top of page

Virus 143 (5)

143 அட்டாக்-5


மேனகாவின் மீது ஒரு தீ பார்வையை வீசிய சந்திரமௌலி, "வாட் இஸ் திஸ் மேனகா?" எனக் கோபமா இல்லை வருத்தமா எனப் பகுத்தறிய முடியாத ஒரு தொனியில் கேட்க, நாயகியைப் பார்த்து மேனகா முறைத்த முறைப்பில் கப்சிப் என அந்த ஹெலிகாப்டரில் அவளுக்கென்று ஒதுக்கப்பட்ட இருக்கையில் போய் உட்கார்ந்துகொண்டாள் அவள். மேனகா அவளுக்கு அருகில் போய் உட்கார அவளைப் பீடித்தது ஏழரை நாயகியின் உருவில். "யம்மா எனக்கு ஜன்னல் சீட் குடுத்துரு; வாய்மிட்டு வந்துதுன்னா வசதியா இருக்கும்!" நாயகி ஆரம்பிக்க, "நாயகி! இது ஒண்ணும் பஸ் கிடையாது! ஒரு ஒன் ஹவர் குள்ள அங்க போய் சேர்ந்துடுவோம்! அது வரைக்கும் உன் வாட்டர் பௌண்டைனை கொஞ்சம் மூடு!" என அவளை அடக்கினாள் மேனகா. அதற்குள் அனைவரையும் ஏற்றிக்கொண்டு அந்த ஹெலிகாப்டர் மேலே எழும்ப, மேனகாவின் கையை அழுத்தமாகப் பிடித்துக்கொண்டு அதில் முகத்தை பதித்தவாறே, "பாடிகாட் முனீஸ்வரா! மலையனூரு அங்காளம்மா! திருவேற்காடு கருமாரியம்மா! மயிலாப்பூர் முண்டகண்ணியம்மா! நீங்க அல்லாரும்தான் என்னை காப்பாத்தணும்!" என அத்தனை தெய்வங்களையும் துணைக்கு அழைத்தாள் நாயகி! அவள் போட்ட சத்தத்தில் அந்த ஹெலிகாப்டரை செலுத்திய விமானிக்கே சற்று கைகள் நடுங்கியதென்றால் அது மிகையில்லை. "ஓ மை காட் மேனகா!" என நாயகி தமிழில் வேண்டிக்கொண்டதை போலச் சந்திரமௌலி ஆங்கிலத்தில் வேண்டிக்கொள்ள, அவரது வேண்டுதல் நாயகிக்கானதாக இருக்க, அவருக்கு அருகிலேயே உட்கார்ந்திருந்த அவரது மருத்துவர் அவரது ரத்தக்கொதிப்பைச் சரி பார்க்கத் தொடங்கிவிட்டார். "ஏய் தொல்ல! நீ இதே மாதிரி கத்திட்டே இருந்த வை... இப்ப டெம்பரரியா இருக்கற இந்த ஆம்பள வாய்ஸை பர்மனன்டா மாத்திருவேன் பார்த்துக்க!" அவள் சொல்ல, அவள் தொல்லை என்று அழைத்ததில் கடுப்பானவள், "யம்மா! எது சொல்றதுனாங்காட்டியும் தமில்லையே சொல்லு! இப்படி தஸ்ஸு புஸ்ஸுன்னாக்க எனக்கு... மயக்கமா வருது" அவள் ஆட்டம் அடுத்த கட்டத்திற்குப் போக, "ஏய்... உன் குரல் உனக்கு இனிமேல் திரும்ப வராம செஞ்சிருவேன்! பரவாயில்லையா?" அவள் தெளிவாக மிரட்ட, கொஞ்சம் அடக்கி வாசித்த நாயகி, "யம்மா... சும்மானாச்சும்தான சொல்ற?" என்று பம்ம, "நீ வாய திறந்த... நிஜமாவே செஞ்சு...