top of page

Aalangatti Mazhai - 12

Updated: May 25

௧௨- முகப்பு மழை (Full)பகுதி -1


(இவ்வகை மழை பொதுவாக வட அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகள் ஆகிய பகுதிகளில் பொழியும். இரண்டு வெவ்வேறு பண்புடைய காற்றுத் தொகுதிகள் ஒன்றோடொன்று இணைவதால் இவ்வகை மழை ஏற்படுகிறது.)


"இல்லடா புஜ்ஜீஸ், நான் செல்வா அங்கிள் வீட்டுலதான தங்கி இருக்கேன். நைட்டு மட்டும் அங்க தூங்கிட்டு காலைல எழுந்து பிரஷ் பண்ணிட்டு, உடனே இங்க வந்துட்றேன், சரியா" எனக் குட்டிகளைச் சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கினான் கிருஷ்ணா.


விடாமல் அவர்களும் பிடிவாதம் பிடிக்க, இவனும் தாஜா செய்ய, எதுவுமே வேலைக்கே ஆகவில்லை.


"ப்ளீஸ்டா குட்டீஸ், செல்வா அங்கிள் கோவிச்சுப்பாங்க, சமத்தா சித்துக்கு பை சொல்லுங்க" என்றான் பரிதாபமாக முகத்தை வைத்துக் கொண்டு.


அவனைப் பார்க்கவே பாவமாக இருந்ததோ என்னவோ கன்னத்தைத் தட்டி எதையோ யோசித்த சக்தியின் முகத்தில் இதற்கான தீர்வை கண்டுவிட்ட ஒரு பாவம் பளிச்சிட்டது.


"ஆங்… அப்ப ஒரு ஐடியா, நாங்களும் உன் கூடவே அங்கயே ஸ்டே பண்றோம். நம்ம வரூவையும் கூட்டிட்டு அங்க போயிடலாம்" என்றதோடு நிறுத்திக் கொள்ளாமல், "நீயும் வா வரூ, நாமளும் சித்து கூட அங்கேயே போயிடலாம்" என ஒரு பெரிய குண்டைத் தூக்கிப் போட்டாள்.


அவள் பேசியதைக் கேட்டு அவன் முகம் போன போக்கைப் பார்த்துவிட்டு பக் எனச் சிரிப்பு வந்துவிட்டது வர்ஷிணிக்கு.


ஒரு பிள்ளையை வைத்துக் கொண்டே சமாளிக்க முடியாது, இதில் ஒன்றுக்கு மூன்று! அதுவும் இந்த பொல்லாத குட்டிகளைச் சமாளிப்பது அவ்வளவு சுலபம் இல்லை என்று அவளுக்கு நன்றாகவே தெரியும், பாவம் அவனுக்குதான் இன்னும் புரியவில்லை போலும்! இப்பொழுதுதானே அவர்களுடன் நெருங்கிப் பழகத் தொடங்கி இருக்கிறான்!


நீட்டி முழக்கி, "பரவாயில்ல சித்தூ, நீங்க இங்கேயே ஸ்டே பண்ணுங்க, நான் உங்களுக்கு ரூம் அரேஞ்ச் பண்றேன்" என்றாள் வர்ஷிணி கிண்டலாக. அவள் சொன்ன விதத்திலேயே அவளுடைய திட்டம் புரியச் சரி என்று ஒப்புக்கொண்டான்.


அவளுடைய வேலைத் தகுதிக்கு ஏற்ப சற்று பெரிய குவாட்ரஸ் வீடு தான் அது. விசாலமான வரவேற்புரையுடன் கூடிய இரண்டு படுக்கை அறைகள், தாராளமாகப் புழங்குவதற்கேற்ற சமையலறை என வாட்டமாக அமைந்திருந்தது.


அவளுடைய அறையில் ஒற்றைக் கட்டில் மட்டும் போடப்பட்டிருக்க, அவளுடைய துணிகளை வைக்கும் அலமாரிகளும் அங்கேயே இருந்தன.


மற்றொரு அறை சற்று பெரியது. ஆனால் கட்டில்கள் எதுவும் போடப்படாமல் காலியாக இருந்தது.


ஏற்கனவே சுத்தமாகத்தான் இருந்தது, ஆனாலும் ஒரு முறை கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்துவிட்டு, அலமாரியைத் திறந்து, தடிமனான பெரிய ரஜாயை எடுத்து விரித்தாள்.


அவனும் உதவிக்கு வர, பிள்ளைகளும் அதை ஆளுக்கு ஒரு பக்கமாகப் பிடித்து இழுத்தனர். இப்படி இழுத்தால் அப்படிப் போக அப்படி இழுத்தால் இப்படி வர, இந்த விளையாட்டுமே ஒருவிதசுவாரசியத்தைக் கொடுக்க மூன்று பிள்ளைகளும் கலகலவென கிளுக்கிச் சிரித்தனர்.


