top of page

Uyirie (Virus 143) 19

Updated: Sep 6, 2023

வைரஸ் அட்டாக் – 19


சில மாதங்கள் கடந்திருந்த நிலையில்...


இயல்பான ஒரு விடுமுறை நாள் அது. அப்பொழுதும் கூட தன் மடிக்கணினிக்கு விடுப்பளிக்காமல், அதில் மூழ்கியிருந்தான் விஸ்வா.


ஓய்வாக 'சோபா'வில் சாய்ந்து அமர்ந்தவாறு பழைய படம் ஒன்றைப் பார்த்துக்கொண்டிருந்தாள் மேனகா. அதில் பொறுமையிழந்து அருகிலிருந்த 'ரிமோட்'டை எடுத்து 'சேனல்'லாய் மாற்றினாள், அவள் மடியில் படுத்திருந்த ரச்சனா.


"டாலி! அம்மா படம் பார்த்துட்டு இருக்கேன் இல்ல. ஏன் இப்படி சேனலை மாத்தற" என மேனகா 'ரிமோட்'டை அவளுடைய கையிலிருந்து 'படக்'கென்று பிடுங்க, "மா... எப்படிம்மா இந்த படத்தையெல்லாம் பாக்கற. செம்ம மொக்கையா இருக்கு" என அவள் பதிலுக்குப் பொங்க, அப்பொழுதென்று பார்த்து, அந்த வருடத்திற்கான நோபல் பரிசுகள் அறிவித்ததற்கான செய்தி ஏதோவொரு செய்தி சேனலில் வரவும், அதைப் பார்த்தவள், "என்னோட ரிசர்ச் இன்னும் கொஞ்சம் முன்னால முடிஞ்சிருந்தா, இந்த வருஷம் எனக்குதான் இந்த நோபல் ப்ரைஸ் கிடைச்சிருக்கும்" என மேனகா பெருமையடித்துக்கொள்ள, "மா... இது உனக்கே கொஞ்சம் ஓவரா இல்ல... உண்மையிலயே ஏதோ ஒரு ஃப்ளூக்ல தான் சக்கு பாட்டி பிக்ச்சர் வந்திருக்கும்" எனக் கிண்டலில் இறங்கினாள் அவளுடைய மகள்.


அதில் கொலை வெறி கொண்டவள், "நம்ம ஊர்ல, பிறந்த உடனே எவ்வளவு குழந்தைங்க காணாம போறாங்க தெரியுமா உனக்கு. அவங்கள கண்டுபிடிக்க பெத்தவங்க எவ்வளவு கஷ்டப்படறாங்க. அப்பா அம்மாவையே அடையாளம் தெரியாத எத்தனபேர் என்னை மாதிரி அனாதையா வளரறாங்க. நீயெல்லாம் பான் வித் சில்வர் ஸ்பூன். உனக்கு என்ன தெரியும் அந்த கஷ்டம். என்னோட இந்த ரெசெர்ச் அவங்களுக்கு எவ்வளவு யூஸ்புல்லா இருக்கப்போகுது பார்" என மூச்சிரைக்க மேனகா சொல்லிக்கொண்டே போக, அடங்காமல் ரச்சனா பதில் கொடுக்க, இப்படி இருவருக்குள்ளும் மூண்ட சிறு போரை அடக்க வழி தெரியாமல் விழி பிதுங்கினான் விஸ்வா.


இந்த கலவரங்களுக்கிடையில் நிர்மல் என்கிற பெயர் அவர்கள் செவிகளில் விழ, பட்டென்று அனைவரின் கவனமும் தொலைக்காட்சியை நோக்கித் திரும்பியது.


