top of page

Valasai Pogum Paravaikalaai - 11

11

இடுக்கண் களைந்த நட்பு


அஞ்சுவிடம் பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்த குயிலிக்கு அவளை நேரில் பார்க்கும் உந்துதல் அதிகமானது.


"ஓய் தங்கம், எத்தனை மணிக்கு ஆஃபிஸ்ல இருக்கணும்" எனக் கேட்டாள் அவளுடைய வசதியைத் தெரிந்துகொள்ளும் பொருட்டு.


"அரௌண்ட் ஃபோர்... முன்ன பின்னன்னா கூட பிஃபோர் ஃபைவ்" எனப் பதில் வந்தது.


“ஓகே அப்ப, கிளம்பு... நேரா போய் நம்ம அஞ்சுவ பார்த்துட்டு தென் உன்னை உங்க ஆஃபீஸ்ல டிராப் பண்றேன்” என்றபடி எழுந்து நின்ற குயிலி தோழிக்குக் கைக் கொடுக்க, அவளது கையைப் பற்றி எழுந்து நின்றவள், “ஹேய்... நிஜம்மாவா சொல்ற? உனக்கு இம்பார்ட்டன்ட் வேலை எதுவும் இல்லையா?” என வியந்தாள் தங்கம்.


“ஹான்... நல்லவேள ஞாபகப் படுத்தின” என்றவள் நேராக ரிசப்ஷன் நோக்கிச் சென்றாள். அங்கே கணினியில் எதையோ தட்டிக்கொண்டிருந்த பிரேம் அவளைப் பார்த்ததும், “என்ன மேம் இங்கயே வந்துட்டீங்க” என்றபடி அவசரமாக எழுந்து நின்றான். மற்ற பணியாளர்களும் அவளைப் பரபரப்புடன் ஏறிட, “நத்திங் பிரேம், நம்ம பிராஞ்ச் மேனேஜர்ஸ் கூட ஒரு மீட்டிங் அரேஞ் பண்ண சொல்லியிருந்தேன் இல்ல, அதை டிராப் பண்ணுங்க. நாளைக்குப் பார்த்துக்கலாம். அண்ட், இன்னைக்கு வேற எந்த அப்பாயின்ட்மென்ட்சும் கொடுக்காதீங்க. நான் முக்கியமான விஷயமா வெளியில போறேன்” என்று அவனுக்குத் தகவல் கொடுத்துவிட்டு, தங்கத்தின் கையுடன் தன் கையைக் கோர்த்தபடி வெளியில் வந்தாள்.


தங்கத்துக்குதான் ஒரு மாதிரி கூச்சமாக இருந்தது. இருவரும் போர்டிக்கோவில் வந்து நிற்கவும் அடுத்த நிமிடம் குயிலியின் வாகனம் அவளுக்கு அருகில் வந்து நின்றது.


அதைப் பார்த்து பிரமித்தவளாக, “கெத்துடி குக்கூ நீ” என்றவாறு அவளுடன் உள்ளே ஏறி உட்கார்ந்தாள் தங்கம்.


“கண்டிகை போங்க அண்ணா, அங்க போனதும் கரெக்ட் லொகேஷன் சொல்றேன்” என்று அவள் சொல்ல வாகனம் கிளம்பியது.


தங்கத்தின் கைப்பேசி ஒலிக்கவும், “மேகலாடீ, ஸ்கூல இருந்து வந்திருக்கும். அதான் ஃபோன் பண்ணுது” என்றவள், “சொல்லு பாப்பா” என்றவாறு அந்த அழைப்பை ஏற்றாள்.


“வீட்டுக்கு வந்துட்டேன் மா... டீயும் பன்னும் சாப்டுட்டேன். இன்னைக்கு ட்யூஷன் லீவு. தனியா போர் அடிகுது... எப்பம்மா வருவ?” என எதிர்முனையில் அவள் பேசியதெல்லாம் ஸ்பீக்கரில் போடாமலேயே சத்தமாகக் கேட்டது.