ருவேன்" அவளது அந்த மிரட்டலுக்குப் பலன் இருந்தது, வெறும் பத்து நிமிடங்களுக்கு மட்டுமே. வெறும் பத்து நிமிடங்களே கடந்த நிலையில், மேனகாவின் கையை மெல்லியதாகச் சுரண்டிய நாயகி, "யம்மா! லேசா பசிக்கிற மாரி வவுரு கவாங்கவாங்குன்னு சத்தம் போடுது" மிகவும் பயப்படுபவள் போல மெல்லிய குரலில் சொல்ல, "நாயகி இது உனக்கே ஓவரா தெரியல... வஞ்சனை இல்லாம ஃபுல் மீல்ஸை ஒரு கட்டு கட்டிட்டுதான வீட்ல இருந்து கிளம்பின! அதுக்குள்ள இப்படி பண்ணா என்ன அர்த்தம்" கெஞ்சத்தொடங்கினாள் மேனகா. "இதுக்குனாங்காட்டியுந்தான் புலி சோறு கொஞ்சம் கட்டி எடுத்தாரலான்னு சொன்னேன்! கேட்டியாம்மா நீ! அஆங்!" குரலை உயர்த்தினாள் நாயகி. "மகாபலிபுரத்தை சுத்தி பாக்கவா போயிட்டு இருக்கோம் புளி சாதம் எலி சாதம்ன்னுட்டு... வேணா இந்த முறுக்கு அதிரசம் இதெல்லாத்தையும் எடுத்துட்டு வந்திருக்கறதுதான" அவள் நொடித்துக்கொள்ள... "அங்காங் ம்மா... இது நல்ல ரோசனயா இருக்கு... பேசாம முறுக்கு அதிரசம் சுட்டு எடுத்துக்கினு வந்துருக்கலாம்" என்ற நாயகியை கடுப்பிலும் கடுப்பாக பார்த்த மேனகா. கையை தலையில் முட்டுக்கொடுத்தவாறு பரிதாபமாக அமர்ந்திருந்தாள். அந்த நேரம் பார்த்து, ஒரு கூடையில் வெகு நேர்த்தியுடன் அலங்கரிக்கப்பட்டு சீராக அடுக்கிவைக்கப்பட்டிருந்த பலவிதமான பழங்கள் நாயகியின் கண்களைப் பறித்தன. குதூகலத்துடன், "யம்மா!" என்று கூவியவள், "அங்க பாரேன்! வித விதமா பயங்கோ! ஆபில்லு... கமலா பயம்... யம்மா... யம்மா... அதுல ஒண்ணே ஒண்ணு சுட்டுக்கவா" நாவில் நீர் ஊற நாயகி கேட்கவும், "ஏய் லூஸு! அது சந்திரமௌலி சாருக்கு வேண்டப்பட்ட ஒருத்தர் அந்த ஆஸ்ரமத்துல இருக்காருன்னு சொன்னேன் இல்ல? அவருக்கு கொடுக்க ஸ்பெஷலா ரெடி பண்ணியிருக்கற ப்ரூட் பொக்கே!" என்றாள் மேனகா. "இன்னாது ப்ரூட்டு பொக்கையா? பயத்த பயம்னு சொல்லாம இது என்னாம்மா இது புது கூத்தாக்கீது!" அந்த பழத்தைத் தொட்டுப்பார்க்கக் கூட முடியாத கடுப்பில், அப்படிக் கேட்டாள் நாயகி. "ஏய்! அது பொக்கை இல்ல பொக்கே; அதாவது பூ கொத்து மாதிரி. ஆங்... இந்த சினிமால எல்லாம் ஹீரோ ஹீரோயினுக்கு குடுப்பானே! அது மாதிரி இது பழத்துல செஞ்ச பொக்கே!" என மேனகா விளக்கவும், "ஏம்மா... இந்த பூ பொக்கைய விட இந்த பய பொக்க குடுத்தா நல்லாத்தான் இருக்கும். இப்படி பசியெடுக்கற காட்டியும் ஒண்ண வாயில போட்டுக்கலாம்! இதே பூவாயிருந்தா பிச்சு துண்ண முடியுமா சொல்லு." அவள் தீவிரமாகச் சொல்ல, "ஏய் இந்த பொக்கே மட்டுமே எவ்வளவு ரூபா தெரியுமா? எட்டாயிரம் பத்தாயிரம் இருக்கும்! அசால்ட்டா சொல்ற" மேனகா சொல்ல, வாய் பிளந்தாள் நாயகி. அதன் விலையைக் கேட்டதும் அவளது சிறு பசி கூட மறந்துபோய்விட்டது அவளுக்கு. "யம்மா... நான் ஒரு முடிவு பண்ணிட்டேன்! நாம ஊருக்கு திரும்பி வந்தாங்காட்டியும் நீயும் நானும் சேந்துகினு இந்த மாதிரி பொக்க செய்யற கடை வெச்சு... ஆயரம் ஆயரமா சம்பாத்தியம் பண்றோம்! சொல்லிப்புட்டேன்! அஆங்.. இதுல