top of page

Valasai Pogum Paravaikalaai - 10

Updated: Aug 30, 2022


10

மண் குதிரை


‘நான் கொடுத்து வெச்சது அவ்வளவுதான்னு மனசைத் தேத்திட்டு’ என்று சூர்யா சொன்ன வார்த்தைகள் அவளது செவிகளுக்குள்ளேயே ஒலித்துக்கொண்டிருந்தது. பேசும்போது அவனுடைய முகம் பிரதிபலித்த இனம் புரியாத ஒரு வலி, அவனுடைய காயத்திற்குத் தான் ஒரு மருந்தாக இருக்க வேண்டும் என அவளை அவசரமான ஒரு முடிவை எடுக்க வைத்தது.


அடுத்த நாளே வசந்தகுமார் மகளை அழைத்து அவளது விருப்பத்தைக் கேட்க, கொஞ்சமும் தயங்காமல் ‘சரி’ என்று சொல்லிவிட்டாள். கமலக்கண்ணனின் குடும்பத்தின் மீது இருந்த நம்பிக்கையில் அவருக்குமே அப்படி ஒரு நிம்மதி வந்து சேர்ந்தது.


வேறெதைப் பற்றியும் ஆராயத் தேவை இல்லாமல் போக அந்த வாரத்திலேயே நிச்சயதார்த்தம், அந்த மாதத்திலேயே திருமணம் எனத் தடபுடலாக நடந்து முடிந்தது.


அவனது விடுமுறை, அவர்களிருவரும் தேனிலவு சென்றுவருவதற்கான அவகாசம், அவளது விசா நடைமுறைகள் எனக் கணக்கில் கொண்டுதான் இந்த அவசரம்.


குலதெய்வ வழிபடு, நேர்த்திக்கடன், மறுவீடு அது இது எனத் தொடர்ந்த நாட்கள் ரெக்கைக் கட்டிக்கொண்டு பறந்தன.


தேனிலவைத் திகட்டத் திகட்ட அனுபவிக்க வேண்டும் எனச் சரியாகத் திட்டமிட்டு இருபது நாட்கள் கேரளாவைச் சுற்றினார்கள்.


அந்த வானமே வசப்பட்ட களிப்பில் காதலும் காமமும் போட்டிப்போட அவன் அவளைக் கொண்டாடித் தீர்க்க, அவன் மீது பித்தாகிக் கிடந்தாள் குயிலி.


சூர்யாவினுடையது கட்டுக்கோப்பான ஒரு கூட்டுக் குடும்பம். மூத்தவருக்கு மூன்று மகள்கள். எல்லோருக்குமே திருமணம் முடிந்திருந்தது. இரண்டாவதுதான் தெய்வசிகாமணி. மூன்றாவது கமலக்கண்ணனுக்கு இரண்டு மகள்கள். ஒருத்தி கல்லூரியிலும் மற்றொருத்தி பள்ளியிலும் படிகிறார்கள். பாட்டியின் ஆளுமையில் மூன்று மருமகள்களும் அனுசரித்துப் போகிறார்கள்.


எல்லோருமே பல வருடங்களாக குயிலிக்குப் பழக்கம் என்பதால் அங்கே இருப்பது அப்படி ஒன்றும் கடினமாக இல்லை. சேர்ந்தாற்போல் அங்கே இருக்க வேண்டிய சூழலும் இல்லாததால் அந்த வீட்டின் பழக்கவழக்கங்கள் ஒன்றும் பிடிபடவில்லை.


இதே ஓட்டத்தில் விடுப்பு முடிந்து அவன் கனடா சென்றுவிட, குயிலி விசாவிற்காகக் காத்திருந்தாள். இதற்கிடையில் அவளுடைய இறுதி ஆண்டு படிப்பையும் கவனிக்க வேண்டி இருந்தது.


அதுவும் அவன் கிளம்பிய தினம், இவள் இன்றி அவனால் ஒரு நொடி கூட இருக்க இயலாது என்பது போல அப்படி ஒரு தவிப்பு அவனிடம். அவனுடைய இறுகிய அணைப்பும் உயிர் குடிக்கும் நீண்ட இதழ் முத்தமும் அதை அவளுக்கு அப்பட்டமாக உணர்த்தியது. “நீ இல்லாம இந்த ஒரு மாசத்த எப்படிதான் தள்ளப் போறேனோ தெரியல குக்கூ” எனப் புலம்பித் தீர்த்தபடிதான் விமானமே ஏறினான்.


