top of page

Virus 143 (9)

காதல் அட்டாக்-9

புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட அந்த மேம்படுத்தப்பட்ட ரசாயனத்தை நாயகியிடம் நன்கு சோதித்துப்பார்த்தாகிவிட்டது. தன்னுடைய ஆராய்ச்சி வெற்றிபெற்ற மகிழ்ச்சியுடன் மேனகா சந்திரமௌலியை தொடர்புகொள்ள, அவர் லண்டன் சென்றுவிட்டது தெரியவந்தது. அதுவுமில்லாமல் அவரால் உடனே இந்தியா வரமுடியாமல் போக, 'இருந்த நாட்கள் இருந்தாகிவிட்டது; மேலும் பத்து நாட்கள் காத்திருந்தால் பரவாயில்லை' என்றவர் அதுவரை அவளைக் காத்திருக்குமாறு சொல்லிவிட்டார். தயாராக இருக்கும் ரசாயனத்தைச் சோதித்துப் பார்க்க வழி இல்லாமல் போக, தூக்கமே வரவில்லை மேனகாவுக்கு. அதை விஸ்வாவிடம் உபயோகித்து அவனை அந்த ஆசிரமத்திலிருந்து வெளியே கொண்டு வரும் ஆவல் மட்டுமே அவளிடம் மேலோங்கி இருந்தது. அப்பொழுதுதான் நிர்மலானந்தா சுவாமிஜியின் பிரசங்கத்தை விளம்பரப்படுத்தும் விதமாக ஊர் முழுதும் வைக்கப்பட்டிருந்த 'பிளக்ஸ் போர்ட்'கள் அவள் கண்களில் பட்டன. போதாத குறைக்கு அனைத்து சமூக வலைத்தளங்களிலும் இந்த நிகழ்ச்சிக்கான விளம்பரத்துடன் அவருடைய பழைய ஆன்மிக உரைகளைப் போட்டு தாக்கிக்கொண்டிருந்தார்கள் அவருடைய பக்த சிகாமணிகள். ஒரு வேளை இந்த நிகழ்ச்சிக்கு விஸ்வா வந்தான் என்றால் இங்கேயே இந்த ரசாயனத்தை அவன் மீது செலுத்தி அவனை அழைத்துவந்துவிடலாம் என்ற ஆவல் தலை தூக்க, அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கான நுழைவு சீட்டிற்காக மேனகா முயன்ற பொழுதுதான் தெரிந்தது அவை மொத்தமும் சில மாதங்களுக்கு முன்பே விற்றுத் தீர்ந்துபோன கதை. இதற்கிடையில் செலுத்தப்பட்ட ரசாயனத்தின் பாதிப்பிலிருந்து முற்றிலுமாக வெளிவந்திருந்தாள் நாயகி. வழக்கம் போல காலை வேலைக்கு வந்தவள், முதல் காரியமாக மேனாகிவிடம் சென்று, "யம்மா... நானு ரெண்டு நாள் லீவு! என்ன தேடாத" என வெகு சகஜமாக அதுவும் தகவலாக நாயகி சொல்ல, "ஏய்... நீ என்ன எப்பப்பாரு லீவு போடற; எனக்கு முக்கியமா வேலை இருக்கு. என்னால கிச்சனை கட்டிட்டு அழ முடியாது" என்று கடுப்பானாள் மேனகா. "யம்மா... ஜூக்கி புக்கில சோறு சொல்லி துண்ணுக்கோ இல்லாங்காட்டி நீ ஏதுனா செய்துக்கோ. எங்க சாமி சொப்பொய்வு ஆத்த போறாரு; நானு போவதாம்போறேன் அஆங். ஆன்னு லயன்ல மூணு மாசத்துக்கு முன்னாலயே டிக்கெட்டு புக்கு பண்ணி வெச்சிருக்கேன் தெரிமா? போனா போவட்டும்னு உட ஓரு வா இரண்டு ருவா மேட்டர் இல்ல யாமா... மொத்தமா எட்டாயரம் ரூபா