"இவங்க குடும்பம் தான் கொஞ்சம் பெருசாச்சே! அந்த அளவுக்கு கிங் சைஸ் கட்டில், பெட்டு எல்லாம் வாங்கி போட என்னோட பட்ஜெட்டுக்கு செட்டாகாது. ஏதோ இந்த ஏழை சயின்டிஸ்ட்டால முடிஞ்சது இந்தக் குவில்ட்டு பில்லோஸ் மட்டும்தான்" என்றபடி அதைச் சரி செய்தாள்.


அவள் பேசியதைக் கேட்டு, "ஆமாம் ஆமாம், சிக்ஸ் டிஜிட்ஸ்ல சம்பளம் வாங்கற நவீன ஏழை" என்றபடி வாய்க்குள்ளேயே சிரித்துக் கொண்டான்.


"இல்லையா பின்ன, அத்தான் ஊர்லயே பெரிய ஆடிட்டர், டேக்ஸ் மட்டுமே ஆறு டிஜிட் ஏழு டிஜிட்டல் கட்ற ஆளு, போறாத குறைக்கு ஒரு என் ஆர் ஐ தம்பி வேற, உங்கள கம்பேர் பண்ணும் போது நான் ஏழதான?" எனக் கிண்டலாக பதில் கொடுத்தாள் சிரித்தபடி.


“சீச்சீ, என்ன இப்படி சொல்லிட்ட, என் கிட்ட இருக்கறது எல்லாமே உன்னோடதுதான’ என்றான் தீவிரமாக.


‘இவன் என்ன உளறிட்டு இருக்கான்!’ என்கிற பாவத்தை அவள் முகத்தில் காண்பிக்க, சற்று சுதாரித்தவன், “நம்ம எல்லாரும் ஒரே பேமலிதான அதைத்தான் சொன்னேன்” எனச் சமாளித்தான்.


அவனது வார்த்தைகளில் மனதிற்குள் ஏதோ மலர்ந்து மணம் பரப்ப, முகம் சூடாகவும், அவன் சொன்னதைத் தீவிரமாக எடுக்காத தோரணையில் பிள்ளைகளைத் திரும்பிப் பார்த்தாள். பிள்ளைகள் மூன்றும் ஒன்றுடன் ஒன்று சிரித்து விளையாடியபடி அவர்களது உலகத்தில் இலயித்திருந்தனர்.


அவனும் அவர்களைப் பார்த்து மிரண்டுபோய், “ஹேய், இது என்ன இவங்க இவ்வளவு எனர்ஜியோட விளையாடிட்டு இருக்காங்க. இவங்க எப்ப தூங்கி, நான் எப்ப இங்க இருந்து போக” என அலுத்துக் கொண்டான்.


ஆனால் அவனது மனமோ, ‘பரவாயில்ல, இங்கயே இருந்து தொலைஞ்சிட்டு போயேன்டா’ என அவள் சொல்லிவிடமாட்டாளா என ஏங்கி அநியாயத்துக்கும் படபடத்தது.


ஆனால் அவளோ, “இல்ல, லைட் எல்லாத்தையும் ஆஃப் பண்ணிட்டு, போட்டு அமுக்கி படுக்க வெச்சு ஒரு கதை சொன்னா, கேட்டுட்டே தூங்கிடுவாளுங்க, அப்பறம் நீங்க கிளபுங்க. காலைல எப்படியும் இவங்க எழுந்துக்க ஏழு மணியாவது ஆகும். அதுக்குள்ள நீங்க வந்தா போதும்” என அவனை விரட்டி அடிப்பதிலேயே குறியாய் இருந்தாள்.


‘அடி போடி இரக்கமில்லாதவளே’ என அவளை மனதிற்குள்ளேயே திட்டி தீர்த்தான்.


குட்டிகளுக்கு என்றே, கார்டூன் படங்கள் போட்ட உரைகளுடன், பிரத்தியேகமாக அவள் வாங்கிவைத்திருந்த தலையணைகளை எடுத்து வரிசையாகப் போட்டவள், “புஜ்ஜீஸ், ஆட்டம் போட்டது போதும். வந்து படுங்க” என்றாள் கட்டளை தொனிக்க.


அது பிள்ளைகளிடம் நன்றாகவே வேலை செய்ய, மூன்று பேரும் வரிசையாக வந்து படுக்கையில் விழுந்தனர்.


முதலில் ஷிவா, அடுத்து சக்தி, சுவரோரமாக ஸ்ரீ எனப் படுத்திருக்க, இரவு விளக்கை ஒளிரவிட்டு குழல்விளக்கை அணைத்து, ஸ்ரீக்கு அருகில் வந்து அமர்ந்தாள் வர்ஷிணி.


