Valasai Pogum Paravaikalaai - 2
(Hi Friends,
ஒரு முக்கிய அறிவிப்பு.
கீழே Blog Posts பகுதியில் comments Box Activate செய்திருக்கிறேன். இங்கே Comment செய்ய Log In செய்யத் தேவையில்லை. தயக்கமில்லாமல் உங்கள் கருத்துக்களை இங்கேயே நேரடியாகச் சொல்லலாம். )
2 - குயிலி
அப்பா மகன் இருவரும் தட்டை வைத்துக்கொண்டு அமரவும், சுடச்சுடத் தயார் செய்த சிற்றுண்டி மற்றும் அதன் துணையுண்டிகளை உணவு மேசை மேல் கொண்டுவந்து வைத்த அஞ்சு அவர்களுக்குப் பரிமாறத் தொடங்க, நான்கைந்து கவளங்கள் உள்ளே சென்றதும்தான் பெரியவருக்குப் பேச்சே வந்தது. அது கூட சூர்யாவிடம் இல்லை. மூச்சுப் பேச்சில்லாமல் ரசித்து ருசித்துக்கொண்டிருந்தான்.
“அம்மா அஞ்சு, பொங்கலும் சாம்பாரும் அருமைம்மா! சட்னி சான்சே இல்ல. சமையல்ல உன்னை அடிச்சுக்க ஆளே இல்ல போ. ரொம்ப நாள் ஆச்சு இப்படி சாப்பிட்டு” என வெகுவாகப் புகழ்ந்து தள்ளவும் அவளுக்கு ஒரே கூச்சமாகிப்போனது.
“அப்பா... இது உங்க வீட்டுச் சமையல் மெதட்தான? என்ன இருந்தாலும் அம்மாதான சொல்லிக்கொடுத்தாங்க, அதான் உங்க டேஸ்ட்டுக்கு இருக்கு. இதுன்னு இல்ல இந்த அஞ்சாறு வருஷமா முக்கால்வாசி எங்க வீட்டுல நான் செய்யற சமையல் எல்லாமே அவங்க கிட்ட கேட்டுக் கத்துகிட்டதுதான்” என்றாள் உண்மையாகவே.
“ப்ச்... உனக்கு எல்லாத்தையும் சொல்லிக் கொடுத்துட்டு அவ மறந்து போயிட்டா போலிருக்கு. வர வர ருக்கு சமையல் சொல்லிக்கற மாதிரியே இல்ல. வயசாயிடுச்சு இல்லையா. அவளுக்கு உடம்பு வேற ஒத்துழைக்க மட்டேங்குது. இப்பல்லாம் ஏனோதானோன்னுதான் செய்யறா. கேட்டாக்க கிழக் காரியம், இப்படிதான் இருக்கும்னு சூடா பதில் வருது” என அங்கலாய்த்தார் சிகாமணி.
தாயைக் குறைச் சொல்வது பிடிக்காமல், “ப்பா... பாவம்ப்பா அம்மா. இந்த வயசுக்கும் அவங்களுக்கு கிச்சன் வேலைல இருந்து ஒரு சின்ன ப்ரேக் கூட கிடைக்கல. அவங்கள போய் அநியாயமா குறை சொல்றீங்களே” என மகன் அவரைப் பார்த்து முறைக்கவும்,
“அதில்ல சூர்யா, நான் உங்கம்மாவைக் குறையெல்லாம் சொல்லல. அவளால முடியலன்னுதான் வருத்தப்பட்டேன்” என உண்மையில் தன் மன ஆதங்கத்தை வெளிப்படுத்தியவர், “அவ வந்ததும் போட்டுக் கொடுத்துடாதடா. அப்பறம் உள்ளதும் போயிடப்போகுது” எனக் கெஞ்சலில் இறங்க, உண்மையில் அன்னையின் முதுமை நிலை மனதைச் சங்கடப்படுத்தினாலும் அதை வெளிக்காண்பித்துக் கொள்ளாமல், “ஹா... ஹா... உங்களோட இந்தப் பயம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குப்பா” என்றான் சூர்யா இலகுவாகவே.
“ம்கும்... அப்பாவும் பிள்ளையும் இதையெல்லாம் நல்லா வக்கணையா பேசுங்க. ஆனா மறந்தும் கிச்சன்குள்ள மட்டும் நுழைஞ்சிடாதீங்க. ஏம்ப்பா, உங்களுக்குதான் வயசாகிப் போச்சு. சூர்யா சாரையாவது சமையல் கத்துக்கச் சொல்லலாமில்ல” என உரிமையுடன் கடிந்தாள் அஞ்சு.
