்தது.


அவளது இந்தப் பழக்கமெல்லாம் சமீபமாக ஏற்பட்டதுதான். இலண்டன் செல்வதற்கு முன்புவரை இல்லை. அவனுக்குமே இதெல்லாம் தவறாகத் தெரியவில்லை. குடும்பத்தினருக்குத் தெரியாமல் இருந்தால் போதும் என்று நினைத்தான், அவ்வளவுதான். ஆனாலும், ‘இதெல்லாம் தப்பு, விட்டுடு’ என்று சொன்னாலும், ‘நீ ரொம்ப யோக்கியமா?’ என்று கேட்டு மல்லுக்கு நிற்பாள். பரவாயில்லை எனச் சகஜமாக ஏற்றுக்கொண்டுவிட்டான். அதனால் அவனிடம் இயல்பாக நடந்துகொள்கிறாள்.


“அதோட இல்ல கிருஷ், அந்த சின்னபொண்ணு அன்னைக்கு எனக்குச் சுயமரியாதை பத்தி கிளாஸ் எடுத்தா நியாபகம் இருக்கா? அன்னைக்கே, என்ன நடந்தாலும் வேலைக்கு போயி தீரணும்னு முடிவு பண்ணிட்டேன்” என்றாள் புகையை ஊதியபடி.


“யார சொல்ற?”


“எல்லாம் அந்த அமிர்தவர்ஷிணி இல்ல அவதான்”


“ச்சை, அதுவே ஒரு அரை வேக்காடு! அவல்லாம் ஒரு ஆளுன்னு நம்ம கல்யாணத்த போஸ்ட்பான் பண்றியா நீ?”


ஏன் எதற்கு என்றே புரியாமல், அவளுடைய பெயரைக் கேட்டதும் அவனுக்கு அப்படி ஓர் ஆத்திரம் பற்றிக்கொண்டு வந்தது.


“அவள பார்த்தா ஒண்ணும் அரை வேக்காடு மாதிரி தெரியல! நல்ல தெளிவா இருக்கா, அன்னைக்கு மெஹந்தி போடும்போதுகூட அவள கவனிச்சேன், சின்ன பொண்ணா இருந்தா கூட அவ்வளவு டெடிகேட்டடா அந்த வேலைய செய்யறா. ஷி இஸ் எ பர்ஃபெக்ஷனிஸ்ட் யூ நோ, நான் அன்னைக்கு அவள கிண்டலா பேசியிருக்கக் கூடாது” எனச் சொல்லிக்கொண்டே குவளையில் இருந்த மதுவை எடுத்துப் பருகினாள்.


“இப்ப எதுக்கு அவள பத்தி பேசி டைம் வேஸ்ட் பண்ணிட்டு இருக்கோம், விடு, உருப்படியா நம்ம வேலைய பார்க்கலாம்” என்று மற்றொரு குவளையில் மதுவை ஊற்றிப் பருகியபடி, அவளை தன மீது சரித்துக் கொண்டான்.


அப்படியும் விட்டுக்கொடுக்காமல் அவள் முகத்தைத் தூக்கி வைத்திருக்க, “உன்ன எப்படி சிரிக்கவைக்கணும்னு எனக்குத் தெரியும்” என்றபடி அவளுடைய பாதத்தைப் பிடித்து இழுத்து உள்ளங்காலில் குறுகுறுப்பூட்ட, சில நொடிகள் கூட தாக்குப்பிடிக்க இயலாமல் அதிர்ந்து சிரிக்கத் தொடங்கினாள் சுப்ரியா.


அதே நேரம் தடதடவென ஓசை கேட்கவும், வேகமாக கையிலிருந்த குவளையை அவள் கீழே வைத்துவிட, “ஹேய், கண்ட்ரோல் யூர் செல்ஃப்” என்றபடி அவளுடைய வாயைப் பொத்தினான். அதற்குமேல் வேகமாகச் சிந்தித்துச் செயலாற்றுவதற்குள் வர்ஷிணி அங்கு வந்துவிட்டாள். அவளுடைய பெயரைக் கேட்டதற்கே எரிச்சலுற்றவனுக்கு, அவளை நேரில் பார்க்கவும், ‘இந்த நேரத்துல இந்த அராத்து எதுக்கு இங்க வந்துதொலைச்சா’ என அந்த எரிச்சல் இன்னும் அதிகமானது. அதற்குமேலும், அவள் கொஞ்சம் கூட விவஸ்தையில்லாமல் அதிகப்படியாகப் பேசிவைக்க, ஏதேதோ நடந்துபோனது.


