top of page

Valasai Pogum Paravaikalaai - 7

7

சிறைப்பறவைகள்


மூக்குத்திப் போட்ட இடத்தில் புண் ஆறாமல், அதில் சீழ்க் கோர்த்து சதை வளர்ந்து மூக்குத்தியையே மூடிவிட, வலியால் துடித்துடித்துப் போய் அழுது தீர்த்து ‘ஏன்டா இந்தப் பெண்ணுக்கு மூக்கைக் குத்தித் தொலைத்தோம்’ என நொந்துபோகும் அளவுக்கு வசந்தகுமாரையும் கற்பகத்தையும் பாடாய்ப் படுத்திவிட்டாள் குயிலி.

அதற்காக மருத்துவரிடம் சென்று அந்த மூக்குத்தியை வெட்டி எடுக்க வேண்டியதாக ஆகிப்போக இப்பொழுதுதான் கொஞ்சம் பரவாயில்லை. இதில் அவளுடைய அரையாண்டுத் தேர்வுதான் அதோகதியாகிப்போனது.


“அன்னைக்கே அப்பா சொன்னாங்க, கேட்டிருக்கலாம்” என நூறாவது முறையாகப் புலம்பிக்கொண்டே பள்ளிக்குச் செல்லத் தயாராகி வந்த தந்தையையும் மகளையும் வழியனுப்ப வெளியில் வந்தார் கற்பகம்.


வசந்தன் ஸ்கூட்டரைத் தள்ளிக்கொண்டு வர அதே நேரம் வீதியின் ஓரமாக தன் வாகனத்தை நிறுத்திவிட்டு அவர்களை நோக்கி வந்தார் அந்தப் பகுதி காவல் நிலைய தலைமைக் காவலர்.


அந்தக் காவல் நிலையம் பக்கத்து ஊரில் இருந்தது. மைனர் பெண்கள் திருமணத்தைத் தடுக்க அது இது என ஏதாவது ஒரு வழக்கிற்காக அடிக்கடி அங்கே செல்ல நேருவதால் அவர் வசந்தனுக்கு நன்கு பழக்கம்தான். அவருக்கும் இவர் மீது நல்லபிப்பிராயம் உண்டாகியிருக்க, அடிப்படை நட்பும் இருந்தது.


வசந்தன் அவரைப் பார்த்து இயல்பாய் புன்னகைக்க, பதில் புன்னகையைச் சிந்த இயலாத பதட்டத்துடன் அவரை நெருங்கிய அந்தக் காவலர், “தப்பா நினைக்காதீங்க சார், உங்க பேர்ல கம்ப்ளைன்ட் ஃபைல் ஆகியிருக்கு. விசாரணைக்காக ஸ்டேஷனுக்குக் கூட்டிட்டு வரச்சொல்லி என்ன இங்க அனுப்பியிருக்காங்க” எனத் தட்டுத்தடுமாறிச் சொல்லி முடித்தார்.


குயிலியும் கற்பகமும் ஒரு பீதியுடன் அவரை ஏறிட, “என்ன பிரச்சனை? யார் கம்ப்ளைன்ட் கொடுத்திருக்காங்க?” எனக் கேட்டார் அவர் குழப்பத்துடன்.


“சார், செந்திலுன்னு ஒரு பையனை உங்களுக்குத் தெரியுமா?” என்று தயக்கத்துடன் கேட்டார்.


கொஞ்சம் திடுக்கிட்டவாறு, “ஆமாம் ஏட்டைய்யா, நம்ம பச்சையோட பையன்தானே? நம்ம ஸ்கூல்லதான் எட்டாவது படிக்கறான்” என்றவருக்கு முந்தைய தின நினைவுகள் மட்டுமே.


அன்று ஞாயிறு பள்ளி விடுமுறை என்பதால் காலையிலேயே கிளம்பி பிள்ளைகளுடன் விளையாடச் சென்றவன் அந்த ஊரில் உள்ள ஒரு குட்டையில் தவறி விழுந்துவிட மற்ற பிள்ளைகளெல்லாம் கூச்சல் போட்டிருக்கின்றனர்.


