௧௧. மலைப்பகுதி மழை
(இது நில அமைப்பால் ஏற்படும் மழை எனப் பொருள்படும். ரிலிஃப் ரெய்ன் (Relief Rain) என்று ஆங்கிலத்தில் வழங்கப்படுகிறது. சில சமயங்களில் ஈரப்பதமும் வெப்பமும் கிடைமட்டமாக பூமியின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு பரிமாறப்படுகிறது. இப்பரிமாற்றம் காற்றோட்டத்தால் நடைபெறுகிறது. கிடைமட்டத்தில் காற்றோட்டம் (1) அழுத்தச் சரிவு விசை, (2) கொரியாலிஸ் விசை, (3) மைய விலக்கு விசை (4) உராய்வு விசை ஆகியவற்றால் ஏற்படுகிறது. இவ்விசைகளால் ஏற்படுகின்ற காற்றோட்டம், காற்றினை கடல், நிலம், காடுகள், மலை ஆகிய எல்லாப் பகுதிகளின் வழியாகவும் இட்டுச்செல்கின்றது. காற்றோட்டத்தின் குறுக்காக ஒரு மலைப்பகுதி இருந்தால் காற்று அந்த மலைச்சரிவின் மீது ஏறிச் செல்கிறது. இவ்வாறு ஏறுகின்ற காற்று ஈரப்பதம் நிறைந்த காற்றாக இருப்பின், அது குளிரடைந்து, மேகமாகி மழையாய்ப் பொழிகிறது. இவ்வகை மழையையே மலைப்பகுதி மழை என்கிறோம்.)
“வரூ, சித்துவ அவன் இவன்னு சொல்லாத” என்றபடி ஷிவா அவளை பின்னால் இருந்து கோபமாக முட்டித்தள்ள, அவளது எதிர்பாராத தாக்குதலில் தடுமாறி போய் சரிய இருந்தவளை ஒரே கையால் தாங்கிப் பிடித்தான் கிருஷ்ணா பக்கென்று சிரித்தபடி.
அவனது தீண்டலில் அவளது மனமும் சேர்ந்து தடுமாறிப் போனது. நாசுக்காக அவனிடம் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டவள், "அடிங்க குட்டி பிசாசே, உன்னோட சித்ரா பாட்டியோட ப்ராக்சியா இங்க வந்திருக்கியா நீ" என்ன சின்னவளிடம் சண்டைக்கு கிளம்பினாள் தன்னை இலகுவாக காண்பித்துக் கொள்வதற்காகவே.
"ஆமா, உன்ன அவ இவனு பேசினா, சித்து பாட்டி என்ன திட்டுவாங்க இல்ல, அப்படித்தான்" என்று பழிப்பு காட்டினாள் ஷிவா.
அதில் மற்ற இரு வாண்டுகளும் கூட வாயை மூடிக்கொண்டு சிரிக்க, "குழந்தையை பெத்துக்க சொன்னா எனக்கு மூணு மாமியாருங்கள பெத்து வச்சிருக்கா உங்க அம்மா" என்று அவள் வாய்விட்டு முணுமுணுக்க, அதற்கும் கலகலவென சிரித்தான் கிருஷ்ணா.
"ஐயோ போதுமே" என்று நொடித்தவள், “எல்லாரும் வந்து உக்காருங்க, மொதல்ல குடிக்க எதாவது எடுத்துட்டு வரேன், அப்பறம் ரெப்ரெஷ் பண்ணிக்கலாம்" என்று சொல்லிவிட்டு, ஆறிப்போய் டீப்பாயின் மீதிருந்த காஃபியை எடுத்துக்கொண்டு சமையலறை நோக்கிப் போனாள்.
மாஸ்கோவிலிருந்து அவன் வாங்கிவந்திருந்த கோகோ பவுடரில் பிள்ளைகள் மூவருக்கும் ஹாட் சாக்லேட்டும் அவனுக்கும் தனக்கும் காஃபியும் கலந்து எடுத்து வந்தாள்.
