15
நெருப்பாறு
ஒரு சாதாரண நடுத்தட்டு வர்க்கத்தில் பிறந்தவள்தான் மமதி. பெற்றோருக்கு ஒரே பெண். எதிர்காலத்தைப் பற்றிய ஆயிரம் கனவுகளையும் கற்பனைகளையும் சுமந்துகொண்டு வெறியுடன் படித்து மேலே வந்தவள்.
பெற்றவர்கள் என்கிற முறையில் அவர்கள் அவளுக்கு அடிப்படை கல்வியைக் கொடுத்ததுடன் சரி, மற்றபடி தன் திறமையால் மட்டுமே தன்னுடைய தகுதியை வளர்த்துக்கொண்டாள்.
ஆனால் அதுவே அவளுக்கு ஆபத்தாகிப் போனது. காரணம் இலட்சங்களில் மாதச் சம்பளம் வாங்கும் மகள் அவளுடைய அம்மாவின் கண்களுக்கு ஒரு அட்சயப் பாத்திரமாக மாறிப்போனாள்.
அவளுடைய அப்பாவானவர் ஒன்று அவளுடைய அம்மாவுக்கு அடங்கியவராகவோ அல்லது அப்படி தன்னைக் காட்டிக்கொள்ளும் சந்தர்ப்பவாதியாகவோ இருக்கக்கூடும். மகள் சம்பாதிக்கத் தொடங்கிய பிறகு தான் பார்த்துக்கொண்டிருந்த வேலையையும் விட்டுவிட்டார்.
விளம்பரங்களில் வருவதையெல்லாம் பார்த்து, பேங்க் லோன்... ஈ.எம்.ஐ என்று அவளை மூழ்கடித்து நீச்சல்குளத்துடன் கூடிய சொகுசு அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு, கார், நகைநட்டு ஆடம்பரப்பொருட்கள் என வாங்கிக் குவித்து தங்கள் வசதியைப் பெருக்கிக்கொண்டார்கள்.
கணவரின் கண் கொண்டு தன்னால் பார்க்க முடியாத ஒரு உலகத்தை மகள் தானே ஷ்ரிஷ்ட்டிக்கவும், பொன் முட்டை இடும் அந்த வாத்தை அறுத்துப் பார்க்கும் மனோதிடம் அவர்களிடம் இல்லாமல் போனது.
அதாவது மமதியின் அம்மாவுக்கு அவளுக்குத் திருமணம் செய்யும் எண்ணமே இல்லாமல் போனது.
இருக்கும் ஒரே மகளையும் திருமணம் செய்துகொடுத்துவிட்டால் அவர்களுடைய எதிர்காலத்துக்கு ஒரு உத்தரவாதமில்லாமல் போய்விடுமே என்கிற பயம் அவரை இந்தளவுக்குச் சுயநலமாகச் சிந்திக்க வைத்துவிட்டதோ என்னவோ. அதனால்தான் அவள் முப்பது வயதைக் கடந்த பின்பும் கூட அவரிடம் எந்த மாற்றமும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் அவரது முதுமை கூடக் கூட அவரது அச்சமும் கூடிப்போனது.
படிப்பை முடித்து, இருபத்தி இரண்டே வயதில் வேலையில் சேர்ந்ததுமே அவள் மொத்தமாகப் பார்த்திராத ஒரு மிகப்பெரிய தொகை ஒரே ஒரு மாதச் சம்பளமாகக் கிடைக்க, ஒவ்வொரு ரூபாயாக எண்ணி எண்ணிச் செலவு செய்தவளுக்கோ உற்சாகம் கண்ணை மறைத்தது.
குடும்பத்தைப் பிரிந்து வேலைக்கு வந்தப் பிறகு அங்கே அவள் கண்ட புதிய வித்தியாசமான வாழ்க்கை முறை கொஞ்சம் கொஞ்சமாக அவளைத் தனக்குள் இழுத்துக்கொண்டது.
வயது கூட கூடத் திருமணப் பந்தத்திற்கு அவளது மனம் ஏங்கத் தொடங்கிய சமயம், அவளுக்கு வரன் தேடும் நாடகம் தொடங்கியது.
