top of page

Valasai Pogum Paravaikalaai - 6

6

மாசு


பத்தாம் வகுப்பு படிப்பின் மத்தியில் பெண்கள் மூவரும் இருந்த சமயம்...


அன்று ஒரு சனிக்கிழமை. பள்ளி அரை நாள்தான் என்பதால் மதியத்திற்கு மேல் கிளம்பி அருகிலுள்ள டவுனுக்குச் சென்று அந்த மாதத்திற்குத் தேவையான மளிகைப் பொருட்களை வாங்கிக்கொண்டு வீடு திரும்பினார் வசந்தன்.

குயிலி, அஞ்சு இருவரும் வாயிற் திண்ணையிலேயே அமர்ந்து ஏதோ தீவிரமாகப் பேசிக்கொண்டிருக்க, வாகனத்தை நிறுத்திவிட்டு அவர்களை நெருங்கி வரவும்தான் தெரிந்தது எதற்காகவோ முகம் சிவக்க அழுதுகொண்டிருந்த அஞ்சுகத்தை சமாதானம் செய்துகொண்டிருந்தாள் அவருடைய அருமை மகள்.


அவ்வளவு சுலபத்திலெல்லாம் கண்ணீர் உகுப்பவளில்லை அஞ்சுகம் என்பதை அறிந்தவராதலால் யோசனையில் நெற்றி சுருங்க, “என்னடா பொண்ணுகளா என்ன பிரச்சனை?” என்றவாறு வாங்கி வந்தப் பொருட்களை ஓரமாக வைத்துவிட்டு மகளுக்கு அருகில் வந்து உட்கார்ந்தார்.


“அது ஒண்ணும் இல்லைங்க, நம்ம தங்கம் பொண்ணு நாளைக்குப் போயி மூக்குக் குத்திக்கப் போகுதாம். அத இன்னைக்கு ஸ்கூல்ல வந்து இவங்ககிட்ட பெருமையா சொல்லி இருக்கு. அவளைப் பார்த்துட்டு நம்ம அஞ்சுவுக்கும் மூக்குக் குத்திக்க ஆசை வந்துருச்சு. பள்ளிக்கூடம் விட்டதும் நேரா அவங்க அம்மாகிட்ட போய் கேட்டிருக்கா... இப்படி நெனச்ச நேரத்துல துட்டுக்கு அவங்க எங்கப் போவாங்க பாவம். இவ பிடிவாதம் பிடிக்கவும் நல்லா திட்டி விட்டுட்டாங்க. அதனால உட்கார்ந்து அழுதுட்டே இருக்கா” என விளக்கமாகச் சொல்லிவிட்டுத் திண்ணை மேல் இருந்த கூடையை எடுத்துக்கொண்டு வீட்டுக்குள் சென்றார் கற்பகம்.


அதில் அவளுடைய அழுகை மேலும் கூடிப்போனது. வயது பிள்ளைகளுக்கே உரிய நியாயமான சின்ன ஆசைதானே! ஆனால் அதை நிறைவேற்றக்கூட வழியல்லாத நிலையில் இருக்கும் அவளது பெற்றவர்களை நினைத்து வசந்தனுக்கு மனதில் பாரமேறியது. ஒரு முடிவுக்கு வந்தவராக, “ஓய் பேபி... பிள்ளைகளுக்குப் பொட்டலம் வாங்கிட்டு வந்திருக்கேன் பாரு. அதை ஒரு தட்டுல வெச்சு கொண்டு வந்து கொடு” என்று சொல்லிவிட்டுப் பக்கவாட்டில் போய் அங்கிருந்த கிணற்றில் தண்ணீர் மொண்டு முகம், கை, கால்களைக் கழுவி வந்தார்.


அவர் வாங்கி வந்திருந்த ஜாங்கிரியிலும் மிக்ச்சரிலும் கவனம் திரும்பியிருக்க சற்று ஓய்ந்திருந்தாள் அஞ்சு.


அவர்களுக்கு எதிரிலிருந்த திண்ணையில் அமர்ந்தவர், “என்ன அஞ்சு ஜாங்கிரி நல்லா இருக்கா?” என அவர் புன்னகையுடன் கேட்க, முகத்தைத் துடைத்துக்கொண்டு லேசான விசும்பலுடன் தலையசைத்தாள்.


“நீ இருக்கற மூடுக்கு எங்க கசக்குதுன்னு சொல்லுவியோன்னு நினைச்சேன்” என அவர் கேலியாகச் சொல்ல, “போங்க சார்!” என்றாள் அவள் வெட்கம் கலந்து.