அவனுடைய கைப்பேசியில் வீடியோ காலில் யாருடனோ பேசிக்கொண்டிருந்தனர் பிள்ளைகள்.
ஸ்ரீயும் ஷிவாவும் கிருஷ்ணாவின் மடியில் அமர்ந்திருக்க, அவனது கழுத்தைக் கட்டிக்கொண்டு நின்றபடி பேசிக்கொண்டிருந்தாள் சக்தி.
ஒரு கவிதை போல, அழகான ஒரு ஓவியம் போல அந்தக் காட்சி அவளை இரசிக்க வைத்தது. அவர்களுடைய அம்மா அப்பாவைத் தவிர, இந்த அளவுக்கு பிள்ளைகள் அவளிடம் மட்டுமே நெருக்கமாக இருப்பார்கள் என்கிற பெருமிதம் அவளுக்கு எப்பொழுதுமே உண்டு. இப்பொழுது அது லேசாக ஆட்டம் காண, சற்றே பொறாமை உணர்வும் அவளுக்குள் தலைதூக்கியது.
கையில் எடுத்துவந்த டிரேவை டீப்பாயின் மீது வைத்துவிட்டு எடுத்துக்கொள்ளும்படி ஜாடை செய்தாள்.
"சரிம்மா பை, நான் அப்பறம் கால் பண்றேன்" என்று சொல்லிவிட்டு, "புஜ்ஜீஸ், பாட்டிக்கு பை சொல்லுங்க, ரெப்ரெஷ் ஆகிட்டு நைட்டு பேசலாம்" என்று சொல்ல, பிள்ளைகள் மூவரும் சமர்த்துக் குட்டிகளாக அவன் பேச்சு கேட்டு 'பை பாட்டி" என கோரஸாக சொல்லி அழைப்பிலிருந்து விலகினர்.
அவள் கலந்து வந்த ஹட் சாக்கலேட் பதமான சூட்டில் இருக்கவும், நிதானமாக எடுத்து அவர்கள் கையில் கொடுத்துவிட்டு தனக்கான காஃபியை எடுத்து சுவைத்தான் கிருஷ்ணா.
"ஆமா நெஜமாவே ரஞ்சுவும் அத்தானும் வரலியா, நீங்க தனியாதான் இவங்கள கூட்டிட்டு வந்தீங்களா?" எனக் கேட்டாள் நம்பமுடியாத பாவத்தில்.
"ஏன்... நான் கூட்டிட்டு வரமாட்டேனா? நான் இவங்க சித்தப்பன்..மா" என்றான் கிண்டல் இழையோட.
"இல்லல்ல, நான் அத சொல்லல! ஒரே ஆளா இவங்கள ஹேண்டில் பண்றது கஷ்டமான விஷயம் இல்ல! பசிச்சாலும் ஒரே நேரத்துலதான் பசிக்கும். ஒன் பாத்ரூம், டூ பாத்ரூம் போகணும்னாலும் ஒரே நேரத்துலதான் கூப்பிடுவாளுக! அதான் சொன்னேன்" என்றாள் சொந்த அனுபவத்தில்.
"அத கூட சமாளிக்க முடியலைன்னா அப்பறம் நான் எதுக்கு சித்தப்பன்னு. அதோட நம்ம பட்டு குட்டிங்க எவ்வளவு சமத்தா என்கூட வந்தாங்க தெரியுமா?" என்றபடி "அப்படித்தான புஜ்ஜீஸ்" எனக்கேட்டு கையைத் தூக்கி காண்பித்தான். பாய்ந்து வந்து மூவரும் ஒரே நேரத்தில் ஹை ஃபை கொடுக்க, மூவரையும் சேர்த்தணைத்து தன்னோடு புதைத்துக் கொண்டான்.
