Hi Friends!
'வலசை போகும் பறவைகளாய்...' என்ற எனது இந்த நாவலைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால், இங்கே வாசகர் அனைவரும் விரும்பி கேட்கும், 'ஹீரோ ஹீரோயினுக்கு கல்யாணம் ஆகி பிரிஞ்சிருக்கணும், அவங்களுக்கு குழந்தை இருக்கணும்... ஆனா ஹீரோவுக்கு தெரியக் கூடாது' என்கிற one Line... சரியாகச் சொன்னாள் ஒரு ஏடாகூட Template அடங்கியுள்ள ஒரு கதைதான், ஆனால் எனது பாணியில்.
இப்படி ஒரு டெம்ப்ளேட்டில் எழுதவேண்டும் என முடிவு செய்தெல்லாம் எழுதவில்லை. எழுதும்போது இப்படி வந்துவிட்டது. ஆனாலும் இந்தக்கதை நிச்சயம் வாசகர்களைக் கவரும் என நம்புகிறேன்.
படித்துவிட்டு உங்கள் கருத்துகளை கமெண்ட் செய்ய மறக்காதீர்கள்.
நட்புடன்,
KPN
வலசை போகும் பறவைகளாய்...
1-அஞ்சுகம்
தம்உயிர்போல் எவ்வுயிரும் தானென்று தண்டருள்கூர்
செம்மையருக்கு ஏவல்என்று செய்வேன் பராபரமே!
அன்பர்பணி செய்யஎனை ஆளாக்கி விட்டுவிட்டால்
இன்பநிலை தானேவந்து எய்தும் பராபரமே!
எல்லாரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே
அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே!
“அம்மாம்மா ப்ளீஸ் மா… இன்னும் ஒரே ஒரு தடவ இந்தப் பாட்டைப் படிச்சுக் காட்டும்மா” என மகள் சலுகையாகக் கேட்க, சலிக்காமல் ‘பராபரக் கண்ணி’ வகையைச் சார்ந்த தாயுமானவரின் அந்தப் பாடலை மறுபடியும் ஒருமுறை படித்துக் காண்பித்தாள் அஞ்சு.
“மா... இந்தப் பாட்ட ஒரே ஒரு தடவ எக்ஸ்ப்ளைன் பண்றியா”
அவளை நகர விடாமல் அவளுடைய செல்ல மகள் வசந்தலட்சுமி நேரத்தை இழுக்கவும் கொஞ்சம் சலிப்பாகதான் இருந்தது.
எருதின் வலி காக்கைக்குப் புரியாது. காக்கையின் பசி எருதுக்குத் தெரியாது. இதுதான் இவள் நிலை.
ட்யூஷனுக்குச் சென்றிருக்கும் பெரியவள் வேறு வந்துவிட்டாள் என்றால் கால்களில் கொதிநீரைக் கொட்டிக்கொண்டது போல குதிப்பாள். அதற்குள் காலை மற்றும் மதிய உணவைத் தயார் செய்தாக வேண்டும். அவர்களைக் கிளப்பி அனுப்பிவிட்டுப் போய் துணிகளைப் பட்டுவாடா செய்யவேண்டும். நல்லவேளை, இன்று துணிகளைச் சலவை செய்யும் வேலை எதுவும் இல்லை. மதியம் கொஞ்சம் ஓய்வெடுக்கலாம்.
இத்தனைக்கும் வீட்டு வேலைகளிலெல்லாம் மகள்களைப் பழக்காமல் இல்லை. ஆனால் பள்ளி நாட்களில் அவர்களை நெருக்குவதில் அந்தத் தாய்க்குத்தான் விருப்பமில்லை. முடிகிறதோ முடியவில்லையோ தானேதான் செய்வாள்.
சூடாக எழுந்த நீண்டப் பெருமூச்சுடன் புத்தகத்தைப் படித்துக்காண்பித்து மகளுக்கு அந்தப் பாடலின் பொருளை அவள் விளக்க முற்பட்டாள்.
“மா, படிக்காதம்மா. சாதாரணமா சொல்லு. நானே ஓனா எழுதிப்பேன். என்னால இதையெல்லாம் மனப்பாடம் பண்ண முடியாது” என்று சின்னவள் சொல்ல அவளுக்கு வசந்தகுமார் சாரின் நினைவுதான் வந்தது.
