top of page

Valasai Pogum Paravaikalaai - 4

4

தங்கமயில்

சரணுடன் பேச்சுவார்த்தை நடத்தி சில தினங்கள் கடந்திருந்தன. அதன் பிறகு வெளிப்படையாகவே அவனிடம் நல்ல மாற்றங்கள் தெரிந்தன. முன்பு இருந்த சுறுசுறுப்பு மீண்டிருந்தது. பிடிவாதமும் இல்லை. ஒழுங்காகப் பள்ளிக்குச் சென்று திரும்பினான். படிப்பிலும் கவனம் கூடியிருந்தது. அனைத்திற்கும் சிகரம் வைத்தாற் போல அவனுடைய பாட்டியின் கைப்பேசியை அவன் தொடுவதே இல்லை. குயிலிக்கு மகனை எண்ணி அவ்வளவு பெருமையாக இருந்தது. நிம்மதியாக அவளுடைய வேலைகளையும் அவளால் பார்க்க முடிந்தது.


*********


அவர்களுடைய இணையதளத்தை வடிவமைக்க, அவளுடைய பீ.ஏ பிரேமின் நண்பன் மூலமாக ‘முகில் இன்ஃபோஸ்’ நிறுவனத்தின் மேலாளருடன் பேசியிருந்தாள்.


தலையை நுழைக்க இடம் கொடுத்தால் மொத்தமாகக் கூடாரத்தையே ஆக்கிரமித்த ஒட்டகத்தைப் போல, தன்னுடைய மார்க்கெட்டிங் திறமை முழுவதையும் உபயோகித்துப் பேசிப்பேசியே, அவர்களுடைய விடுதி மற்றும் அலுவலகம் சார்ந்த கணினி பயன்பாடு அனைத்திற்குமான ஒட்டுமொத்த ஒப்பந்தங்களையும் அவர்களிடமே கொடுக்குமாறு செய்துவிட்டாள் அந்தப் பெண்.


குயிலியும் வெறும் வார்த்தை ஜாலங்களில் மயங்கி ஒரு செயலில் இறங்கும் ரகமில்லை. அந்த நிறுவனத்திற்கு உண்மையிலேயே நல்ல மதிப்பும் வேலை சுத்தமும் இருப்பதும் ஒரு முக்கியமான காரணம். என்ன, செலவுக்காகப் பார்த்து சில நாட்கள் கழித்துச் செய்யலாம் என அவள் தள்ளிப்போட எண்ணியிருந்ததை உடனடியாக செய்யவேண்டியதாகிப்போனது. ஆனால் அந்தச் செலவுகளைச் சுலபமாகக் கையாளவும் அவர்களிடம் இருந்த சில திட்டங்கள் இவளுக்கு சாதகமாக இருந்தன.


இந்த நட்சத்திர விடுதி மட்டுமல்லாமல் ‘சரணாலயம்’ குழுமத்திற்குக் கீழ் வரும் ‘செயின் ஆஃப் ரெஸ்டாரன்ட்ஸ்’ அனைத்தையும் ஒருங்கிணைக்கவும் நேரடியாக இணைய வர்த்தகத்திற்காக செயலிகள் உருவாக்கவும் என இவர்களுடைய தேவைகள் பெரியது என்பதினால் குயிலியை நேரில் சந்தித்துப் பேசுவதற்காக முகில் இன்ஃபோஸ் நிறுவன உரிமையாளரான கார்முகிலனே அங்கே வந்திருந்தான்.


தோற்றம் மட்டுமில்லை அவனுடைய பார்வை, உடல்மொழி, பேச்சுவழக்கு என அனைத்தும் மதிக்கும்படியாகக் கண்ணியமாக இருக்கவும், அவளால் இலகுவாக அவனுடன் பேச முடிந்தது.


இயல்பான முகமன்களுடன் ஆரம்பித்தப் பேச்சு முழுக்க முழுக்க தொழிற்நுட்ப தேவைகள் குறித்ததாகத் தீவிரமாக மாறிப்போக நிமிட கணக்கெல்லாம் கடந்து போயிருந்தது.


