top of page

Uyirie (virus 143) - 18

Writer: Krishnapriya NarayanKrishnapriya Narayan

Updated: Sep 6, 2023

வைரஸ் அட்டாக் – 18


மேனகா விஸ்வாவின் சென்னை இல்லம்...


மேனகா தனது வாழ்க்கையின் லட்சியமாக நினைத்திருக்கும் ஆராய்ச்சி கிட்டத்தட்ட முடிந்தமாதிரி என்றுதான் சொல்லவேண்டும்.


இன்று அதன் இறுதிக்கட்டம். தனக்கான பிரத்தியேக ஆராய்ச்சி மய்யத்திற்கு பரபரப்பாகக் கிளம்பிக்கொண்டிருந்தாள் மேனகா.


தன் மூக்கு கண்ணாடியைத் தேடியவாறு அவள் இங்கேயும் அங்கேயும் ஓடிக்கொண்டிருக்க, கையில் வைத்திருந்த தட்டில் இட்லியும் சட்னியும் இருக்க, அவள் செல்லுமிடமெல்லாம் சென்று அவளுக்கு ஊட்டிக்கொண்டிருந்தான் விஸ்வா.


"பிளீஸ் விஸ்... போதும்" என்று கெஞ்சியவள், "இன்னைக்கு என் கூட நம்ம லேப்க்கு வரீங்களா" என்றாள் மேலும் கெஞ்சலாக.


அவளது கெஞ்சல்களையெல்லாம் கண்டுகொள்ளாமல், "எனக்கு தெரிஞ்சதெல்லாம் ப்ராஃபிட் மட்டுமே காமிக்கற பாலன்ஸ் ஷீட்ஸ்...அவ்வளவுதான். மத்தபடி உன்னோட ரிசெர்ச் பத்தி ஏ..பீ..சீ..டீ கூட தெரியாது. ப்ளீஸ் என்னை விட்டுடேன்" என்றவன், "மத்தபடி சக்ஸஸ்னு ஒரு வார்த்தை மட்டும் சொல்லு. கொண்டாடி தீர்த்துடலாம்" என்றான் அடுத்த விள்ளல் இட்லியை ஊட்டியபடி.


அது அவர்களுக்கான இடமும் நேரமும். அதனால் வேலை செய்பவர்கள் யாரும் அங்கே வரவே மாட்டார்கள். ஆனால் எந்த வித கட்டுப்பாடுகளும் இன்றி, அவர்களிடம் ஏகோபித்த உரிமை கொண்ட ஒரே ஒருத்தி மட்டும், அந்த காட்சியைப் பார்த்துக்கொண்டே, கோபத்தில் புஸ்... புஸ்... என மூச்சு விட்டபடி அவர்களை நோக்கி வந்தாள்.


"டேட்! திஸ் இஸ் அன் ஃபேர். நான்தான உங்க குட்டி பொண்ணு. நான் ஸ்கூல் போகணுமா வேண்டாமா? பட் என்னைக் கொஞ்சம் கூட கண்டுக்காம நீங்க மாம் பின்னால சுத்திட்டு இருக்கீங்க, என்னவோ அவங்கதான் குட்டி பேபி மாதிரி" என சண்டைக்குக் கிளம்பியவளாக, அவனுடைய சட்டையை பிடித்து பின்னாலிருந்து இழுத்து அவனைத் தடுத்தவள், இட்லியுடன் சேர்த்து அவனது விரல்களையும் தன் வாய்க்குள் திணித்து அவளுடைய மகளதிகாரத்தை அவனிடம் நிலைநாட்டினாள் அவர்களுடைய செல்ல மகள் ரச்சனா.


"ஹேய் டாலி! தர்ட்டீன் இயர்ஸ் ஆகுது உனக்கு. உன்னை நீயே குட்டி பொண்ணுன்னு சொல்லிக்காத" என்று சொல்லி சிரித்தவன், "இன்னைக்கு ஒரே ஒரு நாள் தான் டாலி! ஃபைனல் அவுட்புட் சக்ஸஸ்ஃபுல்லா வந்துடுச்சுனா அம்மா ஃப்ரீ ஆயிடுவா. தென் நாங்க ரெண்டுபேரும் சேர்ந்து உன்னை மட்டும்தான் கான்சன்ட்ரேட் பண்ணுவோம்' என அவன் இதமாக மகளுக்குப் பதில் கொடுக்க, இதெல்லாம் மேனகாவின் கருத்தில் பதிந்ததாகவே தெரியவில்லை.


