அட்டாக்-7
அந்த ஆஸ்ரமத்திற்கு சென்று திரும்பி மூன்று மாதங்கள் கடந்திருந்த நிலையில் மேனகாவுக்கு நேஹாவிடமிருந்து தொலைப்பேசி அழைப்பு வந்திருந்தது. 'இவ ஏன் நம்மள இப்ப கூப்பிட்றா' என்ற கேள்வியுடன் அவள் அதை ஏற்க, "பாஸ் இப்ப சென்னை வந்திருக்கார். உன்னை உடனே பார்க்கணுமாம். கார் அனுப்பியிருக்கேன் உடனே கிளம்பி வா!" வெறும் அதிகாரமும் கட்டளையும் மட்டும்தான். அவளுடைய ஒப்புதலை கூட எதிர்பார்க்காமல் அழைப்பைத் துண்டித்தாள் அவள். ஆத்திரமாக வந்தது மேனகாவுக்கு. இருந்தாலும் காண்பிக்க இயலாத சூழல். முதல் காரணம் விஸ்வா என்றாலும் முக்கிய காரணம் அவளுடைய ஆராய்ச்சி. முணுமுணுவென்று அந்த நேஹாவை திட்டிக்கொண்டே, அங்கே இருந்த ஒரு கூண்டுக்குள் அடைக்கப்பட்டிருந்த வெள்ளை எலிகளில் ஒன்றை எடுத்து அதன் மேல் ஒரு திரவத்தை ஸ்ப்ரே செய்தவள், அதைத் தனியே வேறொரு கூண்டுக்குள் அடைத்துவிட்டு சமையலறையில் வேலை செய்துகொண்டிருந்த நாயகியை அழைத்தவள், "எனக்கு நல்லதா டிரஸ் செலக்ட் பண்ணி கொடு நாயகி; அப்படியே அக்சஸரீஸும்!" மேனகா சொல்லவும் அவளை வியப்புடன் பார்த்த நாயகி, "யம்மா நீயா சொன்ன! இன்னாம்மா இது ஒலக அத்சயமால்லகீது! ட்ரெஸ்க்குலாம் நீ போய் இம்மா இம்மார்ட்டன்ஸ் கொடுக்கற" என நாயகி அதிசயிக்க, "என்ன... இம்மார்... டன்ஸா" என மேனகா புரியாமல் கேட்க, "அதா என்னாமோ சொல்லுவாங்களே... ஆங்... முக்கியொத்தம்; அதான்" என அவள் தெளிவாக விளக்க, 'ஓ மை காட்... நாயகி... இம்பார்ட்டன்சா! தமிழே தகராறு! இதுல இங்க்லிஷ் வேறயா? அத புரிஞ்சிக்கணும்னா அது மேல அசிடைத்தான் ஊத்தணும்?" என்றவள், "என்ன பண்றது நாயகி? அந்த நேஹா போட்ற சீன் தங்க முடியலையே! அதனாலதான் அங்க போகும்போதாவது கொஞ்சம் கேர் எடுக்க வேண்டியதா இருக்கு" என்று முடித்தாள் மேனகா. "என்னாது... அந்த சந்ருவ பாக்க போறியா! ஒன்னும் தேவல்ல... அந்த ஆளு ஒன்னையும் என்னையும் பிரிச்சாரு இல்ல.. அஆங்" என முறுக்கிக்கொண்டாள் நாயகி. அன்று ஆஸ்ரமத்திலிருந்து திரும்பும் பொழுது பின் இருக்கையில் மேனகாவின் அருகில் உட்காரப்போன நாயகியைத் தடுத்து, "முக்கியமா பேசணும்; நீ முன்னால போய் உட்கார்" எனச் சொல்லிவிட்டு அங்கே உட்கார்ந்துகொண்டார் சந்ரமௌலி, அவளுக்குப் பிடிக்கவே பிடிக்காத ஆண் வர்கத்தின்... அதாவது அவருடைய பாதுகாவலர்கள் என்று சொல்லிக்கொள்ளும் அந்த குண்டர்களுக்குப் பக்கத்தில் அவளை உட்காரும்படி செய்துவிட்டார். சென்னை திரும்பும் வரை பேச... பேச என்ன பேச எதுவும் சாப்பிடக் கூட வாயைத் திறக்காமல் அவள் உட்கார்ந்து வந்த கொடுமை அவளுக்கு மட்டுமே தெரியும். அந்த கடுப்பில்தான் அவள் இப்படி சொன்னது. "ப்ச்... நாயகி! லூசு மாதிரி உளறாதே! அவர்தான் என் ரசர்ச்சுக்கு ஹெல்ப் பண்ண போறார்!" என்று