நீச்சல் தெரியாமல் தத்தளித்தவனை நல்லவேளையாக அந்தப் பக்கமாகப் போன யாரோ இழுத்து வெளியில் போட்டிருக்க, அதற்குள்ளேயே தண்ணீரைக் குடித்து மூர்ச்சையாகியிருந்தான்.


அதற்குள் கூட்டம் கூடி விட, அவசர அவசரமாக அரசுப் பொது மருத்துவமனைக்குக் கொண்டு போயிருந்தார்கள். நடந்ததைக் கேள்விப்பட்டு இவருமே மருத்துவமனைக்கு விரைந்திருந்தார்.


அவசர சிகிச்சைப் பிரிவு வாசலிலேயே அவனது மொத்த குடும்பமும் இருக்க அந்த இடமே அழுகையும் கூச்சலும் எனக் களேபரமாக இருந்தது. கூடவே ஊர் மக்கள் சிலரும் அங்கே கூடி இருக்க, அஞ்சு, அன்னம், பச்சை என எல்லோருக்கும் பொதுவாக, “பயப்படாதீங்க ஒண்ணும் ஆகாது” என அறுதல் சொல்லிவிட்டு தானும் அங்கேயே ஒரு ஓரமாக நின்றுகொண்டார்.


சில நிமிடங்களிலேயே அவன் கண் விழித்துவிட, ஒரு நாள் அவனை அங்கேயே வைத்து மருத்துவம் பார்க்க வேண்டும் என்று மருத்துவர் சொல்லவும், எப்படியும் செலவுக்கு அவர்களுக்குப் பணம் தேவை என்பதை உணர்ந்து, வேறு யார் மீதும் நம்பிக்கை இல்லாத காரணத்தால் ஒரு ஐநூறு ரூபாய்த் தாளை நேரடியாக் அன்னத்திடமே கொடுத்து, "எதுக்கும் வெச்சுக்கோம்மா, பிள்ளையைப் பத்திரமா பார்த்துக்கோ" என்று சொல்லிவிட்டு உள்ளே போனவர் இயல்பு நிலைக்குத் திரும்பியிருந்த செந்திலையும் ஒரு பார்வை பார்த்துவிட்டுதான் வீடு திரும்பினார்.


இப்பொழுது என்ன புது பிரச்சனையோ?!


“ஏன் சார், சரியா படிக்கலன்னு பையனை ஏதாவது திட்டினீங்களா?” எனக் கேட்டார் அந்தக் காவலர்.


நெற்றிச் சுருக்கி யோசித்தவர், “திட்டல, கண்டிச்சேன். ஆனா இவன்னு இல்ல ஏட்டையா, படிக்கலன்னு சொல்லி நான் யாரையுமே திட்டமாட்டேன். ஒரு நாள் பள்ளிக்கூடத்த கட் அடிச்சிட்டு அந்தக் குட்டைக் கிட்ட இவனும் இன்னும் சில பசங்களும் சேர்ந்து பீடி பிடிச்சிட்டு உட்கார்ந்து இருந்தானுங்க. லஞ்சுக்கு வரும்போது பார்த்துட்டு, படிக்கற வயசுல இதெல்லாம் செய்ய கூடாது. மறுபடியும் இதே மாதிரி உன்னைப் பார்த்தேன்னா சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வெச்சுடுவேன்’ன்னு கொஞ்சம் கடினமாதான் மிரட்டினேன்.


நீங்களே சொல்லுங்க உங்கப் பிள்ளையோ இல்ல என் பிள்ளையோ இப்படி செஞ்சா சும்மா வேடிக்கைப் பார்த்துட்டுப் போவோமா என்ன? அதுவும் நான் பார்க்கற இந்த வேலை பிள்ளைகளோட எதிர்காலத்து மேல கட்டமைச்சது இல்லையா? ஒரு மாணவனைக் கண்டிக்கற உரிமை வாத்தியாருக்கு இல்லையா?” எனக் காரமாகவும் விரக்தியுடனும் கேட்டார் அவர்.