மெல்லிய வெளிச்சத்தில் நிழல் உருவமாகக் கிருஷ்ணா அங்கிருந்து செல்வதைக் கவனித்துவிட்டு, “சித்து, என்ன ஏமாத்திட்டு போகலாம்னு பிளான் பண்றியா” என குரலை உயர்த்தியது சக்தி. “இந்த பெரிய பிசாசு பேசற அதே டோன்ல பேசுது பாரு இந்த குட்டிப் பிசாசு” என அவன் மனதிற்குள்ளேயே இருவரையும் செல்லம் கொஞ்ச, மற்ற இரண்டு குட்டிப் பிசாசுகளும் கூட, ஸ்பிரிங் பொம்மைகள் போலப் படக்கென எழுந்து அமர்ந்தன.


“ஏய் பேசாம படுங்கடி” என அவர்களை அமுக்கி படுக்க வைத்துவிட்டு, “ஏன் சார், உங்களால கொஞ்ச நேரம் பொறுமையா இருக்க முடியாதா” என அவனையும் அதட்டினாள்.


“எல்லாம் என் நேரம்” எனத் தலையில் அடித்தபடி ஷிவாவுக்கு அருகில் வந்து அமர்ந்தான்.


சிவாவின் மீது படர்ந்து உருண்டு ஒரே தாவலில் அவன் மடியில் வந்து படுத்தபடி, “கத சொல்லு வரூ” என அதிகாரம் செலுத்தினாள் சக்தி. உண்மையில் நெகிழ்த்துத்தான் போனான் கிருஷ்ணா.


“அடிங்க குட்டி பிசாசே, மிரட்டல பாரு” என எகிறினாலும், “ஒரு ஊர்ல ஒரு ராணி இருந்தாளாம்” எனக் கதையைத் தொடங்கினாள் வர்ஷிணி.


“எல்லாரும் ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தானாம்ன்னுதான கத சொல்லுவாங்க, நீ என்ன ராணிய இழுத்துட்டு வர, ஒரு வேள ஃபீமேல் சென்ட்ரிக் சப்ஜக்ட்டா இருக்குமோ” எனப் பகடி பேசினான் கிருஷ்ணா.


“என்ன, ஒரு கவுண்டமணி அங்கிள் படத்துல ஒரு நாய் அவர பிடிச்சி வெச்சிருக்குமே, அந்த மாதிரி விடிய விடிய இப்படியே இவளுங்க கூட உட்கார்ந்துட்டு இருக்கறதா ஐடியாவா” என்றாள் கடுப்புடன்.


உதடுகளுக்கு ஜிப் போடுவது போல ஜாடை செய்துவிட்டு வாயை அழுந்த மூடிக்கொண்டான்.


அதைப் பார்த்து கலீர் என சிரித்தபடி அவள் கதையைத் தொடர, இரவு விளக்கின் மஞ்சள் ஒளியில் பொன்னென ஜொலித்தவளை கண்களால் பருகியபடி மெய் மறந்து அமர்ந்திருந்தான் கிருஷ்ணா. கதை சொல்லிக்கொண்டே போனவளின் குரல் தந்த போதையில் கிறங்கிச் சொருகிய அவனது விழிகள் சில நிமிடங்களில் தானாக மூடிக்கொண்டன.


எவ்வளவு நேரம் உறங்கினானோ, நெஞ்சை அழுத்திய பாரம் உணர்ந்து கிருஷ்ணாவின் உறக்கம் கலைந்தது. அந்த அறை முழுவதும் படர்ந்திருந்த இரவு விளக்கின் ஒளியில் கண்களை விரித்துப் பார்க்க, அவனது பரந்த மார்பை மெத்தையாக்கி அதில் துயில் கொண்டிருந்தது அவர்களது செல்லச் சிட்டுகளில் ஒன்று. மற்ற இரண்டும் அவன் இருபக்கமும் படுத்து, தன் பிஞ்சுக் கால்களால் அவனை முற்றுகையிட்டிருந்தன.


அனைவரையும் சேர்த்து ஒரு பெரிய குவில்ட் போர்த்தியிருக்க, வர்ஷிணி அங்கே இருப்பதற்கான அடையாளமே இல்லை.


அது ஒருவித ஏமாற்றத்தைக் கொடுத்தாலும், தன் நெஞ்சின் மீது துயில் கொண்டிருக்கும் மான் குட்டி யார் என அறிந்துகொள்ளும் ஆர்வத்துடன் தலையைத் தூக்கி, கூர்ந்து அதன் முகத்தை அவன் ஏறிட, மூக்கிலிருந்து உதடு வரை கோடாகத் தெரிந்த தழும்பு அது சக்தி என அடையாளப் படுத்தியது. அதைப் பார்த்ததும், மனம் முழுவதும் ஏறிப்போன கனம் தாளாமல் அவனது கண்களின் ஓரம் ஈரம் கசிந்தது.


