top of page

Valsai Pogum Paravaikalaai - 13

13

பொன்குஞ்சுகள்


அன்று காலை விழித்தது முதலே பரபரப்பாக இருந்தான் சரண்.


குடுகுடுவென வெளியில் ஓடுவதும் அறைக்குள் ஓடி வருவதுமாக என்னென்னவோ சேட்டைகள் செய்து கொண்டிருந்தவனை இழுத்துப் பிடித்து ஓரிடத்தில் நிற்க வைத்தவள், “உன் பேக் பேக்ல என்னத்தடா இப்படி அள்ளி அள்ளித் திணிச்சிட்டு இருக்க?” என அவனைப் பற்றி நன்கு அறிந்தவளாகப் பதறினாள் குயிலி.


“ப்ச்... ம்மா... நத்திங் ம்மா... கலரிங் புக்ஸ், ஆயில் பேஸ்லிங்க்ஸ், ஸ்க்ரப்பர், வாட்டர் கன் அண்ட் மை பென் டிரைவ்" என அடுக்கினான் சரண்.


“இது போதுமா இல்ல வேற ஏதாவது எடுத்துட்டுப் போறியா, லைக்... உன்னோட டெஸ்க் டாப் கம்ப்யூட்டர், மைக்ரோ வேவ் ஓவன், ட்ரெட்மில்” என அவள் மகனை வார, “ம்மா” என அவளை முறைத்தவன், “ஸ்கேட்டிங் போர்ட், ஃபுட் பால் எல்லாம் எடுத்துட்டு வரேன்னு சொன்னேன். லச்சுதான் வேண்டாம்னு சொல்லிட்டா. அங்க அதையெல்லாம் யூஸ் பண்ண முடியாதாம்” என்றவன், “ஸோ, வீட்டுக்குள்ளையே அவ கூட ஷேர் பண்ணி டிராயிங் பண்ணுவேன். தென் நானு லச்சு, கல்லி அக்கா மேகி எல்லாரும் சேர்ந்துட்டு அவஞ்சர்ஸ் மூவி பார்க்கப் போறோம்” என்றான் பெருமையாக.


“டேய், அதைதான் பென் ட்ரைவ்ல போட்டிருக்கியா. அவங்க வீட்டுல ஸ்மார்ட் டீவிலாம் இல்ல. இதை அதுல போட முடியுமாடா?” என அவள் தன் சந்தேகத்தைக் கேட்க, “மா.. செட் டாப் பாக்ஸ் போட்டிருக்காங்க இல்ல. அதுல போட்டுப் பார்க்கலாமாம். லச்சு சொன்னா” என விளக்கம் கொடுத்தான் சரண்.


அஞ்சுவின் வீட்டிற்குக் கிளம்பிக் கொண்டிருந்தான் அவன். அதற்குதான் இவ்வளவு அலப்பறை.


அவனுக்காகக் காத்திருந்து பொறுமையில்லாமல் அறைக்குள் வந்தாள் கல்யாணி. அன்று வந்த பொழுது தானே வந்து அவனை அழைத்துப் போவதாக அவள் சொல்லியிருக்கவே அடுத்த ஞாயிறு வரை எப்படிதான் பொறுத்திருந்தானோ! தினமும் ஒருமுறையாவது கைப்பேசியில் அவர்களுடன் பேசி அதை உறுதிப்படுத்திக்கொண்டான்.


இப்போது அவனைத் தன்னுடன் அழைத்துப்போக வந்திருந்தாள்.


அவர்கள் பேசியதைக் கேட்டுக்கொண்டே உள்ளே வந்தவள், “டேய், வாட்டர் கன் வெச்சிருக்கியா. என் மேல தண்ணி கிண்ணி அடிச்ச, மவனே உன்னைப் பிச்சிடுவேன் பிச்சி” என அவனை உரிமையாக மிரட்ட, சமாளிப்பாகச் சிரித்தவன், “ஐயோ... கல்லி அக்கா, நான் உன் மேல தண்ணி அடிப்பனா. இது லச்சுக்காக. அவதான் எடுத்துட்டு வரச்சொன்னா” என அவளைப் போட்டுக்கொடுக்க,