தானும் அதே போல அவனது அணைப்பில் அடங்கி அவனை செல்லம் கொஞ்ச முடியாதா என்கிற ஏக்கம் வர்ஷிணியின் நெஞ்சை வெடித்துப் பீறிட்டது.
அதே நொடி கிருஷ்ணாவின் பார்வையும் அவளைக் கவ்விக்கொள்ள, உதட்டுக்குள்ளேயே ‘ப்ளூ டூத்’ என சத்தம் வராமல் முணுமுணுத்தான்.
அதை கவனித்த சக்தி மட்டும் திரும்பி அவளைப் பார்த்து, "நீயும் வா வாரூ" என்றாள் எதார்த்தமாக.
சில நொடி நேரத்துக்குள் எல்லாமே நடந்துமுடிய, விதிர்விதிர்த்துப்போனாள் அமிர்தவர்ஷினி.
தன்னை சமாளித்துக்கொண்டு, "லூசு" என சிரித்து மழுப்பி, "அது, ரஞ்சு இப்படி இவளுங்கள கட்டிப்பிடிச்சு கொஞ்சினா, சும்மா வம்பிழுக்க நானும் போய் அவள கட்டிப்பேன், அதான் இப்படி விவரமில்லாம ஒளறுது" என விளக்கம் கொடுத்தாள்.
'குட்டி தெளிவாதான் இருக்கா, உனக்குதான் விவரம் பத்தல' என எண்ணியவன், தன் தடுமாற்றத்திலிருந்து விடுபட வெளியே போய் அவர்களது உடைகள் அடங்கிய பயணப் பெட்டியை எடுத்துவந்தான்.
"நசுங்கி கசங்காம, ப்ளைட்லதான் வந்தோம், அதனால குளிக்க வெக்கல்லாம் வேண்டாம், சும்மா முகம் கழுவி விட்டு டிரஸ் மட்டும் மாத்தி விடு. நான் போய் ரெப்ரெஷ் ஆகிட்டு வரேன். டின்னர், அன்னைக்கு மாதிரி சேர்ந்தே சமைக்கலாம்" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்ப எத்தனித்தான்.
'டேய், ரொம்ப ஓவராத்தான் போரடா நீ' என மனதில் நினைத்தாலும் அவனது அருகாமை அவளுக்கு போதையை கொடுக்க, அமைதியாக அடங்கிப்போனாள்.
ஆனால், அவனை நோக்கி ஓடி வந்த ஸ்ரீயோ, "நீ எங்க போற சித்து? எங்க கூடவே இரு" என்று அவனது காலை கட்டிக்கொண்டாள்.
"இங்க என்னோட பிரண்டு அங்கிள் இருக்காங்கன்னு சொல்லி இருக்கேன் இல்ல, அவங்க வீட்டுக்கு"
"அங்க ஏன் போற?"
"நான் அவங்க வீட்ல தான் ஸ்டே பண்ணி இருக்கேன். என்னோட ட்ரெஸ் எல்லாம் அங்கதான் இருக்கு"
"நம்ம வரூ இங்க இருக்கும் போது நீ ஏன் வேற யாரோ வீட்ல ஸ்டே பண்ணி இருக்க?"
‘இதெல்லாம் நல்ல வெவரமா கேளு’ என்று எண்ணியபடி, "நான் யூஎஸ்ல இருந்து வரும் போது நீ எங்க இருந்த?" என்று கேள்வி கேட்டான்.
"சித்து பாட்டி வீட்ல"
"தனம் பாட்டி வீடும் சென்னைலதான இருக்கு, நீ ஏன் சித்து பாட்டி வீட்ல ஸ்டே பண்ணி இருந்த" என்ற அவனது கேள்விக்கு சற்று யோசித்து தெளிவாக பதில் சொன்னாள் குழந்தை.
