top of page

Valasai Pogum Paravaikalaai - 26

26 - தெளிந்த நீரோடை!


அன்று ஒரு விடுமுறை தினம்.


சரண், கல்யாணி, லட்சுமி, மேகலா எனப் பிள்ளைகள் எல்லோரும் சரணாலயத்தில்தான் இருந்தனர்.


குயிலியின் அலுவலக அறைக்கு முன் இருக்கும் வரவேற்பறை அவர்கள் அடிக்கும் லூட்டியில் களைகட்டியிருந்தது.


அங்கே போடப்பட்டிருந்த பெரிய சோஃபாவின் ஒரு மூலையில் நான்கு பேரும் நெருக்கியடித்து உட்கார்ந்திருக்க அவர்களுக்கு எதிரில் தேனீர் மேசை மேல் இருந்த மடிக்கணினியில் எல்லோருடைய பார்வையும் பதிந்திருந்தது.


“இவங்கதான் என்னோட முத்து தாத்தா. சிகாமணி தாத்தாவோட அண்ணா. இவங்க என்னோட பெரிய அத்தை ஜெயந்தி. இவங்க கடைசி அத்தை சுஜாதா”


“ஓ... அழகா இருகாங்கடா” என்றாள் மேகலா.


“எனக்கு இன்னும் மூணு அத்தை இருக்காங்க தெரியுமா? ஒருத்தங்க யூ.எஸ்ல இருக்காங்க. ரெண்டு பேர் துபாய்ல இருக்காங்க"


“லக்கீடா சரண் நீ. எனக்கு அத்தையே இல்ல” என்றாள் கல்யாணி.


“ஆமாம்! எங்க மாமன கட்டிட்டு வந்தது கூட எங்களுக்கு அத்தை இல்ல. எங்க அக்காதான்” என்று லச்சு சொல்ல, மூண்ட எரிச்சலில் அவள் தலையில் தட்டினாள் கல்யாணி. ‘ஆவ்... அடிக்காதடி அக்கா வலிக்குது என அவளுடைய கையைத் தட்டிவிட்டாள் லச்சு.


“ஐயோ... சண்டைப் போடதீங்க. மத்த ஃபோட்டோஸ்லாம் பார்க்கலாம்” என சமாதானம் பேசியவன், “இது எங்கப் பெரிய தாத்தாவோட அக்ரிகல்ச்சர் ஃபீல்ட். இதுல சுகர்கேன், பீனட் எல்லாம் கிராப் பண்றாங்க. நான் எல்லாமே ஃப்ரெஷ்ஷா சாப்டேன் தெரியுமா. இதுக்குப் பக்கத்துலதான் எங்க தாத்தாவோட இடமும் இருந்துதாம். அதை அவங்க வேற யாருக்கோ சேல் பண்ணிட்டாங்களாம்” என சரணின் குரல் மட்டுமே ஓங்கி ஒலித்துக்கொண்டிருந்தது. ‘வாவ்’ ‘சூப்பர்’ என இடையிடையே மற்ற பிள்ளைகளின் குரலும் கேட்டது.


“இது எங்க குல தெய்வம் திரௌபதி அம்மன் கோவில். இங்கதான் என்னோட நாலு பாட்டியும் சேர்ந்து பொங்கல் வெச்சாங்க. தென் பூஜை செஞ்சாங்க. ஸ்வீட் பொங்கல், செம்ம டேஸ்டா இருந்துது தெரியுமா” என்றபடி குலதெய்வ கோவிலில் பொங்கல் வைத்தபொழுது எடுத்த படங்களை அவர்களுக்குக் காண்பித்தான்.


வளவளத்தபடி அவர்கள் அதைப் பார்த்து முடிக்க, “இரு, நான் பம்ப் செட்ல குளிச்ச வீடியோ ப்ளே பண்றேன்” என்றபடி அவன் அந்தக் காணொலியை ஓடவிட, இவன் தண்ணீரில் போடும் ஆட்டத்தைக் கண்டு ரசித்தபடி அதில் அவனுடன் சூர்யாவும் இருந்தான். “சரண்... பார்த்து பார்த்து... அப்பா மூக்குல தண்ணிப் போயிடப் போகுது” என அக்கறையுடன் அந்த வீடியோவை எடுத்தப் பெண்ணின் குரலும் உற்சாகமாக அதில் ஒலிக்க, “சுஜா அத்தை வாய்ஸ் அது. அவங்கதான் வீடியோ எடுத்தாங்க” என்றான் பெருமையுடன்.