'தமிழ்நாட்டை பூர்விகமாக கொண்ட அமெரிக்க விஞ்ஞானி நிர்மலுக்கு நோபல் பரிசு. தமிழக முதல்வர் வாழ்த்து தெரிவித்தார்' எனச் செய்தி தொடர்ந்துகொண்டிருக்க, அதில் காண்பித்த புகைப்படத்தைப் பார்த்து உண்மையிலேயே தலை சுற்றித்தான் போனது. மேனகாவுக்கு மட்டுமல்ல விஸ்வாவுக்குமே. திடீரென்று அம்மாவும் அப்பாவும் ஏன் இப்படி பேய் அறைந்ததுபோல் ஆனார்கள் எனப் புரியாமல் மிரட்சியுடன் அவர்களைப் பார்த்துவைத்தாள் ரச்சனா.


காரணம் கம்பீரமாக, 'கோட்-சூட்' அணிந்து வழுக்கைத் தலையும் கருப்பும் வெள்ளையும் கலந்த குறுந்தாடியுமாக, கருப்பு நிறத்தில் பெரியதாக 'ஃப்ரேம்' வைத்த கண்ணாடி அணிந்து, அறிவுக் களை முகத்தில் சொட்டச் சொட்ட அங்கே காட்சி அளித்தது சாட்சாத் நம் நிர்மலானந்தாவேதான்!


***


ரச்சனாவை சகுந்தலாவின் பாதுகாப்பில் விட்டுவிட்டு, இரண்டே தினங்களில் அமெரிக்காவிலிருந்தனர் விஸ்வாவும் மேனகாவும்.


வாஷிங்டன் நகரத்திலிருந்த நிர்மலின் வீட்டின் கதவைத் தட்டிவிட்டு அவர்கள் வெளியில் காத்திருக்க, அந்த நேரம் பார்த்து ரச்சனா கைப்பேசியில் அழைக்கவும், சற்று தள்ளிப்போய் அவளுடன் பேசத் தொடங்கினாள் மேனகா.


அப்பொழுது கதவைத் திறந்த பெண்மணியைப் பார்த்ததும் சற்று வியந்தவனாக, “நாங்க இண்டியால இருந்து வந்திருக்கோம். மிஸ்டர் நிர்மல் இருக்காறா? அவரை பார்க்க முடியுமா?" என விஸ்வா கேட்க, "ம்.. இருக்காரு... ப்ளீஸ் கம் இன்" என்றார் அந்த பெண்மணி.


பெண் வாடையையே வெறுக்கும் நிர்மலுடைய வீட்டில் இருக்கும் அந்த பேரிளம்பெண் யார் என அறிந்துகொள்ளும் உந்துதலில், "நீங்க" என அவன் இழுக்க, "ஐம் மிஸ்ஸர்ஸ் நிர்மல்" என 'ஸ்டைல்'லான ஆங்கிலத்தில் அவர் சொல்லவும் மேனகா அங்கே வரவும் சரியாக இருந்தது.


அவரது குரலில் திடுக்கிட்டு, அந்த பெண்மணியின் முகத்தைப் பார்க்க, நிர்மல் உயிரோடு இருப்பதை அறிந்த பொழுது ஏற்பட்ட அதிர்ச்சியைக் காட்டிலும் நூறு மடங்கு அதிர்ச்சி உண்டானது மேனகாவுக்கு.


ஒருமுறை கூட தொல்லை நாயகியை நேரில் பார்த்ததில்லை என்பதினால்தான் அத்தகைய அதிர்ச்சி விஸ்வாவுக்கு ஏற்படவில்லை போலும்.


அதுவும் அவள் ஜீன்ஸ் போட்ட முனியம்மாவாக இல்லாமல் பாந்தமாகப் புடவை கட்டிக்கொண்டு, அந்த அமெரிக்காவில் எங்கே போய் வாங்கி வந்தாளோ, தலை நிறைய மல்லிகைப் பூவை சூடிக்கொண்டு, மிகமிக பதவிசாக அவள் நின்றிருந்த கோலத்தைப் பார்த்ததும் மயக்கம் வராத குறைதான் மேனகாவுக்கு.


