top of page

Valasai Pogum Paravaikalaai - 27

27 - மறுமலர்ச்சி


இரண்டு வருடங்கள் கடந்து சில மாதங்கள் ஆகியிருந்த நிலையில்...


சூர்யாவின் வீடாக இருந்தது இப்பொழுது அஞ்சு மற்றும் தங்கம் இருவருக்குமான வீடாக அவர்களது நிரந்தர வசிப்பிடமாக மாறியிருந்தது. தரைத் தளத்தில் அஞ்சுகமும் முதல் தளத்தில் தங்கமயிலும் குடியிருந்தனர்.


குயிலி சூர்யாவுடன் சுமுகமாகப் போய்விட்டதால் அவள் ஏற்படுத்திக் கொடுத்த வாய்ப்பை மனமுவந்து ஒப்புக்கொண்டாள் அஞ்சு. குயிலியுடைய நட்சத்திர விடுதி, தங்கும் விடுதிகள், உணவகங்கள் தொடர்பான அனைத்து சலவை வேலைகளையும் முதலில் பயிற்சியாகத் தட்டுத்தடுமாறிக் கற்றுக்கொண்டாள். இப்பொழுது சில மாதங்களாக கணவனின் துணையுடன் தனித்து இயங்குகிறாள். ஓரளவுக்கு அவளது வருமானமும் பெருகத் தொடங்கியுள்ளது.


சின்னவள் லட்சுமி ஒன்பதாம் வகுப்பில் படிக்க, மூத்தவள் கல்யாணி அவள் விரும்பியபடியே நுழைவுத் தேர்வில் வெற்றிப் பெற்று சட்டக் கல்லூரியில் இடம் கிடைக்க, இப்போது பீ.ஏ.பி.எல். ஹானர்ஸ் மூன்றாம் ஆண்டில் இருக்கிறாள்.


இருள் கூட விலகாத அந்தக் காலைப் பொழுதில் பிள்ளைகள் இருவரும் புத்தகமும் கையுமாக அமர்ந்திருக்க எல்லோருக்கும் தேநீர் தயாரித்துக் கொண்டு வந்து வைத்தவள், “மாமா... டீ ஆறுது பாரு, சீக்கிரம் வந்து குடி” என்று குரல் கொடுக்க, ஒரு நோட்டுப் புத்தகத்தை விரித்து வைத்தபடி அறைக்குள் உட்கார்ந்து ஏதோ கணக்கைச் சரிபார்த்துக் கொண்டிருந்த சீனு அதை அப்படியே மூடி வைத்துவிட்டு வெளியில் வந்தான்.


அவன் தேநீர் குவளையைக் கையில் எடுக்கவும், “இன்னைக்குப் பெரிய ஹோட்டல்ல நிறைய வேலை இருக்கு. தங்கம் என்னை ஹெல்புக்குக் கூப்பிட்டு இருக்கா. அவ காலைல சீக்கிரமாவே கிளம்பணும்னு சொல்லிட்டு இருந்தா. மேல போய் அவளைப் பார்த்துட்டு வந்துடறேன்” என்றவள் தங்கத்தைத் தேடிப் போனாள்.


அந்த நேரத்திற்கே குளித்து தயாராகி நின்றிருந்தாள் தங்கம். நாள் முழுதும் ஓடியாடி வேலை செய்ய ஏதுவாக ஒரு காட்டன் சுடிதார் அணிந்து பளிச்சென்று நின்றவளைப் பார்த்ததும் அஞ்சுவுக்கு அன்றைய விடியலே களைக்கட்டிவிட்டது.


“ஓய் மேகலா, உங்க அம்மா எங்கடி? சோம்பேறி மாதிரி இன்னும் தூங்கிட்டு இருக்காளா?” என வேண்டுமென்றே தன் கேலியைத் தொடங்க, “ஏய்... பொழுதுவிடிய என் கிட்ட ஒத வாங்கப் போரடீ நீ” என அவளை மிரட்டுவது போல் சொன்னாள் தங்கம், ஆனால் சிரித்துக் கொண்டே.


“ஓ... தங்கமாடி நீ? சாரிடி... சாரிடி... நான் மேகலான்னு நினைச்சுட்டேன்” என மேலும் அவளை ஓட்ட, “ஆத்தா அங்காள பரமேஸ்வரி... உன்கூட மல்லுக்கட்ட காலைல எனக்கு டைம் இல்ல, ஆளை விடு!” எனத் தங்கம் கையெடுத்து அவளைக் கும்பிட, “பிழைச்சுப் போ” என விட்டுக் கொடுத்தவள், “உண்மையிலேயே என் கண்ணே பட்டுடும் போல இருக்கடி தங்கம். பள்ளிக்கூடத்துல படிக்கறப்ப இருந்த பாரு, கிட்டத்தட்ட அந்த மாதிரி இருக்க” என்றாள் நிறைந்த மனதுடன். அவளது பாராட்டில் தங்கத்துக்கு முகமே சிவத்து போனது.