“எட்டு மணியாவது ஆகும் பாப்பா. வெளியில இருக்கேன். ஆஃபிஸ் போய் க்ளையன்ட் டாகுமென்ட்ஸ் எல்லாத்தையும் ஹான்ட் ஓவர் பண்ணிட்டு வரணும். கொஞ்சம் அட்ஜஸ் பண்ணிக்கோடா ப்ளீஸ்” என்றவள், “பாப்பா, ஒரு ஹாப்பி நியூஸ். எங்க ஃபிரெண்ட் குயிலி இருக்கா இல்ல, அவளை இன்னைக்கு மீட் பண்ணேன்” எனக் குதூகலத்துடன் சொல்ல, “உங்க வசந்தகுமார் சார் பொண்ணுதான? சூப்பர் ம்மா...” என எதிர்முனையில் துள்ளலாக ஒலித்தது தங்கத்தின் மகளுடைய இளம் குரல்.


இன்பத் தேன் வந்து பாய்ந்தது குயிலியின் செவிகளில்.


எந்தளவுக்குத் தங்கம் அவளுடைய மகளிடம் தன்னைப் பற்றி பெருமையாகச் சொல்லியிருந்தால் அவளிடமிருந்து இப்படி ஒரு பதில் கிடைக்கும்.


கண்களில் நீர் கோர்க்க நெகிழ்ச்சியுடன் தோழியின் தோளில் கைப் போட்டு தன்னுடன் நெருக்கிக் கொண்டாள்.


“எங்கம்மா பார்த்த? இப்ப பக்கத்துல இருக்காங்களாம்மா?” என எதிர்முனையில் அவள் படபடக்க, அனிச்சையாகக் கைப்பேசியைத் தோழியிடமிருந்து பறித்தவள், “ஹாய்... செல்லம்! எப்படி இருக்கீங்க?” எனத் தொடங்கி சம்பிரதாயமாக அவளுடைய படிப்பு, படிக்கும் பள்ளி முதலியவற்றைக் கேட்டுத் தெரிந்துகொண்டாள்.


மீண்டும் கைப்பேசி தங்கத்திடம் செல்ல, “குட்டிம்மா, பொழுது இருக்கும் போதே கடைக்குப் போய் இட்லி மாவு வாங்கிட்டு வந்து வைடா. அம்மா வந்ததும் செஞ்சுக் கொடுக்கறேன்” என்று அழைப்பைத் துண்டித்தவள், “பக்கத்து வீட்டுக்காரங்க கொஞ்சம் நல்லவங்களா இருக்கபோக கொஞ்சமாவது நிம்மதியா இருக்கேன் குயிலு. இல்லன்னா வயசுப் பெண்ணைத் தனியா விட்டுட்டு என்னால வேலைல கவனம் செலுத்த முடியாது” என்றாள் விரக்தியுடன்.


‘இவளுக்கு ஏன் இந்த அனாதரவான நிலைமை?!’ என்ற கேள்வி குயிலியை அரிக்கத் தொடங்கியது.


பஃப்பேயில் வைக்கவென அவர்கள் உணவகத்தில் எப்பொழுதுமே உயர்தர இனிப்பு மற்றும் கேக் வகைகளும் தயாராக இருக்கும். அவள் இட்லியைப் பற்றிப் பேசியதும், பிள்ளைகள் இருக்கும் வீட்டிற்குச் செல்லப் போகிறோம் என்கிற முன் யோசனை இல்லாமல் எதையும் எடுத்து வராமல் வந்துவிட்டோமே என்ற எண்ணம் தோன்ற, பிரேமை கைப்பேசியில் அழைத்தவள், “நான் ஒரு அட்ரஸ் சென்ட் பண்றேன் பிரேம். அரௌண்ட் எய்ட், நம்ம நியரஸ்ட் பிரான்ச்ல இருந்து ரெண்டு மினி டிபன் அனுப்ப சொல்லுங்க” என்று பணித்துவிட்டுத் துண்டித்தவள், தன் கைப்பேசியில் பிரேமின் வாட்ஸ் ஆப்பை தேர்ந்தெடுத்துத் தங்கத்திடம் கொடுத்து, “உன் அட்ரஸ் டைப் பண்ணி அனுப்பு” என்று சொல்ல, “எதுக்குடி இதெல்லாம்... நீ என்னை மறுபடியும் அழ வெச்சிடுவ போலிருக்கு” எனத் தழுதழுத்தாள் தங்கம்.


