top of page

Valasai Pogum Paravaikalaai - 17

17.குயில் குஞ்சு


பொங்கிப் பாயும் புதுவெள்ளம் போல குயிலியுடன் திருமணத்திற்குப் பின்னதான அவனது நாட்கள் எப்படித்தான் அவ்வளவு அதி வேகமாக ஓடியதோ! அதற்கு நேர்மாறாக வறண்ட பாலைவனத்தில் தாகத்துடன் தண்ணீரைத் தேடித் தவிக்கும் ஒருவனுடைய ஒரே ஒரு நாளைப் போல மிக நீண்டு கொண்டே போனது அவளைப் பிரிந்து கனடா சென்றதுக்குப் பிறகான நாட்கள்.


அந்த மிகச்சிறிய பிரிவைக் கூட அவனால் பொறுக்க முடியவில்லை. பட்டாசு வெடிக்க தீபாவளி நாளை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஒரு சிறுவனைப் போல நாட்களை எண்ணி எண்ணி தன் மனைவிக்காகக் காத்திருந்தான்.


அதுவரைக் குடியிருந்த ஒற்றைப் படுக்கை அறை வீட்டிலிருந்து இரட்டைப் படுக்கையறைக் கொண்ட இன்னும் வசதியான ஒரு வீட்டை ஏற்பாடு செய்து, அவள் அங்கே வந்து சேருவதற்கு முன்பாக கச்சிதமாகத் தயார் செய்துவிடும் முனைப்புடன் ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் அலங்கரித்துக் கொண்டிருந்தான்.


அவள் அங்கே வர இன்னும் ஒரே ஒரு வாரம்தான் இருக்கிறது என்கிற நிலையில் அவனுடைய புதிய முகவரியைக் கண்டுபிடித்து அவனைத் தேடி அங்கேயே வந்தாள் மமதி.


அவளுக்கு நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது, ஆறு மாதங்களுக்குப் பிறகு திருமணம் என்பது வரை அவன் அறிந்தே வைத்திருந்தான்.


அதனால் அவள் அங்கே வந்ததில் அவனுக்கு எந்த ஒரு அதிர்ச்சியும் ஏற்படவில்லை.


அவ்வளவு தூரம் பேசியவள் எந்தப் பிரச்சனையும் கிளப்பமாட்டாள் என்றே முற்றிலும் நம்பினான்.


இருந்தாலும் அன்றைய அவமானத்தின் மிச்சம் இன்னும்கூட இதயத்தின் ஏதோ ஒரு மூலையில் குத்திக்கொண்டிருக்க, “வா மமதி, அன்னைக்கு நீ நடந்துட்ட விதத்துக்கு என்னை சுத்தமா அவாய்ட் பண்ணிடுவன்னு நினைச்சேன். மறுபடியும் என்னைத் தேடி வந்திருக்க?” என இகழ்ச்சியாகக் கேட்டான்.


ஒரு கோணல் சிரிப்புடன் அவனை எறிட்டவள், “ஐம் பிரக்னன்ட்!” என்றாள் கொஞ்சம் கூட சலனமே இல்லாமல்.


அவள் என்ன சொல்கிறாள் என்பதே விளங்காமல், “கம் அகைன்... ஐ கான்ட் கெட் யூ” என்றான்.


“ப்ச்... நான் கன்சீவா இருக்கேன், ஐ மீன் உன் குழந்தைக்கு அம்மா ஆகப்போறேன், இப்ப புரியுதா’ என ஆத்திரமும் இயலாமையும் கலந்து அவள் குரலை உயர்த்த, “நான்சன்ஸ்... உளறாத” என அதிர்ந்தான் அவன்.


“இல்ல சூர்யா, என்னால இதை அபார்ட் பண்ண முடியல. எல்லாமே கை மீறிப் போயிடுச்சு. இந்த சனியனால என் கல்யாணம் நின்னு போய் என்னோட ஃப்யூச்சரே டோட்டலா கெட்டுக் குட்டிச்சுவராகிப் போச்சு” என்றபடி கோபத்தில் முகம் சிவந்து கண்களில் நீர் கோர்க்க அப்படியே சோஃபாவில் சரிந்தாள்.