ஏதோ ஒரு ஆத்திரத்தில் கொஞ்சமும் சிந்திக்காமல் அவளிடம் எல்லை மீறி நடந்துகொண்டுவிட்டானே ஒழிய, அதன்பின், ‘த்தூ… ஒரு சின்னப் பொண்ணுகிட்ட போய் உன் வீரத்த காமிச்சிருக்க, உனக்கே வெக்கமாயில்ல?’ என அவன் மனசாட்சியே அவனைக் காரி உமிழ, அந்த இரவில் அவனது உறக்கம் பறிபோனதுதான் மிச்சம்.


எப்படியோ ஒருவழியாகச் சிறிதுநேரம் உறங்கி விழிக்க, அன்றைய தினத்துக்கான அவனது மன அமைதியைக் குலைத்திருந்தாள் சுப்ரியா.


ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவனை அவனது கைப்பேசி ஒலித்து எழுப்பிவிட்டது. கேரளாவிலிருந்து வர்கீஸ் அழைத்திருந்தான்.


"என்னடா மச்சான், பத்திரமா ஊர் போய் சேர்ந்தியா" எனச் சலிப்புடன் கேட்டபடிதான் அந்த அழைப்பை ஏற்றான்‌‌.


"சாரி டா மச்சான் தூங்கிட்டு இருந்தியா"


"எவன்டா இவன், முக்கியமா இத கேட்கதான் போன் பண்ணியா"


"முக்கியமான விஷயம்தான், அதனாலதான் போன் பண்ணேன்"


"டேய் ஓவர் பில்டப் குடுக்காம என்னன்னு சொல்லுடா"


"ஏன்டா மச்சான், உன் போட்டோவ சோசியல் மீடியால ஷேர் பண்ணாதான் உனக்கு பிடிக்காதே, இதையே நாங்க யாராவது செஞ்சா சும்மா இருந்திருப்பியா? உன் ஆளு செஞ்சா அது மட்டும் உனக்கு ஓகேவா?"


கிண்டல் தொனிக்க வர்கீஸ் கேள்வி கேட்டதில் எக்கச்சக்கமாகக் கடுப்பாகிப் போனான் கிருஷ்ணா.


"ஏய் என்னடா ஓவரா பேசிட்டு போற? யாருடா இப்ப சோசியல் மீடியால என் போட்டோவை ஷேர் செஞ்சிருக்கறது"


"நெஜமாவே உனக்கு தெரியாதா, எல்லாம் உன் ஆளு சுப்ரியாதான் ஷேர் பண்ணி இருக்காங்க, அதுவும் போட்டோ இல்ல வீடியோ, டிக்டாக்ல அப்லோட் பண்ணி, பேஸ்புக்குலயும் ஷேர் செஞ்சிருக்காங்க, அதுவும் உன்ன டேக் பண்ணி, உனக்கு தெரிஞ்சுதான் செஞ்சிருப்பாங்கன்னு நெனச்சு கால் பண்ணேன், சாரிடா மச்சான். எதுவா இருந்தாலும் பாத்துக்கோ, பை"


படபடவென்று பேசி அழைப்பில் இருந்த விலகினான் வர்கீஸ்.


சமூக வலைத்தளங்கள் சரளமாக மக்கள் புழக்கத்துக்கு வந்த பிறகு, ஒரு வரைமுறை இல்லாமல், அடுத்தவர் மனதைப் புண்படுத்துகிறோம் என்கிற அடிப்படை பண்பு கூட இல்லாமல் சகட்டுமேனிக்கு அனைத்தையும் விமர்சித்துக் கிண்டல் செய்யும் மனோபாவம், பரவலாக நம் மக்களிடம் உண்டாகிவிட்டிருப்பது வேதனையான எதார்த்தம்.


ஸ்ரீதர், ரஞ்சனி இருவருக்குமே வெளிப்படையாகத் தெரியும் படியான குறை இருக்க, யாருடைய வாய்க்கும் அவலாகக் கூடாது என்கிற முன்னெச்சரிக்கையில், அவர்களது திருமணப் புகைப்படங்கள் மற்றும் காணொலி எதையுமே முகநூல் மற்றும் எந்த ஒரு சமூக வலைத்தளங்களிலும் பகிரக்கூடாது என முன்னமே பேசி முடிவு செய்து வைத்திருந்தனர்.


இது சுப்ரியாவுக்கு தெரியும் என்று அவன் நினைத்திருக்க, அவள் இப்படிச் செய்தது கிருஷ்ணாவுக்கு உச்சபட்சப் பதற்றத்தை ஏற்படுத்திவிட்டது.