“சூர்யா சார் எங்களுக்கு பெஸ்ட் ஃப்ரெண்ட் தெரியுமா? அவங்கதான் உன் அப்பான்னு எனக்குத் தெரியவே தெரியாதுடா சரண்” என லட்சுமி சொல்ல, “எனக்கே அது இப்பதான் தெரியும்” என்றான் அவன் வெகு சாதாரணமாக. “ஏன்” என லச்சு ஏதோ கேட்க வர, அந்தப் பேச்சு சரியில்லை என்பதை உணர்ந்து, “லச்சு... பேசாம வீடியோவைப் பார்” எனப் பெரியவளாக கல்யாணி அவளை அடக்கினாள்.


கேபின் கதவைத் திறந்தே வைத்திருந்ததால், புருவ மத்தியில் முடிச்சுக்கள் விழ, அனைத்தையும் காதில் வாங்கியபடி உள்ளே ஏதோ கோப்பைப் பார்த்துக் கொண்டிருந்தாள் குயிலி.


அந்தக் காணொலி முடிந்து அடுத்த படத்தில் நிலைத்திருந்தது கணினியின் திரை.


சரியாக அப்பொழுது உள்ளே நுழைந்தான் முகிலன். அந்த மழலைப் பட்டாளத்தைப் பார்த்ததும் அவனுடைய விழிகள் வியப்பில் விரிந்தன.


“ஹாய் சரண், யார் இவங்க எல்லாம். உன்னோட ஃப்ரெண்ட்ஸா?” எனக் குதூகலித்தபடி அவனுக்கு அருகில் வந்து உட்கார்ந்தான்.


“ஆமாம் அங்கிள். லச்சுவைதான் உங்களுக்கு ஏற்கனவே தெரியுமே!” என்றவன் மற்ற மூவரையும் அவனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தான்.


அப்பொழுது இயல்பாக முகிலனின் பார்வை அந்த மடிக்கணினியில் பதிய, சட்டென மூண்ட ஆத்திரத்தில் அவனது மூளை அப்படியே சூடானது.


“ஹேய் சரண், இந்த ஃபோட்டோல உன் கூட ஒருத்தர் இருக்காரே யார் அது” என்று கேட்க, “என்னோட அப்பா” என்றான் பெருமையுடன். மின்சாரம் தாக்கியதுபோல் இருந்தது முகிலனுக்கு. வேகமாக தன் கைப்பேசியைக் குடைந்து கூகுள் ஃபோட்டோஸ் உள் நுழைந்து பத்து வருடங்களுக்கு முன்பு போய் பார்க்க, அவனுடைய கண்களை அவனாலேயே நம்ப இயலவில்லை. அதிலிருந்த ஒரு டிஜிட்டல் படத்தில் மமதியுடன் திருமணக் கோலத்தில் நின்றிருந்தவன் சூர்யாவேதான்! லேசாக சதைப் போட்டு முகத்தில் சற்று முதிர்ச்சி எட்டிப்பார்த்தாலும் மமதியின் கணவன்தான் குயிலியின் மகனுடைய தகப்பன் என்பது புரிந்தது.


ஒரே ஒரு நொடிக்குள் அவனுடைய மூளை குதர்க்கமாக எதையெதையோ கணக்குப் போட, ‘என் வாழ்க்கைல நான் கடந்து வந்த பொண்ணுங்கள்ளயே இந்த குயிலிதான் கொஞ்சம் வேற மாதிரி தெரிஞ்சா. கடைசில இவளும் இதே குட்டைல ஊறின மட்டைதானா?’ என்ற எண்ணம் தோன்ற, ஒரு ஏமாற்ற மனநிலையில் கண் மண் தெரியாத அளவுக்கு அப்படி ஒரு கோபம் உண்டானது.


மற்ற படங்களையோ காணொளியையோ அவன் பார்த்திருந்தான் என்றால் நிச்சயம் அவனுக்கு இப்படித் தோன்றியிருக்காது.


