Valasai Pogum Paravaikalaai - 12
12
கை(ம்)ப்பாவை
பத்துடன் பதினொன்று என அவ்வளவு சுலபமாக சரணாலயம் குழுமத்தை விட்டுக்கொடுத்துவிட முடியாது.
குயிலி அந்த நிறுவனத்தைக் கையிலெடுப்பதற்கு முன்பிருந்தே இவர்களுடைய நிறுவனம்தான் அவர்களுக்குத் தணிக்கை செய்து வந்தது.
இவள் அதை வாங்கி, அதன் தரத்தை உயர்த்தும் முயற்சியிலும் இறங்கியிருக்கிறாள். வெற்றிப்பாதையில் பயணித்துக் கொண்டிருக்கும் ஒரு நிறுவனத்தை விட்டுவிட யாருக்குதான் மனம் வரும்.
அதோடில்லாமல் உணவகத் தொழில் துறையில் அவளுக்கென்று ஒரு தனி இடம் இருக்கிறது. காரணம்… அன்னாசி, மாம்பழம், கொய்யா, ஆரஞ்சு போன்ற பழங்களின் சாற்றை உபயோகித்து கொஞ்சமும் சர்க்கரை சேர்க்காமல் நாற்பது வகையான கேக்குகள் மற்றும் இனிப்புகளைச் சொந்தமாகக் கண்டுபிடித்து அதற்கு தன் பெயரில் காப்புரிமைப் பெற்றிருக்கிறாள். குறிப்பிட்ட சில பிரியாணி வகைகளுக்கும். அதில் கொழிக்கும் பணத்தில்தான் அவளது அனைத்து முதலீடுகளுமே!
அவளை எப்படி நேரடியாகப் பகைத்துக் கொள்வார். வேறு வழி இல்லாமல் தங்கத்தைதான் அவளிடம் விட்டுக்கொடுக்க வேண்டியதாகிப்போனது.
நிச்சயம் அந்த ஆளின் மீது நடவடிக்கை எடுப்பதாக வாக்குக் கொடுத்து அவளை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார் ஆடிட்டர் திருநீலகண்டன்.
அதன்பின் தங்கத்தை அழைத்துக் கொண்டு போய் அவளுடைய வீட்டில் விட்டு மேகலாவையும் நேரில் சந்தித்துவிட்டுதான் தன் வீட்டிற்கு வந்தாள்.
இவ்வளவு வருடத்திற்குப் பிறகு இருவரையும் சந்தித்த மகிழ்ச்சி ஒருபுறம் இருந்தாலும் தங்கத்தின் நிலை மனதில் பெரும் பாரமாக ஏறி அமர்ந்து கொண்டது. அவர்களைப் பற்றிய சிந்தனையுடனேயே வீட்டிற்குள் நுழைந்தவளை ஓடி வந்து கட்டிக்கொண்டான் சரண்.
"மம்மம் சாப்டியா பேபி" என்று அவள் வாஞ்சையுடன் கேட்க. "இல்லம்மா உனக்காகதான் வெயிட்டிங்" எனஅவன் கொடுத்த பதிலில் அவசரமாகப் போய் தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டு வந்தாள்.
அனைவரும் ஒன்றாகச் சாப்பாட்டு மேசையில் ஆஜராக, "என்னடா கண்ணம்மா, ஆடிட்டர் ஆஃபீஸ்ல இருந்து ஒரு பொண்ணு வந்திருந்தாளாமே. பிராஞ்ச் மேனேஜர் மீட்டிங்க கூட தள்ளி வெச்சுட்டு அவளோட எங்கயோ வெளியில கிளம்பிப் போயிட்டியாம். என்கிட்ட கூட எந்தத் தகவலுமே சொல்லலையே யார் அந்த வி.ஐ.பி" எனப் படபடவெனக் கேட்டார் வசந்தகுமார். உண்மையில் அவருக்கு அப்படி ஒரு வியப்பு. காரணம் அவ்வளவு சுலபத்திலெல்லாம் தன்னுடைய எந்த வேலையையும் குயிலி தள்ளிப் போடமாட்டாள். அதேபோன்றுதான் வசந்தனும் எந்த ஒரு சூழலிலும் தன் நிதானம் தவறமாட்டார். இந்தப் படபடப்பும் கூட மகள் விஷயமென்று வரவேதான்.