அவர் ஒரு சமூகப் போராளி. அவர்களுடைய கிராமத்திலிருக்கும் அரசுப்பள்ளியில் அறிவியல் ஆசிரியராக சில வருடங்கள் பணிபுரிந்தவர். இவளுடன் சேர்த்து இன்னும் சில பெண்களும் பத்தாம் வகுப்பு வரையிலுமாவது படிக்க ஒரே காரணமாக இருந்தவர். அதே ஊரிலேயே அவர் குடியிருந்ததால் இவர்கள் வாழ்கையில் இரண்டற கலந்தவர். அதனாலேயே அவர் மீது ஒரு அபரிமிதமான பக்தி அவளுக்கு.
“அஞ்சு, எதையும் இப்படி கண்மூடித்தனமா நெட்டுரு பண்ணக்கூடாது. புரிஞ்சு படிக்கணும். வேதிச் சமன்பாடுகள் மட்டுமில்ல தமிழ் செய்யுள் கூட அப்பதான் மனசுல நிக்கும்” என்பார் சிறு கண்டிப்புடன். அதன் பலன்தான், தெரிந்தோ தெரியாமலோ மகள்களுக்கு அந்தப் பழக்கத்தைக் கொண்டு வந்திருந்தாள்.
மீண்டும் ஒரு முறை அதன் பொருளைப் படித்து உள்வாங்கிக் கொண்டு, “அது ஒண்ணும் இல்ல கண்ணு, சின்னதா ஒரு காயம்பட்டாக் கூட நமக்கு எப்படி வலிக்குது. அதே மாதிரிதான எல்லா ஜீவராசிக்கும் வலிக்கும்? பசி தாகம் இயற்கை உபாதைகள் எல்லாமே மனுஷங்கன்னு இல்ல, எல்லா உயிர்களுக்கும் ஒரே மாதிரிதான் இல்லையா?” என்று கேட்க, ஆமாம் என்பதாகத் தலை அசைத்தது அஞ்சுவின் இளங்குருத்து.
“அதை உணர்ந்து, இந்த உலகத்துல இருக்கற எல்லா உயிரையும் தன்னோட உயிரை மாதிரி நினைக்கற கருணை உள்ளம் கொண்ட நல்லவங்களுக்குத் தொண்டு செய்யணும். அதாவது அப்படிப்பட்டவங்கள சப்போர்ட் பண்ணும். அந்த மாதிரி அன்பானவங்களுக்கு தொண்டு செய்யறவனா என்னை ஆக்கிட்டா போதும். அதுலயே எனக்கு சந்தோசம் தானா வந்துடும். இந்த உலகத்துல எல்லாருமே சந்தோஷமா வாழணும். நான் அதை தவிர வேற எதையும் நினைக்கமாட்டேன் கடவுளேன்னு சொல்றார் வள்ளலார்” எனத் தன்னால் இயன்றவரை விளக்கமாகச் சொன்னாள் அவள்.
“ஆங்... சூப்பர் ம்மா, புரிஞ்சிடுச்சு. இனிமேல் நானே படிசிப்பேன். நீ போய் வேலையைப் பாரு என்ன” எனப் பெரியமனது வைத்து அவளை விடுவித்தாள் அவளுடைய கண்ணின் மணி.
“கண்ணு இன்னைக்கு டெஸ்ட்ல நல்ல மார்க் வாங்கணும் என்ன” எனச் சொல்லிக்கொண்டே அவளுடைய கழுத்தளவே உயரம் உள்ள தடுப்புச் சுவருக்குப் பின்னாலிருக்கும் சமையற்கட்டை நோக்கிப் போனவள் ஒரு பெருமூச்சுடன் மாவைக் கரைத்து இட்லியைத் தயார் செய்யத் தொடங்கினாள்.
அவள் படித்திருக்கும் அரைகுறைப் படிப்புக்குச் சின்னவளின் ஆறாம் வகுப்பு தமிழ்ப் பாடத்தைச் சொல்லிக் கொடுக்கவே ததிகிணத்தோம் போட வேண்டியதாகிறது. கணக்கிலோ அறவியலிலோ ஏன் ஆங்கிலத்தில் மகள் ஏதாவது சந்தேகம் கேட்டாள் என்றால் கூட அவளுடைய நிலைமை கவலைக்கிடமாகிப்போகும்.
