top of page

Valasai Pogum Paravaikalaai - 22

22.குழப்பம்


“அஞ்சி அஞ்சிச் சாவார் - இவர்

அஞ்சாத பொருளில்லை அவனியிலே!

மிகத் துயர்ப்படுவார் எண்ணிப் பயப்படுவார்!”


எடுத்த எடுப்பில் இப்படிதான் தொடங்கினாள் கைப்பேசியில் அஞ்சுவை அழைத்திருந்த தங்கம்.


“பாரதியாரோட பாட்டு எவ்வளவு இருக்கு எரும, பொழுது விடிய ஃபோன் பண்ணி இதைப் பாடிட்டு இருக்க, அதையும் விட்டு விட்டு” எனக் கடுப்பானாள் அஞ்சு.


“ஏய், நீ பயந்தாங்கொள்ளிதான... அதை ஒத்துக்கோ” என தங்கம் அவளைச் சீண்ட, “அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில்... அதை நீ தெரிஞ்சிக்கோ முதல்ல” என அவளுக்கு அஞ்சு பதில் கொடுக்கவும், “ஓகேடீ பயந்தாங்கொள்ளி, நீ நல்லா பயந்துட்டே குண்டுச் சட்டில குதிரை ஓட்டு! பை” என்று தங்கம் கிண்டலாகச் சொல்லிப் பட்டென்று அந்த அழைப்பைத் துண்டித்துவிட்டாள். கடுப்பில் தலையில் அடித்துக்கொண்டாள் அஞ்சு.


இப்படியாக மூன்று நாட்களாய் குழம்பிய குழப்பத்தில் அஞ்சுவுக்கு மண்டையே காய்ந்து போனது. எந்த நேரமும் இதைப் பற்றிய பேச்சுதான். இவள் எது சொன்னாலும் அவனுக்கு தனிப்பட்ட கருத்து என்ற ஒன்றே இல்லை என்பது போலத் தலையைத் தலையை ஆட்டிக்கொண்டிருந்தான் சீனு. அவளுக்கு சுவருடன் முட்டிக்கொண்ட கதைதான்.


ஏற்கனவே நிலைமை இப்படி இருக்க, மற்றொரு புதிருடன் பள்ளியிலிருந்து வீடு திரும்பினாள் அவளுடைய மூத்த மகள்.


“ம்மா... இன்னும் ரெண்டு மாசத்துல பப்ளிக் எக்ஸாம் வந்துடும் இல்ல. ப்ளஸ் டூ முடிச்சதும் மேற்கொண்டு என்ன படிக்கலாம்னு கிளாஸ்ல டிஸ்கஸ் பண்ணிட்டு இருந்தோம். பீ.ஏ.பீ.எல் ஹானர்ஸ்ன்னு ஒரு லா டிகிரி இருக்காம். எங்க காமர்ஸ் டீச்சர் சொன்னாங்க. அதுக்கு என்ட்ரன்ஸ் எக்ஸாம் இருக்கு. அதை கிளியர் பண்ணா சீட் கிடைச்சிடும். அதை முடிச்சு லாயர் ஆகிட்டா, தென் மேஜிஸ்திரேட் எக்ஸாம் ஒண்ணு இருக்காம். அதையும் கிளியர் பண்ணா ஜட்ஜாவே ஆகலாமாம். வக்கீல் ஆகணும்னு ஆசைப்பட்டேன்னு நீ அடிகடி சொல்லுவ இல்லம்மா. பேசாம படிச்சு வக்கீல் ஆகி உன் ஆசையை நான் நிறைவேத்தறேன்” என மகள் சொல்லிக்கொண்டிருக்க அப்படியே புல்லரித்துப் போனது அஞ்சுவுக்கு.


நெகிழ்ச்சியில் அவளது கண்கள் கலங்கவும், “செலவைப் பத்தி பயம் வந்துடுச்சாம்மா” எனத் தானே ஒரு காரணத்தைக் கண்டுகொண்டவள், “நீ கவலை படாத, நான் பார்ட் டைமா ஏதாவது வேலைக்குப் போய் படிச்சுக்கறேன். பாட்டி சொல்லிச்சு ஆயா சொல்லிச்சுன்னு கல்யாணம் அது இதுன்னு மனசு மாறாம என்னை நிம்மதியா படிக்க மட்டும் விடுங்க போதும்” என்று கொஞ்சமும் சலனமே இல்லாமல் சொல்ல, அப்படியே மகளை அணைத்துக்கொண்டாள் அஞ்சு.


இவள் பூப்படைந்த சமயம் மஞ்சள் நீராட்டு விழா நடத்த வேண்டும் என சீனுவின் அம்மா ஒற்றைக்காலில் நிற்க, வேறு வழி இல்லாமல் அதற்கு ஏற்பாடு செய்யத் தொடங்கினாள்.


தாய்மாமன் முறை செய்கிறேன் என இவளுடைய சின்னத் தம்பியை உள்ளே நுழைத்தாள் இவளுடைய அம்மா அன்னம்மா. எலி ஏன் ஏரோப்ளேன் ஓட்டுகிறது என்று தெரியாதா இவளுக்கு. எங்கே மகளை அவனுக்குப் பெண் கேட்டுவிடுவார்களோ என்கிற முன்னெச்சரிக்கையில் அந்தச் சீரைப் பெரியத் தம்பியை விட்டுச் செய்யும்படி இவள் சொல்லப்போக, அப்படி ஒரு கோபம் பொத்துக்கொண்டு வந்துவிட்டது பச்சையப்பனுக்கு.


வழக்கம் போலப் படிப்பைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு அவளுடைய அக்கா மகளை அவனுக்குத் திருமணம் செய்து வைத்துவிட்டார்கள். அதனால்தான் அவள் இப்படி யோசித்தது.


அதற்கு வானத்துக்கும் பூமிக்குமாகக் குதித்தவர்கள் நேரடியாகக் கல்யாணியை சின்னவனுக்குத் திருமணம் செய்து கொடுக்கும்படிக் கேட்டுவிட, திட்டவட்டமாக முடியாது என்று சொல்லிவிட்டாள். ‘நாங்க இல்லாம எப்படி இந்தச் சடங்கை நடத்தறன்னு பார்க்கறோம்’ எனப் பச்சையப்பன் சவால் விட, அவசியமே இல்லை என அந்த விழாவை அப்படியே நிறுத்திவிட்டாள் அஞ்சு. யாராலும் அவளுடைய மனதை மாற்ற இயலவில்லை.


அவள் தரப்பு நியாயம் புரிய சீனு அவள் பக்கம் நிற்கவும் அவர்களுக்குப் பிறந்த வீடு, புகுந்த வீடு என இருபக்க உறவுகளும் இல்லாமல் போனது.


அந்த சம்பவத்துக்குப் பிறகு கல்யாணிக்கு தன் கல்வி குறித்த அச்சம் இருந்துகொண்டே இருக்கிறது. அவளுடைய பெரியம்மா மகளின் நிலையை வேறு அருகிலிருந்து பார்த்தவள் என்பதால் அவளுக்கு அம்மா வழி சொந்தங்களே அலர்ஜி.


மகளின் இந்தப் பேச்சு மனதில் ஊசிக் கொண்டு தைக்க, “ஏன் கண்ணு இப்படியெல்லாம் சொல்ற. நீ நல்லா படி அது போதும். அம்மா அப்பா எதுக்கு இருக்கோம். எப்பாடு பட்டாவது உன்னைப் படிக்க வைக்கறோம்” என்றாள் ஒரு வைராக்கியத்துடன்.