20 - அன்பின் சிகரம்
பள்ளிக்குச் செல்ல சுணங்கியபடி படுக்கையைவிட்டு எழுந்திருக்க மனம் வராமல் இப்படியும் அப்படியும் புரண்டு கொண்டிருந்தான் சரண். "ப்ளீஸ்... ம்மா இன்னைக்கு ஒரே ஒரு நாள் லீவ் போட்டுக்கறேன்" என முன்போல் சலுகை எடுத்துக்கொண்டு பிடிவாதமெல்லாம் பிடிக்க முடியாது. அப்பாவை அறிமுகம் செய்ய அவனுடைய அம்மா போட்டிருக்கும் நிபந்தனைகளின் பட்டியலில் மிக முக்கியமானது அது. அதனால் நல்லப் பிள்ளையாகப் போய் தயாராகியே ஆகவேண்டும். இருந்தாலும்கூட உறக்கம் கலைந்த பின்பும்கூட தூங்குவது போல நடித்துக் கொண்டிருந்தான்.
குயிலியுடனோ அல்லது தாத்தா பாட்டியின் அறையிலோ அவனுடைய மனநிலைக்குத் தகுந்தபடி எங்கு வேண்டுமானாலும் உறங்குவான். அன்று பாட்டித் தாத்தாவின் அறையில்தான் உறக்கம். காலை நடைப்பயிற்சிக்குச் சென்று திரும்பிய வசந்தன் நேராகப் பேரனைத் தேடி அங்கேதான் வந்தார்.
முந்தைய தினம் அஞ்சு அங்கே வந்துவிட்டுப் போனவுடன் கமலக்கண்ணனிடமிருந்து அழைப்பு வந்தது. “இங்க அண்ணா வீட்டுல எல்லாருமே சரணைப் பார்க்கணும்னு ரொம்ப ஏக்கத்தோட இருக்காங்கடா வசந்தா. இப்ப சூர்யாவும் நார்மலா இருக்கான். நாளைக்கு நாள் நல்லா இருக்குன்னு சொல்றாங்க. காலைல அங்க வரலாமா?” என அவர் உரிமையுடன் கேட்க, வசந்தனுக்கு மறுக்கத் தோன்றவில்லை. மனைவி மற்றும் மகளிடம் கூட கலக்கவில்லை, சரி என்று சொல்லிவிட்டார். இன்னும் சற்று நேரத்தில் வந்துவிடுவார்கள்.
என்ன நடக்குமோ என மனதிற்குள் சிறு பதற்றம் குடிகொண்டிருந்தது. ‘என்றைக்காக இருந்தாலும் இப்படி ஒரு சூழ்நிலையைக் கடந்தே ஆக வேண்டும்’ என்ற யதார்த்தத்தை மனதில் பதிய வைத்துக் கொண்டு, "கண்ணு எழுந்திரு. இன்னைக்கு நம்ம வீட்டுக்கு முக்கியமானவங்க சில பேர் வரப்போறாங்க" என அவர் பேரனைத் தட்டி எழுப்ப, படக்கென்று எழுந்து உட்கார்ந்து, "அப்படினா நான் இன்னைக்கு ஸ்கூல் போக வேண்டாமா தாத்தா” எனக் குதூகலித்தவன், “யார் தாத்தா வரப்போறாங்க?” என்ற முக்கியமான கேள்வியையே இரண்டாவதாகதான் கேட்டான்.
என்ன சொல்வது எனச் சற்றுத் தடுமாறியவர், “நீயே நேரில் பார்த்து தெரிஞ்சுக்கோ” என்றபடி குளியலறைக்குள் போய் புகுந்து கொண்டார். “தாத்தா அப்ப ஸ்கூல்?” என அவன் காரியத்திலேயே கண்ணாக இருக்க, “டேய் லீவு போட்டுக்கோடா. இதை வேற நான் என் வாயால சொல்லணும் இல்ல?” எனக் குரல் கொடுத்தார் சிறு சிரிப்புடன். அடுத்த பத்தாவது நிமிடத்தில் பல் துலக்கிக் குளித்து அவனுக்குப் பிடித்த உடையை மாற்றிக்கொண்டு வரவேற்பறையில் தயாராக வந்து நின்றான் சரண்.