“லூசு... எட்டு மணிக்கு போய் நீ எப்ப டின்னர் செஞ்சு... எப்ப சாப்பிட்டு... பாவம்டி குட்டிம்மா. இன்னைக்கு என் கூட சுத்தறதால என்னோட ட்ரீட்” என முடித்தவள் ஒரு சூப்பர் மார்க்கட்டில் வாகனத்தை நிறுத்தி பழம், பிஸ்கட் முதலியவற்றை வாங்கி வந்தாள்.


அடித்தட்டு மக்கள் புழங்கும் ஏரிக்கரை ஆக்கிரமிப்பு குடிசைப் பகுதியில் அஞ்சுவின் வீடு இருந்தந்து. அதில் சில கான்க்ரீட் வீடுகளும் இருக்க, அதில் ஒன்றுதான் அவளுடையது.


அந்தத் தெருவுக்குள் காரை ஓட்டிப் போக முடியாது என்பதால் வசதியான இடம் பார்த்து வாகனத்தை நிறுத்தச் சொல்லிவிட்டு நடந்தே போனார்கள்.


இருவருமாகப் போய் அஞ்சுவின் வீட்டுக் கதவைத் தட்ட, வெளியில் வந்து எட்டிப் பார்த்தவளுக்கு அதிர்ச்சியில் பேச்சே வரவில்லை.


“ஏய், என்ன... வந்தவங்கள வான்னு கூப்பிட மாட்டியா?” எனத் தங்கம் கிண்டலாகக் கேட்கவும்தான் சற்றுச் சுதாரித்தவள் கண்ணீருடன் குயிலியை அணைத்துக்கொண்டாள்.


மூவருமாக உள்ளே நுழைய, ஒரு பாயை விரித்து அதில் சயனித்த படி தொலைக்காட்சியில் ‘நிஞ்சா அட்டோரி’'யுடன் இரண்டறக் கலந்திருந்த அஞ்சுவின் சின்ன மகள் லட்சுமி அதிலிருந்து தன்னைப் பிரித்துக்கொண்டு, “ஐ... தங்கம் ஆண்ட்டி... வாங்க... வாங்க...” என மகிழ்ச்சியாக வரவேற்றவள், “மா... இவங்கதான் குயிலி ஆன்ட்டியா” என்றாள் வியப்பு மேலிட.


“ஆமாம்டீ... வாயாடீ” என்ற தங்கம் “எங்க உங்க அக்காவைக் காணும்” என்று கேட்க, “இன்னும் ஸ்கூல்ல இருந்து வரல” என்றபடியே, “இன்னைக்கு அம்மா கூட ஃபோன்ல பேசினீங்களாமே! பெரிய ஹோட்டல்லாம் வெச்சிருக்கீங்களாமே! நான் ஸ்கூல் விட்டு வந்ததுல இருந்து அம்மா உங்களைப் பத்தி மட்டும்தான் ஆன்ட்டீ பேசிட்டே இருக்காங்க” என்றாள் பெருமையுடன்.


தன் கையில் வைத்திருந்த பையை அவளிடம் கொடுத்து அவளுடைய கன்னத்தைக் கிள்ளிக் கொஞ்சியவாறு, “அப்படியே சின்ன வயசுல உன்னைப் பார்த்த மாதிரியே இருக்காடி அஞ்சு” என்ற குயிலி, “அப்படியே இவளை மாதிரியே சும்மா கேப் விடாமா பேசறா இல்ல” என வியந்தாள் தங்கத்திடம்.


