top of page

Virus-143

காதல் அட்டாக்-10


ஆங்கிலேயர்கள், ஆப்பிரிக்கர்கள், சீனர்கள், ஜப்பானியர்கள், உள்ளூர் வாசிகள் என வெவ்வேறு நிறங்களில், குட்டையாகவும் நெட்டையாகவும் பருமனாகவும் ஒல்லியாகவும் வெவ்வேறு உடல்வாகுடன் ஆண் பெண் பாகுபாடின்றி, சிறியவர்களுக்கு அங்கே அனுமதி இல்லை என்பதினால் அவர்களைத் தவிர முதியவர்கள் இளைஞர்கள் என பேதமின்றி எல்லா வயது நிலையிலும் 'எங்க இருந்ததுடா இதுக்குன்னு கிளம்பி வரீங்க' என எண்ண வைக்கும் அளவுக்கு, ஆயிரம் பேர் இருக்கவேண்டிய இடத்தில் கிட்டத்தட்ட ஆயிரத்து ஐந்நூறு பேருக்கு மேல் இருக்கலாமோ எனும் அளவுக்கு பெரும் கூட்டம் பொங்கி வழிந்தது நிர்மலானந்தாவின் ஆசிரமத்தின் அந்த மிகப்பெரிய அரங்கத்தில்.


பணம் கொடுத்து நுழைவு சீட்டு வாங்கியிருந்தாலும், மில்லியை தேடிக்கொண்டு இவர்கள் போன அந்த இடைவெளியில் அந்த அரங்கம் நிரம்பியிருக்க, அவர்கள் முன் பதிவு செய்திருந்த இருக்கையை நெருங்கவே இயலவில்லை மேனகா மற்றும் நாயகியால்.


எங்கோ ஒரு ஓரமாக நெருக்கியடித்துக்கொண்டு நிற்க வேண்டியதாக ஆகிப்போனது.


எள் போட்டால் எண்ணையே எடுக்கலாம் என்கிற அளவுக்கு அந்த அரங்கம் முழுவதும் நெருக்கடியாக இருக்க, அங்கிருந்து சென்று யாரையாவது கேட்கலாம் என்கிற சூழலும் இல்லை.


திரையால் மூடப்பட்டிருக்கும் மேடையையே ஒரு அமைதியுடன் வெறித்துக்கொண்டிருந்தாள் மேனகா.


அவள் இதயம் ஏனோ வழக்கத்துக்கு மாறாகத் தாறுமாறாகத் துடித்துக்கொண்டிருந்தது.


வாழக்கையில் ஏதோ ஒரு புதிய மாற்றம் ஏற்படப்போகிறது என்கிற ஒரு உள்ளுணர்வு தோன்ற, படபடப்பாக இருந்தது அவளுக்கு.


அவளுடைய நிலைமை புரியாமல், "ப்ச்... மூணு மாசம் முன்னாலேயே சீட்டு வாங்கியாந்தேன். ஆனா சாமிய கிட்ட இருந்து பாக்க முடியாத செஞ்சுப்புட்ட இல்ல எலி நீயி.


மில்லியாம்ல மில்லி! நல்லா பேரு வெச்சிக்கிது பாரு இந்த மேனகா பொண்ணு ஒனக்கு.


நீ மில்லி இல்ல; எனக்கு வந்து வாச்ச சரியான வில்லி. தனியா கண்டி நீ என் கைல ஆப்டுகின... கைமாத்தாண்டி நீயி அஆங்" எனக் கையிலிருந்த கூண்டுக்குள் நல்ல பிள்ளை போல உறங்கிக்கொண்டிருந்த மில்லியை சாடிக்கொண்டிருந்தாள் நாயகி.


"ப்ச்... தொல்ல கொஞ்சம் சும்மா இருக்கியா" என மேனகா சற்று எரிச்சலுடன் மொழிய, அவள் தொல்லை என்றழைத்ததில் கடுப்பானவள், "தென்ன மரத்துல தேள் கொட்னா பன மரத்துல நெறி கட்டிக்கிச்சாம்... அந்த பெர்ச்சாளிய சொன்னா இந்த சுண்டெலிக்கு அப்படியே கோவம் பொத்துக்கினு வருது அஆங்" என முணுமுணுத்தாள் நாயகி.


ஏற்கனவே அங்கே பெரும் இரைச்சலாக இருக்க, அவள் இப்படி முணுமுணுக்கவும், "ஏய் எது சொல்றதுன்னாலும் கொஞ்சம் சத்தமா சொல்லு; சும்மா டென்ஷன் பண்ணாத" என்றாள் மேனகா.


"நீ இதுவும் சொல்லுவ; இன்னமும் சொல்லுவமே அஆங்.


அன்னைக்கு எலிகாபட்டர்ல அந்த சாமி குட்சைக்கு போவ சொல்லோவே நானு சாமிய கண்டுக்கினு வந்திருப்பேன்.


போவவுடாம செஞ்சுபுட்டு இங்க வந்து கூவினு கெடக்காரியாமா நீயி" என நாயகி எகிறதோடங்க, அவள் பேச்சு அப்படியே நின்றது.


காரணம் அங்கே இருந்த மேடையின் திரை விலகி, பஞ்ச உலோகங்களால் செய்யப்பட்ட, மலர் அலங்காரங்களுடன் கூடிய ஒரு மிகப்பெரிய நடராஜர் சிலை காட்சி அளிக்கவும், அங்கே குழுமியிருந்த பக்தகோடிகளின் கவனம் மொத்தமும் மேடையை நோக்கி திரும்ப, 'காயா... மாயா... சிவஸ்ய சாயா' என்கிற மந்திரம் வெவ்வேறு குரல்களில் வெவ்வேறு விதமான உச்சரிப்பில் தாறுமாறாக ஒலித்து அந்த அரங்கத்தையே அதிரச்செய்தது.


ஒரு ஓரப்பார்வையால் மேனகா நாயகியைப் பார்க்க, பக்தி பரவசத்தில் அந்த கைலாசத்திற்கே சென்றுவிட்டவள் போல அவளது முகம் ஒளிர்ந்தது.


சில நிமிடங்கள் இப்படியே கடக்க, 'காயா... மாயா... சிவஸ்ய சாயா' என்று சொல்லிக்கொண்டே அந்த மேடையில் தோன்றிய ஸ்வாமி நிர்மலானந்தா ஒரு கூடை மலர்களை அந்த நடராஜர் மீது தூவி கரம் குவித்து பின்பு மக்களை நோக்கித் திரும்பினார்.


அவர் முன்னால் குழுமி இருந்த மக்கள் வெள்ளத்தைப் பார்த்து அப்படி ஒரு பூரிப்பில் நிறைந்தது அவரது முகம்.


அவர் கழுத்தைச் சுற்றி இணைக்கப்பட்டிருந்த ஒலிவாங்கி மூலம் ஒலிபெருக்கி அவரது குரலை எல்லோரிடமும் கொண்டு சேர்க்க, 'நிர்மலானந்தம்... நிர்மலானந்தம்' என அங்கே எழுந்த ஆரவாரம் அடங்கவே சில நிமிடங்கள் பிடித்தது.


வெகு தூரத்திலிருந்து என்றாலும் அப்பொழுதுதான் அவரை நேரில் பார்க்கிறாள் மேனகா.


ஒரு ஐந்தரை அடி உயரம் இருக்கலாம். காவி வேட்டி உடுத்தி கவியிலேயே குர்தா அணிந்திருந்தார்.