அதை உணர்ந்தவளாக, "மாம்... சுத்தி நடக்கற எதையும் கவனிக்காம... அப்படி என்ன தேடிட்டு இருக்க' என மகள் அதிகாரமாக கேட்க, வாயில் விஸ்வா திணித்த இட்லியை விழுங்க முயன்றவளாக, கண்களில் மாட்டிக்கொள்வது போல் காண்பித்து 'கண்ணாடி' என்று செய்கை செய்தாள் மேனகா.


உடனே மேனகாவின் தனிப்பட்ட அறைக்குள் சென்ற ரச்சனா, சில நிமிடங்களில் திரும்ப வந்து மேனகாவின் கண்ணாடியை அவளுக்கு அணிவித்தவாறே, 'யம்மா... ரூமாவா வெச்சிருக்க... எங்க பார்த்தாலும் ஒயர் தொங்கிட்டிருக்கு, ரூம் ஃபுல்லா ஸ்டிக்கி நோட்ஸ்... கெமிக்கல் ஸ்மெல்... எப்படி மா அந்த ரூம்ல வேலை செய்யற" என்றாள் கடுப்புடன்.


கண்ணாடியை அணிந்துகொண்டவள் மகளுடைய முகத்தை வியந்து பார்த்தவாறு, "விஸ்! எப்படி விஸ் இவ... அப்படியே தொல்லை மாதிரியே எல்லாத்தையும் செய்யறா? பேச்சு ஆக்ஷன் எல்லாமே அவளை மாதிரியே இருக்கு. அதே வாய்... அதே தெனாவெட்டு... என்ன இவ தமிழை கூட யூகே இங்லிஷ் ஆக்ஸன்ட்ல பேசறா. அவ லோக்கலா பேசுவா. பார்க்க கூட நம்ம டாலி கொஞ்சம் கொஞ்சம் நாயகி சாயல்ல இருக்கற மாதிரி எனக்கு ஒரு ஃபீல். தெரியுமா?" என மேனகா சொல்லிக்கொண்டே போக, "மாம்... நான் உங்களுக்கு தொல்லையாவா இருக்கேன்" என அவள் மீது பாய்ந்தாள் ரச்சனா.


"டாலி... அது ஒருத்தங்க பேர்னு உனக்கு தெரியும் இல்ல. கூல்" என மகளை சமாதானம் செய்தவன், "இந்த அவசரத்துலயும் கூட அவ ஞாபகம்தானா உனக்கு. ஆஃப்டர் ஆல் ஷி இஸ் யுவர் சர்வன்ட் மெய்ட். அவ கூட உனக்கு ஏன் இப்படி ஒரு எமோஷனல் அட்டாச்மென்ட்" என சிடுசிடுத்தான் அவன்.


ஆதி நாளிலிருந்து இந்த நொடி வரை தொல்லைநாயகியை மறக்கவில்லை மேனகா. அவளைப் பற்றிப் பேசாத நாளே இல்லை எனலாம். 'தன்னை விட அப்படி என்ன அந்த தொல்லை ஒசத்தி இவளுக்கு' என சமயத்தில் விஸ்வாவே கடுப்பாகும் அளவுக்கு இருக்கும் நாயகியை பற்றிய மேனகாவின் பேச்சு. தொல்லைநாயகியின் பேச்சை எடுத்தாலே பிடிக்காது விஸ்வாவுக்கு. ஆனாலும் விடமாட்டாள் மேனகா. அதுவும் மகளை அவளுடன் ஒப்பிட்டால் கொலை வெறி ஆகிவிடும் அவனுக்கு.