அவனுக்கென்று ஒரு முகநூல் கணக்கு இருக்கிறது, ஆனால் வெறும் பெயருக்குத்தான். அவன் வேலை செய்யும் அமெரிக்க நிறுவனத்தின் கொள்கைப்படி அவன் சமூக வலைத்தளங்களில் அதிகம் புழங்கக்கூடாது. எனவே அதைப் பயன்படுத்தவே மாட்டான். இன்னும் சொல்லப்போனால் அவனது கைப்பேசியில் முகநூல் செயலியையே அவன் வைத்துக் கொள்ளவில்லை.


அவசர அவசரமாகத் தன் மடிக்கணினி திறந்து முகநூல் கணக்கை லாகின் செய்து போய் பார்க்க, முந்தைய தினம் ஸ்ரீதர் ரஞ்சனி திருமண வரவேற்பில் டிஜே இசைக்கு இருவரும் சேர்ந்து நடனமாடிய பொழுது எடுத்த காணொலியை டிக்டாக்கில் பதிவேற்றம் செய்திருந்தாள் சுப்ரியா.


நல்லவேளையாக அந்தக் காணொலியில் ஸ்ரீதர், ரஞ்சனி இருவரின் முகமுமே தெளிவாக தெரியவில்லை என்பது அவனுக்கு ஒரு சிறு ஆறுதல் அளித்தது. ஆனாலும் கூட சுப்ரியாவின் இந்தச் செயலை அவன் துளி அளவும் விரும்பவில்லை.


மது அருந்துவது புகை பிடிப்பது என்பதெல்லாம் கூட ஒருவருடைய தனிப்பட்ட விருப்பம் சார்ந்தது என்பதால், அவளுடைய அந்தப் பழக்கங்களைக் கூட அவன் பெரிது படுத்தவில்லை. குடும்பத்தில் எல்லோரிடமிருந்து மறைத்தாலும் கூட அதைத் தன்னிடம் அவள் வெளிப்படையாக நடந்து கொள்வதே அவனுக்குப் போதுமானதாக இருந்தது.


ஆனால் சமீபகாலமாக அவளுக்கு ஏற்பட்டிருக்கும் இந்த டிக்டாக் மோகம் அவனுக்குள் பெரும் சஞ்சலத்தை ஏற்படுத்தியிருந்தது.


அவளை நிர்பந்திக்காமல், இதமாகச் சொல்லிப் பார்த்துவிட்டான். ஆனால் அவள் அதைத் தீவிரமாக எடுத்துக்கொள்ளவே இல்லை. ‘சும்மா டைம்பாஸ், அவ்வளவுதான். நம்ம கல்யாணத்துக்குப் பிறகு இதுக்கெல்லாம் நேரம் கிடைக்காது, இதைப் பெரிசு படுத்தாத’ என்று சொல்லிவிட்டாள்.


ஆனால் தன் அனுமதி இல்லாமல் தான் இருக்கும் ஒரு காணொலியை அவள் இப்படிப் பகிர்ந்ததை, அவனால் இலகுவாகக் கடந்துபோக இயலவில்லை.


மனம் கடுகடுக்க, குளித்து முடித்து வெளியில் வரவும், சுப்ரியாவோ அவளுடைய அக்கா சசிகலாவோ அவனுடைய கண்களில் படவில்லை. அவனுடைய அம்மாதான் அவனை விடாப்பிடியாகச் சாப்பிட இழுத்துப் போனார்.


தெரிந்தே செய்திருக்க, சுப்ரியா தான் செய்ததை எண்ணி அச்சம் கொள்ளாமல் போனாலும், அவனை விழுந்து விழுந்து உபசரிக்கும் சசிக்கு விபரீதம் உரைத்திருக்கும், அதனாலேயே அவனுக்கு எதிரில் வரவில்லை என்பது கிருஷ்ணாவுக்கு நன்றாகவே விளங்கியது.


எதையும் வெளிப்படுத்திக் கொள்ளாமல் அமைதியாக வந்து சாப்பிட அமர்ந்தான்.


சில நிமிடங்களிலெல்லாம் அவனுக்கு எதிர் வரிசையில் வந்து அமர்ந்தாள் வர்ஷிணி. ஆனாலும் அவளைப் பார்த்த மாத்திரத்தில் உள்ளே உண்டான ஆத்திரத்தைக் கட்டுப்படுத்த இயலவில்லை.