“நீங்க இப்படி சொல்றீங்க. ஆனா அவங்க என்னடான்னா இதையே வேற மாதிரி இல்ல கதை கட்டி விட்டிருக்காங்க. வாங்க நீங்களே நேர்ல வந்து ஸ்டேஷன்ல கேட்கற கேள்விக்கெல்லாம் பதில் சொல்லிப் புரிய வைக்க முயற்சி பண்ணுங்க?” என நிலைமையின் தீவிரத்தை எண்ணி வசந்தகுமாருக்காக வருந்தியவராக அவரை தன் வாகனத்திலேயே ஏற்றிக்கொண்டு அங்கிருந்து அகன்றார்.


“நீ ஒண்ணும் பயப்படத பேபி! எப்படியும் மதியத்துக்குள்ள வந்துடுவேன்” என்றபடியே அவருடன் சென்றார் வசந்தன்.


*********


அங்கே போய் பார்த்தல் எல்லாமே தலைகீழாக மாற்றிச் சித்தரிக்கப்பட்டிருந்தது.


துணை ஆய்வாளருக்கு எதிராகப் போடப்பட்டிருந்த இருக்கையில் மாசிலாமணி உட்கார்ந்திருக்க அவருக்கு அருகில் பவ்வியமாகக் கைகளைக் கட்டியபடி நின்றிருந்தான் பச்சையப்பன்.


செந்தில் ஒரு கையில் பிஸ்கட் மற்றொரு கையில் ஒரு குளிர்பான பாட்டில் சகிதமாக மூலையில் ஒரு பெஞ்சில் உட்கார வைக்கப்பட்டிருந்தான்.


ஆக, ஏதோ பெரியதாகத் திட்டமிடப்பட்டிருக்கிறது எனப் புரிந்துக்கொண்டார்.


வந்தவர் ஒரு பள்ளி ஆசிரியர், அரசாங்க ஊழியர். அதற்கான மரியாதையை அவருக்குக் கொடுத்தே ஆகவேண்டும் என்பதால் தனக்கு எதிரிலிருந்த இருக்கையைச் சுட்டிக் காண்பித்து அமரும்படி அந்த அதிகாரி ஜாடை செய்தார்.


தனக்கு அருகில் அவர் உட்காரவும் அப்படி ஒரு ஆத்திரம் மூண்டாலும் ஒன்றும் செய்ய இயலாமல் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டார் மாசிலாமணி.


“என்ன சார், உடம்பு சரியல்லன்னு சொல்லி லீவு போட்டாக்கா, பையனை மிரட்டுவீங்களா? பயந்து போய் அவன் தற்கொலை செஞ்சுக்கற அளவுக்குப் போயிருக்கான். இது இப்ப ஊர் பிரச்சனையா மாறியிருக்கு” என அவர் தன் விசாரணையைத் தொடங்கவும், “என்ன இன்ஸ்பெக்டர், போன மாசம் நான் கண்டிச்சதுக்கு அந்தப் பையன் இந்த மாசமா தற்கொலை செஞ்சுப்பான்” என இயல்பாகக் கேட்டவர், “அது ஜஸ்ட் ஒரு ஆக்சிடன்ட்” என்றார் கொஞ்சமும் கலங்காமல்.


“என்ன... நீங்க அவனைக் கூப்பிட்டு கண்டிச்சது போன மாசமா?” என ஒரு கண்டனப் பார்வையை அவர் மாசிலாமணியை நோக்கி வீச, “அதெல்லாம் இல்ல சார், இவர் மிரட்டினது முந்தாநாள்ன்னு அந்தப் பையன்தான் தெளிவா சொல்றானே. ஜாதிப் பேரை வேற சொல்லி மட்டமா பேசியிருக்காரு. அதான் பையன் மனசு தாங்காம தண்ணியில குதிச்சிருக்கான். நேத்து அது தெரிஞ்சதும் இந்த வாத்தியார் நேரா ஆஸ்பத்திரிகே போயி இந்த விஷயம் எதுவும் வெளியில தெரியக்கூடதுன்னு அவங்க குடும்பத்த மிரட்டியிருக்காரு. அந்தப் பையனோட அம்மா கிட்ட பணம் வேற கொடுதிருகாரு. எங்க ஊர்காரங்க சில பேர் அதைப் பார்த்திருக்காங்க. நீங்க எப்ப கூப்பிட்டாலும் அவங்க வந்து சாட்சி சொல்லுவாங்க. என்ன இருந்தாலும் எங்க ஊர் ஆளுக்கு ஒண்ணுனா நாங்க முன்ன வந்து நிக்க மாட்டோமா என்ன?” என அவர் கட்டிய கதையை அழகாக அரங்கேற்றம் செய்ய, ஆடிதான் போனார் வசந்தகுமார்.