“சுத்தம்... ஆன்ட்டி இவனாவது கொஞ்சம் பாவம் பார்ப்பான், அவ என்னை வெச்சு செய்வா! ப்ளீஸ் ஆன்ட்டி, அந்த கன்ன மட்டும் வாங்கி வெச்சிக்கோங்க’ என அவள் கெஞ்சலில் இறங்க, உண்மையில் சிரிப்புதான் வந்தது குயிலிக்கு. ஆனாலும் அவனைப் பார்த்து நன்றாக முறைக்க, பம்மியபடி அதை எடுத்து அவளிடம் கொடுத்தவன், “அவ வாட்டர் பலூன் ரெடி பண்ணி வைக்கறேன்னு சொல்லியிருக்கா, அதை என்ன செய்வீங்க?” என இருவருக்கும் பழிப்பு காண்பிக்க, இந்த முறை மூண்ட சிரிப்புக்குத் தடைபோடவே இயலாமல் போனது இருவருக்கும்.


ஒன்றுக்கு இரண்டு மாற்றுடைகளை அவனுடைய பையில் திணித்தபடி, “அங்கப் போய் யாரையும் தொந்தரவு பண்ணக்கூடாது. சாப்பிட ஏதாவது கொடுத்தா பிடிக்காதுன்னு சொல்லாம வாங்கி சாப்டணும். அக்கம் பக்கம் பசங்க விளையாட வந்தா முகம் சுளிக்கக் கூடாது. யாரையும் பாடி ஷேமிங் பண்ணக்கூடாது. பர்டிகுலர்லி என் கிட்ட அது இருக்கு இது இருக்குன்னு பெருமை பீத்திக்கக் கூடாது. அப்படி ஏதாவது செஞ்சி வெச்ச இனிமேல் உன்னை எங்கயும் அனுப்ப மாட்டேன்’ என மகனை எச்சரித்தாள் குயிலி.


“ஓகேம்மா... ஓகேம்மா...” என்றபடி பையை முதுகில் மாட்டிக்கொண்டு அவன் வெளியேற. “சூப்பர் ஆன்ட்டி நீங்க” என்று அவனுடைய கையைப் பிடித்துக்கொண்டாள் கல்யாணி.


அவர்களை அழைத்துச்செல்லத் தயாராக வசந்தகுமார் வரவேற்பறையில் காத்திருக்க, “ஏன்ப்பா, நீங்களா கொண்டுபோய் விடப்போறீங்க. ஒரு நாள் அவன் பப்ளிக் ட்ரான்ஸ்போர்ட்ல போகட்டுமே’ என குயிலி சொல்ல அவர் பார்த்த கண்டனப் பார்வையில், “சரி... சரி... நீங்களாச்சு உங்கப் பேரனாச்சு” எனப் பின்வாங்கவும் தானும் சுதாரித்தவன், “ஓகேம்மா பை... பாட்டி பை” என தானும் எந்தப் பிடிவாதமும் பிடிக்காமல், “போகலாம் தத்தா” என்றான் நல்லப் பிள்ளையாக.


கல்யாணியை அழைத்துவர கார் அனுப்ப சொல்லியிருந்தார் வசந்தன். முந்தைய இரவு தாமதமாக வந்ததில் தன்னை மறந்து அசந்து உறங்கிவிட்டாள். அதற்கும் மேலாக, நினைத்ததை விடச் சீக்கிரமே கிளம்பி இங்கேயே வந்துவிட்டாள் கல்யாணி. மகனும் பேருந்தில் போகிறேன் எனப் பிடிவாதம் பிடிக்க, சரி இதில் என்ன இருக்கிறது என அவள் விட்டுவிட, அதனால் உண்டான எரிச்சல்தான் அவருக்கு. பேரனைப் பற்றிய அதீத அக்கறையும் ஒரு காரணம்.


அவனுடைய பாவனையில் கையால் வாயை மூடி சிரித்த கல்யாணி, “வாடா போகலாம்” என அவனுடைய கையைப் பிடித்து இழுக்க, அவளுடன் நடந்தவாறே, “அக்கா, உங்க வீட்டு கிட்ட ஒரு கடை இருக்காம் இல்ல, போகும் போது அங்க டாக் ஃபுட் வாங்கிட்டு போகலாம்” என்று சொல்ல, “அது என்னடா அது டாக் ஃபுட்” எனப் புரியாமல் கேட்டார் அவனுடைய தாத்தா.


