Valasai Pogum Paravaikalaai - 21
21.இடுக்கண் களையும் நட்பு
“போதும் சூர்யா! உன்னோட ஹெல்த் கண்டிஷனுக்கு நீ அதிகம் உணர்ச்சிவசப்படக்கூடாது” என எழுந்து வந்து அவனுடைய முதுகை வருடியபடி அவனை ஆசுவாசப்படுத்தினார் கமலக்கண்ணன்.
அடுத்த நொடி, “ஏன், அப்பாவுக்கு என்ன?” என சரண் பதற, எந்த உணர்ச்சியையும் வெளிக் காண்பிக்கக் கூடாது என்கிற உறுதி தளர்ந்து குயிலியே கூட கண் கலங்கிப்போனாள்.
“ஒண்ணும் இல்லடா கண்ணு, உன் அப்பாவுக்கு லேசா ஃபீவர் இருந்துது. வேற ஒண்ணும் இல்ல” என தன் மூக்குக் கண்ணாடியைக் கழற்றி கண்களைத் துடைத்தபடி வசந்தன் சொல்ல, அவனுடைய நெற்றியில் கழுத்தில் என் கை வைத்து பார்த்தபடி, “டெம்பரேச்சர்லாம் இல்லையே! ஹி இஸ் நார்மல். கொரோனான்னு பயந்துட்டீங்களா. அதெல்லாம் இருக்காது” என பெரிய மனிதன் போல சொன்னவன், “ஏன் எல்லாரும் இப்படி அழுதுட்டு இருக்கீங்க? எனக்குப் பிடிக்கல” என்றான் அதை தன் முகத்தில் காண்பித்து.
சூர்யாவோ சரணிடம் தன்னைத் தொலைத்தபடி அவனது அன்பில் சுகமாக நனைந்து கொண்டிருக்க, “இல்லடா கண்ணு, ரொம்ப நாள் கழிச்சுப் பார்த்துட்டோம் இல்ல அதான். இனிமேல் அழல சரியா?” என்றார் கண்ணன் அவனுடைய உணர்வைப் புரிந்துகொண்டு.
அப்பாவுக்கு அடுத்தபடியாக அந்த அப்பாவைப் பெற்ற தாத்தா பாட்டி இருவரும் அவனை மாறி மாறி அணைத்து, ‘பட்டு, தங்கம், கண்ணே, மணியே’ என ஆசைதீரக் கொஞ்சி தங்கள் அன்பை வெளிப்படுத்த, சரண் அவர்களிடமும் நன்றாக ஒட்டிக்கொண்டான். நகைச்சுவை உணர்வுடன் அவனுக்குச் சரியாக இறங்கிப் பேசவே கமலக்கண்ணனை மிகவும் பிடித்துவிட்டது.
அவர்கள் பேச்சில் அடிக்கடி எட்டிப்பார்த்ததால் மீதம் இருக்கும் பெரிய தாத்தா பாட்டிகள் அத்தைகள் என எல்லோரையும் பார்க்கும் ஆர்வமும் அவனுக்கு வந்துவிட உடனே வீடியோ காலில் கூடுமான வரை எல்லோரையும் அவனுக்கு அறிமுகம் செய்து வைத்தார் கண்ணன்.
ஒரே கொஞ்சல்கள்தான்! குலாவல்கள்தான்! ஆனந்தம்தான்!
அதன்பின் எல்லோருமாக ஒன்றாக அமர்ந்து காலை உணவைச் சாப்பிட்டு முடிக்க, “நீங்க எல்லாரும் இருந்து பேசிட்டு இருங்க, ஒரு முக்கியமான மீட்டிங் அட்டென்ட் பண்ணனும். நாம இன்னொரு நாள் மீட் பண்ணுவோம்” என சம்பிரதாயமாக எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு ஹோட்டலுக்குச் செல்லத் தயாரானாள் குயிலி.
கற்பகத்தின் முகம்தான் சுண்டிப்போனது.
போதுமான அவகாசம் கொடுக்காமல் முன்னறிவிப்பு ஏதும் இன்றி அவர்கள் அங்கே வந்திருப்பது அவளுக்கு மிகவும் வசதியாகப் போய்விட்டது. இல்லையென்றால் தன் கடமையை முடித்துக்கொண்டு இப்படி பட்டும் படாமலும் அவளால் கிளம்பிப்போக இயலாது. முதலில் அவளுடைய அப்பாவே அதற்கு ஒப்புக்கொள்ள மாட்டார்.