நெஞ்சு முட்டும் பாசத்துடன் ஆழ்ந்த உறக்கத்திலிருக்கும் அந்தப் பிள்ளையின் உச்சியில் அழுந்த முத்தமிட்டான் கிருஷ்ணா, ‘சாரிடா என் தங்கமே,, உன்னோட இந்த நிலைமைக்கு நான்தான் கரணம்” என மனதார மன்னிப்பை யாசித்தபடி.


பகுதி -2 (New)


உறங்கிக் கொண்டிருந்த வரை தெரியவில்லை ஆனால் உறக்கம் தெளிந்தபின் இப்படி ஒரே நிலையில் படுத்திருப்பது கொஞ்சம் அவஸ்தையைக் கொடுத்தது கிருஷ்ணாவுக்கு.


கையால் துழாவி கைப்பேசியை எடுத்துப் பார்க்க நேரம் அதிகாலை நான்கு மணியைக் கடந்திருந்தது. அலுங்காமல் நலுங்காமல் மெதுவாகத் திரும்பி சக்தியைப் படுக்கையில் கிடத்த, உறக்கத்திலேயே சிணுங்கினாள் குழந்தை. 'ச்சுச்சு ச்சுச்சு' என உச்சுக்கொட்டியபடி மென்மையாகத் தட்டிக்கொடுக்க, மறுபடியும் அப்படியே உறங்கிப் போனது.


சந்தடி செய்யாமல் மெதுவாக எழுந்து மற்ற இருவரையும் அவளுடன் அணைவாக நகர்த்தி விட்டு போர்வையைப் போர்த்தினாள்.


அந்த அறையை ஒட்டி இருந்த குளியலறைக்குள் நுழைந்து காலைக்கடன்களை முடித்துக் கொண்டு பல் துலக்கி வெளியில் வந்தான். பிள்ளைகளை ஒரு பார்வை பார்க்க, சுகமாக உறக்கத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தனர் மூவரும்.


சந்தடி செய்யாமல் கதவைத் திறந்து கொண்டு வரவேற்பறைக்கு வந்தான். வர்ஷிணியின் அறைக்கதவு மூடி கிடந்தது.


அசதியில் தன்னையும் மீறி அவன் உறங்கிப் போய் விடவே பாதியில் எழுப்பி அவனை வெளியில் துரத்தி விட வேண்டும் எனப் பாவம் பார்த்து தன் அறைக்குள் வந்து புகுந்து கொண்டிருப்பாள் என்று எண்ணிக் கொண்டான்.


மூளை, சூடான காஃபி கேட்டுப் பரபரத்தது. அவள் எழுந்து வந்து சமையலறையைத் திறக்கும் வரை காத்திருக்க அவசியம் இல்லை என்று தோன்றவே நேராகப் போய் ஃப்ரிட்ஜை திறந்து பார்க்கப் பால் பாக்கெட் அதில் தயாராக இருந்தது.


அதை எடுத்துக்கொண்டு சமையல் அறைக்குள் நுழைந்தான். அங்கே எது எது எங்கெங்கு இருக்கிறது என்பதை ஓரளவுக்கு அறிந்து வைத்திருக்கவே ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி இண்டக்ஷன் அடுப்பில் வைத்து ஆன் செய்தான்.


கையுடன் காஃபி மேக்கரில் பொடியைப் போட்டு தண்ணீர் ஊற்றி டிகாக்ஷனுக்கு தயார்செய்துவிட்டுத் திரும்ப, கதவில் சாய்ந்தவாறு அமைதியாகக் கைகட்டி நின்றபடி அவனைப் பார்த்திருந்தாள் வர்ஷிணி.


'ஆஹ்' என உடல் அதிர்வது போலப் பாவலா செய்தவன், "அப்படியே திக்குனு ஆயிடுச்சு தெரியுமா? சந்தடி இல்லாம இப்படியா வந்து நிப்ப, சரியான கள்ளப் பூனை" என்றான் கடிவது போல.


"நீங்க வந்து, பெருச்சாளி மாதிரி கிச்சனை குடைஞ்சிட்டு என்ன பூனன்னு சொல்லுவீங்களா, இது உங்களுக்கே அநியாயமா தெரியல" என அவளும் பதிலுக்குப் பதில் பேசினாள்.


சரிக்குச் சரியாக அவள் பேசும் பேச்சில் அன்றைய அவனது விடியல் அழகாகிப் போக, ஆசையுடன் அவள் முகத்தையே பார்த்திருந்தான்.