சொன்னவளுக்கு அன்று சந்திரமௌலி பேசிக்கொண்டு வந்த விஷயங்கள் தற்செயலாக நினைவில் வந்தது. அவரது செல்வ நிலைக்கும் அவரது வயதுக்கும் யாரிடமும் போய் தன் மன கஷ்டங்களைப் பகிர்ந்துகொள்ள இயலவில்லை அவரால். என்ன காரணத்தினாலோ மேனகாவிடம் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்று தோன்றியதாம் அவருக்கு. அவர் மனைவி உமா. ஒரே மகன் விஸ்வா. அவருடைய தந்தை விஸ்வநாதன்தான் அவர்களுடைய அந்த வியாபார சாம்ராஜ்யத்திற்கு அடித்தளம் அமைத்தவராம். அவருடைய பெயரைச் சுருக்கி தன் மகனுக்கு வைத்ததாகச் சொன்னார் அவர். அவனுடைய வயதிற்கே உரிய ஆசாபாசங்களுடன், எல்லா மேல்தட்டு பிள்ளைகளைப்போல்தான் இருந்தானாம் விஸ்வா. 'பிசினஸ் மேனேஜ்மேண்ட்' படிப்பை முடித்துவிட்டு அவருக்கு உதவியாக பொறுப்புகளை ஏற்றவன் அதில் தன் பங்கை செவ்வனே செய்யவும் செய்திருக்கிறான். சில மாதங்களுக்கு முன் டூர் போவதாக சொல்லிவிட்டுப் போனவன், திரும்பவே இல்லை. என்ன நடந்ததோ தெரியவில்லை அந்த ஆசிரமத்துக்குச் சென்றவன் இந்த நிலையில் இருக்கிறான். இந்த நிமிடம் வரை அந்த தகவல் அவர் மனைவி உமாவிற்கு கூட தெரியாது. தெரிந்தால் உயிரையே விட்டுவிடுவார் அவர். மேற்கொண்டு இதைப் பற்றி வெளியுலகத்திற்குத் தெரியவந்தால் அவரது வியாபாரங்களில் பல சிக்கல்கள் வரும். சொல்லும் பொழுதே துக்கத்தில் தொண்டையை அடைத்தது பெரியவருக்கு. அந்த ஆசிரம நிர்வாகத்துக்கு எதிராக ஒன்றும் செய்ய முடியாமல் தவிக்கும் தன் இயலாமையைச் சொன்னவர், அடுத்து என்ன செய்வதென்றே புரியவில்லை என்று தழுதழுத்தார் சந்ரு. அவரை பார்க்கவே பாவமாக இருந்தது மேனகாவுக்கு. "வென் தேர் இஸ் அ வில்... தேர் இஸ் அ வே! கவலைப்படாதீங்க சார்! உங்க சன் விஸ்வாவை அங்க இருந்து எப்படி வெளியில கொண்டு வரலாம்னு யோசிக்கலாம்" அவரை அமைதிப் படுத்தும் விதமாகச் சொன்னாள் மேனகா! ஏற்கனவே அவளுக்குள் ஒரு திட்டம் உருவாகியிருந்தது. அதை மனதில் வைத்து அவள் அப்படிச் சொல்லவும், "எப்படி சொல்ற மேனகா! அவனை மீட் பண்ணா கூட அவன் மனசை மாத்த முடியது போலிருக்கே" நம்பிக்கையில்லாமல் அவர் பேசவும், "அப்படியில்ல! இன்னைக்கு நாம ஸ்ப்ரே பண்ண அந்த கெமிக்கல் ஹாஃப் மினிட்ஸ் மட்டும்தான் வேலை செய்யும். இதே இந்த கெமிக்கல் ஒரு டென் டு டுவென்டி ஹவர்ஸ் வேலை செஞ்சா... அவரை அந்த இடத்தை விட்டு வெளிய கூட்டிட்டு வந்துடலாம்! தென் சைக்கியாட்ரிஸ்ட் கௌன்சிலிங் கொடுத்தால் அவர் மனம் மாற சான்ஸ் இருக்கு" அவள் தன் எண்ணத்தைச் சொல்லவும் குதூகலமான சந்திரமௌலி, "அது முடியுமா?" என அதிக எதிர்பார்ப்புடன் கேட்க, "ட்ரை பண்றேன் சார்! அந்த கெமிக்கலை அப்க்ரேட் பண்ண எனக்குக் கொஞ்சம் டைம் வேணும்!" என அவள் சொல்ல, "நோ... நோ... என்னால ரொம்ப நாள் வெயிட் பண்ண