top of page

Valasai Pogum Paravaikalaai - 19

19.தத்தை தூது!


அஞ்சுவால்தான் நடந்த எதையுமே நம்பவும் முடியவில்லை நம்பாமல் இருக்கவும் இயலவில்லை. தங்கத்திடம் சொல்லிச் சொல்லி அதிசயித்துப் போனாள். தங்கமும் கூட அதே மனநிலையில்தான் இருந்தாள்.


விடுமுறை நாள் என்றால் சரண் அவர்கள் வீட்டுக்கு வருவது அல்லது லட்சுமி அவன் வீட்டுக்குச் செல்லுவது என வாடிக்கையாகி இருந்தது. அந்த வழக்கப்படி சூர்யாவுக்கு மாரடைப்பு ஏற்பட்ட அன்று காலை கல்யாணிதான் லக்ஷ்மியை குயிலியின் வீட்டில் கொண்டு போய் விட்டுவிட்டு வந்திருந்தாள்.


சிறிது நேரம் கடந்து கைப்பேசியில் அவளை அழைத்த குயிலி பிள்ளைகளை தன்னுடன் சரணாலயத்துக்கு அழைத்துச் சென்றிருப்பதாகவும், ஒரு முக்கிய விஷயம் பேச வேண்டும் அதனால் சீனுவையும் அழைத்துக்கொண்டு நேரே அங்கே வருமாறும் சொல்லித் துண்டித்தாள். வேலைகளையெல்லாம் முடித்துக்கொண்டு பஸ் பிடித்து சீனுவுடன் அவள் அங்கே போய் இறங்கும் போது மணி மூன்றாகியிருந்தது.


ரிசப்ஷனில் போய் விசாரிக்க, அவசர வேலையாக குயிலி எங்கோ சென்றுவிட்டதாகவும் அவர்கள் வந்தால் பிள்ளைகளை அவளுடன் அனுப்புமாறு சொல்லிவிட்டுப் போனதாகவும் சொன்னார்கள். அதைத்தவிர வேறு எந்த தகவலும் அவளிடம் சொல்லப்படவில்லை.


குழந்தைகள் இருவரும் ஜோதிம்மாவின் பொறுப்பில் இருக்க அவர்களை வீட்டில் விட ஓட்டுநரும் தயாராகக் காத்திருந்தார்.


வீடு திரும்பும்போது மாலையாகிவிட்டிருந்தது. அப்பொழுது அவளை அழைத்த சிகாமணி, உடல்நிலை சரியில்லாமல் சூர்யாவை மருத்துவமனையில் அனுமதித்திருப்பதைச் சொல்ல, “ஐயோ, என்னாச்சுப்பா?” எனப் பதறினாள் அவள். “மைல்ட் அட்டாக்ன்னு சொல்றாங்கம்மா. பயப்படத் தேவை இல்லன்னு சொல்லிட்டாங்க. ஆஞ்சியோ பண்ணனுமாம். நானும் ருக்குவும் இங்கதான் ஹாஸ்பிட்டல்ல இருக்கோம். பதட்டத்துல எல்லாத்தையும் போட்டது போட்டபடி வந்துட்டோம்மா. செக்யூரிட்டி கிட்ட சாவி கொடுத்திருக்கேன். வாங்கி வீட்டைக் கொஞ்சம் சரி பண்ணி வைம்மா” என்றார் தளர்ந்த குரலில்.


அவரிடம் ஆதரவாகப் பேசி அழைப்பைத் துண்டித்தவளுக்குப் பிறகு ஒன்றுமே ஓடவில்லை. அவர் சொன்னதுபோல வீட்டில் போய் பார்க்க மின் விசிறிகள் கூட அணைக்கப்படவில்லை. சமையல் மேடையில் பாத்திரங்களெல்லாம் திறந்தே கிடக்க, சரியாக மூடப்படாமல் சிங்க் குழாயில் தண்ணீர் கொட்டிக்கொண்டிருந்தது. என்னதான் பண வசதி இருத்தலும் வயோதிக காலத்தில் துணைக்கு ஆளில்லை என்றால் அவர்கள் பாடு திண்டாட்டம்தான் என்று எண்ணிக்கொண்டாள்.


இளவயது பிள்ளை அவர்களைக் கவனிப்பது போய் முதுமையில் ஒரே பிள்ளையை அவர்கள் கவனிக்கும் நிலை வந்துவிட்டதே என மிகவும் வேதனையாக இருந்தது.


இரவு முழுவதும் அவளுக்கு உறக்கமே வரவில்லை.