"ப்ச்... விஸ்வா!" என அவனை முறைத்தவள், "டாம் அண்ட் ஜெர்ரி மாதிரி சண்டை போட்டுட்டே இருந்தாலும், அவதான் எனக்கு இருந்த ஒரே துணை. அவளும் என்னை விட்டதில்ல. நானும் அவளை விட்டதில்ல. இதையெல்லாம் உங்களுக்குச் சொல்லி என்னால புரிய வைக்கவும் முடியாது" என சலிப்புடன் சொன்னவள், "உங்க நிம்மியும் போய் சேர்ந்துட்டார். என்னை அம்போன்னு விட்டுட்டு போயும் போயும் அவரை நம்பி போனா அவ. பாவம் இப்ப எங்க... எப்படி இருக்காளோ" என்று அவள் வழக்கமாக புலம்பும் புலம்பலை பாட, அதில் கடுப்பில் உச்சத்திற்கே சென்றவனாக, தட்டிலிருந்த கடைசி விள்ளல் இட்லியை எடுத்து வாயில் அப்படியே திணித்தான் விஸ்வா. அதை மென்று விழுங்கியவாறே, "பை... விஸ்! பை... டாலி" என்றவள், மகளுடைய கன்னத்தில் அழுந்த முத்தமிட்டுவிட்டு அவசர அவசரமாக அங்கிருந்து ஓடினாள் மேனகா, "ஆல் தி பெஸ்ட் மாம்... கார்ல தண்ணி பாட்டில் இருக்கு. மறக்காம குடிங்க" என அக்கறையுடன் கத்திய மகளுக்கு, "தேங்க் யூ டாலி... ஓகே" என பதில் சொல்லிக்கொண்டே.


அவள் சென்ற திசையை பார்த்துக்கொண்டே, "டாட்! பாவம் இல்ல டாட் மாம்! எனக்கு தெரிஞ்சே இந்த ரிசர்ச் த்ரீ டைம்ஸ் ஃபைலியர் ஆயிடிச்சு. இந்த தடவையாவது சக்ஸஸ் ஆகுமா? மாம் அவங்க பேரன்ட்ஸை பத்தி இப்பவாவது தெரிஞ்சுப்பாங்களா?" என ரச்சனா கரிசனத்துடன் கேட்க, "ஹோப் ஸோ!" என்றான் விஸ்வா, அவனுக்கே இந்த கேள்விக்குப் பதில் தெரியாது என்கிற பாவனையில்.


***


வி.எம்.ஆர் ஜெனிடிகல் ரிசர்ச் சென்டர்... மேனகாவின் பெயரில் ஆரம்பிக்கப்பட்ட அவளுக்கான பிரத்தியேக ஆய்வகம். அங்கேதான் தொடர்ந்து அவளது ஆராய்ச்சிகளை செய்து கொண்டிருக்கிறாள் மேனகா.


அன்றுதான் அவளது அந்த ஆராய்ச்சியின் கடைசிக் கட்டம் என்பதினால் சகுந்தலாவையும் அங்கே வரச் சொல்லி அழைத்து இருந்தாள் அவள்.


அது என்னவோ முக்கியமான தருணங்களில் எல்லாம் அவர் உடனிருந்தால் அவளுக்கு அது ஒரு பெரிய பலமாகத் தோன்றுகிறது.


அவரும் மறுக்காமல் அன்று அங்கு வந்துவிட, அவளுடைய மரபணுவை அடிப்படையாகக் கொண்டு, அவளுடைய பெற்றோர்களின் எலும்புகளின் வடிவமைப்பைக் கண்டுபிடித்து வைத்திருந்தாள் அவள்.


முதலில் அவளுடைய அம்மாவின் படத்தைப் பார்த்து விடலாம் என்று முடிவு செய்து, அதிநவீன கணினிகளின் உதவியுடன், முப்பரிமாண வடிவங்களாகக் கண் காது மூக்கு என படிப்படியாகத் திரையில் அதைக் கொண்டு வரவும், தத்ரூபமாக மேனகாவின் அம்மாவின் முகம் முழு வடிவம் பெற்றது.


அந்த பிம்பத்தைப் பார்த்ததும், சப்பொன்றாகிப்போய் நம்ப இயலாமல், எங்கேயோ தவறாகி மறுபடியும் இந்த ஆராய்ச்சி தோல்வியில் முடிந்து விட்டது என மேனகா துவண்டு போக, சகுந்தலாவோ மூர்ச்சையாகிப்போனார் அதிர்ச்சியில். காரணம் திரையில் தெரிந்தது சாட்சாத் சகுந்தலாவின் முகமேதான்.