“போதும் விடுடி” என்றவள், “எனக்கு இப்ப வண்டி வந்துடும். நான் கிளம்பறேன். இராத்திரியெல்லாம் பேசிட்டே இருந்தோமா, அதனால ரெண்டு பேரும் சரியாவே தூங்கல. பாவம் இந்த மேகலா பொண்ணு , இப்பதான் அசந்து தூங்கிட்டு இருக்கு. அது மேல ஒரு கண்ணு வெச்சிக்கோ. அது எழுந்ததும் ஒரு டீ மட்டும் கொடுத்துடு போதும். காலைலயே கிளம்பி முகிலன் சார் வீட்டுக்குப் போய் இன்னைக்கு நாள் ஃபுல்லா அவங்க ஞானி தாத்தா கூடத்தான் இருக்கப் போகுதாம். அவங்க கூடவே கிளம்பி ஃபங்க்ஷனுக்கு வரேன்னு சொல்லிடுச்சு” என்று சொல்லிக் கொண்டிருக்க அவளது கைப்பேசி ஒலித்தது.


“கேப் வந்துடுச்சு, நான் கிளம்பறேன். நீ ஒரு ஒன்பது மணி போல அங்க இருக்கற மாதிரி வந்துடு” என்று சொல்லிவிட்டு அழைப்பை ஏற்றுப் பேசியபடியே கீழே இறங்கிப் போனாள் தங்கம்.


அவளது தைராய்ட் பிரச்சனைக்குத் தொடர்ந்து மருத்துகள் எடுத்து அதைக் கட்டுக்குள் கொண்டு வந்தவள், சத்தான ஆகாரம் உடற்பயிற்சி என தன் உடலினை உறுதி செய்தாள். அதுவே ஒரு தனி அழகையும் மிடுக்கையும் கம்பீரத்தையும் அவளுக்குக் கொடுத்தது.


குயிலி சொன்னபடி ஆர்வமுடனும் நம்பிக்கையுடனும் அடிப்படையிலிருந்து வேலைகளைக் கற்றுக்கொண்டு திறம்பட தன் தகுதியையும் வளர்த்துக் கொண்டிருக்கிறாள். அதன் பலன் பிரேமுக்கு நிகரான ஒரு பதவியில் நல்ல சம்பளமும் பெறுகிறாள்.


முறையான படிப்பு இல்லாத காரணத்தால் வேறு எந்த நிறுவனத்திலும் இப்படி ஒரு வாய்ப்பு அவளுக்குக் கிடைத்திருக்க சாத்தியமே இல்லை. எல்லாம் குயிலியால் நடந்தது.


ஆனால் அந்தக் குறையும் இருக்கக்கூடாது என முறையாகப் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு எழுதி, நல்ல மதிப்பெண்களுடன் தேர்வாகி மேல் படிப்புக்கும் விண்ணப்பித்திருக்கிறாள். பயிற்சி வகுப்பில் சேர்ந்து ஆங்கிலத்தைச் சரளமாகப் பேசும் அளவுக்குத் தேறியிருக்கிறாள்.


தங்கத்தின் இந்த மாற்றம் அவளுக்குத் தந்த மகிழ்ச்சியை வடிக்க வார்த்தைகளே இல்லை எனலாம். காலம் தனக்குள் பொத்தி வைத்திருக்கும் அதிசயங்களை யாராலும் கணிக்க முடியாது போலும்!


சில மாதங்களுக்கு முன் இந்த வீட்டை அஞ்சு மற்றும் தங்கம் இருவரின் பெயரிலும் மாற்றி எழுதிக் கொடுத்த தினம் தெய்வசிகாமணி அப்பா அவளிடம் சொன்ன வார்த்தைகள்தான் நினைவுக்கு வந்தது.


“அன்னைக்கு ஒரு நாள் அருள்வாக்கு மாதிரி நான் ஒண்ணு சொன்னேனே உனக்கு ஞாபகமிருக்கா அஞ்சும்மா” என்று அவர் கேட்க, நெற்றிச் சுருக்கி யோசித்தவள் ‘என்ன?’ என்பது பிடிபடாமல் நினைவு அடுக்குகளில் தீவிரமாகத் தேடத் தொடங்கினாள்.