"ம்ம்… எப்பவும் தனம் பாட்டி வீட்லதான இருக்கோம்… சித்து பாட்டி வீட்டுக்கு போகலன்னா அவங்க பீல் பண்ணுவாங்க இல்ல, அதனாலதான்"
"ஆங்… அதே மாதிரிதான், நான் என் ஃப்ரெண்ட் வீட்டுக்கும் போகணும் இல்ல"
"ம்… ஓஓஓகே" என அரை மனதுடன் அவனைப் போக அனுமதித்தாலும் அவனையே பார்த்து நின்ற ஸ்ரீயின் முகத்தில் ஆயிரம் யோசனை ஓடியது அவனுக்கு நன்றாகவே புரிந்தது.
'ஐயோடா இந்த குட்டி பிசாசு மனசுக்குள்ள என்ன யோசிக்குதுன்னே தெரியலையே' என உள்ளுக்குள்ளேயே சற்று அதிர்ந்தபடியேதான் அங்கிருந்து கிளம்பிப் போனான்.
ஒரு வழியாக அவள் கொடுத்த ஹாட் சாக்லேட்டை மூன்றுபேரும் பருகி முடிக்க, குவளைகளை எடுத்துச் சென்று கழுவி வைத்தாள்.
பின்பு வரவேற்பறையில் வந்து பிள்ளைகளுடன் அவள் அமரவும், ரஞ்சனியிடமிருந்து காணொலி அழைப்பு வந்தது.
"ஓய் உன் மச்சினங்கூட புள்ளைங்கள அனுப்பி வச்சிட்டு, ஜாலியா புருஷனும் பொண்டாட்டியுமா ஹனிமூன் கொண்டாட்றீங்களா" என எடுத்த எடுப்பிலேயே அக்காவை நகையாடினாள்.
"பிசாசே, புள்ளைங்கள வச்சுட்டு பேசுற பேச்சாடீ பேசற" என பதிலுக்கு பொங்கினாள் ரஞ்சனி.
"அதுங்க உலகத்தையே மறந்து டிவியில பெப்பா பிக் பாத்துட்டு உட்கார்ந்திருக்குதுங்க, நீ கவலையே படாத" என நொடித்தாள் வர்ஷிணி.
ஒரு ஆசுவாச பெருமூச்சு எழுந்தது ரஞ்சனியிடம்.
"கிருஷ்ணா கேரளாலதான் தங்கி இருக்காருன்னு இவளுங்களுக்கு ஏற்கனவே தெரியும். ஏதோ டாக்குமெண்ட்ஸ் எடுக்கனும்னு சொல்லிட்டு இங்க வந்திருந்தாரு. மறுபடியும் கிளம்பும்போது, நாங்களும் வறோம்ன்னு ஒரே அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுச்சுங்க. அவரும் 'அனுப்புங்க அண்ணி, கூட்டிட்டு போறேன்'னு சொல்லிட்டாரு. முடியாதுன்னு மறுக்க முடியல" என நீண்ட விளக்கம் கொடுத்தாள்.
"பரவால்ல..க்கா உன் மச்சினன், பிள்ளைங்கள சூப்பரா ஹேண்டில் பண்றாரு" என புகழ்ந்தாள் வர்ஷிணி.
"தகப்பன்கிற பொறுப்புல, எல்லாமே தானா வருது" என ரஞ்சனி அதிகம் சிலாகிக்கவும், "என்ன?" என விந்தையாக அவளை நோக்கினாள்.
"அதில்லடி, சித்தப்பான்ற பொறுப்பு இருக்குல்ல அதைத்தான் சொன்னேன்"
"எப்படியோ ஒன்னு, நீ ஜாலியா என்ஜாய் பண்ண போற"
"என்ன ரொம்பதான் ஓவரா சீன் போடற, நான் வேணா அடுத்த பிளைட்லயே கெளம்பி அங்க வந்துடட்டுமா"
"தாராளமா வாயேன், நான் என்ன வேண்டாம் சொல்ல போறேன்" என வர்ஷிணி பட்டென பதில் சொல்லவும் அப்படியே ஸ்தம்பித்து போனாள் ரஞ்சனி.