இருக்கற பயமெல்லாம் கோயம்பேடு மார்க்கெட்டுல மொத்தமா வாங்கினா கூட ஒரு முன்னூறு ரூபா தேறாது! கொள்ள லாபமால்ல கீது... இந்த கூட; கவரு... இந்த புல்லு... பூவு... எல்லாத்தையும் சேர்த்தா கூட... ஐநூறு ரூபா தேராதே! ஏம்மா இந்த சந்திரமோலி என்ன லூசா! இப்புடி ஏமாந்து போய் வாங்கிக்கிறாரு?" படு பயங்கரமாகக் கணக்குகள் போட்டு, வாயால் ஒரு புது வியாபாரத்தையே தொடங்கிவிட்டாள் நாயகி. இந்த அழகில் அவள் மேனகாவின் பக்கமாகச் சாய்ந்து பேசும்போதெல்லாம் நாயகி ஒட்டியிருந்த தாடி அவளை இம்சை செய்ய அவளைத் தள்ளித் தள்ளி விட்டுக்கொண்டிருந்தாள். ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் போக, "ஏய்! சீ கொஞ்சம் நகரு. எது பேசறதா இருந்தாலும் ஒரு அடி தள்ளி இருந்தே பேசு! ஏற்கனவே குரல் வேற ஆம்பள குரலா இருக்கு! இந்த தாடி வேற! எனக்கே ஒரு மாதிரி இருக்கு" கடுப்படித்தாள் மேனகா. "இன்னா மே! உன்கூட படா பேஜாரா போச்சி! அங்க மட்டும் என்ன வாளுதாம்? நீ மாத்தரம் பொம்பள கணக்காவாக்கீற! இத நானும் சொல்லிக்கலாம் இல்ல! ரொம்பதான் பண்ற" என முணுமுணுத்துக்கொண்டே நாயகி இருக்கையில் சாய்ந்து சில நிமிடங்களில் அப்படியே உறங்கிப்போனாள். புயல் அடித்து ஓய்ந்த மாதிரி இருந்தது மேனகாவுக்கு. அவர்கள் உரையாடல்கள் பெரும்பாலும் குசுகுசுவென்று இருக்க, மற்றவர்கள் யாரும் அவர்களைக் கண்டுகொள்ளவே இல்லை. அவர்கள் இருக்கை பின்னால் ஒரு மூலையில் இருக்க, அது கொஞ்சம் வசதியாகப் போனது இருவருக்கும். 'அந்த நடு காட்டுல போய் இறங்கற வரைக்கும் இவ இப்படியே தூங்கிட்டே வரணும்!' என்ற யோசனையுடன் அவள் கண்களை மூட, அந்த ஒரு நொடிக்குள் அவளது சிந்தனையை ஆக்கிரமித்தான் அன்றைய அதிகாலை அவள் கனவைக் தனதாக்கியவன். அதுவரை அவள் ஏதோ ஒரு விதத்தில் பரபரப்பாக இருக்கவே அந்த கனவைச் சுத்தமாக மறந்துபோயிருந்தாள். இதற்கிடையில் அவளுக்கு ஓய்வாகக் கிடைத்த அந்த ஒரு நொடியைக் கூட களவாடிப்போனான் அந்த பெயர் தெரியாத யாரோ ஒருவன். ஏனோ அவன் முகம் அவளை விதிர் விதிர்க்க வைத்தது. இந்த தொல்லை நாயகி கொடுக்கும் தொல்லையை விட அந்த கனவு நாயகன் கொடுக்கும் தொல்லை கொஞ்சம் அதிகமாகத்தான் தோன்றியது அவளுக்கு. அவள் அந்த மனநிலையிலேயே இருக்க, அன்றைய பொழுதில் சரியான உறக்கம் இல்லாததாலோ என்னவோ அவளது கண்கள் தானாக சொருகியது. சரியாக அதே நேரம் தரையிறங்கியது அந்த ஹெலிகாப்டர். அதில் நாயகியின் உறக்கம் கலைய, "யம்மா! முச்சிக்க! நாம எறங்க வேண்டிய இஸ்டாப்பிங் வந்துடுச்சாங்காட்டியும்! வா எறங்கலாம்!" அவள் மேனகாவை உலுக்கவும் அலறி அடித்துக்கொண்டு