top of page
Writer's pictureKrishnapriya Narayan

Valasai Pogum Paravaikalaai - 18

18.மீண்டும் சூர்யா!


அரை மயக்க நிலையிலும் கூட, பிரிந்து பல வருடங்கள் ஆனப் பின்னும் கூட தன்னை உணர்ந்து ஆதரவுக்காக அவன் நீட்டிய கரத்தைத் தட்டி விடும் அளவுக்கு இறக்கமற்றவளாக வளர்க்கப்படவில்லை குயிலி.


அதேபோல பிடித்த அவளது கரத்தை விடத் தயாராகவே இல்லை அவன் என்பதை உணர்ந்து மனது கேட்காமல் அவனுடன் ஆம்புலன்சில் ஏறி அமர்ந்தாள்.


அவனுடன் வேலை செய்பவர்களெல்லாம் அவள் யார் என்னவென்று புரியாமல் திகைத்திருக்க, அவள்தான் அந்தக் குழுமத்தின் அதிபர் என்பது தெரியவரவும் அவர்களுடைய வியப்பு மேலும் அதிகமானது.


அவனுடன் வேலை செய்யும் ஆண்கள் ஒரு சிலர் மட்டும் காரில் அந்த ஆம்புலன்சைப் பின்தொடர, மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தனர்.


அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைகள் தொடங்கப்பட்டிருக்கப் பணம் செலுத்திவிட்டு அங்கே போடப்பட்டிருந்த இருக்கையில் வந்து உட்கார்ந்தாள் குயிலி.


சரணாலயத்திலிருந்து கிளம்புவதற்கு முன்பே யாரோ ஒருவர் அவனுடைய அப்பாவுக்குத் தகவல் சொல்லியிருக்க, ருக்மணியும் அவருமாகப் பதறியடித்து அங்கே வந்தனர்.


அந்தப் பத்துப் பதினோரு வருடங்களில் முதுமை அவர்களிடம் தன் தடத்தை வெகு மோசமாகப் பதிய வைத்திருக்க அதுவும் மகனது நிலைமை அறிந்து ஆற்றுவாரில்லாமல் தளர்ந்துபோய் அங்கே வந்த அவர்கள் இருவரையும் சுத்தமாக அடையாளம் தெரியவில்லை குயிலிக்கு.


அவளுக்கு அருகில் நின்றுகொண்டிருந்த அவனது நண்பர் ஒருவர் அவர்களை நோக்கிப் போகவும்தான் அவளுக்கு அவர்கள் யார் என்பதே உரைத்தது.


அதேபோல் அவர்களிருந்த மனநிலையில் அவர்களும் அவளைக் கவனிக்கவில்லை.


“பயப்படாதீங்க, மைல்ட் அட்டாக்தான்னு சொல்லியிருகாங்க. ட்ரீட்மென்ட் எடுத்தா சரியாகிடும். இபோதைக்கு டெஸ்ட் எல்லாம் எடுத்துட்டு இருக்காங்க” என அவர் அவர்களை அமைதிபடுத்த, தன்னைத் தேற்றிக்கொண்டவராக, “கேஷ் எடுத்துட்டு வந்திருக்கேன். எங்க பணம் கட்டணும்” என்று கேட்டார் மாசிலாமணி.


“இபோதைக்கு இந்த மேடம் கட்டிட்டாங்க. மேற்கொண்டு ஹாஸ்பிட்டல்ல அவங்க சொல்லும்போது கட்டினா போதும்” என அவர் சொல்லவும் திரும்பிக் கேள்வியாக அவளை நோக்கினர் இருவரும்.


பழகிய முகமாகத் தெரிகிறதே! யார் இவள்? குயிலி போல் தோன்றுகிறதே! அவள்தானா? அல்லது அவளைப்போல் வேறு யாருமா? கடவுளே! இவளை நேரில் பார்த்ததால்தான் மகனுக்கு மாரடைப்பு வந்துவிட்டதோ?! என்பதாக அவர்கள் அதிர்ச்சியுடன் அவளையே பார்த்திருக்க, அவள் குயிலிதான் என்பது விளங்கவும் உணர்ச்சிவசப்பட்டுப் போனார் ருக்மணி.


‘நீ எங்க இருந்துடீ இப்ப திடீர்ன்னு குதிச்சு வந்த?’