"ஐயோ... தொ...ல்ல!" என்ற மேனகாவின் குரல் வெளியிலேயே வரவில்லை என்றால், பதிலுக்கு, "மேனகாம்மா!" என நாயகி கத்திய கத்தலில் "இன்னாமே தொல்ஸு! வெளிய நின்னுகினே கூவின்னுகீற... வந்துருக்கறவங்கள வூட்டுக்குள்ளாற இட்டாந்து பேசர்தான" என லோக்கல் பாஷையில் குரல் கொடுத்தது, வேறு யாருமல்ல... சாட்சாத் நிர்மலேதான்.


"மச்சான்! யாரு வந்துருக்காங்கன்னு கொஞ்சம் வந்து பாரு" என அதிர்ச்சி விலகாமல் மேனகாவை கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தாள் தொல்லை நாயகி.


வயோதிகம் காரணமாக மேனகாவை சட்டென அடையாளம் தெரியவில்லை நிர்மலுக்கு. ஆனால், அவளைப் பின்தொடர்ந்து வந்த விஷ்வாவை பார்த்ததும் ஒரு நொடி 'ஜெர்க்' ஆனவர், பின்பு தன்னை நிலைப்படுத்திக் கொண்டு, "யாரு தொல்ஸ் இவங்க? உனக்கு தெரிஞ்சவங்களா" என இயல்பாகப் பேச முயல, 'உலக நடிப்புடா சாமி' என்கிற ரீதியில் அவரை பார்த்தான் விஷ்வா.


நிர்மலை எதிர்பார்த்து அங்கு வந்தவளுக்கு அவருடன் சேர்ந்து தொல்லைநாயகியும் கிடைதுவிட, அதீதமாக உணர்ச்சிவசப்பட்ட நிலையிலிருந்தாள் மேனகா.


அது புரிந்ததால் நிர்மலை தான் அடையாளம் கண்டு கொண்டதைக் காண்பித்துக் கொள்ளாமலேயே, தாங்கள் இருவரும் வந்த காரணத்தைச் சுருக்கமாக விளக்கினான் விஷ்வா, நாயகி கொண்டுவந்து கொடுத்த 'காஃபி'யை பருகியவாறே.


நிர்மலை யார் என்று தான் கண்டுகொண்டதைப் பிரகடனப் படுத்திக் கொள்ள விரும்பவில்லை விஷ்வா. மற்றபடி அவனுடைய அப்பாவையே மன்னித்து ஏற்றுக்கொண்டவனுக்கு, அவரிடம் பெரிதாகப் பகைமை பாராட்ட இயலவில்லை அவ்வளவுதான்.


உண்மையிலேயே அவன் சொன்ன எதையுமே நம்ப முடியவில்லை நிர்மலால். அவருமே ஸ்தம்பித்துத் தான் போயிருந்தார்.


தொல்லை நாயகியைத்தான் கையில் பிடிக்க முடியவில்லை யாராலும். மேனகாவை பார்த்ததுமே தேன் குடித்த நரியின் நிலைக்கு போனவள், அவள் தன் கணவரின் மூத்த மகள், அவன் மருமகன் என அறிந்த பின் அப்படி ஒரு தடபுடல் செய்துவிட்டாள் அவர்களை வரவேற்கும் விதமாக.


பள்ளிக்குச் சென்றிருந்த அவர்களுடைய பதிமூன்று வயது மகள் பேச்சி, வீடு திரும்பவும் அவளைப் பார்த்து வாய் பிளந்தார்கள் விஸ்வா மேனகா இருவரும். காரணம் சிறுவயது மேனகாவை அப்படியே உரித்து வைத்திருந்தாள் அவள்.