தொழிற்முறை சந்திப்பில் அறிமுகமாகி, ஏதோ ஒரு புள்ளியில் அவள் மீது ஏற்பட்ட மரியாதை அவளுடனான நட்பை வளர்த்துக் கொள்ளச் செய்தது. மற்றபடி நட்பு என்கிற எல்லையைத் தாண்டி அவளது தனிப்பட்ட வாழ்க்கைக்குள் இதுவரை மூக்கை நுழைத்ததில்லை என்பதால் அவளைப் பற்றி வேறெதுவும் தெரியாத நிலை வேறு.


அளவுக்கு மீறி உரிமை எடுத்துக்கொள்கிறோம் என்று கூட உணராமல், ஏதோ ஒரு வேகத்தில் அவளுடைய கேபின் நோக்கிப் போனவன் அதன் கதவை அறைந்து சாத்தியபடி உள்ளே நுழைந்தான்.


கைப்பேசியில் யாருடனோ பேசிக் கொண்டிருந்தவள் அதிர்ந்து, “எக்ஸ்யூஸ் மீ.. ஃபைவ் மினிட்ஸ்ல திரும்ப கூப்பிடறேன்” என்றபடி அந்த அழைப்பைத் துண்டித்துக் கேள்வியாக முகிலனை ஏறிட்டாள்.


எடுத்த எடுப்பிலேயே, “சரணோட அப்பா யாரு?” என்று மிரட்டலாகதான் தொடங்கினான். அடுத்த நொடி அவளது முகம் கடினப்பட்டுப்போனது.


தவறான புரிதலால் முகிலனுக்கு அவளை எண்ணி ஏற்பட்ட ஒரு ஏமாற்ற உணர்வுதான் அவனுடைய இத்தகைய பேச்சால் அவனிடம் குயிலிக்கும் இப்பொழுது உண்டானது. ' இந்தக் குறுகிய நாட்களுக்குள்ளாகவே இவ்வளவு தூரம் பேசும் அளவுக்கா இவனுக்கு இடம் கொடுத்துவிட்டோம்?!' என ஒரு நொடி திடுக்கிட்டுத்தான் போனாள்.


உடனே தன்னை சமாளித்துக்கொண்டு, “இதுக்கு நான் உங்களுக்கு அவசியம் பதில் சொல்லியே தீரணுமா? இந்த அளவுக்கு உரிமை எடுத்துக்க நீங்க யார் சார் எனக்கு” என்றாள் சீற்றமாக.


அவளுடைய நேர் கொண்ட பார்வையும் சீற்றமும் தெளிவானப் பேச்சும் எதிரில் நின்றவனைச் சற்று சிந்திக்கவும் நிதானிக்கவும் செய்தது.


“சாரி குயிலி, சரணோட அந்த ஃபோட்டோல இருக்கறது” என இறங்கிவந்து அவன் தணிந்த குரலில் கேட்க, ‘உட்கார்’ என்பதுபோல் ஜாடை செய்தவள், “சூர்யா! அவனோட அப்பா” என்றாள் சலனமே இல்லாமல்.


“மமதி ஆர் யூ... உங்க ரெண்டு பேர்ல, யார் அவனோட லீகல் வைஃப். சரண் இல்லிஜிடிமெட் சைல்ட் இல்லாதான? அவன் ஒரு கிஃப்டட் சைல்ட் குயிலி. அவனை அப்படி நினைச்சுப் பார்க்கவே எனக்கு பதறுது” என படபடத்தான் உண்மையான அக்கறையில்.


மமதி என்ற பெயரைக் கேட்டு ஒரு நொடி திடுக்கிட்டாலும் அதைக் கடந்து, “இல்லிஜிடிமெட் சைல்ட்... இதுக்கு அர்த்தம் என்ன முகில். அதை சொல்லுங்க முதல்ல” என அழுத்தமான குரலில் கேட்டாள் குயிலி.


அந்தக் கேள்வியே புரியாமல் அவன் உறுத்து விழிக்கவும், “இல்ல ஒரு மனிதப் பெண்ணுக்கு இயற்கையா பிறந்த, ஒரு மனிதக் குழந்தை எப்படி இல்லிஜிடிமெட் சைல்ட் ஆகும். இங்க எந்தக் குழந்தையும் முறைத் தவறிப் பிறந்த குழந்தை கிடையாது. அம்மாங்கறவ கண் எதிர்ல இருக்கற ஒரு ப்ரத்யக்ஷ உண்மையின் ஸ்வரூபம். அவதான் நிஜம். ஆனா இந்த உண்மையை நம்ம சமூகம் மூடி மறைக்கறதாலதான் தனக்குப் பிறந்த ஒரு குழந்தையின் பொறுப்பை தனியா எடுக்க இங்க நிறைய பெண்கள் பயப்படறாங்க.