இடையில், “ஆடிட்டர் ஆஃபிஸ்ல இருந்து ஏதோ ஃபார்ம்ஸ்ல சைன் வாங்கணும்னு ஒருத்தங்க வந்திருக்காங்க. உள்ள அனுப்பட்டுமா?” என பிரேம் அவளை இன்டர்காம் மூலம் அழைத்துக் கேட்க, “கொஞ்சம் வெயிட் பண்ண சொல்லுங்க நானே கூப்பிடறேன்” என்றிருந்தாள். வேலை மும்முரத்தில் அதையும் கூட மறந்தே போயிருந்தாள்.


அப்பொழுது அவர்கள் இருவருக்குமாகப் பழரசம் எடுத்து வந்த ஜோதிம்மா, “மேடம், உங்கள பார்க்கணும்னு யாரோ ஒரு மேடம் வந்து ரொம்ப நேரமா வெயிட் பண்ணிட்டு இருக்காங்க. பிரேமு சார்-கைல உங்ககிட்ட சொல்ல சொன்னா ரொம்ப யோசிக்கிறாரு. அவங்கள பார்க்க பாவமா இருக்கு மேடம்” என சகஜமாகச் சொல்லிவிட, அப்பொழுதுதான் அவளுக்கு தன் தவறே உரைத்தது. 'வழக்கமா இந்த வேலைக்கெல்லாம் லேடீசை அனுப்பமாட்டாங்களே! இது என்ன புதுசா?' என்ற கேள்வியும் எழுந்தது. ஏனென்றால் பயண தூரம் மிக அதிகம்.


“சரிம்மா, பிரேம் கிட்ட சொல்லி ஒரு அஞ்சு நிமிஷத்துக்கு அப்பறம் அவங்கள உள்ள அனுப்பச் சொல்லுங்க” என்று அவரை அங்கிருந்து அனுப்பினாள்.


மரியாதை நிமித்தம், “இஃப் யூ டோன்ட் மைன்ட், ஜஸ்ட் ஒரு ஃபைவ் மினிட்ஸ்ல என்னன்னு பார்த்து அவங்கள அனுப்பிடறேன்” என்றவள் கார்முகிலனை பழ ரசம் அருந்தும்படி சொல்லிவிட்டு தானும் ஒரு குவளையை எடுத்துப் பருகத்தொடங்கினாள். கூடவே அவர்களுடைய பேச்சும் தொடர்ந்தது.


இருவரும் பொதுவாகப் பார்க்க ஏதுவாக மேசைமேலிருந்த மடிக்கணினியில் பார்வையைப் பதித்திருந்தவள் கதவு தட்டப்படும் ஒலியில் “கம் இன்” என்றவாறு பார்வையை உயர்த்த உள்ளே நுழைந்தப் பெண்ணை பார்த்ததும் அவளுடைய நெற்றிச் சுருங்கியது.


வேலை வேலை என்று ஓடிக்கொண்டு தன் உடலையும் ஆரோக்கியத்தையும் கோட்டை விடும் முப்பதுகளின் மத்தியில் இருப்பவள் என்பது அவளது தோற்றத்திலேயே எழுதி ஒட்டியிருந்தது. அதாவது நல்ல பருமனாக இருந்தாள். அவளது கழுத்தில் பிதுங்கித் தொங்கிய தசைகள் அவளுக்கு தைராய்ட் பிரச்சனை நிச்சயம் இருக்கிறது எனக் கட்டியம் சொன்னது. சம்பிரதாயமானப் போலி புன்னகையைக் கூட மறந்து இறுகிப்போயிருந்த அவளுடைய முகம் அவளை எங்கேயோ பார்த்துப் பழகிய உணர்வைக் கொடுத்தது.


‘அவள் யார்?’ என்ற யோசனையுடன் குயிலி அவளுடைய முகத்தையே ஏறிட, பார்த்த மாத்திரமே குயிலியை அடையாளம் கண்டுகொண்டாள் அவள்.