‘ஏதோ எங்களுக்காகவாவது கொஞ்சம் நஞ்சம் நல்லபடியா நடமாடிட்டு இருந்தான். அவனை மொத்தமா படுக்க வெச்சிட்டியே!’


‘தெரிஞ்ச குடும்பத்துப் பொண்ணு, குழந்தைல இருந்தே பார்த்துட்டு இருக்கோம்! அவன் கூட நல்லபடியா குடும்பம் நடத்துவன்னு நம்பிதான உன்னை எங்கப் பிள்ளைக்குக் கட்டி வெச்சோம். மூணு மாசம் கூட நல்லபடியா வாழாம அவனை நட்டாத்துல விட்டுட்டுப் போயிட்டியே’


‘உனக்கு என்ன தியாகின்னு நினைப்பா?’


‘நீ மட்டும் இடம் கொடுக்காம இருந்திருந்தா... அந்தக் கொலைகாரிங்க கிட்ட சிக்கி நாங்க இவ்வளவு தூரம் சின்னாபின்னப்பட்டுப் போயிருக்க மாட்டோமே’


என அவளை உண்டு இல்லை என்று செய்துவிட்டார்.


தெய்வசிகாமணியும் கூட சற்று நிலைதடுமாறிப் போயிருக்க, மனைவியைக் கட்டுப்படுத்தவே இயலவில்லை அவரால்.


பொது இடம், அதுவும் மருத்துவமனை, அவரும் பிள்ளையின் உடல் நிலையை எண்ணி மன உளைச்சலில் இருக்கிறார் எனத் தன்னால் ஆனவரை சுமுகமாகப் பேச முயன்று முடியாமல் போக, அடுக்கடுக்காக அவள் மீது அவர் வைத்த குற்றச்சாட்டுகளில் குயிலிக்கு எரிச்சலாகிப்போனது.


“அன்னைக்கும் சரி இன்னைக்கும் சரி துணிஞ்சு எந்த ஒரு முடிவும் எடுக்க திராணியில்லாம, உண்மையை நேருக்கு நேர் சந்திக்கற அளவுக்கு மனவலிமை இல்லாம உங்கப் பிள்ளைதான் முதுகெலும்பு இல்லாம நடந்துட்டு இந்தளவுக்கு இழுத்து விட்டுட்டு இருக்கார். அவரோட எல்லாப் பிரச்சனைக்கும் அவரோட கோழைத்தனம் மட்டும்தான் காரணம். ஆனா உங்கப் பிள்ளையை விட்டுட்டு நீங்க என்னைக் குறைச் சொல்லிட்டு இருக்கீங்க” என அவள் குரலை உயர்த்தவும், அதற்கு என்ன பதில் சொல்வது என அவர் சற்றுத் தடுமாற, “உடம்பு சரியில்லாம, இந்த நிலைமைல இருக்கற ஒருத்தரைக் குற்றம் சாட்டி என்னைப் பேச வைக்கறீங்க. இனிமேல் நீங்க எது பேசணும்னாலும் உங்கப் பிள்ளை கிட்ட மட்டும்தான் பேசணும். என்னைக் கேள்வி கேட்க உங்களுக்கு எந்த உரிமையும் இல்ல” என அவள் சீற்றமாகச் சொல்லிக்கொண்டிருக்க அதைக் கேட்டபடியே அங்கே வந்தார் வசந்தகுமார். அவள் அனைத்தையும் அவருக்குத் தெரியப்படுத்தியிருக்கவும்தான் அங்கே வந்திருந்தார்.


அவரைப் பார்த்ததும் மேலும் தருமசங்கடமாகிப்போனது சிகாமணிக்கு. அந்தச் சூழ்நிலை ஓரளவுக்குப் பிடிபடவும் இடையில் புகுந்து, “வயசானவங்க கண்ணம்மா, அதுவும் பிள்ளைக்கு உடம்பு சரியில்லாம நொந்து போயிருக்காங்க. அவங்க கிட்டப்போய் உன் கோபத்தையும் வேகத்தையும் காமிப்பியா’ என மகளைக் கடிந்துகொண்டவர், இதமாகப் பேசி இரண்டு பெண்களையும் அமைதிப்படுத்தினார்.


அதன் பின் அவன் ஐ.சி.யுவுக்கு மாற்றப்பட, அவர்களுடைய காத்திருப்பு மணிக்கணக்காக நீண்டது.


அந்த சந்தர்ப்பத்தில் இடையில் நடந்துபோன அனைத்தையும் வசந்தனிடம் சொல்லி ஆற்றாமைத் தீரப் புலம்பி முடித்தனர் சிகாமணியும் ருக்மணியும்.