இதற்கே இப்படி என்றால் பெரியவள் வசந்தகல்யாணியைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். அவளோ பன்னிரண்டாம் வகுப்பல்லவா படிக்கிறாள்! பாடாய் பட்டு இருவரையும் ஆங்கில வழிக் கல்வியிலல்லவா படிக்க வைக்கிறார்கள்! கணவன் மனைவி இருவரும் உழைக்கும் உழைப்பு மொத்தமும் மகள்களின் படிப்பிற்கே அல்லவா போகிறது!
கட்டிடம், கழிவறை, உள்ளே உள்ள வசதிகள் எல்லாம் சற்று முன்னே பின்னே இருந்தாலும் அரசுப்பள்ளியில் சேர்த்திருந்தால் புத்தகங்கள், சீருடை, செருப்பு, மிதிவண்டி, மடிக்கணினி ஏன் மாதவிடாய் நாப்கின் உட்பட எல்லா வசதிகளும் தானாகவே அவர்களை வந்து சேர்ந்திருக்கும். அரக்கப் பறக்க மதிய உணவைத் தயார் செய்யும் வேலையும் இவளுக்கு மிச்சமாகியிருக்கும். அதைச் செய்ய எது தடுக்கிறது என்றே புரியவில்லை. ‘துட்டையும் கொடுத்து துக்கத்தையும் அழுவது’ என்பது இதுதான் போலும்.
எது எப்படியோ, அன்றாட செலவுகளை கையாள ஐநூறு ஆயிரம் என சூர்யா சாரின் அம்மாவிடம் கைமாற்று வாங்கித் திரும்பக் கொடுத்து எனச் சமாளித்தாலும் ‘எதற்காகவும் யாரிடமும் கை ஏந்தக்கூடாது’ என்கிற அஞ்சுவின் கொள்கையை மட்டும் விட்டுக்கொடுக்காமல் வாழ்கிறார்கள்.
இதில் மறுக்க முடியாத உண்மை ஒன்று உண்டென்றால் அதற்கு அவளுடைய கணவனின் முழு ஒத்துழைப்பும் கிடைக்கிறது என்பதுதான். அதில் அவளுக்கு ஒரு பெருமிதமும் உண்டு என்றாலும் முழு திருப்தியுடன் அவளால் அதை அனுபவிக்கவும் முடியாது.
நினைக்கும்போதே அனிச்சையாகப் பார்வை கணவன் சீனுவிடம் சென்றது. கருமமே கண்ணாயினானாகத் துணிகளை இஸ்திரி செய்து கொண்டிருந்தான். அதுதான் அவர்களின் குடும்பத்தொழில். காலை வேளைகளில் அவனால் வேறெந்த உதவியும் அவளுக்குச் செய்ய இயலாது. அவனைப் பார்க்கையில் அவளுடைய ஆயாசம் கூடிதான் போனது.
அவன் மிக மிக நல்லவன்தான், ஆனால் வல்லவன் இல்லை. கடின உழைபாளிதான் ஆனால் சூட்சுமம் நிறைந்த இந்த உலகத்தை எதிர்கொள்ளும் அளவுக்கு சாமர்த்தியசாலி இல்லை. சிகரட் பழக்கம் ஒன்றே ஒன்றைத் தவிர மற்றபடிக் குடிப்பழக்கம் போல வேறு தீயப் பழக்கம் எதுவும் இல்லாதவன்தான். ஆனால் அப்பாவி, வெகுளி, பயந்த சுபாவம் உள்ளவன்.
அவனுக்கும் சேர்த்து இவள்தான் இந்த உலகத்தை எதிர்கொள்ள வேண்டியதாக இருக்கிறது. இதனாலேயே இந்த முப்பத்தைந்து வயதிற்குள்ளேயே மூப்பு வந்துவிட்டது போல ஒரு பிரமை அவளுக்கு.
அரசாங்கம் கொடுத்த இலவச மிக்ஸியின் துணையுடன் வெங்காய சட்டினியை அரைத்து முடிக்க, ஸ்டீம் அடங்கி உள்ளிருந்து சாதத்தை எடுக்க குக்கர் தயார் நிலையிலிருந்தது.
முந்தைய தினமே செய்து வைத்திருந்த தொக்கைக் கொண்டு தக்காளி சாதத்தைக் கலந்து எடுத்து வைக்க, சீனுவின் அருகிலிருந்த பட்டன் ஃபோன் ஒலித்தது.