அதற்குள் பால் பொங்கி வருவதைப் பார்த்து பதறிப்போய் அவள் அடுப்பை அணைக்க, அதே நேரம் அவனது விரலும் அவளது விரலின் மேல் பதிந்து பொத்தானை அழுத்தியது.


படக்கென அவள் கையை இழுத்துக்கொள்ள, “உஃப், நல்ல வேள, சரியான டைமிங்ல அணைசிட்டோம்ல” என்றான் தணிந்து உள்ளே இறங்கிய பாலைப் பார்த்தபடியே.


அவள் அவனை முறைக்கவும், “அடுப்ப ஆப் பண்ணதத்தான் சொன்னேன், ஓவர் திங்கிங் பண்ணாம கொஞ்சம் நகரு” என்று அவன் மேடையை நெருங்க, வேறு வழி இல்லாமல் நகர்ந்து நின்றாள்.


இரண்டு கோப்பைகளை எடுத்துவைத்து சூடான பாலையும் டிகாக்ஷனையும் ஊற்ற, அவள் சர்க்கரை போட்டுவிட்டு ஸ்பூனால் கலக்கினாள்.


ஆளுக்கு ஒரு கோப்பையை எடுத்துக்கொண்டு வரவேற்பறை திவானில் வந்து அமர்ந்தனர்.


காஃபியைச் சுவைத்தபடி, அவள் தனது கைப்பேசியை எடுத்து அதன் திரையில் பார்வையைப் பதிக்க, தொண்டையைச் செருமினான். அதில் அவளது கவனம் அவன் பக்கம் திரும்ப, “பியூச்சர் பிளேன் என்ன வெச்சிருக்க?” என இயல்பாகப் பேச்சுக்கொடுத்தான் அவளது விழிகளில் ஊடுருவி.


இதை இவன் கேட்டதும் நல்லதாகிப் போனது, இது ஒரு விதத்தில் நன்மையில் போய் முடியலாம் என்று தோன்ற மனதில் இருப்பதை அப்படியே சொல்லியே தீர வேண்டும் என்ற எண்ணம் உந்தியது.


"ஒண்ணா ரெண்டா, ஷார்ட் டெர்ம் பிளான் லாங் டெர்ம் பிளான்னு அது பாட்டுக்கு நிறைய இருக்கே"


"வாவ், தட்ஸ் ஃபைன், அதெல்லாம் என்னன்னும் சொல்லலாமே"


"ம்… ஷார்ட் டெர்ம் பிளான் அப்படின்னு சொன்னா, இப்போதைக்கு வேலை செஞ்சுட்டே, என்னோட நாலெட்ஜ வளர்த்துக்கணும், மங்கள்யான் மாதிரி ஒரு பெரிய ப்ராஜெக்ட் ஒர்க் பண்ணணும், இப்படி. லாங் டெர்ம் பிளான்..னா, நான் தலைமை தாங்கி ஒரு பெரிய ப்ராஜெக்ட்ட சக்சஸ்ஃபுல்லா வழி நடத்தணும், அது உலகத்தையே திரும்பிப் பார்க்க வைக்கணும். ஸ்பேஸ் ட்ராவல் பண்ணணும். இதெல்லாம் ஜஸ்ட் என்னோட ப்ளான் அப்படின்னு சொல்றத விட என்னோட பாஷன், வாழ்நாள் கனவு"


மிக மிக ரசனையுடன் உணர்ந்து சொன்னாள்.


அடுத்த நொடியே அவனது முகம் பேயறைந்தது போல ஆனாலும் சட்டென தன்னை மீட்டுக் கொண்டான்.


"ஏன் என்ன ஆச்சு?"


"மத்ததெல்லாம் ஓகே, ஆனா அந்த ஸ்பேஸ் ட்ராவல்னு நீ சொன்ன உடனே எனக்கு கல்பனா சாவ்லா ஞாபகம் வந்துருச்சு"


"ஒரு தடவ அப்படி நடந்ததால, எப்பவுமே அப்படித்தான் நடக்கும்னு ஏதாவது இருக்கா" எனப் பட்டெனக் கேட்டுவிட்டாள்.


'இப்படி ஒரு வார்த்தை அவள் வாயிலிருந்து வருவதும் கூட காலத்தின் கட்டாயமாக இருக்கலாம்' என்ற எண்ணம் தோன்ற அவனது மனமே சற்று இலேசாகிப் போனது.


"ஆல் இஸ் வெல், இந்த வார்த்தைய தயவு செஞ்சு நீ மறந்துடாத. எதிர்காலத்துல இதே வார்த்தைகள் உனக்கு ரொம்ப தேவையா இருக்கும்" என்றான்.