“இதை என்ன நம்பச் சொல்றியா... இவ்வளவு தெளிவா எல்லாத்தையும் யோசிக்கற நீ அப்படி மட்டும் நடந்திருந்தா இதை ஆரம்பத்துலையே கிளீன் பண்ணியிருக்க மாட்ட?” என அவன் சீற,


“என் தலை எழுத்து உனக்கெல்லாம் எக்ஸ்ப்ளைன் பண்ணிட்டு இருக்க வேண்டியதா போச்சு’ என அருவருத்தவள், “பயந்து போய் ஸ்டார்டிங்லயே கிட் வெச்சு டெஸ்ட் பண்ணேன். நேகடிவ்னுதான் வந்துது. ஃபார்டி டேஸ்ல மறுபடியும் பண்ணேன். அப்பவும் நெகடிவ்ன்னு வந்துது. ஸோ, வேற ஏதோ ப்ராப்ளம்ன்னு விட்டுட்டேன். எங்கேஜ்மென்ட் பங்க்ஷன் பிசில இருந்ததால டாக்டர் கிட்டயும் போகல. அதுக்குள்ள நிறைய ஃபினான்ஷியல் ப்ராப்ளம் வேற, அதை ஹான்டில் பண்ணிட்டு இருந்தேன். இதெல்லாம் முடிச்சிட்டு டாக்டர் கிட்ட போய், அந்த டெஸ்ட் இந்த ஸ்கேனுன்னு முடிச்சி வரதுக்குள்ள காலம் கடந்து போயிருந்தது. லீகலா அபார்ஷன் பண்ண முடியாதுன்னு சொல்லிட்டாங்க. இல்லீகலா என்னால போக முடியல” என விளக்கம் கொடுத்தவள், “இப்ப ஃபைவ் மந்த்ஸ் கம்ப்ளீடட். பேபி ஃபுல் க்ரோத் வந்துடுச்சு” என முடிக்க, சற்று உற்று கவனிக்கவும் குழந்தையின் வளர்ச்சி வெளிப்படையாகவே தெரிந்தது.


அவனுக்கு உலகமே இருண்டது போலத் தோன்றியது. ஆத்திரம் உச்சிக்கு ஏற, “உனக்கு என்னைப் பார்த்தால் இளிச்சவாயன் மாதிரி தோனுதா, அன்னைக்கு நீ அவ்வளவு தூரம் பேசினதுக்குப் பிறகும் நான் உன்னை நம்புவேன்னு நினைச்சியா? இதுக்கு நான்தான் அப்பாங்கறதுக்கு” என அவன் சொல்லி முடிக்கவில்லை, அவனை பளார் என அறைந்திருந்தாள் அவள்.


“இன்னும் ஒரு தடவ என்னை இன்சல்ட் பண்ற மாதிரி இப்படி பேசினா உன்னைக் கொன்னுடுவேன் ராஸ்கல்” எனச் சீறியவள், “இதுக்கு காரணம் நீதான். அதை என்னால ப்ரூவ் பண்ண முடியும். நான் நல்லபடியா இருந்த போதே என் கூட இருந்தவங்களே என்னைக் கேவலமா பார்த்தாங்க. இப்ப இப்படின்னா கேட்கவே வேண்டாம். அதனால எனக்கு இப்ப தேவை ஒரு சமூக அங்கீகாரம். ஐ மீன் ஒரு கல்யாணம்” என அவள் முடிக்க சப்த நாடியும் ஒடுங்கிப்போனது அவனுக்கு.


“ஹேய் என்ன உளறிட்டு இருக்க, எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு அது உனக்கு தெரியுமா இல்ல தெரியாதா” என அவன் படபடக்க, “ப்ச்... எனக்கு அதைப் பத்தியெல்லாம் கவலையே இல்ல. இப்போதைக்கு ஒரு கோவில்ல வெச்சு தாலிக் கட்டு. அப்பறம் லீகலா பார்த்துக்கலாம்” என அவள் பதில் கொடுத்த விதத்திலே அவளுக்கு எல்லாம் தெரிந்தே இருக்கிறது என்பது புரிந்தது.


அவன் ஸ்தம்பித்து நிற்க, “ஃபோட்டோவ பார்த்தே உருகிட்டு இருந்த, இப்ப கேட்கணுமா!” என இளக்காரமாகச் சொன்னவள், “இது இன்னும் வளர்ந்து என் மானத்தை வாங்கறதுக்குள்ள சீக்கிரம் எனக்கு ஒரு முடிவு சொல்லு சூர்யா, இல்லனா இதை அழிக்க நான் என்னையே அழிச்சிக்க வேண்டியதா இருக்கும். அப்படியே செத்தாலும் உன் பேரைச் சொல்லிட்டுதான் செத்துப்போவேன். நம்ம ஊரா இருந்தாலும் லஞ்சம் கிஞ்சம் கொடுத்து வெளியில வந்துடலாம். ஆனா இங்க ஜெயில்லயே கிடந்தது நீ சாக வேண்டியதுதான்” என அவனை நேரடியாக மிரட்டியவள் கையில் வைத்திருந்த ஒரு கோப்பை விசிறி எறிந்துவிட்டு அங்கிருந்து அகன்றாள்.