“சொல்லுங்க சார்” என அவன் அந்த அழைப்பை ஏற்பதைக் கவனித்துக் கொண்டே கடையில் வாங்கி வைத்திருந்த உருளைக்கிழங்கு வறுவலை உடன் வைத்து மகள்களுக்கு மதிய உணவை டப்பாக்களில் கட்டி முடித்தாள்.
தடுப்புச் சுவர் தாண்டி எட்டிப்பார்த்த சீனு, “அஞ்சு, சூர்யா சார்தான் ஃபோன் பண்ணியிருந்தாரு. அவங்க அம்மா எங்கயோ வெளியூருக்குப் போயிருக்காங்களாம். அவருக்கும் அவரோட அப்பாவுக்கும் சமையல் செய்யணுமாம். உன்னால வர முடியுமான்னு கேட்டாரு. என்ன பதில் சொல்ல?” எனத் தயங்கித் தயங்கிக் கேட்டான்.
பரபரப்பான காலை நேரமல்லவா? ‘முன்னால் போனால் கடிக்கும், பின்னால் போனால் உதைக்கும்! இவளை எப்படி அணுகுவது?!’ என்கிற முன்யோசனைதான் தெரிந்தது அவனிடம்.
அவனுடைய இந்தத் தயக்கமும் தேவையானதுதான் என்பதைப் போன்றே, “ப்ச்... இந்த சூர்யா சாருக்கு எத்தன தடவ சொன்னாலும் அறிவே கிடையாது. இதை நேத்து ராத்திரியே சொல்லித் தொலைச்சிருக்கலாம் இல்ல” எனக் கடுப்புடன் எரிந்து விழுந்தாலும் அவளுக்கு மறுக்கத் தோன்றவில்லை.
மகளிர் சுய உதவிக் குழுவில் சேர்ந்து தொழில் உபகரணங்கள் வாங்க உதவியாக இருந்தது, தேவைப்படும்போதெல்லாம் கைமாற்றாகப் பணம் கொடுத்து உதவுவது, மகள்களின் கல்விக்கான வழிகாட்டுதல் என அவர்கள் குடும்பம் மட்டும்தான் இந்த ஊரில் இவர்களுக்கு உள்ள ஒரே பற்றுக்கோல். சூர்யா, அவனுடைய அம்மா, அப்பா மூவருமே அன்பான நல்ல உள்ளம் கொண்ட மனிதர்கள்தாம்.
கூடவே இப்படி சமையல் செய்து கொடுக்கப் பிரியத்துடன் அவர்கள் கொடுக்கும் பணம் அவளுக்கு ஏதாவது ஒரு சிறிய செலவை சமாளிக்க உதவும்.
“லச்சு குட்டி, வா... தலையைப் பின்னி சடைப் போட்டு விட்டுட்டுக் கிளம்பறேன்” என்றவள் அதைச் செய்துமுடித்து, தட்டில் இட்லி சட்டினியைப் போட்டு அவளிடம் நீட்டியவாறு, “பாப்பா, லஞ்ச் சாப்பாட்டை மிச்சம் வெக்காம சாப்பிட்டு வரணும் என்ன... அதுக்குதானே அம்மாவும் அப்பாவும் இவ்வளவு உழைக்கறோம்” என மகளிடம் மொழிந்தவள், “பெரியவ வந்தா வாட்டர் பாட்டில்ல தண்ணிப் பிடிச்சிக்கச் சொல்லு மாமா” என்று சொல்லிக்கொண்டு,
“ஆங்... குடிக்கற தண்ணி காலி ஆயிடுச்சு. பதினோரு மணிக்கு ஆர்-ஓ தண்ணித் திறந்து விடுவாங்க. மறக்காம போய் பிடிச்சிட்டு வந்துடு என்ன" என்று கட்டளையிட்டு அவன் தலையசைப்பைக் குறித்துக்கொண்டே கிளம்பியவளின் கண்களில் தயாராக எடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கட்டைப்பைகள் பட, “இது சூர்யா சார் இருக்கற ஃபிளாட்ல வீ-டென் காரங்க வீட்டுத் துணிதான? அங்கதான போறேன். நானே கொடுத்துடறேன்” என்று அதை கைகளில் எடுத்துக்கொண்டாள்.