அடுத்த நாள் ஒரு ஹார்லிக்ஸ் பாட்டிலை வாங்கி எடுத்துக்கொண்டு தங்கத்திடம் தகவலைச் சொல்லி அவளையும் உடன் சேர்த்துக்கொண்டு மருத்துவமனை நோக்கிக் கிளம்பிவிட்டாள்.


அங்கே போய் பார்த்தால் குயிலியும் அங்கே இருக்கிறாள். அவள்தான் சூர்யாவின் மனைவி எனக் கிசுகிசுக்கிறார் ருக்மணி. மயக்கம் வராத குறைதான் இருவருக்கும். அஞ்சுவுடன் தங்கத்தையும் அங்கே பார்த்ததும் குயிலிக்குதான் கொஞ்சம் சங்கடமாகிப்போனது.


சட்டென சமாளித்துக்கொண்டு தோழியரை எதிர்கொண்டாள். அவர்களுக்கும் சூர்யாவின் குடும்பத்துக்குமான தொடர்பைக் கதை கதையாகச் சொல்லி முடித்தாள் அஞ்சு. அதுவும் அவள் அன்றைய நிலையை எண்ணி பரிதாபத்துடன் இருவரும், ‘ம்ப்ச் பாவம் சூர்யா சார்! ம்ப்ச்... பாவம் அவரோட அப்பா அம்மாவுக்கு இந்த வயசான காலத்துல இவ்வளவு கஷ்டம் வேண்டாம்’ என அதிகமாக உச்சுக் கொட்ட, ‘இருப்பவர்கள் போதாது இனி இவர்கள் இருவரையும் வேறு சமாளிக்க வேண்டி வருமோ?’ என்ற எண்ணத்தில் ‘ஷ்... அப்பா’ என குயிலிக்குக் கண்களைக் கட்டியது.


அறைக்குள் சென்று சூர்யாவைப் பார்த்துவிட்டு வந்த பிறகு அஞ்சுவும் சரி தங்கமும் சரி கண் கலங்கிவிட்டனர். குயிலியாகட்டும் சூர்யாவாகட்டும் இருவரைப் பற்றியுமே நன்றாகத் தெரியும் என்பதால் இருவரும் இணைந்து வாழவில்லையே எனக் கழுத்து மட்டும் குறையாகிப் போனது இருவருக்குமே.


இப்படி ஒரு விஷயத்தைக் கேள்விப்பட்டதும், அலுவலக வேலையை அப்படியே பாதியில் விட்டுவிட்டு வந்திருந்தாள் தங்கம். அதனால் அவள் உடனே கிளம்பிவிட, பின்னோடே குயிலியும் கிளம்பிவிட ருக்மணிக்குத் துணையாக அஞ்சு மட்டும் அங்கேயே இருந்தாள்.


அஞ்சுவும் தங்கமும் குயிலியின் உயிர்த்தோழிகள் எனத் தெரிந்த பிறகு ருக்மணி நடந்து முடிந்த அனைத்தையும் தன்னுடைய பார்வையிலிருந்து குயிலியிடம் புலம்பித் தீர்த்தார். அதாவது அவனுடைய பழைய காதலால் குயிலிக்கும் சூர்யாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அதனால்தான் பிரிந்தனர். அவன் காதலித்தப் பெண்ணையே மீண்டும் மணந்துகொண்டு அதிக துன்பம் அனுபவித்துவிட்டான் என்று கூறினார்.


ஏதோ கெட்ட நேரம், நடந்தது நடந்துவிட்டது! அந்தப் பெண் மமதியும் இப்பொழுது சூர்யாவின் வாழ்க்கையில் இல்லை, அவள் பெற்ற குழந்தையும் இல்லை! இனிமேலாவது குயிலி அவனுடன் சேர்ந்து வாழலாமே என்ற எண்ணம் தோன்றிவிட்டது அஞ்சுவுக்கு.


*********


சூர்யா மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பி ஓரிரு நாளில் எல்லோரும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிய பின் குயிலியின் வீட்டுக்கு வந்திருந்தாள் அஞ்சு. வரவேற்பறை சோஃபாவில் கையில் காஃபி குவளையுடன் குயிலிக்கு எதிரில் அமர்ந்திருந்தவள், சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிப் புலம்பிக்கொண்டிருந்தாள்.


“அது எப்படிடீ குக்கூ?!”


“ஏய் மறுபடியும் முதல்ல இருந்து வரியாடி?”