“சரண் இங்க வா... வந்து பால் சாப்பிடு” என பாட்டி குரல் கொடுக்க, சமையலறைக்குள் சென்றான். அங்கே கற்பகம் ஒரு நாற்காலியில் அமர்ந்தபடி மேற்பார்வை பார்த்துக்கொண்டிருக்கத் தடபுடலான காலை உணவு தயாராகிக்கொண்டிருந்தது. அவனுக்குப் பிடித்த ரசமலாயை எடுத்துப் பரிமாறுவதற்குத் தோதான ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொண்டிருந்தார் சமையல் வேலை செய்யும் பெண்மணி.
“வாவ் பாட்டி, இன்னைக்கு இவ்வளவு அயிட்டம் செய்றீங்க? யார் பாட்டி அந்த ஸ்பெஷல் கெஸ்ட்? கல்லி அக்காவும் லட்ச்சுவும் கூட வராங்களா?! இல்ல அன்னைக்கு ஃபங்க்ஷன்ல என்னைப் பாவம்ன்னு சொன்னாங்களே அந்தப் பாட்டி வரப்போறாங்களா?” என பால் குவளையைக் கையில் வாங்கியபடியே சரமாரியாக அவரைக் குடைந்து எடுத்தான்.
“உங்க அம்மா உனக்கு ப்ராமிஸ் பண்ணி இருந்தா இல்ல?!” என வெகு ஆர்வமாக அவர் அவனுக்கு பதில் சொல்லத் தொடங்க தற்செயலாக அங்கே வந்த வசந்தன் மனைவியை ஒரு பார்வை பார்க்கவும் கப்பென வாயை மூடிக்கொண்டார்.
“அதுதான் நீயே பார்த்து தெரிஞ்சுக்கோன்னு சொல்லிட்டேன் இல்ல?” எனப் பேரனிடம் அழுத்தமாகச் சொன்னவர் அனைத்தும் தயாராக இருக்கிறதா என ஒரு பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்து அகன்றார். வட போச்சே என்பதுபோல் அவன் பாட்டியைப் பரிதாபமாக ஏறிட வாயிற்புறம் வாகன ஒலிப்பானின் ஓசைக் கேட்டது.
ஆர்வ மிகுதியில் குதித்தோடி அவன் வெளியில் வர, காவலாளி கேட்டைத் திறந்து கொண்டிருந்தார். போர்டிக்கோவில் அந்த வாகனம் வந்து நிற்க முதலில் இறங்கினார் கமலக்கண்ணன்.
அந்தப் புதிய மனிதரை அவன் கேள்வியாகப் பார்க்க, அவர்களுடைய சூர்யாவின் மகனைப் பார்த்ததும் அவரது முகம் அப்படியே பூரித்துப் போனது.
ஆனால் அவனுடைய முகம்தான் கூம்பிப்போனது பின்னிருக்கையிலிருந்து இறங்கிய ருக்மணியையும் சிகாமணியையும் பார்த்து. ஆனாலும் அவனுடைய தாத்தா சொல்லிக்கொடுத்த பழக்கத்தில், "ப்ளீஸ் வெல்கம்" என பொதுவாக அவன் அவர்களை எதிர்கொள்ள இருவரும் அப்படியே உறைந்து நின்றனர்.
இறுதியாக ஓட்டுநர் இருக்கையிலிருந்து இறங்கினான் சூர்யா. வாயிலிலேயே மகனை எதிர்பார்க்கவில்லை போலும் அவன். உணர்ச்சி மிகுதியால் அவனது உடலெல்லாம் நடுங்கியது. நெஞ்சை நீவியபடி மகனை நெருங்கியவன் அப்படியே அவனை மார்புடன் அணைத்துக்கொண்டான். அந்தக் காட்சியேதான் பார்த்தார் அவர்களை வரவேற்க வெளியில் வந்த வசந்தன்.
வசத்தன் மட்டுமில்லை அந்தக் காட்சியில் அங்கே இருந்த அனைவரின் கண்களும் நீச்சல் குளமாகதான் மாறிப்போனது.
தகப்பனுடைய இதயத்துடிப்பின் ஓசை அவனிடம் என்ன செய்தி சொன்னதோ, முன்புபோல் திமிறி விலகத் தோன்றாமல் அவனுடைய அணைப்பில் அடங்கியிருந்தான் சரண்.
கையில் ஆரத்தித் தட்டுடன் வேகவேகமாக ஓடி வந்தார் கற்பகம். யாரும் அறியாவண்ணம் வசந்தன் அவரை முறைத்ததையெல்லாம் அவர் கண்டுகொள்ளவே இல்லை. இப்படி சில விஷயங்களில் மட்டும் கணவன் மகள் யாருக்கும் கட்டுப்படமாட்டார் அவர்.