‘இந்த பொண்ணுங்க ஏன் இப்படி விவஸ்தை இல்லாம நடந்துக்கறாங்க?’ என ஒட்டுமொத்தப் பெண்ணினத்தையும் பழித்தபடி நேர்கொண்டு அவளைப் பார்க்க, அவளது முகமே களையிழந்து போயிருந்தது.


புன்னகைக்குப் பஞ்சம் இருந்தாலும், எப்பொழுதுமே அவளது பாவனையில் மிதமிஞ்சிய துடுக்குத்தனமும் கண்களில் மின்னல் போன்ற துருதுருப்பும் அப்பட்டமாக வெளிப்படும். அவளை இப்படிப் பார்க்க அவனுக்கே ஒருமாதிரியாக இருந்தது.


ஆனாலும், ‘உன்னோட தெனாவெட்டுக்கு இது தேவதான்’ என்று எண்ணியபடி அவளுடைய முகத்தையே பார்த்திருந்தான். அவனது பார்வையின் தாக்கத்தில் நிமிர்ந்து அவனைப் பார்த்தவள், சங்கடத்துடன் இப்படி அப்படி நெளியத் தொடங்கினாள். ஒரு கட்டத்திற்குமேல் தாக்குப்பிடிக்க இயலாமல், இலையில் இருந்த உணவை அப்படியே வைத்துவிட்டு, எழுத்தே போய்விட்டாள்.


உண்மையில் குற்றவுணர்ச்சியாகிப்போனது கிருஷ்ணாவுக்கு. ஒருபக்கம், சுப்ரியா பதிவேற்றம் செய்திருந்த காணொலியை நீக்கச் சொல்லி அவளிடம் வேறு போராடவேண்டிய சங்கடம். மறுபக்கம் இவள் பதிவு செய்திருந்த வீடியோவை வேறு இவளது கைப்பேசியில் இருந்து டெலீட் செய்யச் சொல்லி இவளிடம் கெஞ்சிக்கொண்டு நிற்கவேண்டும் என்றால்? அவளாவது சொல்பேச்சு கேட்கும் இரகம். இவளைப் பற்றித்தான் இவனுக்குத் தெரியுமே! பிடிவாதம் பிடித்துக் கொண்டு சொந்த அக்காவின் நிச்சயதார்த்தத்துக்கே வராமல் ஏய்த்த ஆர்த்துப் பேர்வழியாயிற்றே! நினைக்கும்போதே ஆயாசமாகத்தான் இருந்தது.


வேறுவழி இல்லாமல் வர்ஷிணியை தேடி வெளியில் வந்தான். அய்யோ பாவம் போல முகத்தை வைத்துக்கொண்டு அங்கேதான் அமர்ந்திருந்தாள்.


அவளருகில் போய் அமர்ந்து, தன் கைப்பேசியில் இருந்த படத்தைக் காண்பித்து, அவளை மிரட்டிப் பார்க்க, அதற்கெல்லாம் மசியும் ஆளா இவள்? என்னதான் தன் நிலையை விளக்கி, உண்மையைப் புரியவைக்க முனைந்தாலும், கொஞ்சம் கூட அவள் அசரவே இல்லை என்பதே அவனுக்கு வியப்பாக இருந்தது.


இதற்கு நடுவே அவளுடைய அப்பா வேறு வந்துவிட, போனை உடைத்ததற்கு அவளை உண்டு இல்லை எனச் செய்துவிடுவார் எனத் தெரிந்தே, வேண்டுமென்றேதான் அவரிடம் அவளைச் சிக்கவைத்து, வேடிக்கை பார்த்தான்.


பலி ஆடு போல, அவள் அவருக்குப் பின்னே போவதைப் பார்த்து அவனுக்கு சிரிப்பே வந்துவிட்டது. ஆனாலும் சிரிக்காமல், அடக்கிக்கொண்டு நின்றான்.


அவள் சென்ற பிறகு, சசிகலாவே அவனைத் தேடிவந்தாள். “சுப்ரியா, ஏதோ ஒரு எக்சைட்மென்ட்ல அந்த வீடியோவ அப்லோட் பண்ணிட்டா, கிருஷ். நீ ஒண்ணும் தப்பா நினைக்காத. நானே சொல்லி அந்த வீடியோவ டெலீட் பண்ண சொல்லிட்டேன்” என அவன் கேட்பதற்கு முன்பாகவே விளக்கம் கொடுத்துவிட, “பரவால்ல அண்ணி, விடுங்க” என அதற்கு மேல் அந்தப் பிரச்சினையை வளர்க்காமல் அத்துடன் முடித்துக்கொண்டான்..