ஒரு ஃபோர்ஸ்ட் செக்ஸ்ல, ஒரு ரேப்ல, ஒரு ஆணோட நம்பிக்கை துரோகத்துல பிறக்கற குழந்தைகள் பாவப்பட்டவங்களா போறாங்க” என இகழ்ச்சியுடன் சொன்னவள்,


“சரண் குயிலியோட மகன். அவளோட லீகல் ஹைர்! அதாவது சட்டப்பூர்வமான வாரிசு!” என்றாள் ஒரு நிமிர்வுடன்.


இப்படி ஒரு பரிமாணத்தில் அவன் சிந்தததே இல்லை. அவளது தெளிவைக் கண்டு வியந்துபோனான்.


“ப்ரௌட் ஆஃப் யூ டியர்! உன்னை என்னோட ஃப்ரெண்டுன்னு சொல்லிக்கவே பெருமையா இருக்கு” என்றவன், “சாரி ஃபார் வாட் ஐ கொஸ்டின்ட் யூ. யோசிக்காம ஒரு செகண்ட்ல உன்னைத் தப்பா நினைச்சுட்டேன்” என உண்மையில் வருந்தினான்.


“இட்ஸ் ஓகே முகில், என்ன படிச்சாலும், எவ்வளவு கன்ட்ரீஸ் சுத்தி வந்தாலும், எவ்வளவு விதமான வாழ்க்கை முறையைப் பத்தி தெரிஞ்சிட்டலும், நம்ம அடிப்படை புத்தி இப்படிதான் இருக்கும்” என அவனுக்குக் கொட்டு வைத்தாள் அவள்.


“ஹேய் போதும்... நான் பார்த்த பெண்கள் பலர் இப்படித்தான் தெரிஞ்சிக்கோ” என்றவன், “அப்படின்னா உங்க பிரிவுக்கு காரணம் அந்த மமதிதானா” என்று கேட்டான் தயங்கியபடி.


‘இவனுக்கு அவளை எப்படித் தெரிந்திருக்கும்?’ என்பதாக வியப்பில் அவளது புருவம் மேலே உயரவும், “நான் பார்த்த பல பெண்கள் அவளை மாதிரிதான்” என்றான் குற்ற உணர்ச்சியுடன்.


“செய்யறத எல்லாம் செஞ்சு முடிச்சிட்டு, எப்பவும் பெண்களையே குறை சொல்லுங்க?” என அவளுடைய உதடுகள் ஏளனத்தில் வளையவும், ‘என்னை குறைத்து மதிப்பிடுகிறாய் இல்லையா? அதை தெளிவு படுத்த என் பக்க நியாயங்களை நீ கேட்டுதான் ஆகவேண்டும்’ என்பது போலத் தொடர்ந்தான் கார்முகிலன்.


“அம்மா ஸ்கூல் ஃபைனல் முடிக்கும்போதே இறந்துட்டாங்க. ஸோ... எனக்கு அப்பா மட்டும்தான். ஏற்கனவே ஒரே பையன்றதால பயங்கர செல்லம், அதுவும் அம்மா இல்லன்னதும் கேட்கவே வேணாம். அப்பா எனக்கு எதுக்குமே நோ சொன்னதில்ல.


காலேஜ் சேர்ந்த உடனே காஸ்ட்லி பைக், அப்பதான் புழக்கதுக்கே வந்திருந்த செல்லுலார் ஃபோன்னு செம்மையா சீன் போட்டுட்டுச் சுத்துவேன். கைல பாக்கட் மணி வேற சரளமா புழங்குமா. அதனால என்னைச் சுத்தி எப்பவும் ஒரே கூட்டம்தான்.


அப்பதான் காலேஜ்ல கூட படிச்சப் பொண்ணை ரொம்ப சின்சியரா லவ் பண்ணேன்” என அவன் சொல்லிக்கொண்டே போக, “ஐயோ, இதையெல்லாம் எதுக்கு இப்ப என் கிட்ட சொல்லிட்டு இருக்கீங்க?” எனக் கடுப்பானாள் அவள்.


