top of page

Virus 143 (2)

வைரஸ் அட்டாக்-2

இன்னும் சில மணி நேரங்களில் தமிழக மண்ணில் தரையிறங்கக் காத்திருந்தது 'ஏர்சேரியட் ஏ.சி.ஜே319' என்ற பெயரைத் தாங்கிய அந்த சார்ட்டர்ட் விமானம்! அந்த தனிவிமானத்தில் சொகுசாகப் பயணித்து வந்து கொண்டிருந்தார் உலகம் முழுவதும் கோலோச்சிக்கொண்டிருக்கும் 'வீ.என்' குழும நிறுவனங்களின் தலைவரான சந்திரமௌலி. உலக பணக்காரர்களின் வரிசையில் அவருக்கென்று ஒரு முக்கிய இடம் இருந்தது. 'வீ.என்' குழுமத்திற்கு உரித்தான தொழில்களின் பெயர் பட்டியல்களைப் படிப்பதற்குள் ஒருவருக்கு தலையே சுற்றிப்போகும். அந்த அளவிற்கு அந்நிறுவனம் கால் பாதிக்காத வியாபார துறையே இல்லை எனலாம். முக்கியமாக, உலக நாடுகள் பலவற்றிலும் அவர்கள் நிறுவனத்துக்குச் சொந்தமான 'விஸ் ஜெனிட்டிகல் ரிஸர்ச் லேப்'பின் ஆராய்ச்சி கூடங்கள் பரவிக் கிடந்தன. அவற்றில் மிக முக்கியமானதாக விளங்குகிறது 'வீ.என் மருத்துவக் கல்லூரியும் அதனுடன் இணைந்த 'விஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் பயோ மெடிக்கல் ரிசர்ச்' ஆராய்ச்சி கூடமும். அதில் நவீன உபகரணங்களுடன் புதிதாகக் கட்டி முடிக்கப்பட்டிருக்கும் ஒரு முக்கிய 'ஸ்டெம் செல் ரிஸர்ச் லேப்' கட்டிடத்தைத் திறந்துவைக்க லண்டனிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்தார் அவர். பலதரப்பட்ட வணிகம் சார்ந்த அவரது சிந்தனை முழுவதையும் தூரமாகத் தள்ளி வைத்துவிட்டு அவர் மூளையை மொத்தமாக ஆக்கிரமித்திருந்தான் அவருடைய செல்வப் புதல்வன் விஸ்வா! இப்படி ஒரு சூழல் வருமென்று தெரிந்திருந்தால் அவரது ராஜலீலைகளை கொஞ்சம்குறைத்துக்கொண்டிருப்பாரோ என்னவோ?! அறுபதினாயிரம் மனைவியரைக் கொண்ட தசரதன் பெற்ற மகன் போலல்லவா இருக்கிறான் அவன். ராமனாவது ஒரு திருமணத்தைச் செய்துகொண்டு ஏக பத்தினி விரதம் காத்தவன். அவனையே மிஞ்சி நிற்கிறானே இவரது தனயன். சரியாக மூன்று மாதங்கள் இருக்கும் அவர் அவனை அதுவும் அப்படி ஒரு இடத்தில் அந்த சூழ்நிலையில் சந்தித்தது. நினைக்கும்போதே மனம் வலித்தது அவருக்கு. உலகம் முழுவதும் எந்த நாட்டின் எல்லையைக் கடக்கவும் யாருடைய அனுமதிக்கும் காத்திருக்க வேண்டாம் என்ற சூழ்நிலையிலிருப்பவரைத் தென்னிந்தியாவின் ஏதோ ஒரு மூலையில், ஏதோ ஒரு காட்டுக்குள் அமைந்திருக்கும் ஒரு ஓலை குடிலில் பெற்ற மகனைக் காண்பதற்காக சில மணி நேரம் காத்திருக்க வைத்த விதியை எப்படி நோக? அன்று கண்களை மூடி அமர்ந்திருந்தவர்,"காயா... மாயா... சிவஸ்ய சாயா!" என்ற குரலில் திடுக்கிட்டுக் கண்களைத் திறக்க, பக்தி பழமாக அவருக்கு எதிரில் நின்றுகொண்டிருந்தான், அவரது ஏகப்பட்ட கோடிகள் மதிப்பிலான மொத்த சொத்துக்களையும் கட்டி ஆள வேண்டிய அவருடைய ஏக வாரிசு. கிட்டத்தட்ட ஏழெட்டு மாதங்களாகத் திருத்தப்படாமல் காடென வளர்ந்திருந்த கேசத்தை அடக்கி