top of page

பூவே உன் புன்னகையில்! (முன்னுரை by மோனிஷா)

முன்னுரை


வாசக தோழமைகளுக்கு வணக்கம்!


நான் மோனிஷா.


புத்தக வாசிப்பில் தொடங்கிய என்னுடைய தேடல் என்னை எழுத்து துறைக்கு இழுத்துவந்துவிட்டது.


வாசிப்பு என்கிற போதைதான் ‘என்னால் எழுத முடியும்’ என்கிற தன்னம்பிக்கையையே எனக்கு கொடுத்தது. எனவே அடிப்படையில் நானும் ஒரு வாசகர்தான்.


அப்படி ஒரு வாசகராக, என் நெருங்கிய தோழி மற்றும் எழுத்தாளரான கிருஷ்ணப்பிரியா நாராயண் அவர்களின் ஒவ்வொரு நாவலும் அதில் இடம்பெறும் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் கூட எனக்கு அத்துப்படி.


அந்த வகையில் அவர் சமீபத்தில் எழுதி முடித்த 'பூவே உன் புன்னகையில்' வலைதளங்களின் வாசம் முகரப்படாத புத்தம் புதிதாக மலர்ந்த பூ.


இருப்பினும் தோழி என்ற சலுகையில் அந்த நாவலின் ஒவ்வொரு அத்தியாயத்தையும் அவர் எழுதி முடித்ததும் எனக்கு அனுப்பிவிட, நான் அதனை படித்துவிட்டுதான் மறுவேலையே பார்ப்பேன்.


எத்தனையோ இன்னல்கள் சிரமங்களுக்கு இடையில் நீண்ட இடைவெளிகளில்தான் இந்நாவலின் ஒவ்வொரு அத்தியாயத்தையும் எழுதி அனுப்புவார். எனினும் எனக்கு ஆச்சரியம் என்னவெனில் அத்தியாயங்கள் ஒவ்வொன்றிலும் அதன் உயிரோட்டம் சற்றும் குறைந்ததில்லை.


அதேநேரம் கதையின் போக்கு கொஞ்சமும் பிசகாமல் எழுதி முடித்திருந்தார்.


இந்நாவலை குறித்து சொல்லுகையில் இது சமூகத்தின் சமக்கால பிரச்சனைகளை கையாளும் அற்புதமான குடும்ப நாவல். தற்போதைய குடும்ப நாவல்கள் பெரும்பாலும் காதலையே மையமாக வைத்து எழுதப்படுகின்றன. அவற்றில் குடும்பம் கூட இரண்டாம் பட்சமாகிவிடுகிறது.


ஆனால் இந்த நாவலின் கதைக்களமும் கதாப்பாத்திரமும் முழுக்க முழுக்க குடும்பத்தின் சாரம்சத்தை சுற்றி சுழல்கிறது.


நம்முடைய முந்தைய தலைமுறையினர் அவர்களுடைய திருமண வாழ்வில் எதிர்கொண்ட சிக்கல்கள், இன்றைய தலைமுறை தம்பதிகள் எதிர்கொள்ளும் குழப்பங்கள், வயதை தாண்டிய பின்னும் திருமணமாகாமல் இருப்போர் தங்கள் வாழ்க்கையில் கடந்துவரும் சங்கடங்கள் என இந்நாவல் பல்வேறு விதமான கதாபாத்திரங்களை படைத்ததோடு மட்டுமல்லாமல் அவர்களின் உணர்வுகளையும் மிக ஆழமாக விவரிக்கிறது.


பெரும்பாலான குடும்ப நாவல்களை பெண் எழுத்தாளர்கள் படைப்பதால் அதன் காட்சிகள் பெண்களின் கண்ணோட்டத்திலிருந்தே விவரிக்கப்படுகிறது. ஆனால் இதில் ஆண் பெண் இருபாலாருக்கும் பொதுவான கண்ணோட்டத்தில் கதாபாத்திரங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளது இந்நாவலின் சிறப்பு என்றே கூறுவேன்.


மேலும் ஒவ்வொரு பெண்ணுக்கும் தந்தை என்ற உறவு எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை இந்நாவலின் முக்கிய கதாபாத்திரங்களான மூன்று பெண்கள் கடந்து வரும் சூழ்நிலைகளை வைத்து மிகவும் சுவாரசியமாக விவரிக்கிறார் தோழி கிருஷ்ணப்பிரியா.


நாவலின் பெரும்பாலான காட்சி சித்தரிப்புகள் என்னுடைய திருமண வாழ்விற்கு பின்பாக நடந்த சம்பவங்களை நினைவுப்படுத்தியதோடு அல்லாமல் என்னை கண் கலங்கவும் வைத்துவிட்டது என்று சொன்னால் அது மிகையில்லை.


நாவலில் இடம்பெற்ற கதாபாத்திரங்களை கற்பனை என்று நம்புவதற்கே எனக்கு சிரமமாக இருந்தது. அத்தனை உணர்வுபூர்வமாகவும் உயிரோட்டமாகவும் அமைந்திருந்தது.


இத்தகைய அற்புதமான நாவலை எழுதிய கிருஷ்ணப்ரியா நாரயண் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.


மேலும் அவரின் சுய பதிப்பகமான கே.பி.என் பதிப்பகம் வெளியிடும் முதல் நாவல் 'பூவே உன் புன்னகையில்' .


இந்த நாவலின் மூலம் பதிப்பக துறையில் கால் பதிக்கும் கே.பி.என் பதிப்பகம் பல்வேறு வகையான சிறப்பான புத்தகங்களை வெளியிட்டு உயர்வான நிலையை எட்டி சாதனை படைக்க வேண்டுமென்று வாழ்த்துகிறேன்.


- மோனிஷா


0 comments
© KPN NOVELS COPY PROTECT
bottom of page