அதில் சின்னவளின் கண்கள் நட்சத்திரமாக மின்ன, “உன் பேர் என்னடா குட்டி?” என அவள் இயல்பாகக் கேட்கவும், “வசந்தலக்ஷ்மி!” என்றவள், “அக்கா பேர் கூட வசந்தகல்யாணி! அம்மாவுக்கு உங்க அப்பாவை ரொம்ப பிடிக்கும் இல்ல, அதான் எங்களுக்கு இந்தப் பேர்” என விளக்கம் கொடுக்க, கண்கள் கலங்க, தன் உணர்ச்சியைக் கட்டுப்படுத்த இயலாமல் அந்தப் பாயிலேயே சரிந்து அமர்ந்தாள்.


“குக்கூ, இருடி சேர் எடுத்துப் போடறேன்” என அஞ்சு பதற, “ஏய் லூசு, எதுக்கு இப்ப இந்த ஃபார்மாலிட்டி எல்லாம். இதுவே வசதியாதான் இருக்கு’ என்றபடி அவள் வாகாக நிமிர்ந்து அமர்ந்தாள்.


வேகமாகப் போய் தேநீர் தயாரித்து வந்த அஞ்சு, “இஞ்சி ஏலக்கால்லாம் போட்டு உங்க அப்பா போடுவாரு இல்ல, அந்த மாதிரி டீ. சாப்பிட்டு எப்படி இருக்கு சொல்லு” என்றபடி இருவரிடமும் நீட்ட, அதே சுவையுடன் அப்படியே இருந்தது.


“உங்கள மீட் பண்ணத சொன்னா அம்மா அப்பா ரொம்ப சந்தோஷப் படுவாங்க. ஒரு நாள் எல்லாரும் வீட்டுக்கு வாங்க” என அழுத்திச் சொன்னாள் குயிலி.


திடீரென்று இவர்களைக் கொண்டுபோய் அவர்கள் முன் நிறுத்தினால், இரண்டு பேருமே அதை எப்படி எடுத்துக்கொள்வார்களோ எனக் கவலையாக இருந்தது அவளுக்கு.


அதுவும் தங்கமயிலை இப்படி ஒரு நிலையில் பார்த்தால் தாங்கவே மாட்டார் அப்பா. முதலில் சொல்லி அவர்கள் மனதை தயார்ப்படுத்தி பின்பு அவர்களிடம் அழைத்துச் செல்லலாம் என்ற முடிவுக்கு வந்திருந்தாள்.


அப்பொழுது வீட்டிற்குள் நுழைந்த சீனு அவர்களைப் பார்த்து லுங்கியை இறக்கி விட்டபடி, “வாம்மா... எப்படி இருக்க?” எனத் தங்கத்தை விசாரித்தவன், “இவங்கதான் வசந்தகுமார் சார் பொண்ணா?” எனக் கேட்டான் தயக்கத்துடன்.


பெரியவள் கல்யாணியும் அங்கே வந்துவிட அறிமுகப்படலம் முடிந்து கொஞ்சம் பழைய கதையெல்லாம் பேசி முடித்து குயிலியும் தங்கமும் அங்கிருந்து கிளம்பினார்கள்.


பேச்சின் நடுவில், அவர்கள் குடும்பத்தொழில், வருமானம், பிள்ளைகளின் படிப்பு பற்றியெல்லாம் கூட சொல்லியிருந்தாள் அஞ்சு. அனைத்தையும் மனதில் அசைப்போட்டபடி குயிலி காரில் அமர்ந்திருக்க, வரும்பொழுது இருந்தது போல் இல்லாமல் தங்கத்திடம் ஒரு வித பதட்டம் தெரிந்தது.