அவர் சொல்வது அனைத்தும் உண்மையே என்பதுபோல அருகில் நிற்கும் பச்சையும் தலை குனிந்தபடி சலனமற்றிருக்க, தனக்கெதிராக அவர்கள் எல்லோரும் ஒன்று கூடிவிட்டது புரிந்தது.


உடலில் லேசான நடுக்கம் ஓட, செந்திலை அழைத்தவர், “நீ சொல்லுப்பா... இவங்க சொல்றதெல்லாம் உண்மையா?” என அவர் நேரடியாக அவனிடம் கேட்கவும் முதலில் தடுமாறியவன், மாசிலாமணி பார்த்த பார்வையில், “ஆமாம், நீங்கதான சார் என்னைக் கண்டபடிக்கும் கேவலமா பேசினீங்க” என்றான் தெளிவாக.


‘என்னையா ஜெயிலுக்கு அனுப்புவேன்னு சொன்ன? இப்ப பார்த்தியா உன் நிலைமையை’ என்பதான இளக்காரம்தான் தென்பட்டது அவனிடம். பின்னே! அவர் தன் நன்மைக்காகதானே அப்படிக் கண்டித்தார் என்கிற புரிதலை அவனிடம் எதிர்பார்க்க முடியுமா என்ன?


இனி என்ன பேசினாலும் அது இங்கே எடுபடாது என்பது புரிய, ‘அடுத்து என்ன?’ என்பதாகத் தலை குனிந்தபடி அவர் யோசிக்கவும், “சார், கட்டப்பஞ்சாயத்து பண்றதா நினைகதீங்க. நானும் ஒரு கவர்மென்ட் சர்வன்ட். அதனாலதான் உங்க இடத்துல இருந்து யோசிக்கறேன். உங்க மேல நடவடிக்கை எடுத்தா அது உங்க வேலையைப் பாதிக்கும். எதுக்கும் உங்களுக்குள்ள பேசி சுமுகமா போகப்பருங்க. ஜாதிப் பேரைச் சொல்லித் திட்டினது, பையனைத் தற்கொலைக்குத் தூண்டினது, ஹாஸ்பிடல் போய் அவங்கள மிரட்டினது, பணம் கொடுத்து மூடி மறைக்கப் பார்த்ததுன்னு பச்சையப்பன் கொடுத்திருக்கும் கம்ப்ளைன்ட் வெச்சு எப்.ஐ.ஆர். போட்டுட்டோம்னா அப்பறம் உங்களால ஒண்ணுமே செய்ய முடியாம போயிடும்” என அவருக்காகப் பேசுவதுபோல் சொல்ல, ‘எதிர்த்து ஒரு கைப் பார்த்துவிடலாம்’ என்று தோன்றினாலும் வீட்டிலிருக்கும் மனைவி மற்றும் மகளின் முகங்கள் மனக்கண்ணில் மின்னி மறைய, செயலற்று அமர்ந்திருந்தார் வசந்தகுமார்.


“என்ன வாத்தியாரே நமக்குள்ள பேசி முடிச்சிக்கலாமா?” என மாசிலாமணி தெனாவெட்டாகக் கேட்கவும், ‘என்ன?’ என்பதாக எரிச்சலுடன் அவரைப் பார்த்து வைத்தார்.


“இந்த கம்ப்ளைன்ட்ட வாபஸ் வாங்கச் சொல்லி பச்சை கிட்ட நான் சொல்றேன். நீங்க என்ன பண்ணுங்க, வேற ஏதாவது ஊருக்கு மத்தால் வாங்கிட்டுப் போய் சேருங்க” என வெளிப்படையாக மிரட்ட, அங்கே இருக்கும் சூழ்நிலையில் வேறெதையும் சிந்திக்கும் மனநிலையில் கூட இல்லை அவர்.