முடியாது! சீக்கிரமா செய்ய முடியுமான்னு பாரு" அவர் பதைபதைக்க, நோ சார்... அது சரிப்பட்டு வராது. ஏன்னா அதை கின்னிபிக்ஸ் வெச்சு டெஸ்ட் பண்ணனும்! அதனால எதுவும் ஹாம்ஃபுல் எஃபக்ட்ஸ் இல்லன்னாதான் மனுஷங்களுக்கு யூஸ் பண்ணமுடியும்!" அவள் விளக்கமாகச் சொல்ல, "அப்படியா! பட் ரொம்ப லேட் பண்ணிடாத ஓகே" என வேறு வழி இல்லாமல் அதற்குச் சம்மதித்தார் அவர். "நம்ம லேப்லயே உனக்கு எல்லா ப்ரொவிஷன்ஸும் செய்து தர ஏற்பாடு பண்றேன்; பட் இந்த விஷயம் வெளியில தெரிய கூடாது; அது ரொம்ப முக்கியம்!" என அவர் கூடவே சேர்த்துச் சொல்லவும், "வேண்டாம் சார்! இதுக்கு என் லேப்பே போதும்!" என்றாள் அவள். இரவு பகல் பார்க்காமல் எந்த நேரம் வேண்டுமானாலும் அவளால் அந்த சோதனையில் ஈடுபட இயலும். அதனால்தான் அவள் அப்படிச் சொன்னது. "என்ன லேப் வெச்சிருக்கியா?" அவர் அதிசயிக்க, அவள் தன் வீட்டையே ஒரு ஆய்வுக்கூடமாக பயன்படுத்துவதைச் சொன்னாள் அவள். அவர் அரை மனதாக அவள் சொன்னதற்குச் சம்மதிக்க, மூன்று மாதங்களாக முயன்றுகொண்டிருக்கிறாள் மேனகா. ஆனால் அந்த ரசாயனம் அவர்களுக்கு போதுமான நேரக் கணக்கிற்கு செயல்படவில்லை. ஏற்கனவே வீடியோ கால் மூலம் அவளை ஒரு வழி செய்துகொண்டிருக்கிறார் சந்திரமௌலி. எப்படியும் நேரில் போனால் குதறி எடுத்துவிடுவார் மனிதர். ஆனாலும் அவரை சந்திக்காமல் இருக்க இயலாது. கொஞ்சம் அக்கறை எடுத்து தன்னை அலங்கரித்துக்கொண்டு கிளம்பி வந்தாள் மேனகா. வழக்கமாக அணியும் ஜீன்ஸ் குர்த்திதான். ஆனால் நாயகியின் புண்ணியத்தில் நேர்த்தியுடன் இருந்தது அது. அவள் கூந்தலைச் சற்று சரி செய்தவள், "ஷோக்காகீர யம்மா! எங்கண்ணே பற்றும் போல" என்றவள், "பாத்து போய்க்கினு வா" என்று சொல்லி மேனகாவை வழி அனுப்பி வைத்தாள் நாயகி. *** அவள் உள்ளே நுழைந்ததுமே, "வாவ்! லூக்கிங் குட்! இப்பதான் இந்த அட்மாஸ்பியருக்கு செட் ஆகற மேனகா" என்றாள் நேஹா வஞ்சப்புகழ்ச்சி அணியில். "ப்ச்... என்ன பண்றது நேஹா; உன்னை மாதிரி மேக்கப்கே வாழ்நாள்ல பாதியை என்னால வீணாக்க முடியாது" அவள் போக்கிலேயே அவளுக்குப் பதில் கொடுத்தவள் அவள் முகம் போன போக்கைப் பார்த்துக்கொண்டே, "சந்ரு சார் எங்க இருக்கார்" என்று கேட்க, "சார் இப்ப அவரோட ரூம்ல ரெஸ்ட் எடுத்துட்டு இருக்கார்! எல்லாரையும் அங்க அலவ் பண்ண மாட்டார்; கொஞ்சம் இரு! நான் போய் அவர் கிட்ட இன்ஃபார்ம் பண்றேன்! அவர் வர வரைக்கும் வெய்ட் பண்ணு" என்று சொல்லிவிட்டு அவருடைய பிரத்தியேக அறை நோக்கிச் சென்ற நேஹா, அவருடைய அறையின் கதவைத் தட்டிவிட்டு அவர் அழைக்கவும் உள்ளே சென்றாள். "சார்... அந்த மேனகா வந்திருக்காங்க" என்று அவள் சொல்ல அதில் சுறுசுறுப்பானவர், "போ... போ... அவளை உடனே இங்க வரச்சொல்லு" என்றவர், "ஹாங்... நான் அந்த