“நான் தேவையில்லாம உன் மேல கோபப்பட்டிருக்கக் கூடாது. அது ஒரு மாதிரி கில்டி ஆகிடுச்சு. சூர்யாவோட ஃபோட்டவைப் பார்த்ததும் பழசையெல்லாம் கிளறி ஒரு மாதிரி ட்ரிக்கர் பண்ணி விட்டுடுச்சு. என்னவோ உன் கிட்ட எல்லாத்தையும் சொல்லணும்னு தோனுது. விடேன்” என்று சொல்ல, “ஓ மை காட்... முகிலன் யூ ஆர் ஸோ ஆரகன்ட்” என்றபடி அவள் மென்மையாகச் சிரிக்க, அதையே அவளது அனுமதியாய்க் கொண்டு தொடர்ந்தான் முகிலன்.


“நல்லா நாலு வருஷம் என் கூட சேர்ந்து ஊரைச் சுத்திட்டு, டிரஸ், அக்ஸஸரீஸ்ன்னு வாங்கிக் கொடுத்த கிஃப்ட் எல்லாத்தையும் நல்லா யூஸ் பண்ணிட்டு, பிட்ஸா... பர்கர்... ஐஸ்க்ரீம்ன்னு நல்லா வெளுத்து வாங்கிட்டு, படிப்பு முடிஞ்சதும் வேற ஒருத்தன கல்யாணம் பண்ணிட்டு எனக்கு டாட்டா காட்டிட்டுப் போயிட்டா. லவ் ஃபெய்லியர்ல சரக்கடிச்சுட்டுப் பைத்தியக்காரன் மாதிரி ஒரு வருஷத்தை வேஸ்ட் பண்ணேன்.


பாவம் அப்பாதான் என்னை கஷ்டப்பட்டு சரி பண்ணி எம்எஸ் படிக்க ஃபாரின் அனுப்பினாரு. படிப்பு வேலைன்னு சில வருஷம் போச்சு.


இருக்கற மேட்ரிமோனியல் சைட்ல எல்லாம் பதிவு பண்ணி வெச்சு எனக்கு அப்பா பெண் தேட ஆரம்பிச்சாரு.


ஆனாலும் கல்யாணம்னா, எனக்கு என் எக்ஸ் ஞாபகம் வந்துடும். எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் அவளோட கம்பேர் பண்ணி அவளை விட பெட்டரா எதிர்பார்க்கவும், யாரையுமே பிடிக்காம போச்சு. சில பெண்கள் அவங்களாவே என்னை ரிஜக்ட் பண்ணாங்க. இப்படியே காலம் கடந்து போச்சு.


அப்பதான் ஏதோ சைட்ல என் ப்ரொஃபைல் பார்த்துட்டு அந்த மமதியே நேரடியா என் அப்பாவை கண்டாக்ட் பண்ணிப் பேசினா. எல்லாமே பொருந்தி வந்துது.


அப்ப யூ.எஸ்ல வேலை செஞ்சிட்டு இருந்தனா. ஸோ, அங்கேயே அவளை நேர்ல மீட் பண்ணிப் பேசினேன். பார்க்க அழகா இருந்தா. எனக்கு வயசு கூடிப் போனதாலையோ என்னவோ அவளை பார்த்த உடனே பிடிச்சுப் போச்சு.


முதல் கேள்வியே ‘கிரீன் கார்ட் வாங்கிட்டு இங்கயே செட்டில் ஆகற ஐடியா இருக்கா?’ன்னுதான் கேட்டா. நான் எங்க இருந்தாலும் அப்பா அங்க வர தயாரா இருக்கவும் ‘ஒய் நாட்’ன்னு தோனிச்சு. அப்பாவோட உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுத்து, இதுக்கு மேல இழுத்தடிக்க வேண்டாம்ணு முடிவு பண்ணி அவளையே ஓகே பண்ணிட்டேன்.


தினமும் ஃபோன்ல பேசிட்டுதான் இருந்தோம். ஓப்பனா சொல்றேன் குயிலி... நான் அப்படி ஒண்ணும் டீசன்சி... டிகினிட்டி இதெல்லாம் மெயின்டைன் பண்ணல. நம்ம கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ணுதானன்னு சொல்லி இன்டிமேட்டா கூட பேசியிருக்கேன். அதையெல்லாம் வெட்கப்பட்டு ரசிச்சு ரெசிப்ரொகேட் பண்ணிதான் என் கூட கேஷுவலா பேசிட்டு இருந்தா. சான்ஸ் கிடைச்ச போது கிஸ் கூட அடிச்சிருக்கேன்” என அவன் கூச்சம் இல்லாமல் சொல்ல, அதுவரை சலனமின்றி அவன் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்த குயிலியின் முகம் அஷ்டகோணலாய் மாறிப்போனது.