மருமகனையும் பேரனையும் கிழக்கு முகமாக நிற்க வைத்து ஆலம் சுற்றி இருவருக்கும் பொட்டு வைக்க, இதுபோல் விஷயங்களெல்லாம் சமீபமாக அவர்கள் வீட்டில் வழக்கொழிந்து போயிருந்ததால், “இது என்ன பாட்டி” என வியந்த பேரனிடம், "அப்பறமா தாத்தா கிட்டக் கேட்டுத் தெரிஞ்சிக்கோ” என அவருக்குப் பின்னாலேயே வந்து நின்ற துணை வேலை செய்யும் பெண்ணிடம் தட்டைக் கொடுத்தவர், “வாங்க அண்ணா, வாங்க அண்ணி” என வாய் நிறைய அவர்களை வரவேற்று அமர வைத்தார்.
மகனின் தோளில் கைப் போட்டு அணைத்தபடியேதான் வீட்டுக்குள் நுழைந்தான் சூர்யா. அவனுடைய விழிகள் மட்டும் குயிலியைத் தேடித் தவித்தன.
வாய் விட்டுக் கேட்க இயலாமல், ‘யார் தாத்தா இவங்க” எனச் சரண் விழிகளாலேயே கேட்க, ‘கொஞ்சம் வெயிட் பண்ணு’ என மறு மொழி உரைத்தன அவனுடைய தாத்தாவின் விழிகள்.
கவிதையான இந்த உரையாடலை யாரும் கவனிக்காமல் இல்லை. உண்மையில் ருக்மணிக்கு அன்று தான் நடந்துகொண்ட விதத்தால் முதல் பார்வையிலேயே அவர்களுடைய பேரனின் பார்வையில் தாழ்ந்து போனதை எண்ணிக் கேவலமாக இருந்தது.
தங்களுக்கும் இத்தகைய நெருக்கம் அவனிடம் ஏற்பட்டுவிடாதா என ஏக்கமாக இருந்தது.
நேர்த்தியுடன் பராமரிக்கப்படும் பரந்து விரிந்த தோட்டத்தையும் நீச்சல் குளத்தையும் உள்ளடக்கிய அழகான அந்தக் குட்டி பங்களாவையும் வரிசைக்கட்டி நிற்கும் சொகுசு கார்களையும் வீட்டு வேலைக்குத் துணை வேலைகளுக்கு என அங்கே சூழ்ந்திருந்த பணியாளர்கள் சிலரையும் பார்த்தே மலைத்துப்போயிருந்தார் அவர்.
வசந்தகுமாரை நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்த ஒரு பள்ளி ஆசிரியராகவும் அவருடைய ஒரே மகளாகவும் மட்டுமே குயிலியை அறிந்தவர், இன்று ஒரு தொழிலதிபராக அவள் அடைந்திருக்கும் உயரத்தைப் பார்த்து அவரால் வியக்காமல் இருக்க இயலவில்லை.
ஒருவேளை எந்தப் பிரச்சனையும் ஏற்படாமல் நல்லவிதமாக தன் மகனுடன் ஒரு திருமண வாழக்கையை வாழ்ந்திருந்தாள் என்றால் சரணுக்கு அடுத்து இன்னும் ஒரு பிள்ளையைப் பெற்றுக்கொண்டு ஒரு சராசரி குடும்பத் தலைவியாகத் தன்னைப் போலவே ஒரு வாழ்க்கையை அவள் ஓட்டியிருக்கக்கூடும் என்பது உரைக்க அன்று அவர் முனகிய வார்த்தைகள் எவ்வளவு அபத்தமானவை என்று குறுகுறுத்தது அவருக்கு.
'அப்பா என் கூட இல்ல! ஐம் எ சிங்கிள் பேரன்ட் சைல்ட்! அம்மாதான் பிசினஸ் பண்றாங்க!' என அன்று வெகு இயல்பாக அந்தச் சிறுவன் சொன்ன வீரியம் மிக்க வார்த்தைகள் எவ்வளவு எரிச்சலைக் கொடுத்தது அவருக்கு?! அதன் பின் அவர் பெற்றெடுத்த மகனல்லவா இருந்திருக்கிறான்!