‘என் பொண்ணுக்கு என்ன அவ இராணி! அவ இருக்கற அழகுக்கும் அவளோட படிப்புக்கும் அவ பார்க்கற வேலைக்கும், அவளுக்கு சாதாரண மாப்பிள்ளையா பார்ப்போம். ஒரு இராஜகுமாரன் வானத்துல இருந்து குதிச்சு வருவான்’ என்று பேசிப்பேசியே ஒரு வரையறைக்குள் அடங்காவண்ணம் அவளுடைய அம்மா வேறு அவளது எதிர்பார்ப்பை வளர்த்துவிட்டார்.
திருமண தகவல் மையங்களில் பதிவு செய்வது, புகைப்படம் உட்பட அனைத்தையும் இணையதளங்களில் உலாவ விடுவது, பொருந்தியிருப்பதாக யாராவது அழைத்துப் பேசினால், “பையன் எம்.எஸ் படிச்சிருக்கணும். எங்கப் பொண்ணுக்கு இந்த ஊர் கிளைமேட் செட் ஆகாது. அமெரிக்கன் கிரீன் கார்ட் வெச்சிருக்கணும். எங்கப் பொண்ணுக்கு சமையல் செய்யத் தெரியாது மாப்பிள்ளைதான் செய்யணும். பையனுக்கு அம்மா அப்பா ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தங்கதான் இருக்கணும்” என நாகரீகம் என்பதே இல்லாமல் அவர்களிடம் குதர்க்கமாகப் பேசி அவர்கள் தானாகவே அலறி அடித்து ஓடும்படி செய்தபடி அந்த நாடகம் தொடர்ந்து சிறப்பாக நடந்துகொண்டிருந்தது.
அதே சமயம் மகளின் பார்வையிலும் தாழ்ந்துபோகாமல் இருக்கவேண்டும் என்பதால் வெறும் கண் துடைப்புக்காக அவளுக்குப் புகைப்படங்கள் ஜாதகங்கள் என அனுப்பி வைப்பது. தப்பித்தவறி அவள் பிடித்திருக்கிறது என்று சொல்லிவிட்டால், “பையன் வீட்டுல ஜாயின்ட் ஃபேமிலியாம். கல்யாணம் ஆனா உன்னை வேலையை விட சொல்றாங்க” என்று எதையாவது சொல்லி அவளுடைய வாயாலேயே வேண்டாம் என்று சொல்ல வைப்பது என அவளுடைய அம்மா அவளை வைத்து நன்றாக ஒரு குரங்காட்டி வித்தைக் காண்பித்துக் கொண்டிருந்தார்.
அம்மா என்றால் அவள் சுயநலமற்றவளாகத் தியாகத்தின் திருவுருவாகதான் இருக்க வேண்டும் என நம் சமுதாயத்தில் விதைக்கப்பட்டிருக்கும் நம்பிக்கை அவளுக்குள் வேரூன்றிப் போயிருக்க, ஆரம்பக் காலத்தில் அவர்கள் பட்ட கஷ்டங்களை மனதில் கொண்டு அவளும் அவரைக் கண்மூடித்தனமாக நம்பிக்கொண்டிருந்தாள்.
இதற்கிடையில் வயதுக் கோளாரில் சில காதல் தோல்விகள் வேறு. அது அவளை மன அழுத்தத்தில் கொண்டுபோய் தள்ளி அதற்கான மருத்துவமும் பார்த்துக்கொள்ள வேண்டியதாகியது.
அதையெல்லாம் கடந்து வந்து வெளிநாட்டு வாழ்க்கைக்குள் புகுந்த பிறகு அவளுடைய விரக்தி நிலை அவளை வேறு மாதிரி ஆக்கிவிட்டிருந்தது. இப்படி ஒரு முற்றிய நிலையில்தான் ஒரு பார்ட்டியில் அவளைச் சந்தித்தான் சூர்யா.
தன் வயதைக் குறைத்துக் காண்பிக்கும் முயற்சியில் கவர்ச்சியான உடை ஒப்பனைகள் என மெனக்கெட்டுத் தன்னைச் செதுக்கியிருந்தாள்.