“அது தாத்தா, இவங்க வீட்டுல டைகர்ன்னு ஒரு டாக் இருக்கில்ல அதுக்குதான். அது ரவுண்டா இருக்குமாம். அதைத் தூக்கி போட்டா டைகர் கேட்ச் பிடிச்சு சாப்பிடுமாம். அதுக்கு லச்சு ஏதோ ஒரு பேர் சொன்னாளே” என யோசித்தவன் நினைவு வராமல் போகவும், “கல்லி அக்கா, நீ சொல்லு” என்று கேட்க, அதற்கவள், “எது பொறையா சொல்ற” எனவும், “ஆங்... எஸ்... எஸ்... பொற... பொற” என வளவளத்துக் கொண்டே அவன் செல்வது குயிலியின் செவிகளுக்குள் தேய்ந்து மறைய அவளது இதழ்களில் ஒரு புன்னகை அரும்பியது.


“என்ன பேச்சு பேசறான் பாரு! பொறைய டாக் புட்டுன்னு என்னம்மா ஸ்டயிலா சொல்றான்” எனப் பேரனின் பேச்சில் அப்படியே புல்லரித்துப் போனார் கற்பகம்.


ஒரு கூடை நிறைய திராட்சையையும் பேரன் கேட்ட பொறையையும் வாங்கிக்கொண்டு இருவரையும் அழைத்து வந்து அவர்கள் வீட்டில் விட்டவர், அஞ்சுக் கொடுத்த இஞ்சி டீயைப் பருகிவிட்டு உடனே கிளம்பிவிட்டார் வசந்தன். அவர்கள் அங்கே வருவதற்கு முன்பே அங்கே ஆஜராகியிருந்தாள் மேகலா.


கணவனும் மனைவியுமாக இணைந்து மதிய உணவு தயாரிப்பில் இறங்க, பிள்ளைகள் நால்வர் கூட்டணியில் அஞ்சுவின் வீடு களைகட்டியது.


முதல் காரியமாக, சரண் கொண்டு வந்திருந்த பென்-டிரைவைப் பொருத்தித் தொலைக்காட்சியில் படம் பார்த்து முடிக்க, கூடை திராட்சையும் காலி ஆகி இருந்தது.


அடுத்து என்ன செய்யலாம் என சரணும் மேகலாவும் தீவிரமான ஆலோசனையிலிருக்க, இருவருக்கும் நடுவில் உட்கார்ந்திருந்த கல்யாணி ஏதோ நகைச்சுவை சேனலில் மூழ்கி தன்பட்டிற்குச் சிரித்துக்கொண்டிருந்தாள்.


திடீரென அவள் மேல் வந்து விழுந்தது தண்ணீரால் நிரப்பப்பட்ட பலூன் ஒன்று. திடுக்கிட்டுக் கடுப்பாகி அதை எய்த லட்சுமியை அவள் திட்டத் தொடங்க, சமையலறையிலிருந்து எட்டிப்பார்த்து, “அடேய்களா... ஊராமூட்டு துணியெல்லாம் குவிஞ்சு கிடக்கு, அதுல தண்ணியை ஊத்தி தொல்லையை இழுத்து விட்றாதீங்க” எனப் பதறிய அஞ்சு, எப்படியும் இந்த லக்ஷ்மி அடங்க மாட்டாள் என்பது திண்ணமாக விளங்கவே, “லச்சு, பின்னால கொட்டாய்ல போய் விளையாடுங்க’ என்று முடிக்க, கல்யாணியும் மேகலாவும் ஏற்கனவே நனைந்து போயிருக்க, அதற்குள் வெயிலும் ஏறியிருந்ததால் அந்தத் தண்ணீர் விளையாட்டு ஒரு இதத்தைக் கொடுக்கவும், வீட்டிற்குப் பின்புறமாகத் துணிகளைத் துவைக்க அவர்கள் போட்டிருக்கும் சிறு ஷெட்டுக்குள் போய், லக்ஷ்மி தயாராக வாங்கி வைத்திருந்த பலூனில் தண்ணீரை நிரப்பி, ஒருவர் மீது ஒருவர் விட்டெறிந்து தொப்பலாக நனைத்து கூத்தடித்தனர்.


சில நிமிடங்கள் இப்படியாகப் போக, அஞ்சு போட்ட அதட்டலில் ஒரு வழியாக உள்ளே வந்து உடைகளை மாற்றிக்கொண்டனர். போட்ட ஆட்டத்தில் நான்கு பிள்ளைகளுக்கும் பசி வயிற்றைக் கிள்ளவும் தடபுடலாகத் தயாராகியிருந்த சாப்பாட்டைச் சிரிப்பும் விளையாட்டுமாகச் சாப்பிட்டு முடித்தனர்.