இப்படியெல்லாம் கூட மனிதர்கள் இருப்பார்களா என வியப்பாக இருந்தது தந்தைக்கும் மகளுக்கும்.


எப்பொழுதுமே, குடும்பத்துக்குள் மற்ற அனைவரைக் காட்டிலும் கமலக்கண்ணனிடம் அதிக நெருக்கம் உண்டு சூர்யாவுக்கு. அதுவும் அவருடைய மகள் மூலமாகவே அவனுக்கு குயிலியின்மேல் உண்டாகியிருந்த விருப்பம் தெரியவர, அவனை நேரடியாகக் கேட்டு அவன் தெளிவான முடிவைச் சொன்னப் பிறகுதான் அந்தத் திருமணப் பேச்சையே எடுத்தார் அவர்.


ஆனால் அவளை விவாகரத்து செய்து மீண்டும் அவன் மமதியை மணக்கவும், மகள் போல பாவித்து வந்த ஒரு பெண்ணுக்கு அவன் அநீதி இழைத்திருக்க, ஒரு உண்மையான நட்பை வேறு இழக்க நேரிட, தன் மூத்த மகனாக எண்ணியிருந்தவனை வெறுத்தேவிட்டார். மகனை விட்டுக்கொடுக்காமல் அவன் பக்கம் நிற்கும் அண்ணனும் அவருக்கு எதிரியாகிப் போனார்.


இந்த விஷயத்தில் அவர்களுடைய மூத்த அண்ணனும் கமலக்கண்ணன் பக்கமே நின்றார். பாட்டி உயிரோடிருந்தவரை எல்லோரையும் ஏதோ இழுத்துப் பிடித்து வைத்திருந்தார். அதன் பின் விரிசல் சற்று அதிகமாகிப் போய் கூட்டுக் குடும்பம் உடைந்தது.


மமதியுடனான விவாகரத்துக்காக அதிகம் பணம் தேவைப்பட, சொத்துக்களைப் பிரிக்கும் சூழ்நிலை உண்டாகி, அதைக்கொண்டே அண்ணன் தம்பிகளுக்குள் நிரந்தரப் பிரிவு ஏற்பட்டுப் போனது.


ஏதாவது முக்கிய விழாக்கள் திருமணங்கள் என நேரில் பார்த்துக்கொண்டால்தான் உண்டு. மற்றபடிச் சரியானப் போக்குவரத்தும் இல்லை.


சிகாமணி சொன்ன அனைத்தையும் கேள்விப்பட்டு மனம் வருந்தினாலும் சற்று நிதானமாகச் சிந்தித்தவர், அவரிடமே தொடர்பு எண்ணை வாங்கி கமலக்கண்ணனை அழைத்தார்.


அவனுடைய பெரியப்பா, பெரியம்மா, சித்தப்பா, சித்தி, உள்ளூரிலுள்ள அவனுடைய சகோதரிகள் இருவர் அவர்களுடைய கணவன்மார்கள் என சில நிமிடங்களிலேயே அவர்களுடைய மொத்த குடும்பமும் அங்கே திரண்டுவிட்டனர்.


சூர்யாவின் இப்படிப்பட்ட நிலை அவர்கள் எல்லோருடைய எல்லா கோபதாபங்களையும் பின்னுக்குத் தள்ளிவிட்டது என்பதுதான் உண்மை.


சரணைப் பற்றியும் எல்லோருக்கும் சொல்லப்பட்டுவிட்டது. ஆனால் இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் ஒரு நோயாளியாக அவனுடைய தந்தையை அவனுக்கு அறிமுகப்படுத்தினால் அது அவனுடைய மனதை அதிகம் பாதிக்கும் என்பதால் அவனை அங்கே அழைத்துவர முற்படவில்லை வசந்தன்.


மற்றபடி, அவன் அறைக்கு மாற்றப்பட்ட பிறகு தன் எல்லா வேலைகளையும் தள்ளி வைத்துவிட்டு பகல் நேரம் முழுவதும் சூர்யாவுடனேயே இருந்தாள் குயிலி.


அவனது பார்வையிலிருந்து அவள் அகன்றாலே பரிதவித்துப் போனான் அவன். ஆனாலும் வாய் திறந்து தேவையில்லாத எதையும் அவளிடம் பேசவில்லை. இருவருகுள்ளுமே இருந்த சிறு தயக்கமும் மிகப்பெரிய இடைவெளியும் இருவரையும் சற்று தள்ளியே நிறுத்தியிருந்தது.