பார்த்த மாத்திரத்தில், திருமண வயதிலிருக்கும் ஒரு ஆணுக்கு ஒரு அழகானப் பெண்ணைப் பார்க்கும்பொழுது ஏறப்படும் ஓர் ஈர்ப்புதான் அவனுக்கும் அவளிடம் ஏற்பட்டது. ஆனால் அவள் தன்னை விட இரண்டு வயது மூத்தவள் எனத் தெரிந்ததும் சட்டென அது வடிந்தும் போனது.
பாரம்பரியம் மிக்க ஒரு குடும்பத்தில் அதுவும் ஒற்றை ஆண் வாரிசு என்று சற்று அதிகமாகவே கவனம் எடுத்து, ‘நம்ம பண்பாடு என்ன? கலாச்சாரம் என்ன? நம்ம குடும்ப கவுரவத்த நீதான் காப்பத்தணும்! ஒரு பொண்ணுன்னா இப்படிதான் இருக்கணும்! ஆம்பளன்னா இப்படிதான் இருக்கணும்!’ என ஒரு கூட்டுக்குள்ளே அடைத்து அவனுடைய பாட்டியால் செல்லமாக ஊட்டி வளர்க்கப்பட்ட பிள்ளை அவன்.
மூன்று அக்காக்கள் இரண்டு தங்கைகள் என ஐந்து பெண் பிள்ளைகளுக்கு நடுவில் வளர்ந்தவன், காதல் வந்தால் கூட அவர்கள் குடும்பத்தின் வரையறைக்குள் பொருந்திப்போகும் ஒருத்தியிடம்தான் வரக்கூடும் என்கிற நிலையில் இருப்பவன் என்பதால் ஒரு பெண்ணிடம் எல்லைத் தாண்டி பழகும் துணிவு என்றுமே அவனுக்கு வந்ததில்லை. எனவே ஒரு சக மனுஷியாகப் பார்க்க முடிந்ததே தவிர தன்னில் சரிபாதி என்கிற எண்ணம் ஒரு ஊசி முனை அளவு கூட அவளிடம் ஏற்படவில்லை.
அதுவும், நட்பு என்கிற ரீதியில் அவளிடம் நெருங்கிப் பழகத்தொடங்கிய பிறகு, இவனுடன் பழகுவதைக் காட்டிலும் இன்னும் நெருங்கி மற்ற ஆண் நண்பர்களுடனும் வெகு சகஜமாகப் பழகுவது, புகைப் பிடிப்பது, மது அருந்துவது என அவளுடைய சுபாவமும் பழக்கவழக்கங்களும் அவனைப் பதைபதைக்க வைத்தது.
ஆண் பெண் பேதமின்றி, அவளை நேரில் பார்க்கும் பொழுது மிகவும் நல்லவர் வேடம் பூணுபவர்கள் அவளுக்குப் பின்னால் அவளை மிகவும் இழிவாகப் பேசுவதை இவனே பல முறை கேட்டிருக்கிறான்.
அவளுடன் திருமணம் என்ற ஒன்றைக் கற்பனை செய்துகூட பார்க்கவில்லை அவன்.
அதேபோன்றுதான் அவளும். நட்பு என்கிற முகத்தைக் காண்பித்து பின்பு வேறு மாதிரி அவளை அணுகுகிறவர்கள் மத்தியில் அவன் சற்றே வித்தியாசமாகத் தெரிய அவனிடம் தன் மனக்குறைகளைக் கொட்டுவாள். மற்றபடி அவளுக்கான வாழ்க்கைத் துணைத் தேர்வில் அவனுக்கு இடமே கிடையாது.
அவளது எதிர்பார்ப்புகள் விண்ணைத் தொட்டது. வயதில் அவளை விட இரண்டு வயதுக்கு மேல் இருக்கவே கூடாது. அவளை விட அதிகம் படித்தவனாக இருக்க வேண்டும். வருமானம் அவளுடையதைப்போல இரு மடங்காக இருக்க வேண்டும். அவள் வேலைக்குச் செல்வதைத் தடுக்கக் கூடாது. அவளைப் போன்றே வீட்டிற்கு ஒற்றைப் பிள்ளையாக இருக்க வேண்டும். அதற்குமேல் உறவினர் வட்டமென்பது அவனுக்கு இருக்கவே கூடாது. அமெரிக்கக் குடியுரிமை பெற்றவனாக இருக்க வேண்டும். இப்படி இன்னும் சில!
