top of page

Valasai Pogum Paravaikalaai - 3

3

சரணாலயம்

டாக்டராக வேண்டும், வக்கீலாக வேண்டும், சுந்தர் பிச்சைப் போல கூகுளின் சீ.ஈ.ஓ ஆக வேண்டும் அதையும் கடந்து கணினியியல் செயற்கை நுண்ணறிவு யுகத்தின் பிரம்மா பில்கேட்ஸ் போல இந்த உலகத்து மக்களனைவரையும் தன் ஒற்றைக் குடைக்குள் கொண்டு வரவேண்டும் என வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பேரவா இருக்கதானே செய்கிறது?!


பறந்து விரிந்த வானத்தைத் தொடும் உயரமெல்லாம் எட்டிப்பிடிக்காமல் போனாலும் கூட, வீட்டின் முற்றத்தில் சின்னஞ்சிறியதாக ஒரு கூட்டைக் கட்டும் சிட்டுக்குருவியைப் போல குயிலியின் ஆசையும் லட்சியமும் மிகவும் எளிமையானது இயல்பானது என்றுதான் அவள் நினைத்திருந்தாள். ஆனால் இங்கே அத்தகைய ஒரு சின்ன உயரத்தையும் கூட அவ்வளவு சுலபமாக எட்டிவிட முடியாது என்பதைக் காலம் முகத்தில் அறைந்தாற்போல் மிக மோசமாக அவளுக்குக் கற்றுக்கொடுத்துவிட்டது.


அவளுடைய அப்பா அம்மாவினுடையது சுலபமாகக் கை சேர்ந்த ஒரு காதல் திருமணம். அவர்கள் ஒருவர் மீது ஒருவர் காதலில் வீழ்ந்த நொடி எப்படி இருந்தனரோ இன்று வரை அப்படிதான் இருக்கிறார்கள்.


அவர்களைப் பார்த்துப் பார்த்தே வளர்ந்ததாலோ என்னவோ தனக்கும் அப்படி ஒரு வாழ்க்கை அமைய வேண்டும் என்பது மட்டுமே அவளுடைய எதிர்கால கனவாக, லட்சியமாக இருந்தது. அவளுடைய அப்பாவைப் போலவே தன்னைக் கண்ணுக்குள் வைத்துக் காக்கும் ஒரு இணையை மட்டுமே அவள் எதிர்பார்த்தது. அதுகூட அமையாமல் போனதுதான் அவளுடைய துரதிர்ஷ்டம்.


“பெரிய பெரிய படிப்பெல்லாம் படிக்கணும், கை நிறைய சம்பாதிக்கணும், சொந்த கால்ல நிக்கணும். லட்சியம்னா இப்படிதான் இருக்கணும். அதை விட்டுட்டு கல்யாணம் பண்ணிக்கணுமாம், புருஷனுக்கு விதவிதமா சமைச்சு போடணுமாம், நாள் முழுக்க கண்ணே மணியேன்னு காதல் டயலாக் பேசிக் கொஞ்சிக்கணுமாம். லவ் பேர்ட்ஸ் மாதிரி ஜோடியா சுத்தித் திரியணுமாம்! பிள்ளைக் குட்டிப் பெத்துட்டுக் கொஞ்சிக் கொஞ்சி வளர்க்கணுமாம். கருமம் இதெல்லாமாடி இலட்சியம். இதெல்லாம் எல்லாருக்கும் இருக்கற ஒரு சாதாரண ஆசை அவ்வளவுதான். உங்க அம்மா அப்பாவை மட்டும் வெச்சு உலகமே இதுதான்னு நினைக்காதடீ குக்கூ. ஊர் உலகத்துல கல்யாணம் செஞ்சுட்டு ‘வேண்டா வெறுப்பா பிள்ளையைப் பெத்து காண்டாமிருகம்’னு பேரு வெச்ச கதையா அவ அவ படுற பாட்டைப் பார்த்தால் தெரியும். எங்க வீட்டுல வந்து ரெண்டு நாள் தங்கிப் பாரு, கல்யாணமே வேண்டாம்னு ஓடியே போயிடுவ” என்பாள் அஞ்சு. அது எவ்வளவு நிதர்சனமான உண்மை என்பது மிகவும் தாமதமாகதானே மண்டைக்குள் உரைத்தது.


உடலில் ஒட்டிய தூசியைத் தட்டிவிடுவது போல தன் வாழ்க்கைத் துணையையே வேண்டாம் என இப்படி உதறிவிட்டு வருமளவுக்கு மிகப்பெரிய முடிவை எடுக்கக் கிடைத்த அவகாசம் கூட திருமணத்துக்கு முன் அவனைப் பற்றி முழுவதுமாகத் தெரிந்து கொள்ள அவளுக்குக் கிடைக்கவில்லையே.


இத்தனைக்கும் அவளுக்கு அவன்மீது கோபமோ வெறுப்போ காழ்ப்புணர்ச்சியோ எதுவுமே இல்லை. ஒருவித எரிச்சலும் சலிப்பும் மட்டுமே!


அதனால்தானோ என்னவோ அவனைக் கயவன், நம்பிக்கைத் துரோகி, ஏமாற்றுக்காரன் எனச் சொல்ல இன்று வரைகூட அவளுக்கு மனம் வந்ததில்லை.


நல்லவன்தான்! ஆனால் ஸ்திரமான முடிவுகள் எடுக்கத் தெரியாத குழப்பவாதி! எதற்காகவும் காத்திருக்கும் பொறுமையில்லாத ஒரு அவசரக்குடுக்கை. பிரச்சனைகளை எதிர்கொள்ளத் துணிவில்லாமல் ஓடி ஒளியும் ஒரு கோழை! அவனை நம்பி திருமண வாழ்க்கைக்குள் அடி எடுத்து வைத்தது மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கியது போலல்லவா ஆனது?!


எவ்வளவு முயன்றும் சிந்தனையைத் தூர விரட்ட இயலாமல் குயிலி தவியாய் தவித்துக்கொண்டிருக்க அவளுக்கான காஃபி வரவும் தன்னை மீட்டுக்கொண்டவள், “என்ன ஜோதிம்மா, உங்க காயமெல்லாம் ஆறிடுச்சா?” எனக்கேட்டாள் அதை எடுத்து வந்தவரின் கையைப் பார்த்துக்கொண்டே.


அதில் தொனித்த ஆத்மார்த்தமான அக்கறையில், “சரியா போயிடிச்சு மேடம்! இனிமேல் கட்டுக் கூட போட வேணாம்னு சொல்லிட்டாங்க” என சங்கோஜத்துடன் நெளிந்தவாறு அவர் தன் சுட்டு விரலைத் தூக்கிக் காண்பிக்க, “குட்! இனிமேல் வேலை செய்யும்போது கொஞ்சம் கவனமா செய்ங்க என்ன” என்றவள் “ரிசப்ஷன்ல பிரேம் இருந்தா வரச்சொல்லிட்டுப் போங்க” என்று சொல்ல ஒரு புன்னகையுடனேயே அங்கிருந்து அகன்றார் அவர்.