அவன் போட்டிருந்த குடுமியும், அவன் மீது வந்த அதிகப்படியான திருநீற்று மணமும், அவனது உடையும் அவரை முகம் சுளிக்க வைத்தன. பன்னாட்டு வணிகம் பேசும் அவருடைய நாக்கு தன்னிச்சையாகத் தாய்மொழியில் சரளமாக நாட்டியமாட, "கருமம்; கருமம்; இது என்னடா டிரஸ்? பொண்ணுங்க போடற கவுனை போய் மாட்டியிருக்க? கடவுளே?" என தடுமாறினார் அவர். அவன் அணிந்திருந்த காவி அங்கியும் கூட நன்று அழகாக வடிவமைக்கப்பட்ட அனார்கலி உடை போன்றே இருந்தது. அவர் அப்படிக் கேட்கவும், கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல், "இன்னைக்கு இந்த மாதிரி டிரஸ் போடணும்னு அவன் கட்டளை; போட்ருக்கேன்" என்றான் அவன். "எவண்டா உனக்கே ஆர்டர் போடறவன்" என அவர் ஆக்ரோஷத்துடன் கேட்க, கைகளை மேலே தூக்கி கண்களை மூடிக்கொண்டு, "அவன்னா அவன்தான்! என்னப்பன் சிவன்" என அவன் ஒரு ஆனந்த பரவசத்துடன் சொல்ல, "டேய் உன்னோட அப்பன் நான்தாண்டா! சந்திரமௌலீடா! சிவனில்லடா" பரிதாபமாக உரைத்தார் அவர். "அது என் அப்பனோட சித்தம்; இந்த பிறவில இந்த உடம்பை நான் சுமக்க நீங்க ஒரு கருவி அவ்வளவுதான்! உங்க வேலை முடிஞ்சுபோச்சு! இனிமேல் நான் சிவனோட சொத்து! அவன் மட்டுமே என் பற்று!" என அவன் தத்துவ முத்துக்களை உதிர்க்க, அதிர்ந்தார் அவர். "டேய் கண்ணா! ராஜா! உனக்கு இந்த உலகம் மொத்தமும் சொத்து சேர்த்து வெச்சிருக்கேண்டா! நீ அப்பாகூட வந்துடுடா" அவர் கெஞ்ச தொடங்க, "சொத்து சேர்த்து வெச்சிருக்கீங்களா? அதெல்லாம் வெறும் மாயை! இந்த உலகமே சிவனின் சொத்து! அப்பன் சிவன்தான் என்னோட சொத்து. நான் அந்த மாய வாழக்கையை விட்டு ஞான வாழ்க்கை வாழ முடிவு பண்ணிட்டேன். இந்த துறவறமே என் அப்பன் சிவன் எனக்கிட்டக் கட்டளை! அதனால என்னை உங்க உலகத்துக்கு இழுக்காதீங்க! என்னால அங்க மறுபடியும் வரவும் முடியாது. நாளையோட என்னோட மூணு மண்டல விரதம் முடியப்போகுது! நான் சாதாரண விஸ்வாவுல இருந்து விஸ்வாமித்ரானந்தாவா தீக்ஷை வாங்கிக்க போறேன்! இனிமேல் என்னைப் பார்க்கவும் வரவேண்டாம்! வந்தாலும் நான் உங்களை பார்க்க மாட்டேன்!" என முடிவாகச் சொன்னவன், "காயா மாயா சிவஸ்ய சாயா" என்றவாறு அவரை திரும்பியும் பார்க்காமல் அங்கிருந்து சென்றுவிட்டான். உடைந்துபோனார் அவர். அடுத்து இரண்டு முறை அவனைச் சந்திக்க முயன்றும் அது முடியாமலேயே போனது அவருக்கு! அந்த ஆஸ்ரமத்தை நடத்தி வரும் யோகி நிர்மலானந்தாவை சந்தித்து அவரிடம் மகனை தன்னுடன் அனுப்பிவிடுமாறு கேட்டதற்கு, "நான் யாரப்பா அவனுக்கு கட்டளை இடுவதற்கு! அவன் என் பேச்சையா கேட்கிறான்! என் அப்பன் சிவனுடைய பேச்சை இல்லையா கேட்கிறான்! சிவனுக்கு முன்னால் நானெல்லாம் எம்மாத்திரம்! முடிந்தால் உன் மகனைச் சந்தித்து அவனிடமே பேசிப்பார்" என அழகாகக் கழன்றுகொண்டார் அவர். அவரது மகனைப் போன்று உலகம் முழுவதும் இருக்கும் நிர்மலானந்த