தன் மகளுடைய வயதிலேயே இருந்த தன்னுடைய தங்கையை ஆசை தீர மேனகா கொஞ்ச, "இவங்கள அக்கான்னு கூப்பிடணுமா... இல்ல ஆன்ட்டின்னு கூப்பிடணுமா?' என்ற குழப்பத்துடன் கேட்டாள் அவள். "பாப்பா! அக்கானு கூப்டு" என அதற்குக் கண்டிப்புடன் சொன்ன நாயகி, "மேன்காமா... பாப்பா பேரு பேச்சி. என் அத்த... அதான் உங்க ஆயா... உன் நைனாவோட அம்மா... அதோட பேரதான் இதுககு வெச்சிருக்கோம். ஆனா பாரு உன் சின்ன வயசு போட்டோலாம் பார்த்திருக்கேன்ல நானு. பாப்பா வளர வளர கண்டுக்கினா... ஜாட உன் மாறியே இருக்கங்காட்டியும், நான் சின்ன மேனகான்னுதான் கூப்புடறது" எனப் பெருமையாகச் சொன்ன நாயகி, "ஆனா... உன் நைனாவுக்குத்தான் கோவம் பொத்துக்கினு வரும்" என்று சொல்லிவிட, சங்கடத்துடன் நெளிந்த நிர்மல், "சாரி மேனகா! அன்னைக்கு காட்டுல உன்ன அப்படியே விட்டு விட்டு வந்த பிறகு இவ ஒரே அழுக. அதனால போனா போகுதுன்னு மறுபடியும் காட்டுக்கு உன்னை தேடி வந்தோம். ஆனா அதுக்குள்ள நீ அங்கே இருந்து காணாம போயிருந்த" என அவள் எதுவும் கேட்டுவிடுவதற்கு முன்பாகவே தங்கள் தரப்பு நியாயத்தை எடுத்துச் சொல்ல முயன்றார்.


"பரவாயில்லை விடுங்க...ம்ம்... அப்பா!" எனத் தயங்கியவாறே சொன்னவள், "அது எப்படி நாயகி! இவர் கூப்பிட்ட உடனே... வேற எதுவுமே யோசிக்காம என்னை அம்போன்னு விட்டுட்டு அன்னைக்கு இவர் பின்னாலேயே போன" என நீண்ட நாட்களாக அவள் மனதிலிருந்த சந்தேகத்தை மேனகா கேட்க, "அதுவா யமா..." என வளைந்து நெளிந்து வெட்கப்பட்ட நாயகி, "என் அத்த மகன் நிர்மல் தான் எப்பவுமே என்ன தொல்ஸுன்னு கூப்புடும். அதே மாதிரி அந்த சாமியாரு கூப்பிடவும் எனக்கு கிர்ர்ர்ன்னு ஆயிடுச்சு. மச்சான் நீ தானா அப்படின்னு நான் ஜாடையிலேயே கேட்கவும்... ஆமான்னு தலையாட்டினாரு சாமி. நீ ஒடனே என் கூட வான்னு அவரு கண்ணடிக்கவும், ரோசன செய்யாம அவரு கூடவே போயிட்டேன்" என அதற்கு விளக்கம் கொடுத்தாள் நாயகி. "என்னாது... எங்கப்பாதான் உன்னோட அத்த மகனா" என்றாள் மேனகா மூச்சடைக்க.


***


சென்னையிலிருந்த ஒரு குப்பத்தில் வசித்து வந்தவர் நிர்மல்.


அவருடைய அப்பா 'சைக்கிள் ரிக்ஷா' ஓடிக்கொண்டிருந்தார். ஒருநாள் அவர் குடி போதை தலைக்கேறி ரயில் தண்டவாளத்தில் மயங்கிக்கிடக்கும் பொழுது விபத்துக்குள்ளாகி, இரண்டு கால்களும் துண்டாகிப்போக, வீட்டுடன் முடங்கிக்கிடந்தார்.


அவருடைய அம்மா வீடு வேலை செய்பவர். ஒரு மரபியல் பேராசிரியர் வீட்டில் அவர் வேலை செய்துகொண்டிருக்கும் சமயம், சிறுவனாக இருந்த நிர்மலை தினமும் தன்னுடன் அங்கே அழைத்துச் செல்வார் அவர்.