பார்வையை தன் மகளிடம் திருப்பி, “குக்கூ குட்டி... உன் ஃப்ரெண்டுதான் இப்படி விழுந்து புரண்டு அழறாளே... நீ வேணா உன் உண்டிக்காசுல இருந்து அவளுக்கு ஒரு மூக்குத்தி வாங்கிக் கொடேன்” என அவர் விளையாட்டாகவே சொல்ல, அசந்துபோய் அவரைப் பார்த்தாள் அஞ்சு.


“ஐயோ... அதெல்லாம் வேணாம் சார்” என அவள் சொல்லிக்கொண்டிருக்க, “ஐ! நெஜமாவே சொல்றீங்களாப்பா?!” எனக் குதூகலித்த குயிலி, “அவளுக்கு நான் வாங்கித் தரேன். எனக்கு நீங்க வாங்கிக் கொடுங்க” என்றாள் உற்சாகம் மேலிட.


அஞ்சு சொன்னதை இருவருமே காதில் வாங்காத பாவத்தில், “குக்கூ பாப்பா... உனக்கு அதெல்லாம் செட் ஆகாதுடா. வலிக்க வலிக்க மூக்குக் குத்திக்கிட்டு மூணு நாள்ல ‘எனக்குப் பிடிக்கல’ன்னு சொல்லிக் கழட்டி எறிஞ்சுறுவ. சமயத்துல மூக்கு நுனியில அந்த அடையலாம் புள்ளி மாதிரி அப்படியே தங்கிப்போயிடும்” என்றார் மகளை அறிந்தவராக.


“அதெல்லாம் இல்ல... நான் பர்மனன்ட்டா போட்டுப்பேன்” என்றவள், “ப்ளீஸ்ப்பா” என முகத்தைச் சுருக்கிக் கெஞ்சலில் இறங்க, “அய்ய... பொம்பள பிள்ளைக்கு மூக்குக் குத்தினாதான் அழகு. அவளே கேட்கும் போது அதையும் இதையும் சொல்லி அவ மனச மாத்தாதீங்க வாத்தியாரே” என உள்ளேயிருந்து குரல் வரவும்,


“அழகு அழகுன்னு சொல்லி ஒரு சின்ன வட்டத்துக்குள்ள நம்மள சுருக்கக் கூடாது பேபி. அதிகப்படியான நகையும் மேக்கப்பும் இல்லாம இயற்கையா இருக்கறதே ஒருவித அழகுதான் தெரிஞ்சுக்கோ” என மனைவிக்குப் பதில் கொடுத்தார்.


அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் மகள் மீண்டும் மீண்டும் ‘ப்ளீஸ்’ என்று தொடர, “ஓகே... ஓகே... நாளைக்கு காலைல பத்து மணிக்கு மூணு பேரும் ரெடியா இருங்க. நாம டவுனுக்குப் போறோம்” என்றார் வசந்தன்.


“வேணாம் சார்” என அஞ்சு மறுப்பு சொல்ல வர, “அதெல்லாம் ஒண்ணும் இல்ல, நாம நாளைக்குப் போறோம். மூக்குக் குத்திக்கறோம். உங்க வீட்டுல சொல்லிட்டு வந்துடு” என்றவர், “அய்ய... சார் நீங்களுமா மூக்குக் குத்திக்கப் போறீங்க” என்று பொங்கிய சிரிப்புடன் அஞ்சு கேட்கவும், “ஆமாம்... பொம்பள பிள்ளைங்க மட்டும்தான் மூக்குக் குத்திட்டு அழகா இருக்கணுமா? ஏன் நாங்கல்லாம் இருக்கக் கூடாதா?” என ஏடாகூடமாகக் கேள்வி கேட்டு சிறுமிகள் இருவரையும் நன்றாகச் சிரிக்க வைத்தவர், “நான் இப்ப இஞ்சி டீ போட்டுச் சூடாக் குடிக்கப் போறேன். யாருக்கெல்லாம் வேணும்” என்றபடி எழுந்து வீட்டிற்குள் போக, எனக்கு... எனக்கு... என்றவாறு அவருக்குப் பின்னால் ஓடினர் அவர் பெற்ற மகளும் அவரைத் தன் தகப்பனாகப் பெறவில்லையே என ஏங்கிக்கொண்டிருக்கும் மாணவியும்.