“இல்ல... அஞ்சு இல்ல ஆறு வருஷமா சூர்யா சார் குடும்பம் எனக்குப் பழக்கம். அடிகடி அவங்க வீட்டுக்குப் போயிட்டு வந்துட்டு இருக்கேன். ஆனாலும் அவருதான் உன் வீடுக்கார்ன்னு எனக்கு தெரியவே இல்ல பாரேன்!”


“பெரிய உலக அதிசயம் பாரு, விடுடீ”


“அது இல்லடி, குக்கூ, சூர்யா சார் ரொம்ப நல்லவர்டீ... பாவம்”


“அதுக்கு என்னடீ இப்ப?” எனக் கடுப்பானாள் குயிலி.


அங்கே வந்தது முதலே இதே பேச்சுதான். ‘அவனுடன் சேர்ந்து வாழு’ என்பதைதான் இப்படியெல்லாம் சுற்றி வளைத்துச் சொல்ல முயன்றுக் கொண்டிருந்தாள்.


குயிலி இப்படி குரலை உயர்த்தவும், “ஹி... ஹி... அதில்லடி, அவர் மட்டும் இல்ல அவங்க அம்மா அப்பா ரெண்டு பேருமே ரொம்ப நல்லவங்க. பாவம்... வீட்டுல பொறுப்பா ஒரு மருமக இல்லாம ரொம்பவே கஷ்ட படறாங்க” என அவர்களுக்காக வக்காலத்து வாங்கியவளை முறைத்தவள்,


“அவரோட அம்மா அப்பா மட்டுமில்ல அஞ்சு, பெரியப்பா, சித்தப்பா, பாட்டி, வீட்டுல இருக்கற நண்டு சிண்டுங்க கூட ரொம்ப நல்லவங்கதான். நான் தான் ரொம்ப கெட்டவ” என அவள் சலனமே இல்லாமல் சொல்ல, நொந்தே போனாள் அஞ்சு.


“மவளே கொன்றுவேன்” என அவள் குயிலியைப் பிடித்து உலுக்க, “பின்ன என்னடி எரும? என்னவோ எனக்கே அவங்கள பத்தி கதை சொல்லிட்டு இருக்க!” என அவள் கிண்டலாகக் கேட்க,


“பழசையெல்லாம் மறந்துட்டு கொஞ்சம் யோசிச்சு முடிவெடுன்னு சொல்ல வரேன். சரணுக்கு அப்பா மட்டும் இல்ல, உனக்கும் ஒரு துணை தேவை” என அவள் சொல்லி முடிக்கவில்லை, “என்னாது எனக்கு துணையா! மவளே கொன்றுவேன்... எனக்கு எந்தத் துணையும் தேவை இல்ல போடீ! என் பிள்ளையையே, என்னைக் கடைசி வரைக்கும் வெச்சு கஞ்சி ஊத்தும்னு சுயநலமா நினைச்சு பெத்துக்கல தெரியுமாடி! துணையாம் துணை! யாரும் யாருக்கும் எல்லா நேரத்துலயும் துணை நிற்க முடியாது, தெரிஞ்சிக்கோ. என்னோட செல்ஃப் கான்ஃபிடன்ஸ் இருக்கு இல்ல அது மட்டும்தான் எனக்குத் துணை. மறுபடியும் இந்த மாதிரி பாட்டி காலத்து டயலாக் எல்லாம் பேசிட்டு என் கிட்ட வராத என்ன” என எகிறினாள் குயிலி.


“ஐயோ! உன்னைப் பத்தி நியாபகமில்லாம பழைய குயிலின்னே நினைச்சு சொல்லிட்டேன் தாயே! மன்னிச்சிக்கோ. நீ ஒரு அதிசயப் பிறவி. உனக்கெல்லாம் துணைத் தேவையில்ல, ஒத்துக்கறேன்! இப்ப மறுபடியும் கரக்டா சொல்றேன் பாரு!


எங்க சூர்யா சார் இருக்காரு இல்ல சூர்யா சார் அவருக்குதான் உன்னை மாதிரி ஒரு துணைக் கண்டிப்பா வேணும். உங்களுக்குள்ள என்ன நடந்துதோ எனக்குத் தெரியாது! ஆனா அவரு ரொம்ப பாவம்டீ. எனக்கு தெரிஞ்ச வரைக்கும் அவருக்குக் கோபமே வராது. சத்தமா பேசக்கூட மாட்டாரு அந்த அளவுக்கு மனுஷன் சரியான சாது.