நடுங்கும் கரத்துடன் அதைப் பிரித்துப் பார்க்க அவளது ஸ்கேனிங் ரிப்போர்ட்தான் அது. அந்த நாற்பரிமாண பிம்பத்தில் கையும் காலும் முளைத்து அந்த சிசு ஒரு முழு வடிவமாக வளர்ந்திருப்பது தெரிந்தது. அதில் பெண் சிசு எனத் தெளிவாகச் சொல்லப்பட்டிருந்தது.


*********


மனசாட்சியையும் காதலையும் சுத்தமாக முடக்கிவிட்டு, ஆயிரம் ஆசைகளையும் கனவுகளையும் சுமந்துகொண்டு கடல் கடந்து அவனை நம்பி வந்தவளை உயிருடன் கொன்று குற்றுயிரும் குலையுயிருமாகத் திரும்ப தாய்நாட்டிற்கு அனுப்பி வைத்தான்.


அவனை சபிக்காமல், வார்த்தைகளால் கூட காயப்படுத்தாமல், நடந்ததைப் பொதுவில் சொல்லி நியாயம் கேட்டு அவனுடைய குடும்பத்துக்கு மத்தியிலேயே கூட அவனைத் தலைகுனிய வைக்காமல், மரத்தின் மெல்லிய கிளையில் உட்கார்ந்திற்கும் சிறு குருவி எப்படி அந்தக் கிளைக்குத் துளியளவு வலியைக் கூட கொடுக்காமல் பறந்து போகுமோ அதுபோல அவனை அவனிடமே விட்டுக்கொடுத்துவிட்டு அவனுடைய வாழ்க்கையிலிருந்து விலகிப் போனவள் அவனுக்கு இன்று வரை ஒரு அதிசயம்தான்.


ஆனால் அவள் விட்டுச்சென்ற இடத்தை நிரப்பியவளோ ஒரே ஒரு முறை அவன் செய்த தவறுக்கு ஆயுள் தண்டனையானாள்.


அங்கேயே இருக்கும் ஒரு கோவிலில் அவளுடைய அம்மா அப்பாவை முன்னிறுத்தி, அவளுடைய கழுத்தில் தாலியைக் கட்ட வைத்தாள். மகளின் திருமணம் முடிந்ததும் உல்லாசமாக ஊரைச் சுற்றிப் பார்த்தவர்கள் அவளுடைய பிரசவம் முடிந்து சில நாட்களில் தங்கள் கடமை முடிந்தது எனப் பெட்டி படுகையைக் கட்டிக்கொண்டு திரும்பிச் சென்றனர். அதற்கு மேல் அங்கே சிறைப்பட்டுக் கிடக்க அவர்கள் தயாராகவே இல்லை.


அவளுடைய பிரசவத்திற்குக் கொடுக்கப்பட்டிருந்த தேதியின் நெருக்கத்தில்தான் அவனுடைய விவாகரத்துக்காக அவன் சென்னை செல்ல வேண்டி இருந்தது. அதனால்தான் அதுவரையிலுமாவது அவர்கள் அங்கே இருந்தார்கள்.


கனடா போன சில நாட்களிலேயே மருமகள் இப்படித் திரும்ப வந்தது சூர்யாவின் குடும்பத்தினருக்கு அப்படி ஒரு அதிர்ச்சியைக் கொடுத்தது. இருவருக்குள்ளும் ஏதோ பிரச்சனை என்கிற அளவுக்குத் தெரியுமே தவிர, இன்ன காரணம்தான் என யாருக்கும் எதுவும் தெரியாது. பொதுவான உலக வழக்கப்படி, ‘எல்லாமே சரியாகிவிடும். நீ பெண். நீதான் கொஞ்சம் அனுசரித்துப் போக வேண்டும்’ என அவளிடம் கெஞ்சிப் பார்த்து அது முடியாமல் போக, ‘இந்தக் காலத்துப் பெண்களே இப்படிதான்’ என அப்படி ஒரு ஆத்திரம் அவள்மேல் உண்டானது, குறிப்பாக ருக்மணிக்கு. எது எப்படி இருந்தாலும் தங்கள் வீட்டுப் பிள்ளையைக் குறைச் சொல்ல மட்டும் யாரும் தயாராக இல்லை.