"ஹஹ… என்ன கிருஷ்ணா இப்படி புதிர் போடறீங்க, அக்கா கல்யாண சமயத்துல நடந்து போன விஷயத்தைப் பத்தி நீங்க பேசறீங்களா?


ஐயம் அ ஓப்பன் விண்டோ, கிருஷ்ணா! என்கிட்ட எந்த ஒளிவு மறைவும் கிடையாது. எதுவா இருந்தாலும் மனசுல பட்டத உள்ளது உள்ளபடி பேசுவேன். அப்படிப் பேச போய்தான், அன்னைக்கு நான் உங்களால தேவையில்லாத சங்கடத்துல சிக்கினேன்! என்னதான் நான் தப்பாவே பேசியிருந்தாலும் கூட, அந்த சந்தர்ப்பத்துல பதிலுக்கு பதில் நீங்க நடந்துகிட்ட விதம் கொஞ்சமாவது நியாயமா இருந்துதா? காயம் ஆறிப்போனா கூட அந்த வடு இல்லாம இருக்குமா, சொல்லுங்க?


அதை எல்லாம் மறந்த மாதிரி இப்ப இந்த நொடி எப்படி இவ்வளவு நார்மலா உட்கார்ந்து உங்ககிட்ட பேசிட்டு இருக்கேன்னு எனக்கே புரியலன்னா பாருங்க! மறுபடியும் உங்கள பார்த்ததுக்கு அப்பறமா, எனக்கு நானே ஸ்ட்ரேன்ஜா தெரியறேன்"


வருத்தமும் இயலாமையும் கலந்து அவள் சொல்லிக் கொண்டே போக, அவளது குரலில் தென்பட்ட ஒரு வித அந்நியத் தன்மை அவனது மனதைக் கிழித்தது. அப்படியே இன்னும் நெருங்கி அமர்ந்து, அவளைத் தன் தோளோடு சேர்த்தணைத்துக்கொண்டு, அவள் கூந்தலை வருடி அவளை ஆற்றுப்படுத்த வேண்டும் போல ஒரு வேட்கை உருவானது. மிகக் கடினமாக முயன்று தன்னை கட்டுப்படுத்திக் கொண்டான்.


"ஓ உனக்கு அதெல்லாம் இன்னும் கூட ஞாபகம் இருக்கா. நான் எப்பவோ மறந்துட்டேன். நீ ஸ்டேட் ரேங்க் வாங்கினது, ஜே.ஈ.ஈ கிளியர் பண்ணது, ஐ எஸ் ஆர் ஓ காலேஜ்ல உனக்கு இடம் கிடைச்சது, இத எல்லாமே கேள்விப்பட்டு அந்த அளவுக்கு அசந்து போயிருந்தேன். உண்மையாவே உன்ன நேர்ல பார்த்து நடந்த தப்புக்கு மன்னிப்பு கேட்கணும்னு எவ்வளவு டிரை பண்ணேன்னு உனக்கு தெரியுமா" எனச் சொல்லிக் கொண்டே வந்தவன் அதற்கு மேல் பேச இயலாமல் தன்நெஞ்சை நீவிக்கொண்டான்.


"ரியலி" எனப்பெரிதாக வியந்தாள் வர்ஷிணி.


"யா.. ரியலி, இன்னும் கூட இந்த மாதிரி நம்ப முடியாத நிறைய விஷயங்கள் நமக்குள்ள இருக்கலாம் இல்ல, அதை மீன் பண்ணிதான் அப்படிச் சொன்னேனே தவிர, பழைய விஷயம் எதையும் நான் யோசிக்கவே இல்ல" எனப் பெரிய விளக்கம் கொடுத்தான்.


"ஓஹ் ரியலி, இன்னும் இந்த மாதிரி நிறைய விஷயம் இருக்கா, ம்ம்" என யோசிப்பது போலப் பாவனை செய்தவள், "யா…யா… கண்டிப்பா இருக்க வாய்ப்பு இருக்கு! சுப்ரியா பத்தி… ரியலி உங்கள பார்த்ததிலிருந்து என் மண்டைக்குள்ள குடைஞ்சிட்டு இருக்கற விஷயமும் அதுதான். அப்பவே, அவ்வளவு இண்டிமேட்டா இருந்தீங்க இல்ல, என்ன நடந்தது உங்களுக்குள்ள! ஏன் நீங்க அவங்கள மேரேஜ் பண்ணிக்கல?" எனத் தன்னை குடைந்து கொண்டிருந்த கேள்வியை நேரடியாகவே அவனிடம் கேட்டுவிட்டாள்.