இதையே அவன் சொல்லியிருந்தால் அவன் மீது பாய்ந்திருப்பாள். நல்லவேளையாக அவன் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்க தேவியின் திருவருள் தானாகவே கிட்டிவிட்டது. அதை எண்ணி உதட்டில் மலர்ந்த அவனது கீற்றானப் புன்னகை அவளுடைய முகம் பார்த்ததும் பெரிதாக விரிய, டிவிஎஸ் ஃபிப்டியின் சாவியை அவளிடம் நீட்டினான் சீனு. அந்தப் புன்னகையின் பொருள் புரிந்ததால் உண்டான உவகையுடன், “போ மாமா நீயி” என்றவாறு முகம் சிவக்க உதட்டுக்குள் மறைத்த புன்னகையுடன் அங்கிருத்து அகன்றாள் அஞ்சு.
*********
குட்டி பங்களாவைப் போன்றே தோற்றமளிக்கும் ஆடம்பர வில்லாக்கள் அடங்கிய கேட்டட் கம்யூனிட்டியின் ஒரு பகுதி அது.
ஓட்டி வந்த வாகனத்தை அதற்கான இடத்தில் நிறுத்திப் பூட்டிவிட்டு இஸ்திரி செய்த துணிகள் அடங்கிய பையை அதற்குரியவர்களிடம் ஒப்படைத்து அதற்கானத் தொகையைப் பெற்றுக்கொண்டவள் சூர்யாவின் வீட்டை அடைந்து அழைப்பு மணியை அழுத்தினாள்.
அவளைப் பார்த்ததும் வாஞ்சையுடன் புன்னகைத்தவாறு “வாம்மா” என்றார் கதவைத் திறந்த தெய்வசிகாமணி, சூர்யாவின் அப்பா. பதில் புன்னகையைச் சிந்தியவள், “அம்மா எப்பப்பா ஊருக்குப் போனாங்க?” என்ற கேள்வியை எழுப்ப, “அவங்க அக்கா வழி சொந்தத்துல ஒரு கல்யாணம்ன்னு முந்தா நாளே கிளம்பிப் போனாம்மா. நேத்தே உனக்கு ஃபோன் பண்ணச் சொல்லி இந்த சூர்யாகிட்ட சொன்னேன். வேலைல மறந்துட்டான் போலிருக்கு” எனக் குறைபட்டுக்கொண்டார் அவர்.
பசியின் சாயல் அவர் முகத்தில் படர்ந்திருக்க, எழுபதைக் கடந்த அந்த மனிதரைப் பார்த்ததும் அவளுக்குப் பரிதாபம் உண்டாகிப்போனது.
“ஒரு பத்து நிமிஷம் இருங்கப்பா, சூடா பொங்கல் செஞ்சுடறேன்” என்றவள் அடுக்களைக்குள் நுழைந்து துரிதமாக வேலையில் இறங்கினாள்.
பாவம்! தந்தை மகன் இருவருக்குமே சமையலறைக்குப் போக வழி கூடத் தெரியாது என்றே சொல்லலாம். ஆனால் வக்கணையாக சாப்பிட மட்டும் தெரியும். தொடர்ந்து இரண்டு வேளைகள் ஹோட்டல் உணவு சாப்பிட்டால் உடம்புக்கும் ஒத்துக்கொள்ளாது.
அந்தவிதத்தில் சீனு எவ்வளவோ பரவாயில்லை. அவள் ஓரிரு தினங்கள் ஊரில் இல்லை என்றாலோ அவளுக்கு உடல்நலக் குறைபாடு என்றாலோ நன்றாகவே சமாளித்துவிடுவான். விதவிதமாக சமையல் செய்து மகள்களுக்குப் போடுவதுடன் பாத்திரங்களைத் துலக்குவது முதல் சமையற்கட்டைச் சுத்தமாகவும் வைத்திருப்பான்.
சின்னவளுக்குக் கூந்தலை பின்னிச் சடைப் போட்டு மதிய உணவைக் கட்டிக்கொடுத்து அவர்களைப் பள்ளியில் விடும் வரை பொறுப்பாகச் செய்வான். மனைவிக்கு உணவைக் கையிலேயே கொண்டு வந்து கொடுப்பான். ஒருமுறை அயர்ன் பாக்ஸில் கையைத் தீய்த்துக்கொண்டபோது அவளுக்கு ஊட்டியும் விட்டிருக்கிறான்.