விவாகரத்துக்காக கோர்டில் ஆஜராக வேண்டியதாக இருக்க, அதற்காக இங்கே வந்த சமயத்தில் கமலக்கண்ணனிடம் அனைத்தையும் மூடி மறைக்காமல் அவன் சொல்லி விட, அதன் பிறகுதான் பிரளயமே வெடித்தது.


‘இனி உனக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனத் தலை முழுகிவிட்டார் பாட்டி. அந்தக் கவலையிலேயே படுக்கையிலும் விழுந்தார். அவனுடைய அப்பா அம்மாவோ அவனை விட்டுக்கொடுக்கவும் இயலாமல் குடும்பத்தைப் பிரிந்து அவனுடனேயே சென்றுவிடும் மனப்பக்குவமும் இல்லாமல் நடைப் பிணமாகிப் போனார்கள்.


மணந்தாலும் மமதியை மனதால் ஏற்க அவனால் இயலவில்லை. முன்னம் அவள் பேசிய பேச்சுதான் காரணம். அவளுக்கும் அவனுடைய மனதைப் பற்றிய கவலை இல்லை. காதலும் இல்லை! காமமும் இல்லை! இருவருக்கும் பொதுவான கடனாக, குழந்தை என்ற மாய விலங்கு ஒரே சிறைக்குள் இருவரையும் பிணைத்து வைத்திருந்தது.


தான் ஆசைப்பட்ட ஒன்று கூட தனக்குக் கிடைக்கவில்லை என்கிற ஏமாற்றமும் துக்கமும் மட்டுமே அவளிடம் விஞ்சி நின்றது.


அவளைக் காட்டிலும் அதிக ஏமாற்றமும் அதிக துக்கமும் அவனிடம் ஒரு அதீத பழி உணர்வும் அவளுடைய அம்மாவுக்குதான் ஏற்பட்டிருந்தது. பொன் முட்டையிடும் அவர்களது வாத்தை அறுத்துவிட்டானே!


“நாங்க பார்த்த மாப்பிளையை கல்யாணம் செஞ்சிட்டு எப்படியெல்லாமோ வாழ வேண்டியவ நீ, போயும் போயும் ஒருத்தனுக்கு ரெண்டாம் தாரமா வாழ்க்கைப்படற நிலைமை ஆகிப்போச்சு” எனச் சொல்லிச்சொல்லியே அவளது உள்ளுக்குள்ளேயே கனன்றுகொண்டிருந்த தணலைத் தணிய விடாமல் பாதுகாத்தார்.


தானும் அந்தப் பிள்ளையின் பொறுப்பை ஏற்கத் தயாராக இல்லை மமதி. பெற்றதுடன் தன் கடமை முடிந்தது என்கிற ரீதியில் பிள்ளையை அவனுடைய பொறுப்பிலேயே விட்டுவிட்டாள். பிள்ளை வளர்ப்பு ஒன்றும் அவனுக்கு அவ்வளவு சுலபமாக இல்லை.


ஏற்கனவே, ‘நீ எனக்கு சரியான சாய்ஸ் இல்ல! எனக்கு உன்மேல லவ்வும் வராது மரியாதையும் வராது!’ என்றவள். அவனுடைய வயது படிப்பு வேலை என எதுவும் அவளுடைய எதிர்பார்ப்புக்கு இல்லை என்பதைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறாள்.


பிள்ளைக்காக வேலையை விட்டுவிடலாம் என்றாலும் அவனுக்கு அவ்வளவு அவமானமாக இருந்தது.


அவனுடைய அம்மாவை உதவிக்கு அழைத்துவந்து வைத்துக்கொள்ளலாம் என்றாலும் அவரையும் அவளையும் ஒரே இடத்தில் வைப்பது என்பது ஆபத்தை விலைக் கொடுத்து வாங்குவதுபோல் ஆகிவிடும் என்பதால் அதற்கும் வழி இல்லாமல் போனது. பணத்தேவைக்கு அவனை நேரடியாகவே அணுகத் தொடங்கவும் அவளுடைய அம்மாவைப் பற்றிய தெளிவான புரிதலும் வந்திருக்க அவர்களிடமிருந்தும் ஒதுங்கியே இருந்தான்.