அதில் ஒன்றில் கூட இவன் பொருந்தமாட்டான்!
ஆனால் விதி இருவரையும் ஒரே சிறைக்குள் அடைத்து வேடிக்கைப் பார்த்தது.
*********
கடும் குளிர் பிரதேசங்களில் வசிக்கும் மூன்றில் ஒரு பங்கு மக்கள் அனுபவிக்கும் மன அழுத்தம், அதை வின்டர் ப்ளூஸ் (Winter Blues) என்று சொல்லுவார்கள். குடும்பமாக இருப்பவர்களை விடத் தனிமையில் வசிப்பவர்கள் அதில் அதிகம் அவதிப்படுவார்கள்.
நல்ல உடற்பயிற்சி, சத்தான உணவை எடுத்துக்கொள்வது, நண்பர்களுடன் நேரம் செலவிடுவது எனத் தங்களை உற்சாகமாக வைத்துக்கொண்டாலே போதும், இதிலிருந்து மீண்டுவிடலாம்.
இப்படி அதிக மன அழுத்தத்தைக் கொடுக்கும் கடுங்குளிர் காலத்தின் ஒரு விடுமுறை நாள் அது.
மாலை சீக்கிரமே இருள் கவிழத் தொடங்கிவிட்டது. ஆயிரம்தான் ஹீட்டர் போட்டிருந்தாலும் கூட அந்த இரக்கமற்ற குளிர் தன் ஆதிக்கத்தைச் செலுத்ததான் செய்தது.
உடலின் உள்ளுக்குள்ளே சென்று உஷ்ணம் கொடுக்கும் உயர்ரக மது பாட்டில் ஒன்றை எடுத்து வைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தான் சூர்யா.
ஒரு குவளையில் மதுவை ஊற்றிவிட்டுக் குடிக்கலாமா வேண்டாமா என மனதிற்குள் பட்டிமன்றம் நடந்தது.
கண்ணாடி ஜன்னல் வழியாகப் பார்த்தால், வெள்ளை வெளேர் என்கிற பணியைத் தவிர கண்ணுக்கெட்டும் தூரம் வரை ஒரு மனித முகத்தைக் கூட பார்க்க இயலவில்லை.
கண் பார்த்துக்கொண்டிருக்கும்போதே நன்றாக இருட்டிவிட, உண்டான ஆயாசத்தில் அவனுக்கு முன்னாலிருந்த குவளை முழுவதையும் காலி செய்தான்.
தாய் நாடு சென்றுவிட மனம் ஏங்கியது. இப்போதைக்கு முடியாது. ஒரு ப்ராஜக்ட் முடியும் நிலையிலிருக்க வேலை வேலை என இரவு பகல் பாராமல் அலுவலகத்தில் சக்கையாகப் பிழிகிறார்கள். விடுப்பு எடுத்துக்கொண்டு ஊருக்குச் சொல்லும் சூழ்நிலை கூட இல்லை.
இன்னும் சற்று நேரத்தில் அவனுடைய கடைசி அக்கா மனோன்மணியின் திருமண வைபவம் தொடங்கிவிடும். ஒவ்வொருவரிடமிருந்தும் புகைப்படங்கள் அணிவகுக்கும். யாராவது மடிக்கணினியின் துணையுடன் ஸ்கைப்பில் வந்தாலும் வரலாம், இல்லாவிட்டாலும் இல்லை என்கிற நிலை. அதனால்தான் நண்பர்களுடன் கூட வெளியில் எங்கும் செல்லவில்லை.
மைத்துனன் முறை செய்ய அவன் அங்கே இல்லையே என எல்லோருக்குமே ஒரே குறைதான். ‘இப்படி ஒரு வேலை தேவையா? விட்டுவிட்டு வந்துவிடு. இங்கேயே வேறு வேலை தேடிக்கொள்ளலாம்! சம்பளம் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை’ எனப் பாட்டி வேறு ஒரே நச்சரிப்பு. இவனுக்குதான் வேலையை விட மனது வரவில்லை.
மடிக்கணினியைத் திறந்து வைத்து அவனுடைய தங்கை அனுப்பியிருந்த முந்தைய இரவு நடந்த ரிசப்ஷன் படங்களில் ஒன்றை தேடியெடுத்து அதைப் பெரிதாக்கினான்.