பின்பு படம் வரையலாம் என சரண் லக்ஷ்மியை அழைக்க, அவனுடன் இணைந்து மரம், இலை, பூ, என உற்சாகமாக வரையத்தொடங்கியவள் ஒரு கட்டத்தில் சோர்ந்துபோய் தன்னை மீறி உறங்கிப்போனாள்.


பொறுப்புடன் பெரிய பெண்கள் இருவரும் பாடப் புத்தகத்தில் மூழ்கியிருக்க, “ஆன்ட்டி போர் அடிக்குது” என அஞ்சுவை நச்சரிக்கத் தொடங்கினான் சரண்.


“நீயும் கொஞ்ச நேரம் தூங்கு. லச்சு எழுந்ததும் விளையாடலாம்” என்று அவள் சொல்ல, அவனுக்கு உறக்கமும் வரவில்லை.


துவைத்து வைத்திருந்த துணிகளைக் காயப்போட வேண்டியதாக இருக்க, இஸ்திரி செய்யத் துணிகள் வேறு குவிந்து கிடக்கவும், “அஞ்சும்மா... ருக்மணி அம்மா ஒரு பட்டுப்புடவை அயர்ன் பண்ணக் கொடுத்திருக்காங்க இல்ல. சாயங்காலம் ஏதோ பங்க்ஷனுக்கு கட்டிட்டுப் போகணும் அர்ஜன்ட்டா வேணும்னு சொன்னாங்க. நான் தேய்ச்சுட்டேன். கொஞ்சம் கொண்டு போய் கொடுக்கறியா” என சீனு அதையும் ஒரு கோரிக்கையாகவே மனைவியிடம் கேட்க, மறுக்காமல் கிளம்பினாள்.


ஒரு கையில் பையும் மறு கையில் சாவியுமாக அவள் கிளம்ப, அதை கவனித்தவன், “ஆன்ட்டி எங்கப் போறீங்க?” என்றான் தானும் அவளுடன் கிளம்பும் ஆவலுடன்.


“ஒருத்தங்க வீட்டுக்குத் துணிக் கொடுக்கணும். டென் மினிட்ஸ்ல வந்துடுவேன். அதுவரைக்கும் அக்காங்க கூட இரு” என அவள் சொல்ல, “இல்ல நானும் உங்க கூட வரேனே. ப்ளீஸ் ஆன்ட்டி கூட்டிட்டுப் போங்க” என்றவன், ‘அங்கிள் ப்ளீஸ் கூட்டிட்டுப் போக சொல்லுங்க” என சீனுவை வேறு துணைக்கு அழைக்க, என்ன சொல்வது எனப் புரியாமல் பரிதாபமாக மனைவியை ஏறிட்டான் அவன்.


அவனுமே கொட்டுக் கொட்டெனப் பரிதாபமாக உட்கார்ந்திருக்கவும், “சரி வா” என்றபடி வெளியில் சென்று வாகனத்தைக் கிளப்பினாள்.


“ஐ... டூ வீலர்லயா?! எனக்கு ரொம்ப நாளா பைக்ல போகணும்னு ஆசைத் தெரியுமா ஆன்ட்டி” என்றவாறு அவளுக்குப் பின்னால் ஏறி உட்கார்ந்தவன், வயிற்றுடன் சேர்த்து அவளைக் கட்டிக்கொண்டு தன் முகத்தை அவளது முதுகில் வைத்து கிச்சு கிச்சு மூட்டக் குலுங்கிச் சிரித்தவள், “ஹேய் வாலு... இப்படியெல்லாம் செஞ்சா வண்டியைக் கொண்டு போய் எங்கயாவது பள்ளத்துல விட்டுடுவேன். அப்பறம் மூஞ்சி முகரையெல்லாம் பேந்துடும்” என அவனை எச்சரிக்க, “ஓகே ஆன்ட்டி, இனிமேல் அப்படி செய்யல” என அவன் நல்லப்பிள்ளையாகப் பதில் கொடுதான். இருந்தாலும் கொஞ்சம் எச்சரிக்கை உணர்வுடனேயே நிதானமாக வாகனத்தை ஓட்டினாள் அஞ்சு.