நாற்பது வயசுக்கு மேல ஆகியும் ஏன் இப்படி ஒண்டிக் கட்டையா இருக்காரு? எந்தப் பொண்ணா இருந்தாலும் இவங்க வீட்டுக்கு வாக்கப்பட்டு வரக் கொடுத்து வெச்சிருக்கணும்னு நானே எத்தனையோ தடவ ஃபீல் பண்ணியிருக்கேன் குயிலு!” என அஞ்சு அடுக்கிக்கொண்டே போக,


“உன்னோட ஃபீலையெல்லாம் கொண்டு போய் வெள்ளாவி வெப்பீங்க இல்ல அதுல போட்டு வெளுத்து எடுத்து காய வை, போடீ...” எனப் படபடத்தவள், பதில் பேச முடியாமல் அவள் உருத்து விழிக்கவும், “எங்க, என்ன பார்த்தால் ரொம்ப கொடுத்து வெச்சவ மாதிரியா தெரியுது உனக்கு. லூசு, சமயத்துல இந்த சாது சாமியாருங்களைதான் நம்பவே முடியாது.


அம்மா பாட்டின்னு யார் பின்னாடியாவது நின்னுட்டுதான் வாழ்கையை கிராஸ் பண்ணுவாங்க. இவங்களையெல்லாம் நம்பி பின்னால போனோம் வை, கூட ட்ரேவல் பண்றவங்களுக்கு டோட்டல் டேமேஜ்தான்” என சலிப்பாகி,


“எங்களுக்குள்ள என்ன நடந்ததுன்னு எங்க அப்பாவைத் தவிர நான் வேற யார் கிட்டயும் சொல்லல அஞ்சு. ஏன் எங்க அம்மா கிட்ட கூட சொல்லல. இனிமேலும் கூட, உன்கிட்டன்னு இல்ல வேற யார் கிட்டயும் சொல்லவும் மாட்டேன். இப்போதைக்கு சரணுக்கு அவரை அடையாளம் காண்பிக்கணும் அவ்வளவுதான். மத்தபடி அவர் கூட சேர்ந்து வாழற ஆசையெல்லாம் எனக்கு இல்ல. அப்படி ஏதாவது நடக்கணும்னா என் மனசு மாறணும், அது தானா இயல்பா நடக்கணும். இதெல்லம் புரிஞ்சிக்காம நீ எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல இந்தப் புறா வேலையெல்லாம் பார்த்துட்டு இருந்தன்னு வை, உன்னை உரிச்சு சூப்பு வெச்சிடுவேன்” என மிரட்டலாகச் சொல்லி முடிக்க,


“யெம்மா தாயே, எனக்கு எதுக்கு வம்பு! நீயாச்சு உன் வீடுக்காராச்சு,ஆளை விடு தாயே” எனக் கோப முகம் காட்டிப் பின்வாங்கினாள் அஞ்சு.


அவர்கள் குடும்பத்தின் நிலை அறிந்ததால், அதுவும் சூர்யாவை அவளுக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் வீடு தேடி வந்து தோழியிடம் அவனுக்கு வக்காலத்து வாங்கி அவளிடம் வாக்குவாதம் செய்துகொண்டிருக்கிறாள்.


அவளுடைய உணர்வுகள் புரிந்தாலும் தன் நிலையிலிருந்து இறங்கி வர மனமில்லை குயிலிக்கு.


“ஏய் இதையெல்லாம் கொஞ்சம் ஃப்ரீயா விடு. உன் கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்னு இருந்தேன். இந்தக் குழப்பத்துல மறந்தே போச்சு. இங்க வெச்சு பேசறத விட ஹோட்டல்ல வெச்சு பேசினாத்தான் உனக்குத் தெளிவா புரியும். சீனு அண்ணாவும் கண்டிப்பா கூட இருக்கணும். ஸோ, நாளைக்கு ஈவினிங் சரியா நாலு மணிக்கு அங்க இருக்கற மாதிரி வந்துடு” என்று குயிலி சொல்ல உதட்டைக் கோணியவள், “வரலன்னா, என்னை விட்டுடுவியா நீ” என்றாள் அஞ்சு நக்கலாக.


“அதான் உனக்கே தெரியுது இல்ல, மரியாதையா வந்துசேரு” என அதைவிட நக்கலாக அவளுக்குப் பதில் கொடுத்தாள் குயிலி.