“என்ன பச்சையப்பன், இவங்க யாரவது உன்னை மிரட்டி கம்ப்ளைன்ட் கொடுக்க வெச்சாங்களா. எதா இருந்தாலும் சொல்லு நான் பார்த்துகறேன்” எனக் கடைசி வாய்ப்பாக அவர் நேரடியாக அவனிடமே கேட்டுப் பார்க்க, மாசிலாமணியின் உதடுகள் இகழ்ச்சியாக வளைந்தன.


“அதெல்லாம் யாரும் என்னை மிரட்டல, நானே கொடுத்த கம்ப்ளைண்டுதான் இது. எங்க அய்யா என்ன சொல்றாரோ அதுதான். எதுனாலும் நீங்க அவர்கிட்டயே பேசிக்கோங்க சார்” என அவன் ஒரு நிமிர்வுடனேயே பதில் கொடுக்கவும், அஞ்சுகத்தைத் திருமணம் செய்து கொடுக்க தனக்கிருக்கும் தடையை அகற்றும் வேகம் மட்டுமே புலப்பட்டது அவனிடம்.


ஆகப் பெண் பிள்ளைகளை அடக்கி வீட்டிற்குள் பூட்டி வைக்கும் விஷயத்தில் மட்டும் ஜாதீய பாகுபாடுகள் ஏழைப் பணக்கார ஏற்றத்தாழ்வுகள் மறந்து ஒன்று கூடிவிட்டார்கள் அனைவரும்.


இவரால் பலவிதத்திலும் பயனடைந்த பச்சையப்பனே இப்படி நடந்துகொள்ளும்பொழுது வேறு யாரிடம் நியாயத்தை எதிர்பார்க்க முடியும்? இவ்வளவு தூரம் வந்துவிட்டவர்கள் இன்னும் எதைதான் செய்யமாட்டார்கள். அவர்களுக்கென்று யாருமே இல்லாத ஒரு ஊரில் தன்னந்தனியாக விட்டுவிட்டு வந்திருக்கும் பெண்களிருவரின் பாதுகாப்பை எண்ணி பயம் மட்டுமே அவரது மனம் முழுவதும் வியாபித்திருந்தது.


சுயநலமாகச் சிந்தித்து சுரணையில்லா மரக்கட்டைப் போலக் கண்ணெதிரில் நடக்கும் அநியாயங்களைக் கண்டும் காணாமலும் போய்க்கொண்டே இருப்பதைவிடப் போராடித் தோற்றுப்போய் ஓய்வது கூட ஒருவித வெற்றிதான்.


வேறு வழி இல்லாமல் மாசிலாமணி கேட்டதற்குப் பணிந்து வெளியில் வந்தார் வசந்தகுமார்.


ஆனால் நடந்த இந்தக் கேவலத்தால் உண்மையாகத் தோற்கடிக்கப்பட்டதென்னவோ அஞ்சுகமும் தங்கமயிலும்தான்.


உள்ளுக்குள்ளே பதைபதைத்தவாறு பேருந்தைப் பிடித்து வீடு நோக்கி வந்தவர் அதிர்ந்து போனார். அவர் நினைத்து பயந்தது போலவே அந்த ஊர் முழுவதும் அவர் வீட்டின் முன் கூடி இருக்க, அன்னையும் மகளும் வெளியில் எட்டிப்பார்க்க கூட பயந்துகொண்டு கதவு ஜன்னல் அனைத்தையும் பூட்டியபடி வீட்டிற்குள் அடைந்து கிடந்தனர்.


அவர் அங்கே வந்து சேர்ந்த நொடி கூரான கல் ஒன்று அவரை நோக்கிப் பறந்து வந்தது.


எப்படியோ அந்தக் கூட்டத்தைக் கடந்து வீட்டிற்குள் நுழைந்தவர் மனைவியையும் மகளையும் நெற்றியில் வழிந்த குருதியுடன் அணைத்து தன் சிறகுக்குள் பொத்திக்கொண்டார்.


*********


இல்லை...


இனி இந்த ஊரில் வசந்தகுமார் சார் இல்லை...