“கூல்... கூல்... லண்டன்ல எல்லாம் இருந்துட்டு வந்திருக்க! இதுக்கே ஷாக் ஆனா எப்படி?” என்று வெகு சாதாரணமாகச் சொல்லி அவளுடைய முறைப்பைப் பெற்றுக்கொண்டு, “ஓகே... கூல்... கூல்..." என அவளை அமைதியும் படுத்தினான்.


"சென்னைல கிராண்டா பெட்ரோத்தல் ஏற்பாடு செஞ்சிருந்தாங்க. லீவ் எடுத்துட்டு இங்க வந்தேன். அவளும் வந்திருந்தா. பர்சேஸ் அது இதுன்னு ஊரைச் சுத்தினோம். ஃபங்ஷனும் நல்லபடியா நடந்து முடிஞ்சுது.


திடீர்னு ஒரு நாள், ஏதோ ஒரு அனானிமஸ் நம்பர்ல இருந்து அவ ஸ்மோக் பண்ற மாதிரி, பார்ட்டில ட்ரிங்க் பண்ற மாதிரி பிக்சர்ஸ் எல்லாம் அப்பாவோட நம்பருக்கு வந்துது.


அவருக்கு பயங்கர ஷாக். என்னதான் டாக்டரா இருந்தாலும் அவரும் மனுஷன்தான, ஸோ... கல்யாணத்தை நிறுத்தற முடிவுக்கு வந்துட்டார்.


பரவாயில்ல, நீங்க நான் எல்லாரும் செய்யாத குற்றத்தையா அவ செய்யறா? ஆணா இருந்தாலும் பெண்ணா இருந்தாலும் ஸ்மோகிங் டிரிங்கிங் எல்லாமே இன்சூரியஸ் ஃபார் ஹெல்த் அவ்வளவுதான். என்ன பொண்ணுங்க செஞ்சா அதை பண்பாடு கலாச்சாரதோட சம்பத்தப் படுத்தி கன்ஃப்யூஸ் பண்ணிக்கறோம்? இதெல்லாம் சகஜம்தான், ஃப்யூச்சர்ல இதையெல்லாம் சரி பண்ணிக்கலாம்னு சொன்னாக்கூட அவர் கேட்கல. குழந்தை உண்டானால் இந்தப் பழக்கமெல்லாம் அதன் ஆரோக்கியத்தை பாதிக்கும்னு சொல்லி அவங்கள கூப்பிட்டு கல்யாணத்த நிறுத்தச் சொல்லிட்டாரு.


கமுக்கமா போய் போலீஸ்ல கேஸ் கொடுத்து, அந்த மமதியோட அம்மா ஒரு ஆட்டம் ஆடிச்சு பாரு, அப்பதான் அந்தப் பொம்பளையோட நிஜ முகம் எங்களுக்குத் தெரிஞ்சுது. அவளோட அப்பன் இருக்கான் பாரு, அவன் ஒரு மிக்ஸ்ச்சர் பார்ட்டி. அந்தப் பொம்பள எதிர சாப்பிடறதுக்கு தவிர வேற எதுக்கும் வாயைத் திறக்கமாட்டன். சரியான டுபாகூர் பேக்கு”


அவன் சொல்லும்போதே அவளுக்கு பக்கென்று சிரிப்பு வந்தது.


“என் சோகக் கதையைச் சொல்லிட்டு இருக்கேன் உனக்கு சிரிப்பா இருக்கா?” எனக் கிண்டலுடன் உரைத்தவன், அவளது, 'சாரி'யைப் பெற்றுக்கொண்டு தொடர்ந்தான்.


“இன்ஃபேக்ட், அவங்களுக்கு நியாயமான காம்பென்சேஷன் கொடுக்க அப்பாவே தயாராதான் இருந்தார். ஆனா அவங்க டிமேண்ட் பண்ண அமௌன்ட் அநியாயத்துக்கு ரொம்ப ரொம்ப அதிகம்.