தாத்தா பாட்டியுடன் வெளியில் எங்கோ சென்றிருந்த சரண் துள்ளிக் குதித்தபடி உள்ளே நுழைந்தான். அங்கே அஞ்சுவைக் கண்டவன், மேலும் குதூகலமாகி, “ஐ, அஞ்சு ஆன்ட்டி, நீங்களே இங்க வந்துட்டீங்களா. இருங்க இதோ வரேன்” என மீண்டும் வாயில் நோக்கி ஓட கையில் பைகளுடன் வந்துகொண்டிருந்த தாத்தாவின் மீதே மோதி நின்றான்.


அதே நேரம், “எப்பம்மா வந்த” என அஞ்சுவை விசாரித்தபடி மெதுவாக நடந்து வந்து சோஃபாவில் அமர்ந்தார் கற்பகம்.


அதற்குள் தாத்தாவின் கையிலிருந்தப் பைகளைப் பறித்து வந்தவன் தேநீர் மேசை மேல் வைத்து சில உடைகளைத் தேடி எடுத்து, தனியாக ஒரு பையில் போட்டான். குயிலி அவனையே பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்து, நல்லப் பிள்ளையாக அதை அஞ்சுவிடம் கொடுக்கும்படி ஜாடை செய்து தாத்தாவிடம் நீட்டினான்.


“நீதான வாங்கின, நீயே கொடு” என வசந்தன் புன்னகைக்க, ஆர்வமாக அவளிடம் நீட்டினான், “ஹாப்பி ஆனிவர்சரி ஆன்ட்டி” என்றவாறு.


அதைக் கையில் வாங்கியவளுக்கோ வியப்பு தாங்கவில்லை.


“எப்படிடா தெரியும்?” என அவள் தழுதழுக்க, “லச்சு சொன்னா ஆன்ட்டி” என்றான்.


“பாருடீ இவன, என் கிட்ட கூட ஒரு வார்த்தை சொல்லல! பாட்டி தாத்தாவை கரக்ட் பண்ணி ஷாப்பிங் போயிருக்கான்” என நொடித்த குயிலி, “சர்ப்ரைஸ்ம்மா... சர்ப்ரைஸ்” என அவன் ஆர்ப்பரிக்க, “ஹேய், நீ வீட்டுக்குப் போய் சமையல் செய்யாத, வண்டலூர் பிராஞ்ச்ல சொல்லி வைக்கறேன், நாலு பேரும் நேரா அங்கப் போய் பிடிச்சதெல்லாம் ஆர்டர் பண்ணி சாப்பிடுங்க. இன்னைக்கு சரணோட ட்ரீட்” என்றாள் குயிலி தோழியை அணைத்தபடி.


சரணின் கன்னத்தை வழித்து முத்தம் கொடுத்தவள், “தேங்க்ஸ்டா கண்ணு, இந்த இருபது வருஷத்துல இப்படி ஒரு வெட்டிங் டேவ நான் கொண்டாடினதே இல்ல. தேங்க்ஸ் டீ குயிலு. தேங்க்ஸ் சார், தேங்க்ஸ் மா’ என்று திரும்பத் திரும்ப சொல்லி அதற்கு குயிலியிடம் நன்றாக வாங்கியும் கட்டிக்கொண்டு கண்களில் கண்ணீர் திரையிட நெகிழ்ச்சியுடன் அங்கிருந்து கிளம்பினாள் அஞ்சு.


வீட்டிற்குப் போய் பார்க்க, அவளுக்குப் புடவையும் பிள்ளைகள் இருவருக்கும் ஃபுல் ஃப்ராக்கும் சீனுவுக்கு ரெடி மேட் பேன்ட் சட்டையுமாக அவர்கள் நான்கு பேருக்குமே புத்தாடைகள் இருந்தன. பிள்ளைகள் இருவருக்கும் அப்படி ஒரு மகிழ்ச்சி. அதுவும் லக்ஷ்மிக்குப் பிடித்த நிறத்தில் அவளது உடை இருக்கவும் உடனே கால் செய்து சரணிடம் நன்றி சொல்லி செல்ஃபோனை அக்காவிடம் நீட்ட அவர்களுடைய உரையாடல் நீண்டுகொண்டே போனது.


அடுத்த நாள் இதை விட மிகப்பெரிய அதிர்ச்சி, ஆச்சரியம், ஆனந்தம் எல்லாமே காத்திருந்தது அவளுக்குச் சரணாலயத்தில்! ஆனால் அதை ஏற்கதான் அஞ்சு தயாராகவே இல்லை! காரணம்?


*********

1 comment

1 Comment

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
Sumathi Siva
Sumathi Siva
Sep 07, 2022

Wow awesome.kuili made some jobs for them.

Like
© KPN NOVELS COPY PROTECT
bottom of page