உயிர்த் தோழி குயிலி இல்லை...


அன்னையைக் காட்டிலும் அன்பைப் பொழியும் கற்பகம் அம்மா இல்லை...


எதிர்கால கல்விக்கான உத்தரவாதம் இல்லை...


ஏன் எதிர்காலம் என்ற ஒன்றிற்கே கூட உத்தரவாதம் இல்லைதானோ?


பாவாடையைத் தூக்கிச் சொருகியபடி பாண்டி விளையாடியதும்...


புளியங்கொட்டை சலசலக்கப் பல்லாங்குழி விளையாடியதும்...


உத்தி... உத்தியாய் தேடித்தேடி கூழாங்கல் சேர்த்துவைத்து கல்லாங்காய் விளையாடியதும்...


கொடுக்காப்புளிக்காய்... பிஞ்சு வேர்க்கடலை... ஒட்டு மாங்காய்... நெல்லிக்காய்... புளியங்காய், தோலோடு பாதாம் பழம் எனப் பொறுக்கி வந்து போட்டிப்போட்டுத் தின்றதும்...


மரத்தையே மொட்டையாக்கி மருதாணி பறித்து வந்து மாங்குமாங்கென்று அரைத்துப் பூசிக்கொண்டு திரிந்ததும்...


மூன்று பெண்களுக்கும் இனி வெறும் கடந்த கால நினைவுகளாய் மட்டும்தானோ?


ஒளிமயமாக விரிந்திருந்த எதிர்காலமொன்றில்...


டாக்டராகி ஒருநாள் யாருக்கோ ஊசி குத்திய கற்பனை!


போலீசாகி ஒரு நாள் யாரையோ முட்டிக்கு முட்டித் தட்டிய கற்பனை...


வசந்தகுமார் சார் போலொருநாள் கரும்பலகையில் எழுதிக் கற்பித்த கற்பனை...


வக்கீலாகி ஒரு நாள் வாதாடிய கற்பனை...


என இந்த வசந்தகுமார் என்னவோ காலம் முழுதும் தங்களுக்குத் துணை நிற்பார் என அஞ்சுகமும் தங்கமயிலும் கட்டிய கற்பனைக் கோட்டைகளெல்லாம், அவர்களது வாழ்க்கையிலிருந்து ஒரே நாளில் அவர் மறைந்து காணாமல் போனதால் தகர்ந்து துகள்களாக நெருங்கிப் போயின.


தையில் ஒருத்திக்கும் பங்குனியில் ஒருத்திக்கும் திருமணம் முடித்து வைத்தனர், இந்தப் பெண்களைப் பெற்றதனால் இவர்களின் தலையெழுத்தைத் தீர்மானிக்கும் உரிமையைப் பெற்றவர்கள்.


தாலிக்கு தங்கம் வாங்கும் அளவுக்குக்கூடச் சம்பாத்தியம் இல்லாத பதினெட்டு வயது சீனிவாசனுக்கு வாழ்க்கைப்பட்டாள் பதினாறு வயது அஞ்சுகம்.


குடியும் கும்மாளமுமாக மனைவியின் கழுத்திலிருக்கும் தாலியைக்கூட விட்டு வைக்காமல் அவளை நிர்க்கதியாக நிற்க வைக்கும் அளவுக்கு வீரமும் தீரமும் கொண்ட அவளைவிட பன்னிரண்டு வயது முதிர்ந்த தனசேகரனுக்குத் தாரைவார்க்கப்பட்டாள் தங்கமயில்.


விரிக்கத்தொடங்கும் முன்பே இந்த இரண்டு பெண்களின் சிறகுகளும் பிய்த்தெறியப்பட்டன!


ஆனால் குயிலியோ, வீசி உயரப் பறக்கச் சிறகுகளிருந்தும், எல்லையே இல்லாமல் அவளுக்கான வானம் விரிந்திருந்தும் விருப்பத்துடனேயே தங்கக் கூண்டு ஒன்றிற்குள் தானே சென்று வலிய தன்னைப் பூட்டிக்கொண்டாள்!

3 comments
© KPN NOVELS COPY PROTECT
bottom of page