நிச்சயமாக இதற்கான விளக்கத்தை அவளுக்குக் கொடுத்தே ஆக வேண்டும் என்று மனதில் பட, "ஷி இஸ் அ பாஸிங் கிளவுட், வரூ! என் வாழ்க்கைய விட்டு அவளாவே விலகிப் போயிட்டா!" என்றான் வெகு இயல்பாக. அந்தப் பிரிவு பற்றிய வருத்தமோ வேதனையோ அவனது குரலிலும் சரி முக பாவனையிலும் சரி கொஞ்சம் கூட வெளிப்படவே இல்லை என்பதே அவளுக்கு ஒருவித வியப்பையும், மேலே தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற சுவாரசியத்தையும் கொடுத்தது.


'ஏன், என்ன ஆச்சு?' எனக் கேட்க நாகரிகம் இடங்கொடுக்காமல் அமைதி காத்தாள். ஆனால் அவள் கேட்காமலேயே தொடர்ந்தான் அவன்.


"சுப்ரியா அப்பல்லாம் சும்மா ஜாலியா டிக் டாக்ல டேன்ஸ் வீடியோஸ் போட்டுட்டு இருப்பா! அது மட்டும்தான் எனக்கு அவகிட்ட பிடிக்காத விஷயமா இருந்துது. அத ஓப்பனா பேசினா எனக்கும் அவளுக்கும் சண்டைலதான் போய் முடியும். சரி, கொஞ்ச நாள் ஆனா, போர் அடிச்சு தானாவே நிறுத்திடுவான்னு நினைச்சேன்" என அவன் சொல்ல, கண்கள் இடுங்க யோசித்தவள், "யா, எனக்குக் கூட அவங்க வீடியோஸ் பார்த்த நியாபகம் இருக்கு" என்றாள்.


"என்ன, நியாபகம் இருக்கா? என்னனு தெளிவாசொல்லு" என அவன் பதற்றம் அடைய, "கூல், எதுக்கு டென்ஷன் ஆகறீங்க, தப்பா எதுவும் இல்ல" எனக் கண்களை இருக மூடி மீண்டும் யோசித்தவள், "ரா...ரா... சரஸக்கு ரா... ரா" பாட்டுக்கு அதே மேக்கப்போட டேன்ஸ் பண்ண வீடியோதான் நினைவுல இருக்கு. அத பார்த்துட்டு ஒரு நாள் ஃபுல்லா சிரிச்சிட்டே இருந்தேன்" என்று சொல்லிக் குலுங்கிச் சிரித்தாள்.


அதில் அவன் பதற்றம் தணிந்து போனது. மேலும் சொல்லத் தொடங்கினான்.


"அந்த மாதிரி அவ போட்ட ஒரு வீடியோ பார்த்துட்டு அவள சினிமால நடிக்க கூப்டாங்க"


"ஓ"


"எஸ், ஆனா அதுல எனக்கு மட்டும் இல்ல அவளோட அம்மா, அப்பா, அக்கா யாருக்குமே இஷ்டம் இல்ல. ஆனா அவ யார் பேச்சையும் கேட்க தயாரா இல்ல"


"அப்படினா சினிமால நடிச்சாங்களா, நான் கேள்விப்படவே இல்லையே"


"ஆமாம், நடிச்சா! ஆனா அந்த படம் ரிலீஸே ஆகாம பாதில நின்னுபோச்சு. அதனாலதான் நீ கேள்விப்படலன்னு நினைக்கறேன்"


"அக்கா ஏன் இதெல்லாம் என் கிட்ட" சொல்லவில்லை எனக் கேட்க வந்து, தன் கேள்வியில் இருந்த அபத்தத்தை உணர்ந்து தானே அந்தக் கேள்வியை விழுங்கினாள்.


"இல்ல, சினிமால நடிக்கறதுக்காக எங்க கல்யாணத்த நிறுத்திட்டா! எங்க அம்மாவ பத்திதான் உனக்குத் தெரியுமே! அவள பத்தின பேச்சையே எடுக்கக்கூடாதுன்னு சொல்லித்தான் பெரிய அண்ணியையே குடும்பத்துல சேர்த்துட்டாங்க" என விளக்கம் கொடுத்தான்.


"படம்தான் ரீலீஸே ஆகலன்னு சொன்னீங்க, அப்பறம் அவங்க என்ன ஆனாங்க?" எனக் கதையைத் தொடர்ந்தாள் வர்ஷிணி.


"படம் பாதி புரொடக்ஷன்ல இருக்கும்போதே, அவ அந்த படத்தோட பிரொட்யூசர கல்யாணம் பண்ணிட்டா! ஸோ, அவ லைப் வேற ரூட்ல போயிடுச்சு" என்றவன், "ப்ளீஸ் வரூ, இதுக்கு மேல அவள பத்தி எதுவும் கேட்காத, என்ன பொறுத்தவரைக்கும் அவ முடிஞ்சுபோன கத!