இதற்கிடையில் அவளுடைய கடன் தொல்லை அதிகமாகிப்போக இன்னும் அதிக சம்பளத்துக்கு வேறொரு அமெரிக்க நிறுவனத்தில் வேலையைத் தேடிக்கொண்டு நியூயார்க் சென்றவள் தன் பழைய வாழ்க்கை முறைக்கே திரும்பவும் போய்விட்டாள்.


இப்படியே மூன்று வருடங்கள் செக்குமாடு வாழ்க்கை போலச் சென்றது.


பிள்ளையை அவனுடைய கைக்குள்ளேயே வைத்துப் பாதுகாக்க, தந்தைக்கும் மகளுக்கும் இடையிலான பிணைப்பு மட்டும் கூடிக்கொண்டே போனது. அதாவது அவனது வாழ்க்கையின் ஒரே பிடிமானமாக அவனுடைய மகள் நிலா மட்டுமே இருந்தாள்.


அம்மா என்ற ஒருத்தியை அந்தக் குழந்தை தேடுவதே இல்லை. வார இறுதிகளில் மகளைத் தேடி அவள் வந்தாலும் அவளை ஒரு பொருட்டாகக் கூட கருதாமல் ஒதுங்கிப்போனது.


அதை உணரத் தொடங்கிய பின் குற்ற உணர்ச்சியில் மனம் தடுமாற, அவளை வலுக்கட்டாயமாக தன்னுடன் நியூயார்க் அழைத்துப்போய் வைத்துக்கொண்டாள்.


மகளைப் பிரிந்து அவன்தான் தவியாய் தவித்துப்போனான். வேறு வழி இல்லாமல் வேலைக்கு விடுப்பு எடுத்துக்கொண்டு கூடுமான வரை மகளுடனேயே இருக்கத் தொடங்கினான்.


அவன் அங்கே இல்லாத நாட்களில் குழந்தையைப் பார்த்துக்கொள்வது கடினமாக இருக்க உதவிக்கென்று அவளுடைய அம்மாவையும் நியூயார்க் வரவழைக்க, அதுவரை ஏதோ பரவாயில்லை என்ற அளவுக்காவது போய்க்கொண்டிருந்த அவனது வாழ்க்கை தடம் புரளத் தொடங்கியது.


மகளைப் போலவே இன்னும் ஒரு பொன் முட்டை இடும் வாத்து அவரது கைகளுக்குக் கிடைத்ததுபோலாகப் பேத்தியை தன்னுடன் இந்தியாவுக்கு அழைத்துப்போகிறேன் என ஆரம்பித்தார் மமதியின் அம்மா. அவர் எதிர்பார்த்தபடி அதற்கு அவன் மறுக்கவும் நிலைமை மேலும் சிக்கலானது.


பிள்ளையின் உரிமையைக் குறித்து மமதியின் மனதைக் குழப்பியவர் விவாகரத்துவரைக் கொண்டு வந்து நிறுத்தினர்.


அதற்கு அவன் மறுக்கவும், அவனுடைய அம்மாவைத் தேடி வந்து நேரிலேயே தொல்லைக் கொடுக்கத் தொடங்கினார் மமதியின் அம்மா.


பாட்டி இறந்து, சொத்துக்களும் பிரிந்து குடும்பமும் பிரிந்து மகனுக்குப் பிறந்த குழந்தையை ஒருமுறை கூட கண்களால் காண இயலாமல் போய் அவனுடைய வாழ்க்கையும் வீணாகிப்போய் மிகப்பெரிய மன உளைச்சலில் அவர் இருந்த காலகட்டம் அது.


அப்படி ஒரு சந்தர்ப்பத்தில்தான் ருக்மணி மயங்கி விழுந்து அஞ்சு வந்து அவருக்கு உதவிய அசம்பாவிதங்களெல்லாம் அரங்கேறின.


அவர்களுடன் போராடிச் சலித்துப்போய் ஒரு கட்டத்தில் வேறு வழி இல்லாமல் விவாகரத்துக்கு ஒப்புக்கொண்டவன் ஒரு மிகப்பெரிய தொகையை அபராதமாகக் கொடுத்து அந்தத் திருமண பந்தத்திலிருந்து மீண்டான்.