இருவருக்கும் பொதுவான ஒரே விஷயமாக சரண் மட்டுமே இருக்க, பிறந்த பொழுது எப்படி இருந்தான்! வளர வளர எப்படி இருந்தான்? அவன் முதலில் சொன்ன வார்த்தை என்ன? இப்பொழுது என்ன படிக்கிறான்? எப்படிப் படிக்கிறான்? என மகனைப் பற்றிய கேள்விகள் மட்டும் நிறைய இருந்தது அவனிடம்.


தயக்கம் உடைத்து ஒவ்வொன்றாக அவன் கேட்கத் தொடங்கவும், அவளும் சலிக்காமல் பதில் சொல்லிக்கொண்டிருந்தாள். சமயத்தில் ஆற்றாமையுடன் தன் மகளைப் பற்றியும் ஏதாவது சொல்லிவிடுவான். அதையும் முகம் சுளிக்காமல் கேட்டு வைப்பாள். அதை உணர்ந்து உடனே ஒரு ‘சாரி’யையும் உதிர்த்து விடுவான்.


அவனுடைய பரிதவிப்பைப் பார்த்துவிட்டு ஒரு இரவு முழுவதும் விழித்திருந்து வெவ்வேறு இடங்களில் பதிவாகியிருந்த சரணின் புகைப்படங்கள் மற்றும் காணொலிகள் அனைத்தையும் வரிசைப் படுத்தி ஒரு பென்-ட்ரைவில் பதிவேற்றி அவனிடம் கொடுத்தாள்.


வீட்டிலிருந்து தன் மடிக் கணினியைக் கொண்டுவரச் சொல்லி அதில் அந்த விரலியைப் பொருத்தி, கண்களில் கண்ணீர் வர ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.


மனம் பொறுக்காமல் அவனது கை மேல் தன் கையை வைத்து அழுத்தியவள், “கூல் சூர்யா, இவ்வளவு டென்ஷன் ஆகறது நல்லதில்ல. நீங்க இப்படி உணர்ச்சிவசப்படுவீங்கன்னு தெரிஞ்சிருந்தா இதையெல்லாம் இப்ப கொண்டே வந்திருக்க மாட்டேன்” என அவள் அவனைக் கடிந்துகொள்ள, “பிள்ளை வளர்ப்புல ஒரு தகப்பனின் பங்கு ரொம்ப க்ரூஷியல் குயிலி. பிறந்த உடனே முதல் ஆளா அவனை நான்தான் என் கைல வாங்கியிருக்கணும். தடுப்பூசிப் போடறதுல இருந்து அவன் முதல் பிறந்தநாளைக் கொண்டாடற வரைக்கும் என் பங்கும் இருந்திருக்கணும், ஸ்கூல்ல சேர்க்கும்போது நானும் கூட இருந்திருக்கணும், அவனுக்கு சாப்பாடு ஊட்டி விட்டிருக்கணும். சைக்கில் ஓட்ட ஸ்விம் பண்ண எல்லாமே கூட இருந்து சொல்லிக்கொடுத்திருக்கணும், அவன் கூட ஷாப்பிங் போய் அவன் கேட்கற எல்லாத்தையும் வங்கிக் கொடுத்திருக்கணும். விளையாடும்போது கீழ விழுந்து முட்டியில ரத்தம் வழிய நிற்கும்போது துடைச்சு மருந்து போட்டு விட்டிருக்கணும், டெய்லி ஸ்கூலுக்குக் கூட்டிட்டு போய் பிக் அப் டிராப் எல்லாமே பார்த்திருக்கணும். அங்க நடந்த கதையெல்லாம் ஆர்வமா அவன் வந்து சொல்லும்போது காது கொடுத்து கேட்டிருக்கணும், தினமும் அவன் பக்கத்துல படுத்து கதை சொல்லித் தூங்க வெச்சிருக்கணும்!


இதெல்லாம் செய்யலன்னா கூட அட்லீஸ்ட் அவன் கூட நான் இருக்கேன்ங்கற நம்பிகையையாவது நான் அவனுக்குக் கொடுத்திருக்கணும்.