ஆனால் குயிலியோ தனித்து நின்று தன் மகனை, அதுவும் இவ்வளவு பண்புடன் வளர்த்திருக்கிறாள். அத்தோடில்லாமல் அவனுக்காக ஒரு குட்டி சாம்ராஜ்யத்தை அல்லவா ஏற்படுத்தியிருக்கிறாள்! அவளைத் தவறாகப் பேச என்ன தகுதி இருக்கிறது தனக்கு எனத் தன்னைத் தானே நிந்தித்தபடி பேச்சற்று சரணையே வெறித்தவண்ணம் அமர்ந்திருந்தார் ருக்மணி.
“எங்க குயிலியைக் காணும்?” எனக் கமலக்கண்ணன்தான் அங்கே குடிகொண்டிருந்த இறுக்கமான அமைதியைக் கலைத்தார்.
“கண்ணா நீ போய் அம்மாவைக் கூட்டிட்டு வா” என சரணை அங்கிருந்து அனுப்பினார் கற்பகம். தான் போய் அழைத்தால் மகள் வருவாளோ மாட்டாளோ என்கிற பயம்தான் காரணம்.
மாடிப் படிகளில் துள்ளிக்கொண்டு ஓடியவன் குயிலியின் அறைக்குள் நுழைந்தான். ஃபார்மல் பேன்ட், முழுக்கை சட்டை அணிந்து தூக்கிப் போட்ட கொண்டையுடன் வழக்கமாக அலுவலகம் செல்லும் பாணியில் தயாராகி தன் உடைமைகளை லாப் டாப் பேக்கில் திணித்துக் கொண்டிருந்தாள்.
“ம்மா... நம்ம வீட்டுக்கு கெஸ்ட் வந்திருகாங்க. உனக்கு தெரியாதா” என்று அவன் கேட்க, “அதுக்குள்ள வந்துட்டாங்களா என்ன?” என வியந்தாள் அவள்.
சரணை நேரில் பார்க்கும் ஆவலில் இரவு முழுவதும் அவர்கள் யாரும் சரியாக உறங்கக்கூட இல்லை என்பதை அவள் அறிந்திருக்க நியாயம் இல்லையே! குளியலறைக்குள் இருந்ததால் சூர்யாவின் கார் வந்த ஓசை கூட அவளுக்குக் கேட்கவில்லை. இல்லையென்றால் அவர்களை வரவேற்க வந்திருப்பாள்.
“எதிரியாவே இருந்தாலும் வீட்டுக்கு வந்தவங்கள வான்னு வாய் நிறைய கூப்பிடணும் கண்ணா. என்ன இருந்தாலும் அவங்க நம்ம மனுஷங்க, நீ இப்படி விட்டேத்தியா நடந்துக்கக் கூடாது” என இதற்கு அப்பாவிடமிருந்து நிச்சயம் கண்டனம் வரும் என்பது விளங்கத் தலையில் தட்டிக்கொண்டாள்.
“ம்மா... அவங்க யார் தெரியுமா? அன்னைக்கு அஞ்சு ஆன்ட்டி கூட ஒருத்தங்க வீட்டுக்குப் போனேன் இல்ல, அங்க இருந்த ருக்மணி அம்மாவும் அந்த தாத்தாவும்தான். அந்தப் பாட்டிதான் அன்னைக்கு என்னை ஏதோ சொல்லித் திட்டினாங்க” என விளக்கமாகச் சொல்லி அவளை அதிர வைத்தவன், “அவங்க நம்ம ரிலேட்டிவா. இன்னைக்கு எதுக்கு நம்ம வீட்டுக்கு வந்திருகாங்க” எனக் கேள்விமேல் கேள்விகளாகக் கேட்டுக்கொண்டே போனான்.
பொறுமையாக மகனை இழுத்து தன் கை வளைவுக்குள் இருத்தியவள், “கண்ணா, அவங்க நம்ம க்ளோஸ் ரிலேடிவ். இன்னும் சொல்லப்போனா நம்ம வசந்த் தாத்தா பேபி பாட்டி மாதிரி அவங்களும் நம்ம ஃபேமிலி. இனிமேல் நீ அதிகம் அவங்க கூட க்ளோசா மூவ் பண்ண வேண்டி வரும். அந்தப் பாட்டி அன்னைக்கு ஏதோ டென்ஷன்ல அப்படி நடந்திருப்பாங்க. அதனால அதையே பேசிட்டு இருக்கக் கூடாது. அவங்க கிட்ட மரியாதையோட நடந்துக்கணும். என்ன புரிஞ்சுதா” என அவள் பாடம் எடுக்க, “ஓகேம்மா” என ஏற்றுக்கொண்டவன், சூர்யா அவனை அணைத்துக்கொண்டது கற்பகம் ஆலம் சுற்றியது என்று அனைத்தையும் சொல்லியபடி அவளது கழுத்தைக் கட்டிக்கொண்டு தொங்கியபடி படிக்கட்டுகளில் இறங்கினான்.