அஆங்" என அவள் சர்வ சாதாரணமாகச் சொல்ல, "என்ன எட்டாஆஆஆயிரம் ரூபாவா?" என வாய் பிளந்தாள் மேனகா. "பின்ன" என நாயகி நொடித்துக்கொள்ள, "அவ்வளவு ரூபாய்க்கு நீ என்ன பண்ண நாயகி" என அவள் வியப்புடன் கேட்கவும், "சீட்டு கட்டி ஒரு கம்மல் வாங்கியாந்தேன் இல்ல; அத சேட்டு கடைல அடமானம் வைச்சிக்கிறேன்" என்றாளே பார்க்கலாம் நாயகி! நொந்தே போனாள் மேனகா. "ஏன் நாயகி கஷ்டப்பட்டு சீட்டுக்கட்டி ஆசை ஆசையா அந்த கம்மலை வாங்கின இல்ல! அதை போய் அடமானம் வெச்சு இப்படி தண்ட செலவு பண்ணுவியா நீ?" என அவள் ஆயாசமாகக் கேட்க, தன் கன்னங்களில் போட்டுக்கொண்டவள், "தண்ட செலவுனு சொல்லாத யாமா; சாமியை ஒரு தாட்டி நேர்ல பாக்கணும்னு ஆசை இல்ல; அதுக்கு துட்டுலாம் பெரிசில்லமே" என்றவள், "இதுக்கே இம்மா சிலுப்பு சிலுப்புரியே; என் பக்துவூட்டு மாரியம்மா கீதில்ல; அது கூட ஒரு டிக்கெட்டு வாங்கி வெச்சிக்கீது! அது புள்ளிக்கி என்னவோ அப்பரண்டிஸோ என்னவோவாம். வவுத்த கிளிச்சு ஆபரேசன் பண்ணனுமாம்! இந்த சீட்ட யாருக்குனா வித்து குடுன்னு இப்போ வந்து மூக்கால அளுவுதாங்காட்டியும். நான் இன்னா அப்புடியா. புருசனா; புள்ள குட்டியா? சம்சாரியெல்லாம் ரோசன இல்லாம செய்யுதுங்க. நான் சீட்டுகவாங்க கூடாதா; சாமிய கண்ணால கண்டுக்கதாங் கூடாதா" என ஓட்டை நியாயம் பேசினாள் நாயகி. பட்டென அப்பொழுதுதான் ஒரு எண்ணம் உதித்தது மேனகாவுக்கு. நிலைமையை சாதகமாக்கி நாயகி மூலம் அவளது பக்கத்து வீடு மாரியிடம் இருந்த நுழைவு சீட்டை பத்தாயிரம் கொடுத்துத் தான் வாங்கிக்கொண்டு நாயகியுடன் அந்த பிரசங்கத்தில் கலந்துகொள்வதுபோல் விஸ்வாவை தூக்கத் தயாரானாள் மேனகா. மொட்டை மாடியில் வைக்கப்பட்டிருந்த ஒரு பெரிய கூண்டில் மில்லி போன்றே இன்னும் சில எலிகளை வளர்த்துக்கொண்டிருந்தாள் மேனகா தன் ஆராய்ச்சிக்காக. எனவே கீழே மில்லியை அடைத்துவைத்திருக்கும் கூண்டைத் திறந்துவிட்டாலே அடுத்த நொடி அது மொட்டைமாடியை நோக்கிச் சென்றுவிடும். ஒரு நாள் அப்படி மில்லி மொட்டை மாடியை நோக்கி ஓட, அந்த ரசாயன பரிசோதனையின் இரண்டாம் கட்டத்திற்கு உட்பட்டிருந்த நாயகி மில்லியை துரத்திக்கொண்டே ஓட. இருவரையும் தொடர்ந்து ஓடினாள் மேனகா. அவள் மூச்சுவாங்க மொட்டைமாடியில் போய் நிற்கும்போதுதான், கண் இமைக்கும் நேரத்திற்குள் அந்த விபரீதம் நடந்தது. அவள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே, உடல் முழுதும் சாம்பல்நிறத்தில் வரிவரியாகக் கொண்ட கழுகு போன்ற பறவை ஒன்று மில்லியை கொத்தி தூக்கியிருந்தது. 