செய்வதறியாமல் மேனகா ஸ்தம்பித்துப்போய் சிலையாக உட்கார்ந்திருக்க, அவளுடைய உதவியாளர்கள்தான் சகுந்தலாவைத் தூக்கி, அருகிலிருந்த சோபாவில் படுக்க வைத்தனர்.


பின் சூழ்நிலை கொஞ்சம் பிடிபட, அவரை நோக்கி எழுந்து வந்தவள், தண்ணீரை அவர் முகத்தில் தெளிக்க, மயக்கம் தெளிந்தது சகுந்தலாவுக்கு.


"ஆர் யு ஓகே சக்கும்மா" எனக் கவலையாக மேனகா கேட்க, படபடப்புடன் அவசரமாக எழுந்தவர் மேனகாவை அப்படியே அணைத்துக்கொண்டார்.


ஒன்றும் விளங்காமல் மேனகா இறுகி நிற்க, "செல்லம்... பட்டு... மெனு... குட்டி... நான் பெத்த பொண்ணுடா நீ!" என்றார் அவர் தழுதழுக்க.


***


ஒரு நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பெற்றவர்களுக்கு, நான்கு மகள்களில் மூன்றாவதாகப் பிறந்தவள் சகுந்தலா.


அவளுடைய தமக்கைகள் இருவருக்கும் படிப்பு மண்டையில் ஏறாமல் போக, படிப்பை நிறுத்தி மூத்தவளை பதினெட்டு வதிலிலேயே திருமணம் செய்துகொடுத்துவிட்டார்கள்.


இரண்டாமவள் ஒரு ஆயத்த ஆடைகளை ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தில் தையல் வேலை செய்ய, இவள் மட்டும் படிப்பில் சுட்டியாக இருக்கவும், எப்படியோ முட்டி மோதி இவளைக் கல்லூரிக்கு அனுப்பினார் சகுந்தலாவின் அப்பா.


அவள் அரசு கல்லூரியில் இளநிலை மூன்றாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்த சமயம், அதே கல்லூரியில் இவள் பயிலும் அதே துறையிலேயே முதுநிலை இரண்டாம் ஆண்டு படிப்பிலிருந்த நிர்மலுடன் அறிமுகம் ஏற்பட்டது சகுந்தலாவுக்கு.


அவளுடைய அக்காவையும் அவர்களைப் போன்றே உள்ள ஒரு நடுத்தர வர்க்கத்தில் திருமணம் செய்து கொடுத்திருக்க, தினசரி வாழ்க்கையில் ஐந்திற்கும் பத்திற்கும் அவள் அல்லாடும் அல்லாட்டத்தைப் பார்த்து நொந்துபோய் இருந்தவளுக்கு ஒரு வளமான எதிர்காலத்தைப் பற்றிய கற்பனை பெரியதாக விரிந்திருந்தது.


அந்த நேரத்தில் நிர்மலின் அறிமுகம் அவளுக்குக் கிடைக்கவும், நாட்கள் செல்லச் செல்ல அவனுடன் நெருங்கிப் பழகும் நிலை ஏற்படவும், அதுவும் அவனே வந்து தன் காதலை அவளிடம் வெளிப்படுத்தவும், உச்சி குளிர்ந்துதான் போனாள் சகுந்தலா வயது கோளாறில்.


அவனுடைய தோற்றம், கல்லூரியில் அவன் பெற்று வைத்திருந்த நற்பெயர் அனைத்தும்... பந்தயத்தில் முதலில் ஓடும் குதிரை என்கிற ரீதியில் அவனைப்பற்றிய அபிப்ராயத்தை அவளிடம் ஏற்படுத்தியிருக்க, ஏனோ அவனுடைய பின்புலத்தைப் பற்றிய சிந்தனையெல்லாம் எழவில்லை அவளுக்குள். மறுப்பே சொல்லாமல் அவனுடைய காதலை ஏற்றுக் கொண்டாள் சகுந்தலா.