அவருடைய ஆராய்ச்சி மாணவர்கள் எல்லாம் தினமும் அங்கே வந்து செல்வதை அடிக்கடி பார்க்க நேர்ந்தது இளம் வயது நிர்மலுக்கு. மாணவர்கள் பயபக்தியுடன் அவரிடம் நடந்துகொள்வதைப் பார்த்து, அது அவருடைய கல்வியினால்தான் என்கிற புரிதல் உண்டானது அந்த சிறுவனுக்கு.


மற்றவர்கள் தன்னையும் இதே மதிப்புடனும் மரியாதையுடனும் நிமிர்ந்து பார்க்கவேண்டுமென்றால் அது கல்வி ஒன்றினால் மட்டும்தான் சாத்தியப்படும் என முற்றிலும் நம்பத்தொடங்கினான் அவன்.


ஒருநாள் அவருடைய புத்தகம் ஒன்றை எடுத்துவைத்துக்கொண்டு, அதைத் தட்டுத்தடுமாறி அவன் படித்துக்கொண்டிருக்க, அவனுடைய ஆர்வத்தைப் பார்த்தவர் அவனுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக படிக்கச் சொல்லிக்கொடுத்து அவனை ஊக்கப் படுத்தினார் அந்த பேராசிரியர்.


காலப்போக்கில் அவனுடைய அறிவு விரிவடைய, அவன் அதிக சிரத்தை எடுத்துப் படிக்கவும், நல்ல மதிப்பெண்களுடன் பள்ளிப்படிப்பை முடித்தான் நிர்மல்.


எனவே கல்லூரியில், அவன் விரும்பிய துறையில் அவனுக்குச் சுலபமாகக் இடம் கிடைத்தது. பெரிய அளவில் ஆராய்ச்சி என்கிற நிலையில் அவனுடைய கனவுகளும் விரிந்தது.


கல்லூரியில் படிக்கத் தொடங்கிய பிறகு அதற்கே உண்டான மிடுக்கும் 'ஸ்டைல்'லும் அவனிடம் தொற்றிக்கொள்ள, அவர்களுடைய சமூகத்தில் இது அரிதிலும் அரிது என்பதினால் அதுவரை அவனுடன் எதார்த்தமாகப் பழகி வந்த அவனுடைய முறைப்பெண் தொல்லைநாயகிக்கு அவன் மீது ஒரு மயக்கமே உண்டாகிப்போனது. அதுவும் அவன் கல்லூரிக்குச் செல்ல தொடங்கிய சமயம், அங்கே ஏற்பட்டிருந்த புதிய வழக்கத்தின்படி அவன் 'தொல்ஸ்' என்று அவளைக் கூப்பிட தொடங்கிய பிறகு அவன் மீது பித்தாகவே ஆகிப்போனாள் தொல்லைநாயகி.


ஆனால் அவனுக்கோ, அழகும் படிப்பும் ஒருசேர அமையப்பெற்ற, அவர்கள் நிலையினின்றும் ஒரு படி மேலே இருந்த சகுந்தலாவைப் பிடித்துப்போனது. தான் யார் என்ற உண்மையை அவளிடம் சொன்னால் எங்கே அவள் தன்னை திரும்பிக் கூட பார்க்க மாட்டாளோ என்கிற பயத்தில், தன்னை பற்றிய உண்மையை மறைத்து தன் காதலை அவளிடம் சொன்னான் நிர்மல்.


அவளும் அதற்காகவே காத்திருந்தவள் போல உடனே அவனுடைய காதலை ஒப்புக்கொள்ளவே வானத்திலே பறக்கத் தொடங்கினான் நிர்மல் என்கிற அந்த இளைஞன்.


வெளிப்படையாக நாயகி, தன்னை மணந்துகொள்ளுமாறு அவனிடம் கேட்டபிறகும் கூட, தொல்லைநாயகி என்கிற பெண் ஒரு பொருட்டாகவே தெரியவில்லை அவனது பார்வையில், அவன் அன்றிருந்த மன நிலையில்.