'ஐயோ... மில்லி... மில்லி' என மேனகா மிரண்டுபோய் கத்த, அதைப் பார்த்து நாயகியும் கொடுமையாக அலறவும், அவர்கள் போட்ட கூச்சலில் மிரண்டு அந்த பறவை அப்படியே மில்லியை கீழே போட்டுவிட்டுச் சென்றுவிட்டது. அது எவ்வாறான தாக்கத்தை மில்லியிடம் ஏற்படுத்திவிட்டு சென்றிருக்கிறது என அறியாமல் நாயகி மில்லியை கையில் எடுத்து அதை ஆராய்ந்தாள். ஆபத்து இல்லை என்றாலும் அதன் அலகு குத்தி மில்லியின் உடலில் சிறு காயம் உண்டாகி இருந்தது. அந்த காயத்திற்க்கு மருந்து போட்டு மில்லியை பத்திரமாகப் பார்த்துக்கொண்டாள் மேனகா. அதன் பிறகுதான் மில்லியிடம் அதிக மாற்றங்கள் தெரியத் தொடங்கியது கிறுகிறுவென சுற்றி குட்டிக்கரணம் அடித்தவாறு சில நிமிடங்கள் கூட கூண்டுக்குள் இருக்கப் பொறுக்காமல் கீச் கீச்சென்று கத்தி ஆர்ப்பாட்டம் செய்துகொண்டு, ரகளையில் இறங்கியிருந்தது அது. அது செய்யும் அமர்க்களம் தாங்க இயலாமல் கூண்டைத் திறந்துவிட்டால் நேராக மொட்டை மாடியில் போய் தஞ்சம் அடைந்தது. அங்கே இருக்கும் மற்ற எலிகளைப் பார்த்துக் கத்துவதும் எதையோ தேடுவதுமாக அது அடிக்கும் லூட்டி தாங்க முடியாமல் தவித்தாள் மேனகா. இதில் மற்றுமொரு எலியை வேறு அது கடித்து வைத்திருந்தது. மில்லியை சரியாக ஆராய்ந்திருந்தால் அது ஒருவித புதிய வைரசினால் பாதிக்கப்பட்டிருப்பதை கண்டறிந்திருக்கலாமோ என்னவோ? மேனகா அதைக் கவனிக்காமல், அந்த வைரஸ் நிர்மலா நந்தாவின் ஆஸ்ரமத்திலேயே தலைகீழாக மாற்றப்போவதை அறியாமல் நாயகி சகிதம் அந்த விழா அரங்கத்திற்கு வந்தாள் மேனகா. கூடவே மில்லியை ஒரு சிறிய கூண்டிற்குள் அடைத்து அங்கே கொண்டுவந்திருந்தாள் அவள். காரணம் விஸ்வாவை ஈர்க்கும் எதிர் ரசாயனம் மில்லிக்கு செலுத்தப்பட்டிருந்தது. விஸ்வாவின் மீது 'ஸ்ப்ரே' செய்யப்படவேண்டிய ரசாயனத்தை வழக்கம்போல் ஒரு மலர் கூடையில் வைத்து அதையும் தன் கையிலேயே தயாராக வைத்திருந்தாள் அவள். வழக்கம் போல நாயகி செய்த சொதப்பலில் அவள் கையில் வைத்திருந்த கூண்டிலிருந்து சுலமபாக வெளியேறி அங்கே இருந்த ஒரு பழக் கூடையில் குதித்து மேனகாவை தவிக்கவிட்டு அவளுடைய நாயகனை நோக்கிப் போயிருந்தது மில்லி. நிர்மலாநந்தா ஸ்வாமிஜி அருளுரை ஆற்ற இருக்கும் அரங்கத்தின் சந்துபொந்து இண்டு இடுக்குகளிலெல்லாம் மில்லியை தேடி ஓடிக்கொண்டிருந்தாள் மேனகா. கூடவே ஓடிவந்த நாயகியை வேறு கண்டபடி திட்டி தீர்த்துக்கொண்டிருந்தாள் அவள். மில்லியோ விஸ்வா