அடுத்த பத்தாவது நிமிடத்தில் சூர்யாவின் வீட்டின் முன் நின்று அழைப்பு மணியை அடித்துக்கொண்டிருந்தான் அவனுடைய மகன். கதவைத் திறந்த ருக்மிணிக்குக் கையில் பையுடன் நிற்கும் அந்தப் புதிய சிறுவனைப் பார்த்ததும் அவ்வளவு வியப்பாக இருந்தது.


“நான் போய் கொடுக்கறேன். நீங்க வெஹிகிள பார்க் பண்ணிட்டு வாங்க” எனப் பையைக் கையில் எடுத்துக்கொண்டு அவளை முந்திக்கொண்டு வந்திருந்தான் அவன்.


“நீங்கதான் ருக்மணி அம்மாவா?” என அவன் கேட்கவும், “ஆமாம் நீ யாரு” என்று அவர் வியப்புடன் விசாரிக்க, “ஐ ஆம் சரண்! லச்சு. கல்யாணி அக்காவோட ஃப்ரெண்ட். உங்க சாரிய கொடுக்க வந்திருக்கேன்” என்று பதில் கொடுத்தான்.


அஞ்சு குடும்பநிலைக்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாமல் அவனுடைய செழுமையானத் தோற்றமும் அவன் அணிந்திருந்த பிராண்டட் உடையும் ஆங்கில வார்த்தைகளை அவன் உச்சரித்த விதமும் அவரை வெகுவாகக் குழப்பியது.


அதற்குள் அஞ்சு அங்கு வந்துவிட, அந்தப் பையைக் கையில் வாங்கியபடி “ஆமாம், யாருடி இந்தக் குட்டி பையன்” என ஆவல் தாங்காமல் அவர் எதார்த்தமாகக் கேட்கவும், “பாட்டி, நான் ஒண்ணும் குட்டி பையன் இல்ல. பாருங்க, ஹவ் பிக் ஐ ஆம்” என்று அவன் அவருக்கு அருகில் வந்து நிற்க, அவரது தோளைத் தொட்டு வளர்ந்திருந்தான்.


“ஓகே... நீ பெரிய்ய பையன்தான் நான் ஒத்துக்கறேன்” என இறங்கி வந்தவர், ‘இவன் யார்?’ என அவளிடம் மீண்டும் ஜாடையில் வினவ, “என் ஃப்ரெண்டோட பையன்ம்மா. இவ்வளவு நாள் லண்டன்ல இருந்தாங்க. இப்பதான் இங்க வந்திருக்காங்க. பிள்ளைங்க கூட விளையாட வந்திருக்கான்” என அவள் விளக்கமாக பதில் சொல்லவும், “சரி உள்ள வா. காசுக் கொடுக்றேன்” என்றவர் உள்ளே செல்ல, அஞ்சுவின் கையைப் பிடித்தபடி அந்த வீட்டிற்குள் பிரவேசித்தான் சரண்.


அவர்கள் பேசிய அனைத்தும் காதில் விழுந்திருக்க, “வாம்மா... எப்படி இருக்க? ரொம்ப நாளாச்சு உன்னைப் பார்த்து” என அவளை வரவேற்றார் வரவேற்பறை சோஃபாவில் அமர்ந்து புத்தகம் வாசித்துக்கொண்டிருந்த சிகாமணி. அவருடைய கண்கள் இலண்டனிலிருந்து வந்திருக்கும் அந்த சிறுவன் மீதே இருக்க, ‘யாருடா நமக்குத் தெரியாம இவளுக்கு இப்படி ஒரு ஃப்ரெண்டு?!’ என்ற கேள்வி அவரது மனதிற்குள் குடைந்தது.


“நல்லா இருக்கேன்ப்பா” எனப் புன்னகையுடன் அவருக்கு அருகில் கீழே அமர்ந்தவள், “நம்ம தங்கத்துக்கு என் ஃப்ரெண்டு அவ ஆஃபிஸ்லயே நல்ல சம்பளத்துல வேலை போட்டுக் கொடுத்துட்டா. ரெண்டு நாளா அங்கதான் போயிட்டு இருக்கா. நானே அதை நேரில் வந்து சொல்லணும்ன்னு இருந்தேன்ப்பா” என்று சொல்ல,


“நல்லதும்மா, தங்கம் எனக்கு போன வாரமே ஃபோன் பண்ணிச் சொல்லிட்டா. நான் வாங்கிக் கொடுத்த வேலைன்னு அதுலயே தொங்கிட்டு இருக்கணுமா என்ன. வாய்ப்பு கிடைச்சா முன்னேறி போயிட்டே இருக்கணும்” என்றார் மனதிலிருந்து.