முதுகலை படித்து முடித்து அவன் மேற்படிப்புக்கு விண்ணப்பித்து இருந்த சமயம், அவன் குடும்பத்துக்குள் என்ன நடந்ததோ உடனே திருமணம் செய்துகொள்ளலாம் என வந்து நின்றான் நிர்மல்.


அப்போது அவளும் படிப்பை முடித்திருக்க, ஒரு கோவிலில் வைத்து எளிமையாக நடந்தது அவர்களது திருமணம், சில நண்பர்களைத் தவிரப் பெற்றோர்களுக்குக் கூட தெரியாமல்.


அவசரத்தில் அள்ளித் தெளித்த கோலமாகத் திருமண வாழ்க்கையை அவர்கள் தொடங்க, நிர்மல் படிப்பைத் தொடரவும், சகுந்தலா வேலைக்குப் போக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.


குடும்ப பாரமும் பொருளாதார நெருக்கடியும், வீட்டுவேலைகளும் சேர்ந்து கொண்டு ஒரு கட்டத்தில் சலிப்பையும் மன உளைச்சலையும் இருவருக்குமே கொடுத்தது.


அந்த சமயம் பார்த்து சகுந்தலா தாய்மை அடைந்துவிட, நிர்மலுடைய தகுதிக்கு அவனுக்கு நல்ல நிறுவனங்களில் வேலை கிடைக்கும் வாய்ப்பிருந்தும் அவன் படிப்பை பாதியில் விட்டுவிட்டு அதைச் செய்யக் கொஞ்சம் கூட தயாராக இல்லை. காரணம் அவனுடைய லட்சியமெல்லாம் வேறாக இருந்தது.


அந்த சமயம் பார்த்து நிர்மல் ஒரு குப்பத்தில் பிறந்து வளர்ந்தவன், அவனுடைய அப்பா ஒரு ரிக்ஷா காரர், அம்மா வீடு வேலை செய்பவர் என்கிற உண்மை சகுந்தலாவுக்கு தெரியவர, அதை அவன் மறைத்து அவளை ஏமாற்றி திருமணம் செய்ததாக சகுந்தலா ஆத்திரப்பட்டு, இதில் இருவருக்கும் சண்டை முற்றிப்போனது.


அதன்பின் வேறு வழி தெரியாமல் சகுந்தலா பிறந்த வீட்டுடன் வந்துவிட, சில தினங்களில் அவளுக்கு பிரசவ வலி எடுத்து அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்கள்.


ஒரு பெண் குழந்தை பிறந்தது. பிறந்த சில மணி நேரங்களிலேயே அந்த குழந்தை காணாமலும் போனது. அங்கே குழந்தை கடத்தல் சகஜமாக இருக்க, முறைப்படி காவல்துறையில் புகார் கொடுத்தார்கள். அத்துடன் சரி. அவர்கள் இருந்த நிலைமையில் ஒரு கட்டத்திற்கு மேல் அந்த குழந்தையைத் தேடி அலைய முடியாமல் போக, ஒரு வழியாகத் தன்னை தேற்றிக்கொண்டு, சகுந்தலா தட்டுத்தடுமாறி வேலைக்குச் சென்று கொண்டே தனது மேல் படிப்பைத் தொடர்ந்தாள்.


மற்ற சகோதரிகள் எல்லாம் ஒவ்வொருவராகத் திருமணமாகிச் சென்றுவிட,


முழு முயற்சியுடன் அவள் தனது ஆராய்ச்சி படிப்பை முடித்து, பெரிய நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து தன்னுடைய தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதத்தில் மற்றுமொரு திருமணமும் செய்துகொண்டு ஒரு இயல்பான வாழ்க்கை வாழ வாழத் தொடங்கினாள் சகுந்தலா.