நியாயமா போறதெல்லாம் வேலைக்கே ஆகாதுன்னு தோனிச்சு. கண்டைனர் மணின்னு சொல்லி ஒரு பிரபல ரௌடி, அடிகடி ஃப்ராக்ச்சர் ஆகி, அப்பாகிட்டதான் ட்ரீட்மென்ட்க்கு வருவான். அவனை வெச்சு நல்லா மிரட்டி, கேசை வாபஸ் வாங்க வெச்சு ஒரு அமௌன்ட்டை செட்டில் பண்ணி, தொலைச்சித் தலை முழுகினோம்.


ஆனாலும், கிஸ்ஸெல்லாம் வேற அடிச்சிருக்கோமே, பாவம் பொண்ணு கனவை வளர்த்துட்டு இருக்கும்மேன்னு எனக்குள்ள ஒரு சின்ன கில்டி கான்ஷியஸ். சோஷியல் மீடியாவுல அவளை ஃபாலோ பண்ணிடே இருந்தேன். இந்தக் கூத்தெல்லாம் முடிஞ்சு ஒரு மாசம் கூட ஆகல, அதுக்குள்ள பலிக்கடா மாதிரி ஒரு இளிச்சவாயனைப் பக்கத்துல நிக்க வெச்சுட்டு மாலையும் கழுத்துமா கல்யாண ஃபோட்டோவை அப்லோட் பண்ணாப் பாரு! சத்தியமா சொல்றேன் குயிலி, கொல காண்டு ஆயிடுச்சு. அடச்சீ... கல்யாணமாவது ம**வதுன்னு வெறுத்தே போயிட்டேன்.


அங்க போர் அடிச்சுப் போய் இங்க வந்தேன். பிசினெஸ் ஆரம்பிச்சேன். உங்கள மாதிரி இருக்கறவங்க புண்ணியத்துல, ஏதோ என் வண்டி ஆக்சிடென்ட் ஆகாம ஓடிட்டு இருக்கு.


ஆனா அப்பா மட்டும் எனக்கு பொண்ணு பார்க்கறத நிறுத்தர வழியா இல்ல. அவர் தேடிட்டே இருக்காரு. நான் எஸ் ஆகி ஓடிட்டே இருக்கேன். ஸ்டில்... ஐம் அ ஹேப்பி சிங்கிள்...” என முடித்தான் இலகுவாகவே.


அதிர்ந்துபோய் உட்கார்ந்திருந்தாள் குயிலி. தன் வாழ்க்கை கதையின் தானே அறியாத வேறொரு அத்தியாயத்தை அல்லவா இவன் சொல்லிக் கொண்டிருக்கிறான் என மலைப்பாக இருந்தது.


அவள் பேச்சற்று அமர்ந்திருக்கவும், “யோவ்... நான் பலி கடான்னு சொன்னது உன் சரணோட அப்பாவைதான். அது புரிஞ்சுதா இல்லையா?’ என்று அவன் கேட்கவும் தலையை அசைத்தாள் அவள்.


சூர்யாவை அவன் இவ்வளவு கிண்டலாகச் சித்தரித்தபோதும் கோபமெல்லாம் வரவே இல்லை அவளுக்கு. ஒரு ரவுடியை விட்டு மிரட்டி அவர்களை அடக்கினோம் என இவ்வளவு கெத்தாக ஒருவன் சொல்லிக் கொண்டிருக்க, தொடை நடுங்கிப் போல அவர்களுடைய மிரட்டல்களுக்கு பயந்து வாழ்கையையே தொலைத்தவனுக்கு இது தேவைதான் என்ற எண்ணம்தான் உண்டானது.


ஒன்று, திருமணம் முடிந்து மனைவி என்ற ஒருத்தி வந்த பிறகு, வேண்டாம் என்று போனவள் திரும்ப வந்து ஆடிய தற்கொலை நாடகத்துக்கு அவன் அடி பணிந்திருக்கக் கூடாது. அல்லது, வேறு வழி இல்லாமல் இவளைக் கழற்றிவிட்டு அவளை மணந்த பிறகாவது அவளை சமாளித்து ஒரு நல்ல வாழ்க்கையை வாழும் திறமையாவது அவனுக்கு இருந்திருக்க வேண்டும். இரண்டும் கெட்டு இப்படி வாழ்கையைத் தொலைத்து நிற்கிறானே என்றுதான் தோன்றியது.


