Uyirie (Virus 143) Final Part 2(2)
வைரஸ் அட்டாக் - 20
மில்லி அங்கே இருக்கிறது என்கிற தகவலைத் தவிர வேறெதையும் சொல்லவில்லை நாயகி. சொல்லப்போனால் அவளுக்கே வேறுதுவும் தெரியாது என்பதுதான் உண்மை.
மில்லி என்றாலே அப்படி ஒரு 'அலர்ஜி' நாயகிக்கு. ஆனால் அதற்கு நேர்மாறாக ‘மில்லி என்றால் நிர்மலுக்கு மிகவும் ஸ்பெஷல்' என்ற நிலையிலிருந்தது அந்த எலி.
எப்படியோ அவருடன் சண்டை பிடித்து அதை அவரிடமிருந்து பிரித்திருந்தாள் நாயகி. அவளுக்குப் பயந்துதான் மில்லியை அந்த தீவில் தீவிர பாதுகாப்புடன் வைத்துப் பராமரிக்கிறார் நிர்மல்.
அவ்வப்பொழுது நேரம் ஒதுக்கி அங்கே போய் அவர் மில்லியை கொஞ்சி விட்டு போவது வேறு கதை. அது நாயகிக்கும் கூட தெரியாத கதை.
அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பிய பிறகு மில்லியை நேரில் பார்த்தே ஆகவேண்டும் என்று மனதிற்குள் குறுகுறுத்துக்கொண்டே இருந்தது மேனகாவுக்கு. ஆனால் உண்மையான காரணத்தைச் சொல்ல இயலாமல், நிர்மால்யாவை சுற்றிப் பார்க்க ஆசையாக இருப்பதாக விஸ்வாவிடம் கதை சொன்னாள் அவள்.
அவனை அடைத்து வைத்து துன்ப துயரில் மூழ்கடித்த இடம் என்பதாலோ அல்லது அவனது துறவு வாழ்க்கையை நினைவுபடுத்தியதாலோ என்னவோ நிர்மால்யாவுக்கு செல்ல கொஞ்சம் கூட பிடிக்கவில்லை விஸ்வாவுக்கு. மேனகா அங்கே செல்வதையும் விரும்பவில்லை அவன்.
ஆனாலும் விடாப்பிடாயாக சில நாட்கள் விஸ்வாவை நச்சரித்து, நிர்மால்யா தீவுக்கு வந்திருந்தாள் மேனகா. அவனுக்கு முக்கிய 'போர்ட் மீட்டிங்' ஒன்று இருப்பதாகக் கூறி, 'நீ எப்படியோ போய்த்தொலை' என்கிற ரீதியில் அவர்களுடைய பாதுகாவலர்கள் சகிதம் அவனுக்குச் சொந்தமான தனி விமானம் மூலம் அவளை அங்கே அனுப்பி வைத்தான் அவன். ஆனாலும் அரைமனதாகத்தான்.
முதலில் 'நிர்மலானந்த சிவ பீட ஆசிரமம்' என்ற பெயரில் இயங்கிவந்த அந்த ஆசிரமம், 'விஜிதேந்த்ரியானந்தா சக்தி பீட ஆசிரமம்' எனப் பெயர் மாற்றம் பெற்றிருப்பதையே அங்கே வந்த பிறகுதான் அறிந்தாள் மேனகா.
சில வருடங்களாகவே சற்று பிரபலமாகியிருந்த அந்த ஆசிரமத்தைப் பற்றி அவளும் கூட கேள்விப்பட்டிருக்கிறாள்தான். ஆனால் இரண்டையும் ஒன்றுடன் ஒன்று தொடர்புப்படுத்தி யோசிக்கும் அளவுக்கு அவளுக்கு நேரம் இருந்ததில்லை.
அந்த ஆசிரமத்தின் உள்ளே செல்லவேண்டுமானால் முன் அனுமதி பெற வேண்டும் என்கிற காரணத்தால், அங்கே இருந்த முக்கிய அலுவலகத்துக்குள் நுழைந்தாள் மேனகா தன் புடை சூழ.
அவள் அங்கே நுழைந்த நொடி, அங்கே வேலை பார்த்துக்கொண்டிருந்த காவி உடைகள் அனைவருமே ஸ்தம்பித்துப் போனார்கள். அவளைப் பார்த்தவாறு 'மாதாஜி' 'மாதாஜி' எனக் குறிப்பிட்டு ' மாதாஜி இந்த டிரஸ்ல எப்படி' என அவர்களுக்குள் ஏதேதோ பேசிக்கொள்ள, சில நிமிடங்கள் அங்கே கூச்சலும் குழப்பமுமாக இருக்க, அதை கேள்விப்பட்டு வேகமாக அங்கே வந்தார் தர்மானந்தா.
மேனகாவுக்கு அவரை நன்றாகவே அடையாளம் தெரியவும், "எப்படி இருக்கீங்க ஸ்வாமிஜி" என இயல்பாக அவரை பார்த்துப் புன்னகைத்தாள் அவள். அவரும் அவளை அடையாளம் கண்டுகொள்ள, பதிலுக்குப் பெரிதாகப் புன்னகைத்தவர், "நான் நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க அவ...தாஆஆர் சிங்?!" என கிண்டலாகவே அவளை எதிர்கொண்டார் அவர்.
"ஐயோ... சூப்பர் ஸ்வாமிஜி நீங்க. இவ்வளவு வருஷத்துக்கு பிறகும் மறக்காம என்னை ஞாபகம் வெச்சிருக்கீங்க பாருங்க" என அவள் வியக்க, "மறக்க முடுயுமாம்மா அதையெல்லாம்... உன்னால பெரிய ஸ்வாமிஜி கிட்ட கொஞ்சம் நஞ்சமாவா வாங்கி கட்டிட்டேன்" என்றார் அவர் பரிதாபமாக.
பின் அங்கிருந்தவர்களை நோக்கி, "இவங்க நம்ம மாதாஜி இல்ல. யாரும் கன்ஃப்யூஸ் ஆகாதீங்க" என்று சொல்லிவிட்டு மேனகாவை தன்னுடன் அழைத்துச்சென்றார் தர்மானந்தா.
"ஏன் ஸ்வாமிஜி... எல்லாரும் என்னை அப்படி அதிர்ச்சியா பார்த்தாங்க? யாரந்த மாதாஜி" என அவள் வியப்புடன் கேட்க, "நாம இப்ப... இங்க இருக்கற தியான மண்டபத்துக்குத்தான் போறோம். அங்க வந்து பாரு. உனக்கே காரணம் புரியும்" என்றவாறே எக்கச்சக்க ஆர்வத்துடன் அவளை அங்கே அழைத்துவந்தார் அவர்.
எந்த ஆசிரமத்துக்குள் பெண்களுக்கு அனுமதியே இல்லையோ, அந்த ஆசிரமத்தில் அமைந்திருக்கும் தியான மண்டபம் காவி உடை அணிந்த பெண்களால் நிறைந்திருந்தது.