அதை உணர்ந்தவளாக, “என்ன ஆச்சுடி, ஏன் ஒரு மாதிரி இருக்க?” என்று குயிலி கேட்க, “ப்ச்... பேச்சு சுவாரஸ்யத்துல நேரம் போனதே தெரியல. ஆஃபிஸ் போனா, ஏதாவது வேலை கொடுத்து உட்கார வெச்சாலும் வெச்சிடுவாங்க. அப்பறம் வீட்டுக்குப் போக லேட் ஆயிடும்டி” என அவள் பதட்டப்பட, கைப்பேசியை எடுத்து நேரத்தைப் பார்த்தாள். ஆறு ஆகியிருந்தது.


“ஏன் தங்கம், உனக்கு இந்த வெளியில சுத்தற வேலையெல்லாம் கொடுக்கறாங்க. ஏதோ இன்டர்னல் ஆடிட்னா கூட பரவாயில்ல. ஆஃபிஸ்லயே செய்யற மாதிரி வேலை எதுவும் இல்லையா?” எனக் கேட்டாள் தெரிந்துகொள்ளும் முனைப்புடன்.


“இன்டர்னல் ஆடிட் போகணும்னா ஒரு பீகாம் டிகிரீயாவது முடிச்சிருக்கணும். இல்ல ஸ்டூடண்டா இருக்கணும். நான் பத்தாவது முடிச்சதே அதிசயம். இருந்தாலும் டேலில வேலை செய்வேன்” என ஒரு பெருமூச்சு விட்டவள், “கொஞ்ச நாளா எங்க மேனேஜருக்கும் எனக்கும் டெர்ம்ஸ் சரியில்ல. அதான் வேணும்னே அதிகமாக ப்ரெஷர் போடறாரு” என மென்று விழுங்கி அவள் சொன்ன விதமே அது பாலியல் ரீதியான சீண்டல் என்பதாகப்பட்டது குயிலிக்கு.


“என்ன சொன்ன? எனக்கு சரியா புரியல? தெளிவா சொல்லு” என குயிலி உஷ்ணமாக, அவளது பார்வை அனிச்சையாக ஓட்டுநரிடம் சென்றது. சங்கடத்துடன் கண்களில் நீர் கோர்க்க தலையைக் குனிந்துகொண்டாள்.


“பரவாயில்ல சொல்லு, குமார் அண்ணா நம்பிக்கையான ஆள்தான். நம்ம பேசறத எல்லாம் காதுல வாங்கமாட்டார்” என குயிலி கிசுகிசுப்பாகச் சொல்ல, “அந்த ஆள் ஒரு அரைக் கிழம் குயிலு, என் கிட்ட டச் ஃபோன் கிடையாது. பாப்பாவுக்குதான் ஸ்கூலுக்காக வாங்கிக் கொடுத்திருக்கேன். அதுல ஒரு நாள் அவன் கிட்ட இருந்து தப்பான வீடியோ வந்துது. நல்ல வேளையா பாப்பா அதைப் பார்க்கல. அது என் ஆஃபிஸ் நம்பர்னு மெசேஜை ஓப்பன் பண்ணாமலேயே என் கிட்ட கொடுத்துட்டா. எனக்குதான் வெலவெலத்துப் போச்சு.


பாவம் வயசான ஆளு, ஏதோ தெரியாம பார்வர்ட் பண்ணிட்டாரு போலிருக்குன்னு விட்டுட்டேன். அதை அவர்கிட்ட சொல்லவும் பிடிக்கல. அடுத்த நாள் ஆஃபீஸ் போனா, ‘நான் அனுப்பின படத்தைப் பார்த்தியா’ன்னு பல்லை இளிக்குது சனியன். எனக்கு ஒரு மாதிரி ஷாக் ஆயிடுச்சு. அன்னைக்கே பாப்பா ஃபோன்ல இருந்து அந்த நம்பர ப்ளாக் பண்ணிட்டேன். ஆனா அதுல இருந்து தொடர்ந்து ஒரே டார்ச்சர்தான்.