கண்விழித்தாள். தட்டுத் தடுமாறி நாயகியின் கையை பிடித்துக்கொண்டு அவள் கீழே இறங்க, மசமசவென்று காட்சிகள் மங்கலாகத் தெரிந்தது. கண்களை நன்கு தேய்த்துக்கொண்டு சுற்றிலும் பார்த்தவள் அதிசயித்து போனாள். அவள் கனவில் கண்ட அதே வனம் கொஞ்சமும் மாற்றமில்லாமல் அவளுக்கு முன்பாக விரிந்திருந்தது. அவளுடைய மனம் அனிச்சையாக அந்த கனவு நாயகனை எண்ணி ஏக்கம் கொள்ள, கண்கள் அவனைத் தேடியது. அந்த பொன் அந்தி நேரத்தின் தொடக்கத்தில் அவர்கள் அங்கே தரையிறங்கவும், அவர்கள் அங்கே வருவதை முன்கூட்டியே தெரியப்படுத்தியிருந்த காரணத்தால், கழுத்தில் தொடங்கி பாதம் வரை புரளும் ஒரு நீண்ட காவி அங்கியை அணிந்து, தலையில் ஒரு மிகப்பெரிய கொண்டையுடன், வஞ்சனை இல்லாமல் அதுவும் குறுக்காக வளர்ந்திருந்த அந்த ஆசிரமத்தின் பணியாளர் ஒருவர், அந்த உடம்பை தூக்கிக்கொண்டு ஓட முடியாமல் அவர்களை நோக்கி ஓடி வந்தார். அவர் நிர்மலானந்தாவின் கடைநிலை சீடர்களில் ஒருவரும் கூட. "வாங்க.. வாங்க.. குருஜி உங்களுக்கு எல்லா வசதியும் செஞ்சு கொடுக்க சொல்லி அருள்பாலிச்சிருக்கார்! நிர்மலாஆஆஆஆனந்தம்!" என்றவாறு அவர்களை அங்கே இருந்த ஒரு குடிலுக்குள் அழைத்துப் போனார் அவர். "விஷ்வாவுக்கு நாங்க வரது தெரியுமா?" எனச் சந்திரமௌலி அவரிடம் கேட்க, "அது எனக்கு சொல்லப்படல" என அவர் பதில் கொடுக்க, "அட்லீஸ்ட் நான் அவனைப் பார்க்க வந்திருக்கேன்...னாவது உங்களால அவன்கிட்ட சொல்ல முடியுமா?" எனக் கடுப்புடன் கேட்டார் சந்ரு. "அவர் எங்களோட சின்ன ஸ்வாமிஜி விஸ்வாமித்ரானந்தா. அவரை இப்படி அவன் இவன் அப்படின்னெல்லாம் பேசுவது தகாது!" என சிறு அறிவுரையை அவருக்கு வழங்கி அவரது ரத்தக்கொதிப்பை கொஞ்சம் ஏற்றிவிட்டு, "அவர் இப்ப நடை பயிற்சியில் ஈடுபட்டிருப்பார்! திரும்பி வர குறைஞ்ச பட்சம் ரெண்டு மணி நேரமாவது ஆகலாம்! அதுக்கு பிறகு அவர் சிவ பூஜையில் ஈடுபடுவார்! அதுக்கு பிறகுதான் இந்த தகவலை அவர்கிட்ட சொல்ல முடியும்! அவர் உங்களை சந்திக்கறதும் சந்திக்காம போறதும் அவருடைய சித்தம்" என படுபவ்யத்துடன் சொல்லிவிட்டு, அங்கிருந்து அவர் செல்ல எத்தனிக்க, 'டேய்... இன்னைக்கு என் மகன் என்னை வந்து மீட் பண்றது அவனோட சித்தமோ பித்தமோ இல்லடா! என்னோட தந்திரம்! அவனை இங்க வரவழைக்கற வித்தையை கையோட எடுத்துட்டு வந்திருக்கேன்' என மனதிற்குள் எண்ணியவர், "ஒரு நிமிஷம்" என அவரை தடுத்து, "அட்லீஸ்ட் இந்த பொக்கேவ உங்க சின்ன ஸ்வாமிஜிகிட்ட சேர்த்திட முடியுமா" என அவர் கேட்க, "இதுக்கு எந்த தடையும் இல்ல!" என்றவர் அதை அவரிடமிருந்து வாங்கிக்கொண்டு, காயா மாயா சிவஸ்ய சாயா" என்றவாறு