Virus 143 - Episode 12
காதல் அட்டாக் -12
தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா என மூன்று மாநிலங்களின் எல்லைகளையும் பகிர்ந்துகொண்டு நீள நெடுகிலும் பறந்துவிரித்திருந்த மேற்குத்தொடர்ச்சி மலையின் ஒரு அடர் காட்டுப் பகுதியில் புதிதாக ஏற்படுத்தப்பட்டிருக்கும் நிர்மலானந்தாவின் ஆசிரம கிளை மய்யம் அது.
மிக அதிக பரப்பளவு நிலங்களை கையகப்படுத்தி அந்த ஆசிரமத்தை ஏற்படுத்தியிருந்தார்கள்.
குறிப்பிட்ட அளவு இடைவெளிகள் விட்டு ரிசார்ட் பாணியில் மரங்களும் களிமண்ணும் கொண்டு வரிசையாக அமைக்கப்பட்டிருந்த ஓலை குடில்கள், பார்க்க அவ்வளவு நேர்த்தியுடன் இருந்தன.
இடையிடையே பூத்துக் குலுங்கும் மலர்ச் செடிகள் வேறு கண்ணை பறிக்க, அவ்வளவு ரசனையுடன் உருவாக்கப்பட்டிருந்தது அந்த ஆசிரமம்.
தோலுடா, வெஜ்ஜே தும்பே வாலி தார்,
சூடே தில் தே புக்கர்... ஆஜா கர்லே யே ப்யார்...
தோலுடா, வெஜ்ஜே தும்பே வாலி தார்,
சூடே தில் தே புக்கர்... ஆஜா கர்லே யே ப்யார்...
தோலுடா... ஆஆஆஆ...
துணுக் துணுக் துன்... துணுக் துணுக் துன்...
துணுக் துணுக் துன் தா... தா... தா...
துணுக் துணுக் துன்... துணுக் துணுக் துன்...
துணுக் துணுக் துன் தா... தா... னா...
எனப் பின்னி பெடலெடுக்கும் பின்னணி இசை கேட்கவில்லையே தவிர... மற்றபடி அவ்வளவு ஆர்ப்பாட்டமாக அந்த ஆசிரமத்தின் உள்ளே நுழைந்தனர் அந்த சர்தார்ஜி...க்கள் இருவரும்.
அந்த காட்டின் எல்லை வரை பேருந்தில் பயணம் செய்து வந்தவர்கள் அதன் பிறகு, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாவண்ணம் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டிருந்த ஒரு சொகுசு காரில் வெகு சொகுசாகப் பயணம் செய்து அந்த இடத்தில் வந்து இறங்கியிருந்தனர் அந்த இருவரும்.
அடுத்த நொடி அவர்களை வரவேற்று அழைத்துச்செல்ல ஓடிவந்தார் அங்கே பொறுப்பிலிருக்கும் சிஷ்யர் ஒருவர்.
“நீங்க அவதார் சிங்க்" என நெடியவனையும், "நீங்க பல்பீர் சிங்" எனக் கொஞ்சம் கட்டையாக இருந்தவனையும் பார்த்துச் சொன்னவர், 'என்ன நான் சரியா கண்டுபிடிச்சிட்டேனா" என கேட்டு பெரிய சாதனை செய்துவிட்டவர் போலச் சிரித்தார் அவர்.
அதற்கு அந்த சர்தார்ஜிகள் இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து ஒரு சிறு விஷமப் புன்னகையை பரிமாறிக்கொள்ள, "பல்லே... பல்லே... சரியா சொன்னீங்கோ ஸ்வாமிஜி... சரியா சொன்னீங்கோ" என்றார் அவதார் சிங் என அவரால் அடையாளம்காணப்பட்டவர்.
பல்பீர் சிங் என்றழைக்கப்பட்டவர் மறுபடியும் நக்கலாகச் சிரித்துவைக்க, தாடி மீசைக்குள் ஒளிந்திருந்தாலும் அந்த சிரிப்பைக் கண்டுகொண்ட அவதார் அவரை முறைக்க, தன் பார்வையைத் தழைத்துக்கொண்டார் அவர்.
இதையெல்லாம் கவனிக்காமல், "உங்க ரெண்டுபேருக்கும் ஸ்பெஷலா ஒரு குடிலை ஒதுக்க சொல்லி பெரிய ஸ்வாமிஜியோட கட்டளை. உள்ளேயே எல்லா வசதியும் இருக்கு" என அவர் சொல்ல, "பஹுத் சுக்ரியா" என்றார் அவதார் சிங்.
அதற்கு புன்னகைத்தவர், "இன்னைக்கு ஒரு நாள் ரெஸ்ட் எடுத்துட்டு நாளைல இருந்து உங்க வேலையை ஆரம்பிக்க சொல்லியிருக்கார் ஸ்வாமிஜி" என்று சொல்லிவிட்டு, "உங்க ஆளுங்கள்லாம் இன்னைக்கு நைட்டு வந்துருவாங்க இல்ல?” என்று கேட்க, "வந்துவாங்கோ... நீங்கோ கவலையே படவேணாம்' என்றார் அவதார்.
தானும் எதாவது சொல்ல வேண்டும் என்பதற்காக, "பகுத்து அச்சா... பகுத்து அச்சா" என்ற பல்பீர் மறுபடியும் ஒரு முறைப்பை அவதாரிடம் பெற்றுக்கொண்டு அடக்கினார்.
பேசிக்கொண்டே அவர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த குடிலை நோக்கி அந்த சிஷ்யர் போக அவரை தொடர்ந்தனர் மற்ற இருவரும்.
அந்த இடம் முழுவதிலும் பார்வையைச் சுழற்றியவாறே நடந்தபடி, "இன்னா ம