அதில் ஜூம் செய்து, ஒருத்தியை மட்டும் கண்கள் முழுவதிலும் நிரப்பிக்கொண்டான். வயலட் நிற செல்ஃப் பார்டர் பட்டுப்புடவை அணிந்து அதே நிறத்தில் அணிகலன்கள் அணிந்திருந்தாள். கூந்தலில் சூடியிருந்த மல்லிகைச் சரம் அவளது தோளில் வழிந்தது.
கூந்தலில் முகம் புதைத்து அந்த மல்லிகையின் வாசத்தை நுகர்ந்தவாறே, வயலட் நிற கற்கள் பதித்த ஜிமிக்கி அணிந்த வெல்வெட் போன்ற மிருதுவான சிவந்த அவளது செவியில் இதழ் பதிக்கும் தாபம் உடலெங்கும் ஊடுருவியது.
இதே போன்றதொரு புகைப்படத்தில் என்று அவளைப் பார்த்தானோ அன்றிலிருந்து இப்படிதான் அவளுடன் கற்பனையிலேயே குடும்பம் நடத்திக்கொண்டிருக்கிறான். அவனுடைய அந்தக் கற்பனை உலகத்தில், மகளொன்றும் மகனொன்றுமாக குழந்தைகள் கூட அவனுக்கு உண்டு.
‘இவளைப் பிடித்திருக்கிறது’ என்பது போல் சிறியதாக ஒரு குறிப்பு காண்பித்தால் கூட போதும், அதை வைத்தே அவனுடைய கமலக்கண்ணன் சித்தப்பா திருமணத்தையே நடத்தி முடித்துவிடுவார். அந்த நம்பிக்கை அவனுக்கு நூறு சதவிகிதம் இருந்தது. அதுவே அவனை இப்படிப்பட்ட கனவுகளுக்கும் கற்பனைகளுக்கும் இழுத்து வந்தது.
அதற்கு முதலில் அவன் ஊருக்குச் சென்றாக வேண்டும். ஹ்ம்ம்... அதுதான் இப்போதைக்கு இயலாதே!
அடுத்தக் குவளை மதுவும் உள்ளே போக அவளுடைய செவியிலிருந்து இடம்பெயர்ந்த அவனது இதழ்கள் அவளது இதழ்களுக்காக ஏங்கின.
அனிச்சைச் செயலாக தன் கைப்பேசியை எடுத்தவன், ‘ஏய் குட்டிப் பிசாசே... அவ இன்னைக்கும் அங்க வருவாளா?” என டைப் செய்து தங்கைக்கு அனுப்பினான்.
போதையிலிருந்தாலும் அங்கே நடு நிசி என்பதால் பதில் வராது எனப் புரிந்துகொள்ளும் அளவுக்குத் தெளிவாகதான் இருந்தான்.
ஆனால் திருமண ஜோரில் இருந்ததால் அவள் உறங்கவில்லை போலும். ‘யாரை அண்ணா கேட்கற?’ என உடனே பதில் வந்தது.
‘ஏய்... அடி வாங்கப்போற!’ என அவன் கடுப்பாக, ‘புரிஞ்சது... புரிஞ்சது... நான் அவளைப் பிடிச்சு வெச்சிருக்கேன். மேடம் இங்கதான் என் பக்கத்துல இருக்காங்க.” என்று தகவல் வர, “இப்படி க்ரூப் ஃபோட்டோ எடுத்து அனுப்பற வேலையெல்லாம் வேண்டாம். அவளை மட்டும் தனியா... விதவிதமா ஃபோட்டோ எடுத்து எனக்கு அனுப்பற. நீ மட்டும் அப்படி செஞ்சா நான் வரும்போது நீ கேட்ட ஐபாட் வாங்கிட்டு வந்து தருவேன்’ என அவன் பேரம் பேச, ‘டண்டணக்கா டன்’ என பதில் வந்தது அவளிடமிருந்து.
இன்னும் சில மணிநேரங்களில் தங்கை அனுப்பப்போகும் புகைப்படங்களுக்காக இப்பொழுதிருந்தே காத்திருக்கத் தொடங்கினான்.