அவர் அங்கிருந்து சென்றுவிட, அவர் உச்சரித்த கா-மா-சி-சாயாவில் சர்தார்ஜி வேடத்திலிருந்த தொல்லை நாயகியின் கண்கள் விஷமமாக மின்னியது. அவர் அங்கிருந்து அகன்றதும் அவசர அவசரமாக தன் மடிக்கணினியை உயிர்ப்பித்த சந்திரமௌலி, அதிலிருந்த ஒரு காணொளி செயலிக்குள் நுழைந்து, "மேனகா... இங்க கொஞ்சம் வாம்மா" என தன் கையிலிருந்த ரிமோட்டை சரிசெய்துகொண்டிருந்தவளை அருகில் அழைத்தார். அவள் அந்த கணினியின் திரையைப் பார்க்க, அதற்குள் அந்த 'ஃப்ரூட் போக்கே'வுடன் பொருத்தப்பட்டிருந்த காணொளி கருவி செயல்படத் துவங்கியிருந்தது. அதில் அந்த குண்டு சிஷ்யரின் முகம் 'கிளோஸ் அப்'பில் படு பயங்கரமாகக் காட்சி அளித்தது. மேலும் அது அவர் செல்லும் வழித்தடங்களைப் பட்டும் படாமலும் காட்சிப்படுத்திக்கொண்டிருக்க, அழையா விருந்தாளியாக அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்தாள் நாயகி. சில நிமிட நடைக்குப் பிறகு அவர் மற்றுமொரு குடிலுக்குள் நுழைவது தெரிந்தது. ஒருவேளை விஸ்வா அங்கே இருப்பானோ என்ற ஏக்கத்துடன் சந்ருவின் பார்வை கூர்மை அடைய, 'கா-மா -சி-சாயா! நிர்மலானந்தம்' என்கிற துதியுடன் தொடங்கி, "ஸ்வாமிஜி! நம்ம விஸ்வாமித்ரானந்தா ஸ்வாமிஜியோட பூர்வாஸ்ரம ஃபாதர் மிஸ்டர் சந்திரமௌலி வந்துட்டார்! அவர் இந்த பழக் கூடையை நம்ம சின்ன ஸ்வாமிஜி கிட்ட கொடுக்கச் சொன்னார்" என்று அந்த குண்டு சிஷ்யர் சொல்ல, அந்த பழக்கூடையை எட்டிப் பார்த்தார் அவருக்கு எதிரில், சிம்மாசனம் போன்ற ஒரு இருக்கையில் உட்கார்ந்திருந்தவர்! அதாவது ஸ்வாமி நிர்மலானந்தா! "நல்லது! இதை சின்ன ஸ்வாமிஜியோட பூஜைல கொண்டு போய் வை! நைவேத்தியம் முடிஞ்சதும் எல்லாருக்கும் பிரசாதமா கொடுக்கலாம்" என்று அவர் சொல்லிக்கொண்டிருக்க, அந்தத் திரையில் அவரை பார்த்த பரவசத்தில், "நிர்மலானந்தம்! மாயா... சாயா... சிவாய காயா" என்று உளறிக்கொட்டியவாறு அப்படியே அந்த திரைக்கு முன்பாக விழுந்து பணிந்தாள் நாயகி. "ஏய்! நாயகி! கொஞ்சம் அடங்கு!" என அவளை இழுத்து அடக்கியவள், "தொல்லை பண்ணாம; பேசாம போய் ஒரு ஓரமா உக்காரு" என அவளிடம் எரிந்து விழுந்தாள் மேனகா. அவள் உர்ரென்று போய் ஓரமாக நின்றுகொள்ள, அவர்கள் கவனம் அந்த காணொளியில் திரும்பியது. சில நிமிடங்களில் விஸ்வா பூஜை செய்ய தயார்ப்படுத்திக்கொண்டிருந்த இடத்தில் கொண்டு போய் அந்த 'பொக்கே' வைக்கப்பட, ஒரே கட்சியில் அந்த காணொளி கருவி நிலைத்திருக்க, அப்பொழுதுதான் கவனித்தாள் மேனகா, நாயகி அங்கிருந்து 'நைஸ்'ஆக எங்கோ 'எஸ்'ஆகி இருப்பதை. எப்படியும் அந்த விஸ்வா அவனது நடைப்பயிற்சியை முடித்துக்கொண்டு பூஜைக்கு