இங்கே இவள் தவித்தத் தவிப்பை இவள் மட்டுமே அறிவாள்.


அடுத்து வந்த ஒரு மாதமும் ஸ்கைப்பிலும் தொலைப்பேசியிலுமே குடும்பம் நடத்தினர். அதுவும் கடைசி ஒரு வாரம் அதற்கும் கூட பங்கம்தான். கேட்டால், “புது வீடு செட் செஞ்சிட்டு இருக்கேன். ஆஃபிஸ் பிசி” என சுருக்கமாக முடித்துக்கொண்டான். முதலிலிருந்த ஒரு ஆர்வம் அவனுக்கு வடிந்ததுபோல் தோன்றினாலும் நேரில் சென்றால் எப்படியும் கரைந்து உருகதான் போகிறான் என்ற கனவில் மிதந்தாள். ஆனால் அது பகல்கனவாகவே போனது.


அவள் இங்கிருந்து கிளம்பும் தினம் அவளை வழி அனுப்ப அவர்கள் குடும்பம் மொத்தமும் அவளுடைய வீட்டில் குழுமியிருந்தது. ஒரு வாரமாகப் புகுந்த வீட்டிலிருந்தவள் அன்றுதான் அங்கேயே வந்திருந்தாள். கனடாவுக்கு எடுத்துச்செல்ல வேண்டிய அனைத்தையும் சரிபார்த்துக் கொண்டிருந்தவளைக் கிண்டல் செய்து ஒரு வழி செய்துகொண்டிருந்தார்கள் அவளுடைய சின்ன மாமாவின் மருமகளும் அண்ணிகளும்.


“உனக்குப் பிறந்த வீட்டுலயும் சரி புகுந்த வீட்டுலயும் சரி சரியான கும்பல்தான் இல்ல. ப்ரைவசியே கிடையாது. ஆனா கனடா போனா பூஜை வேளை கரடிகள் எல்லாம் இல்லமா நினைச்ச நேரத்துக்கு ‘லவ் மேக்கிங்’தான் போ” என விளையாட்டாகச் சொல்வது போல் விஷமமாகச் சொல்லிக் கண்ணடித்தாள் மஞ்சு, அவளுடைய பெரிய மாமாவின் பேத்தி.


“அது என்னடி அது காஃபி மேக்கர் மாதிரி லவ் மேக்கர்?” என அவளுடைய பெரிய அண்ணிப் புரியாமல் கேட்க, களுக் எனச் சிரித்த சின்ன அண்ணி அவளது காதில் கிசுகிசுக்க, மனதிற்குள் திக்கென்றது குயிலிக்கு. அன்றும் இதே வார்த்தையைதானே அவன் சொன்னான். கைப்பேசியின் துணையுடன் வேகமாக கூகுளில் தேட, அதன் அர்த்தம் அனர்த்தமாகதான் இருந்தது. அவ்வளவுதான் காற்றுப் போன பலூனாக அதன்பின் அவளுக்குக் கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. பயத்தில் உள்ளுக்குள்ளே சுருண்டுதான் போனாள்.


அன்றிரவே குயிலி தனியாக அவனை நோக்கி கனடா பயணப்பட்டாள். ஆர்வமாக அவள் போய் அங்கே தரையிறங்க, அவளை அழைத்துச்செல்ல விமான நிலையம் வந்திருந்தவன் நிமிர்ந்து அவளுடைய முகத்தைக்கூட பார்க்கவில்லை சூர்யா.


ஒரு மாதத்திற்கு முன்பு இருந்தவனுக்கும் இப்பொழுது இருப்பவனுக்கு நூறு சதவிகித வித்தியாசம்.


அடி வயிற்றில் பயம் பந்தாக உருண்டது. அவனை நேரில் சந்தித்ததும் அவனிடம் கேட்க வேண்டும் என்று எண்ணிய கேள்வி தொண்டைக்குள்ளேயே அடைத்து நின்றது. அதற்கான பதில் எதிர்மறையாக வந்துவிட்டால் ‘அடுத்து என்ன?’ என்ற கேள்வியுடன்.


அவன் மீது எந்த ஒரு குற்றமும் சொல்ல இயலாதே. எல்லாமே இவளுடைய அறியாமையால் வந்த வினை அல்லவா? ஆனாலும் போலியாக நடித்து அவன் ஏமாற்றவில்லை என்பது மட்டுமே சிறு ஆறுதல்.