அன்னைக்கு நீ மொட்ட மாடிக்கு வந்தப்ப, டிரிங்க் பண்ணிட்டு, ஒரே சிகரெட்டை ரெண்டு பேரும் மாத்தி மாத்தி ஸ்மோக் பண்ணிட்டு இருந்தோம். அத எங்க நீ வீடியோ எடுத்திட்டியேன்னுதான் அவ்வளவு டென்ஷன் ஆயிட்டேன். எனக்கு ஒரு பிரச்னைன்னா கூட ஓகே, ஆனா ஒரு பொண்ணு என்னால மத்தவங்க எதிரே தலை குனியக் கூடாதுன்னு நினைச்சேன், புரியது இல்ல" எனக் கேட்டான், தன் தவறுக்கு விளக்கம் கொடுத்தவனாக.


"இதெல்லாம் எனக்கு புரியவே இல்ல பாருங்களேன், ஆனா நான் அப்படி எதையும் அன்னைக்கு பார்க்கல. அப்படியே பார்த்திருந்தாலும், வீடியோ எடுக்கற அளவுக்கு போயிருக்க மாட்டேன். பிகாஸ், நான் மத்தவங்க ப்ரைவசிய மதிக்கற ஆளு. அன்னைக்கே அந்த மெச்யூரிட்டி எனக்கு இருந்துது" என்றாள் வர்ஷிணி.


"இத நீ சொல்லணுமா?" எனக் கேட்டான்.


"சொல்லாமலேயே என்ன பத்தி உங்களுக்குத் தெரியுமா?" என பதில் கேள்வி கேட்டாள்.


"என்ன விட உன்ன பத்தி தெரிஞ்சவங்க யாரவது இருக்க முடியுமா?" என்ற பதில் அவனையும் மீறி வந்து விழுந்தது.


"ஓஹ் ரியலி, என்ன பத்தி எல்லாமே தெரியுமாமே!" என்று சிரித்தாள்.


"ஏய், என்ன எப்ப பார்த்தாலும் ரியலி, ரியலின்னு" எனச் செல்லமாகக் கோபித்துக் கொண்டான்.


அவனது அந்தக் கொஞ்சல் அவளை எரிச்சல் படுத்தியது. "என்னோட பியூச்சர் பிளேன் என்னன்னு கேட்டப்ப, பதில் சொன்னது என்னோட தப்பு. அத பத்தி உனக்கு என்னன்னு நறுக்குனு கேட்டிருக்கணும், அப்படித்தான? திரிஷா இல்லன்னா நயன்தாரா மாதிரி, சுப்ரியா இல்லன்னா நானா? அதான் இப்ப என் பின்னால சுத்திட்டு இருக்கீங்களா?" என சுள்ளெனக் கேட்டாள்.


"உன் பின்னாலயே சுத்திட்டு இருக்கேன்னு சொன்னா, அவ இல்லன்னா நீ அப்படின்னு அர்த்தம் இல்ல பிசாசே, நீ இல்லன்னா என் வாழ்க்கைல எவளும் இல்லன்னு அர்த்தம், புருஞ்சுதா!" என அதே சூட்டுடன் அவளுக்கு பதில் கொடுத்தான்.


பேச்சே வரவில்லை அமிர்தவர்ஷிணிக்கு.


தன்னை சமாளித்து, "அப்ப அந்த லெட்டர், ரோஸ், சாக்லேட் இதெல்லாம்" என அவள் கேட்டு முடிக்கவில்லை, "நான்தான்டீ வெச்சேன், அதுக்கு இப்ப என்ன? என பதில் கொடுத்தான் தன் பொறுமை எல்லையைக் கடக்க.


'இந்த அளவுக்கு என்ன பத்தி ரஞ்சுவுக்கு கூட தெரியாதே! இவனுக்கு எப்படி?!' என அசந்துபோய் அவனைப் பார்த்தாள் வர்ஷிணி.


அதற்குள் படுக்கையறைக் கதவு திறக்கும் ஓசை கேட்க, இருவரின் பார்வையும் ஒருசேர அங்கே சென்றது.


வால் பிடித்தது போல ஒருவர் பின் ஒருவராகக் குட்டிகள் மூவரும் அவர்களை நோக்கி வரவும் மேற்கொண்டு பேச்சைத் தொடர முடியாமல் போனது.


அடுத்த அத்தியாயத்தை புதன் அல்லது வியாழன் அன்று கொடுக்கிறேன்.


2 comments

2 Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
Guest
May 26
Rated 5 out of 5 stars.

Interesting

Like

Guest
May 23
Rated 5 out of 5 stars.

Good

Like
© KPN NOVELS COPY PROTECT
bottom of page