ஆசைத் தீர இருவரையும் பருகின சூர்யாவின் கண்கள். குயிலியின் தோற்றப் பொலிவும் கம்பீரமும் அப்படி ஒரு உவகையைக் கொடுத்தது அவனுக்கு.
அதற்குள் உதவி வேலைக்கு இருக்கும் பெண் எல்லோருக்கும் காஃபி கொண்டுவந்து கொடுத்திருக்க அதைப் பருகியபடி அடுத்து என்ன என்பதாக ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர், யார் சரணிடம் சூர்யாவைப் பற்றிச் சொல்வது என்பதாக.
சரியாக அப்பொழுது, "ஒருத்தர் கொடுத்துட்டு போனாரு மேடம்" என்றபடி காகித உரையால் சுற்றப்பட்ட பார்சல் ஒன்றுடன் அங்கே வந்தார் அவர்கள் வீட்டின் காவலாளி. “சரண் கண்ணா நீ போய் அதை வாங்கிட்டு வா” என குயிலி மகனைப் பணித்துவிட்டு அவளுடைய அப்பாவுக்கு அருகில் போய் அமர்ந்தபடி, “வாங்க மாமா” என கமலக்கண்ணனைப் பார்த்துச் சொன்னவள், மற்றவரிடம் வரவேற்கும் விதமாக தலையசைப்பை மட்டும் கொடுத்தாள்.
சூர்யாவின் பார்வை அவளிடமே நிலைத்திருப்பதை உணர்ந்து, “உங்க ஹெல்த் இப்ப எப்படி இருக்கு” என இயல்பாகக் கேட்க, “மச் பெட்டெர்’ என்றான் தடதடக்கும் இதயத்துடன்.
மகனிடம் தன்னைப் பற்றி என்ன சொல்லியிருப்பாளோ, தான்தான் அவனுடைய அப்பா என்பதை அறிந்தால் அவன் எப்படி நடந்துகொள்ளப்போகிறானோ என்கிற அச்சம் மட்டுமே அவனிடம் மேலோங்கி இருந்தது.
அதற்குள் அந்த பார்சலுடன் சரண் திரும்ப வந்தான், “ஃபோட்டோவாம்மா இது’ என்று கேட்டபடி.
தன் மடியில் அவனை இருத்திக்கொண்டவள், “நீயே பிரி” என்று சொல்ல அவசரமாக அதைப் பிரித்தான் சரண்.
அதில் திருமணக் கோலத்தில் அவனுடைய அம்மா இருக்க அருகில் நின்றிருந்தான் சூர்யா.
அந்தப் புகைப்படத்தையும் தன் அம்மாவையும் சூர்யாவையும் மாறி மாறிப் பார்த்த சரணின் விழிகள் நட்சத்திரமென மின்னின.
புகைப்படத்தில் தன்னைச் சுட்டிக் காண்பித்தவள், “இது யாரு?” என்று கேட்க, “அம்மா” என்றவன், “அப்படினா அது யார்” என்று அவள் கேட்ட நொடி, “அப்பா!” எனக் கூவியபடி தாவிச்சென்று சூர்யாவைக் கட்டிக்கொண்டான் குயிலியின் மகன். சரணின் தந்தை மகனை அணைத்தபடி ஆனந்த அழுகையில் குலுங்கிக்கொண்டிருந்தான்.
சத்தியமாக இப்படி ஒரு தந்தை மகன் அறிமுகத்தை யாரும் எதிர்பார்க்கவில்லை. எல்லோரின் கண்களுமே பனித்திருந்தன.
அனைவரின் பார்வையிலும் சிகரம் போல அங்கே உயர்ந்து நின்றதென்னவோ குயிலி என்கிற பெண் மட்டுமே!
Very impressed ....
Wow what a characterization simply superb
Wow wonderful
ஐயோ superji. குயிலி simply
Awesome Kuyili.. Lot of parenting tips from Kuyili