சரண் வேறு இருவரையும் குறுகுறுவெனப் பார்க்க, "நீ மீட்டிங்க கேன்சல் பண்ணிட்டன்னு தெரிஞ்சதுல இருந்து, உன் பீஏ இருக்கானே அவன் பேர் என்ன ம்ம்?" எனக் கற்பகம் விட்ட சிறு இடைவெளியை, "பிரேம்... பாட்டி" என்று சரண் நிரப்ப, "ஆஆங்... அவனைக் கேள்வி மேல கேள்வி கேட்டுத் தொளைச்சு எடுத்துட்டாரு. அந்தப் பொண்ணு யாருன்னு தெரிஞ்சுக்கலன்னா உங்க அப்பாக்கு மண்டையே வெடிச்சிடும். சீக்கிரம் சொல்லிடு" என்று முடிக்க,
"அப்பாவுக்கு மட்டும்தானா இல்ல உனக்குமாம்மா" எனக் கிண்டல் இழையோட குயிலி கேட்கவும், "அப்படி கேளுடி என் தங்கம்" என மனைவியைச் சீண்டினார் வசந்தகுமார்.
"என்னப்பா உங்களாலயே சஸ்பென்ஸ் தாங்க முடியாமதான வந்ததும் வராததுமா என்கிட்ட இவ்வளவு கேள்வி கேட்கறீங்க. அப்ப அம்மா மட்டும் என்ன செய்வாங்க" என அவரையும் வாரியவள், அவர் முறைக்கவும், “ஓகே... ஓகே...” என பம்மி பின், "தங்கத்த பார்த்தேன்ப்பா" என உருக்கமாக முடித்தாள்.
"யார சொல்ற?" என வசந்தகுமார் அதிர்வுடன் கேட்க, "ஆமாம்பா நம்ம தங்கமயிலதான் சொல்றேன்" என்றவள் அவர் மேற்கொண்டு எதுவும் கேள்வி கேட்க இடம் கொடுக்காமல், “ஒரே ஊர் காரங்கதான அதனால அஞ்சுவும் அவளும் இன்னும் கான்டாக்ட்லதான் இருக்காங்க. அவளையும் நேர்ல போய் பார்த்துட்டேன். நல்லா இருக்கா. இப்ப எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு. ஸோ, மீதிய காலைல பேசிக்கலாம்” என்று அப்போதைக்கு அந்தப் பேச்சுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு தன் அறை நோக்கிச் சென்றாள், இந்த இரவு நேரத்தில் அவர்களைப் பற்றி விரிவாகப் பேசினால் நிச்சயம் அவளுடைய அப்பாவின் உறக்கம் பறிபோகும் என்பதை அறிந்த மகளாக.
அடுத்து வந்த இரண்டு தினங்களும் அவர்களைப் பற்றிய பேச்சாகவேதான் தான் இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக அவர்களிடம் எல்லாவற்றையும் சொல்லி முடித்தாள் குயிலி.
மனம் வருந்தினாலும் நிதர்சனத்தை உணர்ந்து கொண்டார்கள் பெரியவர்கள். அவர்கள் இருவரையும் நேரில் காணும் ஆவல்தான் ஏற்பட்டது.
அதை விட அதிகமாக அவர்களுடைய வசந்தகுமார் சாரையும் கற்பகம் அம்மாவையும் குயிலி பெற்ற குமரனையும் நேரில் காணும் தவிப்புடன் அஞ்சு தங்கம் இருவருமே தங்கள் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு இவர்கள் வீட்டிற்கு வந்து விட்டுப் போனார்கள். தயக்கம் காரணமாக சீனு மட்டும் வரவில்லை.
அன்று ஞாயிறு என்பதால் ஒரு நாள் முழுவதும் அங்கே தடபுடல்தான். பேசிப்பேசி ஓய்ந்தார்கள்.