சிவ பீட ஆசிரமங்களில், அவரது இந்த பிரம்மச்சரிய கொள்கையைப் பின்பற்றி ஐம்பதாயிரத்திற்கும் மேலான இளைஞர்கள் துறவறம் பூண்டிருப்பது அதன் பின்னர்தான் சந்திரமௌலிக்கு தெரியவந்தது. எப்படி சந்திரமௌலிக்கு உலகம் முழுதும் வியாபாரங்கள் இருக்கிறதோ, அதை விடச் சற்று அதிகமாக அந்த நிர்மலானந்தாவுக்கு ஆசிரமங்கள் இருக்க, லட்சோபலட்சமாய் பக்தர்கள் இருக்க, கோடி கோடியாய் செல்வம் கொட்டிக்கிடக்க, அவரை அசைக்கக் கூட இயலவில்லை சந்திரமௌலியால். மகன் வேறு அவர் பிடியிலிருக்க கொஞ்சம் அதிகப்படியாக போகவும் அச்சமாக இருந்தது அவருக்கு. செய்வதறியாமல் தவித்துக்கொண்டிருக்கிறார் மனிதர். மகனை நினைத்து பாரம் சுமந்த மனதுடன் இதோ பயணப்பட்டுக்கொண்டிருக்கிறார் அவர். * சென்னை மாநகரின் முக்கியப்பகுதியில் மிகப்பெரிய பரப்பளவில் அமைந்திருந்தது வீ.என் மருத்துவ கல்லூரியும் அதன் மருத்துவமனையும். அதன் ஒரு அங்கமாக விளங்கும் 'விஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் பயோ மெடிக்கல் ரிசர்ச்' இயங்கும் வளாகத்திற்குள் பலவண்ண பலூன்களால் ஆர்ச் அமைக்கப்பட்டு ரிப்பன் கட்டி திறப்புவிழாவுக்காக காத்திருந்தது அந்த புத்தம்புது கட்டிடம். சந்திரமௌலியின் பாதுகாப்பு கருதி மிக குறைந்த நபர்களே அந்த விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். அதில் முக்கிய விருந்தினராக மத்திய அமைச்சர் ஒருவரும் அழைக்கப்பட்டிருக்க, அங்கே பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சந்திரமௌலிக்கு யார் மலர்கொத்து கொடுத்து அவரை வரவேற்பது, அவருக்கு அருகில் யாரெல்லாம் செல்லலாம் என்பதுவரை முன்கூட்டியே திட்டமிடப்பட்டிருந்தது. அங்கே வேலை செய்யும் பேராசிரியர்கள் உதவி பேராசிரியர்கள் முதன்மையாகத் திகழும் சில ஆராய்ச்சி மாணவர்கள் என வெகு சிலர் மட்டுமே 'ஐடென்ட்டிட்டி பேட்ஜ்' உடன் அங்கே அனுமதிக்கப்பட்டிருந்தனர். ஆனாலும் ஒரு குறிப்பிட்ட தூரத்திலிருந்து மட்டுமே அவர்கள் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியும் என்ற நிலையில் அங்கே வருகைதந்தாள் நம் நாயகி மேனகா. சந்திரமௌலிக்கு கொடுப்பதற்காக, வரவேற்பில் வைக்கப்பட்டிருந்த, பல வண்ண மலர்கள் சிரிக்கும் பூங்கொத்துதான் தற்போதைய அவளுடைய இலக்கு! அதில் அவள் வைக்க போகும் சூட்சம கருவிதான் சந்திரமௌலியை அவளிடம் தேடி வர வைக்க போகிறது. அதுவும் அவர் அறியாமலே! மேனகாவும் அந்த ஆராய்ச்சி நிறுவனத்தில் படிக்கும் மாணவிதான்! அவள் பெயருக்குதான் மாணவி. அங்கே பணிபுரியும் அனுபவசாலியான பேராசிரியர்கள் கூட அறியாத விஷயங்கள் கூட . அவளுக்கு தெரியும். அவளின் ஆராய்ச்சிகளும் அறிவியல் அறிவு அந்தளவு உயர்மட்டமானதும் நவீனமானதாகவும் இருந்தது. அத்தகைய புத்திசாலித்தனத்தோடு தீவிரமாக அவள் கேட்கும் சந்தேகங்களை பார்த்து