அவன் முதுகலைப் படிப்பை முடிக்கவிருக்கும் சமயம் தொல்லைநாயகியின் மனதை அறிந்த அவனுடைய அம்மா, அவளைத் திருமணம் செய்து கொள்ளும்படி அவனுக்கு நெருக்கடி கொடுக்கவும், சகுந்தலாவை பற்றி அவரிடம் சொன்னான் நிர்மல்.


அவளை ஏற்றுக்கொள்ளக் கொஞ்சமும் விரும்பவில்லை அவனுடைய அம்மா பேச்சி, தோற்றத்தில் கூட தன்னையே உரித்து வைத்திருக்கும் தன்னுடைய தம்பி மகள் மேல் வைத்திருந்த அளவுகடந்த பாசத்தினால்.


தன் தாயின் அடாவடித்தனம் அறிந்தவன் என்பதினால், வேறு வழியின்றி யாரையும் எதுவும் யோசிக்க விடாமல், அவசர அவசரமாக சகுந்தலாவைத் திருமணம் செய்துகொண்டான் நிர்மல், அவளுக்கு தன் மீது இருந்த மயக்கத்தை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு.


சில மாதங்களிலேயே வாழ்க்கை தன் எதார்த்தத்தை இருவருக்கும் வலிக்க வலிக்கச் சொல்லிக்கொடுக்க, அதன்பின் அவர்களுடைய எதிர்காலமே தடம் புரண்டு போனது.


சிறையிலிருந்த சமயத்தில், தனிமையில் பலவற்றையும் சிந்தித்தவர், சகுந்தலாவுக்கும் உண்மையாக நடந்துகொள்ளாமல் தன் குடும்பத்துக்கும் உபயோகம் இல்லாமல் சுயநலமாகத் தான் இருந்துவிட்டதை உணர்ந்தார் அவர்.


சிறைவாசம் முடிந்து திரும்பியபிறகு பெற்றவர்களைத் தேடிப்போக, அவர்கள் உயிருடனேயே இல்லை என்பதை அறிந்து வருந்தினார். சகுந்தலாவோ நாயகியோ எங்கே போனார்கள் என்றே கண்டுபிடிக்க இயலவில்லை அவரால், அவர் அன்றிருந்த நிலைமைக்கு.


அனைத்தையும் சொன்னவர், சந்திரமௌலியால் அவர் அடைந்த துன்பங்களையும் அதற்கு அவரைப் பழிதீர்க்க விஷ்வாவை தான் உபயோகப்படுத்திக் கொண்டதையும் வெளிப்படையாகச் சொல்லி முடித்தார் நிர்மல்.


தொல்லைநாயகி அவருடைய வாழ்க்கையில் மறுபடியும் வந்த பிறகு, அவளுடைய அன்பை உணர்ந்தே இருந்த படியால் எக்காரணம் கொண்டும் மீண்டும் அவளை கை நழுவ விட விரும்பவில்லை அவர். அவளை நீங்கி அவரால் இனி வாழவே இயலாது என்கிற நிலைக்கு அவர் தள்ளப்பட்டிருக்க, அந்த நேரம் பார்த்து கோர்ட் கேஸ் என அவர் சிக்கிக்கொள்ளவும், அமைதியான ஒரு வாழ்க்கையை வாழ முடிவெடுத்தவர், அனைத்தையும் விட்டுவிட்டு அப்படி ஒரு போலியான விபத்தை அரங்கேற்றினார் அவர் அவரது முழுமையான நம்பிக்கைக்கு பாத்திரமான ஒருவனின் துணையுடன்.


தொல்லைநாயகியை திருமணம் செய்துகொண்டு, எதற்கும் இருக்கட்டுமென்று ஏற்கனவே அவருடைய உண்மையான பெயரில் அமெரிக்காவில் குடியுரிமை வாங்கி வைத்திருந்ததால் அதைப் பயன்படுத்திக் கொண்டு, மனைவியுடன் அங்கேயே நிரந்தரமாகக் குடியேறினார் நிர்மல்.