உடனே கலகலவென சிரித்தவள், "அது நடக்கிற கதை இல்லன்னு உனக்கே தெரியுது இல்ல, அப்புறம் ஏன் ஓவர் சீன் போடுற. குட்டீஸ ஒரு நாலஞ்சு நாள் என் கூட வச்சிருந்துட்டு அப்பறமா நானே கூட்டிட்டு வரேன், எப்படியமே எனக்கு கொஞ்சம் லீவ் இருக்கு, அத அவைல் பண்ணிட்டு, புஜ்ஜீஸ கூட்டிட்டு ஊர சுத்த போறேன்" என அழுத்தம் திருத்தமாகச் சொன்னாள்.
வாயை உஃப் என்று ஊதி ஒரு பெருமூச்சு விட்டாள் ரஞ்சனி.
"நிஜமாவே உன்னால மேனேஜ் பண்ண முடியமாடி?"
"அதான் உன்னோட மச்சினன் சார் வேற இருக்காரே, பார்த்துக்கலாம் விடு" என் அக்காவுக்கு பதில் கூறி முடித்தவள், குட்டிகளை அழைத்து அவளுடன் பேச வைத்தாள்.
இப்படியே சிறிது நேரம் கழிய வர்ஷிணி அழைப்பை துண்டிக்கவும் கிருஷ்ணா அங்கே வந்து சேரவும் சரியாக இருந்தது.
குளித்து இலகுவான ஒரு ட்ராக் டீ-ஷர்ட் அணிந்து, உள்ளே நுழைந்தவனின் மீதிருந்து கிளம்பிய மணம், அழைப்புமணியின் ஓசை கேட்டுப் போய் கதவைத் திறந்தவளை அப்படியே சுண்டி இழுத்தது.
அவனைப் பார்த்துவிட்டு ஓடி வந்து அவன் மீது தாவிய சக்தி, அவனுடைய கழுத்தில் முகம் புதைத்து, "வாசனையா இருக்க சித்து நீ" என்று மூச்சை நன்றாக இழுத்து வாசம் பிடித்தாள்.
"அது ஒண்ணும் இல்லடா குட்டி, குளிக்கிற தண்ணியில பியூ டிராப்ஸ் யுடிகோலின் போடுவேன், அதுதான்" என்றான். ‘ஓ’ என தலை அசைத்தது குட்டி.
"ஏதோ ரொம்ப பழக்கப்பட்ட வாசனை மாதிரி இருக்கேனு யோசிச்சேன் , ஆனா என்னனு ஞாபகத்துக்கு வரல, இப்ப புரியுது" என்றாள் வர்ஷிணி சகஜ பாவத்தில்.
ஆழமாக அவளை ஒரு பார்வை பார்த்தான் கிருஷ்ணா. கொஞ்சம் கொஞ்சமாக அவனது பொறுமை முற்றிலும் காலாவதியாகி போய்விட்டிருந்தது. மெல்லிய பனித்திரை போல பிள்ளைகள் மட்டும் இருவருக்கும் இடையில் இல்லை என்றால், கட்டுப்பாடிழந்து அவனது எல்லைக் கோட்டை அவனே தாண்டி இருப்பான்.
தன் உணர்வுகளை கட்டுப்படுத்தி, “நைட்டுக்கு என்ன டின்னர் செய்யலாம் வரூ” என்று கேட்டான்.
“நம்ம புஜ்ஜீஸ்க்கு பிடிச்ச பீஸ் புலாவ், பன்னீர் பட்டர் மசாலா” என பதிலுரைத்தாள்.
“டன், குட்டீஸ் நீங்க டிவி பார்த்துட்டு இருங்க, பாஸ்ட்டா டின்னர் ரெடி பண்ணிட்றோம்” என்று பிள்ளைகளிடம் சொல்லிவிட்டு அவன் சமையலறை நோக்கிப் போனான்.