வந்துசேர சில மணித்துளிகள் ஆகும் என்பது நினைவிலிருக்க, 'எங்க போய் தொலைஞ்சா இந்த தொல்லை பிடிச்சவ?' என்ற எண்ணத்துடன், நாயகியை தேடிக்கொண்டு அந்த குடிலிலிருந்து வெளியில் வந்தாள் மேனகா. நாயகியைத் தேடிக்கொண்டே அவள் சிறிது தூரம் நடக்க, அவளது செவிகளை ஈர்த்தது சலங்கையென சலசலத்த ஒரு நீரோடையின் சத்தம், அவளது கனவில் கேட்டதை போலவே. ஒரு உந்துதலில், சத்தம் வந்த திசையை நோக்கி அவள் போக, அங்கே இன்பமாய் ஓடிக்கொண்டிருந்தது அந்த காட்டு ஓடை. கண்கள் அவளது நாயகனைத் தேட ஆவலாக அந்த நீரில் அவள் கால் வைக்கவும், அதன் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமலோ, அவளுக்கு ஏற்பட்டிருந்த ஒரு இன்ப படபடப்பின் காரணமாகவோ அவள் நிலை தடுமாறி விழப்போக, பயத்தில் கண்களை மூடிக்கொண்டு அலறினாள் அவள். அப்பொழுது சரியாக அவளைத் தாங்கி பிடித்தன அவளது நாயகனின் வலியக் கரங்கள். 'இப்படி கூட ஒரு கனவு பலிக்கக்கூடுமா?' என்ற வியப்புடன், அவள் கனவில் கண்ட அவளது நாயகனின் முகத்தைக் காணும் ஆவலில் அவள் தன் கண்களை விரிக்க, அவளது முகம் அஷ்ட கோணலாக மாறியது. காரணம் அவளைத் தாங்கிப்பிடித்திருந்தவன் ஒரு கதாநாயகனாக இல்லாமல் காவியும், கொண்டையும், மீசையும் தாடியுமாகக் காட்சி அளிக்கும் ஒரு இளம் சாமியாராக அல்லவா இருந்தான்! அவன் எங்கே கனவில் கண்டது போல் தன்னை முத்தமிட்டுவிடுவானோ என்ற பதட்டத்தில் அவள் மருண்டு அவனிடமிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள, கொஞ்சமும் பதட்டமில்லாமல், "என்ன சர்தார்ஜி! இப்படி கேர் லஸ்ஸா வந்து தண்ணீல கால் வெச்சுடீங்க! சமயத்துல இதுல விஷ பாம்பெல்லாம் வருமே" என அந்த சாமியார் சொல்ல, "என்ன பாம்பா?" என்று அலறிக்கொண்டு சில அடிகள் பின்வாங்கியவளுக்கு அப்பொழுதுதான் தன் வேஷம் நினைவுக்கு வர, ‘ஏய் லூசு மேனகா... நீதான் ஆம்பள கெட்டப்ல இருக்கியே... அப்பறம் அவன் ஏன் உன்னை கிஸ் பண்ண போறான்... வரவர உனக்கு மூளை படு ஸ்லோவாயிடுச்சு’ என தன்னைத் தானே நொந்துகொண்டு அவள் நாயகியைத் தேடிக்கொண்டு போக, "பத்திரமா உங்க குடிலுக்கு போய் சேருங்க" என்று சொல்லிவிட்டு அவளைத் திரும்பியும் பார்க்காமல் அங்கிருந்து சென்றார் விஷ்வாமித்ரானந்தா ஸ்வாமிஜி. அந்த நேரம் அவர்தான் சந்ரமௌலியின் ஒரே புதல்வன் விஸ்வா என்றும் இங்கே அவனை சந்திக்கத்தான் அவர் அவளைப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார் என்றும் அவளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

0 comments

コメント

5つ星のうち0と評価されています。
まだ評価がありません

評価を追加
© KPN NOVELS COPY PROTECT
bottom of page