Virus 143
வைரஸ் 143 அட்டாக்-3
சந்திரமௌலி அசாதாரணமாக அங்கே குழுமி நின்றவர்களையெல்லாம் தள்ளிக்கொண்டு, பின்னால் ஒரு தூணில் சாய்ந்து நின்றுகொண்டிருந்த மேனகாவின் முன்னே போய் நிற்கவும், அங்கே என்ன நடக்கிறது என்பதே புரியாமல் அனைவரும் ஸ்தம்பித்துப்போய் பார்த்திருந்தனர்.
அவரது பாதுகாவலர்கள் இருவர் அவருக்குப் பின்னால் வந்து நிற்க, அவருக்கும் தான் ஏன் இவ்வாறு நடந்துகொண்டோம் என்றே புரியவில்லை.
எது அவரை அப்படி இழுத்து கொண்டு வந்து நிறுத்தியதென்றும் புரியவில்லை.
சட்டென்று சுற்றுபுறம் உணர்ந்து, முன்னால் நின்றவளிடம் நாகரிகம் கருதி ஒரு, 'சாரி'யை மொழிந்துவிட்டு அவர் திரும்ப எத்தனிக்க, "சார்! ஒரு நிமிஷம்" என்றாள் அவள் அவருக்கு மட்டுமே கேட்கும் குரலில்.
அவர் அவளை ஒரு வியப்பான பார்வை பார்க்க, "நீங்க இங்க எப்படி வந்தீங்க தெரியுமா?" என அவள் ஒரு தீவிர பாவத்துடன் கேட்க, அதில் ஒரு நொடி திடுக்கிட்டு தான் அவள் சொல்ல வருவதைக் கேட்கத் தயார் என்பதுபோல் அவர் அவளை ஒரு பார்வை பார்த்தார் அவர்.
"இதை படிங்க தெரியும்" என்றவாறு நான்காக மடித்த ஸ்டிக் நோட் தாள் ஒன்றை அவள் அவரிடம் நீட்ட, ஏனோ மறுக்கத்தோன்றாமல் அவர் அதை வாங்கிக்கொண்டார்.
நான்குபேர் மத்தியில் ஒரு நாடகம் அரங்கேறுவதை அவர் விரும்பவில்லை அவ்வளவே.
அதன் பின் அவர் அங்கிருந்து சென்றுவிட, அவர் செயலுக்கு காரணம் கேட்கும் நிலையில் அங்கே ஒருவர் கூட இல்லை.
அதனால், அனைவரும் அதை கண்டுகொள்ளாத பாவத்திலிருந்துவிட அந்த நிகழ்ச்சி சிறப்பாக நடந்து முடிந்தது.
அந்த நிகழ்ச்சி முடிந்த அடுத்த நிமிடம் அவர் அங்கிருந்து கிளம்பிச் சென்றுவிடச் சற்று அதிகமாகவே ஏமாற்றமாக இருந்தது மேனகாவுக்கு.
குறைந்த பட்சம் என்னவென்று அறிந்துகொள்ளவாவது அவர் முற்படுவார் என அவள் எண்ணியிருக்க அவளது எதிர்பார்ப்பைப் பொய்யாக்கி, சிறு ஓய்விற்காக அவருக்குச் சொந்தமான கடற்கரை விருந்தினர் மளிகை நோக்கிச் சென்றுவிட்டார் அவர்.
அத்தனை நேரம் மனதினோரம் ஒளிந்திருந்த மகனின் ஞாபகம் மீண்டும் தலையெடுக்க, மனமும் உடலும் களைத்த நிலையில் அறைக்குள் நுழைந்தவர் தான் அணிந்திருத்த கோட்டை கழற்றியவாறே, "அம்மா அகிலாண்டேஸ்வரி!
உன்னைத்தான் நம்பியிருக்கேன் தாயே!
என் மகனை என்கிட்டே கொண்டு வர ஒரு வழியை காட்டும்மா!" என வாய்விட்டு பிராத்தித்துக்கொண்டே, அதில் வைத்திருந்த அவரது கைப்பேசியை எடுக்கவும் அதனுடன் சேர்ந்து மேனகா கொடுத்த துண்டு சீட்டும் வெளியில் வந்து விழுந்தது.
அதைப் பற்றி அவர் சுத்தமாக மறந்துபோயிருக்க அனிச்சை செயலாக அதனை எடுத்துப் பிரித்தார் அவர்.
மிகவும் சிறிய எழுத்துக்களால் அவள் அதை எழுதியிருக்கக் கண்களுக்குக் கொஞ்சம் அதிக வேலை கொடுத்தே அதைப் படிக்கவேண்டியதாக இருந்தது அவருக்கு.
'உலக பொருளாதாரத்தையே கைக்குள்ள வெச்சிருக்கும் பெரிய மனிதருக்கு என் வணக்கங்கள்.
அண்ட் சாரி!
நீங்க என்னைத் தேடித் தானா வரல. ஆனா நான் பண்ணச் சின்ன ட்ரிக் உங்களை எனக்கு முன்னால கொண்டுவந்து நிறுத்துச்சு.
சுலபமா யாரும் அணுகமுடியாத உங்களை இத்தனை செக்யூரிட்டியையும் தாண்டி ஒரு சின்ன பொண்ணு இப்படி செஞ்சிருக்காளே!
அது எப்படி அண்ட் ஏன்னு நீங்க தெரிஞ்சுக்க வேணாமா?
ப்ளீஸ் எனக்கு ஒரு அப்பாயின்மென்ட் கொடுங்க!
இதுல உங்களை பாதிக்கற எந்த நோக்கமும் இல்ல.
நான் உங்க இன்ஸ்டிட்யூட்ல படிக்கற ஒரு சாதாரண ரிசர்ச் ஸ்டூடன்ட் அவ்வளவுதான்.