ஃபோனில் பேசியதால் தங்கம் கூட எதையும் விளக்கமாக அவரிடம் சொல்லவில்லை. மற்றபடி அவளுடைய தோழி இவ்வளவு பெரிய ஐந்து நட்சத்திர விடுதியை வைத்திருப்பாள் என்றெல்லாம் அவர் எண்ணிக்கூட பார்க்கவில்லை. தோழியின் ஆஃபிஸ் என்றதும் அதில், அவள் அங்கே ஏதும் பொறுப்பில் இருப்பாள் என்கிற எண்ணம்தான் அவருக்கு.


மீண்டும் அவரது பார்வை சரணிடம் சொல்ல, “ஏன்டா கண்ணு நின்னுட்டே இருக்க. உட்காரு வா.” என தனக்கு அருகில் தட்டியவர், தயக்கம் இல்லாமல் அவன் வந்து அங்கே அமரவும், அவன் மீதிருந்து எழுந்த ஒருவித மணம் அவரை என்னவோ செய்ய அனிச்சையாக அவனுடைய தோளில் கையைப் போட்டு தன்னுடன் நெருக்கிக்கொண்டார். அந்தக் கணம் மனம் முழுவதும் ஏதோ ஒரு பரவச உணர்வு பொங்க, அவருக்கு அதன் காரணம் பிடிபடவில்லை.


‘உன்னுடைய அந்தத் தோழி யார்?’ என அவளிடம் கேட்க நினைத்தது மறந்தே போனது.


“உன் பேர் என்ன செல்லம்?”


“சரண்”


“என்ன படிக்கற”


“ஃபிப்த் கிளாஸ்”


“ஓஹ்... குட்”


“எந்த ஸ்கூல்”


சொன்னான்.


“ஹேய்... சூப்பர் ஸ்கூல்ப்பா அது. அதுல அட்மிஷன் கிடைக்கறதெல்லாம் அவ்வளவு ஈசி இல்லையே” என்றவருக்கு அவனது பின்புலம் பற்றி அறிந்துகொள்ளும் ஆவல் ஏற்பட, “அப்பா என்ன வேலை செய்யறாங்க கண்ணு” என வெகு எதார்த்தமாக அவனிடம் கேட்டுவிட்டார் அவர்.


அவ்வளவுதான், அன்று காலை முதல் அவனிடம் குடிகொண்டிருந்த உற்சாகம் மொத்தமும் வடிந்துபோய் முகம் இறுகிப்போனது.


“அப்பா என் கூட இல்ல தாத்தா. ஐம் எ சிங்கிள் பேரன்ட் சைல்ட். அம்மாதான் பிசினஸ் பண்றாங்க” என்றான் கசந்த குரலில்.


இப்படி ஒரு பதிலில் அதிர்ந்தேவிட்டார் தெய்வசிகாமணி.


அவன் சொன்னதைக் கேட்டுக்கொண்டே கையில் ரூபாய் நோட்டுடன் திரும்ப வந்த ருக்மிணிக்கோ அப்படி ஒரு ஆத்திரம் பற்றிக்கொண்டு வந்துவிட்டது.


தன் கட்டுப்பாட்டை இழந்தவராக, “கருமம்... கருமம்... விவஸ்தையே இல்லாம பிள்ளைக்கு எப்படியெல்லாம் சொல்லிக் கொடுத்து வளர்த்திருக்காங்க பாரு. இவளுங்களுக்கெல்லாம் புள்ள பெத்துக்க மட்டும் ஆம்பள வேணும். அப்பறம் அதை ஆயுதமா வெச்சே அட்டைப் பூச்சி மாதிரி அவனுங்க இரத்தத்தைக் கடைசிச் சொட்டு வரை உறிஞ்சிடுவாளுங்க. இதையே பிசினஸா செய்யதான ட்ரைனிங் கொடுத்து இவளுங்களோட அப்பன் ஆத்தா அனுப்பி வைப்பாங்களோ?!” என முணுமுணுத்தபடி அஞ்சுவின் கையில் அவர் பணத்தைத் திணிக்க அவளுக்குத் தூக்கி வாரிப் போட்டது. இப்படியெல்லாம் நடக்கும் எனச் சற்றும் எதிர்பார்க்கவில்லை அவள். காரணம் இப்படிப் பேசக்கூடியவரே இல்லை ருக்மிணி.