சசிகலா அங்கிருந்து அகன்றுவிட, கையில் பையுடன் அங்கிருந்து அமைதியாக வர்ஷிணி வெளியேறியதைப் பார்த்தபோது அவனது மனம் குறுகுறுத்தது என்னவோ உண்மை.


மருவிருந்து முடிந்து, உறவினர்கள் ஒவ்வொருவராக வெளியேறும் சமயம்தான், வர்ஷிணி படிக்கும் பள்ளியிலிருந்து வரதனுக்கு அழைப்பு வந்தது.


அப்பொழுது அவருக்கு அருகில்தான் நின்றிருந்தான் கிருஷ்ணா. அவள் மாநிலத்திலேயே முதலாவதாக வந்திருக்கும் செய்தியைக் கேட்டு, வரதன் அப்படியே ஸ்தம்பித்து நின்றுவிட்டார். மகிழ்ச்சியில் பேச்சே வரவில்லை அவருக்கு.


'என்னங்க? என்ன?’ என சித்ரா அவரை உலுக்கவும்தான் நிகழ்வுக்கு வந்தவர் அந்தச் செய்தியைச் சொல்ல, அதை அவனால் நம்பவே இயலவில்லை. உண்மையில் வியந்துதான் போனான்.


முந்தைய இரவில் இவளைப் பற்றி சுப்ரியா சொன்னது முற்றிலும் உண்மை என்பது புரிந்தது. தவறாகப் புரிந்துகொண்டு அவளிடம் அதிகப்படியாக அலட்சியம் காண்பித்துவிட்டோமோ என்று வருந்தினான்.


அமெரிக்கா திரும்புவதற்கு முன் அவளை நேரில் பார்த்து, தன் செயலுக்கு ஒரு ‘சாரி’ சொல்லிவிட்டு, அவளை ஊக்கப்படுத்தும் விதமாக ஏதாவது பரிசு கொடுத்து வாழ்த்தவேண்டும் என்று எண்ணிக்கொண்டான்.


அடுத்து வந்த தினங்களில் அமெரிக்க விசா நீட்டிப்பு அது இது என நேரம் கழிய, சுப்ரியா வேறு கூடவே ஒட்டிக்கொண்டு திரியவும், தான் நினைத்ததை அவனால் செயல்படுத்த முடியாமல் போனது.


அதனாலேயே, தன்னைப் பற்றிய ஒரு நல்ல நினைவை அவனால் அவளுக்குள் விதைக்க இயலாமலேயே போனது.


இதுதான் காலம் ஆடும் விபரீத விளையாட்டு போலும்!


மீண்டும் அவன் அவளை நேரில் சந்திக்கும்போது முழுதாக நான்கு ஆண்டுகள் கடந்திருந்தது. அதன் பின்னான காலம் அவனைத் தடுமாற வைத்துத் தடம்புரளவும் வைத்து வேடிக்கை பார்த்துச் சிரித்தது.


நினைவுகளின் தாக்கத்தில், உறக்கம் வராமல் படுத்திருந்தவனின் நெஞ்சின் மீது ஸ்ரீ உறங்கிக் கொண்டிருக்க, ஒரு பக்கம், மற்ற இரு பிள்ளைகளும் நெருக்கியடித்து அவனை ஓட்டிப் படுத்து நித்திரையில் ஆழ்ந்திருக்க, மற்றொரு புறம் அவனது கையை தலையணையாக்கி, அவனுடைய கழுத்து வளைவில் முகம் புதைத்தபடி உறங்கிக் கொண்டிருந்தாள் வர்ஷிணி.


அவளுடைய மூச்சுக்காற்று உஷ்ணமாக அவனைத் தீண்ட, அவனது இதழோரம் மெல்லிய புன்னகை அரும்பியது. அப்படியே தலையைத் திருப்பி அவளது உச்சியில் மென்மையாக இதழ் ஒற்றியவனின் மனமோ, ‘ஏய், அராத்து… இன்னும் எவ்வளவு நாளைக்கு உன்னால எங்கிட்ட இருந்து விலகி இருக்க முடியுதுன்னு நானும் பார்க்கறேன்!’ எனச் சவால் விட்டது.

2 comments

2 Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
Guest
5 days ago
Rated 4 out of 5 stars.

Speeda story venum.

Mathivathani story enna achu

Like

Guest
7 days ago
Rated 5 out of 5 stars.

Nice

Like
© KPN NOVELS COPY PROTECT
bottom of page