ஆனா இப்படி அவனோட வாழ்கையில நான் ஒரு இடத்துல கூட இல்லல்ல. என்னைப் பத்தி ரொம்ப கேவலமான ஒரு பிம்பம்தான் அவன் மனசுல பதிஞ்சிருக்கும் இல்ல? ஏற்கனவே என் பொண்ணு என்னை அப்படி ஒரு இடத்துலதான் வெச்சிருக்கா. அதையே என்னால தாங்க முடியல. இப்ப இவனுக்கும் நான் எவ்வளவு பெரிய அநியாயம் செஞ்சிருக்கேன் இல்ல” என அவன் தொண்டை அடைக்கச் சொல்லிக்கொண்டிருக்க, சீராக மூச்சுவிடக் கூட இயலவில்லை அவனால்.


சரணை தன் மகன் என அவன் உணர்ந்த தருணத்தில், ‘மகனும் தன்னை வெறுத்திருப்பான்!’ என அவனுக்கு உண்டான அந்த அசூயைதான் மறுபடியும் தோன்றியது.


அவசரமாக மருத்துவரை அழைக்க, சில நிமிடங்கள் ஆக்சிஜன் கொடுக்கப்பட்ட பின்புதான் இயல்புக்குத் திரும்பினான். அவன் உணர்ச்சிவசப்படும் சூழ்நிலை உருவாகாமல் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டுப் போனார் மருத்துவர்.


எப்படியோ, நான்கைந்து நாட்கள் மருத்துவமனை வாசத்திற்குப் பிறகு அதிகம் பதற்றமடையவோ உணர்ச்சிவசப்படவோ கூடாது என்கிற முக்கிய நிபந்தனையுடன் உடல் தேறி வீடு திரும்பினான் சூர்யா.


மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்து தானே அவனை அழைத்து வந்து அவனுடைய வீட்டில் விட்டாள் குயிலி.


அவனுடைய மொத்த குடும்பமுமே அங்கேதான் இருந்தனர். அவளுக்கு மிகவும் சங்கடமாகதான் இருந்தது. ஆனாலும், இதையெல்லாம் யாராவது பார்த்துக்கொள்ளட்டும் எனப் பாதியில் விட்டுவிட்டுப் போக அவளுக்கு மனம் இடங்கொடுக்கவில்லை..


அவனோடான வாழ்க்கை இனி இல்லை என்றானப் பின் என்றாவது ஒரு நாள் அவனுடன் சேர்ந்து வாழ மாட்டோமா என்கிற ஏக்கம் அவளுக்கு ஒரு முறை கூட எட்டிப்பார்த்ததில்லை.


மகன் பிறந்து அவனுக்கு மூன்று வயதான பின் அவளுக்கு வேறொரு வழக்கை அமைத்துக் கொடுக்கும் முனைப்பில் இறங்கினர் அவளுடைய பெற்றோர். கெஞ்சியும் மிஞ்சியும் அவளைச் சம்மதிக்கவும் வைத்தனர். ஆனால் முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பதுபோல் ஆகிப்போனது. எல்லாம் பேசி முடித்த பின் பிள்ளையை அவளுடைய அப்பா அம்மாவின் பொறுப்பிலேயே விட்டுவிட்டு வரும்படியான நெருக்கடியை அவளுக்குக் கொடுக்க, அப்படி ஒரு வாழ்க்கையே தேவையில்லை என்று சொல்லிவிட்டாள்.


வாழ்க்கைத் துணைக்காக, அன்புக்காக, காதலுக்காக, உணர்ச்சிகளின் வடிகாலாக எதற்காகவெனினும் திருமணம் என்ற ஒன்றே இனி தேவையில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டாள்.


அதைக் கடந்து அவளுடைய வாழக்கையை சுவாரசியமாக வைத்துக்கொள்ள அவளுக்கு நிறைய விஷயங்கள் இருப்பதாகவே தோன்றியது.


மகனை நல்லபடியாக வளர்த்து ஆளாக்கினால் போதும் என்கிற உறுதி மட்டுமே உண்டானது.


சரண் தந்தையைத் தேடத்தொடங்கவும் முடிந்தால் அவனுடைய தகப்பனை அவனுக்கு அறிமுகம் செய்யலாம் என்று தோன்றியதே தவிர அதற்கு மேல் அதிகம் சிந்திக்கவில்லை அவள்.


ஆனால் காலம் சூர்யாவை மீண்டும் அவள் முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது அதுவும் ஒரு நிராயுதபாணியாக! வாழ்க்கையில் தோற்றுப்போன ஒருவனாக! நிர்க்கதியாகத் தனித்துவிடப்பட்ட ஒரு ஆண் மகனாக.