கண்களில் திரண்ட கண்ணீருடன் சில நொடிகளுக்குள் தோன்றிய பதற்றமும், ஒரு உயரமான அந்தஸ்துடன் தன் எதிரே தோரணையாக உட்கார்ந்திருப்பவளிடம் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளலாமா வேண்டாமா என்கிற பெரிதொரு தயக்கமும் அவளிடம் அப்பட்டமாக வெளிப்பட, அவள் தன்னை அடையாளம் கண்டுகொண்டது குயிலிக்கும் விளங்க, அவசரமாக அவள் முகத்தை மேலும் ஆராய்ச்சியுடன் பார்க்கவும் அவளுடைய கூர்மையான மூக்கில் அமர்ந்து ஒளி வீசிய மூக்குத்தி அவள் யாரென்பதை குயிலிக்கு நன்றாகவே புரிய வைத்துவிட்டது.


அவளுடைய உதடுகள் ‘தங்கம்’ என முணுமுணுக்க அவளுடைய உடல் ஒரு நொடி சிலிர்த்து அடங்கியது. அதை உணர்ந்து அனிச்சையாகப் பின்புறம் திரும்பிப்பார்த்தான் முகிலன்.


அதற்குள் தோழியை நோக்கி விரைந்திருந்தாள் குயிலி. அடுத்த நொடி ஒருவர் அணைப்பிற்குள் மற்றவர் வந்திருக்க அழுகையில் குலுங்கினாள் தங்கம் என்கிற தங்கமயில். ஆதரவாக அவளுடைய முதுகை வருடின குயிலியின் கரங்கள்.


மற்றபடி வேறு பேச்சே இல்லை, பேசும் நிலையிலும் இல்லை, இருவருக்குள்ளும் இருக்கும் அன்பும் பிரிவுத்துயரும் அப்பட்டமாக வெளிப்பட, சுற்றுப்புறம் மறந்து நின்றிருந்தனர் பெண்கள் இருவரும்.


அடிக்கடி உடுத்தியதால் சற்று நிறம் மங்கித் தெரிந்த சிந்தடிக் புடவை, குட்டிக் குட்டியாகக் காதிலும் மூக்கிலும் மட்டுமே அசல் மற்றபடி கழுத்தில் கையில் என அவள் அணிந்திருந்ததெல்லாம் தங்க முலாம் பூசப்பட்ட போலிகள்தாம். வியர்வை வழிய நீண்ட தூரம் பேருந்தில் பயணம் செய்து வந்து ஏசியில் அமர்ந்திருந்ததால் அந்த வியர்வையும் அடங்கித் தூக்கலாக அதன் வாடை வேறு என்றிருந்தவளை எந்த ஒரு முகச் சுளிப்பும் இல்லாமல் இயல்பாக அணைத்து நிற்கும் ஒருத்தியைப் பார்க்கும்போது முகிலனுக்குச் சற்றுப் பிரமிப்பாக இருந்தது.


முன்பு ஓரிருமுறை குயிலியுடன் தொலைப்பேசியில் பேசியிருக்கிறான், மற்றபடி முகிலன் இன்றுதான் முதன்முதலில் அவளை நேரில் சந்தித்திருக்கிறான்.


ஒரு சதவிகிதம் கூட மரியாதைக் குறைவாக நடக்கவில்லை என்றாலும், நடை உடை பாவனை அனைத்திலும் ஒரு நளினமும் எதிரிலிருப்பவரைத் தூக்கி அடித்து தூர நிறுத்தும் ஒரு திமிரும் தான் எனும் கர்வமும் சற்று தூக்கலாகவே அவளிடம் வெளிப்பட்டதாகவே அவனுக்குத் தோன்றியது.


பொதுவாகவே அவனுக்குப் பெண்களிடம் நல்லபிப்பிராயம் இல்லை. அதுவும் நமத்துப்போன அப்பளம் போல் சந்தர்ப்பத்திற்குத் தகுந்தார்போல் வளைபவர்களை அறவே வெறுப்பவன் அவன். அப்படி வளைந்துகொடுக்காமல் மேல்மட்டத்திற்கு ஒரு பெண்ணால் வரவே முடியாது என்பதான ஒரு கேவலமான ஆணாதிக்கப் புத்தி அவனுக்கு எப்பொழுதுமே உண்டு.


ஏற்கனவே ஜோதிம்மாவுடனான அவளது இயல்பான பேச்சு அவனுக்கு ஒரு சுவாரசியத்தைக் கொடுத்திருக்க, இவளுடைய இந்தச் சிறு செயல் அவனை முதன்முதலாகச் சற்று மரியாதையுடன் அவளைப் பார்க்க வைத்தது.