*********


அடுத்த நாள் காலை சீக்கிரமே எழுந்து, காலடி ஓசைக் கூட கேட்காவண்ணம் பூனைப் போல நடந்து, மூலையில் ஒரு அட்டைப் பெட்டிக்குள் மடிப்பாக வைத்திருந்த, அவள் பூப்படைந்ததற்காகக் கற்பகம் அவளுக்கு எடுத்துக்கொடுத்த சுடிதாரை எடுத்துக்கொண்டு வீட்டின் பின்புறம் இருக்கும் தென்னை ஓலைத் தட்டியால் வேயப்பட்ட குளியலறைக்குள் போய் புகுந்துகொண்டாள் அஞ்சு. தம்பிகள் விழிப்பதற்குள் குளித்து விடுவது அவளுடைய தினசரி வழக்கம்.


முந்தைய நாள் குடித்த சாராயத்தின் போதைத் தெளியாமல் நல்லவேளையாக அவளுடைய அக்காள் கணவனும் மூலையில் உருண்டபடி கிடக்கிறான். இல்லையென்றால் குளித்து முடித்து உடை அணிந்து வெளியில் வருவதற்குள் நெஞ்சம் படபடவென அடித்துக் கொள்ளும். தேவையற்ற தரும சங்கடம்.


குளித்து அந்த சுடிதாரை அணிந்து வந்தவள் வீட்டிற்குள் நுழைய அங்கே ஒரே கூட்ட நெரிசல்தான்.


அவளுடைய அப்பா பச்சை மட்டும் அழுக்குத் துணிகளை வாங்க வாடிக்கை வீடுகளுக்குச் சென்றிருந்தான். அக்கா, அவள் பிள்ளை, இவளுடைய தம்பிகள் இருவர் போதாக்குறைக்குச் சோற்றுக்குக் கேடாய் வந்த மாமன் என மூலைக்கு ஒருவராக உருண்டிருந்தனர்.


ஒரு பெருமூச்சுடன் தலை சீவி, பவுடரை எடுத்து முகத்தில் பூசி, புத்தகப்பைக்குள் மறைத்து வைத்திருந்த அட்டையை எடுத்து உடைக்கு மேட்ச்சாக கல் வைத்தப் பொட்டு ஒன்றை நெற்றியில் ஒட்டிக்கொண்டு அவசரமாக வெளியில் வந்தவள் பக்கவாட்டில் புதர் போல் படர்ந்திருந்த செடிகளிலிருந்து டிசம்பர் பூக்களைப் பறித்து கையில் வைத்திருந்த கூடையில் போடத் தொடங்கினாள்.


“என்னாடி அஞ்சு, சாரு உன்ன பத்து மணிக்குதான வரச்சொன்னருன்னு சொன்ன. இப்படி ஏழு மணிக்கே மினுக்கிக்கிட்டு நிக்கற” எனக் குரல் கொடுத்தார் அங்கே எல்லோருக்கும் தேநீர் தயார் செய்துகொண்டிருந்த அவளுடைய அம்மா அன்னம்மா.


சமையல் செய்யச் சமையலறை என்ற ஒன்றே அவர்கள் வீட்டில் கிடையாது. வீட்டின் வெளிப்புறத்தில் களிமண்ணால் ஆன விறகடுப்புகள் அமைத்து அங்கேதான் சமையல் செய்வார்கள்.


“போம்மா நீயி... நான் சார் கூட டவுனுக்குப் போறேன்னு தெரிஞ்சா தம்பிங்க ரெண்டு பேரும் அழுது ஊர கூட்டுவானுங்க. அவனுங்க முழிக்கறதுக்குள்ள நான் அங்க போய் சேரறேன். நீ யார்கிட்டயும் எதையும் சொல்லாத” என்றாள் பிடிவாதமாய்.


பச்சையப்பனுக்கும் அன்னம்மாவுக்கும் தங்களைப் பிடுங்கி எடுக்காமல் அவள் எது செய்தலும் எந்த ஆட்சேபனையும் இல்லை. வசந்தகுமார் மேல் சிறு கடுப்பு இருந்தாலும் அங்கே மகளின் பாதுகாப்புக்கு எந்த ஒரு குறையும் ஏற்படாது என்பதால் அவர்களுக்கு அவளிடம் அளவுகடந்த அலட்சியம்.


தம்பிகளுக்கு அவளுடன் வெளியில் செல்ல வேண்டுமென்ற ஆசை மட்டுமே. ஆனால் சார் அவளுக்கு மூக்குத்தி வாங்கிக் கொடுக்கிறார் என்றால் பொறாமையில் அவளுடைய அக்காவுக்கு உடலே தகிக்கும்.