ஒரு வேளை அவன் அவளைத் தன்னுடன் வந்துவிடு எனக் கேட்கும் பட்சத்தில் என்ன மாதிரியான முடிவை அவள் எடுக்க நேரிடும்? அதுவும் குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரின் கோரிக்கையும் அதுவாகவே இருக்கலாம், குறிப்பாகச் சரணுடையது! யாருக்கு என்ன பதில் சொல்லுவாள்? அவளுடைய அப்பாவின் அரவணைப்பு கூட இல்லாமல் தனித்து இயங்கப் பழகியிருந்தவளுக்கு மீண்டும் ஒருமுறை திருமண வாழ்க்கை என்கிற கூண்டுக்குள் அடைபட முடியுமா என்பது கூட புரியவில்லை. ஆயிரம் கேள்விகளும் குழப்பங்களும் மனத்தைக்குடைய அவனுடன் அவனுடைய வீட்டுக்குள் அடியெடுத்து வைத்தாள்.


இந்த சில நாட்கள் மருத்துவமனையிலிருந்தாலும் கூட அவளும் அங்கே இருந்ததால் அது ஒரு சுவர்க்க வாசமாகவே அவனுக்குத் தோன்றியது. அந்த தற்காலிக சந்தோஷமும் முடிவுக்கு வந்துவிட மீண்டும் மனதில் ஒரு வெற்றிடம் உருவாகிப்போனது. 'என்னுடனேயே இருந்துவிடு அல்லது உன்னுடனேயே என்னையும் அழைத்துச் சென்றுவிடு' எனத் தொண்டையில் அடைத்து நிற்கும் வார்த்தைகளுடன், யாரையும் எதிர்கொள்ள மனமில்லாமல் நேராக அவனுடைய அறைக்குள் போய் புகுந்து கொண்டான்.


ருக்மணியும் கமலக்கண்ணனும் அவன் பின்னாலேயே செல்ல, “ஏம்மா நேரா உள்ள போயிட்டான். உடம்புக்கு ஏதும் முடியலியா” என வெகு இயல்பாக அவளை எதிர்கொண்டாள் அவனுடைய பெரிய அக்கா.


"ஒண்ணும் இல்லக்கா, டயர்டா இருக்கும். சாப்பிட சூப் மாதிரி ஏதாவது கொடுக்க சொன்னாங்க. வீட்டுல ப்ரிபேர் பண்ண முடியுமா இல்ல ஹோட்டல்ல இருந்து கொடுத்து அனுப்ப சொல்லட்டுமா” என அவளும் தயக்கம் மறந்து பதில் கொடுக்க, இளம் வயது குயிலி அவளுடைய ஞாபகத்தில் வரவும் அவளுடைய கண்கள் கலங்கின.


“இல்லம்மா சித்தி எல்லாம் ரெடி பண்ணி வச்சிருகாங்க” என பதில் கொடுத்துவிட்டுச் சமையல் அறை நோக்கிப் போனாள்.


முள் மேல் நிற்பது போல் தோன்ற அதன் பின் அங்கே இருக்க முடியாமல் நேராகப் போய் அவனுடைய அறையின் கதவைத் தட்டி, வெளியிலிருந்தபடியே, “நான் கிளம்பறேன். முடிஞ்சா இந்த வீக் என்ட் வந்து பார்க்கிறேன்” என எல்லோருக்கும் பொதுவாகச் சொல்லிவிட்டு மற்றவரிடமும் விடைபெற்றுக் கிளம்பினாள் குயிலி.


பதிலுக்கு ஒரு தலை அசைவு கூட இல்லை, அவள் அங்கிருந்து அகன்ற பிறகும் கூட உணர்வற்று அவள் சென்ற திசையையே பார்த்திருந்தான் சூர்யா. ருக்மணியின் முகத்தில் மட்டும் எள்ளும் கொள்ளும் வெடித்துக்கொண்டிருந்தது. ‘இனிமேலாவது இந்தப்பெண் இவனுடன் சேர்ந்து வாழக் கூடாதா? இப்படி போகிறாளே!’ என்கிற ஆதங்கத்தில்.


*********

1 comment

1 Comment

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
Guest
Sep 07, 2022

Parents role explanation nice..

Like
© KPN NOVELS COPY PROTECT
bottom of page