ஆனாலும் ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்தவன் தொண்டையைச் செருமி அந்தப் பெண்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பவும், அதில் சுயநினைவு வரப்பெற்றவர்கள் சட்டென ஒருவரை விட்டு ஒருவர் விலகினர்.


ஒரு புதியவனை முன்னே வைத்துக்கொண்டு எதுவும் பேச இயலாத நிலையில், “உட்காரு தங்கம்” என முகிலனுக்கு அருகிலிருந்த இருக்கையைச் சுட்டிக் காண்பித்தவாறு தன் இருக்கையில் போய் உட்கார்ந்தாள் குயிலி.


அவனிருக்கும் மிடுக்குக்கு தன் நிலையையும் உணர்ந்தவளாக அவனுக்கு அருகில் உட்கார அவள் தயங்கி நிற்கவும், “ப்ளீஸ் உட்காருங்க, இல்லன்னா உங்க ஃப்ரெண்ட் ஃபீல் பண்ணுவாங்க” என மலர்ந்த புன்னகையுடன் அவன் இலகுவாகவே பேச, தயக்கம் விலகி அங்கே அமர்ந்தாள் தங்கம்.


மற்றவைப் பின்னுக்குப் போய், தான் வந்த வேலை அவளது நினைவுக்கு வர, “அட்வான்ஸ் டேக்ஸ் பே பண்ண இந்த ஃபார்ம்ஸ்ல சைன் வேணும்” என்றாள் அவள், ‘நீ’ என அழைப்பதா ‘நீங்க’ என அழைப்பதா ‘குயிலி’ என உரிமையுடன் அவளைப் பெயர் சொல்லிக் அழைக்கக்கூடுமா என்கிற தடுமாற்றத்துடன்.


அவள் நீட்டிய காகிதங்களை வாங்கி ஒரு புரட்டுப் புரட்டி வேகமாகக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தவள், அவனுடன் பேசிக்கொண்டிருக்கும்போதிருந்த ஈடுபாடு அறுந்துபோனதால் என்ன செய்வது என யோசிக்கத் தொடங்கினாள்.


மீண்டும் இதுபோல் அவனுடனான சந்திப்பு அமைய அதிக நாள் எடுக்குமோ என்ற தயக்கத்துடன் அவனை ஏறிட, அதை உணர்ந்தவனாக, “இட்ஸ் ஓகே மிஸ் குயிலி, ரொம்ப நாள் கழிச்சு மீட் பண்றீங்கன்னு தெரியுது. யூ கேரி ஆன். இந்த வீக் எண்ட் நானே இங்க வந்து உங்களை மீட் பண்றேன்” என்றான் அவன் வெகு இயல்பாக.


அது ஒரு சின்ன அசுவாசத்தைக் கொடுக்க, “தேங்க் யூ மிஸ்டர் கார்முகிலன், பட் நம்ம பிளான் படி நீங்க என் கூட லஞ்ச் சாப்பிட்டுட்டுதான் போகணும்” என அவள் அழுத்தமாகச் சொல்ல, தங்கத்தையும் தன்னுடன் இணைத்துக்கொண்டே அங்கே இருக்கும் உணவகத்தில் மதிய உணவைச் சாப்பிட்டு முடித்தனர்.


முதலில் அவள் சற்று தயங்கினாலும், “இல்ல தங்கம், நாம கொஞ்ச நேரம் ஃப்ரீயா பேசலாம், நீ எதுவும் சொல்லாத. உங்க ஆஃபிஸ்ல கூட நானே பேசிக்கறேன்” என்ற குயிலி அவளுக்கு மறுத்துப் பேச வாய்ப்பே கொடுக்கவில்லை.


பொதுப்படையான இயல்பான பேச்சுக்களுடன் மூவரும் சாப்பிட்டு முடிக்க, அங்கிருந்து கிளம்பிச்சென்றான் முகிலன்.


இருந்த படபடப்பெல்லாம் அடங்கி இருவரும் ஒரு சமநிலைக்கு வந்திருக்க அங்கிருக்கும் நீச்சல் குளத்திற்கு அருகில் தங்கத்தை அழைத்து வந்தாள் குயிலி.