அனிச்சையாக அவளது பார்வை சரணிடம் செல்ல, முகம் சிவந்து அவனுடைய கண்கள் கலங்கிவிட்டிருந்தன.


நல்லவேளையாக அவர் பேசிய எதுவும் அவனது செவிகளை எட்டவில்லை. ஆனாலும் அவர் முகம் பிரதிபலித்த அருவருப்பை நன்றாகவே உணர்ந்தவன் வேகமாக வாயிலை நோக்கி ஓட, எதிரில் வந்துகொண்டிருந்த சூர்யாவின்மீது மோதி நின்றான்.


அவனுடைய நெற்றி மோதியதால் உண்டான வலியில் தன் நெஞ்சை நீவியபடி சரணுடைய முகத்தைப் பார்த்தான் சூர்யா.


அவனது கலங்கிய விழிகள் கடைசியாக குயிலியைப் பார்த்த தினம் அவளிருந்த நிலையை நினைவுபடுத்த, மேலும் நெஞ்சுக்குள் சுருக்கென்ற ஒரு வலி உண்டானது.


அன்று செய்யத் தயங்கிய ஒரு செயலை அனிச்சைச் செயலாகத் தன்னையும் அறியாமல் இன்று செய்தான் சூர்யா.


அதாவது தன் மகனென்றே அறியாமல் போனாலும் ஏதோ அவனுடைய துயரத்தைத் தானே வாங்கிக்கொள்வது போல அவனை தன்னுடன் சேர்த்து அணைத்திருந்தான்.


யாரோ ஒரு புதியவனின் அணைப்பில் கட்டுண்டு இருக்க இயலாமல், நிமிர்ந்து அவனது முகத்தைக் கூட காண எண்ணாமல் சரண்தான் அவனிடமிருந்து திமிறி விலகி வெளியில் ஓடினான்.


உச்சபட்ச பதட்டத்துடன் அவனைப் பின் தொடர்ந்து ஓடினாள் அஞ்சு.


*********

(காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு' என்கிற பழமொழியின் அடிப்படையில்தான் இந்த அத்தியாயத்திற்கு 'பொன் குஞ்சுகள்' எனப் பெயர் வைத்திருக்கிறேன்.


இன்னும் சில அத்தியாயங்கள் கடந்து வரவிருக்கும் 'குயில் குஞ்சு' அத்தியாயத்தைப் படிக்கும்போது இந்த பெயர்க் காரணம் உங்களுக்குப் புரியும்.

நாம் இயல்பாகவே காக்கைகளைச் சற்று இழிவாகவும் குயில்களை உயர்வாகவும் கருதுகிறோம். ஆனால் காகங்கள் தன் உழைப்பால் வாழும் பறவை. தனக்கென ஒரு கூட்டை கட்டிக்கொண்டு முட்டையிட்டு, பத்திரமாக அடைகாத்து, குஞ்சு பொரித்து அதற்குப் பொறுப்புடன் உணவளித்து அதனை வளர்க்கும்.


பொதுவாகக் குயில்களை 'Parasite Bird' என்பார்கள். கூவுவதைத் தவிர வேரென்ன தெரியும் அதற்கு? காக்கை, தவிட்டுக் குருவி போன்ற பறவைகளின் வாழ்வாதாரத்தைச் சுரண்டி, தந்திரமாக அவற்றின் கூடுகளில் முட்டையிட்டு, தன் இனத்தைப் பெருக்கிக் கொள்ள அவற்றின் முட்டைகளைத் தள்ளி உடைத்து, என எல்லா தகிடுதத்தமும் செய்யும். ஆனாலும் அதன் குரல் இனிமையில் அதனை நாம் போற்றிக்கொண்டே இருக்கிறோம்.


இந்த குயில்களைப் போல 'parasite' மனிதர்களும் இங்கு உண்டு. இந்தப் பதிவில் ருக்மணி அம்மாள் குறிப்பிடுவதும் அப்படிப்பட்டவர்களைத்தான்.)

© KPN NOVELS COPY PROTECT
bottom of page