அவர்களுக்கே அவர்களுக்கான வீட்டிற்குள் அவள் அடி எடுத்து வைத்ததும் அவளுடைய பயணப் பெட்டிகளை இழுத்து வந்து ஓரமாக வைத்தவன், “இது ஒரு டபுள் பெட்ரூம் அப்பார்ட்மென்ட். ப்ரொவிஷன் எல்லாம் வாங்கி செட் பண்ணிட்டேன். ரெப்ரெஷ் ஆகிட்டு வந்து எல்லாத்தையும் பார்த்து வெச்சுக்கோ” என ஒப்பிப்பது போலச் சொல்லிவிட்டு ஓடி ஒளிந்து கொண்டான்.


சுணங்கிப்போன மனதுடன் போய் குளித்துத் தயாராகி அவள் வர, சமையலறையில் அவளுக்காகக் காஃபி தயாரித்துக் கொண்டிருந்தான்.


அங்கே நிலவிய இறுக்கமான சூழ்நிலை அவளை அச்சுறுத்த, அவளுக்காக அங்கிருக்கும் ஒரே துணையான அவனைதான் நாட வைத்தது. வேகமாகச் சென்று பின்னாலிருந்து அவனை அணைத்தவளைத் தீக்கங்குகள் மேலே விழுந்ததுபோல் உதறித் தள்ளினான். அவள் அதிர்ச்சியுடன் திகைத்துத் தடுமாற, சட்டென தன் தவறை உணர்ந்தவனாக அவளைத் தன் கை வளைவுக்குள் கொண்டு வந்தவன், “சாரி, இது வரைக்கும் தனியா இருந்தேன் இல்ல, அதான். இனிமேல் இப்படி பூனை மாதிரி வராத’ என்று படபடத்துவிட்டு, “காஃபி எடுத்துக்கோ” என அங்கிருந்து அகன்றான்.


‘நடப்பது நடக்கட்டும், அவனாகவே தன்னை நாடி வரும்பொழுது வரட்டும்’ என்ற முடிவுக்கு வந்துவிட்டவள், அந்தச் சூழ்நிலைக்குத் தன்னைப் பொருத்திக்கொள்வதில் மட்டுமே முனைப்பாக இருந்தாள்.


காலை உணவு மட்டுமே அவன் வீட்டில் சாப்பிடுகிறான் என்பதால் காலைச் சிற்றுண்டி அமர்க்களப்படும். பார்த்துப் பார்த்து சமைத்து அவனுக்குப் பரிமாறி, ஏதாவது ஒரு சிறு பாராட்டு உதிராதா என ஆர்வமுடன் அவனது முகத்தை ஏறிடுவாள். கடைசியில் கடவுளுக்கு நிவேதனம் செய்த உணவின் நிலைதான் மிஞ்சும். என்ன கடவுளுக்குப் படைப்பது அப்படியே இருக்கும் இவனுக்குப் பரிமாறுவதில் கொஞ்சமே கொஞ்சம் குறையும் அவ்வளவுதான்.


தினமுமே இரவு தாமதமாகதான் வீடு திரும்புவான். வந்தாலும் கூட மடிக்கணினியே கதி என்று கிடப்பான். வேலைச்சுமை என இவள் தானாகப் புரிந்துகொள்ள வேண்டுமாம்.


சமயத்தில் காதில் ஹெட் செட்டைப் போட்டுக்கொண்டு தனியாகப் போய் கைப்பேசியில் யாருடனோ காரசாரமாகப் பேசிக்கொண்டே இருப்பான், இடையில் சாதாரணமாகக் கூட இவளால் எதுவும் பேச இயலாது.


அருகில் போய், அப்படி யாருடன் என்னதான் பேசுகிறான் எனக் கேட்க நினைத்தாலும் அடிப்படை நாகரீகம் தடுக்கும்.


தாய் தந்தை மடி தேடி மனம் ஏங்கும். அவர்கள் போனில் அழைக்கும் போதெல்லாம் அழுகையில் தொண்டை அடைக்கும். ஆனாலும் எதையும் சொல்ல மனம் வராது. இவளுடைய சுகத்தை மட்டுமே யாசிப்பவர்கள், அவசரப்பட்டு எதையாவது சொல்லி அவர்களை நோகடிக்க வேண்டாம் என அனைத்தையும் விழுங்குவாள்.