தன் கிளைகளை விரித்துக் குளிர் நிழல் பரப்பிக்கொண்டிருந்த ஒரு குல்மோகர் மரத்தடியில் சில்லென்றிருந்த புல் தரையில் இருவருமாக வந்து அமர, “அன்னைக்குப் பார்த்த கண்ணுக்கு அழிவே இல்லாம அப்படியே அழகா இருக்கடீ குயிலி. அதுவும் எவ்வளவு பெரிய இடத்துக்கு வந்திருக்க. பார்க்கவே பெருமையா இருக்குடி” என்றாள் உவகையுடன். அதையெல்லாம் ரசிக்கும் மனநிலையிலேயே இல்லை குயிலி.


ஊரிலேயே இவர்களுடையது பெரிய குடும்பம், மூன்று அண்ணன்களுக்குத் தங்கை இவள் என்பதால், 'சின்னத்தம்பி குஷ்பூ' எனப் பள்ளி தோழியர்கள் எல்லோரும் இவளைக் கிண்டல் செய்வார்கள்.


பளிச்சென்ற பாவாடை தாவணி, தோடு ஜிமிக்கி, இரு கைகளிலும் இரண்டு தங்க வளையல்களுக்கு இடையில் கண்ணாடி வளையல்கள், பதக்கம் வைத்த நீண்ட செயின், நீண்ட கூந்தலில் மல்லிகை கனகாம்பரம் அல்லது டிசம்பர் பூ என ஏதோ ஒன்று, இவையெல்லாம் இல்லாமல் வீட்டை விட்டு வெளியில் வரமாட்டாள் தங்கம்.


இவள், தங்கம், அஞ்சுகம் மூன்று பேரும் மூக்குக் குத்திக்கொண்டது கூட ஒரே நாளில்தான். அவளைப்போய் இப்படிப்பட்ட ஒரு கோலத்தில் பார்த்த வேதனையில் பேச்சற்று அமர்ந்திருந்தாள் குயிலி. விசாரிக்கிறேன் பேர்வழியே என எந்த ஒரு கேள்வியும் கேட்டு அவளை சங்கடப்படுத்த மனம் வரவில்லை அவளுக்கு.


ஆனால் எதிரிலிருப்பவளின் அந்த மௌனம் கூட வலியைக் கொடுக்க, அதை உடைக்க எண்ணியவளாக, "வசந்தகுமார் சாரும் அம்மாவும் எப்படி இருக்காங்க?" என்று தங்கம் கேட்க, "சூப்பரா இருக்காங்க. இப்பவும் அதே மாதிரி அவங்க மேட் ஃபார் ஈச் அதர்தான் தெரியுமா!?" என்றாள் பெருமைப் பொங்க.


“ஏன் குயிலி, அந்த சார் உன்னை மிஸ்ன்னு கூபிட்டாரே, உனக்கு இன்னும் கல்யாணம் ஆகலியா?” என அவள் வெள்ளந்தியாக கேட்க, “ப்ச்... எல்லாமே ஆயிடுச்சு” என்றாள் குயிலி ஒரு மாதிரியான குரலில்.


அதில் திக்கென்றாக, “என்னடி சொல்ற, புரியல” என்றாள் மற்றவள்.


“ஒரு கல்யாணம், ஒரு டிவோர்ஸ்” என அவள் கசந்தப் புன்னகையுடன் சொல்ல, சில நொடிகள் பேச்சே வரவில்லை, கண்களில் கண்ணீர் மட்டுமே பெருகியது.


சூடானப் பெருமூச்சுடன், “அப்ப பிள்ளைங்க” என தங்கம் கேட்க “நான் சிங்கிள் மதர் தெரியுமா தங்கம். ஒரு பையன் இருக்கான், ஃபிப்த் படிக்கறான். என்னை எப்படி வளர்த்தாங்களோ அதே மாதிரி அவனையும் அம்மா அப்பாதான் சூப்பரா வளர்க்கறாங்க” என்றாள் தன் துயரத்தை மறைக்க முயன்று.