இப்ப கொஞ்ச நாளாத்தான் இப்படி. பிசிக்கல் அப்யூஸ்லாம் இல்ல. ஆனா ஃபோன்ல 'அந்த' மாதிரி அசிங்கமா பேசணும், மெசேஜ் பண்ணனும்னு தொல்லைப் பண்ணுது அந்தக் கோட்டான். நான் கண்டுக்காம போறதால இஷ்டத்துக்கு வேலை கொடுத்து உயிரை எடுக்குது” என அவள் மெல்லிய குரலில் தன் துன்பத்தை விவரித்தாள்.


“அவனும் உன்னை மாதிரி ஒரு ஸ்டாஃப்தான. நீ ஏன் இதை உங்க ஆடிட்டர் கிட்ட சொல்லல” எனக் கேட்டள் குயிலி கடுப்புடன்.


“அது எப்படி முடியும் குயிலு. அவரு அங்க ரொம்ப வருஷமா வேலை செய்யற நம்பிக்கையான ஆளு. நான் பொம்பள பிள்ளையோட தனியா இருக்கறவ. தப்பை அப்படியே என் மேல திருப்பிட்டா நான் என்ன செய்வேன் சொல்லு. இந்த வேலையை நம்பிதான் நானே இருக்கேன். அதோட எனக்கு இந்த வேலைக்கு சிபாரிசு செஞ்சவங்களுக்கும் கெட்ட பேரு” என அவள் விளக்கம் கொடுக்க, குயிலியிடம் ஒரு நீண்ட பெருமூச்சு எழுந்தது. கண்ணை மூடி சாய்ந்தபடி எதையோ யோசிக்கத் தொடங்கிவிட்டாள்.


அதற்குள் தங்கம் வேலை செய்யும் அலுவலகம் வந்திருக்க வாகனம் நின்றது. தன் பக்க கதவைத் திறந்து இறங்கியவள், “தேங்க்ஸ்டி... உன் புண்ணியத்துல இன்னைக்கு ஏசி கார்ல சொகுசா வந்து இறங்கியிருக்கேன்” என அவள் தன்னை இறக்கிவிட்டுச் சென்றுவிடுவாள் என்ற எண்ணத்தில் தங்கம் சொல்லிக்கொண்டிருக்க, மற்றொரு பக்கமாகக் கீழே இறங்கினாள் குயிலி.


தங்கம் அவளை விநோதமாகப் பார்க்க, “தேங்க்ஸ்லாம் அப்பறம் சொல்லிக்கலாம், வா... இப்ப உள்ள போகலாம்” என்றவள், “நீ கேஷுவலா போய் உன் வேலையைப் பாரு. நான் இப்ப எதுக்காக இங்க வந்தனோ அந்த வேலையைப் பார்க்கறேன்” என்றபடி பிரம்மாண்டமான அந்த அலுவலகத்திற்குள் நுழைந்தாள்.


ஒரு அதிர்வுடன் தங்கம் அவளைப் பின் தொடர, அங்கே அப்படி ஒரு மரியாதையான வரவேற்பு குயிலிக்கு. முக்கியமான நபர்கள் வந்தால் அவர்களை அமர வைப்பதற்கான இடத்திற்கு அவள் அழைத்து செல்லப்பட சிறு சிறு கேபின்களாகத் தடுக்கப்பட்டு கணினிமயமாக இருந்த அந்த தளம் முழுவதிலும் ஆட்கள் பரபரப்பாக வேலை செய்துகொண்டிருக்க அதில் மற்றொரு கோடியில் எங்கேயோ போய் மறைந்தாள் தங்கம்.


சில நிமிடங்களுக்கெல்லாம், காலை குயிலியிடம் கையெழுத்து வாங்கிய ஆவணங்களையெல்லாம் எடுத்துக்கொண்டு வருமாறு அவளை சீனியர் ஆடிட்டர் அழைப்பதாகத் தகவல் வர, உள்ளுக்குள்ளே ஒரு உதைப்புடன் அங்கே சென்றாள்.


வியப்புடன், “ஏம்மா இன்னைக்கு நீங்களா சரணாலயம் போனீங்க” எனக் கேட்டார் அவர்.