நிச்சயமாக அவர்கள் அதைத் தவறாக எடுத்துக்கொள்ளமாட்டார்கள் என்பது தெரிந்துதான் மனதில் பட்டதை அப்படியே அவள் கேட்டு வைத்தாள்.
சூர்யா மட்டும், ‘பத்த வெச்சுட்டியே பரட்ட’ என்பதான ஒரு பார்வையை அவளிடம் வீச, அதைக் கவனத்தில் கொள்ளாமல், “என்ன செய்யறதும்மா, என்னோட அம்மா காலம் வரைக்கும் எங்களோடது ஒரு கூட்டுக் குடும்பம்தான். உன் ருக்கு அம்மா, என்னோட அண்ணி, தம்பிப் பொண்டாட்டின்னு மாறி மாறி கிச்சன பிடிச்சுக்கன்னு வீட்டுல பொம்பளைங்க இருந்தாங்க. ஒரு டம்ளர் தண்ணி வேணும்னாலும் இருக்கற இடம் தேடி வரும். இந்த விஷயத்துல ஏதாவது சொல்றதுன்னா எங்க அம்மாவைதான் சொல்லணும். அதை செய் இதை செய்ன்னு மருமகளுங்கள மட்டும் ஓட ஓட விரட்டினவங்க பிள்ளைகள கிச்சன் உள்ளயே நுழைய விடாம செஞ்சாங்க. பிள்ளைகளுக்கே இந்த ப்ரிவிலேஜ்ன்னு சொன்னா, பேரனைப் போய் சமையல் செய்ய விடுவாங்களா என்ன? ஹ்ம்ம்... சொல்லப்போனா இவன் காலேஜ் போற வரைக்கும் எங்கம்மாதான் இவனுக்குச் சாப்பாட்டை ஊட்டி விடுவாங்கன்னா பார்த்துக்கோ. அப்ப புரியலம்மா இந்தக் கஷ்டமெல்லாம். இப்பதான் ரொம்ப கொடுமையா இருக்கு. இவனோட வேலை வேற ஒரு நேரம் காலம் இல்லமா இருக்கா, இப்ப அவனால உள்ள புகுந்து செய்ய முடியல. பர்மனன்ட்டா ஆள் போட்டுக்கலாம்னா உன்னைத் தவிர வேற யார் வந்து சமையல் செஞ்சாலும் செட் ஆக மாட்டேங்குது” என நீண்ட விளக்கம் கொடுத்தார் பெரியவர்.
“ப்ச்... தங்கம் இருக்கா இல்லப்பா, அவங்க வீட்டுலயும் இதே கதைதான். ஆம்பளைங்க சமையல் கட்டுக்குள்ள போனாலே அது அவங்களுக்கு கவுரவ குறைச்சல். எங்க அப்பாவுக்குக் கூட இதெல்லாம் வராது. ஆனா என் வீட்டுக்காரு இந்த வெட்டி பந்தாலாம் பண்ணாம நல்லா வீட்டு வேலையெல்லாம் செய்வாரு” என அவள் சொல்லிக்கொண்டே போக, உணவைத் தவிர வேறு கவனமே இல்லாததுபோல உட்கார்ந்திருந்தான் சூர்யா.
“ஆங்... தங்கம்ன்னு சொல்லவும்தான் ஞாபகம் வருது. அந்தப் பொண்ணு இப்ப எப்படிம்மா இருக்கு. வேலையெல்லாம் எப்படி போய்ட்டு இருக்கு? அவ குழந்தை மேகலா கூட இப்ப பத்தாவது வந்திருப்பா இல்ல?” எனப் பெரியவர் அக்கறைத் ததும்பக் கேட்டார்.
“ஆமாம்ப்பா, கரக்ட்டு... மேகலா பத்தாவதுதான் படிக்குது. இப்ப வேலை செய்யற இடம் கூட பிரச்சனை இல்லாம பாதுகாப்பானதா இருக்குன்னு தங்கம் அடிக்கடி சொல்லிட்டே இருக்கும். அதுல வர சம்பளத்தை வெச்சிட்டு ஓரளவுக்கு அவளால மேனேஜ் பண்ண முடியுது. அதுக்காக அவ உங்களுக்கு மனசால நன்றி சொல்லாத நாளே இல்ல” என நெகிழ்ந்தவள்,
“பாப்பாவை ப்ளஸ் ஒன் சேர்க்கும்போதுதான் கொஞ்சம் நெருக்கடி ஆகும் போலிருக்கு. பார்க்கலாம் ம்ம்... ஏதோ நீட் கோச்சிங் வேற சேர்க்கணும்னு சொல்லிட்டு இருந்தா. பாவம் பணத்துக்கு என்ன செய்யப