‘படி... படி... படி... உன் தகுதியை வளர்த்துக்கொள்... சொந்தக்காலில் நில்’ என அப்பா படித்துப் படித்து சொன்னதெல்லாம் எவ்வளவு உண்மை என ஒவ்வொரு நொடியும் உணர்ந்து மறுகுவாள்.


அஞ்சு, தங்கம் இருவரின் நினைவும் வந்து நெஞ்சை அடைக்கும். ‘ஆசைப்பட்டும் அவர்களுக்குக் கிடைக்காமல் போன வாய்ப்புகள் எனக்கெதிரே குவிந்து கிடந்தும் மிதித்துத் தள்ளிவிட்டேனே! எனக்கிந்த நிலை தேவைதான்’ எனத் தன்னைத்தானே சபிப்பாள்.


ஒரு வாரம் இப்படியே கரைய, நாளுக்கு நாள் உடலுக்குள்ளும் ஏதோ ஒரு புதிய அவஸ்தைப் பரவி மன அழுத்தம் கரையைக் கடந்தது.


அன்று இரவு அவன் வீடு திரும்பவும் பேய் பிடித்தவள் போல அமர்ந்திருந்தவளை ஒரு பீதியுடன் அவன் நெருங்கவும் அப்படியே ஆடித் தீர்த்துவிட்டாள்.


“விருப்பப்பட்டுதான என்னைக் கல்யாணம் பண்ணின? இப்ப என்ன வந்தது? ஏன் இப்படி வில்லன் மாதிரி நடந்துக்கற? உன்னை நம்பி கழுத்தை நீட்டின பாவத்துக்கு என்னைப் பழி வாங்கறியா?” என அவனை உலுக்கி எடுக்க, அப்படியே உடைந்தான் சூர்யா.


“ஐயோ இல்ல குயிலி... உன்னை நான் ஏன் பழி வாங்கப் போறேன். உன்னைக் காயப்படுத்திப் பார்க்க என்னால முடியவே முடியாது. உன்னை நேர்ல பார்கறதுக்கு முன்னால இருந்தே நான் உன்னை லவ் பண்ணிட்டு இருக்கேன்” எனக் கண்ணீர் தளும்பச் சொன்னவன்,


“ஆனா மமதியோட எனக்கு ஏற்பட்ட பிசிக்கல் ரிலேஷன்ஷிப் ஒரு ஆக்சிடன்ட். எங்களுக்குள்ள இருந்த அதீத லவ்வால அது நடக்கல. ஒரே ஒரு நைட் ஒரே இடத்துல இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால புத்திப் பேதலிச்சு போய் நடந்த ஒரு சறுக்கல். அந்த நேரத்துல ரெண்டு பேருமே ஒர்க் ப்ரெஷர்ல உண்டான மன அழுத்தத்துல இருந்தோம். சரியான வின்டர். குளிர் மைனஸ்ல இருந்ததால எங்கயும் வெளியில போக முடியல. இதுல யார் மேல தப்புன்னு என்னால சொல்ல முடியல. அந்த நேரத்துல அவளுக்கும் அது தேவையா இருந்திருக்கலாம். இத்தனைக்கும் அவ என்னைவிட ரெண்டு வயசு பெரியவ. ஆனாலும் அவ மேல குத்தம் சொல்லி அவளைக் கழட்டி விடணும்னு நான் நினைக்கவே இல்ல. கல்யாணம் பண்ணிக்கலாம்னுதான் கேட்டேன். ‘இதெல்லாம் கல்யாணத்துக்கு ஒரு ரீசனான்னு கிண்டலா கேட்டா?’ கல்யாணம்னு வரும்போது அவளோட எதிர்பார்ப்பு ரொம்ப ஹையா இருந்துது. அதுக்கு தகுந்த மாதிரி அவங்க வீட்டுலயும் அரேஞ் பண்ணிட்டாங்க. அவளும் அதுக்கு ஒத்துட்டுப் போயிட்டா. அவளே அப்படி ஒரு முடிவுக்கு வந்த பிறகு நான் மட்டும் துறவியா வாழனுமான்னுதான் உன்னை” என அவன் விளக்கம் கொடுக்க, அன்று தயங்கித் தயங்கி அவன் சொன்னதன் பொருள், உச்சந்தலையில் ஓங்கி அடித்ததைப் போல அவளுக்கு விளங்கியது.