பொண்ணுகிட்ட கொஞ்சம் தனியா பேசணும்; அதனால கொஞ்ச நேரத்துக்கு இங்க யாரும் வராதீங்க; நோ எனி ஃபோன் கால்ஸ்" என்று அவர் சொல்ல அதைக் கொஞ்சமும் நம்ப முடியவில்லை நேஹாவால். அவளையும் அவருடைய மருத்துவர் மற்றும் இரு பாதுகாப்பு அதிகாரிகளையும் தவிர அங்கே யாரையும் அனுமதிக்கமாட்டார் அவர். அவளையே அங்கே வரவேண்டாம் என அவர் சொல்லவும் அவளது முகம் சிறுத்துப்போனது. வேண்டா வெறுப்பாக மேனகாவை நோக்கி வந்தவள், "சார் உன்னை வரச்சொன்னார்" என்று கொஞ்சம் கடுப்புடன் சொல்லிவிட்டு அவளை அழைத்துச்சென்று அவரது அறையைக் காண்பித்தாள் நேஹா. கதவைத் தட்டிவிட்டு அவள் உள்ளே நுழைந்த நொடி, "என்னம்மா... உன் பேச்சை நம்பிட்டு இருக்கேன் நான்; நீ என்ன இப்படி பொறுப்பில்லாம இருக்க?" அவள் எதிர்பார்த்து வந்தது போலவே சீறிப் பாய்ந்தார் அவர். அவர் அப்படிப் பேசியதை கூட கருத்தில்கொள்ள இயலாமல் அவரை பார்த்ததும் கொஞ்சம் அதிர்ந்துதான் போனாள் மேனகா! அந்த மூன்று மாதத்தில் மெலிந்து களையிழந்து போயிருந்தார் அவர். "சார்! உடம்பு சரியில்லையா?" அவளது குரலில் வெளிப்பட்ட உண்மையான அக்கரையில் கொஞ்சம் நெகிழ்ந்தவர், "உடம்புக்கு என்ன? எப்பவும் இருக்கற பீப்பீதான். மனசுதான் கொஞ்சம் சோர்ந்துபோயிருக்கு மேனகா. யாருக்காக இதெல்லாம்னு தோணுது" என்றார் இயலாமையுடன். "சார்! கவலை படாதீங்க! கிட்டத்தட்ட முக்கால் கிணறு தாண்டிட்டேன்! இன்னும் ஒன் வீக் ஆர் டென் டேஸ்ல அந்த ஹனிபீ பிரைன் அட்ராக்ஷன் ஸ்ப்ரே பக்கவா ரெடி ஆயிடும்! லாஸ்ட் டைம் டெஸ்ட் பண்ணது ஃபைவ் டு செவன் ஹார்ஸ் ஒர்க் ஆகுது! இப்ப அப்க்ரேட் பண்ணி அதை இன்னைக்குத்தான் ஒரு கின்னிபிக்குக்கு ஸ்ப்ரே பண்ணியிருக்கேன். இன்னைக்குள்ள ரிசல்ட் தெரிஞ்சிடும்! சீக்கிரமாவே உங்க சன்ன அங்க இருந்து வெளியில கொண்டுவந்துடலாம்" என அவருக்கு ஆறுதல் கொடுக்கும் வண்ணம் அவள் சொல்லிக்கொண்டிருக்க, அவளது கைப்பேசி ஒலித்தது. "சொல்லு நாயகி" என்றவாறு அவள் அழைப்பை ஏற்க, எதிர் முனையில் 'வீல்' என்ற அலறல் கேட்கவும், "ஏய் நாயகி! என்ன ஆச்சு?" எனப் பதறினாள் மேனகா. 'வீல் வீல்' என்ற கத்தலுடன், "யம்மா... யம்மா!" என அவள் அலறவும், "ஏய் நாயகி! ஏதாவது ஆசிடை மேல கொட்டிகிட்டயா! கிளாஸ் எதாவது உடைஞ்சு குத்திடுச்சா? ஒழுங்கா சொல்லி தொல" என மேனகா பதற, சந்திரமௌலி வேறு அவளை 'ஐயோ' எனப் பார்த்துக்கொண்டிருந்தார். "யம்மா... வெள்ள எலி! வெள்ள எலி! ஆ... கூண்டு தெரியாத்தனமா கை பட்டு தொறந்துகிச்சு. அதுல இருந்த வெள்ள எலி வெளிய ஓடியாந்துச்சும்மா! ஆ... ஆ... இங்கயும் அங்கேயும் குத்சி ஓடுது" எனக் கத்தினாள் நாயகி. 'ஐயோ இவ எந்த எலியை வெளிய விட்டிருக்களோ தெரியலையே' எனத் தலையில் கையை வைத்துக்கொண்டாள் மேனகா.
Comentarios