அவளைச் சொல்லியும் குறையில்லை. திருமணத்திற்கென இவர்கள் வீட்டில் போட்ட தோட்டையும் மூக்குத்தியையும் கூட விற்றுக் குடித்துவிட்டான் அவளுடைய மணாளன். எனவே இப்போது காதில் ஒரு பித்தளைத் தோடும் மூக்கில் ஒரு குச்சியும் மட்டுமே. பாவம் அவளுமே இருபது வயது கூட நிரம்பாத இளம் வயதினள்தானே? ஆசை இருக்கதானே செய்யும்!


ஆனாலும் அஞ்சுவால் அப்படியெல்லாம் அவளைப் பார்த்துப் பரிதாபப்பட இயலாது. காரணம் பொச்சரிப்பில் எதையாவது பேசி காரியத்தைக் கெடுத்துவிடுவாள். முந்தைய தினம் கூட பிள்ளைத்தாய்ச்சிப் பெண் என கற்பகம் அம்மா கொடுத்தனுப்பிய பலகாரத்தை நன்றாக ஒரு கட்டுக் கட்டியவாறே அவர்களைக் குறைச் சொல்லி பச்சையப்பனைக் கிளறி விட்டுக்கொண்டிருந்தாள்.


வசந்தகுமார் சாருக்கு பயந்து அவளைப் படிக்க அனுப்புவதால் அஞ்சுவின் கல்யாணம் தள்ளிப்போகிறதாம். இப்படியே போனால் இவர்களுடைய அத்தை அவளுடைய பிள்ளை சீனுவுக்கு வேறு பெண்ணைப் பார்த்து கல்யாணம் செய்து வைத்து விடுவாளாம். பிறகு இருவருக்கும் அக்காள் தம்பி என்கிற உறவு விட்டுப்போய்விடுமாம். இவளுக்குச் செய்தது போலவே சாரின் கண்ணில் மண்ணைத் தூவி வரும் தையில் எப்படியாவது அவளுடைய கல்யாணத்தை முடித்தே தீர வேண்டுமாம்.


“போடி இவளே... உன்னைப்போல அத்தை மகன் மாமன் மகன்னு சொல்லி எவனையாவது கட்டிக்கிட்டு ஆடு மாடு மாதிரி வருஷத்துக்கு ஒண்ணு பெத்துப்போடுவேன்னு நினைச்சியா? நான் வக்கீல் படிப்பு படிக்கப் போறேன்டீ வக்கீல் படிப்பு! அதுக்கு எங்க சார் எனக்கு ஹெலுப்பு பண்ணுவாரு. அதுக்கு அப்பறம் நிறைய பணம் சம்பாதிப்பேன். அப்ப அஞ்சுக்கும் பத்துக்கும் நீ இந்த அஞ்சு வீட்டு வாசல்ல வந்து நிக்கபோற பாரு” என தமக்கையின் மேல் ஆக்ரோஷமாகப் பாய்ந்தவள், நிற்காமல் அங்கிருந்து அகன்றாள். அப்பொழுது ஒரு பீதியுடன் பச்சையப்பன் அவளைப் பார்த்த பார்வையை அவள் கொஞ்சம் கவனித்திருக்கலாம்.


எனவே அக்காவுக்கும் எதுவும் தெரியக்கூடாது என மனதில் எண்ணிக்கொண்டு அவசரமாக ஒரு குவளை தேநீரை வாயில் கவிழ்த்துக்கொண்டு கூடையில் நிறைந்த பூக்களுடன் அங்கிருந்து ஓடிப்போனாள் அஞ்சு.


*********


கணவனும் மனைவியுமாகக் காலை உணவைத் தயார் செய்துகொண்டிருக்க சிரிப்பும் விளையாட்டுமாக வாயிற் திண்ணையில் அமர்ந்து அந்த டிசம்பர் பூக்களைத் தொடுத்துக்கொண்டிருந்தனர் பெண் பிள்ளைகள் இருவரும்.


அவர்கள் தொடுத்து முடிக்கவும், “குட்டிகளா சாப்பிட வாங்க” எனக் கற்பகம் அழைக்கவும் சரியாக இருக்க உள்ளே ஓடினர்.