குயிலியின் ஆசைகளும் கனவுகளும்தான் அவளுக்கு நன்றாகத் தெரியுமே! என்ன முயன்றும் தங்கத்தால் கண்ணீரைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. “என் நிலைமைதான் இப்படி ஆயிடுச்சு. நீயாவது நல்லா இருககூடதா?” என அவளுடைய மடியிலேயே முகம் புதைத்து அவள் விசும்ப, “ப்ச்... லூசு, எனக்கு என்ன குறைச்சல். கல்யாணம்தான் ஃபெயிலியர் மத்தபடி எனக்கு எல்லாமே சக்சஸ்தான்” என்றவள் “உன்னைப் பத்திச் சொல்லு, பேர்லயே சுகத்தை வெச்சிருப்பாளே ஒருத்தி அவளும் நீயும் ஒரே ஊர் காரிங்கதானே. அவ எப்படி இருக்கா சொல்லு” என பேச்சை மாற்ற,


“என்னைப் பத்திச் சொல்ல என்ன இருக்கு. உங்கக் குடும்பத்தை ஊரை விட்டே துரத்திட்டு, சூட்டோட சூடா எங்கப்பன் எனக்கு கல்யாணத்தைப் பண்ணி வெச்சான். அஞ்சு வருஷம், நரகம்னா என்னன்னு காமிச்சிட்டு என்னைக் கட்டினவனும் போய் சேர்ந்தான். அந்தக் கதையெல்லாம் இப்ப எதுக்கு விடு. இப்ப என் வாழ்க்கையே என்னோட ஒரே பொண்ணு மேகலாதான். பத்தாவது படிக்குது. நானும் உன்னை மாதிரி ஒரு சிங்கிள் மதர்தான்” என தன் கதையைச் சுருக்கமாகச் சொன்னவள், “நம்ம அஞ்சு இப்ப இங்கதான் கண்டிகைல இருக்கா. இரு” என்றவள் வேகமாக தன் கைப்பேசியை எடுத்து அஞ்சுவுக்கு அழைக்க,


“ஹேய், நூறு வயசுடி உனக்கு. இன்னைக்கு காலைலதான் எங்க வீட்டுக்காருகிட்ட உன்னைப் பத்திப் பேசிட்டு இருந்தேன். எப்படிடீ இருக்க? மேகலா குட்டி எப்படி இருக்கு?” என எதிர் முனையில் அவள் படபடக்க, “ஏய், கொஞ்சம் மூச்சு விட்டுட்டுப் பேசுடி எரும” எனக் கிண்டலாகச் சொன்னவள், “ஃபோன ஸ்பீக்கர்ல போடறேன், இப்ப ஒருத்தங்க உன்னோட பேசுவாங்க! அவங்க யாருன்னு கண்டுபிடி பார்க்கலாம்” எனப் புதிர் போட்டபடி கைப்பேசியை குயிலியிடம் நீட்ட, தொண்டையை அடைத்தது அவளுக்கு.


ஆனாலும் தன்னைச் சமாளித்துக்கொண்டு திக்கியபடி, “நேற்று காதல் கொண்டு இன்று கணவன் கொண்டு நாளை அடுப்பிலே வெந்திட ஆசை இல்லை. முதலில் மாலை சூட்டும் பிறகு விலங்கும் பூட்டும் உங்க கசமுசா கல்யாணம் தேவை இல்லை” என நா தழுதழுக்கப் பாட, அப்படி ஒரு மௌனம் எதிர்முனையில்.


"ஓய்... யாருன்னு கண்டுபிடிக்க முடியலையா" என தங்கம் இடையில் புக, “குக்கூவாடி!” என வெடித்துக் கிளம்பிய அழுகையினூடே, “வெண்ணிலவே... வெண்ணிலவே.. விண்ணைத் தாண்டி வருவாயா விளையாட ஜோடி தேவை” எனக் கதறியது எதிர் முனை.


மூன்று பெண்களின் நினைவலைகளும் அவர்களது பொன்னான நாட்களான இருபது வருடங்கள் பின்னோக்கிச் சென்றன.


*********

வணக்கம் அன்புத் தோழமைகளே!

வலசை போகும் பறவைகளாய் நாவல், நேரடிப் புத்தகமாக இப்பொழுது விறபனைக்கு வந்துவிட்டது.


வாங்க விருப்பம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை தொடரலாம்.



0 comments
© KPN NOVELS COPY PROTECT
bottom of page