அவர்களது ஆன்லைன் உணவு விற்பனை இதுவரை வேறொரு நிறுவனம் மூலமாக நடந்துகொண்டிருக்க அதை நேரடியாக அவர்களே செய்யும் முனைப்பில் இறங்கியிருக்கிறாள். அவர்கள் குழுமத்துக்குக் கீழே வரும் உணவகங்களை ஒருங்கிணைக்கவும், அதற்கான இணையதளம், நேரடி செயலிகள் அனைத்தையும் வடிவமைக்கவும் முதற்கட்ட வேலைகள் முடிந்திருக்க, அடுத்த நிலை செயல்திட்டங்கள் பற்றிப் பேச ஒரு முக்கிய கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தாள். நிச்சயம் அதை ஒத்திவைக்க முடியாது என்பது வசந்தனுக்கு நன்றாகவே தெரியும். இன்னும் சொல்லப்போனால் அவரும் கூட கலந்துகொள்வதாகதான் இருந்தது. இவர்கள் இங்கே வந்திருப்பதால் தங்கத்தையும் பிரேமையும் துணைக்கு வைத்துக்கொண்டு அவளை சமாளிக்கச்சொல்லி அந்த மீட்டிங்கைத் தவிர்த்துவிட்டார்.
மாடிக்குப் போய் சட்டைக்கு மேலே கோட்டை அணிந்துகொண்டு தன் லேப்டாப் பேக்குடன் அவள் மீண்டும் கீழே வரவும், சட்டென நினைவு வந்தவனாக வழிமறித்து அவளைத் தடுத்து தன்னிடம் இழுத்தவன், சூர்யாவையும் அருகில் வருமாறு அழைக்க என்ன ஏது எனப் புரியாமல் அவனும் நெருங்கி வரவும், இழுத்து இருவரின் கழுத்தையும் கட்டிக்கொண்டு, “தாத்தா ஃபோட்டோ எடுங்க” எனக் கண்ணனிடம் சொல்ல, வேகமாக தன் கைப்பேசியில் மூவரையும் படம் பிடித்தார்.
சொல்லவும் முடியவில்லை மெல்லவும் முடியவில்லை குயிலியால், ஒரு தலை அசைப்புடன் விடைப்பெற்று, அமைதியாகப் போய் அவளுடைய காரில் அமர, அவளது வாகனம் புறப்பட்டது.
அவளுடன் தனிமையில் பேசும் வாய்ப்பு அமையாமல் போக சூர்யாவுக்குதான் அதிக ஏமாற்றமாக இருந்தது.
*********
அவள் சரணாலயத்துக்குள் நுழையவும் வேலை அப்படியே இழுத்துக்கொண்டது. பிரேம் தயாராக எல்லா ஏற்பாடுகளையும் செய்து வைத்திருக்க, கம்பீரமாக அந்த மீட்டிங் ஹாலுக்குள் நுழைந்தாள்.
ஒரே நேரத்தில் அறுபது பேர் உட்கார்ந்து பேச ஏதுவாக மிகப் பெரிய மேசையும் அதன் இருமருங்கிலும் நாற்காலிகளும் போடப்பட்டிருந்தன. அவளுக்கும் முகிலனுக்குமாக இரண்டு இருக்கைகள் நடுநாயகமாகப் போடப்பட்டிருந்தன.
முகிலனுடைய தொழிற்நுட்ப பணியாளர்கள் கிட்டத்தட்ட இருபது பேர் முன்னமே வந்து அங்கே குழுமியிருந்தனர். அனைவருக்கும் முகமன் சொன்னபடி அவளுக்கான இருக்கையில் வந்து அமர அவளுக்கு அருகில் வந்து நின்றான் பிரேம், அவளுக்கு நெருக்கமாகப் பக்கவாட்டிலிருந்த இருக்கையில் அமர்ந்தாள் தங்கம்.
“எந்த பாயின்ட்சும் விட்டுடாம மினிட்ஸ் ரெடி பண்ணிடுங்க பிரேம். அப்பா நிறையக் கேள்வி கேட்பாங்க, கரக்டா பதில் சொல்லணும்” என மெல்லிய குரலில் சொன்னவள், “பிரேம் கூட இருந்து இது எல்லாத்தையும் கத்துக்கோ தங்கம். ஃப்யூச்சர்ல நீயே இன்டிபெண்டண்டா வேலை செய்ய வேண்டி இருக்கும்” என அவளிடம் சொல்லிக்கொண்டிருக்க உள்ளே நுழைந்தான் முகிலன். கூடவே அமைதி தவழும் முகத்துடன் ஒரு முதியவ