‘அதுதான் எல்லாம் பேசி முடித்து அதாவது அவனைப் பொறுத்தவரை ஒளிவு மறைவில்லாமல் அனைத்தையும் சொல்லி, விருப்பத்துடன் திருமணம் எனும் பந்தத்திற்குள்ளும் நுழைந்து இயல்பான ஒரு வாழ்க்கையை வாழவும் தொடங்கியாகிவிட்டதே! பின் ஏன் இப்படி இருக்கிறான்? இன்னும் பெரியதாக ஏதாவது குண்டைத் தூக்கிப் போடப் போகிறானோ?’ என அவனை அச்சத்துடன் ஏறிட்டாள் அவள்.


“ஆனா அவளோட அந்தக் கல்யாணம் நின்னு போச்சு. பிகாஸ் ஷி இஸ் பிரக்னன்ட் வித் மை சைல்ட்” என அவள் பயந்தது போல் அலுங்காமல் நலுங்காமல் உடல், உயிர் அனைத்தையும் ஆவியாக்கும் ஒரு அபாய குண்டைதான் அவள் தலை மீது போட்டான்.


உண்மையில் அதை ஏற்க முடியாமல், “புரியல!” என அவள் தளர்ந்து அமரவும், “அவ வயித்துல என்” என அவன் சொல்லி முடிக்கவில்லை, “இல்ல... சொல்லாதீங்க... நான் அதை கேட்க தயாரா இல்ல” என அவள் அலற, “சாரி... குயிலி... சாரி... சாரி... இதை உன் கிட்ட சொல்ல முடியாமதான் நான் தவியா தவிச்சேன். நான் இப்ப அந்தக் குழந்தைக்கான ரெஸ்பான்சிபிலிட்டியை எடுக்கலன்னா நான் பாவி ஆயிடுவேன் குயிலி. அதோட இல்ல நான் அவளைக் கல்யாணம் செஞ்சுக்கலன்னா சூசைட் பண்ணிப்பேன்னு சொல்லி என்னை டார்ச்சர் பண்ணிட்டு இருக்கா! அப்படி ஏதாவது நடந்தா நான் ஜெயிலுக்குதான் போகணும். நீயே சொல்லு, இப்ப என்னால என்னதான் செய்ய முடியும்?” என அவளையே நீதிபதியாக்கி அவன் தன் முகத்தை மூடிக்கொண்டு கதற, இப்பொழுது, தான் அழுவதா அல்லது அவனை சமாதானம் செய்வதா என்று கூட அவளுக்குப் புரியவில்லை.


பத்து-பதினைந்து நாட்களாக வெளியில் சொல்ல இயலாமல் தவித்த தவிப்பால் உண்டான மன அழுத்தம் கரை உடைக்க தன் கட்டுப்பாட்டை இழந்து கதறுபவனை, வேறு வழி தெரியாமல் இறுக அணைத்து ஒரு கட்டுக்குள் கொண்டுவர அவள் எடுத்த முயற்சிகள் அனைத்தும் பலனில்லாமல் போனது.


அந்த அந்நிய ஊரில், அவளுக்குப் பரிச்சயமானவர் என அவனைத் தவிர வேறு யாருமே இல்லாத நிலையில் விபரீதமாக அவனுக்கு ஏதும் நேர்ந்தால் என்ன செய்வது? என்ற பயம் பீடித்துக்கொண்டது.


அதேபோல அந்த மமதியும் அவளுடைய வயிற்றில் வளரும் பிள்ளையும் எப்படியோ போய் தொலையட்டும் என்றுதான் இவளால் எண்ண முடியுமா?


ஒரு வேளை அப்படியே நினைத்து, ‘நீ என்னுடன்தான் வாழ்ந்தாக வேண்டும்’ என, இப்படி பிள்ளை என்று உருகுபவனை தன்னுடன் கட்டி வைத்துக் கொண்டாலும், காலம் முழுவதும் அவனால் தன்னுடன் நிம்மதியான ஒரு வாழ்கையை வாழ இயலுமா?


அவள் மிரட்டுவதுபோல எதையாவது செய்துவைத்தால் அதன் பின்விளைவுகளை யார் தூக்கிச் சுமப்பது?


அல்லது வாழ்கையை வேறொருத்தியுடன் பங்குபோட்டுக்கொண்டு சூடு சுரணை இல்லாமல் வாழ்ந்து சாகதான் முடியுமா?