இதையெல்லாம் நினைக்கும் போதே மீண்டும் வசந்தகுமார் சார்தான் நினைவுக்கு வந்தார். கூடவே கற்பகம் அம்மாவும் அவர்கள் தவமாய் தவமிருந்து பெற்ற தேவதை குயிலியும். -
குயிலியின் நினைவு வந்தால் அவளுக்கு தங்கத்தின் நினைவும் ஓட்டிக்கொண்டே வந்துவிடும்.
அவர்களை நினைத்ததுமே அவளையும் அறியாமல் கண்களில் நீர் நிறைந்தது. புறங்கையால் கண்ணீரைத் துடைத்தவள் பொங்கலுக்கு அரிசியைக் களைந்து அடுப்பில் ஏற்றிவிட்டு, மற்றொரு அடுப்பில் பருப்பை இட்டாள்.
ஒருவிதத்தில் வசந்தகுமார் சார் போலதான் சீனுவும். ஆனால் அவர் அளவுக்கு அவனுக்கு சாமர்த்தியம் கிடையாது. சாமர்த்தியம் இருந்தாலும் சீனுவின் அளவுக்கு சூர்யா அவனுடைய அப்பா இருவருக்குமே வீட்டுப் பொறுப்பு இல்லை. இவர்களை வைத்துக்கொண்டு எங்கேயும் போக முடியாமல் வரமுடியாமல் பாவம் ருக்மணி அம்மாதான் பரிதவித்துப் போகிறார். அவர் உடல்நிலை சரியில்லாமல் போனால் கேட்கவே வேண்டாம். ஒரு கஞ்சி வைத்துத் தரக்கூட இவர்களுக்குக் கையாலாகாது. இதில் யாரைக் குறைச் சொல்ல?
இவர்கள் வீட்டில் இன்னும் ஒரு பெண் இருந்தால் நன்றாக இருக்கும் என்று இவளுக்கு அடிக்கடித் தோன்றும்.
சூர்யாவின் திருமண வாழ்கையில் ஏதோ மிகப்பெரிய குளறுபடி போலும். அதைப் பற்றி எதுவும் இவளுக்குத் தெரியாது. ஆனால் ஆயிரம் வசதிகள் இருந்தும், மனிதர்கள் நல்லவர்களாகவே இருந்தும், அவர்கள் வாழ்கையில் ஒரு வெறுமை படர்ந்திருப்பதை அவளால் உணர முடிந்தது.
ஒவ்வொரு தனி மனிதனுக்கும் ஏதோ ஒரு குறை இருக்கதானே செய்கிறது. இவர்களுக்கு இது!
சிந்தனைகளினூடே அவள் செயற்பட்டுக்கொண்டிருக்க வெளியிலிருந்தே எட்டிப்பார்த்தான் சூர்யா, “சாரிம்மா... நேத்து நைட்டே உன்கிட்ட சொல்லணும்னு நினைச்சேன். வேலைல மறந்துட்டேன்” என்றவாறே.
பசிப் பொறுக்காமல் பெரியவர் அவனை வகையாகக் கடிந்து கொண்டிருகக் கூடும். அதன் வெளிப்பாடுதான் இது. அவளுக்கே ஒரு மாதிரி ஆகிப்போனது. “அதனால என்ன சார். பாவம் உங்களுக்குதான் ரொம்ப பசி எடுத்திடுச்சுப் போலிருக்கு” என்றாள் கரிசனையுடன்,
“அப்பாதாம்மா பாவம்” என்றவனுக்கு நெய்யில் மிளகு சீரகம் பொறியும் மணம் பசியைக் கூட்டியது. ஆசையாசையாய் சமைத்து தட்டில் உணவைப் பரிமாறி, பாராட்டை எதிர்பார்த்து ஏக்கத்துடன் அவனுடைய முகம் பார்க்கும் ஒருத்தியின் நினைவுதான் வந்தது. ஒரு இன்பமயமான வாழ்கையை அமைத்துக்கொள்ள காலம் அவனுக்காகக் கொடுத்த ஒரு அறிய வாய்ப்பு அவளென்பாதை உணராமல் போனானே!
கண்ணாடிக் கல்லை வைரமென பூஜித்து கையில் கிடைத்தப் பொக்கிஷத்தைதான் தவறவிட்டுவிட்டானே! கண்ணிருந்தும் குருடனாய்! கருத்திருந்தும் மூடனாய்! அதானாலேயே தனிமையும் வெறுமையும் மட்டுமே அவனது வாழ்க்கைத்துணையாய்!
*********
Comments