top of page

Uyirie(Virus-143) Episode-15

வைரஸ் அட்டாக்-15


நகல் விஸ்வா தன்னை சரியாக அடையாளம் கண்டுகொள்ளவும், "என்ன? சக்கும்மாவா… என்னை பத்தி... அதுவும் உன்கிட்ட சொன்னாங்களா?" என வியந்தவாறு, "சரி... வா! இங்க இருந்து சீக்கிரமா கிளம்பலாம். ஏற்கனவே நிஜ விஸ்வா அவங்க கஸ்டடியில இருந்து தப்பிச்ச காண்டுலதான் உன்னை இப்படிக் கிழி கிழின்னு கிழிச்சு வெச்சிருக்கானுங்க. இப்ப அந்த ஆளுங்க கைல மட்டும் சிக்கினோம்... அவ்வளவுதான்" எனப் பதறியவள், அவனுடைய கையை பிடித்து இழுத்தவாறு அங்கிருந்து வேகமாக வெளியேறினாள் மேனகா தன் ரெடிமேட் டர்பனையும் மறக்காமல் கையில் எடுத்துக்கொண்டு.


ஏற்கனவே உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் அவனிடம் சில மரபியல் குறைபாடுகள் உண்டு. போதாத குறைக்கு, இரண்டு தினங்களாகப் பட்டினி போட்டு விஸ்வாவை பற்றிய தகவல்களைச் சொல்லச் சொல்லி அந்த அடியாட்கள் அடித்ததால் உடலெங்கும் காயம் பட்டிருக்க, அவளுடைய வேகத்திற்கு ஈடுகொடுக்க இயலாமல் திணறினான் அவன்.


அதை உணர்ந்து தன் வேகத்தைக் குறைத்து அவனுக்குத் தகுந்தாற்போல நடக்கத் துவங்கியவளுக்கு அந்த வனத்தின் வனப்பு மனதைப் பரவசப்படுத்த, 'நீ ஹிம மழையாய் வரு... ஹ்ரிதயம் அணி விரலால் தொடு...' என தன்னை மறந்து முணுமுணுத்தாள் மேனகா.


அந்த பாடல் வரிகள் நினைவுக்கு வந்ததும் விஸ்வாவின் நினைவும் ஒட்டிக்கொண்டு இலவச இணைப்பாகக் கூடவே வர, அன்று கடற்கரையில் மில்லியை இவள் கைகளில் கொடுக்கும்பொழுது அவன் பார்த்த அந்த இனம் புரியாத பார்வைக்கு விளக்கத்தை அவள் மனம் தேடியது.


'அவள் ஏதோ சொல்கிறாள் அது நமக்குத்தான் புரியவில்லை' என்கிற ரீதியில் "என்ன சொன்னீங்க மேனகா" என நகல் அவளிடம் தீவிரமாக கேட்க, "என்ன... நான் பாடினா... அது உனக்கு பேசற மாதிரி இருக்கா" என அவள் கடுப்பாகவும், "இல்ல...ல சாரி பசில எனக்கு காது அடைக்குது அதான்" என்றான் அவன் பதறியவனாக.


'பார்றா... என்ன பார்த்து பயப்பட கூட இந்த உலகத்துல ஆளிருக்கு" என்ற எண்ணம் தோன்றச் சிரிப்புதான் வந்தது மேனகாவுக்கு.


ஒருவாறு அவனை அங்கிருந்து இழுத்துக்கொண்டு சிறிது தூரம் வந்தவளுக்கு அந்த காட்டில் திக்கும் தெரியவில்லை திசையும் தெரியவில்லை.


வரும்பொழுது அந்த அடியாட்களை பின்தொடர்ந்து வந்திருக்க, வந்த பாதை சுத்தமாக அவளுடைய கவனத்தில் பதியவில்லை. ஸ்தம்பித்துத்தான் போனாள் மேனகா.


பயத்திலும் குளிரிலும் கைகள் சில்லிட்டுப் போக, அனிச்சையாக அவள் அணிந்திருந்த கோட் பாக்கட்களுக்குள் தன் கரங்களை நுழைத்துக்கொண்டாள் அவள்.


அதிர்ஷ்ட வசமாக அதிலிருந்த அவளுடைய கைப்பேசி கையில் தட்டுப்படவும், அதில் கொஞ்சம் துணிவு வரப்பெற்றவளாக, அதை எடுத்துப் பார்த்தாள்.


அது கொடுத்த நிம்மதி சில நொடிகள் கூட நிலைக்கவில்லை. காரணம் அந்த இடத்தில் துளி அளவு கூட சிக்னல் இல்லை என்று சொன்னது அந்த கைப்பேசி.


'இந்த சாமியார் கேடி பில்லான்னா, மிஸ்டர் சந்திரமௌலி கில்லாடி ரங்காவா இருப்பார் போலிருக்கு. இந்த ஆளு கிட்ட இருக்கற மாதிரி நமக்கும் ஒரு சாட்டிலைட் போனை அரேஞ் பண்ணி கொடுத்திருக்கலாம் இல்ல அவரு?' என்று தன் போக்கில் எண்ணிக்கொண்டிருந்தவளின் பார்வை, ஐயோ பாவமாக அவளுக்கு அருகில் நடந்துவந்துகொண்டிருந்த நகலின் முகத்தில் படிய, ஷாக் அடித்தது போல் இருந்தது அவளுக்கு எந்த ஒயரையும் தீண்டாமலேயே.


"அட பாவி சந்திரமௌலி!" எனத் தன்னை மறந்து வாய் விட்டே கத்தியவள், விஸ்வாவை போன்றிருப்பவன் அவளை பரிதாபமாக பார்க்கவும், "பீ.டி.சி.ஏ.சி.விஸ்-34" எனத் தட்டுத்தடுமாறி அவனை அழைத்தவள், "என்னவோ நீதான் ஐயோ பாவம் மாதிரி இப்படி பார்க்கறத விடு முதல்ல. இப்ப உனக்கும் எனக்கும் எந்த வித்தியாசமும் இல்ல. ஒய் பிளட்... சேம் பிளட்தான்!


அந்த வில்லன் கிழவன் என்னையும் பலி கொடுக்கற ஐடியாலதான் இருந்திருக்கான் போலிருக்கு. அத புரிஞ்சுக்காம... நானும் இப்படி லூசு மாதிரி இங்க வந்து மாட்டிகிட்டேன்" என மூச்சு விடாமல் சொன்னவள், "சோறு மட்டும் நேராநேரத்துக்கு வெச்சாங்களே... உருப்படியா உனக்கு ஒரு பேரு வெச்சாங்களா பாரு?" எனக் குறை பட்டுக்கொண்டு, 'பையோ டெக்னலாஜி-குளோனிங்-அசெக்சுவல்-காபி- விஸ்வா-34' ஒவ்வொரு தடவையும் உன் வெர்ஷன் பேரை வெச்சு கூப்பிடறதுக்குள்ள ஒரு வழி ஆயிடுவேன்" என்று புலம்பிக்கொண்டே, வேருடன் சாய்ந்து புதையுண்டு, நீள மேடை போலிருந்த ஒரு காட்டு மரத்தின் மேல் உட்கார்ந்தாள் அவள்.


அவள் பேசுவதற்கெல்லாம் என்ன மாதிரி எதிர்வினை ஆற்றுவது என்பதுகூட புரியாமல், காலை சுற்றும் ஒரு பூனைக் குட்டியை போன்று, பதவிசாக அவளுக்கு அருகில் வந்து உட்கார்ந்தவனை பார்க்கையில் பாவமாக ஆகிப்போனது அவளுக்கு.