Virus 143 11
Updated: Oct 28, 2020
காதல் அட்டாக் – 11
அப்படியே உறங்கினான் உறங்கினான் உறங்கிக்கொண்டே இருந்தான் விஸ்வா, அடுத்த இரண்டு நாட்கள் கழித்து அவனுடைய அப்பா லண்டனிலிருந்து அங்கே வந்து சேரும் வரையில்.
அதாவது அவனை அப்படி ஒரு உரக்க நிலையிலேயே வைத்திருந்தாள் மேனகா என்றுதான் சொல்லவேண்டும்.
அவனை எழுப்பி சரியான நேரத்துக்கு உணவை மட்டும் கொடுத்துவிடுவாள்.
ஒவ்வொரு முறை அவனுக்கு உணவளிக்கும் சமயத்தில், பாதி உறக்கத்திலேயே அவன் சாப்பிடுவதை பார்க்கும் பொழுதும், அவனுடைய அடர்ந்த நீளமான தாடி அவளை கடுப்பேற்ற, 'போடா நீயும் உன் சாமியார் வேஷமும்" என்றுதான் தோன்றும் அவளுக்கு.
ஆசிரமத்திலிருந்து வந்த அடுத்த நாள் விடியலிலேயே, அவனை அவனுடைய அப்பாவின் பீஏ நேஹாவிடம் ஒப்படைத்துவிட்டு, தொல்லைநாயகியை கையுடன் அழைத்துக்கொண்டுபோய் அவளுடைய வீட்டின் வாயிலில் இறக்கிவிட்டுவிட்டு, அந்த காரை ஓட்டிப் போய் ஆசிரமத்தின் அருகிலேயே நிறுத்தியவள், பேருந்துமூலம் அங்கே திரும்ப வந்துவிட்டாள்.
***
ஆசிரமத்தில்தான் எல்லோரும் தன் தலையைப் பிய்த்துக்கொண்டிருந்தனர். குறிப்பாக நிர்மலானந்தா. ஒரே இரவுக்குள் அவருடைய சாது வேஷம் கலைந்துபோனது என்பதுதான் உண்மை.
விஸ்வா தப்பித்துப் போனதில் மொத்தமாக வெறி பிடித்துப் போயிருந்தது அவருக்கு. ஆசிரம நிர்வாகிகள் சிஷ்யர்கள் என அனைவரையும் குதறி எடுத்துவிட்டார்.
கிட்டத்தட்ட அவருடைய இருபத்தி இரண்டு வருடத் தவத்திற்குக் கிடைத்த வரம்தான் விஷ்வா. அவனுடைய அப்பா செய்த பாவத்தின் பலனாகத்தான் உலக இன்பங்களைத் துறந்து இந்தத் துறவற வாழ்க்கை அவனை பிடித்துக் கொண்டது. பிடித்துக் கொண்டது என்று சொல்வதைவிட அவனை அதற்குள் பிடித்து வைத்திருந்தார் முன்நாள் நிர்மல் இந்நாள் நிர்மலானந்தா.
அன்றைய காலகட்டத்தில் நிர்மல் ஒரு விஞ்ஞானி. அதாவது ஒரு மரபணு ஆராய்ச்சியாளர்.
அவர் வாழ்ந்த சமூகத்தில் அவர்தான் முதல் பட்டதாரி. அவரைத்தான் திருமணம் செய்வேன் என ஒற்றைக்காலில் நின்ற அவருடைய மாமன் மகளை மணந்து கொள்ள மனமில்லாமல் கல்லூரியில் உடன் படித்த சகுந்தலா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார் நிர்மல். அவருக்குப் படிப்பு தண்ணீர் பட்ட பாடாக இருக்க மேலே மேலே படிக்க உதவித் தொகையும் கிடைக்கவும் தன் கல்வித்தகுதியை வளர்த்துக் கொண்டே போனார் நிர்மல்.
அதன் காரணமாக சகுந்தலா வேலைக்கு போய்தான் இருவருக்குமாகச் சம்பாதிக்கும் சூழ்நிலை உண்டாக, அதுவே ஒரு கட்டத்தில் இருவருக்குள்ளும் கருத்துவேறுபாடு ஏற்படக் காரணமாகிப்போனது.
வயது முதிர்ச்சியும் மன முதிர்ச்சியும் இல்லாத காலகட்டத்தில் அவர்கள் செய்து கொண்ட அவசர திருமணம் அவசரமாகவே முடிந்து போனது.
நிர்மல் மேல்படிப்பு ஆராய்ச்சி படிப்பு என முழுவதுமாக அதில் மூழ்கிப் போனார்.
நாட்கள் செல்ல செல்ல, அவருடைய கனவு லட்சியம் ஆசை வெறி என அனைத்துமே அவர் செய்துகொண்டிருந்த மரபணு ஆராய்ச்சியாக மாறிப் போக சகுந்தலா என்ற பெண்ணே அவர் நினைவில் இல்லை என்ற அளவுக்கு அந்த திருமணத்தையே மறந்து போனார் அவர்.
அவர் எண்ணம் செயல் என அனைத்துமாக அவர் செய்துகொண்டிருந்த ஆராய்ச்சி மட்டுமே இருந்தது.
அப்பொழுது அவர் செய்துகொண்டிருந்த ஆராய்ச்சியை அடுத்த படி நிலைக்கு கொண்டு போக அவருக்கு ஒரு ஸ்பான்சர் தேவைப்பட, அப்பொழுதுதான் தொடங்கப்பட்டிருந்த ’விஸ் ஜெனிட்டிகல் ரிசர்ச் லேப்’ அவருடைய அறிவையும் புத்திசாலித்தனத்தையும் பார்த்து அவரை தத்தெடுத்துக் கொண்டது.
அவருக்குக் கீழே பத்துக்கும் மேற்பட்ட உதவியாளர்களை நியமித்து அவருக்கென்று ஒரு தனிப்பட்ட குழுவை உருவாக்கி, அவரது கண்டுபிடிப்புகள் மொத்த செலவையும் ஏற்றுக்கொண்டது அந்த நிறுவனம்.
அதன் பின் கிட்டத்தட்ட ஐந்து வருட காலம் போராடி, விலங்குகளிடமிருந்து பெறப்பட்ட ஸ்டெம் செல்களை கொண்டு சோதனை கூடங்களில் அவற்றின் மாமிசத்தை செயற்கையாக உருவாக்கும் தொழில் நுட்பத்தில் ஒரு புதிய யுக்தியைக் கண்டுபிடித்தார் நிர்மல்.
அதன் மூலம் சந்திரமௌலியின் மாமிச ஏற்றுமதி நிறுவனம் மிகப் பெரிய லாபத்தைச் சம்பாதிக்க இயலும் என்ற நிலை உருவாக, அந்த கண்டுபிடிப்பின் மொத்த உரிமத்தையும் தன் பெயருக்கே கொடுக்கும்படி நிர்மலை நிர்பந்தித்தார் சந்திரமௌலி.
அதற்கு நிர்மல் மறுக்கவும்,அதன் பிறகுதான் தொடங்கியது அவருக்கான உண்மையான சோதனை காலம்.