அன்புப் பரிசு💝
- Krishnapriya Narayan

- Jan 13, 2022
- 1 min read

வணக்கம் அன்பு தோழமைகளே...
அனைவருக்கும் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
ஒரு சில சிறிய சௌகரியங்களுக்காக, 'நாமே நம்ம புத்தகங்களை பப்லிஷ் பண்ணா என்ன?' என்கிற கேள்வி எனக்கு எழுந்தது. அதை விளைவே இந்த 'KPN Publications'. இப்படி ஒரு யோசனை தோன்றியதும் அதில் பதிப்பிக்கும் முதல் புத்தகம் நேரடி புத்தகமாக இருந்தால் இன்னும் நன்றாக இருக்குமே என்ற எண்ணம் தோன்றவும், முதல் முயற்சியாக ஒரு அசல் குடும்ப நாவல் அதுவும் சிறிய கதையாக பிரசுரிக்கும் எண்ணத்தில்தான் 'பூவே உன் புன்னகையில்' நாவலை எழுதத் தொடங்கினேன். ஆனால் அது நான் எண்ணியதைக் காட்டிலும் என்னை எங்கோ இழுத்துச்சென்றுவிட்டது.
'நேரடி புத்தகமெல்லாம் சரியா வாராது. பிறகு உங்களால் எழுத முடியாமலேயே போகலாம். Onlineஇல் எழுதும்போது கிடைக்கும் உந்துதல்தான் தொடர்ந்து எழுத வைக்கும்' என முன்பு ஒரு முறை தோழி ஒருவர் சொன்ன வார்த்தைகள் என் நினைவில் வர, எனக்கு நானே ஏற்படுத்திக்கொண்ட சவாலே இந்த கதை முழுமை பெறக் காரணம் எனலாம்.
ஆனால் தொடங்கிய பின் நான் எதிர்கொண்ட பிரச்சனைகள் கொஞ்சநஞ்சமல்ல. என் புலம்பல் காரணமாக 'மச்சீ... அதான் கைல இவ்வளவு கதைகள் வெச்சிருக்கீங்களே அதுல ஒண்ண கூட பப்லிஷ் பண்ணிக்கலாம். ஏன் டென்சன் ஆகறீங்க" என மோனிஷா கூட சில சமயங்களில் சொன்னதுண்டு.
ஆனால் போக்கிரி பட விஜய் மாதிரி 'ஒரு தடவ முடிவுபண்ணிட்டா என் பேச்சை நானே கேட்கமாட்டேன்' என்பதாக நான் பிடித்த பிடிவாதம் உண்மையில் கொஞ்சம் அதிகம்தான்.
நான் இருந்த மனநிலையில் Onlineஇல் இந்த கதையைத் தொடங்கியிருந்தாலும் இவ்வளவு நாட்கள் எடுத்திருக்கும் என்பதுதான் உண்மை. எது எப்படியோ நினைத்தது நடந்து முடிந்ததில் அப்படி ஒரு மகிழ்ச்சியும் நிறைவும் கிடைக்கவே செய்கிறது.
சின்னசின்ன வெற்றிகளும் அது கொடுக்கும் மகிழ்ச்சியும் நமக்கு நெருக்கமானவர்களுடன் பகிர்ந்துகொள்ளும்போது இரட்டிப்பாகும் என்பதுதானே உண்மை.
அதன் அடையாளமாக, நான் தளம் தொடங்கி எழுதத்தொடங்கியது முதல் எனக்கு ஊக்கம் கொடுத்த அன்பு உள்ளங்களை இந்த நேரத்தில் பெருமைப் படுத்துவது என் கடமை என நினைக்கிறேன்.
அதன் முதல் படியாக,
திருமதி.சித்ரா சரஸ்வதி அவர்கள்,
திருமதி.ராஜம் அவர்கள்,
திருமதி.செல்வராணி அவர்கள்,
திருமதி.உஷா சுரேஷ் அவர்கள்,
திருமதி.ஸ்ரீமதி அவர்கள்,
என எனக்கு ஊக்கமாக நின்ற மூத்த வாசகர்கள் ஐந்து பேரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இந்த புத்தகத்தை அன்புப் பரிசாக அனுப்பியிருக்கிறேன்.
இன்னும் தோழியர் அனிதா பாலா, நாகஜோதி உட்பட ஒரு நீண்ட பட்டியலே வைத்திருக்கிறேன் . அடுத்த பதிப்புகளில் அவர்களுக்கு நிச்சயம் இடமிருக்கும்.
மற்றபடி இது அன்பில் அடிப்படையில் செய்வதே அன்றி இதில் வேறெந்த வணிக / விளம்பர நோக்கமும் இல்லை என்பதை இந்த நேரத்தில் சொல்லிக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.
அனைவர்க்கும் எனது அன்பும் நன்றிகளும்.
நட்புடன்,
KPN


Comments