“வேணாம், நீங்க புஜ்ஜீஸ் கூட இருங்க, நான் செய்யறேன்” என அவனை தடுத்தாள் வர்ஷிணி.
“இல்ல வரூ, அது ரொம்ப தப்பான விஷயம். வீட்டுல எல்லாரும் டிவி பார்த்துட்டு உட்கார்ந்து இருக்கும்போது, ஒருத்தர் மட்டும் கிச்சன கட்டிட்டு அழறது இன்ஹியூமனிட்டி. இதே, ஷேர் பண்ணி செஞ்சோம்னா, வேலை சட்டுன்னு முடிஞ்சிரும். எல்லாருமே சேர்ந்து டைம் ஸ்பென்ட் பண்ணலாம். அத பெரிய விலை கொடுத்து புரிஞ்சிட்டு இருக்கேன்” என்றான் கிருஷ்ணா.
இவனுக்கும் அந்த சுப்ரியாவுக்கும் இடையில் எதுவோ பெரியதாக நடந்திருகிறது என்று எண்ணிக்கொண்டாள்.
இருவருமாக சேர்ந்து உணவு தயாரிப்பில் இறங்கவும், வேலை துரிதமாக முடிந்தது.
தொலைகாட்சியை அணைத்துவிட்டு, பிள்ளைகளுடன் சிரித்துப் பேசி விளையாடியபடி சாப்பிட்டு முடித்தனர்.
அவள் சமையல் மேடையை சுத்தம் செய்துவிட்டு நகருவதற்குள் அவன் பாத்திரம் துலக்கி முடித்திருந்தான்.
மற்ற சில்லறை வேலைகளை அவள் முடிக்கும்வரை பிள்ளைகளை கவனித்துக்கொண்டவன், சமையலறை விளக்கை அணைத்துவிட்டு அவள் வரவும், “சரி புஜ்ஜீஸ், சித்துக்கு குட் நைட் சொல்லுங்க. நான் போய்ட்டு நாளைக்கு காலைல வரேன்” என்று சொல்லி வாய் மூடவில்லை, “நோ… எங்க கூடவே இங்கயே தூங்கு சித்து” என உதடு பிதுக்கினாள் ஸ்ரீ.
“ஆமாம், எங்க கூடவே இரு சித்து” என அவளுக்கு பின்பாட்டுப் பாடினார்கள் மற்ற இரண்டு குட்டிப் பிசாசுகளும்.
மாலை அவன் கிளம்பும்பொழுது ஸ்ரீ அவனைப் யோசனையுடன் பார்த்த பார்வையின் அர்த்தம் புரிய, ஸ்தம்பித்துப் போய் நின்றான் கிருஷ்ணா.
சமாதானமாக எது பேசினாலும் இவர்களிடம் எடுபடாது, கச்சேரி நிச்சயம் என்பதை உணர்ந்த வர்ஷிணியோ, பீதியுடன் அம் முப்பெரும் தேவிகளை ஏறிட்டாள்.
வணக்கம் அன்புத் தோழமைகளே!
தாமதத்திற்கு மன்னிக்கவும்.
என்னோட குட்டிப் பிசாசுக்கு லீவ் விட்டுட்டாங்க. அதில்லாம என் தங்கை பெத்த குட்டி பிசாசும் லீவுக்கு வந்திருக்கு. ஸோ, என் நேரம் என் கைல இல்ல.
அப்படி இப்படி இந்த எபி எழுதி முடிச்சேன்.
அடுத்த பதிவை சீக்கிரம் கொடுக்க எனக்கும் ஆசைதான். திங்களன்று பார்க்கலாம்.
இதுக்கு மேல வேற என்ன சொல்லப் போறேன், உங்க கருத்துகளை கமென்ட் பண்ணுங்க மக்கா.
Happy Reading.
ரொம்ப லேட்டானா இந்த ரீடர் பிசாசையும் நீங்கள் சமாளிக்க வேண்டும்