இருக்கும் இடத்தில் இருக்க, 'மில்லி' 'மில்லி' என அழைத்துக்கொண்டு உதடு குவித்து 'கீச் கீச்' எனச் சத்தம் செய்துகொண்டு அவள் அதை தேட, நாயகி பதட்டத்துடன் அவளைத் தொடர, அவனைவரும் அவர்களை ஒரு விதமாகப் பார்த்து வைக்க, அவள் நிலை கொஞ்சம் பரிதாபகரமாகத்தான் இருந்தது. இவ்வளவு பெரிய ஆசிரமத்தில் அந்த சின்னஞ்சிறிய எலியை எங்கே என்று தேடுவாள் மேனகா? * பக்திமயமாகப் பூஜையில் ஈடுபட்டிருந்தார் விஸ்வாமித்ரானந்தா ஸ்வாமிஜி. அதாவது விஸ்வா! கீச்... கீச்... கீச்... கீச்... சத்தம் மட்டும் வந்துகொண்டே இருந்தது. ஆனால் எங்கிருந்து என்றுதான் கண்டுபிடிக்க இயலவில்லை விஸ்வாவால். ஓம் சிவாய நமஹ... கீச்... கீச்... ஓம் மஹேஸ்வராய நமஹ... கீச்... கீச்... அர்ச்சனை செய்ய ஒவ்வொரு முறை அவன் சிவநாமத்தை உச்சரிக்கும்போதும் அவனுக்குப் பின்பாட்டு பாடியது மில்லி. அவனது பொறுமை எல்லை மீறிக்கொண்டிருந்தது. ப்ச்... ஓம் சம்பவே நமஹ... கீச்... கீச்... ப்ச்... ச்.. ஓம் பினாகினே நமஹ... கீச்... கீச்... சுற்றும் முற்றும் திரும்பத் திரும்பப் பார்த்துக் கொண்டே மனம் ஒருநிலை படாமல் ஆராதனங்களைச் செய்து முடித்தான் அவன். முற்றும் துறந்த துறவு நிலையில் பொறுமை கடைப்பிடிக்கும் அவனையே எரிச்சல் படுத்திக்கொண்டிருந்தது மில்லி என்றால் அது மிகையில்லை. அவனது அலைப்புறுதலை ஒரு பார்வை பார்த்துக்கொண்டே அவன் பிரசாதமாகக் கொடுத்த ஒரு பழத்தைப் பெற்றுக்கொண்டு நிர்மலானந்தா அங்கிருந்து சென்றுவிட, மற்ற சிஷ்யர்களும் சென்றனர். அதன் பின்னும் கீச்... கீச்... சப்தம் நிற்காமல் இருக்க, அங்கே இருந்த பழக் கூடையை ஆராய அதில் சிக்கியிருந்த மில்லி அவனது கண்களில் பட்டது. பின்பு மெதுவாக அவன் அதை விடுவிக்க உடனே குதித்து அவனது உள்ளங்கைக்குள் தஞ்சம் புகுந்தது மில்லி. அதுவரை இருந்த எரிச்சலெல்லாம் மறைந்து, ஏனோ அதைப் பார்த்தவுடன் மில்லியை அவனுக்கு மிகவும் பிடித்துப்போனது. அதைத் தன விரல்களால் வருடிக் கொடுத்தவன் அவனது நடைப் பயிற்சிக்கு நேரமாகவும், நிர்மலானந்தாவின் சொற்பொழிவுக்கு இன்னும் சில நிமிடங்கள் இருக்கவே, கடற்கரை ஓரமாகப் போய் நடக்கத் தொடங்கினான் விஸ்வா மில்லியை தன் கைகளில் வைத்திருந்தபடியே. அதே நேரம் மேனகாவுக்கோ மில்லியை தவிர வேறெதுவும் நினைவிலேயே இல்லை. விஸ்வாவை தன்னுடன் அழைத்துப்போக வேண்டும் என்ற எண்ணம் கூட அவளுக்குப் பின்னுக்குச் சென்றிருந்தது. அவளது ஆராய்ச்சிகளுக்காக 'கின்னி பிக்' எலிகளை