சாப்பிட்டு முடித்து குயிலியும் புதிய உடை ஒன்றை அணிந்துவர, ஏற்கனவே தயாராகியிருந்த கற்பகம் அவளுக்குத் தலை சீவி பின்னல் போட்டுவிட்டார். தொடுத்தப் பூவை மூவரும் தலையில் சூடிக்கொள்ள, பணத்தை எண்ணிச் சட்டைப்பையில் திணித்தவாறே வெளியில் வந்த வசந்தன் வீட்டைப் பூட்டிச் சாவியை பேண்ட் பாக்கட்டில் போட்டுக்கொண்டார்.


பின்பு தன் ஸ்கூட்டரை வெளியில் ஓட்டி வந்து நிறுத்தவும் கற்பகம் போய் அவருக்குப் பின்னால் அமர, அந்த ஸ்கூட்டருடன் இணைந்த சைட்காரில் குயிலியை தன் மடியில் இருத்திக்கொண்டு அமர்ந்தாள் அஞ்சு.


நிலையிலிருந்து புறப்பட்ட தேர் போல அழகாகக் கிளம்பியது அந்த வாகனம்.


ஒருவர் மட்டும் உட்காரும் இடத்தில் இரண்டு பெண்களும் உட்கார்ந்திருக்க மிகவும் பாதுகாப்பாக மிதமான வேகத்துடன் வண்டியை ஓட்டினார் வசந்தன்.


ஏய் அஞ்சு, பேசாம நாம மாட்டு வண்டியிலேயே போயிருக்கலாம்டி. உங்க சாருக்கு இந்த வண்டிய வேகமா ஓட்டவே மனசு வராது" என குயிலி சலிக்க, "மவளே, நீ சாரை மட்டும் கிண்டல் பண்ண உன்னை அப்படியே கீழத் தள்ளிடுவேன் பாரு" என்று அவளை மிரட்டினாள் அஞ்சு.


“யப்பா... என்னா ஒரு குருபக்தி." என குயிலி முணுமுணுக்க, 'என்ன சொன்ன, என்ன சொன்ன" என அஞ்சு சீறவும், "இந்த அஞ்சுக்கு எதையும் ஒரு தடவ சொன்னா புரியாதா? எல்லாத்தையும் அஞ்சஞ்சு தடவ சொல்லணுமா? என குயிலி அவளை மேலும் வம்புக்கு இழுக்கவே, "பேபிம்மா... பாருங்க இவள" எனக் கற்பகத்தைத் துணைக்கு அழைத்தாள் அஞ்சு.


“ப்ச்.. குயிலி, சும்மா இருக்க மாட்ட" எனக் கற்பகம் அவளை அதட்ட, அவள் தோழியைத் திரும்பிப் பார்த்து பழிப்பு காண்பிக்க, அந்தப் பயணமே குதூகலமாக இருந்தது.


*********


சிறிய நகைக்கடைதான் அது. கடையைத் திறந்ததும் இவர்கள்தான் முதல் வாடிக்கையாளர் என்பதாலும் கடந்த சில வருடங்களாக மனைவி மற்றும் மகளுக்கு அவர் அங்கேதான் நகை வாங்குவதால் உண்டான பரிச்சயத்தாலும், “வாங்க வாங்க வசந்த் சார். எப்படி இருக்கீங்க?” எனத் தடபுடலாக அவர்களை வரவேற்றார் அதன் உரிமையாளர்.


“சூப்பாரா இருக்கோம்!” என்றவர், “இந்தத் தடவ பெருசா எதுவும் இல்ல சேட்டு, மூக்குத்தி எடுத்து காமிங்க” என்றவர், “ஆங்... இப்பவே கையோட மூக்குக் குத்தி இந்த மூக்குத்தியைப் போட்டுவிடலாம்னு... ஆசாரி எப்ப வருவாரு?” என நேரடியாக விஷயத்துக்கு வர, “கூப்பிட்டு அனுப்பினால் ஒரு பத்து நிமிஷத்துல வந்திடுவாரு. ஆனா இப்ப எமகண்டமாச்சே... பரவாயில்லையா?” என அவர் இழுக்கவும், “என்ன சேட்டு, எங்க ஊருக்கு வந்து தமிழை நல்லா பேசக் கத்துகிட்ட மாதிரி இந்த ஊர் பழக்கவழக்கமெல்லாம் கூட நல்லா தெரிஞ்சு வெச்சிருகீங்க போலிருக்கு” என்று சிரித்தவர், “நான் அதெல்லாம் பார்க்கறதில்ல சேட்டு. மனசு சுத்தமா இருந்தா எல்லா நேரமும் நல்ல நேரம்தான்” என்றவர், “அவர வரச் சொல்லிடுங்க” என முடித்தார். பின் அவர் சில மூக்குத்திகளை அவர்களுக்கு முன் கடை விரிக்கவும், அலசி ஆராய்ந்து தங்களுக்குப் பிடித்ததைத் தேர்ந்தெடுத்தனர் பிள்ளைகள் இருவரும்.