யோசனையில் பேச்சற்று இருக்கவும், அவளுடைய அமைதி ஏதோ செய்ய, “என்ன நினைக்கற குயிலி, ப்ளீஸ் ஸ்பீக் அவுட்” என்றான் அக்கறை ததும்ப.


மனதின் பாரத்தை இதற்கு மேலும் தூக்கி சுமக்க இயலாமல், இதுவரை யாரிடமும் பகிர விரும்பத தன் வாழ்கையின் கசந்த அத்தியாயத்தை அவனிடம் வெளிப்படையாகச் சொல்லி முடித்தாள்.


அவன் அதிர்ச்சியில் பேச்சற்று உட்கார்ந்திருக்க, "இப்ப சொல்லுங்க முகிலன், சூர்யா மட்டும்தான் இனா வானாவா, இல்ல நீங்களுமா?" என்று இடக்காகக் கேட்கவும் செய்தாள்.


ஒரே வெட்கமாகிப் போனது முகிலனுக்கு.


“ஓ மை காட்... குயிலி, அந்தப் பொம்பள ஒரே கல்லுல ரெண்டு மாங்கா அடிச்சிருக்குப் பாரேன். எங்க அவ ஃபிரக்னன்ட்ன்னு தெரிஞ்சா எங்க சைட்ல இருந்து பிரச்சனை வருமோன்னு, அழகா ப்ளேட்டை எங்கப் பக்கம் திருப்பி ஒரு பெரிய அமௌண்டையும் கறந்துடுச்சு. நான் என்னவோ பெரிய சாகசம் செஞ்சதா இன்னைக்கு வரைக்கும் நினைச்சிட்டு இருக்கேன் ச்ச... இப்ப தோனுது குயிலி... அந்த ஃபோடோஸ் எல்லாத்தையும் கூட அதுதான் என்னோட அப்பாவுக்கு அனுப்பியிருக்கணும்” என்றவன் ஒரு அசிங்கமான வார்த்தையை ஆங்கிலத்தில் சொல்லி அவளுடைய முகம் சுளிக்க வைத்தான்.


“இனஃப் முகில், உங்க மேல இருக்கற நம்பிக்கைல, நீங்க எப்படி என் கிட்ட எல்லாத்தையும் சொன்னீங்களோ அதே மாதிரித்தான் நானும் உங்க கிட்ட சொன்னேன். மோர் ஓவர் என் லைஃப் சம்பத்தப்பட, எனக்கே தெரியாத சில விஷயங்கள் உங்களுக்குத் தெரிஞ்சிருக்கு இல்ல, அதுவும் ஒரு காரணம். இதுல வேற சிலரோட அந்தரங்கங்களும் அடங்கியிருக்கு. ஸோ,.. இதை இப்படியே மறந்துடுங்க. சரணுக்கு இப்போதைக்கு இதெல்லாம் தெரிய கூடாதுன்னு நினைக்கறேன்” என அங்கே வந்தவுடன் அவன் கேட்ட கேள்விக்கு விடை சொல்லி அந்தப் பேச்சுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தாள்.


அவன் சொன்னக் கதையிலிருந்து, கலங்கியிருந்த அவளது மனமும் சற்றுத் தெளிவானதுபோல இருந்தது.


அதன் பயனாக சூர்யா வீட்டினர் ஏற்பாடு செய்திருந்த சரணுடைய பிறந்தநாள் விழா நல்லபடியாக நடந்து முடிந்தது.


ஆம்... அவன் வாங்கி வந்தப் புடவைகளில் அவளுக்குப் பிடித்த ஆகாய நீல வண்ண புடவையை அணிந்துதான் அவனுடன் இணைத்து அந்த விழாவில் அவள் கலந்துகொண்டாள்.


அடுத்த சில தினங்களிலேயே அவளுடைய வீட்டிற்கு அவனுடைய அம்மா அப்பாவையும் தன்னுடன் இணைத்துக்கொண்டு அவளுடன் தன் வாழ்கையை புதுப்பிக்க வந்தான் சூர்யா.


எல்லோரும் ஆனந்தத்தில் திளைக்க, மகிழ்ச்சி, துக்கம், கோபம், வருத்தம் அனைத்தையும் கடந்து சஞ்சலங்கள் ஏதும் இன்றி தெளிந்த நீரோடையாக சமநிலைப்பட்டிருந்தாள் குயிலி.

6 comments
© KPN NOVELS COPY PROTECT
bottom of page