இப்படிப்பட்ட கேள்விகள் சரமாரியாக மனதிற்குள் குத்திக் கிழிக்கவும் உள்ளே உறங்கிக்கொண்டிருந்த அவளுடைய சுயமரியாதை விழித்துக்கொண்டது.


வாழ்க்கையின் நெளிவுசுளிவுகள் எதையும் அறியாத, கொஞ்சம் கூட பக்குவப்படாத முதிர்ச்சியற்ற குயிலி என்கிற பெண்ணுக்கு எங்கிருந்துதான் அவ்வளவு தெளிவும் மன உறுதியும் ஏற்பட்டதோ, அவனைக் கொஞ்சமும் காயப்படுத்தாமல் பிரித்து வந்தாள்.


வந்தவளுக்குள் உயிர் துளிர்த்திருந்தான் சரண்.


அம்மா அப்பாவைத் தவிர வேறு யாரிடமும் தான் கருவுற்றிருப்பதைப் பற்றிச் சொல்லாமல் விவாகரத்துக்கு விண்ணப்பித்தாள்.


இந்த விஷயம் சூர்யாவின் குடும்பத்துக்குத் தெரிய வந்தால் நிச்சயம் குழந்தையிடம் உரிமைக் கோருவார்கள். மீண்டும் அவனுக்கு இருதலைக் கொள்ளி எறும்பின் நிலை ஆகிப்போகும். மேலும் பிள்ளையைக் காண்பித்து அவனைத் தன்னுடன் கட்டி வைக்கவும் அவள் விரும்பவில்லை. 'இது தன்னுடைய மகவு' என்கிற உரிமையில் தனித்து நின்று அதனை வளர்க்கும் உறுதி அவளுக்குள் எப்படியோ வந்துவிட்டது.


ஆறே மாதத்தில் சட்டப்படி பிரிந்தனர். பரஸ்பர ஒப்புதல் விவாகரத்து என்பதால் ஒரே ஒரு முறை நீதிமன்றம் சென்று வந்ததுடன் சரி. அதன்பிறகு அவர்கள் அடிக்கடி சந்திக்கும் அவசியமும் இல்லாமல் போக சரணைப் பற்றி சூர்யாவுக்குத் தெரியாமலேயே போனது.


இவள் விட்டுக்கொடுத்ததால் மமதியைத் திருமணம் செய்து கொண்டான் சூர்யா.


‘கிட்டாதாயின் வெட்டென மற!’ என்பதை மனதில் பதிய வைத்தவள் சூர்யா என்பவனையே அடியோடு மறந்தாள்!


இவள் எப்பொழுது கீழே விழுவாள், எப்பொழுது குத்திக் கிழிக்கலாம் என கண்கள் காதுகள் அனைத்தையும் திறந்து வைத்து நேரத்தை எதிர்நோக்கிக் காத்திருந்தவர்கள், சமயம் கிடைத்ததும் அவளை வாட்டி வதைக்கவும் வசந்தகுமார் மகளுக்காக பணியிடமாற்றம் வாங்கிக்கொண்டார். தெரிந்த மனிதர்களே இல்லாத ஒரு புதிய ஊருக்குக் குடிபெயர்ந்தார்கள்.


மகனை நல்லபடியாகப் பெற்று அவனுக்கு ஒரு வயதானவுடன் பெற்றவரிடம் அவனை ஒப்படைத்துவிட்டு ஒரு வேலையைத் தேடிக்கொண்டு இலண்டன் சென்றாள்.


அதன்பின் தொழிலில் அவளுக்கு ஏறுமுகம்தான். அங்கேயும் இங்கேயுமாக இருந்தவர்கள் வசந்தகுமாரின் பணி ஓய்வுக்குப் பிறகு இலண்டனிலேயே குடியேறினர்.


இப்பொழுது மீண்டும் இங்கே திரும்பியிருக்கிறார்கள்.


பாதை மாறி பிரிந்து போன அஞ்சுகம், தங்கமயில், குயிலி என்ற பறவைகள் மூன்றும் தங்கள் வேடந்தாங்கலில் சரணடைந்துவிட்டன.


இனிமேல் இவர்களது வாழ்க்கைப் பயணம் எப்படி இருக்கப்போகிறது?


பொறுத்திருந்து பார்ப்போம்!


*********

1 comment
© KPN NOVELS COPY PROTECT

Developed By:  Krishnapriya Narayan 

© 2019 - 2024 by KPN Publications

bottom of page