top of page

Uyirie (Virus 143) Pre-Final

Updated: Jan 22, 2021

வைரஸ் அட்டாக்-17


நடு நாயகமாக அவரை உட்கார வைத்து சுற்றிலும் நின்றுகொண்டு, வளைத்து வளைத்து கேள்வி மேல் கேள்விகளாகக் கேட்டுத்தள்ளிக்கொண்டிருந்த நான்கைந்து சி.பி.ஐ அதிகாரிகளுக்கும் சளைக்காமல் பதில் சொல்லி ஓய்ந்து போனார் நிர்மலானந்தா.


அவருடைய ஆசிரமத்தின் பல்வேறு கிளைகளிலும் 'ரெய்ட்... ரெய்ட்... ரெய்ட்'தான்.


பொருளாதார குற்றங்கள், ஆள் கடத்தல், கொலை முயற்சி என ஒன்றில்லை இரண்டில்லை கிட்டத்தட்ட நாற்பது பிரிவுகளில் அவர்மேல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.


அவற்றின் சம்பந்தமான விசாரணைதான் நடந்துகொண்டிருந்தது. முறைப்படி காவல்துறை அவரை கைது செய்திருக்க, பதினைந்துநாள் 'ரிமாண்ட்' செய்யப்பட்டிருந்தார் அவர்.


'இருந்திருந்து இப்பொழுது என்று பார்த்துதானா இந்த நிலை வர வேண்டும்?' என மனம் நொந்தார் நிம்மி.


சிறை ஒன்றும் அவருக்குப் புதிதில்லை. முன்பாவது அவர் செய்யாத குற்றத்திற்குச் சிறை சென்றார். ஆனால் இப்பொழுது அவர் மீது சுமத்தப் பட்டிருக்கும் குற்றங்கள் ஒரு சிலவற்றைத் தவிர மற்ற அனைத்துமே உண்மைதான்.


இவர் செய்த மூளைச் சலவையினால் பல இளைஞர்கள் தங்கள் குடும்பத்தை விட்டுவிட்டு இவரது ஆசிரமமே கதி என்று கிடந்தாலும் யாரையும் இவர் வற்புறுத்தி அங்கே தங்க வைத்திருக்கவில்லை. யாரையும் கடத்தியும் வந்திருக்கவில்லை.


மற்றபடி, உலக நாடுகள் பலவற்றிலிருந்தும் அவருக்குப் பண வரவு இருக்க, கருப்பு வெள்ளை என அதைப் பதுக்கி வைக்க, பாதுகாக்க அரசியல்வாதிகள் அதிகாரிகள் எனப் பலரின் துணையும் அவருக்குத் தேவையாக இருக்க, உலக நியதிப் படி அது பொருளாதார குற்றங்களில் முடிந்தது உண்மைதான்.


முதன்முறை அவர் சிறை சென்றதற்குக் காரணம் தந்தையென்றால் இந்த முறை அந்த புண்ணியத்தைக் கட்டிக்கொண்டது அவரது மகன் விஸ்வா.


அந்த ஆசிரமத்தின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் அவனுக்கு அத்துப்படி என்பதினால் விடுபட முடியாத அளவுக்கு அவரை வகையாகச் சிக்கவைத்துவிட்டான் அவன்.


தந்தையைப் பழிவாங்க அவருக்கு ஆப்பாக மகனைப் பயன்படுத்த எண்ணியவர் அவரையும் அறியாமல் தனக்கு தானே ஆப்பு வைத்துக் கொண்டதுதான் கொடுமையிலும் கொடுமையாகிப்போனது அவருக்கு.


இதிலிருந்து எப்படி விடுபடுவது எனத் தீவிரமாகச் சிந்தித்துக்கொண்டிருந்தார் நிர்மலானந்தா.


***


உண்மையிலேயே நிர்மலானந்தாவைத் தேடித்தான் தனது தனி விமானம் மூலம் விஸ்வா அந்த காட்டுக்குள் வந்ததே.


சம்பந்தமே இல்லாமல் நடுக்காட்டிலிருந்து கிளம்பிய சிவப்பு நிற புகை தேவையில்லாத சந்தேகத்தை கொடுக்க, அங்கேயே தன் விமானத்தைத் தரை இறக்கியவன் எதிர்பாராதவிதமாக மேனகாவை அங்கே பார்க்கவும் உண்மையிலேயே ஆடித்தான் போனான் விஸ்வா.


அதுவும் அவளது இதழ்கள் அவனுடைய பெயரை உரிமையுடன் உச்சரிக்கவும் அடுத்த நொடி கொஞ்சமும் தயங்காமல் அதைச் சிறை செய்தவன் அவளை மொத்தமாகத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருந்தான்.


அவளுடைய இந்த அனாதரவான நிலைக்குக் காரணமான தனது அப்பாவான சந்திரமௌலியையும் சரி, குருவான நிர்மலானந்தாவையும் சரி, லேசில் விடத் தயாராக இல்லை அவன்.


உண்மையிலேயே இருவருமே ஆளுக்கு ஒரு விதத்தில் அவனுக்கு இன்னல் செய்தவர்கள்தான். மௌலிக்கு இதுவரை செய்ததே போதும் என்று எண்ணியிருந்தவன், தெரிந்தோ தெரியாமலோ நிர்மலானந்தா இதுவரை அவனுக்குச் செய்திருந்த நன்மையைக் கருத்தில் கொண்டு அவரை அப்படியே விட்டு விடலாம் என்ற மன நிலையிலும்தான் இருந்தான். ஆனால் இருவரும் போட்டி போட்டுக்கொண்டு ஒரு அப்பாவி பெண்ணிற்கு இப்படி ஒரு தீங்கு நினைத்ததைக் கொஞ்சம் பொறுக்க முடியவில்லை விஸ்வாவால்.