அவர் தொலைத்திருந்த தன்னுடைய கல்வி சம்பந்தப்பட்ட சான்றிதழ்கள் அனைத்தையும் முறைப்படி விண்ணப்பித்து வாங்கிவைத்திருந்ததால் அவற்றின் உதவியுடன், ஒரு பிரபல ஆய்வுக்கூடத்தில் வேலைக்குச் சேர்ந்தார்.


ஏற்கனவே செயற்கை முறையில் இறைச்சியை உற்பத்தி செய்யும் முறையை அவர் கண்டுபிடித்து வெற்றிபெற்றிருக்க, அதை அடிப்படையாகக் கொண்டு செய்த, 'குளோனிங்' முறையில் விபத்தில் துண்டான உடல் பாகங்களை இயற்கையான முறையில் பழையபடி வளர வைக்கும் ஆராய்ச்சியில் அவர் வெற்றி பெற, அது மனித சமூகத்திற்கு மிகப் பெரிய வரப்பிரசாதமாகிப்போக, அவருக்கு இந்த நோபல் பரிசும் கிடைத்தது. அனைத்தையும் சொல்லி முடித்தார் நிர்மல் என்கிற ஒரு விஞ்ஞானி பெருமையுடன்.


ஒருவர் பற்றி ஒருவர் மனதிற்குள் வளர்த்து வைத்திருந்த சிறு சிறு கசப்பும் கூட நீங்கிப்போய் மகிழ்ச்சி ததும்பியது எல்லோர் நெஞ்சிலும்.


சில நாட்கள் கொஞ்சல் குலாவல்களுடன் அங்கே களித்துவிட்டு, அங்கிருந்து கிளம்பும் சமயம், விஷ்வா மற்றும் நிர்மல் இருவர் முன்னிலையிலுமே கேட்க சங்கடபட்டுக்கொண்டு தயங்கியபடி ரகசியமாகத் தொல்லைநாயகியிடம், "என்னோட மில்லிய என்ன செஞ்சாரு உன்னோட தெய்வ மச்சான்" என மேனகா கேட்க, "அந்த பெர்ச்சாளிய இன்னுமா நீ நெனச்சிட்டு இருக்க?" என வியந்தவாறு, “தெரிமா... அத க்யுப்பிட்னுதான் கூப்டுவாறு உன் நைனா" என நாயகி சொல்ல, அதில் வியப்பின் உச்சிக்கே சென்றவள், "அப்படினா அவனுக்கு ஒன்னும் ஆகல இல்ல" என மகிழ்ந்தவள், "அவன் இப்ப எங்க இருக்கான். அவனை நான் பார்க்க முடியுமா" என அவள் பரபரக்க,


"நீ உன் நைனாவாண்ட... இல்ல இல்ல நைனாவாண்ட மட்டும் இல்ல யாராண்டையும், என்னை போட்டுக் குடுக்க மாட்டேன்னு வேர்டு கொடுத்தாதான் நான் அந்த சீக்ரட்ட உன்னாண்ட சொல்லுவேன்" என நாயகி அவளுடைய 'பீபி'யை ஏற்ற, "ப்ளீஸ் நாயகி! நீதான் சொன்னன்னு நான் யார் கிட்டயும் சொல்ல மாட்டேன். ஒரே ஒரு தடவ எனக்கு மில்லிய பார்த்தால் போதும்" என மேனகா கெஞ்சவும் இல்லை இல்லை கொஞ்சவும்,


“அதுக்கு நீ நிர்மல்யாவுக்குதான் போவணும் கண்ணு" என மர்ம புன்னகை பூத்தாள் தொல்லை நாயகி.


***

0 comments

Kommentare

Mit 0 von 5 Sternen bewertet.
Noch keine Ratings

Rating hinzufügen
© KPN NOVELS COPY PROTECT
bottom of page