மிரளும் பேராசிரியர்கள் பல நேரங்களில் பதில் சொல்ல முடியாமல் திணறி தத்தளிக்க, "ஷட் அப்... கெட் அவுட்... ஸ்டுபிட்... யூஸ்லெஸ் பெலோ... சொல்றத மட்டும் பாலோ பண்ணு" என்று அவளை மட்டம்தட்டுவதையே வழக்கமாக கொண்டிருந்தனர். இப்படி அவள் சந்தேகங்களுக்கே பதில் சொல்ல முடியாதவர்கள் அவள் செய்யும் ஆராய்ச்சிகளை பற்றி புரிந்து கொள்ளவார்களா என்ன? "நான்ஸென்ஸ்... இதென்ன பார்முலா? அட்டர் ஸ்டுபிடிட்டி... நோ வே... இதெல்லாம் வொர்க் அவுட்டே ஆகாதே" என்று அவளின் புதுமையான கண்டுபிடிப்புகளையும் ஆராய்ச்சிகளை ஊக்குவிக்க என்ன? ஒரு பொருட்டாக கூட மதிக்கவில்லை. "இந்த மாதிரி லூசுக்கு எல்லாம் எப்படி நம்ம இன்ஸ்ட்டிட்டியூட்ல சீட் கொடுத்திருப்பாங்க" இதுதான் மாணவர்கள் முதல் பேராசிரியர்கள் அவள் மீது கொண்ட கருத்து! இவர்களிடமெல்லாம் புரிய வைப்பதைவிட நேரடியாக நிறுவனர் சந்திரமௌலியிடமே தன் ஆராய்ச்சியை பற்றி தெரிவித்துவிட்டால் என்ன என்று யோசித்தவள் ஒரு வருடமாக அவரை சந்திக்கும் முயற்சியில் ஈடுப்பட்டாள். அதுவும் 'வாம்மா மின்னல்' போல அவர் ஒரு தனி விமானத்தில் வந்திறங்கி தான் வந்த வேலையை முடித்து கொண்டு, பிறகு வந்த தடம் தெரியாமல் மறைந்துவிட அவருடைய ஆபாயின்மென்ட் என்ன? அவரை தூரத்தில் நின்று பார்க்க கூட வாய்ப்பு கிட்டியதில்லை. இதில் அவள் ஆராய்ச்சிகளை பற்றி விவரிப்பதெல்லாம் கனவில் கூட நடக்காது. ஆனால் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்யையாக அவளும் முயல்கிறாள்... முயல்கிறாள்... முயன்று கொண்டேதான் இருக்கிறாள். ஆனால் என்ன முயன்றாலும் ஆமை வேகத்தில் கூட அவள் முயற்சியில் துளியளவும் முன்னேற்றமே இல்லை. அதனால்தான் இந்த தடவை அவள் முயற்சியை முற்றிலும் வேறு மாதிரி செய்ய முடிவெடுத்தாள். அவரை தேடி தான் செல்ல கூடாது. தன்னை தேடி அவரை வர வைக்க வேண்டும். அதற்கு அவர் கரங்களுக்கு போக போகும் பூங்கொத்து தன் கைகளுக்கு முதலில் வர வேண்டும். ஆனால் அந்த பூங்கொத்தை கொடுக்கும் பணி, அந்த ஆராய்ச்சி மாணவி அதிசிறந்த மேக் அப் பைத்தியமான ஸ்டெல்லாவின் கையில் அல்லவா இருந்தது. அவளோ பூங்கொத்துடன் தயார் நிலையில் வாயிலில் நின்றிருக்க மேனகா அவளருகே சென்றாள். "ஏய் ஏய் நீ நீ ஏன் இங்க வந்தே... உனக்கு இந்த ட்யூட்டி இல்லையே... ஐயோ! உன் மூஞ்சியும் ட்ரெஸும்" என்று ஏற இறங்க அவளை பார்த்தாள் ஸ்டெல்லா. மேனகா அழகுதான். தன் அழகை எடுத்து காட்டுமளவுக்காய் திறமை போதாது. பெரும்பாலும் அவள் எந்த பேன்டுக்கு என்ன டாப் அணிய வேண்டுமென்று காம்பினேஷன் கூட தெரியாது. கையில் கிடைப்பதை மாட்டி கொண்டு வந்துவிடுவாள். பெரும்பாலும், ஃபேஷன் விஷயத்தில் ட்ரெண்டிங்காக இருக்கும் நம் தொல்லை நாயகிதான், "இன்னாமா இந்த பேண்டுக்கு இந்த டாப் போட்டு போற" என்று அவள் உடைகளை திருத்தி பொருத்தமாக அணிந்து செல்ல