வாங்கப்போன பொழுது அதன் விலை அவளைச் சற்று மிரட்டவே, தானே அவற்றை வளர்க்க ஆரம்பித்தாள் மேனகா. அவள் எலிகளை வாங்கிவந்த பிறகு அங்கே முதன்முதலாகப் பிறந்த குட்டி இந்த மில்லி. அதனால்தானோ என்னவோ அதன் மேல் ஒரு இனம் புரியாத பிரியம் அவளுக்கு உண்டு. ஒருசமயம் அவள் வளர்த்த எலிகளில் ஒன்று எப்படியோ இறந்துபோக அந்த பாதிப்பிலிருந்து அவள் மீண்டு வரவே சில தினங்கள் பிடித்தது மேனகாவுக்கு. சிறிது நேரம் மில்லியை தேடி தவித்தவள், இங்கே எப்படி அதை கண்டுபிடிப்பது என்ற வருத்தத்தில் கலங்கிய கண்களும் கலங்கிய நெஞ்சமுமாக அவள் கடற்கரை மணலில் உட்கார்ந்திருக்க, கீச்... கீச்... என்ற ஒலி இசையாய் அவள் செவியை நிறைத்தது. மில்லியன் குரலில் மகிழ்ச்சி பொங்க, "மில்லி! மை பேபி" என்றவாறு சப்தம் வந்த திசை நோக்கி அவள் செல்ல, அப்பொழுது விஸ்வா கூட அவளது கண்களுக்குத் தெரியவில்லை. அவனுடைய கைக்குள் அடங்கியிருந்த மில்லியை மட்டுமே பார்த்தாள் அவள். கலக்கம் மறைந்து அவள் முகம் மகிழ்ச்சியைத் தத்தெடுக்க, அவள் முகம் காட்டிய வர்ண ஜாலத்தில் சில நொடிகள் தன்னை மறந்துதான் போனான் விஸ்வா. அடுத்த நொடி அவள் குரலில் தன்னை மீட்டெடுத்தவன், 'நாம என்ன செஞ்சிட்டு இருக்கோம்' என எண்ணியவாறு, பதறிப்போய், "சிவ... சிவா" என வாய்விட்டுச் சொல்ல, அவன் வணங்கும் சிவனே அந்த மன்மதனிடம் தோற்றுப்போய், கோபம் கொண்டு தன் நெற்றிக்கண்ணைத் திறந்து அவனை ஏறித்தான் என்பதே அவன் நினைவில் இல்லாமல் போயிருந்தது. அந்த அனங்கனாக இப்பொழுது மில்லி மாறியிருப்பதை அறியாமல், "மில்லி கம்!" என்றவாறு அவள் தன் கையை விஸ்வாவின் கைக்கு அருகில் நீட்ட, அவளை உணர்ந்துகொண்ட மகிழ்ச்சியில் மில்லி கீச்... கீச்... என ஒலி எழுப்பிக்கொண்டே அவளது கைக்குத் தாவியது. பின் அனிச்சையாக அவனை நிமிர்ந்து பார்த்தவள் அவன் விஸ்வா என்பதை உணர்ந்து,, ஒரு நொடி திகைத்து பின் 'தேங்க்ஸ்' என்று சொல்லிவிட்டு அங்கிருந்து வேகமாகத் திரும்பிச் சென்றாள் மேனகா. அவளது திகைத்த பார்வை இன்னும் ஆழமாய் அவன் மனதை துளைக்க, அவள் உட்கார்ந்திருந்த இடத்திலிருந்த மலர் கூடையைப் பார்த்தவன் அதனைக் கையில் எடுத்துக்கொண்டு, அவளிடம் கொடுப்பதற்காக அவளை அழைக்க எத்தனிக்க, அதற்குள் வெகு தூரம் சென்றிருந்தாள் அந்த விஸ்வாமித்ரனின் மேனகை.

0 comments

Comentários

Avaliado com 0 de 5 estrelas.
Ainda sem avaliações

Adicione uma avaliação
© KPN NOVELS COPY PROTECT
bottom of page