அதற்குள் ஆசாரியும் வந்துவிட உள்ளுக்குள்ளே கொஞ்சம் உதறல் எடுத்தாலும் அஞ்சு முதலில் மூக்கை நீட்ட, அவளுக்கு மூக்கைக் குத்தி மூக்குத்தியை அணிவித்தார் அவர். அதன் பின் குயிலியும் அவளைப் பின்பற்ற ஒருவழியாக அவர்கள் முடித்து பணம் கொடுக்கச் செல்லும் சமயம் தங்கம், அவளுடைய அம்மா மூன்று அண்ணிகள் கடைசியாக அவளுடைய அப்பா மாசிலாமணி என ஒரு கும்பலே உள்ளே நுழைந்தது.


அங்கே இருந்த இருக்கையில் வலியைத் தாங்கியவாறு முகம் சிவக்க உள்ளங்கையை வைத்து மூக்கைப் பொத்திக்கொண்டு உட்கார்ந்திருத்த பெண்கள் இருவரும் தங்கத்தைப் பார்த்து ரகசியமாகக் கையை அசைத்தனர்.


அதற்குள்ளாகவே அங்கே என்ன நடந்திருக்கும் என மாசிலாமணிக்குப் புரிந்து போனது.


ராகு காலம் எமகண்டம் என நேரம் பார்த்து அவர்கள் நிதானமாக வந்திருக்க அவருடைய மகளை முந்திக்கொண்டு இங்கே அந்த ஏகா* வீட்டுப் பெண் மூக்குக் குத்திக்கொண்டு உட்கார்ந்திருக்கிறாள். கூடவே இந்த வாத்தியின் பெண் வேறு. தன் மகளும் இவர்களும் சரிக்கு சமமா? என அவருக்குப் பொங்கிக்கொண்டு வந்தது.


‘இந்த ஆளுக்கு எதுக்கு இந்தத் தேவையில்லாத அதிகப்பிரசங்கித்தனம்' என்ற ஆத்திரம் மண்டைக்குள் சுர்ரென ஏற, “என்ன இருந்தாலும் என் மக இராஜகுமாரி. மாச சம்பளக்காரன் பொண்ணு போடறதெல்லாம் வேணாம். நல்ல வைர மூக்குத்தியா காட்டு சேட்டு” என்றார் அவர் சத்தமாக, அது வசந்தனின் காதில் விழவேண்டும் என்றே.


மற்ற பெண்களெல்லாம் அதைக் கண்டும் காணாமலும் வந்த வேலையைப் பார்க்கப் போக, பாவம் தங்கம் மட்டும் அஞ்சுவையும் குயிலியையும் சங்கடத்துடன் பார்த்து வைத்தாள். நல்லவேளையாக அவர்கள் கவனம் வலியில் மட்டுமே இருந்தது. கற்பகத்தின் கவனம் மகளிடம் இருந்தது.


ஆனால் வசந்தன் அதை உணர்ந்தாலும் அந்த மனிதர் பேசிய எதையும் காதிலேயே வாங்காதவர் போல ‘இவை எதுவும் தன்னைப் பாதிக்காது’ என்கிற ரீதியில் பணத்தைக் கொடுத்து ரசீதை வாங்கிக்கொண்டு மனைவி மக்களுடன் அங்கிருந்து கிளம்பினார்.


அதுவும் கூட எரிகிற தீயில் எண்ணை ஊற்றுவதாகவே ஆகிப்போனது.


ஒன்று மகளின் திருமணம் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது. மற்றொன்று தன் செல்வாக்கு எதுவும் இந்தப் பள்ளிக்கூட வாத்தியாரிடம் செல்லுபடி ஆகவில்லை. அதைவிடக் கேவலம் என்னவென்றால், ‘உங்களால கூட இந்த வாத்தியை எதுவும் செய்ய முடியலியா?’ என ஊரார் கேட்கும் கேள்விக்கெல்லாம் அவரால் பதில் சொல்லவே இயலவில்லை.

4 comments
© KPN NOVELS COPY PROTECT
bottom of page