அம்மா அப்பாவை கூடவே இருந்து கவனித்துக்கொள்ள, கனடாவில் பார்த்துக்கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு இங்கேயே ஒரு வேலையைத் தேடிக்கொண்டான்.


அதன் பின் குழந்தையின் உரிமைக்காகப் போராடிப் போராடியே ஒரு கட்டத்தில் முற்றிலும் வெறுத்துப்போய் அவளையும் விட்டுக்கொடுத்தான். அவளுக்காக மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை வேறு கொடுத்துக்கொண்டிருக்கிறான்.


இதில் என்ன கொடுமை என்றால், அந்தப் பிள்ளை தாயிடமும் இல்லாமல், தந்தையின் பொறுப்பிலும் இல்லாமல் அம்மாவைப் பெற்ற தாத்தா பாட்டியிடம் வளர்கிறாள்.


அவனுடைய மகளைக் கண்களால் காணும் உரிமை கூட அவனுக்கு மறுக்கப்பட்டிருக்கிறது. அப்படியே தப்பித்தவறி என்றாவது பார்க்க நேர்ந்தால் கூட ஒரு அருவருப்புடன் அவனைப் பார்த்து முகத்தைத் திருப்பிக்கொண்டு போய்விடுவாள் குழந்தை. அவனைப் பற்றி அந்த அளவுக்கு அவளுடைய மனதில் விஷத்தை விதைத்திருந்தனர்.


எது எப்படி இருந்தாலும் அவளைப் பள்ளியில் சேர்ப்பது முதல் ஒவ்வொன்றையும் பார்க்க அவன்தான் வந்தாக வேண்டும். அந்த அளவுக்கு அட்டைப் போல் அவனை உறிஞ்சினார்.


அவருடைய வளர்ப்பில் தன் மகளைவிட்டு வைத்திருப்பது ஓநாயின் பொறுப்பில் மான் குட்டியை விட்டிருப்பது போல அப்படி ஒரு பதைபதைப்பை அவனுக்குக் கொடுத்தது.


ஏற்கனவே நெஞ்சுக்குள்ளே தைத்து உறுத்திக்கொண்டே இருந்த குயிலி என்கிற நெருஞ்சி முள்ளுக்குப் பக்கத்தில் நிலா என்கிற முள்ளும் ஆழமாகத் தைத்து முணுமுணுவென வலியைக் கொடுத்துக்கொண்டே இருந்தது.


இந்த அழகில் இரண்டு நாட்களுக்கு முன்தான் அவனுடைய நிலா மகள் பூப்படைந்திருக்கும் தகவல் அவர்களுக்கு வந்தது. கூடவே குழந்தைக்கு வாங்க வேண்டிய நகை, துணிமணிகள் என ஒரு பெரிய பட்டியலையே அனுப்பியிருந்தார் மமதியின் அம்மா. ஒரு குறிப்பிட்ட தொகையை மஞ்சள் நீராட்டு விழாவுக்காக வேறு கேட்டிருக்க பத்து வயதே ஆன மகளை எண்ணி மேலும் பயம் பீடித்துக்கொண்டது.


இந்த நிலையில் சரணைப் பற்றி வேறு தெரிய வரவும் அவனுக்கு அதிர்ச்சியில் மாரடைப்பே வந்துவிட்டது.


(இதுதான் மக்களே பொன் குஞ்சுகள் / குயில் குஞ்சு இரண்டு அத்தியாயங்களுகுமான தொடர்பு. parasite மனிதர்கள் என குறிப்பிட்டிருந்தேனே, அதன் விளக்கமும் இதுதான்)

6 comments

6 Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
Srividya Narayanan
Srividya Narayanan
Sep 06, 2022

Hi sis storyline is so very nice. Oru nimisham namma control la illama panra thappuku evalo ezhaka vendi iruku nu romba azhaga solli irukeenga.

neraya ezhuthunga sis. Stay blessed!!!!

Like
Replying to

Thank you for your support ❤️

Like

Vijaya Mahendar
Sep 06, 2022

Superji. Surya romba pavam. Oru தவறால் எத்தனை எத்தனை பேர் kastapaduranga.

Like
Replying to

Thank you. actually, இந்தக் கதையை பொருத்தமட்டும் சூழ்நிலைதான் வில்லன். என்ன சொல்ல.

Like

Guest
Sep 06, 2022

so sad

Like
Replying to

situation breaks. nothing to say. thank you for your comment.

Like
© KPN NOVELS COPY PROTECT
bottom of page