top of page

Valasai Pogum Paravaikalaai - 8

8

தங்கக் கூண்டு

நடந்த முடிந்த சம்பவங்களில் சற்று அதிகமாகவே ஓய்ந்து போனார் வசந்தகுமார்.


தெரிந்த முகங்கள், நட்பு, சொந்தபந்தம் ஏதும் இல்லாத ஏதோ ஒரு அந்நிய ஊரில் போய் மீண்டும் பூஜ்ஜியத்திலிருந்து வாழ்க்கையைத் தொடங்க இந்த முறை துணிவு வரவில்லை.


வயதுக்கு வந்த மகளை வைத்துக்கொண்டு வம்பை விலைக்கு வாங்க அவர் தயாராகவே இல்லை. அகால திருமணத்திலிருந்து தப்பிக்கப் பள்ளிக்கூடத்தில் தஞ்சம் புகுந்திருக்கும் அஞ்சு, தங்கம் இன்னும் சில மாணவிகள், முதல் தலைமுறையாகக் கல்வியை நாடி வந்த நலிந்த சமூகத்தைச் சார்ந்த பிள்ளைகள் என அங்கே அம்போவென விட்டுவிட்டு வந்தவர்களைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் குற்றவுணர்ச்சியில் நெஞ்சு அடைக்கும். ஒரு போலி நம்பிக்கையை அவர்களுக்குள் விதைத்ததற்காக மனதே விட்டுப்போகும். இயலாமையுடன் அனைத்தையும் உள்ளேயே போட்டுப் புதைத்துக்கொள்வார்.


காவல் நிலையம் சென்று திரும்பிய அன்றே, இருக்கும் விடுப்புக்களை எல்லாம் எடுத்துக்கொண்டு சைதாப்பேட்டையில் இருக்கும் மாமியார் வீட்டிற்கு வந்தவர் சென்னைக்கே மாற்றல் வாங்கிக்கொண்டார். சட்டென அங்கேயே தனியாக ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து குடித்தனத்தையும் தொடங்கினார்கள்.


அந்த ஊரிலேயே தொடரவும் இயலாமல் அவசர கதியில் வேறு பள்ளியில் இடம் வாங்கவும் முடியாமல் பத்தாம் வகுப்பு பரீட்சையை குயிலி தனிப்பட்ட முறையில் நேரடியாக எழுத வேண்டியதாகியது. எப்படியோ சுமாரான மதிப்பெண்களுடன் தேர்வானாள்.


தொடர்ந்து அவர், தான் வேலை செய்யும் பள்ளியிலேயே அவளையும் பதினொன்றாம் வகுப்பில் சேர்த்தார்.


இப்பொழுதெல்லாம் அவர் எந்த வம்புதும்புக்கும் போவதில்லை. தான் உண்டு தன் வேலையுண்டு எனத் தன்னைச் சுருக்கிக்கொண்டார். இந்தப் புதிய பள்ளியில் சேர்ந்ததில் அவருக்குக் கிடைத்த ஒரே ஆறுதல் அவருடைய நீண்ட நாளைய நண்பரான கமலக்கண்ணனும் அங்கே வேலை செய்வதுதான்.


எம்.எஸ்.ஸி கெமிஸ்ட்ரி முடித்து அவர் பி.எட் சேர்ந்ததும் அவருடன் படித்தவர். அன்று தொட்டே நல்ல நண்பர்கள் இருவரும். அடிக்கடி நேரில் சந்தித்துக்கொள்ள முடியாமல் போனாலும் கடிதத் தொடர்பு இருக்கவே செய்தது. ஒரு பெரிய கூட்டுக்குடும்பம் அவருடையது. அவர்கள் இல்ல விழாக்கள் அனைத்திற்கும் இவருக்குத் தவறாமல் அவரிடமிருந்து அழைப்பு வந்துவிடும். கூடுமானவரையில் சென்றும் வருவார். இப்பொழுது நெருக்கம் இன்னும் அதிகமானது.


ஓரளவுக்கு இந்தப் புதிய வாழ்க்கைமுறையும் அவருக்குப் பழகிப்போனது.


இதற்கிடையில் எல்லோருமே ஒரே இடத்திலேயே குடியிருக்கும் முனைப்புடன், சைதாப்பேட்டையில் இருக்கும் கற்பகத்தின் தந்தை வழியிலான அந்தப் பூர்விக வீட்டை ஜாயின்ட் வேன்ச்சரில் கொடுத்து உடன் பிறந்தவர்கள் ஆறுபேரும் ஆளுக்கொரு பிளாட்டை வாங்கிக் கொள்ளலாம் என முடிவு செய்யப்பட, வசந்தகுமாருக்கும் அது சரி என்றுதான் பட்டது. இரண்டு அண்ணன்-அண்ணிகள் மூன்று அக்கா-மாமாக்கள் அவர்கள் பெற்றப் பிள்ளைகள் அவர்கள் மூலம் உண்டான உறவுகள், அனைத்திற்கும் மேலாக அன்பைப் பொழியும் கற்பகத்தின் அம்மா என இவ்வளவு பெரிய குடும்பம் அமைவதென்பதும் ஒரு வரம்தான் அல்லவா! மனைவியும் மகிழ்ச்சியடைவாளே! எனவே அவர்கள் பங்கிற்கு வந்த தொகையுடன் கூட கொஞ்சம் பணமும் போட்டு அங்கேயே மூன்று படுக்கையறைக் கொண்ட ஒரு பிளாட்டை கற்பகத்தின் பெயரிலேயே வாங்கினார்.


ஒரே வருடத்தில் கட்டி முடித்து அங்கே குடிவந்தார்கள். நாள் கிழமைகளில் ஒன்று கூடுவது, சாதாரண ஜுரம் தலைவலி என்றால் கூட விட்டுக்கொடுக்காமல் ஒவ்வொருவரும் ஓடோடி வந்து அக்கறையுடன் விசாரிப்பது, யார் வீட்டில் எந்த சிறப்பு உணவுகள் செய்தலும் சுடச்சுடப் பகிர்ந்துகொள்வது, எந்த ஒரு நல்லது கெட்டது என்றாலும் மொய் செய்வதிலிருந்து முறை செய்வது வரை எல்லோருமாகக் கூடிப் பேசி ஒத்த மனதாய் போய் வருவது என உறவுகளின் மகத்துவத்தைத் திகட்டத் திகட்ட அனுபவித்தனர். அதுவும் கற்பகத்தின் அம்மா மருமகனைத் தாங்கோ தாங்கென்று தாங்கினார்.


ஆனாலும் க