மீண்டும் ஒரு குவளை மது முழுவதுமாக உள்ளே சென்ற பிறகு அந்தப் பெண்ணின் அருகாமைக்காக அவனது ஒவ்வொரு அணுவும் ஏங்கத் தொடங்கியது.
அதே நேரம் வீட்டின் அழைப்பு மணி அடிக்கும் ஒலி கேட்கவும் எரிச்சலுடன் போய் கதவைத் திறக்க, அங்கே நின்றிருந்தாள் மமதி. அவளை நேரில் பார்த்தே சில மாதங்களாவது இருக்கும்.
வியப்பில் அவனது புருவம் மேலே உயர விலகி வழிவிட்டான். தன்னுடன் குளிரையும் துணைக்கு அழைத்துக்கொண்டு அவனுடைய வீட்டிற்குள் நுழைந்தாள் அவள்.
அந்த சில நொடி ஊசி தைத்த குளிரைக் கூட தாங்க முடியாமல் அவசரமாகக் கதவை அடைத்தவனுக்கு, “இவ ஏன் இப்ப இங்க வந்தா?’ என்ற கேள்வி மட்டுமே மண்டையைக் குடைந்தது.
நன்கு உடல் எடை கூடி, கண்களுக்குக் கீழே கருவளையம் சூழ்ந்து, ஏனோதானோவென்ற ஒரு உடையில் அவளைப் பார்க்கும் போதே தெரிந்தது குளிர்கால மன அழுத்தத்தில் இருக்கிறாள் என்பது.
இருந்தாலும் ஒரு போலிப் புன்னகையுடன், “ஹாய்... வாட் எ சர்ப்ரைஸ்” என அவளை வரவேற்றவன், “ப்ளீஸ் பீ சீட்டட்” என்றான் உபசரிப்பாய்.
மெள்ள நடந்து வந்து அவள் இருக்கையில் அமர அப்பொழுதுதான் அவளிடம் இருந்த சிறு தள்ளாட்டமே அவனது சிந்தையில் பதிந்தது. அவளுடைய கண்கள் அங்கே இருந்த தேநீர் மேசையையே மேய மடிக்கணினியின் திரையில் மிளிர்ந்தவளிடம் அவளது பார்வை சென்றது.
அடுத்த நொடி, “யார்?” என்று வினவ, என்ன சொல்வது என ஒரு நொடி திகைத்தவன், “குயிலி... மை ஃபியான்சி” என்றான் தன் கற்பனைக்கு உயிரூட்டி.
பக்கெனச் சிரித்தவள், “ஹக்... இது என்ன காக்கா குருவி குயிலி மயிலின்னு ஒரு காமடியான பேரு?” என்றாள் கிண்டலாக.
எரிச்சல்தான் மூண்டது சூர்யாவுக்கு. “குயிலிங்கறது ஒரு பெண் போராளியோட பேர். வீரமங்கை வேலு நாச்சியாரோட பெண்களுக்கானப் புரட்சிப்படைக்குத் தலைமை வகிச்சவங்க. தற்கொலைப் படையா மாறி உடம்புல எண்ணைத் தடவிட்டுப் போய் வெள்ளைக்காரங்களோட ஆயுதக் கிடங்கை எரிச்ச ஒரு வீரப்பெண்மணி. அவங்கள மாதிரி ஸ்ட்ராங்கா இருக்கணும்னு அவங்கப் பேரைதான் இவங்க அப்பா இவளுக்கு வெச்சிருக்காரு” எனத் தங்கை மூலமாகத் தான் அறிந்த விஷயத்தைப் பெருமையாகச் சொன்னவன், “இதெல்லாம் உனக்கு எங்கத் தெரியப்போகுது?!” என இகழ்ச்சியாக முடித்தான்.
அடுத்த நொடி அவளது முகம் தொங்கிப்போனது. அருகிலிருந்த மது பாட்டிலை எடுத்து நேராகத் தொண்டைக்குள் கவிழ்த்துக்கொண்டாள்.
அவனது உடல் பொருள் ஆவி அனைத்தும் குயிலியின் பிம்பத்திடம் இரண்டறக் கலந்திருக்க அதை கவனிக்கவே இல்லை சூர்யா.