அனைத்தையும் மேனகாவிடம் சொல்லி முடித்தவள், "நாங்க டைவர்ஸ் வாங்கிட்டு பிரிஞ்ச பிறகு, எப்பவுமே எனக்கு நிர்மலை பத்தின தாட் வந்ததில்ல. ஆனா என் உயிர்லயே உருவாகி, வளர்ந்து இந்த உலகத்துக்கு வந்த அந்த குழந்தையை மட்டும் இன்னைக்கு வரைக்கும் என்னால மறக்க முடியல. அவ எனக்கு மறுபடியும் கிடைப்பாங்கற நம்பிக்கையே எனக்கு இல்லன்னுதான் சொல்லணும். அப்பத்தான், சந்திரமௌலி அவரோட சன் விஸ்வா மாதிரி ஒரு க்ளோனிங் பண்ணனும்னு என்னை கான்டாக்ட் பண்ணார். உலக அளவுல ஹ்யூமன் க்ளோனிங் இல்லீகல். ஆனா இந்த ரிசர்ச் திரைமறைவுல அங்கங்க நடந்துட்டுதான் இருக்கு. நான் அதுலதான் பெஸ்ட். அது எங்க சர்க்கிள்ல எல்லாருக்கும் தெரியும். ஸே... அது மௌலி வரைக்கும் போயிருக்கலாம்" என்றவர் தொடர்ந்தார்.


"ஒரு விதத்துல நிர்மல்தான் எனக்கு இதோட பேஸிக்ஸ் சொல்லிக்கொடுத்தார்னு கூட சொல்லலாம். இதுல அவர் எக்ஸ்பர்ட். அவர் நினைச்சிருந்தா இதை வெச்சு நிறைய சம்பாதிச்சிருக்கலாம். ப்ச்... பிழைக்க தெரியாதவர்" என கசப்புடன் சொல்லிவிட்டு, "ஒருநாள் சந்திரமௌலி கிட்ட விஸ்வா குளோனிங் சம்பந்தமா பேசிட்டு இருக்கும்போதுதான், உன் ரிசர்ச் பத்தி எனக்கு தெரியவந்தது. உன்னோட இந்த ஆராய்ச்சிய ரிவர்ஸ்ல டிரை பண்ணிப் பார்த்தா ஒருவேளை என் மகளை என்னால கண்டுபிடிக்க முடியுமோன்னு ஒரு சின்ன நம்பிக்கைலதான், அந்த குளோனிங் செய்ய சென்னைதான் பெஸ்ட்னு சொல்லி மௌலியை நம்பவெச்சு, இங்க வந்தேன். ஆனா நீயே என் மகளா இருப்பேன்னு நான் கொஞ்சம் கூட நெனச்சே பார்க்கல" என முடித்தார் சகுந்தலா ஆனந்த கண்ணீருடன்.


மேனகா, நிர்மலை பற்றி சகுந்தலாவிடமே கேட்க, "குழந்தை காணாம போன பிறகு, என்னோட அலட்சியத்தாலதான் குழந்தை காணாம போச்சுன்னு என்னை அக்யூஸ் பண்ணார் நிர்மல். அதுக்கு பிறகு எங்களுக்குள்ள விரிசல் அதிகமாயிடுச்சு. சட்டப்படி பிரிஞ்சிட்டோம். அதோட சரி, நாங்க ஒருத்தர் முகத்துல ஒருத்தர் விழிக்க கூட இல்ல. இன் ஃபேக்ட் இப்ப அவரு எங்க இருக்காருன்னு கூட எனக்குத் தெரியாது" என்று சொல்லிவிட்டார் சகுந்தலா.


உண்மையில் அவளை பெற்றவர்களை கண்டுபிடித்து, 'ஏன் இப்படி செஞ்சீங்க?' என அவர்களை நிற்க வைத்து கேள்வி கேட்க வேண்டும் என எண்ணியிருந்தவளுக்கு அது மறந்தே போனது. பெற்ற அன்னையிடம் அன்பு மட்டுமே சுரந்தது. தந்தையைத் தேடி கண்டுபிடிக்கவேண்டும் என்கிற ஆவல் மட்டுமே மீதமிருந்தது.


தனது நீண்டநாள் ஆராய்ச்சி வெற்றிபெற்றதையும், மேலும் அங்கே நடந்த அனைத்தையும் மேனகா விஸ்வாவுக்கு தெரியப்படுத்த, உடனே மகளை அழைத்துக்கொண்டு அங்கே வந்தான் விஸ்வா.


அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது மேனகாவுக்கு... சகுந்தலாவுக்கு... அவர்கள் இதுவருக்கு மட்டுமல்ல விஷ்வா, ரச்சனா மற்றும் அவளுடைய ஆராய்ச்சியின் ஒரு அங்கமாக அங்கே அவளுடன் இணைந்து வேலை செய்த அனைவருக்குமே.


எதற்கும் இருக்கட்டும் என்று மறுபடியும் ஒருமுறை 'டிஎன்ஏ' டெஸ்ட் எடுத்துப் பார்க்க சகுந்தலாதான் மேனகாவின் அம்மா எனச் சந்தேகத்திற்கு இடமின்றி புலனானது.


***


பழைய நினைவுகளைத் தூக்கிச் சுமக்கும் விதமாக நிர்மல் சம்பந்தமாக ஒரு புகைப்படம் கூட சகுந்தலாவிடம் இல்லை என்பது தெரியவர அடுத்த சில தினங்களிலேயே, நிர்மலுடைய முக அமைப்பையும் கணினி மூலம் வடிவமைத்து சகுந்தலாவின் துணையுடன் நிர்மலின் தோற்றத்தைத் தத்ரூபமாகக் கொண்டுவந்தனர்.


அதன்பின் அவரை தேடிக் கண்டுபிடிக்க ஏதுவாக, அவருடைய தற்போதைய வயதுக்குத் தகுந்தபடி வெவ்வேறு உடைகளில், சுத்தமாகச் சவரம் செய்து, தாடி வைத்து, விதவிதமான 'ஹேர் ஸ்டைல்'களில் என நிர்மலின் படங்களைக் கணினி மூலமாக வரையவும், அதில் சில அப்படியே நிர்மலானந்தாவுடன் ஒத்துப்போனது. ஆடித்தான் போனார்கள் அனைவரும்.


தன் பெற்றோரைத் தேடி அவள் மேற்கொண்ட ஆராய்ச்சியுடன் சேர்ந்து, மேனகா, சகுந்தலா, நிர்மல் என மூவரையும் அருகருகிலேயே வைத்து விதி ஆடிய கண்ணாமூச்சி ஆட்டமும் ஒரு வழியாக முடிவுக்கு வர, அவளுடைய அப்பா இப்பொழுது உயிருடன் இல்லை என்ற கசப்பான உண்மையை ஏற்றுக்கொண்டாள் மேனகா. அவரை சிலமுறையேனும் நேரில் பார்த்திருக்கிறோம் என்ற சிறு நிம்மதி மட்டும் மிஞ்சியிருந்தது அவளுக்கு.


ஒரு விதத்தில் சொல்லப் போனால் 'ஒரே கல்லில் இரண்டு மாங்காய்' என்பதுபோல் மேனகாவுக்கு ஒரே நேரத்தில் இரட்டிப்பு மகிழ்ச்சிதான்.


அவளுடைய ஆணிவேரை அறிந்துகொண்டதுடன் கூட அவளுடைய நீண்டநாள் முயற்சி வெற்றியைக் கொடுத்து உலக அரங்கில் அவள் பெயரை நிரந்தரமாகப் பதிவுசெய்துவிட்டது.


சகுந்தலாவுக்கோ பல வருடங்களாக முள்ளென மனதை உறுத்திக்கொண்டே இருந்த மகளைப் பற்றிய கவலை மறந்து, 'அவள் நல்லபடியாக இருக்கிறாள்' என்ற நிம்மதி உண்டானது.


மற்றபடி சகுந்தலாவின் கணவர் மற்றும் மகனுக்கோ, ரச்சனா மற்றும் விஸ்வாவுக்கோ நடந்த சம்பவங்களால் பெரிய பாதிப்போ நன்மையோ மகிழ்ச்சியோ வருத்தமோ எதுவும் இல்லை.


நாட்களின் ஓட்டத்தில் எந்த வித பெரிய மாற்றங்களும் இல்லாமல் எதார்த்த வாழ்க்கை தன்னுள் அவர்களை அனைவரையுமே மூழ்கடித்துக்கொண்டது.

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
© KPN NOVELS COPY PROTECT

Developed By:  Krishnapriya Narayan 

© 2019 - 2024 by KPN Publications

bottom of page