Valasai Pogum Paravaikalaai - 14
14
கலங்கரை விளக்கம்
அஞ்சுவின் பின்னால் இறுக்கமாக அமர்ந்திருந்த சரண் வீடு வந்து சேரும் வரையில் ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை.
வரும்பொழுது அவன் செய்த சேட்டைகளும் கண்ணில் படுவதைப்பற்றியெல்லாம் வாய் ஓயாமல் அவன் கேள்விக் கேட்டு அவளை உண்டு இல்லை என்று செய்ததும் நினைவில் தோன்றி மனதைச் சுட்டது.
வீட்டின் வாயிலிலேயே லக்ஷ்மி அவனுக்காகக் காத்திருக்க அவளுக்கு அருகில் படுத்திருந்தது டைகர்.
அடுத்த நொடி அனைத்தையும் மறந்தவனாகத் துள்ளிக்கொண்டு வாகனத்திலிருந்து குதித்து இறங்கியவன், “லச்சு வா... டாகிக்கு பொறை ஃபுட் போடலாம்” என்றபடி அதை எடுத்து வர வீட்டிற்குள் ஓடவும், அவளுக்கு ‘அப்பாடா’ என்றிருந்தது.
பின்பு தெரு பிள்ளைகளும் சேர்ந்துகொள்ள ஏதேதோ விளையாடி ஓய்ந்தனர்.
“ப்ச்... ருக்கும்மா போய் இப்படியெல்லாம் பேசித் தொலைப்பாங்கன்னு நான் நினைச்சுக்கூட பார்க்கல மாமா. தெரிஞ்சிருந்தா அவனைக் கூட்டிட்டே போயிருக்கமாட்டேன். பாவம் மாமா பிள்ள. நல்லவேள அவங்க பேசின எதையும் அவன் கேட்டு வைக்கல” என சீனுவின் காதில் ரத்தம் வரும் அளவுக்கு அஞ்சுதான் புலம்பித் தீர்த்தாள்.
“விடு அஞ்சு, பாவம் அவங்களுக்கு என்ன பிரச்சனையோ?” என அவன் தெரியாமல் வாயை விட்டுவிட, “அப்படின்னா... யார் என்னன்னு இல்லாம யாரை வேணா பேசுவாங்களா? அவங்களுக்கு குயிலியைப் பத்தி என்ன தெரியும்? இல்ல என்ன தெரியும்னு கேட்கறேன்! வேலை வெட்டி இல்லாம கண்ட கண்ட டிவி சீரியலெல்லாம் பார்த்துட்டுப் பொழுதைக் கழிச்சா இப்படிதான் புத்தி மழுங்கிப் போகும்” என குரலை உயர்த்தும் அளவுக்கு அவளது ஆத்திரம் இன்னும் அதிகம்தான் ஆனது.
மேகலா நேரத்துடன் கிளம்பிவிட, மாலை மயங்கி இருள் கவிழத் தொடங்கும் நேரம் அவனை அழைத்துப்போக அங்கே வந்தார் வசந்தகுமார்.
சரண் அறியாவண்ணம் நடந்ததைச் சொல்லி அஞ்சு அவரிடம் மன்னிப்பு வேண்ட, “விடும்மா... இங்க வந்ததுக்குப் பிறகு இதெல்லாம் எங்களுக்கு சகஜமா போச்சு” என்றார் விட்டேற்றியாய். ஆனாலும் ருக்மணி அம்மாள் பேசிய எதையும் அவள் அவரிடம் சொல்லவில்லை. அதைச் சொல்லக்கூட அருவருப்பாக இருந்தது. கணவருக்குக் கூட தெரிய வேண்டாம் என, மனதிற்குள்ளேயே பேசுவது போல அவர் பேசிய எதுவும் மற்றவருக்குத் தெரியாமலேயே போகட்டும் என விட்டுவிட்டாள்.
பேரனை அழைத்துக்கொண்டு அவர் சென்றதும் சூர்யாவிடமிருந்து அழைப்பு வந்தது. "அம்மாவுக்குக் கொஞ்சம் உடம்பு சரியில்லம்மா. கொஞ்சம் ஹெல்புக்கு வரமுடியுமா?" என்று அவன் கேட்க, ‘ஒரு சின்னக் குழந்தைன்னு கூட பார்க்காம பேசக் கூடாததை எல்லாம் பேசிட்டு இப்ப இவங்களுக்கு உடம்பு சரியில்லாம போச்சா?!’ எனச் சுள்ளெனக் கோபம் மூண்டாலும் மறுக்க மனமின்றி அங்கே சென்றாள்.
பெரியவர் மட்டும் வீட்டில் தனியாக அமர்ந்திருக்க, சூர்யா அம்மாவை மருத்துவரிடம் அழைத்துச் சென்றிருந்தான்.