உதவுவது! இன்றும் அப்படிதான் சொதப்பிவிட்டாள். தொல்லை நாயகியிடம் சண்டை போட்டு கிளம்பியதால் அவளும் இவள் உடையை கவனிக்கவில்லை. ஆரஞ்சு நிற குர்த்திக்கு ஏதோ ஒரு பச்சை நிற பேண்டை அவள் அணிந்திருந்த உடையை பார்த்து மிகுந்த கடுப்பானவள், "முதல இங்க இருந்து போ" என்று அவளை துரத்த முற்பட்டாள் ஸ்டெல்லா. "என் டிரஸ் காம்பினேஷன் இருக்கட்டும்... இன்னைக்கு உன் மேக் அப் ஏன் இப்ப்ப்ப்ப்டி இருக்கு" என்றவள் முகம் சுளித்ததில், 'என்ன இந்த லூசு அதிசயமா மேக் அப் பத்தில்லாம் பேசுது! என்ற எண்ணம் லேசாகத் தோன்றினாலும் ஸ்டெல்லாவின் பிபி டென்ஷனெல்லாம் ஏகபோகமாக ஏறிவிட்டது. வேறு எதை பற்றி பேசினாலும் அவள் ஒன்றும் சொல்ல மாட்டாள். ஆனால் மேக் அப்பை பற்றி பேசினால் துடிதுடித்து போவாள். "எப்படி எப்படி இருக்கு?" என்று ஸ்டெல்லா படபடக்க, நாக்கை வெளியில் தள்ளி, “இப்படியே நம்ம சிஎம் முன்னால போய் நின்ன! உன் அலகுல அவர் அப்படியே மயங்கி விழுத்துருவாரு!” என்று சொல்லிவிட்டு, "ப்ப்ப்ப்ப்பா... அப்படி இருக்கு!" என்றவள் விஜய் சேதுபதி போல முகத்தை காட்டியதில் ஸ்டெல்லாவுக்கு அழுகையே வந்துவிடும் போலிருந்தது. தன் திட்டம் சரியாக வேலை செய்கிறது என்பதில் உள்ளுர மகிழ்ந்த மேனகா, "இன்னும் டைம் இருக்கு... கொஞ்சமா உன் மேக் அப்பை துடைச்சிட்டா சரியாகிடும்" என்க, ஸ்டெல்லாவும் ஆமோதிப்பாக தலையசைத்துவிட்டு தன் கைப்பையை எடுக்க எத்தனித்தவளை தன் கையிலிருந்த பூங்கொத்தை எங்கே வைப்பது என்று யோசித்துவிட்டு, "இதை கொஞ்சம் பிடிச்சுக்கோ" என்று வேறு எதைப் பற்றியும் யோசிக்காமல் அதனை மேனகாவிடம் கொடுத்துவிட்டாள். அந்த கிடைத்த சில நொடிகளில் மேனகா அவள் வைத்திருந்த ரப்பர் ட்யூப்பை அந்த பூங்கொத்திற்குள் அழகாக பொருத்திவிட்டாள். 'கேம் ஸ்டார்ட்' என்று தன் ரிமோட்டை அவள் எடுத்து கையில் வைத்து கொள்ள சந்திரமௌலி தன்னுடைய அதிநவீன காரில், அவருடைய ரத கஜ துரக பதாதிகள் சகிதம் அதாவது அவருடைய கான்வாய் சகிதம் வாயிலில் வந்திறங்கினர். அவரை வால் பிடித்துக்கொண்டு அந்த மத்திய அமைச்சரும் அவரது பாதுகாப்பு அதிகாரிகள் சூழ வந்திறங்க, அந்த இடமே பரபரப்படைந்தது. அதற்குள் மற்றும் ஒருத்தி இன்னொரு பூங்கொத்தை கையில் ஏந்தி வர, 'அட கடவுளே! இப்படி ஒன்னு இருக்கறதையே நாம கவனிக்கலையே! இதுல எவ பொக்கேயை சந்துரு கிட்ட கொடுப்பா; எவ மினிஸ்டர் கிட்ட குடுப்பா! தெரியலையே' அவள் முழு டென்ஷனில் மனதிற்குள்ளேயே புலம்ப, நல்ல வேளையாக ஸ்டெல்லா, "வெல்கம் சார்" என்றவாறு அந்த பூங்கொத்தை சந்திரமௌலியிடம் கொடுத்து முகமன் செய்து வரவேற்க, உள்ளே செல்ல இருந்தவர் பத்து விநாடிகளில் எதோ மந்திரித்து விட்டவர் போல ஒரு மூலையில் நின்றுகொண்டிருந்த மேனகாவின் முன்னே வந்து நின்றுவிட்டார்.

0 comments
© KPN NOVELS COPY PROTECT
bottom of page