“நீங்க இருப்பீங்களோ மட்டீங்களோன்னு பயந்துட்டே வந்தேன். உங்களுக்குதான் நிறைய ஃப்ரெண்ட்ஸ் ஆச்சே! வீக் எண்ட் அவங்க கூட எங்கயும் போகலியா?” என்று கேட்டாள் குளறலாக.
அதில் சட்டென அவனது மாய வலை அறுந்து அவளை ஏறிட, அவளுடைய பேச்சும் சரியில்லை முகக்குறிப்பும் சரியில்லை என்பது உரைத்தது.
அவனுக்கான கற்பனை உலகத்தில் லயித்திருப்பவனுக்குத் தனிமை மட்டுமே தேவைப்பட, ‘இவ இங்க இருந்து எப்ப கிளம்புவா?’ என்றுதான் இருந்தது.
ஆனால் தனிமையில் வெந்து கொண்டிருக்கும் அவளுக்கோ தன் மனக்குறையைக் கொட்ட ஒரு சுமைதாங்கி தேவையாக இருந்தது.
அவள் கேட்ட கேள்விக்கு வாயில் வந்த எதையோ உளறிவிட்டு, அவளுக்கு சாப்பிட ஏதாவது கொடுத்து முதல் வேலையாக அவளை அங்கிருந்து அகற்றும் முனைப்புடன் சமையலறை நோக்கிப் போனான்.
சூடான சூப் மற்றும் சான்விட்சுடன் திரும்ப வந்தவன் தட்டை அவளிடம் நீட்ட, அந்த சிறு கனிவில் அவளது கண்களில் நீர் கோர்த்தது.
“இதுதான் சூர்யா நீ. அதனாலதான் உன்னைத் தேடி வந்தேன்” எனத் தழுதழுத்தாள்.
“ஹேய் கமான்” என்றபடி மீண்டும் மடிக்கணினியில் பார்வையைப் பதித்தான்.
“உனக்கு தெரியாது சூர்யா, அம்மா அப்பா கூட பேசக் கூட முடியல. தே ஆர் இன் நேபால் டூர்” எனத் தொடங்கியவள் அவன் “ஓஹ்... ஓகே” என ஒப்புக்குச் சொல்லி வைக்கவும் தொடர்ந்தாள்.
அவளுடன் வேலை செய்யும் தோழி ஒருத்திக்கு ஒரு பெரிய தொகையை நம்பிக்கையின் பெயரில் கடனாகக் கொடுத்தது, அதைத் திரும்பக் கேட்டதால் அவளுடைய நடவடிக்கைகளே மாறிப்போனது. முந்தைய தினம் வீக் எண்ட் பார்ட்டியில் அவளுடைய கணவனிடம் இயல்பாகப் பேசப்போக அதை அவள் தவறாகச் சித்தரித்தது என அவள் கதை கதையாகச் சொல்லிப் புலம்பியதையெல்லாம், “ஓஹ்... ஓகே” என்றபடியே அவன் கேட்டு வைக்க, “இப்படி ஃப்ரெண்ட்ஸ் ரிலேடிவ்ஸ்ன்னு யார் யார் யாரையெல்லாமோ நம்பி இப்ப சரியான ஃபைனான்ஷியல் ட்ரபிள்ள மாட்டிட்டு இருக்கேன் சூர்யா. என் லைஃப் டைம் ஃபுல்லா வேலை செஞ்சாதான் என்னால இதுல இருந்தெல்லாம் ரிலீவ் ஆக முடியும்” எனத் தொண்டை கமறச் சொன்னவள், “உன்னைத் தவிர வேற யாரையும் நம்பி இதையெல்லாம் சொல்ல முடியாது சூர்யா. சொன்னாலும் யாரும் காது கொடுத்து கேட்க மாட்டங்க” என்றபடி கட்டுப்படுத்த இயலாமல் கண்ணீர் வடிக்கத் தொடங்கினாள்.
கொஞ்சமும் அதை எதிர்பார்க்காதவன் ஒரு பரிதாபத்தில், சமாதானப்படுத்தும் பொருட்டு அவளை நெருங்கவும் அவன் மீதே சரிந்து விழுந்தாள். அவளுடைய கழிவிரக்கமும் அவனுடைய அனுதாபமும் ஒன்று சேர அவனைத் தீராதப் பழி எனும் நெருப்பாற்றில் பிடித்துத் தள்ளியது.
Wow awesome