“ஆமாம் சார்” எனத் தங்கம் பதில் கொடுக்க அவர் முகத்தில் கேள்வியின் ரேகைப் படிந்தது.


“ஏன் சார், இங்க இருந்து ஒருத்தங்க பஸ்ல ட்ரேவல் பண்ணி அவ்வளவு தூரம் வரணும்னா மினிமம் டூ ஹார்ஸ் ஆகும். இதுக்கெல்லாம் உங்க ஃபர்ம்ல டூ வீலர் வெச்சிருக்கற மேல் ஸ்டாஃப்ஸ் யாரும் இல்லையா?” எனக் குதர்க்கமாக அவரிடம் நேரடியாகக் கேட்டாள் அவருக்கு முன்னால் உட்கார்ந்திருந்த குயிலி.


தங்கத்துக்குப் பயத்தில் உடல் நடுங்கியது. ‘இன்னைக்குதான் இவளைப் பார்த்தோம். அதுக்குள்ள இவ்வளவு பிரச்சனையை இழுத்து விடறாளே’ என்ற எண்ணமே அவளுக்கு வந்துவிட்டது.


“சாரி மேடம், இங்க ஏதோ மிஸ்டேக் ஆகியிருக்கு. என்னன்னு விசாரிக்கறேன்” என அவர் இதமாகவே அவளுக்குப் பதில் கொடுக்க, “என்ன விசாரிக்க போறீங்க’ என சீறியவள் தங்கம் அவளிடம் சொன்ன அனைத்தையும் சொல்லி முடித்தாள்.


“ச்சச்ச, அதெல்லாம் இருக்காது. அவர் அப்படிப்பட்ட ஆள் இல்ல. தங்கம் ஏதோ தப்பா புரிஞ்சிட்டு” என சொல்லிக்கொண்டே போனவரைக் கைக் காண்பித்துத் தடுத்தவள், “அவ உங்களைப் பத்தி சரியாதான் சொல்லியிருக்கா” எனத் தலை கவிழ்ந்து நின்ற தங்கத்தைப் பார்த்தபடியே, “உங்க கிட்ட வேலை செய்யற ஒரு பொண்ணுக்குப் பாதுகாப்பு இல்லன்னா நீங்க அதுக்காக வருத்தப்படணும் மிஸ்டர் திருநீலகண்டன். அதை விட்டுட்டு இப்படி கண்மூடித்தனமா சப்பைக்கட்டுக் கட்டக்கூடாது.


அவளுக்கு மட்டும் நல்ல பின்புலம் இருந்திருந்தா முதல் தடவ தப்பா நடந்த போதே அந்த ஆளை செருப்பெடுத்து அடிச்சிருப்பா. ஆனா சூழ்நிலை ஒருத்திய இவ்வளவு கோழையா மாத்தும்னு இப்பதான் எனக்கு தெரிஞ்சுது. இவளுக்கு மட்டும் இல்ல எனக்கு புரிஞ்ச வரைக்கும் அந்த ஆளு இங்க இருக்கற வேற யாரவது ஒரு பொண்ணுக்கும் இதே தொல்லையைக் கொடுத்திருப்பான். உங்களுக்கு மனசு இருந்தா அந்த ஆளைக் கண்காணிச்சு பாருங்க” என்றவள், “இனிமேல் தங்கம் இங்க வேலை செய்யமாட்டா” என அழுத்தமாகச் சொல்லிவிட்டு, “அந்த ஆள் மேல நீங்க எந்த நடவடிக்கையும் எடுக்கலன்னா நான் எடுப்பேன். தென் என்னோட கம்பெனி அக்கௌண்ட்ஸ் இனிமேல் வேற ஆடிட்டர்ஸ் பார்ப்பாங்க. அது உங்களுக்கு ஓகேவான்னு நீங்களே டிசைட் பண்ணிகோங்க” என்றாள் ஒரு நிமிர்வுடன்.


தங்கத்தின் தலை தானாக நிமிர்ந்தது.


*********

4 comments
© KPN NOVELS COPY PROTECT
bottom of page